Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 052 தெரிந்து வினையாடல் அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7478
Date:
052 தெரிந்து வினையாடல் அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
தெரிந்து வினையாடல் 
இதனை இதனால் இவன் முடிப்பான் என்று துணிதல்
குறள் திறன்-0511 குறள் திறன்-0512 குறள் திறன்-0513 குறள் திறன்-0514 குறள் திறன்-0515
குறள் திறன்-0516 குறள் திறன்-0517 குறள் திறன்-0518 குறள் திறன்-0519 குறள் திறன்-0520

openQuotes.jpgஆராய்ந்து ஒருவரை வேலைக்குத் தெரிவு செய்தபின், அவரவர்க்குரிய பணியை ஆராய்ந்து அறிந்து, ஒப்படைத்து ஆள்கின்ற திறமை. வினையாடல்-வினை ஆளுதல்; செயற்பட வைத்தல்.
- தமிழண்ணல்

 

தலைவன் வினைக்கான அதிகாரங்களைச் செயல்வல்லாரிடம் ஒப்படைப்பதையும், செயல் முன்னேற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருவது பற்றியும் கூறும் அதிகாரம். தெளியப்பட்டாரைச் செயலுக்குரியராகச் செய்வதும் அவர் செயற்பாடுகளை எவ்விதம் மேலாண்மை செய்வது என்பதையும் சொல்கிறது. எவ்வளவுதான் ஆய்ந்தெடுத்தாலும் வினையில் அமர்ந்தபின் மாறாக நடப்பவர்களும் உண்டு என்று எச்சரிக்கிறது ஒரு பாடல். செயலாளனுக்கு முழு உரிமை அளிக்க வேண்டும், கருமமே கண்ணாக உள்ளவனைத் ஆதாரம் இல்லாமல் ஐயம் கொள்ளக்கூடாது, வினைசெய்வான் செயல்வகை பற்றி நாளும் சீராய்வு செய்க என்பன போன்ற செம்மையான மேலாண்மைக் குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

தெரிந்து வினையாடல்

செய்யப்படவேண்டிய வினனகளைத் தெரிந்து, அவற்றின் நோக்கங்களைத் திறம்பட நிறைவேற்றும் முகத்தான், அவற்றைச் செய்யவல்லவர்களிடம் ஓப்படைத்து, வினைகளை ஆளுதல் என்பது தெரிந்து வினையாடல் ஆகும். தலைமை தாங்கும் அனைவர்க்கும் பொருந்தக்கூடிய உண்மைகள் இவ்வதிகாரத்துள் காணப்படுகின்றன. முதல் மூன்று குறட்பாக்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பொறுப்பு ஏற்றவனுடைய இலக்கணத்தினைக் கூறுகின்றன. நான்காம் குறட்பா, தொழிலில் வைத்த பிறகு மாறாகி விடுபவர்கள் நீக்கப் பட வேண்டியவர்கள் எனக் குறிக்கின்றது. நன்கு அறியப்பட்டவன் என்பதற்காக மட்டும் தொழில்திறம் இல்லாதவரிடம் வினையை ஒப்படைக்கக் கூடாதென்பதை ஐந்தாம் பாடல் கூறும். ஆறுமுதல் ஒன்பது பாடல்வரை, அதிகாரம் ஒப்படைக்கப்பட்டவனை தலைவன் எவ்வாறு ஆளுதல் வேண்டும் என்பதனை எடுத்துக் காட்டுகின்றன. வினன ஏற்றவன் பிசகாமல் நடக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்; இதற்காக வினைசெய்பவரை நாள்தோறும் கண்டு வருக என்று பத்தாம் பாடல் அறிவுறுத்தும்.

தெரிந்து வினையாடல் அதிகாரப் பாடல்களின் சாரம்:

 

  • 511ஆம் குறள் செயலால் உண்டாகும் நன்மை தீமைகளை ஆராய்ந்து நல்லது தரும் வினையை ஆட்படுத்தவேண்டும் என்கிறது.
  • 512ஆம்குறள் பொருள்வரும் வழிகளைப்பெருக்கி, அப்பொருளால் வளங்களை விரிவுபடுத்தி, இடையூறுகளைத் தொடர்ந்து ஆராய்பவன் வினையை ஆளவேண்டும் எனச் சொல்கிறது.
  • 513ஆம் குறள் செயலின்மீது அன்பு, வினைக்குரிய அறிவு, சிந்தனைத் தெளிவு, பொருளாசை இன்மை என்ற நான்கும் நன்குடையவன் செயல் ஆளத் தகுந்தவன் எனச் சொல்வது.
  • 514ஆம் குறள் தேர்வுமுறையின் பொழுது எப்படி இருப்பரோ அப்படியே பணிக்கு அமர்த்திய பின்னும் இருப்பவர்கள் சிலரே என்கிறது.
  • 515ஆம் குறள் நன்கு அறியப்பட்டவன் என்பதற்காக மட்டும், செயலறிவும் கடும் உழைப்பும் அற்ற, ஒருவனைப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்பதைச் சொல்கிறது.
  • 516ஆம் குறள் திறமாகச் செய்பவனைத் தெரிந்து, செயல் நோக்கம் குறிக்கொண்டு, இன்ன காலத்தில் முடிப்பது என்ற அறிதலோடு செய்விக்கப்பட வேண்டும் என்கிறது.
  • 517ஆம் குறள் ஒரு வினையை இவ்வவ் வழிமுறைகளால் இவன் கையாண்டு முடிக்கக் கூடியவன் என்பதைக் கண்டறிந்து அவ்வினையை அவனிடம் ஒப்படைக்கவேண்டும் என்கிறது.
  • 518ஆம் குறள் செயல் நிறைவேற்றுதற்கு உரியவனைத் தேடிக்கண்ட பிறகு, அவனிடம் செயலின் முழு ஆளுமைப் பொறுப்பையும் ஒப்படைத்து விடுக என்பதைச் சொல்வது.
  • 519ஆம் குறள் செயலாளனிடம் ஒப்படைக்கப்பட்ட பணியுடன் அவனுக்குள்ள தொடர்பை வேறுவிதமாக எண்ணும் தலைவன் செல்வம் இழப்பான் எனக் கூறுவது.
  • 520ஆவது குறள் அரசு செயல் செய்பவன் நேராக இருந்தால் நாடும் கோணாது; அதனால் அவன் செயற்பாடுகளை நாள்தோறும் தலைவன் சீராய்வு செய்யவேண்டும் என்கிறது.

 

தெரிந்து வினையாடல் அதிகாரச் சிறப்பியல்புகள்

செயல் அதிகார ஒப்படைப்பு (Delegation of Authority), மற்றும் இன்றைய மேலாண்மை இயலார் பேசும் பணி உடைமை உணர்வு (owning the job) போன்றவற்றின் கூறுபாடுகளை வியக்கத்தக்க வகையில் வள்ளுவர் இவ்வதிகாரத்தில் மிக எளிதாகவும் தெளிவாகவும் கையாண்டுள்ளமை தெரிகிறது.

எல்லோருக்கும் தெரிந்தவன் என்பதற்காக ஒரு வினையை தொழில் ஆற்றல் இல்லாதவனிடம் ஒப்படைக்கக்கூடாது என்று சொல்லும் அறிந்துஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தான் என்று ஏவற்பாற்று அன்று (குறள் 515) என்ற சிறந்த மேலாண்மைக் கருத்தமைந்த பாடல் இங்குள்ளது.

எந்தவொரு பணிமேலாண்மை சூழலுக்கும் பொருத்திப் பார்க்கக் கூடிய வகையில் இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் (குறள் 517) என்ற குறட்பா அமைந்துள்ளது. ஒரு கருத்தைப் பொதுமைப் படுத்துவதற்கு இக்குறள் சிறந்த சான்றாகக் காட்டப்படுகிறது.

வினைக்குஉரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல் (குறள் 518) என்கிறது ஒரு பாடல். 'அதற்குரியனாகச் செயல்' என்பது மேலான மேலாண்மைக் கோட்பாடு ஆகும்.

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடாது உலகு. (குறள் 520) என்ற குறள் செயல் முன்னேற்றத்தை நாளும் சீராய்வு செய்ய வேண்டும்; கையூட்டு போன்ற குற்றங்கள் நிகழாமல் தடுக்க அது உதவும் என்பதை சொல்வது. இக்குறட்பா தரும் அறிவுரை பொதுவாக அனைத்துத் தலைமைப் பொறுப்புள்ளவர்களும் குறிப்பாக அரசாள்வோரும் ஏற்றுச் செயல்படுத்தப்படவேண்டிய ஒன்று.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard