Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 081 பழைமை அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
081 பழைமை அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
பழைமை 
உரிமையோடு பழகும் நெடுங்கால நட்பு.
குறள் திறன்-0801 குறள் திறன்-0802 குறள் திறன்-0803 குறள் திறன்-0804 குறள் திறன்-0805
குறள் திறன்-0806 குறள் திறன்-0807 குறள் திறன்-0808 குறள் திறன்-0809 குறள் திறன்-0810

openQuotes.jpgபல காலமாகப் பழகி வந்ததால் ஒருவருக்கொருவர் ஏற்படும் நட்புரிமை. தொடர்ந்துவரும் நட்பில், ஒருவர் உரிமையோடு செய்வன சில பிழையாகத் தோன்றினும், பழைமை-பழைய நட்புக்காரணமாகப் பொறுத்தல் கடன் என வற்புறுத்தப்படுகிறது.
- தமிழண்ணல்

 

நெடுங்கால நட்புத் தொடர்பைப் பழைமை என்ற சொல்லால் குறித்துப் பழைய நட்பின் பெருமைகளை நன்கு உரைக்க, ஓர் அதிகாரமே அமைக்கின்றார் வள்ளுவர். நட்பு இலக்கணம் கூறி, ஆய்ந்து ஆய்ந்து நட்புச் செய்க என்று அறிவுறுத்தியபின், இங்கு, உரிமையோடு கூடிய மனித உறவுகளில் உயரிய வகையான அந்த நட்புறவு பற்றி சொல்கிறார். இதன் பின் தீநட்பு, கூடாநட்பு என்ற தலைப்புகளில் இரு அதிகாரங்கள் அமைவதால் இப்பாடல் தொகுதியை 'நல்ல நட்பு' அதிகாரம் என அழைக்கலாம். எந்த நிலையிலும் பழையாரை விட்டுக் கொடுக்காமல் பழகுபவரை எல்லோரும் விரும்புவர் என்கின்றன அதிகாரப் பாடல்கள்.

பழைமை

புதுமை என்பதின் எதிர்ச்சொல்லாகிய பழமை என்பது தொன்மை அதாவது தொன்று தொட்டுவருவது என்பதனைக் காட்டும். தொன்மையோடு தொடர்புடைய அனைத்துமே பழமை எனப்படும். பழமை என்ற சொல்லுக்கு மூத்தது, முதியது, பண்டையது என்னும் பொருட்கள் உள. பழஞ்சோறு, பழம்பெருமை, பழங்கோவில், பழங்கதை போன்ற பழையதாகிப்போன எதனையும் பழமை என்ற சொல்லிலிருந்தே பெறுகிறோம்.
பரிப்பெருமாள், காலிங்கர் உரைகளில் பழைமை என்றதற்கு பழமை என்ற சொல்லே இடம்பெற்றிருக்கின்றது.

பழைமை காலப் பழமையைக் காட்டுவது. பழைமை என்னும் சொல்லை, நெடுங்காலமாகப் பழகிவந்த பழமையான நட்பு என்ற பொருளில் வள்ளுவர் ஆள்கிறார். பழைமையால் விளைவது உரிமை. நட்பின் பழக்கத்தினால், உரிமை பாராட்டலையே 'பழைமை' என்னும் சொல் சுட்டுகிறது. பழமை எனப்படுவது உரிமையை ஒருசிறிதும்‌ சிதையாமல்‌ அதற்கு உடம்படு நட்பாம் என பழைமைக்கு வள்ளுவரே அதிகாரத்துக் குறளில் வரையறை செய்துள்ளார். அந்நட்பு காரணமாக வரும் உரிமையைக் 'கெழுதகைமை' என்ற சொல்லாலும் குறிக்கிறார். ஒன்றாகப் பழகியது பற்றி ஒருவர் மீது ஒருவர் உரிமை கொண்டாடுவார்கள். அவ்வுரிமையால் சிலவேளைகளில் மிகையாக நடந்துகொள்வார்கள். நீண்ட காலமாக இருவரது நட்பும் தொடர்ந்து நிலைபெற்றிருப்பதால் பழைய நண்பர்களில் யாராவது ஒருவர் தவறு செய்தால் அதை மற்றவர் பொறுத்து நட்பு நிலைக்கச் செய்துள்ளனர் என அறியலாம். ஒருவர் பொறை, இருவர் நட்பு என்பது பழமொழி.
பழைய நட்பில் இனிமையுண்டு. உரிமையால் தொடரும் நட்பு நெடுங்காலம் நீடித்து நிற்கும். பழகிய நட்பு, தொல்லைக்‌ கண்‌ நின்றார்‌ தொடர்பு, வழிவந்த கேண்மையவர்‌, பழையார் என்றவாறு நட்பாளரின்‌ பழமைத்‌ தொடர்பு காட்டப்படுகிறது. இருவர் மாட்டும் உரிமைபற்றிய தவறுகள் நேரலாம். நண்பருடைய தொடர்பின் 'பழைமை' கருதி ஒருவரை ஒருவர் பழைமை பாராட்டிப் பொறுக்க வேண்டும் என்பதே இவ்வதிகார நோக்கு. பழைமையாளன் செய்பணிகளைத் தன் நட்பினன் மனப்போக்கை ஒட்டித் தானே வகுத்துக் கொள்வான்.

உரிமையை மிகப்படுத்தித் தவறு செய்து விட்டாலும் அவர்களைத் தள்ளிவிடக் கூடாதென்று இந்த அதிகாரம் சொல்கிறது. நட்பு மேன்மேலும் வளர்ந்து நிலைக்க வேண்டுமானால், உரிமையுணர்வு வேண்டும். நட்பிற்கு உறுப்பாக இருப்பது நண்பர் உரிமையோடு நடக்கும் தன்மையே ஆகும்; நட்பிற்கு அடையாளம் உரிமைச் செயல்களாம். அந்த உரிமைச் செயல்களுக்கு இனிமையாக உடன்படல் சான்றோர் கடமையாகும். நண்பர் வருந்தத் தக்கவற்றைச் செய்வாரானால், அதற்குக் காரணம் அறியாமை மட்டும் அன்று; மிக்க உரிமையும் காரணம் என்று உணர வேண்டும். அன்பின் வழியில் வளர்ந்த நட்பை உடையவர், தம் நண்பர் கேளாது நடந்தாலும், மனம் வருந்தத்தக்க செயல்கள் செய்தாலும், அழிவு வேலையே செய்வாரானாலும், இழப்பு ஏற்படுத்தினாலும், 'அறியாமையால் செய்தான், வேண்டுமென்று நமது நண்பன் இப்படிச் செய்யமாட்டான். அல்லது நம்மிடம் அதிக உரிமை கொண்டு செய்தான்' என்றே எண்ணுவர். அவரிடத்தில் கொண்ட பழைய அன்பு நீங்காமல் வாழ்வார்: நண்பர்கள் உரிமை காரணமாகச் செய்வனவற்றிற்கு உடன்படாவிடின், அந்நட்பு பொருளற்றதாம். உரிமை கெடாமல் தொடர்ந்து பழகி வரும் நண்பர்களின் உறவைக் கைவிடாதவரை, உலகம் விரும்பிப் போற்றும். பண்பறாது பழகும் உள்ளன்பு கொண்டோரைப் பகைவரும் விரும்புவர்.
இவை இவ்வதிகாரம் கூறும் செய்திகள்.

பழைமை பற்றிச் செய்யப்படும் உரிமைச் செயல்கள் எவை? வீட்டிற்குள் வந்து உரிமையுடன் பழகுதல், முறை பாராட்டி எள்ளலுடன் இழித்து உரையாடுதல், நம்மைக் கேட்காமலே செயல்களைச் செய்தல். நம்மிடம் பணிவோ, பயமோ இல்லாமை, நாம் செய்யச் சொன்ன செயல் கெடும்படியாகச் செய்தல், நம்மைக் கேட்காமலே அவர்கள் விரும்பிய பொருளை எடுத்துக் கொள்ளுதல் ஆகியவற்றை உரையாளர்கள் காட்டுவர்.

பழைமை அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 801ஆம் குறள் பழைமை என்று சொல்லப்படுவது யாதென்றால் ஒருவருக்கொருவருடனான உரிமை சிறிதும் சிதைவுபடாத நட்பு எனச் சொல்கிறது.
  • 802ஆம் குறள் நட்புக்குப் பகுதியாக உள்ளது உரிமையோடு பழகுதல்; அவ்வுரிமைக்கு இனியராதல் சான்றோர் கடமையாகும் எனக் கூறுகிறது.
  • 803ஆம் குறள் நண்பர் உரிமையால் செய்தனவற்றிற்கு செய்தபடியே உடன்படாவிடத்து நெடுங்காலம் பழகிவந்த நட்புக்கு என்ன பொருள்? எனக் கேட்கிறது.
  • 804ஆம் குறள் பழைமையின் உரிமையோடு நண்பர் தம்மைக் கேளாமலே செய்வாராயினும் அங்ஙனம் செய்தது அவருக்கு விரும்பத்தக்கதாதலால் அதை எதிர்பார்த்திருப்பர் என்கிறது.
  • 805ஆம் குறள் வருந்தத்தக்க செயல்களைப் பழகிய நண்பர் செய்தால் ஒன்று அறியாமையால் மட்டுமன்றி மிகுந்த நட்புரிமையோடும் என்று அறிந்து கொள்க எனச் சொல்கிறது.
  • 806ஆம் குறள் நட்புரிமையின் உயர் எல்லையில் நின்றார் பழைமை பாராட்டும் நண்பரது தொடர்பை அவரால் இழப்புக்கள் நேர்ந்தவிடத்தும் விடமாட்டார் என்கிறது.
  • 807ஆம் குறள் தமக்குக் கேடுவருவனவற்றைச் செய்தாலும் தாம் அவரிடம் அன்பு நீங்கார், அன்புடனே பழையதாய் வந்த நட்புடையவர்கள் எனச் சொல்கிறது.
  • 808ஆம் குறள் நண்பர் செய்த குற்றங்களைக் கேட்க விரும்பாத உரிமை அறிய வல்லவர்க்கு நண்பர் பிழை செய்வாராயின் அது நல்ல நாள் ஆகும் என்கிறது.
  • 809ஆம் குறள் அழியாமல் பழைமையாய்த் தொடர்ந்து வந்த நண்பரது நட்பினை விடாதவரை உலகம் நட்பு கருதி விரும்பும் என்கிறது.
  • 810ஆவது பழைய நண்பரிடத்துக் கொண்ட பண்பிலிருந்து மாறாதவர் தம்மை விரும்பாதாராலும் விரும்பப்படுவர் என்கிறது.

 

பழைமை அதிகாரச் சிறப்பியல்புகள்

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின். (805) என்ற பாடல் வருந்தத்தக்க செயல்களை பழையார் செய்தால் அது அறியாமையால் மட்டுமல்ல மிக்க உரிமை கொண்டு செய்த செயல் என்று உணர்க என்கிறது. மனம் புண்படும்படியான செயல்களையும் நட்புரிமை பற்றியே செய்வார் என அமைதி கொள்ளச் சொல்கிறது இக்குறள்.

நட்புரிமையை நன்கு உணர்ந்தவர் கேண்மையவர் பற்றி யார் எது சொன்னாலும் செவிகொடுத்துக் கேட்கமாட்டார்; 'அவன் அப்படிச் செய்யக்கூடியவனல்ல' என்று உணர்ந்தவராதலால். அதுமட்டுமல்ல, உண்மையிலேயே அவர் பிழை செய்யினும், அச்செயலை நமக்காகச் செய்தான் என்பதை அறிய வைத்த நல்ல நாள் என்று நாளையும் பாராட்டுவார். இதைச் சொல்வது கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாள்இழுக்கம் நட்டார் செயின் (808) என்ற பாடல்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard