Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 114 நாணுத்துறவுரைத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7478
Date:
114 நாணுத்துறவுரைத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
நாணுத்துறவுரைத்தல் 
மடலேறுதல் பற்றிய கருத்தாடல்
குறள் திறன்-1131 குறள் திறன்-1132 குறள் திறன்-1133 குறள் திறன்-1134 குறள் திறன்-1135
குறள் திறன்-1136 குறள் திறன்-1137 குறள் திறன்-1138 குறள் திறன்-1139 குறள் திறன்-1140

openQuotes.jpgதான் அனுபவிக்கக்கூடாததை எண்ணக் கூசுவதும், குறையான வற்றைச் சொல்லக் கூசுவதும், பழியானவற்றைச் செய்யக் கூசுவதும் நாணமாகும். ஆனால், அந்நிலைகளைக் கூசாமல் சொல்லுவதே நாணுத்துறவு உரைத்தலாம். காதல் வசப்பட்ட ஆண், பெண் இருபாலர்க்கும் இதுபொது. ஆகையால் இங்கே உண்மை யுரைத்தல் என்னும் அறவழி நிற்றற்கே நாணத்தை விடுவதற்குத் தலைவனும், தலைவியும் இசைகின்றனர் என்றதை ஆசிரியர் விளக்குகிறார். காதலின் பெருமை நாணத்தையும் துறக்கச் செய்வதால், காதற்சிறப்பின் பின் இந்த அதிகாரம் அமைகிறது
- ஜி வரதராஜன்

 

நாணுத்துறவுரைத்தல் அதிகாரத்தில் காதலனுடைய நிறை சிதையும்போது அவன் அகத்தும் புறத்தும் நேரும் விளைவுகள் குறித்துப் பேசப்படுகிறது. தன் காதலில் இடர் எதிர்கொள்ளும் தலைவன் மடலேறத் துணிகிறான். மடல் ஏறுதல் என்பது ஊரார் முன் முறையிட்டுத் தன் காதலை நிறைவேற்றித் தரக் கெஞ்சுவது ஆகும். இச்செய்கையால் தன் நாணையும் நல்லாண்மையையும் அவன் இழப்பான் என உணர்ந்து இருக்கின்றான். தன் காதல் நிறைவேற உதவ முன்வராத ஊர் மக்களை அறிவில்லாதவர்கள் என இகழ்கிறான். ஊரார் பார்வையில் அவன் பைத்தியக்காரன் போல் காட்சி அளிக்கிறான். காதல் மிகுதியால் தன் நாணம் நீங்கியமையைத் தலைமகன் இங்கு உரைக்கின்றான்.

நாணுத்துறவுரைத்தல்

இவ்வதிகாரம் ஆடவனின் நாண் துறவு பற்றிச் சொல்கிறது. அதிகாரத்தின் 1-7 குறள்கள் ஆற்றானாகிய தலைவன்தன் நாண்துறவுஉரைத்தல் என்றும் 8, -10 குறள்கள் அறத்தொடுநிற்றலை மேற்கொள்ளக் கருதும் தலைமகள்தன் நாண்துறவு உரைத்தல் என்றும் பெரும்பானமை உரையாளர்கள் கூறுவர். ஆனால் பாக்கள் அனைத்தையும் தலைவன் கூற்றாகக் கொள்வதே பொருத்தம். தலைவியைக் காண முடியாத துயரைப் பொறுக்கமாட்டாத தலைவன், தன் காதலை ஊரார் அறியச் சொல்லித் தலைவியை மணப்பதற்காகத் தன் நாணத்தை விட்டு மடல் ஏறுவேன் என்பதைக் கூறுவது 'நாணுத்துறவுரைத்தல்' அதிகாரம்.
அதிகாரம் முழுமையுமே மடலேறுதல் பற்றிய ஒரு கருத்தாடலாக அமைந்துள்ளது.

மடலேறுதல் என்பது மடல், மடலூர்தல் என்றும் அறியப்படும்.
மடல் பற்றி குறுந்தொகை, நற்றிணை, கலித்தொகை ஆகிய சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
தன் உள்ளங் கவர்ந்த பெண்ணை அடைவதில் சிக்கல் ஏற்படுவதை உணர்ந்த காதலன், அதை வெல்ல, எல்லா வழிகளையும் முயன்று, ஏமாற்றம் அடைந்து, இறுதியாக மடலேறுதலே தனக்கு தீர்வு என்ற தீர்மானத்திற்கு வருகிறான். உடலுக்கும் உள்ளத்திற்கும் வரூத்தம் உண்டாக்கும் மடலூர்தல் ஒரு கடினமான முடிவுதான். இதனால் அவனது தனிப்பட்ட மானம், உள்ளத்திண்மை இவற்றை இழக்க நேரிடும். ஊர்மக்கள் மடலேறுவோரைப் பரிவுடன் நோக்குவதில்லை. இகழ்ச்சிக் குறிப்புடனே பார்ப்பர்.

மடலேறுதல் என்பது காதலன், பனை மரத்தின் கிளையான மட்டையால் செய்யப்பட்ட குதிரையின் மீதேறி அதைச் செலுத்துவதைக் குறிக்கும். இக்குதிரையின் கீழ் உருளைகளைப் பொருத்தி கயிற்றைக் கட்டி இழுத்துச் செல்வர். தன் காதலி யார் என்று ஊருக்குச் சொல்லும் வகையில் கையில் அவள் உருவம் வரையப்பட்ட ஒரு கிழியை (கிழி = ஓவியம் வரையப்பட்ட துணி). ஏந்திக் கொண்டு காதலன் ஊர் மன்றம் செல்வான். மடலூர்பவன் உடம்பெங்கும் சாமபல் பூசி எருக்கம் பூ மாலை அணிந்து, அரைகுறை ஆடையில் வீதிகளில் திரிவான். பனங்கருக்கு உடலெங்கும் குத்திக் காயங்களை உண்டாக்கும். மடலேறுதல் ஒரு தற்கொலை முயற்சி என்றும் சிலர் கூறியுள்ளனர்.
தலைவனின் காதல் வன்மையை ஊருக்கு உணர்த்துதலே மடல் ஏறுவதன் நோக்கம் ஆகும். தலைவனின் துன்பத்தை ஊர் மன்றத்தோர் கண்டு, அவனுடைய துன்பம் தீர்வதற்காகத் தலைவியை அவனுடன் சேர்த்து வைக்க முயல்வார்கள். மடலூர்தல் வழி தலைவன் தலைவியை அடைய வாய்ப்பு உள்ளது. மேலும் தலைவனின் காமத்துயரம் நீங்க மடல் உதவும் என்று கருதப்படுவதால் மடல் என்பதைக் காமக்கடலை நீந்துவதற்குரிய தெப்பம் என்று இலக்கியங்கள் கூறுகின்றன.

மடல் ஊர்வேன் என்று கருதுதலும் சொல்லுதலும் மடல் ஊர்தலும் ஆடவர்க்கு உரிய என்றும், மடல் ஊர்வேன் என்று கருதுதலும் சொல்லுதலும் மகளிர்க்கு உரிய என்றும் அறியத் தக்கன எனக் குறித்துள்ளார் இரா சாரங்கபாணி. மடல் ஏறுவேன் எனக் கூறுதல் அகத்திணைக்கும், மடலேறுதல் பெருந்திணைக்கும் உரியவாம் என்பர். இங்கு காதலன் மடலேறுவது பற்றிப் பேசுகிறானே ஒழிய மடலேறினான் என்று சொல்லப்படவில்லை. வள்ளுவர் ஒருதலைக் காதலை குறளில் எங்கும் பேசவில்லை. எனவே இவ்வதிகாரம் மனம் ஒன்றிய காதலர்களைப் பற்றியே சொல்கிறது; இது பொருந்தாக் காமம் ஆகாது எனக் கொள்ளலாம்.
மடலூர்தலை பெண்ணானவள் ஏற்றுச் செய்யாமையும், காமத்தால் தன் உடலும் உள்ளமும் உணர்வும் அழுத்தப்படுகின்ற நிலையை வெளிப்படுத்தாமையும் பெண்ணுக்குள்ள சிறந்த குண நலன்களாகக் கருதப்பட்டன. இன்னொரு வகையில் சொல்வதானால், ஒரு பெண் தன்னுடைய காதலுணர்வைப் போர்க்குணத்துடன் ஊரார்க்கு வெளிக்காட்டாத பண்பு சிறப்பிக்கப்பட்டது.

மடலேறுதல் மனம் ஒத்த காதலர்கள் தடைகளை மீறி இணைய மடல் பயன்படுகிறது என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது என்பார் தெ பொ மீ.. மடலேறுதல் குரூரமான முறையாகத் தோன்றினாலும் இது ஒரு நேர்மையான அணுகுமுறை எனலாம். ஒருவன் தான் மணக்க விரும்பும் பெண்ணைப் பெறுதல் அரியது என்ற நிலை உருவாகும் போது பெற்றோரால் பாதுகாக்கப்படும் பெண்ணைச் சிறைஎடுத்தல் போன்ற வன்செயல்களில் ஈடுபடாது அமைதியான வழியில் அவளைப் பெற முயற்சிக்கிறான். ஆயினும் செப்பமற்ற அணுகுநெறி என்பதாலும் காதலி, அவரது வீட்டார் ஆகியோரது நற்பெயர் களங்கப்பட வாய்ப்பு உள்ளதால் மடலேறல் விரும்பத்தக்கது அல்ல என்பது விளங்கும்.
நாண், நல்லாண்மை இவற்றைக் காதலன் இழப்பான் என்றும், ஊரார்முன் அவன் நகைப்புக்குள்ளாகிறான் என்றும் குறட்பாக்கள் சொல்வதால், மடலேறுதலைப் பொதுவாக வள்ளுவர் ஏற்கவில்லை என்றே தெரிகிறது.
மடலேறுதல் காமநோயைத் தணிக்கும் என்று சங்கப்பாடலும் குறளும் கூறுகின்றன. அது எந்தவகையில் காமநோயைக் குறைக்கும் என்று தெரியவில்லை.

நாணுத்துறவுரைத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்:

 

  • 1131.ஆம்குறள் காதலில் இடர் எதிர்கொள்பவர் தம் காதலை ஊரறியச் செய்வதே அவர்க்கு வலிமை தரும் என்கிறது.
  • 1132.ஆம்குறள் காதலனது காமநோவுப் பெருக்கம் நாணத்தை நீக்கி மடலேறத் தூண்டுகிறது என்று சொல்கிறது.
  • 1133.ஆம்குறள் நேற்றிருந்த நாணும் உளத்திண்மையும் இழந்து இன்று இந்த மடல் மாவை உடையேன் என்று காதலன் சொல்வதைக் கூறுகிறது.
  • 1134.ஆம்குறள் காமப் பெருவௌ்ளத்தின் முன் நாணமும் ஆண்மையும் தகர்த்தெறியப்படுமே எனக் காதலன் கூறுவதை சொல்கிறது.
  • 1135.ஆம்குறள் மடலேறும் எண்ணத்தினால் உண்டான துன்பத்துடன் மாலைப்பொழுது தரும் காமத்துயரும் சேர்ந்து காதலனை வாட்டுகிறது என்பது.
  • 1136.ஆம்குறள் அவளைப் பெறும்வரை எப்படித் தூங்கும் என் கண்கள்? என்று காதலன் சொல்வதாக அமைந்தது.
  • 1137.ஆம்குறள் நாண் துறந்து மடலேறாது அறத்தொடு நிற்கும் பெண்ணின் பெருமையைப் போற்றுகிறது.
  • 1138.ஆம்குறள் நிறைகொண்டவன் என்று அஞ்சாமலும் அருளத்தக்கவன் என்று இரங்காமலும் என் காமம் ஒளிக்க முடியாமல் மன்றத்தில் வெளிப்படுமே எனக் காதலன் வேதனைப் படுவதைச் சொல்வது.
  • 1139.ஆம்குறள் 'என் துயர் தீர்க்க முன்வராததால் எல்லோரும் அறிவில்லாதவர்கள் என்று உணர்ந்த என் காதல் தெருவெங்கும் சுற்றத் தொடங்கிவிட்டது' என்று காதலன் கையறு நிலையில் கூறுவதைச் சொல்வது
  • 1140.ஆவதுகுறள் 'காதல் படுத்தும் பாட்டை அறியாதவரே என்னைப் பைத்தியக்காரனைப் பாரப்பது போல் பார்த்துச் சிரிப்பர்' என்று காதலன் கூறுவதைச் சொல்கிறது.

 

 

 

நாணுத்துறவுரைத்தல் அதிகாரச் சிறப்பியல்புகள்

 

மடலேறுதல் பற்றிய கருத்தாடலாக அமைந்தது இவ்வதிகாரம்.

காதலியை அடைவதற்கு உண்டான தடைகளைக் களையும் பொருட்டு, பொது மன்றில் மடலேறும் காதலன் தன் உணர்வுகளைக் காட்டுவான். ஆனால் உள்ளலை பாய்ந்து கடலாகக் குமுறும் காம உணர்வு கொண்ட காதலியும் மடலேற முயற்சிக்காமல் பொறுமை காப்பதை வள்ளுவர் பெண்ணின் பெருமைக்குரிய குணமாகக் காண்கிறார். இதைச் சொல்லும் 'கடலன்ன காமம் உழன்றும் ...'என்ற குறள் அடங்கிய அதிகாரம் இது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard