Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 037 அவாவறுத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
037 அவாவறுத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
அவாவறுத்தல் 
அவாநீப்பு பேரா இயற்கை தரும்.
குறள் திறன்-0361 குறள் திறன்-0362 குறள் திறன்-0363 குறள் திறன்-0364 குறள் திறன்-0365
குறள் திறன்-0366 குறள் திறன்-0367 குறள் திறன்-0368 குறள் திறன்-0369 குறள் திறன்-370

openQuotes.jpgஎத்துணை முயன்றாலும் மனம் மீண்டும் மீண்டும் புலன்கள் மேல் செல்லுமாதலின், அதனை முற்றிலும் வேறாக களைதல் வேண்டுமென்பார் அவா அறுத்தல் என்றார். நிலையில்லாத, பொய்யான பொருள்கள்மேல் செல்லும் ஆசையைத் தவிர்த்தல் வேண்டும்.
- தமிழண்ணல்

 

அறம் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்றவாறு இல்லறத்தில் நின்றொழுகி, ஒப்புரவறிந்து, ஈகையில் ஈடுபட்டு, புகழ் பெற்று, அதனையும் கடந்து அருள், தவ நோன்புகளை மேற்கொண்டு, நிலையாமை உணர்ந்து, துறவு நெறிநின்று, மெய்ப்பொருள் காண்கின்றனர் மாந்தர். அந்நிலையில் அவர்கள் அவாவை நீத்து இறைவனது மாணடி சேர ஆயத்தமாகின்றனர். பிறப்பு-வாழ்க்கை-இறப்பு என்னும் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடந்து இவ்வுலக வாழ்க்கையின் இறுதிநிலையில் இருக்கின்ற மக்களுக்கான அதிகாரம் இது. உயிர்வாழ்வின் முதிர்ந்த நிலையில் முழுஅமைதி பெற அவா அறுத்தல் தேவையாகிறது என்பது குறள் காட்டும் அறம்.

அவாவறுத்தல் அதிகாரம் பற்றிய சில புரிதல்கள்:

குறளில் இல்லறவியலின் நீட்சிதான் துறவறயியல். துறவறவியலில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் பெரும்பான்மையும் இல்லறத்தாருக்கும் சேர்த்தே கூறப்பட்டவை. எனவே அவ்வாவறுத்தலில் சொல்லப்பட்டவையும் துறவியருக்கு மட்டும் ஆனவையல்ல.
குறளானது, நன்னோக்கோடு வாழும் மனிதருக்கு, உலக ஏற்புமனத்துடன், எழுதப்பட்ட நூல். உலக வெறுப்பும், மறுப்பும் இதில் இல்லை. எனவே பிறவியே துன்பம் என்றோ பிறப்புகளிலிருந்து விடுதலை பெறுவதே மனித வாழ்வின் நோக்கமாதல் வேண்டும் என்றோ இவ்வதிகாரத்திலும் கூறப்படவில்லை.
வீடு என்பது சிந்தையும் செயலும் செல்லா நிலைமைத்து என்பதே வள்ளுவரின் நிலைப்பாடு ஆதலால் அதுபற்றி குறளில் எந்த இடத்திலும் குறிக்கப்படவில்லை. வீடு பேறு பெறுவதற்காக அவாவை அறுக்க வேண்டும் எனவும் இவ்வதிகாரத்தில் சொல்லப்படவில்லை.
இவற்றின் அடியில் இந்த அதிகாரம் இங்கு விளக்கப்பட்டிருக்கிறது.

அவாவறுத்தல்

தோன்றிய உயிர்களெல்லாம் இன்பத்தையே முதனிலையாகக் கொண்டு ஒழுகும் தன்மையன. மாந்தர் இன்பம் பெற்று வாழ்வதற்குப் பொருள் வேண்டும். ஆசை இருந்தால்தான் பொருள் செய்வதற்கு ஊக்கம் கிடைக்கும். அவாவறுத்தல் என்பது ஆசையை ஒழித்தல் எனப்பொருள்படும். ஆசை, வேட்கை, விருப்பு ஆகியனவே சமுதாயத்தை உந்திச் செல்லும் இயல்பான உணர்வுகள். மனம் முனைப்புடன் இயங்கக் காரணமாக இருக்கும் அக உந்தலில் தலையாயது அந்த ஆசையே. அதுதான் மனிதனது முன்னேற்றுவதற்கு உதவுவது. அவாதான் அவனுக்கு ஊக்கத்தை உண்டாக்குகிறது. ஆசையின்றேல் மனித வாழ்க்கை இல்லை என்றாயிருக்கும்போது மனிதன் அவாவை அறுக்க வேண்டும் என்று ஏன் சொல்லப்படவேண்டும்?
உயிர்களுக்குப் பிறவியையும் அதன் துயரத்தையும் உண்டாக்கும் விதைதான் அவா; அவா அற்ற நிலை மீண்டும் பிறவாத நிலை; ஆசை பிறப்பிற்குக் காரணம்; பிறப்பறுத்தற்காக ஆசையை விடவேண்டும் என்று பலர் அவாவறுத்தலுக்கு மிக எளிய சமயச் சார்பான விளக்கங்கள் தருகின்றனர். இவை குறட்கருத்துக்களுக்குப் பொருந்துவன அல்ல.

மக்கள் விருப்பு எதுவும் இல்லாமல் வாழவேண்டும் என்று வள்ளுவர் சொல்லியிருப்பார் என்று எண்ண முடியவில்லை. எனக்கிது வேண்டும் என்னும் பெருவிருப்பம் அவா அல்லது ஆசை எனப்படும். தன்னல ஆசைகளை விடச் சொல்வதுதான் அவாவறுத்தல் பாடல் தொகுதி. ஆனால் அது யாருக்குச் சொல்லப்பட்டது என்பது நோக்கப்பட வேண்டும். ஒருவரது வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் கைக்கொள்ள வேண்டிய முறைமைகளை விளக்குவதாக இவ்வதிகாரத்தைக் கருதலாம். அந்நிலையை எட்டிய மாந்தர் தம் நீண்டகாலப் பட்டறிவால் மெய்ப்பொருளை உணர்ந்தவராயிருப்பர். அவர்களுக்குப் பேராசையினை ஆற்ற அறுக்கும் நிலை எளிதில் தோன்றிவிடுகிறது.
'அவா அறுத்தல்' என்பது அவாஇன்மை. அவாஇன்மை தூய்மை நிலை. ஒருவனை வஞ்சிப்பது அவா. அவா அற்ற நிலை துன்பம் அற்ற நிலை. அவா நீங்கஇன்பம் இடையறாது ஈண்டும். ஆசைக்கு நிறைவே இல்லை; அதனால் ஆசையை அறுக்க வேண்டும்; அவா அறும்போது மனமும் இயக்கத்தை மெல்ல மெல்லக் குறைத்துக் கொள்கிறது. இயற்கையின் பேரியக்கத்தை உள்வாங்கிக்கொண்ட நிறைந்த அமைதி காணப்படும். மனத்தில் ததும்பல் இல்லை. அந்நிலையில் ஆசையை விட்டவர்களுக்கு பேரா இயற்கைப் பெருவாழ்வு கிடைக்கும். இன்பம் துன்பம் இரண்டும் அற்ற நிலையில் அவர்கள் வாழ்க்கையின் இறுதிப்பயணத்துக்கு - இறையோடு கலக்க - அணியமாகின்றனர். இது அவா அறுத்தலில் தொகுக்கப்பட்ட நெறி.

அவாவறுத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 361 ஆம்குறள் எல்லா உயிர்களுக்கும் எக்காலத்தும் ஒழியாத துன்பத்தைத் தோற்றுவிப்பதற்குக் காரணமான விதை பெருவிருப்பம்தான் என்பர் என்கிறது.
  • 362 ஆம்குறள் ஒன்று விரும்பின் துன்பம் தோன்றாமையை விரும்புக; விரும்பாமையை விரும்பின் அது உண்டாகும் எனச் சொல்கிறது.
  • 363 ஆம்குறள் எதிலும் பெருவிருப்பம் கொள்ளாததைப் போன்ற விழுமிய செல்வம் இவ்வுலகில் இல்லை; அதுபோன்றது வேறுஎங்கும் இல்லை என்கிறது.
  • 364 ஆம்குறள் மனத்தூய்மை என்பது அவா இன்மையே; அந்நிலை வாய்மையினால் வரும் எனக் கூறுகிறது.
  • 365 ஆம்குறள் எல்லாம் நீங்கியவர் என்று சொல்லப்படுபவர் ஆசையற்றவரே; மற்றையார் முடிவாகத் தொடர்பற்றவர் அல்லர் எனக் கூறுகிறது.
  • 366 ஆம்குறள் ஒருவனை ஏமாற்றி விடுவது ஆசையே. ஆதலால் அதற்கு அஞ்சி நடப்பதே அறநெறி எனச் சொல்கிறது.
  • 367 ஆம்குறள் ஆசையை முற்றிலும் நீங்கிவிடுவானாயின் கெடாதற்குரிய நற்செயல்கள் தாம் விரும்பும் வழியால் உண்டாகும் என்கிறது.
  • 368 ஆம்குறள் ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை; ஆசை இருந்தால் துன்பங்கள் முடிவின்றி இடைவிடாமல் வரும் எனச் சொல்கிறது.
  • 369 ஆம்குறள் ஆசை என்று சொல்லப்படுகின்ற பெருந்துன்பம் கெட்டொழிந்தால் இன்பமானது இடைவிடாது பெருகிநிற்கும் எனக் கூறுகிறது.
  • 370 ஆவது குறள் தணியாத இயல்புடைய ஆசையை விட்டு விட்டால் அந்த நிலையே மாறாத இயல்பையுடைய தன்மையைத் தரும் என்கிறது.

 

அவாவறுத்தல் அதிகாரச் சிறப்பியல்புகள்

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃதொப்பது இல் (363) என்று வேண்டாம் என்று சொல்வதும் ஒரு மதிப்புமிக்க செல்வம் என 'வேண்டப்படாத' ஒன்றையே 'வேண்டும்' செல்வம் எனச் சொன்னது சீரிய சிந்தனையின் வெளிப்பாடாம்.

ஒருவரது உயிர்வாழ்வு கலக்கமில்லாத, நிறைவான, அமைதியான இறுதி பெறுவதற்கான அறிவுரை கூற எழுந்தது அவாவறுத்தல் அதிகாரம். இதைத் தெள்ளத் தெளிய உணர்த்துகிறது ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும் (370) என்ற அதிகார இறுதிப்பாடல். அவாவை நீக்கிவிட்டால் தெளிவான ததும்பல் இல்லாத மனநிலை பெறலாம் என்கிறது இது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard