Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 113 காதற்சிறப்பு உரைத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7478
Date:
113 காதற்சிறப்பு உரைத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
காதற்சிறப்பு உரைத்தல் 
உடம்பொடு உயிரிடை உள்ள தொடர்பு போன்றது காதலர் நட்பு
குறள் திறன்-1121 குறள் திறன்-1122 குறள் திறன்-1123 குறள் திறன்-1124 குறள் திறன்-1125
குறள் திறன்-1126 குறள் திறன்-1127 குறள் திறன்-1128 குறள் திறன்-1129 குறள் திறன்-1130

openQuotes.jpg'காதல் சிறப்புரைத்தல்' என்பது புணர்ந்து பிரிந்திருக்கும் காதலர்கள் (ஆணும் பெண்ணும்) ஒருவர் மீதொருவருக்குள்ள அன்பு மிகுதியை நினைத்துப் பிரிவாற்றாமையால் தனித்தனியே தமக்குள் சொல்லிக் கொள்வது. ஆணும் பெண்ணும் சரிசமமானவர்கள் என்பதைக் காட்டுவது போல் இந்த அதிகாரத்தில் சரிபாதி ஐந்து குறள்கள் ஆண் சொல்லுவதாகவும் மீதி ஐந்து குறள்கள் பெண் சொல்லுவதாகவும் அமைந்திருப்பது குறிக்கத்தக்கது.
- நாமக்கல் இராமலிங்கம்

 

காதலர் இருவரும் ஒருவர் மீது மற்றவர் கொண்டுள்ள காதலின் உயர்வைச் சொல்வது இவ்வதிகாரம். களவு ஒழுக்கத்தில் ஈடுபட்டுள்ள அவர்களிடை, இடத்தாலும் பொழுதாலும், உண்டாகும் சிறிய பிரிவுகவில் ஒருவர் மற்றவரை எண்ணிப் பார்த்துத் தங்கள் காதலின் மிகுதியைப் பேசுகின்றனர். காமம் என்பது உடற்புணர்ச்சி குறித்தது என்றும் காதல் என்பது உள்ளப் புணர்ச்சி குறித்தது என்றும் கூறுவர். ஒருவரையொருவர் தத்தம் கண்ணிலும் நெஞ்சிலும் வைத்துப் போற்றும் காதலரின் உள்ளப் புணர்ச்சியின் பரிமாணத்தை வள்ளுவர் மிக நுட்பமாகவும் கற்பனை நயத்தோடும் இங்கு எடுத்துக் காட்டியுள்ளார்.

காதற்சிறப்பு உரைத்தல்

காதலர் இருவர்க்கு மட்டுமே தெரிந்த உறவு, மெல்ல மெல்ல வெளிப்படுகிறது, ஊர் மக்கள் இவர்களது காதலை குறியாராய்ச்சி (ஊகம்) மூலம் தெரிந்து கொள்கின்றனர் போலும். ஆனால் அவனை இன்னார் என்று அவர்கள் அறியவில்லை என்பதை, அவனை ஏதிலர் (எவரோ ஒருவர்-அயலர்)என்று அதிகாரத்து இறுதி இரண்டு குறள்கள் குறிப்பதிலிருந்து அறியலாம்.

அவர்கள் இருவரும், ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்து இருக்கும் நிலையில், எண்ணுகின்ற எண்ணங்கள் உணர்ச்சித் துடிப்போடு கூறப்பட்டுள்ளன.
காதல் மிக்கார்க்குத் தான் காதலிக்கப்பட்டாரை ஒழிவின்றி நினைதலும் அவர் தம்மாட்டு இல்லாத காலத்தினும் கண் முன்னாய்க் காண்டலும் உண்ணாமையும் உறங்காமையும் கோலஞ்செய்யாமையும் உளவாம் அன்றே. அவை ஐந்தும் ஈண்டுக் கூறப்படுகின்றன என்பார் பழம் உரையாசியர் பரிப்பெருமாள்.
முதல் ஐந்து குறட்பாக்கள் தலைவன் கூற்றாகவும், பின் ஐந்து குறட்பாக்கள் தலைவியின் கூற்றாகவும் அமைக்கப்பெற்றுள்ளன. காதல் மிகுதியால், தனித்தனியே யிருக்கும், அவர்கள் தங்களுக்குள் தாங்களாகவே பேசிக்கொள்வதாகப் புரிந்துகொண்டால் நற்சுவை கிடைக்கும்.

குறள் தலைவனைக் காதலர், காதலவர் என்னும் சொற்களாலும் குறிக்கிறது.
காதலன் அவளிடம் முன்பு பெற்ற இன்பங்களில் ஒன்றை நினைவு கூர்ந்து தன் காதலின் உயர்வு கூறத் தொடங்குகிறான்; அவளை விட்டு இனி வாழ்வு இல்லை என்னும் அளவிற்கு அவன் தன் உள்ளத்தில் காதல் வளர்த்துள்ளான்; "உடம்பும் உயிரும் எப்படியோ யானும் இவளும் அப்படி" என்றும் "உயிர்க்கு வாழ்வு எத்தன்மையானதோ, அத்தன்மையானவள் எனக்கு இவள்; உயிர்க்குச்சாவு எப்படியோ, அப்படிப்பட்டது இவளை விட்டுப்பிரிவது" என்று கூறுகிறான் அவன்; தன் கண்ணின் கருமணியில் காதலியின் உருவத்துக்கு மட்டுமே இடம் என்கிறான்; அவளையும் அவளுடைய பண்புகளையும் என்றுமே தன் நெஞ்சிலேயே வைத்து மறவாமல் இருப்பதாகவும் பெருமிதத்தோடு கூறுகிறான்.

அதுபோலவே காதலியும் இடைவிடாமல் தனக்குரிய காதலனைக் கண்ணில் நிறைத்து வைத்துப் பார்த்துக் கொண்டும், நெஞ்சில் நினைத்துக்கொண்டும் இருக்கிறாள்; மை எழுதும் சிறு பொழுதில் (கண்னை மூடவேண்டி இருப்பதால்) அவனைப் பார்க்க இயலாது என்பதால் மைதீட்ட மாட்டாள் அவள்; தன் நெஞ்சில் நிறைந்துள்ள் காதலனை வேகவைத்துவிடும் என்பதால் சூடான உணவு உண்ண அவளுக்கு விருப்பமில்லாமல் போகிறது; அவனைக் கண்ணில் வைத்துக் காத்தல் பொருட்டு இமைக்காமல் இருந்து அதன் விளைவாகத் தான் உறக்கம் இழந்ததைப் புரிந்துகொள்ளாமல் ஊர் மக்கள் காதலன்தான் இதற்குக் காரணம் என அவனை ஏன் பழிக்கிறார்கள் என்பது அவளுக்கு விளங்கவில்லை என்கிறாள்; உடலால் வெளியே எங்கோ இருந்தாலும் உள்ளத்தால் என் நெஞ்சினுள்ளே உள்ளான் தலைவன்; இதையும் இவ்வூர் மக்கள் உணராமல் காதலன் பிரிந்து இருக்கிறான் எனக் காதலவரைத் தூற்றுகிறார்களே எனவும் கூறி அவன் மீதுள்ள தன் காதலை ஏற்றி உரைக்கிறாள்.

காதற்சிறப்பு உரைத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்:

 

  • 1121 ஆம்குறள் தங்களுள் கலந்த காலத்தில் காதலர்கள் இன்பம் துய்த்த முறை ஒன்று நினைக்கப்படுவதைச் சொல்வது.
  • 1122 ஆம்குறள் ஒன்றின்றி ஒன்றில்லை என உருவாகிவிட்ட காதலன்-காதலியின் பிரிக்கமுடியாத உறவு நெருக்கத்தைச் சொல்கிறது.
  • 1123 ஆம்குறள் அவன் அவளை எந்த நேரமும் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று விரும்புகிறான் என்பதைக் கூறுவது.
  • 1124 ஆம்குறள் அவளைச் சந்தித்துப் பிரியும் ஒவ்வொரு முறையும் வாழ்ந்து சாகிறேன் என்று காதலன் புலம்புவதைச் சொல்வது.
  • 1125 ஆம்குறள் இவளை மறந்தால்தானே நினைப்பதற்கு என்று அவன் சொல்வதாக அமைந்தது.
  • 1126 ஆம்குறள் என் காதலரை என் கண்களில் சிறை வைத்துள்ளேன் என்று அவள் கூறுவது.
  • 1127 ஆம்குறள் மையெழுதும் சிறு நேரம்கூடத் தலைவனை நினைந்து பாராமல் இருக்கமுடியாது என்று அவள் சொல்வது.
  • 1128 ஆம்குறள் நெஞ்சில் நிறைந்தவர்க்கு ஊறு நேருமானால் உணவும் உட்கொள்ளேன் எனக் காதலி கூறுவதைச் சொல்வது.
  • 1129 ஆம்குறள் துயிலா நோயுறுத்திய தலைவனுக்கு அதனால் பழி சேரக்கூடாதே எனக் காதலி எண்ணுவதைக் கூறுவது.
  • 1130 ஆவதுகுறள் அகற்சியில் இருக்கும் காதலனை விட்டுக் கொடுக்காது உயர்வாய்க் காதலி பேசுவதைச் சொல்வது.

 

காதற்சிறப்பு உரைத்தல் அதிகாரச் சிறப்பியல்புகள்

ஃபிரெஞ்சு முத்தம் விளக்கப்பட்ட பாடல் பாலொடு தேன்கலந்தற்றே.... (குறள் 1121) இவ்வதிகாரத்தில் உள்ளது.

செம்புலப் பெயல் நீர் போல (குறுந்தொகை 40: பொருள் - செம்மண் நிலத்தின்கண்ணே பெய்த மழைநீர் அம்மண்ணோடு கலந்து அதன் தன்மையை அடைதல் போல),அன்புடைய காதலர் நெஞ்சம் கலந்தன என்பதை வள்ளுவர் உயிரும் உடலும் போல ஆகின்றனர் என்கிறார். உடம்பொடு உயிரிடை என்ன..(குறள் 1122) என்ற குறட்பா காதலர்களுக்கிடையேயான உறவை ஒரு உயரிய உவமை மூலம் சிறப்பாக விளக்குகிறது.
அவளுடன் வாழ்தலையே உயிருடன் வாழ்வதாகவும், அவளைப் பிரிந்து வாழ்தலையே சாவாகவும் உணர்கின்றான். வாழ்தல் உயிர்க்கன்னள்... (குறள் 1124) என்ற பாடலும் காதலின் ஆழத்தை நன்கு புலப்படுத்த வந்தது.

காதலர் இருவர் உள்ளமும் ஒரே அலைவரிசையில் இயங்குவதை அதிகாரத்துப் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன.
அவன் அவளே தன் கண்ணில் எப்பொழுதும் நிறைந்திருக்க வேண்டும் அதற்காக தன் கண்ணின் பாவையை ஒதுங்கச் செய்து. அவளுக்காக அங்கே நிரந்தர இடஒதுக்கீடு செய்யும் நோக்கில் கருமணியின் பாவாய்நீ....(குறள் 1123) எனப் பாடுகிறான்.
அவள் அவனைக்கண்ணிலிருந்து நீங்காது இருப்பதற்காக இமைகளுக்குள் அவனை அடக்கி வைக்கிறாள்; கண்ணுக்கு மை தீட்டும் நேரத்தில் மூடவேண்டியிருப்பதாலும் அது சமயம் காதலனைக் காணமுடியாதே என்று அவள் கண்ணுக்கு மையும் தீட்டமாட்டாளாம். கண்ணுள்ளின் போகார்....., கண்ணுள்ளார் காதலவராக....... (குறள் 1126, 1127) என்பன அவள் பாடும் பாடல்கள்.
அவன் அவளையே எப்பொழுதும் எண்ணிக் கொண்டிருக்கிறான்; அவள் அவனையே ஒவ்வொரு கணமும் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.
அவன் சொல்கிறான்: 'அவளை மறந்தால்தானே நினைப்பதற்கு' உள்ளுவன் மன்யான் மறப்பின் (குறள் 1125).
அவள் என்ன சொல்கிறாள்? 'நெஞ்சிலே எந்த நேரமும் இருக்கும் அவருக்கு ஊறு நேரக்கூடாது என்பதற்காக வெந்த் உணவுகூட அருந்தவில்லை' நெஞ்சத்தார் காதலவராக(குறள், 1128)என்கிறாள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard