Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 065 சொல்வன்மை அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7467
Date:
065 சொல்வன்மை அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
சொல்வன்மை 
சொல்லும் திறமை.
குறள் திறன்-0641 குறள் திறன்-0642 குறள் திறன்-0643 குறள் திறன்-0644 குறள் திறன்-0645
குறள் திறன்-0646 குறள் திறன்-0647 குறள் திறன்-0648 குறள் திறன்-0649 குறள் திறன்-0650

openQuotes.jpgதம் உள்ளக் கருத்தைப் பிறர் உள்ளம் கொள்ளுமாறு சொல்லும் ஆற்றல்.
- சி இலக்குவனார்

 

சொல்வன்மை என்பது தாம் சொல்லக் கருதியதை திறம்படச் சொல்லத் தெரிந்த ஆற்றல் குறித்தது. இவ்வதிகாரத்தில் நாநலம் என்ற தொடர் ஓரிடத்தில் வந்துள்ளதால் பேச்சுச்சொல்வன்மை அக்குறளில் சொல்லப்பட்டது அறியலாம். எழுத்துச் சொல் பற்றிய குறிப்பு வெளிப்படையாக எங்கும் இல்லை. ஆயினும் இது பேசும் திறம், எழுத்துத் திறம் ஆகிய கருத்துரை திறன் (Communication skill) தொடர்பானது எனக் கொள்வதில் குற்றமில்லை. சொல்லுந்திறன் படைத்தவர்க்கு எக்காலத்திலும் உலகில் மதிப்புண்டு. எத்துறையிலும் இருப்பவராயினும் வாழ்க்கையில் வெற்றி பெற ஒருவருக்குச் சொல்வன்மை வேண்டியதாகிறது. மாற்றாரிடம் ஒப்பந்த நோக்குடன் கலந்துரையாடுதல், அவைகளில் கருத்துரைத்தல், மேடைப் பேச்சு, வணிக பேரம் பேசுவது, நேர்காணல்களில் பதிலுரைக்கும் திறம் முதலியன சொல்வன்மை காட்ட தகுந்தவான சில இடங்கள். தலைமைப் பொறுப்பில் இருப்பவருக்கு இந்த சொல்வன்மை என்ற உடைமை மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

சொல்வன்மை

சொல்லிலே வல்லமையுள்ளதாய் இருப்பது சொல்வன்மை; சொற்களை ஆளும் திறமை பற்றியது இது.
மனிதப் பிறவியின் முதன்மையான பயன்கள் சிந்திக்கும் திறனும், சொல்லும் ஆற்றலும் ஆம். இவையே மாந்தரைப் பிற உயிரினங்களின்றும் வேறுபடுத்துகின்றன. ஒருவர் மொழியின் சொற்களின் வழியாக எண்ணங்களை உணர்த்துகின்றார். தாம் கற்றவற்றையும் பட்டவற்றவையையும் உள்ளத்தெழும் சிந்தனைகளையும் பிறருக்குத் தெற்ற உரைப்பதற்கு உற்ற கருவியாய் விளங்குவது சொல்லாற்றல் கலை. எந்த ஒரு செயலின் வெற்றிக்கும் கருத்துப் பரிமாற்றம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒருவரது வாழ்க்கையே வெற்றிப்பாதையில் செல்ல சொல்வன்மை மிகமிக இன்றியமையாத ஒன்று. உலகமும் உலக மக்களும் எப்பொழுதுமே தொடர்பில் இருக்கும் அளவு வளர்ந்து நிற்கும் இன்றைய நிலையில், அறிந்த செய்திகளைத் திறம்பட வெளிப்படுத்தும் ஆற்றல் மனிதனை இன்னும் மேன்மை அடையச் செய்யும்.
மனிதச் சிந்தனை என்ற மூலத்திலிருந்து மொழி என்னும் ஊடகம் வழி கருத்துப் பரிமாற்றம் நிகழ்கிறது. மொழி வாயிலாக நிகழும் மனிதத் தொடர்புகள் முனைப்புடன் நிகழ்த்தப்பட வேண்டும். அங்ஙனம் நிகழ்த்தப்படும் கருத்துப் பரிமாற்றத்தில் மொழியின் பங்கு எங்ஙனம் அமையவேண்டும் என்பதை வள்ளுவர் இவ்வதிகாரத்தில் தெளிவுபடுத்துகிறார்.

சொல்வன்மை அதிகாரம் அமைச்சியல் என்ற பகுப்பில் இடம் பெற்றிருப்பதால் இது அமைச்சருக்கு இருக்க வேண்டிய தகுதியைக் கூறுவதாக உரையாசிரியர்கள் கருதினர். கல்வி என்னும் அதிகாரம் அரசியலில் இறையாட்சிக்கு அடுத்தபடியாக வைத்துச் சொல்லப்பட்டது போன்று சொல்வன்மையையும் அமைச்சியலில் அமைச்சு என்ற அதிகாரத்தை அடுத்து வைத்து அதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறார் வள்ளுவர் எனவும் கூறினர். அமைச்சர் என்ற சொல் அதிகாரக் குறட்பாக்களில் எங்கும் காணப்படவில்லை. பொதுவானதாகப் பேசப்பட்டிருக்கும் சொல்வன்மையை இவர்கள் அமைச்சர்க்கே அமைய வேண்டியதாக்கினர். பொதுவில் மாந்தர் அனைவர்க்கும் சிறப்பு வகையில் அமைச்சர்க்கும் கூறப்பட்டதாகக் கொள்ளலாம்.
அமைச்சரது சொல்வன்மை பகைப்புலத்தாரும் மக்களும் மற்ற அமைச்சரும் ஏற்றுச் செயலாற்றவும் தம்மரசற்கு அடிபணியவும் செய்யவல்லது. வழக்கறிஞர்கள், பொதுநலப் போராளிகள், இலக்கியமன்றப் பேச்சாளர்கள், விற்பனையாளர்கள், இணக்கத் தீர்வு காணமுயல்வோர் முதலியனர்க்கு சொல்வன்மை இருப்பது அவர்களுக்குப் பெரிய செல்வமாகும்.

நாவால் உளதாகிய நலம் எல்லா நன்மைகளினும் சிறந்தது; ஆக்கமும் அறிவும் சொல்லால் வருமாதலால் சொற்சோர்வுபடுதலாகாது, கேட்பவர்களைக் கட்டுப்படுத்திக் கேட்காதவர்களும் விரும்பும் நிலையில் மொழிவது சொல்வன்மை; தன்னுடைய நிலையை, கேட்கின்றவர் நிலை, சொல்லப்படும் சொற்களின் தன்மை இவற்றை அறிந்து சொல்லவேண்டும்; சொல்வன்மையே சிறந்த அறமும் பொருளும் ஆம்; தான் கூறும் சொல்லை வெல்லக்கூடிய பிறிதொருசொல் இல்லாத வண்ணம் எண்ணிச் சொல்ல வேண்டும்; பிறர் சொல்வத்திலுள்ள பயனையும் எடுத்துக் கொள்ளுதல் குற்றமில்லாத இயல்பு; சொல்லில் வல்ல, தளர்வு இல்லாத, அச்சமில்லாதவனை கருத்து மாறுபாட்டில் யாரும் வெல்லமுடியாது. ஒழுங்குபடுத்தி இனிமையாகப் பேசும் அவனிடம் மக்கள் ஏவல்கேட்டு நடப்பர்; நீண்ட பொழிவு சொல்வன்மை இன்மையைக் குறிக்கும்; தாம் கற்றவைகளைப் பிறருக்குணர்த்தும் ஆற்றலில்லாதவர்கள் மலர்ந்தும் மணமில்லாத மலரை ஒப்பர். இவை இவ்வதிகாரம் தரும் செய்திகள்.

சொல்வன்மை அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 641ஆம் குறள் சொல்வன்மை என்கின்றது நல்ல உடைமை; அந்தச் சிறப்பு யாநலத்து இருப்பதும் இல்லை என்கிறது.
  • 642ஆம் குறள் உயர்ச்சியும் அழிவும் சொல்லினால் வருமாதலால் சொல்லின்கண் தளர்வு உண்டாகாதவாறு போற்றிக் காத்துக் கொள்க எனக் கூறுகிறது.
  • 643ஆம் குறள் சொற்களைக் கேட்டாரைத் தம் வயப்படுத்தும் இயல்பினதாய், கேளாரையும் கேட்க வைக்கத் தூண்டுவதே சொல்வன்மை எனச் சொல்கிறது.
  • 644ஆம் குறள் சொல்வார், கேட்போர் திறன் சொல்லின் திறம், அறிந்து சொல்லைச் சொல்லுக; அதை விட மேற்பட்ட அறமும் பொருளும் இல்லை என்கிறது.
  • 645ஆம் குறள் தாம் சொல்லக் கருதிய சொல்லினும் வேறொரு சொல் சிறந்தது இல்லை என்பதை அறிந்து சொல்லுதல் வேண்டும் என்பதைத் தெரிவிக்கிறது.
  • 646ஆம் குறள் பிறர் விரும்புமாறு சொல்லி, பிறர் சொற்களின் பயனைக் கொள்ளுதல் மாட்சிமையில் குற்றம் இல்லாதவரது கொள்கை என்கிறது.
  • 647ஆம் குறள் சொல்லுதலில் ஆற்றல் உடையவன், சொற்சோர்வுபடப் பேசாதவன், அஞ்சாதவன்; அவனை கருத்து வேறுபாடு காரணமாக யாரும் வெல்ல முடியாது எனச் சொல்கிறது.
  • 648ஆம் குறள் சொல்வதை ஒழுங்குபடுத்தி இனிதாகச் சொல்ல வல்லவரைப் பெற்றால் உலகத்திலுள்ளோர் விரைந்து தாம் செய்ய வேண்டிய பணி யாதென்று கேட்பர் என்கிறது.
  • 649ஆம் குறள் குற்றமற்ற பொருளை சிலசொல்லி அமைதலை அறியாதவர் பலவற்றையும் சொல்ல ஆசைப்படுவர் எனக் கூறுகிறது.
  • 650ஆவது குறள் கற்றதைக் கேட்டார் உணரும்படி விரித்துரைக்க மாட்டாதவர், கொத்தாக மலர்ந்திருப்பினும் மணம் பெறாத மலரை ஒப்பர் என்கிறது.

 

சொல்வன்மை அதிகாரச் சிறப்பியல்புகள்

நாநலம் என்னும் நலனுடைமை, ஆக்கமும் கேடும் தருவது, கேட்டார்ப்பிணிக்க-கேளாரும் வேட்ப மொழிவது, சொல்வன்மையே அறமும்பொருளும், வெல்லுஞ்சொல், இகல்வெல்லல் அரிதான சொல், நிரந்தினிது சொல்லுதல், சிலசொல்லல் தேற்றுவர், கற்றதுணர விரித்துரைப்பார் என வள்ளுவர் சொல்லாட்சியின் சிறப்புகளை இங்கு போற்றுகிறார். வள்ளுவர் படைப்பிலேயே அவர் கூறிய சொல்லின் இயல்புகள் பொதிந்து கிடப்பன அறிந்ததே.

சொல்லால் ஆக்கமும் கேடும் வரும் என்கிறது ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு (642) என்ற பாடல். தெரிவிப்பியல் ஊடகங்களான செய்தி இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்கள், இணையதளங்கள், கைபேசி முதலானவற்றின் மூலம் செய்திகள், கருத்தரங்கங்கள், சொற்போர், மகிழ்வூட்டும் கருத்துகள் போன்றவை பலதரப்பட்ட மக்களுக்கும் ஒரே நேரத்தில் அச்சு வடிவிலோ, ஒலி வடிவிலோ, ஒளிவடிவிலோ, தெரிவிக்கப்படுகின்றன. இவ்வூடகங்களில் பங்குபெற்று செய்தி சொல்பவர்கள் சொலல் வல்லராக இல்லாவிட்டால் அவர் கூறும் சொல்லால் கேடு பெரிதாகிறது என்பதையும் சொல்வன்மை உடையரானால் ஆக்கம் மிகையாகிறது என்பதையும் நாம் நாளும் உணரத்தான் செய்கிகிறோம்.

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் என்ற குறட்பா இலக்கிய நயமிக்கது. சிலரது பேச்சு அருவி போல் கொட்டி, ஊற்றுப் போல சுரந்து கேட்பவரை மெய்மறக்கச் செய்யும். அப்படிப்பட்ட சொல்வன்மையை இக்குறள் சுவைமிகுந்த கவிதை நடையில் பேசுகிறது. இக்குறளில் உள்ள சொற்கள் அனைத்தும் வெல்லும் சொற்கள். கேளார் என்ற சொல் கேட்காதவர் என்றும் பகைவர் என்றும் பொருள்பட ஆளப்பட்டது. இவ்விரண்டு சொற்களையும் தனித்தனியே பொருத்திக் குறட்கருத்தை வெவ்வேறுவிதமாக பொருள் புரிந்து கொள்ள முடியும். கேட்காதவர் கேட்க ஆசை கொள்வர்; பகைவர் எதிலும் குறைகாணும் நோக்கமாக இருப்பர். அத்தகையவரையும் கேட்க விரும்பச் செய்யும் சொல்வன்மை வேண்டும் என்ற வலிமை மிகுந்த கருத்தை கேட்டார்-கேளார் என்ற சொல்லாட்சி தருகிறது. மற்ற உரையாசிரியர்கள் வினவியார்-வினவாதார், நூல் கேட்டார்- கேளார் என வேறு பொருள் கூறி மகிழவும் முடிந்தது.

ஆளப்படும் சொல்லுக்குப் பதிலாக வேறு சொல்லைப் பெய்ய முடியாது, பெய்தால் கருதிய பொருள் வேறுபட்டுவிடும் என்று எண்ணி ஆய்ந்து சொல்தேர்வு செய்யவேண்டும் என்று சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து (645) என்ற குறள் சொல்கிறது. இச்சொல்லை விடுத்து வேறு ஒன்றை பயன்படுத்தி இருக்கலாமோ என்று திரும்ப நினைக்காதபடி, 'வெல்லுஞ்சொல்' எது எனத் தேடி ஒருதலையாய்ச் சொல்லுக என்கிறது இது. பேசும்போதும் எழுதும்போதும் குறைவராத சொற்களாகத் தேர்ந்து பயன்படுத்த வேண்டும்.

சொல்வன்மையில் தேர்ந்தவர்களை உலகம் நட்பாகக் கொள்ளும். சொற்கலை என்பது அனைவரையும் ஈர்க்கும் வல்லமை பெற்றது மட்டுமல்லாமல் எழுச்சியும் உண்டாக்கக் கூடியது. சிலரது சொல் நாட்டின் எல்லை கடந்து புரட்சிகளை உண்டாக்கி மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இக்கருத்து விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் என்ற குறளில் (648) கோடி காட்டப்படுவதாக உள்ளது

அரும்பாடுபட்டுப் பலகலைகளைக் கற்றுத் தெளிந்த அறிவு படைத்துள்ளார் ஒருவர். ஆனால் தான் அறிந்தவற்றை கோர்வைபட இனிமையாகச் சொல்லும் வல்லமை இல்லை அவரிடம். அவருடைய அறிவும் ஆற்றலும் பிறர்க்குப் பயன்படாமல் வீணாகிப் போகின்றனவே என்று வருந்தும் வள்ளுவர் இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது உணர விரித்துரையா தார் எனப் பாடுகின்றார். கற்ற அறிவு மக்களுக்குப் பயன்படாமல் மனக் குகையில் அடைபட்டுக் கிடந்ததால் மற்றவர்க்குப் பயன்படவில்லை. குலுங்கப் பூத்த மலர்க்கு மணம் பரப்பமுடியவில்லையே! அது பூத்தென்ன பூக்காவிட்டால் என்ன! என எண்ணுகிறார். பிறர்க்கு உணர்த்தும் சொல்வன்மை வேண்டும் என்பதை வலியுறுத்துவது இது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard