Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 038 ஊழ் அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
038 ஊழ் அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
ஊழ் 
வகுத்தான் வகை.
குறள் திறன்-0371 குறள் திறன்-0372 குறள் திறன்-0373 குறள் திறன்-0374 குறள் திறன்-0375
குறள் திறன்-0376 குறள் திறன்-0377 குறள் திறன்-0378 குறள் திறன்-0379 குறள் திறன்-380

openQuotes.jpgபடைப்பில் ஒரு முறையான ஆட்சி இருந்துவருகின்றது. மண்ணிலும் விண்ணிலும் நிகழும் மாறுதல்கள் நெடுங்காலமாகவே ஒருவகை ஒழுங்குக்கு உட்பட்டு நடந்து வருகின்றன. ஞாயிறும் திங்களும் விண்மீன்களும் கோள்களும் ஒழுங்காக இயக்கியும் இயங்கியும் வருகின்றன. காற்றும் மழையும் தட்பமும் வெட்பமும் மற்றவைகளும் ஒழுங்கு பெறவே அமைந்து வருகின்றன. ஓரறிவுயிர்கள் முதல் மக்கள் வரையில் பலவகை உயிர்களும் உடம்பெடுத்துப் பிறப்பது முதல் சாவது வரையில் எல்லாம் ஒருவகை ஒழுங்கு முறைக்கு உட்பட்டே நடந்து வருகின்றன. மக்கள் மனம் கொண்டு வாழும் வாழ்க்கையில் நிகழும் எழுச்சி, வீழ்ச்சி, உயர்வு, தாழ்வு, ஆக்கம், கேடு, நன்மை, தீமை, உடைமை, வறுமை, இன்பம், துன்பம் முதலிய பலவும் இவ்வாறே ஒழுங்கான முறையில் அமைந்து வருகின்றன. இந்த ஒழுங்கான ஆட்சிமுறையை ஆராய்ந்து அறிவது அருமை; ஆனால் உண்டு என்று உணர்வது எளிது. இத்தகைய ஆட்சி முறையை 'ஊழ்' என்று சான்றோர் குறித்து வந்திருக்கின்றார்கள். திருவள்ளுவரும் இந்த அதிகாரத்தில் மக்கள் வாழ்க்கையில் அதற்கு உள்ள ஆற்றல் தோன்ற விளக்கிக் கூறுகின்றார்.
- மு வரதராசன்

 

ஊழ் அதிகாரம் அறத்தோடு இயைபு உடையதாயிருந்தாலும், அறத்துப்பாலின் இல்லறம் துறவறம் என்னும் இயல்களின் பகுதியாகாமல், அதன் இறுதி உள்பிரிவாக வைக்கப்பட்டது. பொருளோடு இதற்குள்ள நெருங்கிய தொடர்பை உணர்த்துவதற்காகப் பொருட்பாலின் முன்பு அமைந்தது. இது குறளின் அறிமுக அதிகாரங்களைப் போன்று தனி ஆற்றல் பொருந்தி தனித்து நிற்கக்கூடியது. ஊழ் என்பது ஊழ், வினை, பால், தெய்வம், விதி என்ற பெயர்களால் குறளில் அமைக்கப் பெறுகின்றது. 'நியதி', 'இறைவனது திருவிளையாடல்', 'தலைவிதி', 'தலையெழுத்து' என உலகவழக்கில் வழங்கி வருவனவும் இதுவே.

ஊழ்

உலக வாழ்வில் பல நிகழ்வுகள் காரணம் தெரியாமலே நடக்கின்றன; ஒன்றை நினைத்துச் செய்தால், அதுவன்றி வேறொன்று விளைவதும், அவ்வொன்றே விளையாது போவதும், முற்றிலும் நினையாததொன்று வந்து நேர்ப்படுவதும் பிறவும் நாம் அவ்வப்பொழுது உணர்வனவே. காரணம் புலப்படாது நிகழ்ந்த நிகழ்ச்சிகளாலும் இன்பமும் துன்பமும் பயனாய் விளைகின்றன. ஒரு செயலுக்கு ஏதுவாகத் தொல்காப்பியர் முதலிய சான்றோர் வினை, செய்வது, செயப்படும் பொருள், இடம், காலம், கருவி, நோக்கம், பயன் என எண்வகையான காரணங்களை கண்டிருந்தனர். இவை மூலமும் மேலே கூறிய நிகழ்ச்சிகளுக்கும் விளக்கம் பெற முடியவில்லை. அவை காரணம் புலப்படாவகையில் நிகழ்ந்துவரக் கண்ட முன்னோர், புலப்படாத அக் காரணத்தை அறியும் முயற்சியில் இடைவிடாது ஈடுபட்டனர். இன்றைய தலைமுறையினரும் ஈடுபடுகின்றனர். நாளையும் ஈடுபடுவர். ஊழுக்குப் 'உலகத்தியற்கை' (373) என்றும் பெயர் உண்டு; அது ஓர் ஒழுங்குக்கு உட்பட்டுத்தான் உருப்பெறுகின்றது. ஊழின் தோற்றத்துக்குக் காரணம் பலப்பல. எனினும், அதனைக் கணிப்பது நமக்கு எளிதன்று. இடத்தானும் காலத்தானும் அரசாலும் சமூகத்தானும் சுற்றுப்புறமக்களாலும் வரும் புறநிலைப் பாங்கனைத்தும், முடிவில் -ஊழாய் மாறி நிற்குமது மக்கள் கணிப்பிற்கு அப்பாற்பட்டது. நமது கணிப்பு தவறும்போதும் காரணம் புலப்படாதபோதும் 'தெய்வச் செயல்' என்று அமைதி கொள்கிறோம். இதுதான் ஊழின் விளையாட்டு!

மாந்தர் வாழ்வியலில் நிகழ்பவற்றுக்குத் தெளிவான காரணம் சொல்ல முடியவில்லையென்றால் முந்தைய பிறவிகளில் நிகழ்ந்தவற்றைக் காரணமாக்குவது; நம்மால் வெற்றிகரமான முயற்சி என்று நம்பப்பட்டவை விளக்கமுடியாத வகையில் தோல்வியில் முடிவது; நாம் தோல்வியில் முடியும் என்று நினைத்தது எதிர்பாராமல் வெற்றியடைவது; இவைபோன்ற நிகழ்வுகளுக்கான காரணங்களை விளக்க இயலாதபோது 'கர்மா' கோட்பாடு சொல்லப்படுகிறது.
உயிர்கள் தமது செயல்களின் பயனை அடைந்து அனுபவிக்கும்படி செய்யும் நியதிக்கு வினைப்பயன் எனப் பெயரிட்டனர் சமயச்சார்புடையோர். வினையிலிருந்து விடுதலை பெறாத உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கும்; அப்படிப் பிறக்கும்போது முன் பிறப்பில் செய்த வினைகளும் அதற்கு முன்னுள்ள பிறவிகளில் செய்து சேர்ந்துள்ள வினைகளும் அந்த உயிரைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன; அதனால் அந்த வினைகளுக்குத் தக்கபடி இந்தப் பிறப்பில் இன்பதுன்பங்கள் அமைகின்றன. ஊழ் என்பது, ஒரு நிழல், அவனையே பற்றி நிற்பது போல, அவனவன் செய்த நல்வினை, தீவினை ஆகிய இரு வினைகளும் அவனவனையே பற்றி நிற்கச் செய்வதாகிய முறை. இவை சமயவாதிகள் தரும் விளக்கங்கள்.
இக்காலச் சிந்தனையாளர்கள் ஊழுக்கு உலகச்சூழல், உலகமுறை, உலக இயல்பு எனப் பெயரிட்டுப் புது விளக்கம் தருகின்றனர்.
வள்ளுவரின் ஊழ்க் கொள்கையில் முற்பிறப்பு, பழவினை, துறக்க உலகம் இவைபற்றிய குறிப்புகள் சிறிதளவும் காணப்படவில்லை, அதிகாரத்துக் குறள் எதிலும் இத்தகைய கருத்துக்கு எந்தவொரு குறிப்புச் சொற்கூட இல்லை. வினைக்கொள்கைக்கும் ஊழ் என்பதற்கும் வேறுபாடு உண்டு என்பதை நாம் முதலில் மனதில் இருத்த வேண்டும். ஏனெனில், இவை இரண்டும் ஒன்றெனக் கருதி விளக்கப்படுதலும் விளங்கிக் கொள்ளுதலும் பலகாலமாக நிகழ்ந்து வந்துகொண்டிருக்கிறது. ஊழ் என்பதுடன் வினை என்பதையும் சேர்த்து ஊழ்வினை என்று இன்று இயல்பாக வழங்கப்பட்டாலும் ஊழ் என்பதும் வினை என்பதும் வேறுவேறானவை. 'ஊழ்வினை' என்ற சொல் குறளில் எங்கும் இடம் பெறவில்லை.
எவ்வாறே ஆயினும் எல்லோரும் ஒப்புக் கொள்வது ஊழின் வல்லமை பெரியது; அதை மக்கள் இகழாகாது என்பதே. ஊழினும் வல்லமை பொருந்தியது உண்டா என்று வினா எழுப்பி அதன் வன்மையைப் வியக்க வைக்கிறார் வள்ளுவர்.

ஊழ் பற்றிப் பேசும்போது ஆசிவகம் (Ajivika) பற்றியும் அறிந்துகொள்வது நல்லது. ஆசிவகம் என்பது நியதிக் கொள்கை என்றும் அறியப்படும். கி மு ஆறாம் நூற்றாண்டில், வாழ்ந்த மற்கலிகோசர் (Makkhali Gosala) என்பவர் உருவாக்கிய நெறிமுறை ஆசீவகம் எனப்படுகிறது. இது ஊழ் என்ற கருத்தியலுடன், ஓரளவு ஒன்றுபடுகிறது. ஆசீவகம் சொல்வதாவது: நாம் ஒரு செயலைச் செய்யும் முன்னரே அது எப்படி நிகழவேண்டும் என்பதை வரையறுத்து வைத்திருக்கும் ஆற்றல் ஒன்று உள்ளது; அதனுடைய திட்டத்தை யாராலும் மாற்ற முடியாது. நடந்து முடிந்தனவே இனி நடப்பவற்றைத் தீர்மானிக்கும் என்று வினைக்கொள்கை சொல்ல, நடப்பதனைத்துமே ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதுதான் என ஆசீவகரின் ஊழ்க்கோட்பாடு சொல்கிறது. சமண-புத்த மதங்களைப் போல் கடவுள் மறுப்பு-வேத மறுப்பை ஆசீவகம் கொண்டிருந்தாலும், அவ்விரு சமயங்களின் வினைக்கோட்பாட்டை ஆசீவகம் ஏற்கவில்லை. ஊழ்பற்றித் தனி அதிகாரம் அமைத்துப் பத்துக் குறட்பாக்களாகத் தொகுத்துக் கூறினாலும் மற்கலி கோசாலர் வரையறுத்த ஊழ்க் கோட்பாட்டைக் குறள் பின்பற்றவில்லை.
விதி என்றும் தலையெழுத்தென்றும் நடந்து முடிந்த ஒன்றை ஆற்றுப்படுத்த நாம் வழக்கில் சொல்பவை யாவும் ஆசீவகத்தின் கோட்பாடுகளே!

பயனோக்கி ஊழின் பான்மையை ஆகூழ்(அல்லது ஆகலூழ்), போகூழ்(அல்லது இழவூழ்) என இருவகையாகப் பகுப்பார் வள்ளுவர். இவை நல்லூழ், தீயூழ் எனவும் அழைக்கப்படும். ஒருவருக்கு நிகழும் ஆக்கம், ஒன்றன் சேர்க்கை 'ஆகூழினால் நிகழ்வதாகவும், பிரிவு, அழிவு முதலியவை 'போகூழினால்' நிகழ்வதாகவும் கூறப்படுகின்றது. வள்ளுவரின் ஊழ்ப் பார்வையில் இந்த உலகம் இருவேறு பெரும் பிரிவுகளாக இயங்குகிறது. ஒன்று பெருஞ் செல்வமுடையதாக விளங்கும் பிரிவு. பிறிதொன்று தெளிந்த அறிவுடையவராக விளங்கும் பிரிவு. பொருளுலகம், அறிவுலகம் என்ற இரு களங்களிலிருந்து இந்த இரு பிரிவுகளையும் ஊழ் ஆள்கிறது. இவற்றுள்ளும் பொருளாக்கம் தொடர்பானவற்றில்தாம் ஊழ்ச்சூழல் வெளிப்படையாகவும் மிகுதியாயும் தெரியும். மனிதனுடைய செல்வவாழ்வும் தாழ்வும் விளைவது ஊழால். அவனை முட்டாள் ஆக்குவதும் அறிவாளி ஆக்குவதும் ஊழ் என்கிறது அதிகாரப் பாடல்கள்.
செல்வம், அறிவு இவற்றில் ஊழ் தலையிடுவது போல், ஒழுக்கம் அடக்கம் போன்ற நற்பண்புகளின் மேல் ஊழ் தலையிடுவதில்லை என்பது குறட்கருத்து. அதனால்தான் அகப் பண்புகளைப் பற்றியோ, அறத்தைப் பற்றியோ, ஒழுக்கம் பற்றியோ ஊழ் அதிகாரத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இந்த உலகில் புதிர்நிலைகள் உள்ளன. ஊழ் தெய்வமாக நற்செயல் புரிவோர்க்கு நன்மைகளையும் தீவினை செய்வோர்க்குத் துன்பங்களையும் தருவதாக நம்பப்படுகிறது. நன்மை, தீமை என்றிவை நமக்குப் புரிவதுபோல் அவற்றின் கூட்டல், கழித்தல், பெருக்கல் இவை நம் அறிவுக்கு எட்டுவதில்லை. ஊழ் எனும் முறைமை. தெய்வம் வகுத்த வகையிலேயே நடக்கின்றது. வகுத்தவன் வகையை அதாவது ஊழின் கணக்கை யாரும் அறியமுடியாது. அது மனிதக் கணிப்புக்கு அப்பாற்பட்டது. யாருக்கும் எப்போதும் புரியாது. அதைக் கண்டுபிடிக்க முயன்றவர்கள் தோற்கவே செய்வர். பிறப்பு - வாழ்வு– இறப்பு என்னும் பெரும் புதிரின் நடுவே இன்பதுன்பங்கள் ஏன் வருகின்றன என அறிய முடியாமல் முடிந்து போகின்றவைதாம் நமது வாழ்வுநிலைகள்.

......கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉ மென்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் .... 
(புறநானூறு 192 பொருள்: கல்லை யலைத் தொலிக்கும் வளவிய பேரியாற்று நீரின் வழியே போகும் மிதவை போல அரிய உயிர் ஊழின் வழியே படும் என்பது நன்மைக் கூறுபாடறிவோர் கூறிய நூலானே தெளிந்தேம் ஆதலால்....) என்று வெள்ளப் பெருக்கெடுக்கும் பேரியாற்றின் நீரில் பட்ட படகினை நமக்குக் காட்டுகிறார் கணியன் பூங்குன்றனார். ஆறு ஓடுகிறது; அவ்வோட்டத்தின் இழுப்புக்கு ஆட்படும் பொருள்களும் ஓடுகின்றன. புணை எவ்வாறு வெள்ளத்தின் போக்கில் செல்கின்றதோ, அவ்வாறே உயிரும் அனைத்தினும் வல்லதாய் விளங்கும் 'முறை' வழியாகவே செல்லும் என்கிறார். இவ்வுவமை மனித வாழ்வு ஊழின் இயக்கத்திற்கு ஏற்பவே இயங்கும் எனச் சொல்லி உயிர்களுக்கும் ஊழுக்கும் உள்ள தொடர்பை நன்கு விளக்குகிறது.

உயிர்கள் தோன்றுவதும் வளர்வதும் வாழ்வதும் மறைவதும் ஆக்கம் பெறுவதும் அறிவு வளர்ச்சி அடைவதும் அவற்றின் எண்ணம்போல் இல்லை. ஒன்று நினைக்க மற்றொன்று நடக்கிறது. ஊழால் ஆட்டுவிக்கப்படும் உலக நாடகம் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது காதல், கல்வி, கலை, தொழில், குடும்பம், செல்வம், வறுமை, போர், போட்டி, பொறாமை, புகழ், வெற்றி, தோல்வி, இன்பம் துன்பம் முதலிய பல்சுவைகளுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மற்றெதனையும் விடப் பெரிய ஊழ்வலி உயிர்ப்பான உலகை ஆளுகிறது. அதை வெல்ல உயிர்கள் காணும் வழிகள் எல்லாமுமே பயன் தருவதில்லை. ஊழ் முந்துற்றுத் தன் வலியைக் காட்டிக்கொண்டே இருக்கிறது. புதுப் புதுக் காட்சிகள் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

ஊழைச் சீட்டு விளையாட்டுடன் ஒப்பிட்டு நோக்குவர். சீட்டு ஆடுபவர்களுக்குச் சீட்டுப் பகிர்வில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை. இருப்பினும் கிடைத்த சீட்டுக்களைக் கொண்டு அதை முன்தீர்மானிக்கப்பட்ட ஆட்டத்தின் விதிகளின்படி ஆடுகிறார்கள். பகிரப்பட்ட சீட்டுகளைக் கொண்டு உள்ளடங்கிய வாய்ப்புவளத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பயன்படுத்தி வெற்றிகாண முயற்சிப்பர் என்கிறார் லெஸ் பிரவுன் (Les Brown- "Just because Fate doesn't deal you the right cards, it doesn't mean you should give up. It just means you have to play the cards you get to their maximum potential").

சரியான முன்னுணர்வு இல்லாதவர்களை ஊழ் பாதிக்கும். ஆனால் உரிய நெறியில் இறைவனச் சென்றடைய முயல்பவர்கள் ஊழினால் தாக்குறுவதில்லை. அவர்கள் நல்லூழ் சிரிக்கும்போது நன்மையையும் மகிழ்ச்சியையும் காண்பவர்கள்; தீயூழ் வரும்போது ஏமாற்றமும் துன்பமும் அடையாமல் மன அமைதி கொள்பவர்கள்.

ஊழ் அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 371 ஆம்குறள் பொருள் கிடைப்பதற்குரிய ஊழிருந்தால் ஊக்கம் பிறக்கும்; அது நீங்குதற்குரிய ஊழிருந்தால் சோம்பல் வந்துவிடும் என்கிறது.
  • 372 ஆம்குறள் கேடான ஊழ் வந்தால் அறியாமையைக் கொடுக்கும்; நல்ல ஊழ் தோன்றினால் அறிவுப்பெருக்கம் உண்டாகும் எனச் சொல்கிறது.
  • 373 ஆம்குறள் நுட்பமான நூல்கள் பலவற்றையும் கற்றாலும் தன் ஊழ் ஆணைப்படியான அறிவே மிகுந்து தோன்றும் என்கிறது.
  • 374 ஆம்குறள் உலகத்து இயல்பு இரண்டு வகைப்பட்டது; செல்வமுறை வேறு, தெளிந்த அறிவினை உடையராதல் வேறு எனக் கூறுகிறது.
  • 375 ஆம்குறள் ஊழால், செல்வத்தை ஆக்குவதற்கு நல்வழிகளிலும் செய்யப்படும் முயற்சிகள் தீயனவாய் பயனின்றிப் போகும்; தீயவையும் நல்லனவாய் செல்வத்தை ஆக்கும் எனக் கூறுகிறது.
  • 376 ஆம்குறள் ஊழால் தமக்கு இல்லாதவை வருந்திக் காத்தாலும் தங்கா; ஊழால் தமக்கென அமைந்த பொருள்கள் புறத்தே கொண்டு போய் எறிந்துவிட்டாலும் தம்மை விட்டு நீங்கா எனச் சொல்கிறது.
  • 377 ஆம்குறள் ஊழை வகுத்தவன் அமைத்த முறைப்படியன்றி கோடி தொகுத்தவர்க்கும் அவற்றை நுகருதல் இயலாது என்கிறது.
  • 378 ஆம்குறள் ஊழினால் அவர் அடையக்கூடியன நேராது கழிந்தால் நுகர்பொருள் இல்லா வறியவர் துறவியாகி இருப்பார்களே? எனச் சொல்கிறது.
  • 379 ஆம்குறள் நன்மை தரும்போது நல்லதாக ஏற்றுக்கொள்பவர்கள் தீமை நேரும்போது ஏற்கமுடியாது வருந்துவது ஏனோ? எனக் கூறுகிறது.
  • 380 ஆவது குறள் ஊழைவிடப் பெரிய வலிமையுடையவை எவை உள்ளன? ஊழின் விளைவுகளை விலக்கிட என்ன வழிகளை எண்ணினாலும் அது முன்னால் வந்து நிற்கும் என்கிறது.

 

ஊழ் அதிகாரச் சிறப்பியல்புகள்

நல்லவையாகவும் தீயவையாகவும் ஊழின் தாக்குக்கள் பற்பல என்றாலும், ஊழின் ஆட்சிக்குட்பட்டதாக ஆக்கம்-கேடு, பேதைமை-அறிவுடைமை, இன்பம் -துன்பம் இவற்றையே இவ்வதிகாரத்தில் காட்டுகிறர் வள்ளுவர். ஊழ் ஆட்சி செய்வது உயிர் வாழ்க்கையின் எல்லாப் பரப்புகளிலுமே என்று அவர் கூற விரும்பவில்லை எனத் தெரிகிறது.
பொருட்பாலில் பல அதிகாரங்களில் முயற்சிக்கான ஆற்றலையும் அது நல்கும் பயன்களையும் விளக்குவதால், மற்கலிகோசரைப் போல, நியதிதான் அனைத்தையும் முடிவு செய்யும் இறுதியான சக்தி என்று வள்ளுவர் கருதவில்லை.
ஊழை உலகத்து இயற்கை என்ற சொல்லால் குறள் குறிக்கிறது. உலகத்து இயற்கையின் ஆற்றலே 'ஊழ்' என்று சொன்னது குறளின் தனிச்சிறப்பாம்.

ஓடியாடி எவ்வளவு செல்வங்களைக் குவித்தும் ஊழ் மனது வைத்தால்தான் பொருட்களைத் துய்க்கமுடியும் என்கிறது வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது (377) என்ற பாடல். புலன்களுக்குரிய எந்தவகையான இன்பத்தையும் பணத்தால் பெறமுடியும் என்று எண்ணுபவர்கள் உலகில் பலர். அது அப்படியல்ல என்னும் உலகியல் உண்மையை ஓங்கி ஒலிக்கிறது இக்குறள்.

நல்லவை நடந்தாலும் சரி கெட்டவை நேர்ந்தாலும் சரி அவற்றை இயல்பாக எடுத்துக்கொள்க என்ற அறிவுரையை நன்றுஆங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவது எவன் (379) என்ற குறள் நல்குகிறது. எச்சூழலிலும் மன அமைதிபெற இவ்வறிவுரையை ஏற்றவர் பெறுவர்.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும் (380) என்ற குறள் முந்தி முந்தி வந்து நிற்கும் இயற்கையின் பேராற்றலை நன்கு விளங்க வைக்கிறது. மேலும் இப்பாடல் அது சூழத் தக்கதே என்ற குறிப்பைத் தருவதையும் அறியலாம். தொடர்ந்து முயற்சி செய்தால் ஊழையும் உப்பக்கம் காணலாம் என்பதை இக்குறிப்பு தெரிவிக்கிறது எனலாம்.__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard