Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 080 நட்பாராய்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
080 நட்பாராய்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
நட்பாராய்தல் 
நாடாது நட்டலிற் கேடில்லை.
குறள் திறன்-0791 குறள் திறன்-0792 குறள் திறன்-0793 குறள் திறன்-0794 குறள் திறன்-0795
குறள் திறன்-0796 குறள் திறன்-0797 குறள் திறன்-0798 குறள் திறன்-0799 குறள் திறன்-0800

openQuotes.jpgநட்பாராய்தல் என்பது நமக்கு நண்பராக்கிக் கொள்ள நாம் விரும்புகிறவர்களுடைய குண நலத்தை நன்றாக ஆராய்ந்து, அவர் குற்றமற்றவர் என்பதை அறிந்து கொண்ட பின்பே அவரை நண்பராக நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது. இது எல்லோருக்கும் பொது.
- நாமக்கல் இராமலிங்கம்

 

நட்பு ஆராய்தலாவது நட்பாவாரை ஆராய்ந்து அறிதலாம். நட்புத்தொடர்பு மனித வாழ்வில் இன்றியமையாதது. சில நட்புறவுகள் தாமே தேடிச்சென்று கொள்வன, சில தம்மை நாடி வருவன. இப்பாடல் தொகுப்பு நன்கு ஆராய்ந்த பிறகே நட்புறவை ஆக்கிக்‌ கொள்ள வேண்டும்‌ என்பதையும்‌ ஆராயும் திறனையும்‌ விளக்கிக்‌ கூறுவதாம், நன்கு ஆய்ந்து நட்புச் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்த 'ஆய்ந்தாய்ந்து' என அழுந்தச் சொல்லியுள்ளார் வள்ளுவர்.

நட்பாராய்தல்

ஒருவர் வாழ்வில் தானே தெரிந்து தேர்ந்தெடுக்கும் உறவு நட்பு. இவ்வுறவில் மிகுந்த நெருக்கம் உண்டு. நண்பர்கள் ஒருவருக்கொருவர் சிந்தனைகளை, நம்பிக்கைகளை, மறைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வர். நாடு, இனம், மதம், மொழி, பால் என்ற பாகுபாடெல்லாம் நட்பிற்குக் கிடையாது. நண்பர் என்பவர் தன் நலம் விரும்பாமல், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்துவார். நண்பர்கள் இன்பதுன்ப காலத்துப் பிரியாது, ஒருவருக்கொருவர் உதவி, ஒருவரால் ஒருவர் பயன் பெற்றுக் கூடிவாழ்வர். தான் தவறுசெய்தால் கடிந்துரைத்து நல்லாற்றுப்படுத்துவார், எப்போது நட்பானோம் என்பது தெரியாமலேயே சிறுவயது முதல் ஏற்பட்டநட்பு. பார்க்காமலேயே நிகழும் நட்பு என நட்பின் வகைகள் பல. நட்பிற்காகவே நட்பெனும் உயர்ந்த நட்பு, புலனின்பங்களை நோக்காகக் கொண்ட மகிழ்ச்சிக்குரிய நட்பு, ஒன்று பெறுவது நோக்கிய பயன் கருதும் நட்பு என்றவாறும் நட்பை வகைப்படுத்துவர். நல்ல நட்பில் உயர்ச்சி, மகிழ்ச்சி, பயன் இம்மூன்றுமே அமையும்.
‘சேரிடம் அறிந்து சேர்' என்றார் ஔவையார். ஒருவன் ஆளாகுவதற்கும், சீரழிவதற்கும் அவனது சேர்க்கையும் ஒரு முக்கியமான காரணம். எனவே நட்குங்கால் ஆய்ந்து நட்க வேண்டும் என்பார் அதற்கென்று தனியே இவ்வதிகாரம் படைத்தார் வள்ளுவர். இது நட்புச் செய்தற்கு எளிய தன்மையை விளக்குவதற்காக நட்பு ஆராயும் வகைகளைக் கூறுகிறது, பண்பு கருதிய நட்பை ஆராயும் திறம் இங்கு சொல்லப்படுகிறது.

ஒருவருடன் நட்பாகப் பழகியபின் அவரை விடுதல் எளிதல்ல ஆதலால் ஆராயாது நட்பு கொள்வது மிகவும் கெடுதியானது; ஆராய்ந்து ஆராய்ந்து ஏற்படுத்திக் கொள்ளாத நட்பு கடைசியில் அழிவதற்குக் காரணமான துன்பத்தைக் கொடுக்கும்; குணம்நாடி, குற்றமும்நாடி, மிகைநாடி மிக்க கொளல் என்பது வள்ளுவரின் கருத்தியல் ஆதலால் நட்பாவார் குற்றமும் குறையற்ற சுற்றம் கொண்டவரா எனவும் அறிந்து கொள்ளப்பட வேண்டும்; நல்ல குடும்பப் பின்னணியுடன், தன்மீது பழிவந்துவிடக்கூடாதே என்று விழிப்புடன் செயல்படுபவனாக இருந்தால் அவனைப் பற்றி வேறொன்றும் ஆராய வேண்டுவதில்லை; அழஅழத் திட்டி இடித்துரைக்கும் உலக வழக்கு அறிந்த பெரியவர் நட்பைத் தேடிப்பெற்றுக் கொள்ளலாம்; ஒருவனுக்குக் கேடு உண்டாகும்போது நட்பின் ஆழம் தெரிந்துவிடும்; அறிவு திரிந்தவ (பேதைய)ரை நட்டலைவிடுதல் ஆதாயம் தருவதே; துன்புறும்வேளை கைவிடும் நட்பினர் செயல் நம் ஊக்கம் குறைவதற்கும் காரணமாவதால் அத்தகையார் நட்பு வேண்டாம்; கேடுற்றசமயம் நட்பைத் துண்டிப்பார் செயலைச் சாகும்போது எண்ணினாலும் நெஞ்சம் வெம்மையுறும். குற்றமற்றவர் தொடர்பே கொள்ளத்தக்கது, ஒத்துவராதார் நட்பை எப்படியாகிலும் விலக்கிவிடுக;
இவை இவ்வதிகாரம் தரும் செய்திகள்.

நட்பாராய்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 791ஆம் குறள் நட்பை விரும்பியாள்பவர்க்கு, ஒருவரோடு நட்புகொண்டபின் அவரை விட்டுவிலகுதல் இல்லை ஆதலால் ஆராயாது நட்புச் செய்தலைப்போலக் கேடு வேறில்லை எனச் சொல்கிறது.
  • 792ஆம் குறள் பல முறை ஆராய்ந்துகொள்ளப்படாதவனின் நட்பு முடிவில் தான் சாகும்வரை துன்பத்தையும் தரும் எனக் கூறுகிறது.
  • 793ஆம் குறள் குணம், குடிப்பிறப்பு, குற்றம், குறையில்லாத கூட்டாளி ஆகியவற்றை அறிந்து நட்புச் செய்க எனச் சொல்கிறது.
  • 794ஆம் குறள் நநற்குடியில் பிறந்து தன்பால் பழிவரக் கூடாதென்று அஞ்சுகின்றவனை எது கொடுத்தும் நட்புக் கொள்க என்கிறது.
  • 795ஆம் குறள் வருந்தி அழுமாறு சொல்லி தீயதை இடித்துரைத்து உலக வழக்கு அறியவல்லாரது நட்புத்தொடர்பை ஆராய்ந்து கொள்க எனச் சொல்கிறது.
  • 796ஆம் குறள் உறவினரது இயல்பை அளந்தறியும் கோலாக அமைவதால் துன்பம் வந்த காலத்தும் ஒரு நன்மை உண்டு என்கிறது.
  • 797ஆம் குறள் ஒருவர்க்கு ஆதாயம் என்பது அறிவு திரிந்தவரது நட்பை விட்டு நீங்குதல் எனச் சொல்கிறது.
  • 798ஆம் குறள் ஊக்கம் சுருங்குதற்கு ஏதுவானவற்றை எண்ணாதொழிக; தமக்குத் துன்பம் வந்தவிடத்துக் கைவிடுவார் நட்பினைக் கொள்ள வேண்டாம் என்கிறது.
  • 799ஆம் குறள் கேடுற்ற காலத்தில் விட்டு நீங்குவாரது நட்பு சாகும் காலத்தில் எண்ணினாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும் என்கிறது.
  • 800ஆவது குற்றமிலார் நட்பைக் கொள்க; ஏதாவது கொடுத்தாயினும் தமது தன்மைக்கு ஒவ்வாதாராது தொடர்பினின்று நீங்குக என்கிறது.

 

நட்பாராய்தல் அதிகாரச் சிறப்பியல்புகள்

யார் அருகில் இருக்கிறோம், அவரைச் சுற்றி யார் இருக்கிறார்கள், அவர் எவருடன் தொடர்பு வைத்துக் கொள்கிறார் என்பவை எல்லாம் ஒருவரது வாழ்வியலில் முக்கியமானவை, நட்புத் தொடரை ஏற்படுத்திக்கொள்ளல் ஒருவரது தனிப்பட்ட உரிமை. வேண்டும் நட்பைக் கொள்ளலாம் அல்லது தள்ளலாம். ஒவ்வொருவரும் தம் நட்பினர் நல்லோராக இருக்குமாறு தேர்ந்துகொள்ளுதல் நன்னெறியில் செல்வதற்கான நன்மை பயக்கும். சிற்றினம் அமைந்துவிட்டால் அறம் திறம்பிக் கெடுவர். தீய நட்பை நீக்கி குற்றமற்றார் தொடர்பு கொண்டு வாழவேண்டும். நட்பு வட்டாரத்தையும் தொடர்புகளையும் உண்டாக்குவதில் நல்ல கணிப்பு தேவை. அதற்கு இவ்வாதிகாரப் பாடல்கள் உதவுகின்றன.

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு (794) என்ற நட்பாராய்தல் அதிகாரப் பாடல் நல்ல குடும்பத்தில் பிறந்து தம் மீது எந்தவகையான பழியும் வந்துவிடக்கூடாது என்று அஞ்சி ஒழுகுபவனுடன் ஆராயாமலே நட்புக் கொள்ளலாம் என்று கூறுகிறது.

கேட்டில் நன்மை உண்டு என்று நகைமுரணாக கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல் (796) என்ற பாடல் சொல்கிறது. அக்கேடானது நட்புக்கொண்டவரது உதவுந்தன்மையை அளந்து சொல்லிவிடும்.

அறிவு திரிந்தவர் நட்பைக் கழற்றிவிட்டுவிடலாம் என்று ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல் (797) என்ற குறள் கூறுகிறது, அது நன்மை பயக்கும் என்பதால்.

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும் (799) என்ற பாடல் சாகும் நேரமும் உள்ளம் வேகுமே, தேவைப்பட்ட நேரத்தில் கைவிட்ட நட்பை நினைக்கும்போது என்கிறது. இது நட்டாற்றில் கைவிடுவது போன்ற கொடுமை எனச் சொல்வது.

“நட்பு என்பது கடைசி வரை நீடிக்க வேண்டும்' என்ற கருத்து பொதுவாக இருந்து வருகிறது. ஆனால் சில நட்புகள் முறிக்கப்படலாம் என்ற பொருள் தருமாறு வள்ளுவர் அமைத்த பாடல் மருவுக மாசற்றார் கேண்மை; ஒன்று ஈத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு (800) என்பது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard