Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 124 உறுப்புநலனழிதல் அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
124 உறுப்புநலனழிதல் அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


 
அதிகார விளக்கம் 
உறுப்புநலனழிதல் 
பிரிவு எண்ணி தலைவியின் தோள், நெற்றி, கண்... என அழகிழத்தல்
குறள் திறன்-1231 குறள் திறன்-1232 குறள் திறன்-1233 குறள் திறன்-1234 குறள் திறன்-1235
குறள் திறன்-1236 குறள் திறன்-1237 குறள் திறன்-1238 குறள் திறன்-1239 குறள் திறன்-1240

openQuotes.jpgதலைமகள் தலைமகன் பிரிவால் வாடி வருந்தி மெலிகின்றாள். அதனால் அவள் கண், நுதல், தோள் முதலிய உறுப்புக்கள் வாடி அவைகட்கு உள்ள இயற்கைப் பொலிவு கெடுகின்றது. அவ்வுறுப்புக்களின் நிலை நோக்கித் தலைவி வருந்திக் கூறுகின்றாள். உறுப்பு நலன் அழிதல்-உறுப்புக்களின் அழகு கெடுதல்.
- சி இலக்குவனார்

 

உறுப்புநலனழிதல் என்ற அதிகாரம் தலைவன் பிரிவைத் தாங்கமுடியாத தலைவியின் உறுப்புக்கள் அழகு இழப்பதைச் சொல்கிறது.
தலைவன் பொருள்தேடிப் பிரிந்து சென்றபின் அவன் நினைவாகவே உள்ளாள் தலைமகள். அவனையே நினைந்து நினைந்து அழுது கொண்டிருந்ததால் கண்கள் ஒளி இழந்தன. அவன்உடனிருந்த நாட்களில் பூரித்திருந்த அவளது தோள்கள் வருத்தத்தால் வாடி, தொடி கழலும் அளவு, மெலிந்தன. தலைவன் நிலை என்ன? அவன் வினைமுடிந்து திரும்பும் நேரமிது. அதுசமயம் காதலியையும் பிரியும்போது நிகழ்ந்தனவற்றையும் நினைக்கிறான். அவளது நெற்றியும் கண்ணும் ஒன்றன்பின் ஒன்றாகப் பசந்தது அவனது எண்ண ஓட்டத்தில் தோன்றிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது இன்னும் மற்ற உறுப்புக்களும் அழகிழந்திருக்கும்; விரைந்து அவளிடம் சென்று ஆற்ற வேண்டும்! என்று அவன் எண்ணுகிறான் என்ற குறிப்புடன் அதிகாரம் நிறைவு பெறுகிறது.

உறுப்புநலனழிதல்

தலைவன் கடமை காரணமாக நெடுந்தொலைவு சென்றிருக்கிறான். தலைவிக்கு அவனது பிரிவைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. தலைமகனை நினைந்து நினைந்து அழுதலால் அவள் கண்கள் மலர்களைக் கண்டு நாணும்படி பொலிவிழந்தன; முன்னர் அவளது கண்கள் நறுமலர்களை வெல்லும் தன்மை கொண்டதாக இருந்தன. காதலனுடன் கூடியிருந்த நாளில் அழகொடு திகழ்ந்த தோள் மெலிந்து அங்கு அணிந்திருந்த தொடி சோர்ந்தது. தோள் மெலிதல் என்பது உடல் மெலிதலையும் குறிக்கும்.
தனிமை நீட்சியால் தன்னுடைய உறுப்புக்கள் எல்லாம் நலங்குறைந்து போனதை உணர்ந்து அவள் மனக்கசப்புடன் தனக்குள்ளே சொல்லி வருந்துகின்றாள். முரண்பட்ட உணர்வுகள் வெளிப்படுகின்றன. தோள்கள் மெலிந்து போனதையும், வளையல்கள் கழன்று விழுந்து விடுவனபோல் இருப்பதையும் பார்த்துத் தன் காதலன் திரும்பி வருவதமின்னும் தாழும் போல் உணர்ந்ததால் அவன் தனக்குக் கொடுமை செய்துவிட்டதாகச் சொல்லுகிறாள். ஆனால் மறுகணமே தான் காதலனைக் 'கொடியார்' என்று சொன்னதற்கு வருந்தவும் செய்கிறாள். தன் நெஞ்சையே விளித்து அவள் தோள் மெலிந்ததைச் அவனிடம் தூதாகப் போய்ச் சொல்லி விரைந்து வரச் செய்யும்படி அதைக் கேட்கிறாள்.
இப்பொழுது காட்சி மாறுகிறது. பிரிந்து சென்றபின் இதுவரை காணப்படாத தலைவன் சேய்மையிலுள்ள தான் பணிசெய்யும் இடத்தில் தோன்றுகிறான். அவன் அவளிடம் விடைபெற்று வினைக்குச் செல்லும் முன் நடந்தவைகளையும் தலைவியின் அப்போதிருந்த மனநிலை, உடல்நிலை இவற்றை எண்ணிப் பார்க்கிறான். 'நான் பிரிய எண்ணி முயங்கிக்கொண்டு கிடந்த கைகளை விடுவிக்க அவளது நுதல் பசந்தது; இறுகத் தழுவிக் கிடந்த உடம்பை அகற்ற, அதனை அறிந்து அவள் கண் பசந்தது; அவ்வளவே அன்றி, நுதல் பசந்தபின்பு கண்ணின் பசலை போய், அதன் பின் இப்பொழுது வேறு எந்த உறுப்பு நலன் இழந்து எப்படி இருக்கிறாளோ?' என்று சிந்திக்கிறான்.
இவ்வாறாக பிரிவுத்துன்பத்தால் தலைவியின் கண், தோள் நுதல் முதலிய உறுப்புக்கள் தம் அழகு கெட்டு நலிகின்றதை சொல்கின்றன அதிகாரத்துப் பாடல்கள்.

உறுப்புநலனழிதல் அதிகாரப் பாடல்களின் சாரம்:

 

  • 1231 எனக்குத் துன்பம் தந்து நெடுந்தொலைவு சென்ற காதலரை எண்ணி அழுது பொலிவை இழந்தகண்கள் மணமுள்ள மலர்களைக் கண்டு நாணின எனத் தலைவி கூறுவதைச் சொல்கிறது.
  • 1232 ஆம்குறள் நிறம் வேறுபட்டு நீர் வழிய நிற்கும் நம் கண்கள் நம்மை விரும்பிய தலைவர் அன்பு செய்யாமையைப் பிறர்க்குத் தாமே சொல்லிவிடும் போலும் எனத் தலைவி கூறுவதைச் சொல்வது.
  • 1233 ஆம்குறள் கணவரோடு கூடியிருந்த நாளில் பருத்திருந்த தோள்கள், இப்போது மெலிவடைந்தமையால், அவர் நீங்கிச் சென்றுள்ளமையை நன்றாக அறிவிப்பன போலும் என்று தலைவி சொல்வதைக் கூறுவது.
  • 1234 ஆம்குறள் காதலரை நீங்கியதால் முன்னைய அழகை இழந்து விட்ட தோள்கள் தம் செழுமை நீங்கி தோள்வளைகளும் கழன்றுவிழுகின்றன என்று தலைவி சொல்வதைக் கூறுகிறது.
  • 1235 ஆம்குறள் காதலன் விரைந்து திரும்பி வராத 'கொடிய செயலால்' தோள்கள் வாடின; தொடிகள் கழன்றன எனத் தலைவி சொல்வதைக் கூறுவது.
  • 1236 ஆம்குறள் தோள்கள் மெலிவதையும் அணிகள் கழல்வதையும் கண்டு, என் காதலரைக் கொடியவர் என்று கூறியதை ஆற்றமாட்டாமல் நான் வருந்துவேன் எனத் தலைவி சொல்வதைக் கூறுகிறது.
  • 1237 ஆம்குறள் நெஞ்சே! என்னைப் பிரிந்த கொடியவர்க்கு, என் தோள் மெலிதலால் உண்டாகிய ஆரவாரத்தை உரைத்து, நீ பெருமை அடையாயா? என்று தலைவி கூறுவதைச் சொல்கிறது.
  • 1238 ஆம்குறள் இறுகத் தழுவிய கைகளைத் தளர்த்திய பிரிவிற்கே பசுமையான வலையலை அணிந்த காதலியின் நெற்றி நிறம்மாறி விட்டது எனத் தலைவன் கூறுவதைச் சொல்வது.
  • 1239 ஆம்குறள் தழுவுதலின் இடைவெளியில் குளிர்ந்த காற்றுப் புகுந்ததால் அப்பிரிவுகூடத் தாங்காமல் காதலியின் பெரிய குளிர்ந்த கண்கள் பசலை பெற்றன எனத் தலைவன் சொல்வதைக் கூறுவது.
  • 1240 ஆவதுகுறள் காதலியின் மிளிரும் நெற்றியில் உண்டாகிய பசப்பைக் கண்டதால் கண்ணில் உண்டாகியிருந்த பசலை துன்புற்றது எனத் தலைவன் கூறுவதைச் சொல்வது.

 

உறுப்புநலனழிதல் அதிகாரச் சிறப்பியல்புகள்

அதிகாரத்துள்ள குறள்கள் 1238, 1239, 1240 இவற்றை ஒருங்கிணைத்து நோக்கும்போது தலைவன் பிரிவின்போது தலைவியின் உறுப்புக்கள் தம் அழகு கெட்டு நலிவடைதில் இரண்டு பசலை நிறங்களிடையே போட்டி என்பது போல் நெற்றி முதலில் நிறம் மாறிப் பொலிவிழந்தது; கண் பிறகு ஒளிமங்கியது. இதில் நெற்றி முந்திக் கொண்டதைப் பார்த்து, கண்ணின் பசப்பு துன்புற்றதாம். அதாவது தான் முந்தவில்லையே என்று வருந்தியதாம். இது இக்குறளுக்கான பெரும்பான்மையினரது விளக்க உரையாகும். அம்மூன்று குறள்களையும் நோக்க்லாம்:
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல் (குறள் எண்: 1238) தலைவியை இறுகத் தழுவிய தன் கைகளை, தலைவன் சிறுது தளர்த்தினானாக, அவளது நுதல் பசலையுற்றது, பொலிவிழந்தது. முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண் (குறள் எண்:1239) தழுவிய கைகளைத் தளர்த்தியதால், அவ்விருவரிடையே குளிர்ந்த காற்றுப் புகுந்து விட்டதாம். இறுகத் தழுவிய நிலையிலாததால், அக்காற்று, பிளந்து கொண்டு (போழ) போக நேர்ந்தது. அவ்வளவுதான், தலைவியின் கண்கள் பசலையுற்றன; ஒளி இழந்தன. கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு (குறள் எண்:1240). இந்த அதிகாரத்தில் உள்ள இம்மூன்று குறள்கள் தம்முள் இடம் மாற்றமுடியாதபடி, ஒரு தொடர்புபடவுள்ளன' எனக்கூறிய தமிழண்ணல் 'குறள்களிடையே பிரிக்கமுடியாதபடி கருத்துத் தொடர்புபட இந்த இடத்தில் மட்டுமே கூறியுள்ளார். இது ஒரு வியப்பாகவே உளது. ஒருவேளை தலைவியின் மெய்ப்பாட்டின் வளர்ச்சி மாற்றங்களின் நினைவால் இது தானாக அமைந்தது போலும் எனலாம். எனினும் மூன்றாம் குறளில் 'ஒண்ணுதல் செய்தது கண்டு, கண்ணின் பசப்பு வருந்தியது' என்பதற்கு, முன்னைய இரண்டு குறள்களும் இல்லாமல் தனித்துப் பொருள் கூற முடியவில்லை' என விளக்கம் செய்வார். மேலும் அவர் 'திருக்குறளின் பப்பத்துக் குறள்களை வரிசைப்படுத்தியது வள்ளுவரா? உரையாளரா? பிறரா? என்ற கேள்விக்கு இன்னும் விடையில்லை. 1330 குறள்களில், மேற்சொன்ன மூன்று குறள்கள் நாம் நினைத்தாலும் மாற்ற முடியாதபடி உள்ளன. மூன்றாம் குறளின் பொருள், அதன் மேலேயுள்ள இரண்டு குறள்களின் வழிப்பட்டதாகும். வரிசையை மாற்ற முடியாது; மாற்றின் பொருளின்றிப் போகும். ஆக, "குறள்களின் வைப்புமுறை, திருவள்ளுவரே அமைத்ததுதானோ?' என்ற ஐயம் எழுகிறது!' எனவும் கூறினார்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard