Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 125 நெஞ்சோடுகிளத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
125 நெஞ்சோடுகிளத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
நெஞ்சோடுகிளத்தல் 
நெஞ்சோடு பேசுதல்
குறள் திறன்-1241 குறள் திறன்-1242 குறள் திறன்-1243 குறள் திறன்-1244 குறள் திறன்-1245
குறள் திறன்-1246 குறள் திறன்-1247 குறள் திறன்-1248 குறள் திறன்-1249 குறள் திறன்-1250

openQuotes.jpgஅவளது தனிமை நீட்சி அவளைப் பின்வாங்கச் செய்கின்றது. அவள் மனக்கசப்புடன் அவளைவிட்டு தனிமைப்பட்ட இதயத்துடன் பேசுகிறாள். முரண்பட்ட உணர்வுகள் வெளிப்படுகின்றன.
- தெ பொ மீ

 

கடமை காரணமாகத் தலைவன் பிரிந்து சென்று நாட்கள் பல ஆயிற்று. அவன் எப்பொழுது திரும்புகிறான் என்பது பற்றி எந்தச் செய்தியும் இல்லை; காதலிக்குப் பிரிவு ஆற்றாமை மிகுந்து விட்டது. என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. தனக்குத் தன் நெஞ்சே துணையாக உதவும் என எண்ணுகிறாள். தனது உள்ளத்து உணர்வுகளை மனதுடன் பகிர்ந்து ஆறுதல் அடைய நினைக்கிறாள். மனத்தின் போக்கு ஒன்றாகவும், அவளுடை போக்கு ஒன்றாகவும் இருக்கும் அவளது மனப் போராட்டம் நெஞ்சோடுகிளத்தல் அதிகாரப் பாடலகள் வழி வெளிப்படுகின்றது. இத்தொகுப்பில் உள்ள பத்து குறட்பாக்களிலும் 'நெஞ்சு' என்ற சொல்லாட்சி காணப்படுகின்றது. 'நினைத்து ஒன்று சொல்லாயோ?' 'இருந்துள்ளி பரிதல் என்?' 'செற்றார் எனக் கைவிடல் உண்டோ?' 'நீ யாரிடம் செல்வாய்?" என வினாக்களாகத் தொடுத்து இங்கு நெஞ்சுடன் பேசுகின்றாள் தலைவி.

நெஞ்சோடுகிளத்தல்

பிரிவு ஆற்றாமை மிக, என்ன செய்வது என்று அறியாமல், தலைவி தன் நெஞ்சை முன்னிலைப்படுத்தித் தன் துன்பங்களை வெளியிடுகிறாள். பிறர்க்குச் சொல்வதற்கு நாணி தன் நெஞ்சோடு கூறி ஆறுதலடைய எண்ணுகிறாள் அவள். மனது அளவு கடந்த துன்பத்தில் உழலும்போதுதான், மாந்தர் இவ்வாறு தனக்குத் தானே பேசிக் கொள்வர். முன் அதிகாரமான உறுப்புநலனழிதலில் பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கு என் வாடு தோள் பூசல் உரைத்து (1237) என்பதில் தொடங்கி மனதோடு தொடர்ந்து பேசுகிறாள் தலைவி. 'நெஞ்சோடுகிளத்தல்' அதிகாரம் முழுக்கக் காதலியின் பேச்சாகவே உள்ளது.
காதலன் விரைந்து மீள்வில்லையே என்று அவன்மீது வெறுப்புக் கொண்டு காயவேண்டும் என்று காதலி எண்ணுகின்றாள். ஆனால் அது அவளால் முடியாததாக் இருக்கிறது. அவள் தன்மென்மையான உணர்வுகளையும் அதனால் நெஞ்சு நெகிழும் நெகிழ்ச்சியையும் உணர்கிறாள். அவருக்கு நம்மீது இரக்கம் இல்லை; பின் ஏன் அவருக்காக வருந்துகிறாய்? என முதலில் கேட்கிறாள். பின்னர் 'எம்மை வெறுத்தார்' என்று கைவிடுதலும் ஆகுமோ? எனத் தெளிவு பெற்றவள்போல் பேசுகிறாள். 'அவர் கூட வரும்போது பிணக்கம் ஏதும் காட்டுவதில்லை; இப்பொழுது ஏன் பொய்யாக அவர்மீது காய்கிறாய்' எனக் கூறியவள், காமம், நாணம் என இரண்டையும் ஒரே சமயத்தில் தாங்கும் சக்தி எனக்கில்லை எனத் தன் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறாள். ஒரு கணம் 'காதலர் என் உள்ளத்தில்தான் குடி இருக்கிறார்; அவரைத் தேடி எங்கு செல்ல' என்று கேட்பவள் மறுகணம் ' நம்முடன் வாழாதவரை இன்னும் நெஞ்சில் சுமந்தால் என் அழகு மேலும் சீர் குலையத்தான் செய்யும்' என்கிறாள். இவ்வாறு முரண்பட்ட உணர்வுகளுடன் தலைவி தத்தளிப்பதை இவ்வதிகாரப் பாடல்கள் காட்டுகின்றன.

நெஞ்சோடுகிளத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்:

 

  • 1241 ஆம்குறள் நெஞ்சே! பிரிவுத் துன்பத்தைத் தீர்க்கத் தக்க மருந்து ஏதாவது ஒன்றை நீ சிந்த்தித்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயா? எனத் தலைவி கேட்பதைச் சொல்கிறது.
  • 1242 ஆம்குறள் என் நெஞ்சே! நீ வாழ்வாயாக! காதலராகிய அவர் எம்மொடு இல்லாதவராக இருக்க நீ அவரை எண்ணி வருந்திக் கொண்டிருப்பது அறியாமையாகும் என்று தலைவி கூறுவதைச் சொல்வது.
  • 1243 ஆம்குறள் நெஞ்சே! நாம் இங்கிருந்து அவரை நினைத்து வருந்துவது எதற்காக? வருத்தும் நோயைச் செய்தவர்க்கு நம்மைக் குறித்து எண்ணும் இரக்கம் இல்லையே என்று தலைவி சொல்வதைக் கூறுவது.
  • 1244 ஆம்குறள் நெஞ்சே! காதலரைக் காணச் செல்லுங்கால் இக்கண்களையும் உடன்கொண்டு போ; ஏனெனில் அவரைக் காட்டு என்று இவைகள் என்னை வாட்டி வதைக்கின்றன என்று தலைவி வருந்துவதைக் கூறுகிறது.
  • 1245 ஆம்குறள் நெஞ்சே! நாம் துன்பம் உற்றது கண்டு தாம் உறாத தலைவர், 'எம்மை வெறுத்தார்' என்று கைவிடுதலும் ஆகுமோ? எனத் தலைவி தெளிந்த மனநிலையில் சொல்வதைக் கூறுவது.
  • 1246 ஆம்குறள் நெஞ்சே! கூடி ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால் அவரைப் பிணங்குவதில்லை; இப்பொழுது அவரைப் பொய்யாகச் சினந்துரைக்கின்றாய் எனத் தலைவி கொஞ்சலாகக் கூறுகிறது.
  • 1247 ஆம்குறள் நல்ல நெஞ்சமே! ஒன்று காமத்தை விடு; அல்லது நாணத்தை விட்டுவிடு. என்னாலோ இவை இரண்டையும் ஒருங்கே தாங்கமுடியாது என்று தலைவி ஆற்றாமையால் சொல்வதைக் கூறுகிறது.
  • 1248 ஆம்குறள் என் நெஞ்சே! பிரிந்து சென்ற காதலர் வந்து அன்பு கொண்டு தண்ணளி செய்வார் என்று ஏங்கி அவர் பின்னே செல்கின்றாய்! என்ன ஒரு மடத்தனம்! எனத் தலைவி தன்னிரக்கமாகக் கூறுவதைச் சொல்வது.
  • 1249 ஆம்குறள் காதலர் உள்ளத்தில் இருப்பவராய் இருக்கவும் நீ அவரை நினைத்து எவரிடத்துச் செல்கின்றாய் என் நெஞ்சே? எனத் தன்னை உணர்ந்தவளாய்த் தலைவி சொல்வதைக் கூறுவது.
  • 1250 ஆவதுகுறள் நம்முடன் வாழாமல் நீங்கிச் சென்றவரை நெஞ்சத்தில் உடையவராய் இருப்போமானால் யாம் அழகை மேலும் இழக்க்கத்தான் போகிறோம் எனத் தலைவி வருந்தி உரைப்பதைச் சொல்வது.

 

நெஞ்சோடுகிளத்தல் அதிகாரச் சிறப்பியல்புகள்:

காதலிக்குத் தலைவனைக் காணவேண்டும் என்ற துடிப்பு உள்ளது. அவனோ அயல் சென்றுள்ளான். எனவே தன் நெஞ்சுதான் அவனை நினைத்த நேரம் பார்க்கமுடியுமே என்பதால் அதனிடம் தன் கண்களையும் கூட்டிச் செல்லுமாறு வேண்டுகிறாள். இல்லாவிட்டால் அவை 'அவரைக் காட்டு! அவரைக் காட்டு!' என அவளைத் தின்று ஒறுத்துவிடுமாம. கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்காணல் உற்று (1244) என்பது பாடல்.

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்துணராய் பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு (1246) என்ற பாடலில் 'நெஞ்சே! அவர் இருக்கும்போது, அவரிடமிருந்து இன்பம் பெற எண்ணி, சிறுபிணக்கம் கூட இல்லாமல் அவர் மீது போய் விழுவாய். ஆனால் இப்போது அவர் இல்லாத நேரத்தில் ஏதோ அவர்மீது குறைபடுவது போலப் போலிச் சீற்றம் கொள்கிறாய்?' என்று காதலி தன் நெஞ்சுடன் கொஞ்சிப் பூசலிடுகிறாள்.

தலைவி நாணத்திற்கும், காமத்திற்கும் நடுநின்று நடுங்கி எவ்வகையிலும் உய்யமுடியாது தவிக்கிறாள். 'என் நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டுவிடு, அல்லது நாணத்தை விட்டுவிடு. இந்த இரண்டையும் தாங்கிக் கொண்டிருக்க என்னால் முடியாது' எனத் தலைவி காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேன்இவ் விரண்டு (1247) என்ற பாடலில் ஆற்றாமையை வெளியிடுகிறாள்.

உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ யாருழைச் சேறிஎன் நெஞ்சு (1249) என்பதில் 'உன் உள்ளத்தவர், உன் காதலர், எப்பொழுதும் உன் உள்ளத்திக் குடியிருக்க, நீ அவரைத் தேடி யாரிடம் செல்வாய்?' என்று தலைவி மெலிதாகத் தன் நெஞ்சைக் கடிந்துரைக்கிறாள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard