Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 109 தகையணங்குறுத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
109 தகையணங்குறுத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
தகையணங்குறுத்தல் 
பெண்ணின் அழகும் பண்பும் அவனைக் 'கொல்லுதல்'
குறள் திறன்-1081 குறள் திறன்-1082 குறள் திறன்-1083 குறள் திறன்-1084 குறள் திறன்-1085
குறள் திறன்-1086 குறள் திறன்-1087 குறள் திறன்-1088 குறள் திறன்-1089 குறள் திறன்-1090

openQuotes.jpgதலைவியது அழகு, அவளைக் கண்டு காதல் கொண்ட தலைமகனிடம் அவள் குறிப்பறியத் தவிக்கும் வேட்கைத் துன்பத்தை விளைவித்தல். தகை - அழகு. அணங்குறுத்தல்-காதல் துன்பத்தை உண்டாக்குதல். அணங்கு-பெண் தெய்வம், தீண்டி வருத்தும் தெய்வம். அதைப் போல் காதலியது அழகு வருத்துவது, 'அணங்கு உறுத்தல்' எனப்பட்டது.
- தமிழண்ணல்

 

தலைவன் தலைவியை முதன் முதலில் எதிர்கொள்வதைச் சொல்லும் அதிகாரம். வேறு வேறு இடத்தில் வெவ்வேறு சூழலில் பிறந்து தோன்றிய ஓர் ஆண்மகனும் ஒரு பெண்மகளும் இயற்கை நியதியால் ஓரிடத்தில் ஒருவரை ஒருவர் காண நேரிடுகிறது. அவளைப் பார்த்த பொழுதே ஒர் மின்னலைப் போன்று அவனுள்ளத்தில் காதல் உணர்ச்சி ஏற்பட்டு விடுகிறது. முதல் காட்சியிலேயே அவளது அழகும் பண்புநலன்களும் தன்னை மிகையாகத் தாக்கியதாக அவன் உணர்கிறான். முதலில் அவளை அழகுத் தெய்வமாகக் கண்டு பின் காதலுக்குரியவளாகக் கருதுகிறான்.

தகையணங்குறுத்தல்

தகையணங்குறுத்தல் என்பதனை 'அணங்கு தகை உறுத்தல்' என்று மாற்றி 'அணங்கு' என்றால் பெண்; 'தகை' என்பது அழகு முதலியன; 'உறுத்தல்' வருத்தத்தை உண்டாக்குதல்; எனவே இச்சொற்றொடர் 'மங்கையின் அழகு முதலியன வருத்தத்தைச் செய்தல் என்ற பொருள் தந்து நிற்கிறது என்று சொற்பொருள் விளக்கம் தந்தனர். 'தலைவியின் அழகு தலைவனுக்கு வருத்தத்தை உண்டாக்குதல்' என்பது பெரும்பான்மையர் கருத்தாகிறது.
இச்சொற்றொடர்க்கு 'தகுதியுடைய பெண்ணின் அழகு துன்புறுத்தல்' என்றும் பொருள் கொள்வர். தகுதி என்பதற்குப் பல்வேறு மாறுபட்ட வரையறைகள் கூறப்பட்டுள்ளன. தகுதி என்பது பருவினாலும் (பருவத்தாலும் அதாவது வயதாலும்) உருவினாலும் (உருவ அமைப்பாலும் அல்லது எழில்நலன்களாலும்) திருவினாலும் (செல்வநிலையாலும் அல்லது சமுதாயப் படிநிலையாலும்) ஒத்தவரான ஆடவனும் பெண்ணும் எனக் கொள்வது மரபான அணுகுமுறை. தலைவியின் உடல்அழகு மட்டும் அவனைக் கவரவில்லை. அவளது உள்ள அழகும் ஈர்ப்பை உண்டாக்கியது என்று இவ்வதிகாரத்தில் வள்ளுவர் குறிப்பால் உணர்த்தியமை நோக்கத்தக்கது. குறளின் தகையணங்குறுத்தல் அதிகாரப் பாடல்களை நோக்கும்போது தகுதி என்பது 'அழகிலும் பண்பிலும்' ஒத்த என்றாகிறது.

அதிகாரத்துப் பத்துப் பாடல்களையும் தலைவன் கூற்றாகவே கொள்ள முடியும். ஆனால் உண்டார்கண் அல்லது....(1090) என்ற இறுதிப்பாடலை தலைவன்-தலைவி இருவர் கூற்றாகக் கொள்ள இடமிருக்கிறது. அந்த வகையில் இருவரும் 'அழகிலும் பண்பிலும்' ஒத்தவர்கள் என்று ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதாக இவ்வதிகாரம் அமைகிறது. இதனால்தான் பரிப்பெருமாள் 'தகையணங்குறுத்தலாவது தலைமகனும் தலைமகளும் எதிர்ப்பட்ட இடத்துத் தலைமகளது கவின் தலைமகனை வருத்துதலும் தலைமகனது கவின் தலைமகளை வருத்துதலும்' என்று தகையணங்குறுத்தல் என்னும் அதிகாரத் தலைப்பை விளக்கினார் போலும்.

காமத்துப்பால் முழுக்கவே நாடக ஆக்கம்தான். தகையணங்குறுத்தல் அதிகாரப் பாடல்களையும் நாடகக் காட்சிகளாக நோக்குவது சுவை பயக்கும். தகையணங்குறுத்தல் அதிகாரத்தின் நாடகக் காட்சிகள் இவை:
அவளைக் கண்ட மாத்திரத்திலேயே அவளது அழகு பற்றி அணங்கோ என்றும் சாயல் பற்றி மயிலோ என்றும் மொத்தத்தில் மாதர்தானோ என்று வியக்கிறான். அடுத்த காட்சியில் இருவரும் ஒருவரை ஒருவர் ஒரே நேரத்தில் நோக்கினார்கள். அப்பொழுது அவள் அவனை படைகொண்டு தாக்குவது போல இருந்தது. எனினும் இது அவள் சினம் கொண்டு நோக்கியதல்ல. இவனது கணையை சமமாக எதிர்கொள்ளவே எதிர்பார்வையாக அப்படிப் பார்க்கிறாள். இருவரது நோக்கும் முன்பின் அறிமுகமில்லாத ஓர் ஆணும் பெண்ணும் இயல்பாகப் பார்க்கும் பார்வை அல்ல என்பதையும் இக்காட்சி உணர்த்தியது. அப்பொழுது அவளது பெண்மை நிறைந்த தன்மையையும் உணர்கிறான். எனவேதான் அவள் பெண்டகை அதாவது அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கொண்டவள் என்று பெருமிதம் கொள்கிறான். அதே நேரத்தில் அவளது கண்கள் கூற்றுவன் அவன் உயிரைக் கவர வந்தது போல் இருந்தது என்று வேதனை தாங்காது அரற்றுகிறான். இந்தக் 'கொல்லும்' கண்கள் இவளுக்குப் பொருந்தி வரவில்லையே எனப் புலம்புகிறான். எமன், மனிதக்கண், மருண்ட பார்வை என மாறி மாறி தோறறமளித்து அவனை வதைக்கிறாள் என்கிறான். புதியவனிடம் கனிவுப் பார்வை செலுத்தினோமே என்ற குற்ற உணர்வாலோ, அவனிடம் பார்வை மாற்றிக் கொளவதை மற்றவர் கவனிக்கிறார்கள் என்ற அச்சத்தாலோ மான்போன்று மருண்டு பார்க்கிறாள். இக்காட்சியில் நாணமுற்ற தலைமகள் தலையிறைஞ்சிய வழி கண்ணை மறைத்துத் தோற்றிய புருவ முரிவின் அழகும் அந்தச் சுளித்த பார்வையும் அவனை நிலைகொள்ளாதபடி செய்கிறது. இச்சமயம் அவளது முலைகள் பகுதியானது அவன் கண்ணில் தென்படுகின்றன. அப்போது சொல்கிறான்: "அவள் அணிந்துள்ள மேலாடை விலகினால் அவை தன்னைக் கொல்லுமே' என்று. அதன்பின் அவள் தலை கவிழ்ந்து நிலன் நோக்கியபோது புருவத்தின்மேல் தோன்றிய நுதல் அழகில் துவண்டு, 'தன் வீரம் எல்லாம் எங்கே மறைந்தது?' என்று அவளிடம் சரணடைந்ததை ஒப்புகிறான். வெட்கமுற்ற தலைமகள் பேசாமல் நின்று என்ன செய்வதென்று அறியாது தன் அணிகலனைத் தொட்டு நிற்கின்றாள். அப்பொழுது அவன் வினவுவது, 'பார்வையும் நாணமும் இவளுக்கு அழகு கூட்டும்பொழுது வேறு அணிகள் என்ன கருதி அணிந்தனர்?' என்று. இப்பொழுது, ஒருவரை ஒருவர் பார்ப்பதிலே பெரும் மகிழ்ச்சியும் மயக்க உணர்வும் உண்டாவதைச் சொல்கின்றனர். இவ்வாறு இருவர் உள்ளங்களும் நெருங்கி வருவதைச் சுருக்கமாகவும் இனிமையாகவும் சொல்வது தகையணங்குறுத்தல் அதிகாரக் குறட்பாக்கள்.

சிலர் தகையணங்குறுத்தலில் தலைமகள் ஏதும் சொல்வதாக இல்லையே என்று கருதி இது கைக்கிளை கூறும் பகுதி அதாவது ஒருதலைக் காதல் என முடிவுக்கு வருகின்றனர். மேற்கூறியவாறு வள்ளுவரின் படைப்பாற்றல் உணர்ந்து தெளிந்தால் இது கைக்கிளை பற்றியது அல்ல என்று அவர்கள் உடன்படுவர்.

தகையணங்குறுத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்:

 

  • 1081 ஆம்குறள் தலைமகன் தலைமகளை முதன்முதல் காணும்போது 'இவள் தேவதையா? அழகிய மயிலோ? அல்லது மனிதப்பெண்தானா? என எனது உள்ளம் மயங்கி நிற்கின்றது' எனக் கூறுவதைச் சொல்கிறது.
  • 1082 ஆம்குறள் எதிர்நோக்கிய 'பெண்ணின் பார்வை பெரும் படைகொண்டு தாக்கியது போன்றதாய் இருந்தது' என்று தலைவன் சொல்வதைக் கூறுகிறது.
  • 1083 ஆம்குறள் 'முன்பு கூற்று என்பதை நான் அறியவில்லை; அது பெண்வடிவத்தில் பெரும் போர் செய்யும் கண்களை உடையது என்று இப்பொழுது அறிந்தேன்!' எனத் தலைவன் வியப்பதைக் கூறுவது.
  • 1084 ஆம்குறள் 'களங்கமற்ற இவ்விளம் பெண்ணுக்கு ஏன் கொல்லும் கண்கள்?" என்று தலைவன் மயக்குற்றதைச் சொல்வது.
  • 1085 ஆம்குறள் 'இவ்விளம்பெண் என் உயிர் கவர்ந்து சென்றதால் கூற்றமோ, குளிர்ந்த நோக்கம் உடைமையால் மங்கையின் கண்ணோ, மருண்ட பார்வை இருத்தலால் பெண்மானோ? இவை அனைத்தும் கொண்டவள் இவள்' என்று வியந்து உரைப்பதைச் சொல்கிறது.
  • 1086 ஆம்குறள் 'இவளது வளைந்த புருவங்கள் நேராக இருந்து கண்களை மறைக்குமென்றால், அவை எனக்கு நடுங்கத்தக்க துன்பத்தைச் செய்ய மாட்டா!' என மருள்வதைச் சொல்வது.
  • 1087 ஆம்குறள் அசைந்தாடும் மேலாடையுள் இருக்கும் கொங்கை அவனைக் கொல்லும் படையாக மாறக் காத்திருக்கிறது என்பதைச் சொல்கிறது.
  • 1088 ஆம்குறள் 'பகைவர் எல்லாம் அஞ்சி நடுங்கத் தக்க என் வீரப்பெருமிதம், இவளது மிளிரும் நெற்றியின் அழகுக்கு முன் வீழ்ந்துவிட்டதே!' எனப் பெருமை இழந்த நிலையைத் தலைமகன் கூறுவதைச் சொல்கிறது.
  • 1089 ஆம்குறள் "மருண்ட பார்வையும் இயல்பான நாணமும் இவளது அழகுக்கு அழகு சேர்க்கும்போது வேறு அணிகள் எதற்கு இவளுக்கு?' என அவன் நினைப்பதைக் கூறுகிறது.
  • 1090 ஆவதுகுறள் காய்ச்சப்பட்ட கள் உண்டார்க்கு மகிழ்ச்சியைத் தருமே அல்லாது, காதலுற்றார் போல், பார்த்தாலே மகிழ்ச்சியைத் தருவது இல்லை எனச் சொல்கிறது.

 

 

 

தகையணங்குறுத்தல் அதிகாரச் சிறப்பியல்புகள்:

பழைய உரையாசிரியர்களும் இன்றைய ஆசிரியர்களில் சிலரும் கூட தலைவன்-தலைவி முதல் சந்திப்பை விளக்கும்போது இலக்கணநூல்களில் சொல்லப்பட்டனவற்றை மனதில் இருத்தியே விளக்கினர். அதன்படி அவன் வேட்டைக்காக வந்தவன்; அவள் பூக்கொய்து கொண்டு இருப்பாள்; உடன் இருந்தவர்கள் விலகிப் போய்விடுவர்; அதன்பின்னரே அவன் அவளைக் கண்ணுறுவான்; கூடும் இடமாவது பறவைகள் இசைபாடும் மலர்களின் நறுமணம் வீசும் பூஞ்சோலை அல்லது தினைக்கொல்லையாக இருக்கும். ஆனால் வள்ளுவர் இந்தப் பிண்ணனிக் காட்சிகள் எவைபற்றியும் கூறவில்லை. காதல் பாய்வதற்குத் தனிமையான இடம்தான் பொருத்தமானது என்று வள்ளுவர் நினைக்கவில்லை என்று தெரிகிறது. அது எங்கும் நிகழலாம்; திருவிழாக் கூட்டத்திலோ, நிறைந்த அரங்கத்திலோ கூட காதல் மலரலாம். அதுபோலவே உரு, திரு. பரு, கல்வி, குடி ஒத்தமை பற்றியும் சொல்லவில்லை. இவற்றை ஆய்ந்து பார்த்தபின் வருவது காதலாக இருக்க முடியாது என்று அவர் எண்ணியிருக்கலாம்.

தகையணங்குறுத்தல் என்னும் அதிகாரத் தலைப்பு கூறும் தகுதி எழில்நலமும் குணநலன்களும் என்று அறியலாம். எழில்நலம் என்று சொல்லும்போது அது மனம் சார்ந்தது; ஒருவர் அழகு என்று கருதுவதை இன்னொருவர் அவ்வளவு அழகில்லை எனலாம். அவனுக்கு அவள் அழகாய் தோன்றுகிறாள்; அவளுக்கு அவன் அழகாய்த் தோன்றுகிறான் என்பதே கருத்து. பண்புகள் பற்றிப் பேசும்போது இவ்வதிகாரத்தில் வரும் தலைவி நாண் நிறைந்தவள்; தலைவன் வீரவல்லமை கொண்டவன் என்று உணரலாம்.
தகையணங்குறுத்தல் அதிகாரம் பெண்ணின் உடல் உறுப்புகளின் எழில்நலன்களைப் புனைந்துரைக்க வாய்ப்புகள் மிகையாக உள்ள இடம். ஆனால் இங்கு கண், புருவம், நெற்றி, முலை இவற்றின் அழகுநலன்கள் மட்டுமே பேசப்பெறுகின்றன. எங்கும் இடக்கர்ச்சொல் இல்லவே இல்லை.

தகையணங்கு அதிகாரத்தில் ஒலி நயம் மிகுந்த பாடல்கள் இனிமை பயப்பனவாக உள்ளன. காமத்துப் பாலின் முதற்காட்சியிலேயே அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் என்ற சொற்றொடர்களில் கொல் என்ற இடைச்சொல் அடுக்கடுக்காகச் செம்மையாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆய்மயில் கொல்லோ என்பதில் உள்ள ஓகாரம் ஒரெ சொல் திரும்பத் திரும்ப வருவதில் உள்ள சலிப்பைத் தடுப்பதாக உள்ளது நோக்கத்தக்கது. ஒண்ணுதற்கோஓ... (குறள் 1088) என்பதிலுள்ள ஓ என்னும் குறிப்பிடைச்சொல் தலைவனின் உணர்ச்சிகளை நன்கு வெளிப்படுத்துகிறது. தனது வீரவலியைச் சொல்லி அதை இப்பெண்ணின் நுதலழகுக்காகவா இழந்தேன் என்று இரங்குவதில், ஓஓ என்னும் ஒலி வியப்பையும் துன்பத்தையும் ஒருசேர வெளிக்கொணர்கிறது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard