Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 043 அறிவுடைமை அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7602
Date:
043 அறிவுடைமை அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


 

அதிகார விளக்கம் 
அறிவுடைமை 
அறிவுடைமை எல்லாம் உடைமை
குறள் திறன்-0421 குறள் திறன்-0422 குறள் திறன்-0423 குறள் திறன்-0424 குறள் திறன்-0425
குறள் திறன்-0426 குறள் திறன்-0427 குறள் திறன்-0428 குறள் திறன்-0429 குறள் திறன்-0430

openQuotes.jpg'அறிவுடைமை' என்பது ஒருவன் கல்வியினாலும் கேள்வியினாலும் சேகரித்துக் கொண்ட அறிவுகளை ஆராய்ந்து தன் வாழ்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்ளுவது. அதாவது வாழ்க்கையில் நேரிடுகின்ற சூழ்நிலைக்குத் தகுந்தபடி சொந்த அறிவோடு நடந்து கொள்வது.
- நாமக்கல் இராமலிங்கம்

 

அறிவின் பயன் சொல்லித் தொடங்குகிறது அதிகாரம். அறிவு என்றால் என்ன என்பது பற்றியும் அறிவு உடையவர்களின் இலக்கணமும் கூறப்படுகின்றன. அறிவுடையார் உள்ளம் துணுக்குற வரக்கூடிய துன்பம் உறார் என்று ஒரு பாடல் கூறுகிறது. இறுதியாக அறிவுடையவர்கள் அறிவில்லாதவர்கள் எனப்படுபவர்களை முரண்நிலையில் அமைத்து அறிவுடைமை எல்லாம் உடைமை; அறிவின்மை எதுவுமே இன்மை என்று நவின்று முடிகிறது.

அறிவுடைமை

அறிவை வேறுவேறு வகையில் பகுத்து விளக்குவர். பொதுவாக இதை மூன்று பிரிவுகளில் அடக்கலாம். ஒன்று இயற்கை அறிவு அதாவது இயல்பில் அமைந்த அறிவு. இரண்டாவது செயற்கை அறிவு. இதைக் கல்வியறிவு அல்லது நூலறிவு என்றும் சொல்வர். இச்செயற்கை அறிவு கற்றல் மூலமும் கேட்டல் மூலமும் பெறப்படுவது. மூன்றாவது வகை உலக அறிவு. உலக அறிவு இயற்கை அறிவுடன் கூடியதாகவோ அல்லது செயற்கை அறிவுடன் கூடியதாகவோ அல்லது இரண்டும் இணைந்த அறிவுகளுடன் கூடியதாக இருக்கலாம். இயற்கை, செயற்கை அறிவின் பயன்களை முழுதும் உணர வேண்டுமானால் ஒருவருக்கு உலக அறிவு வேண்டும். அறிவுடைமை அதிகாரத்தில் சொல்லப்படும் அறிவு இந்த உலக அறிவுதான். உலகியல்புக்கேற்ப நடந்து கொள்வதை இது குறிக்கும். எவ்வதுறைவது உலகம் உலகத்தோடு அவ்வதுறைவது அறிவு என்பது குறட்பா. 'உலகந்தழீஇயதொட்பம்' அதாவது உலகை அறிந்து நடப்பதே ஒள்ளிய அறிவு அல்லது நுண்ணிய அறிவு என்றும் குறள் கூறும்.
கா சுப்பிரமணியம் பிள்ளை 'இயற்கையாய் மனிதர்க்கு உளதாகிய பகுத்தறிவுடைமையே இங்கு எடுத்துக் கொள்ளப்பட்டது' என்பார்.

அறிவுடைமை அதிகாரப் பாடல்களின் சாரம்:

 

  • 421 ஆம்குறள் விழிப்புடன் இருக்கத் துணை செய்யும் கருவியாகவும் அழிக்க முடியாத பெருங்கோட்டையாகவும் உள்ளது அறிவு என்பதைச் சொல்வது.
  • 422 ஆம்குறள் தனி மனித ஒழுக்கத்திற்கு வழிகாட்டி அறிவுதான் என்கிறது.
  • 423 ஆம்குறள் யாரால் என்ன சொல்லப்பட்டாலும் அவ்வாறே கேட்டு ஏற்றுக்கொள்ளாமல் உற்று அறிந்து உண்மையைக் காண்பதுவே அறிவு என்று கூறும் பாடல்.
  • 424 ஆம்குறள் பொருள் தெளியச் சொல்லலும் சொல்லப்பட்டதைத் தெளிந்து கொள்ளலுமான கருத்துப் பரிமாற்றத் திறன் அறிவால் வருவது என்கிறது.
  • 425 ஆம்குறள் உலகத்தைத் தழுவியும் ஒரு தன்மையையுடையவனாய் இருத்தலும் அறிவுடைமையாம் என்பது.
  • 426 ஆம்குறள் உலகப் போக்கு எவ்வாறு இருக்கிறதோ அதற்குத்தகத் தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய திறன்பெறுவது அறிவுடைமை என்று சொல்வது.
  • 427 ஆம்குறள் வரப்போவதைச் சரியாக வாசிக்க முடிந்த ஆற்றல் அறிவுடையாருக்கே உண்டு என்பது.
  • 428 ஆம்குறள் அஞ்சுவதற்கு அஞ்சுதல் அறிவுடையார் கடமை என்று சொல்வது.
  • 429 ஆம்குறள் எதிர்கால அதிர்ச்சிகளிலிருந்து காப்புறுதி செய்து கொள்வர் அறிவுடையோர் என்று கூறுவது.
  • 430 ஆவதுகுறள் அறிவுடையவன் எல்லாம் உடையவனாவான் எனச் சாற்றுவது.

 

அறிவுடைமை அதிகாரச் சிறப்பியல்புகள்

 

'கேட்கும் செய்தியை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டியதில்லை; கருத்துக் கூறுவர் எவராக இருந்தாலும் அவர்மீது கொண்ட பற்றின் காரணமாகவோ, வேறு காரணங்களுக்காகவோ, அக்கருத்தை ஏற்காமல் அதன் உண்மைப் பொருளைக் கண்டறிய வேண்டும்; அதுவே அறிவு' என்று பகரும் புகழ்பெற்ற பாடல் இங்கு அமைந்துள்ளது. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற கருத்துச் செறிந்த அக்குறள் பல மேல்நாட்டுச் சிந்தனையாளர்களையும் குறள்நோக்கி ஈர்க்கவைத்ததும் ஆகும்.

அறிவுடையார் எல்லாம் உடையர் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர் என்ற பாடல் அறிவுடையவரிடம் என்ன இல்லை என்று கேட்கிறது. இதனை உடையவர் அதனை உடையவர் என்று எண்ணிக் கணக்கிடத் தேவையில்லை; அறிவை மட்டும் தேடிக் கொண்டு விட்டால் போதும். அவர் அனைத்து உடைமைக்கும் உரியவர் ஆகிவிடுவர். அறிவிலார் மற்றைப் பல உடைமைகளை உடையவர் ஆயினும் அவர் எதுவும் உடையவர் ஆகார் என்றும் மேலும் இப்பாடல் தெரிவிக்கிறது. அறிவு மட்டும் இருந்தால் மற்ற செல்வங்கள் அழிந்தாலும் அவற்றை அறிவின் துணை கொண்டு படைத்துக் காக்க இயலும் என்று இக்குறளின் பொருளை விளக்குவர்.
'நுண்ணுணர்வு உடைமை பண்ணப் பணைத்த பெரும்செல்வம்' அதாவது நுட்ப அறிவினை உடையவனாயிருத்தல் ஒருவனுக்கு மிகப்பெருகிய பெருஞ் செல்வமாகும் என்று நாலடியார் கூறும். குறள் இன்னும் மேலே போய் 'அறிவுடையார் எல்லாம் உடையார்' என்று கூறுவதால் அறிவுடைமைக்கு வள்ளுவர் தரும் முக்கியத்துவத்தை உணரலாம்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard