Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 024 புகழ் அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7471
Date:
024 புகழ் அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
புகழ் 
இசைஒழிய வாழ்வார் வாழாதவர்.
குறள் திறன்-0231 குறள் திறன்-0232 குறள் திறன்-0233 குறள் திறன்-0234 குறள் திறன்-0235
குறள் திறன்-0236 குறள் திறன்-0237 குறள் திறன்-0238 குறள் திறன்-0239 குறள் திறன்-240

openQuotes.jpgபுகழொடு வாழும் வாழ்வே வாழ்வு. இகழொடு வாழ்தல் வாழ்வாகாது. அது விலங்கின வாழ்க்கைக்குச் சமம்; மானுடம் ஆகாது. ஈதலே பெரிதும் புகழுக்கு அடிப்படையாகும்; இன்னாரெனப் பேரொடு சேர்த்துச் சொல்லப்படுதலே புகழ். 'பேரும் புகழும்' என்பது ஓர் இணைத்தொடர். நல்லவர் என்று உலகம் சொல்ல வேண்டும். 'பேரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்' என்பர்.
- தமிழண்ணல்

 

ஒருவன் தன் நற்குணங்களினாலும் நற்செயல்களாலும் உலகத்திற்குப் பயனுண்டாக வாழ்ந்தால் போற்றப்படுவான். அவன் உயர்த்திக் கூறப்பட்டு நற்பெயர் பெறுவது புகழ் என அழைக்கப்படுகிறது. எல்லா அறங்களாலும் புகழ் வருதல் கூடும் என்றாலும் ஈகை செய்து புகழ் எய்துவதை வள்ளுவர் மிகவும் வலியுறுத்துகிறார். புகழ் நோக்கோடு எதிலும் ஈடுபடவேண்டும்; புகழ் இல்லா உடலைச் சுமந்த பூமி வள ஆதாரங்களில் குறைவுபடும்; வசையின்றி இசை பெற்று வாழ்வாரே வாழ்வார் எனவெல்லாம் இங்கு கூறப்படுகிறது. புகழ் இல்லாமல் வாழ்வது வாழ்க்கையல்ல என்பது வள்ளுவரது உறுதியான கருத்து.

புகழ்

மனிதன் வாழ்கிறான் என்பதற்கு அடையாளமே நற்குணங்களாலும் நற்செயல்களாலும் புகழ்பெறுதல் ஆகும். புகழ் என்பது நாம் செய்யும் செயல்களின் விளைவாகத் தாமே நமக்கு வந்து சேருவது. புகழுக்குரிய பண்புநலன்கள் வெளிப்படாமலோ அல்லது செயல்கள் ஆற்றாமலோ பெயர் பெறமுடியாது. புகழ் பெறுவது மட்டுமல்லாமல் இகழ்ச்சி நேராமலும் காத்துக் கொள்ள வேண்டும். ஒருவனைச் சுற்றி வாழும் மக்கள் அவனுடைய நற்பண்புகளை அறிந்து போற்றுவது, நாட்டின் மூலை முடுக்கெல்லாம் செல்லும் புகழ் (நிலவரை நீள் புகழ்) எனப் புகழ்நிலைகள் பேசப்படுகின்றன. உலகில் பொன்றாது (அழியாது) நிற்பது புகழ் ஒன்றுதான். தேவர்களைவிட புகழ்பெற்றவர்களையே வானுலகம் போற்றும். நிலையானதான புகழைப் பெற ஒருவன் தனது பொருட் செல்வத்தை இழக்க நேரிடலாம்; உயிரையும் இழக்க வேண்டி இருக்கலாம். வித்தகர்களாய் இருப்பவர்கள் இவற்றிலிருந்து போராடி புகழை எய்துவர். தனி மனிதன் புகழ் நோக்கொடு செயலாற்ற வேண்டும்; புகழ் மிக்கார் இல்லாத நாடு அதன் வள ஆதாரங்களில் குறைவுபடும் என்பன சொல்லப்படுகின்றன. இறந்தபின் ஒருவன் நல்லதாகப் பேசப்படாவிட்டால் அவன் இகழப்பட்டவன் என்பதாகிறது. விளங்கித் தோன்றாமல் வாழ்வது வாழ்க்கை அல்ல; பழி இல்லாமல் வாழ்வதே வாழ்க்கை. இவை இவ்வதிகாரம் கூறும் செய்திகள்.

அன்பு காட்டுவது, விருந்தோம்பல், உதவி செய்வது, நடுநிலையாய்ச் செயல்படுவது, அடக்கம், ஒழுக்கம், பொறை ஆகியவற்றைப் போற்றுவது, பிறனில் விழையாமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனிலசொல்லாமை, தீவினை செய்யாமை போன்ற அறங்களை ஏறு ஒழுகுதல் ஆகிய பண்புகள் உடையவனுக்குப் புகழ் சேரும். புகழுக்குரிய செயல்கள் என்று எண்ணத் தகுந்தவை எவை? இல்லாதவருக்கும் இயலாதவருக்கும் இயல்பாகவே கொடுக்கும் ஈகையே முதன்மையான புகழுக்குரிய செயல் என்று வள்ளுவர் கருதுவார். ஆனால் ஈகை ஒன்றுதான் புகழுக்குரியது அல்ல. பிறருக்கு நலம் விளைக்கக்கூடியதைச் செய்வதும் தனக்கு இகழ்ச்சி நேராவண்ணம் ஒழுகுவதும் ஒருவனுக்குப் புகழ் சேர்க்கும். ஈகை, ஒப்புரவு, கல்வி, வீரம், செல்வம் ஈட்டுவது. நிர்வாகத் திறன், ஆட்சிமுறை இவற்றால் புகழ் வரும்.

இன்று ஊடகங்களின் வளர்ச்சி புகழ் என்பதற்கு வேறு பொருள் உண்டாகக் காரணமாகியது. ஆரவாரமான விளம்பரம் ஒன்றுதான் புகழ் என்றாகும் நிலைமைக்கு மாறி வருகிறது. ஊடகங்கள் புகழுக்குரியரல்லாதாருக்குப் பெயர் 'உண்டாக்குவது' நற்பண்பும் நற்செயலும் உடையவரின் புகழ் வெளிச்சத்திற்கு வர முடியாமல் செய்வது போன்றவற்றைத் தெரிந்தும் தெரியாமலும் செய்கின்றன. புகழுக்குரிய உண்மையானவரை அடையாளம் காணுவது கடினமாகிறது.

புகழ் அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 231 ஆம்குறள் வறியார்க்குக் கொடுத்தல், புகழோடு வாழ்தல்; அது அல்லாமல் உயிர்க்குப் பயன் தருவது வேறொன்றில்லை என்கிறது.
  • 232 ஆம்குறள் பாராட்டிப் பேசுவார் பேசுவன எல்லாம் இரக்கின்றவர்கட்கு ஒன்றினைக் கொடுக்கின்றவரது புகழ் பற்றியே ஆகும் எனச் சொல்கிறது.
  • 233 ஆம்குறள் இணையில்லா ஓங்கிய புகழைத் தவிர உலகத்தில் அழியாமல் நிலைப்பது வேறொன்றும் இல்லை என்கிறது.
  • 234 ஆம்குறள் உலகின் எல்லைவரை நீண்ட புகழை ஒருவன் செய்வானாயின் வானுலகம் தேவரைப் போற்றாது, (பிறர்க்குப் பயன்படும் புகழ் வாழ்வுடையவரையே போற்றும்) என்று சொல்கிறது.
  • 235 ஆம்குறள் ஆக்கத்திற்காகக் கேடுறுதலும் புகழ் நிலைக்கச் செய்து சாதலும் பேராற்றல் மிக்கவர்க்கன்றி மற்றவர்க்கு இயலாது என்கிறது.
  • 236 ஆம்குறள் செயலில் தோன்றும்போது புகழ் நோக்கோடு வருக; அந்நோக்கம் இல்லாதார் வருவதினும் காட்சியளிக்காமல் போவது நல்லது எனச் சொல்கிறது.
  • 237 ஆம்குறள் புகழ் உண்டாகும்படி வாழமாட்டாதவர்கள் தம்மையே நொந்து கொள்ளாதவர்களாகி, தம்மை இகழ்வார்மேல் வருத்தம் கொள்வது எதனால்? எனக் கேட்கிறது.
  • 238 ஆம்குறள் இறந்தபின் எஞ்சி நிற்பதாய புகழைப் பெறாவிட்டால் உலகத்து எத்தகையோர்க்கும் இகழ்ச்சியாகுமென்று சொல்லுவர் எனக் கூறுகிறது.
  • 239 ஆம்குறள் புகழ் இல்லாத உடலைத் தாங்கிய பூமி, பழியற்ற வள ஆதாரங்களில் குறைவுபடும் எனக் கூறுகிறது.
  • 240 ஆவதுகுறள் தம்மைப் பிறர் இகழாமல் வாழக்கூடியவரே உயிரோடு வாழ்பவர்; புகழைப் பெறாமல் உயிர் வாழ்கின்றவர்கள் வாழாதவர் ஆவர் என்கிறது.

 

புகழ் அதிகாரச் சிறப்பியல்புகள்

ஒருவனுடைய அறவொழுக்கத்தின் அடிப்படையாக எழுந்து விளங்குவதையே வள்ளுவர் புகழ் என்னும் பெயரால் விளக்குகின்றார். அதனால்தான் பொது வாழ்க்கைக் பகுதியாகிய அரசியல் பற்றிய பொருட்பாவில் அதைக் கூறாமல், அறத்துப்பாலில் கூறுகின்றார்; அறத்தின் பகுதியாகவே கருதி விளக்குகின்றார்; இல்வாழ்க்கை, ஒப்புரவு, ஈகை முதலியவற்றை அறநெறியின் பகுதிகளாகக் கூறியவாறே அவற்றை அடுத்துப் புகழ் என்பதையும் கூறுகின்றார் (மு வரதராசன்).

வறியார்க்குச் சோறு ஈந்து புகழ்பட வாழ்வது வாழ்க்கையின் பயன் என்று ஈகையையும் இசைபடவாழ்தலையும் ஒருங்கிணைத்து ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு(231) என்ற குறள் விளக்கும்.

ஒருவன் ஈட்டிய ஓங்கி உயந்த புகழ் உலகில் அழியாது நிற்கும் என்று புகழின் அழியாத்தன்மையை ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால் பொன்றாது நிற்பதொன்று இல் (233) என்ற பாடல் சொல்லும்.

ஒரு செயலில் ஈடுபடும்பொழுது அதில் உயர்நிலை அடைந்து பெயர்பெறவேண்டும் என்ற நோக்கோடு தோன்றவேண்டும். அது கூடாது என்றால் அவ்விடத்துத் தோன்றாமை நல்லது என்று எங்கும் புகழுடன் விளங்கித் தோன்ற வேண்டும் என்பதை அறிவுறுத்தும் . தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (236) என்ற பாடல் இவ்வதிகாரத்து உள்ளது.

வசைஇலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம் (239) என்ற குறள் ஒரு நாட்டின் வளம் அதன் புகழ்பட வாழ்ந்த மக்களைப் பொறுத்தது என்ற சிறந்த கருத்தைத் தருகிறது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard