Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 040 கல்வி அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7471
Date:
040 கல்வி அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
கல்வி 
கல்வி அறிவு பெறுதல் சிறந்த முதலீடு
குறள் திறன்-0391 குறள் திறன்-0392 குறள் திறன்-0393 குறள் திறன்-0394 குறள் திறன்-0395
குறள் திறன்-0396 குறள் திறன்-0397 குறள் திறன்-0398 குறள் திறன்-0399 குறள் திறன்-0400

openQuotes.jpgகுறளிலுள்ள பல பாக்களால் திருவள்ளுவர் கல்வியினிடத்தே மிக்க ஆர்வமுடையவரென்பதும் புலவர்கள்பால் குறையாத அன்புடையவரென்பதும் பெறப்படும். கல்வியைப் பற்றிக் கூறவந்தவர் தாம் உரைக்கப் புகுந்த செய்திகள் பத்துக் குறளில் அடங்காமை பற்றிக் கல்வி, கல்லாமை, கேள்வியென்னும் மூன்று அதிகாரங்களால் உணர்த்துகின்றார். அன்றியும் அறிவுடைமை, சொல்வன்மை, அவையஞ்சாமை என்பனவும் கல்வியொடு தொடர்புடைய அதிகாரங்களாகும். இவ்வளவு மிகுதியாக வேறு எதனையும் இவர் வற்புறுத்தவில்லை.
- உ வே சாமிநாதையர்

 

வாழ்வு வேண்டின் வேண்டுக கல்வி என்று 'வாழ்வார்' எல்லார்க்கும் கல்வி தேவை என்று இவ்வதிகாரம் வற்புறுத்துகிறது. கல்வி கற்கும் முறையும், அதனால் அடையக்கூடிய பயனும் திட்பமாகக் கூறப்பட்டுள்ளன. ஆசிரியர்களின் திறனும் அவர்களால் கற்பவர்க்கு உண்டாகும் அகத்தூண்டல்களும் சொல்லப்படுகின்றன. மனிதவள மேம்பாட்டிற்கும் சமுதாய வளர்ச்சிக்கும் உலகமே ஓர் ஊர்தான் என்பதை உணர்தற்கும் கல்வி இன்றியமையாதது என்று கூறி கல்வியே ஒருவனுக்குச் சிறந்த முதலீடாக அமையும் என்பதை அழுந்தச் சொல்கிறது கல்வி பற்றிய இத்தொகுப்பு.

கல்வி அதிகாரம் அரசியலில் ஏன் கூறப்பட்டது?:

ஆட்சியின் கடமைகளில் கல்வி வழங்குவதையும் ஓர் அரசியல் கடமையாகச் சேர்த்துக் கூறுகிறது குறள். ஆட்சியின் திறனுக்கும், ஆள்பவனும் குடிமக்களும் ஒழுக்க நெறி நிற்பதற்கும் அறிவார்ந்த வளமான வாழ்க்கை அமைவதற்கும் கல்வி தேவை என்பதால் இப்பொருள்நிலை நீதியும் அரசியலில் இணைக்கப்பட்டது.

கேடில் விழுச்செல்வம் கல்வி என்று வள்ளுவர் குறிப்பதால் பொருட்செல்வம் போன்று கல்வியையும் செல்வமாகக் கருதுகிறார் என அறியலாம். நாட்டின் பொருளாதாரம் வளர அறிவுவளம் இன்றியமையாதது என்பதை எண்ணிக் கல்வியை நாடாள்பவனும் கற்க வேண்டும், நாட்டின் மக்களையும் கற்கச் செய்யவேண்டும் என்ற நோக்கில் இறைமாட்சியை அடுத்துக் கல்வி வைக்கப்பட்டது. ஆட்சி செய்பவனுக்கு இன்றியமையாக் குணங்களாக 'தூங்காமை கல்வி துணிவுடைமை' என்று இறைமாட்சியிலேயே வற்புறுத்தியதால் கல்வி, கேள்வி, கல்லாமை, அறிவுடைமைகளை வலியுறுத்துவன அவன் குடிமக்களைப் பயிற்றுவித்தல் இன்றியமையாதது என்பதைக் சொல்லவே என்பது தெளிவாகிறது.

கல்வி

அறிவுடையவரே எல்லாம் உடையவர் என்றும் மதிநுட்பம் மனிதனுக்கு வேண்டும் என்றும் சொல்பவர் வள்ளுவர். மனிதர்க்குள்ள அறிவை இயல்பாக உள்ள இயற்கையறிவு, கல்வி, கேள்விகளால் வளரும் செயற்கையறிவு என இருவகைப்படுத்திக் கூறுவர். இவ்வதிகாரம் கல்வி என்னும் செயற்கை அறிவு பெறுதல் பற்றியது. இது பொதுவாக நூற்கல்வியைக் குறிக்கும். கல்வியின் படிநிலைகளாக எழுத்தறிதல், ஓதல், பயிலல், தெரிதல், அறிதல் என இவை அமையும்.
கணிதம் என்ற எண்கல்வியையும் இலக்கியம், பண்பாடு முதலான இன்னபிற எழுத்துக்கல்வியையும் கற்கவேண்டும் என்று சொல்லி அறிவு பெற்றால் மட்டும் போதாது, அந்த அறிவுக்கேற்ப வாழ்வில் ஒழுகுதலே கல்வியாகும்; இக்கல்வி பெற்றவரே கண்ணுடையவர் எனப்படுவர்; கல்வி தொடர்ந்து கற்கப்படவேண்டும்; எப்படி தோண்டிய அளவு மணற்கேணியில் நீர்வரத்து இருக்கிறதோ, அதுபோல கல்வி தொடரத் தொடர அறிவு பெருகி நிற்கும் என்பன கூறப்படுகின்றன. இவ்வதிகாரத்தில் பயிற்சிச்சாலையின் சூழலை விளக்கும் விதம் ஆர்வம் ஊட்டுவதாக உள்ளது -ஆசிரியர்கள் பயிற்சி காலத்தில் உற்சாகமாக மாணவர்களோடு அளவளாவி கற்றுக்கொடுப்பர்; பயிற்சி முடிந்தபின் இவர்களை வாழக்கையில் அடுத்து எப்பொழுது சந்திப்போம் என்று மாணாக்கர்களை ஏங்கி எண்ணவைப்பர்; அவர்கள் தாம் பெற்ற இன்பம் மற்றவர்களும் பெறும் வண்ணம் கல்வியில் ஈடுபாட்டை உண்டுபண்ணுவர். கல்வி பெற்றவன் உலகக் குடிமகனாக உயர்வு பெறுவான்; அவன் உலகின் எந்தப் பகுதியிலும் நம்பிக்கையுடன் உலா வருவான்; எவ்விடத்தும் வாழ்ந்து வெற்றி பெறுவான்; அழிவில்லாது பெருகி நிலைக்கும் செல்வம் கல்வி ஒன்றே. இவை கல்வி அதிகாரம் கூறும் செய்திகள்.

கல்வி அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 391 ஆம்குறள் கற்பனவற்றைக் கற்றால் மட்டும் போதாது; அக்கல்விக்குத் தகுந்தவாறு ஒழுகுதல் வேண்டும் எனக் கூறுகிறது.
  • 392 ஆம்குறள் கணித நூலறிவும் எழுத்து நூல்அறிவும் மாந்தர் வாழ்க்கையின் கண்களாக அமையும் என்கிறது.
  • 393 ஆம்குறள் எண்ணையும் எழுத்தையும் பார்த்து அடையாளம் புரிந்துகொள்ளஎக் கூடியவரே கண்களுடையவர்; அங்ஙனம் இயலாதார் முகத்தில் புண்கள் உடையர் எனக் கூறுகிறது.
  • 394 ஆம்குறள் பயிற்சிக் கூடத்தில் கற்பிக்கும் ஆசிரியரின் பண்பும் திறனும் விளக்குவது.
  • 395 ஆம்குறள் கல்வியைக் காதலித்துக் கற்கவேண்டும்; கல்விச் செல்வம் பெற்றவர் தலைநிமிர்ந்து நிற்பர் என்று சொல்கிறது.
  • 396 ஆம்குறள் கற்றதை மறவாதிருக்கவும் மேலும் அதைப் பெருக்கவும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
  • 397 ஆம்குறள் தொடர்ந்து கற்றுக் கொண்டிருப்பவன் உலகமே அவனுக்கு உரியதாக உணர்வான் என்னும் கருத்தைச் சொல்கிறது..
  • 398 ஆம்குறள் இன்று ஈடுபாட்டுடன் கற்ற கல்வி காலங்காலத்திற்கும் பாதுகாப்பாக நின்று உதவும் என்கிறது.
  • 399 ஆம்குறள் ஏன் கல்வியின் மேல் கற்றறிந்தார் மிகையான காதல் கொள்கின்றனர் என்பதை விளக்குகிறது.
  • 400 ஆவதுகுறள் சீரிய முதலீட்டுச் செல்வமான கல்வி ஒருவர்க்கு என்றும் கேடு விளைக்காதது என்று கூறுவது.

 

கல்வி அதிகாரத்தின் சிறப்பு:

'எண்ணென்ப ஏனை எழுத்தென்ப'.... (392) என்ற செய்யுளில் எண்ணை முதலாவதாக வைத்து அதற்கு அடுத்து எழுத்தை வைத்திருப்பது எதுகை கருதி, யாப்புக்கு அடிமைப்பட்டு அல்ல; 'ஏனைய' என்ற சொல்லாட்சி எழுத்து முதல் இடத்தை இழந்துவிடுவதைப் புலப்படுத்தும்; எண்ணின் முக்கியத்துவம், அதை உறுப்பாகக் கொண்டு அமைந்த கணிதத்தின் முக்கியத்துவம் என்ன என்பதையும் வள்ளுவர் ஆராய்ந்தே கூறியுள்ளார்; எண்ணின் இடத்தையும், எழுத்தின் இடத்தையும் ஆழமாக, அறிவார்த்தமாக அறிந்தே எழுதியிருக்கிறார் (வா செ குழந்தைசாமி).

பிற பண்பாடுகளில் எல்லோருக்கும் கல்வி என்ற சிந்தனை கிடையாது. பெண்களுக்குக் கல்வி அறவே மறுக்கப்பட்ட சமுதாயங்களும் இருந்தன. மக்களில் கல்விப்பேறு அடைதற்குரியவர் குறிப்பிட்ட சில வகுப்பாரே என்றனர். சில நாடுகளில் உயர்ந்தோரே கற்க வேண்டும்; உழைப்பவர்க்கு கல்வி வேண்டாம் என்ற விதிகளும் இருந்தன. ஆனால் வள்ளுவர் 'கல்வி மக்களாய்ப் பிறந்த அனைவர்க்கும் பொது; கண்கள் வாழும் உயிர்களுக்கு இயல்பாக உரியன போலக் கல்வியும் எல்லார்க்கும் உரியதாகும்' என்று கூறினார்.
'பெண்டிரும் கற்க' என்று குறள் வெளிப்படையாகக் கூறாவிடினும், குறள் படிப்போர் 'பெண்களுக்கும் கல்வி வேண்டும்; அவர்களும் கேள்விச் செல்வம் உடையவராதல் வேண்டும்' என்று அது வற்புறுத்துவதைத் தெளிவுறுவர். பெண்கள் கற்றலாகாது எனக் கூறும் இழிதகைமையை அவர் காலத்தில் கண்டிருக்கமாட்டர். அதனாலேயே பெண்கல்வி பற்றித் தனியாகக் கூறாது விட்டார் போலும்.

குறட்கருத்துக்கள் அனைத்தும் பொதுமையில் அமைவன. இவ்வதிகாரத்தில் கற்பவை கற்க என்று முதற்குறளில் பொதுவில் சொல்லிவிட்டு அடுத்த குறளில் எண்ணையும் எழுத்தையும் கற்க என்று குறிப்பான நூல் பிரிவுகள் கூறப்பட்டுள்ளன. மேலும் இது மக்கள் பல்துறைக் கல்வி கற்கவேண்டும் என்பது வள்ளுவரின் நோக்கம் என்பதையும் தெளிவாக்கும். இன்றும் எல்லா நாடுகளிலும் கல்விக்கூடங்களில் வள்ளுவர் கருத்திற்கேற்ப அறிவியலும் கலையும் சேர்ந்த கல்வித் திட்டமே செயலில் உள்ளது என்பது நினைக்கத்தக்கது.

இவ்வாறு வள்ளுவர் அரசியலிலும் கல்வியை மக்களுக்கு உரிய பொது நிலையில் உணர்த்துவதால் குடியரசு உலகிற்கும் அஃது ஏற்றதாகிறது. சாகும் வரை கல்வி, உலகம் ஒரு குடும்பமாம் கல்வி, உலகு இன்புறத் தான் இன்புறும் கல்வி, ஏக்கற்றும் கற்கும் கல்வி, தொட்டனைத்தூறும் கல்வி, என்றும் பிரியாக் கல்வி, எல்லோர்க்கும் கல்வி, வாழ்வதற்கே கல்வி, என்று இருபதாம் நூற்றாண்டு கூறும் கல்வியின் உண்மையினை வற்புறுத்தி அதனை அரசியலோடு விளங்கும் சமுதாயத்தின் உயர்நிலையாக வள்ளுவர் விளக்கியுள்ளார். மக்களுக்கும் கல்விக்கும் உள்ள தொடர்பு, கல்வியின் உண்மை நிலை, கல்வியின் பயன்,கல்வி கற்கும் முறை இவை எல்லாவற்றையும் இந்த இருபதாம் நூற்றாண்டினர் கூறுவது போலவே கூறியிருப்பதுவே இங்குள்ள சிறப்பு. (தெ பொ மீனாட்சிசுந்தரம்).



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard