Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 066 வினைத்தூய்மை அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
066 வினைத்தூய்மை அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
வினைத்தூய்மை 
செயல்கள் குற்றமற்றனவாய் இருத்தல்.
குறள் திறன்-0651 குறள் திறன்-0652 குறள் திறன்-0653 குறள் திறன்-0654 குறள் திறன்-0655
குறள் திறன்-0656 குறள் திறன்-0657 குறள் திறன்-0658 குறள் திறன்-0659 குறள் திறன்-0660

openQuotes.jpgஅஃதாவது, அறநூல் முறையிலும் அரசியல் முறையிலும் அமைச்சர் செயல் குற்றமில்லாததாயிருத்தல். சொல்வன்மை போன்றே செயல் நன்மையும் அமைச்சர்க்கு இருத்தல் வேண்டுமென்பதுபற்றி, இது சொல்வன்மையின் பின் வைக்கப்பட்டது.
- தேவநேயப்பாவாணர்

 

இவ்வதிகாரம் சொல்லும் வினை என்பது அரசாட்சியில் நிகழ்கின்ற செயலைக் குறிப்பது. நாட்டிற்காகச் செய்யப்படும் செயல்களுக்கு அமைச்சரே பொறுப்பு. அவர் வினைகள் ஆற்றும்போது தூய்மையைக் கடைப்பிடித்தல் இன்றியமையாதது என வலியுறுத்தப்படுகிறது. எனவே வினைத்தூய்மை என்ற தலைப்பு. செய்யும் வினை நன்மையும் புகழும் தரவேண்டும். செயல் மட்டுமல்ல அதை நிறைவேற்றும் வழிமுறைகளும் தூயனவாய் இருத்தல் வேண்டும் என்பது நிரம்பச் சொல்லப்படுகிறது.
சிறப்பாக அமைச்சர்க்குச் சொல்லப்பட்டாலும் இங்கு கூறப்பட்ட கருத்துகள் பொதுவகையில் மாந்தர் அனைவர்க்கும் பொருந்தக்கூடியனவே.

வினைத்தூய்மை

ஒவ்வொருவரும் ஏதேனும் ஒருவகையில் ஏதேனும் செயல்களைச் செய்யக் கடப்பட்டவராக இருக்கிறோம். அறத்துப்பாலில் தீவினையச்சம் அதிகாரத்தில் தீமை தரும் செயல்கள் செய்ய அஞ்ச வேண்டும் என்று சொல்லப்பட்டது. பின்வரும் பொருள்செயல்வகை அதிகாரத்தில் பொருள் செய்யும் வினைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனக் கூறப்படும். இங்கு செயல்கள் குற்றமற்றனவாய் இருக்கவேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. எது வினைத்தூய்மை? தூய்மை என்பது செயலின் முடிவில் அதன் பயனாக அறியப் பெறும்; புகழொடு நன்றி பயக்கும் செயல் தூய்மையான செயல் எனச் சொல்லப்படுகிறது. சரி. தூய்மை இல்லாத செயல்கள் எவை? தூய்மையற்றனவாய் இவ்வதிகாரம் கூறுவன: நற்பெயரும் நன்மையும் தராதவை; மதிப்பைக் குறைப்பவை; இழிவானவை; பின் வருந்துவதற்குக் காரணமானவை; பெரியோர் பழிப்பவை (கையூட்டுப் பெறுதல் போன்றவை); உலகோர் ஒதுக்கி விலக்கியன (கள், சூது முதலியன); பிறர் அழ அழப் பிடுங்கிக் கொண்டன (உடைமைப் பறிப்பு); ஏமாற்றிப் பொருள் ஈட்டல்.

அமைச்சர் என்ற சொல் அதிகாரத்தில் எங்கும் காணப்படவில்லை. ஆனால் அரசுக்குத் துணைநிற்கும் அமைச்சர்க்கு வினைத்தூய்மை மிக இன்றியமையாதது என்னும் கருத்து இவ்வதிகாரப் பாடல்களில் மேலோங்கி நிற்பதாகவே கருதுவர்.
அமைச்சர் ஆட்சி அதிகாரங்கள் நிரம்பப் பெற்றவராதலால் ஆற்றல் மிக்கவர். செயல்குற்றம் அவர் மாட்டு நிகழக்கூடிய வாய்ப்புகள் மிகை. பழிமலைந்து ஆக்கம் பெறுவதைவிடக் கொல்லும் வறுமையை மேலானதாகச் சான்றோர் (அமைச்சர்) எண்ணவேண்டும் என்கிறார் வள்ளுவர். அறஞ்சாராத எதுவும், அது எத்துணை செல்வத்தைக் கொண்டு வந்து கொடுத்தாலும் அவற்றை நீக்கி அறமானவற்றையே யாவரும் செய்தல் வேண்டும் என்பது வள்ளுவரின் உறுதியான கொள்கை.
அமைச்சரின் தனிப்பட்ட முறைகேடுகள் மட்டுமல்ல, அரசுக்கான முறையான வரிப்பணம் தவிர்த்து மற்ற கொடுமையான வருவாய் வழிகளைச் செயல்படுத்தலும் தூய்மையற்ற செயல்களாகவே கருதப்படும்.
வெற்றி ஒன்றே கருதி அறத்தினை மறக்க வேண்டாம்; செயலின் நோக்கம் குற்றமற்றதாக இருப்பது மட்டும் போதாது அதை அடைவதற்கான வழிமுறைகளும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது அதிகாரத்தின் பிழிவு.

வினைத்தூய்மை அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 651ஆம் குறள் நல்ல துணை உயர்வைக் கொடுக்கும்; செயல்தூய்மை வேண்டிய எல்லாவற்றையும் கொடுக்கும் என்கிறது.
  • 652ஆம் குறள் நற்பெயரோடு நன்மையும் தராத செயல்களை என்றும் நீக்குதல் வேண்டும் எனக் கூறுகிறது.
  • 653ஆம் குறள் இன்னும் உயர்வோம் என்று கருதுபவர் மதிப்பைக் குறைக்கும் செயல்களைக் கொள்ளாது விடுக எனச் சொல்கிறது.
  • 654ஆம் குறள் அதிராத தெளிவினை உடையார் துன்பத்திலே சிக்கிக் கொண்டாலும் இழிவானவற்றைச் செய்ய மாட்டர்கள் என்கிறது.
  • 655ஆம் குறள் 'என்செய்தேன்' என்று பின் தானே இரங்குதற்குரிய செயலைச் செய்யக்கூடாது; ஒருகால் செய்வானாயினும் மீண்டும் அத்தகைய செயல்களைச் செய்யாதிருத்தல் நல்லது என்பதைத் தெரிவிக்கிறது.
  • 656ஆம் குறள் பெற்ற தாயின் பசி போக்க இயலாத வறிய நிலை இருப்பினும், சான்றோரால் பழிக்கப்படும் தீய வினைகளை ஒருவன் செய்யாமல் இருப்பானாக என்கிறது.
  • 657ஆம் குறள் பழியை மேற்கொண்டு பெற்ற செல்வத்தினும் சான்றோர்தம் மிகுந்த வறுமையே மேலானது எனச் சொல்கிறது.
  • 658ஆம் குறள் பழிக்கப்பட்டவற்றை இகழ்ந்து விலக்காது செய்தார்க்கு செயல் முடிந்தாலும் பின் துன்பம் உண்டாகும் என்கிறது.
  • 659ஆம் குறள் பிறரை அழவைத்துக் கைப்பற்றிய பொருள்களெல்லாம் அழுமாறே போய்விடும்; நல்லவழிகளில் பெற்ற பொருள்களை ஒருவன் இழக்கும்படி நேரிட்டாலும், பின்னர் பயன் கொடுக்கும் எனக் கூறுகிறது.
  • 660ஆவது குறள் ஏமாற்றிப் பொருளீட்டி மகிழ்ந்திருத்தல் சுடாத பச்சை மண்பானையில் நீரை ஊற்றி வைப்பதைப் போன்றது என்கிறது.

 

வினைத்தூய்மை அதிகாரச் சிறப்பியல்புகள்

பெற்றவள் பசியைக் காண்பதைவிடக் கொடிய மனத்துன்பம் எதுவும் இருக்கமுடியாது. அப்பசி போக்குவதற்காக, எத்துணை தூயவனும், எந்தக் குற்றமும் செய்ய ஆயத்தமாகும் சூழல். ஆனால் அப்பொழுதும் பழி உண்டாகும் செயலைச் செய்யாதே என்கிறார் வள்ளுவர். ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை (656) என்பது பாடல். வேறு வழிகளும் உறுதியாக உள; சிந்தித்துப்பார்! என்பது குறிப்பு.

தீயன கண்டு பழித்தற்கு உரியார் சான்றோர். ஆனால் அமைச்சரே (சான்றோரே) அரசியற்போர்வையில் பழி பொருட்படுத்தாமல் செல்வம் குவிக்கக் கூடும். அவ்விதம் பொருள் சேர்ப்பதனினும் கொல்லும் வறுமையே மேல் என்ற அறவுரை தருவது பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை (657) என்ற பாடல்.

பிறர் அழஅழ உடைமைகளை பறித்தால் அப்படிக் கைப்பற்றியவன் பொருளும் அதே வழியில் அவன் கதறும்படி போய்விடும் என்று அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை (659) என்ற பாடல் எச்சரிக்கிறது.

சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமண் கலத்துள்நீர் பெய்துஇரீஇ யற்று (660) என்ற குறள் ஏய்த்துச் சேகரிக்கும் பொருள் நீண்டகாலம் தங்காது மறைந்துபோகும் என்கிறது. இது பச்சை மண்பானையில் இட்ட நீர் அதில் நில்லாமல் பானையையும் கரைத்து ஓடிவிடும் போன்றது என்ற பொருத்தமான உவமையால் விளக்கப்படுகிறது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard