Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 130 நெஞ்சோடுபுலத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
130 நெஞ்சோடுபுலத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
நெஞ்சோடுபுலத்தல் 
கூடாமைக்கும் கூடின் பிரிவுக்கும் வருந்தும் காதலியின் நெஞ்சு தீரா துன்பம் உடையது.
குறள் திறன்-1291 குறள் திறன்-1292 குறள் திறன்-1293 குறள் திறன்-1294 குறள் திறன்-1295
குறள் திறன்-1296 குறள் திறன்-1297 குறள் திறன்-1298 குறள் திறன்-1299 குறள் திறன்-1300

openQuotes.jpgநெஞ்சாவது தன் வழி நில்லாது ஓடுவதைக் கண்டு அதனிடத்துச் சிறு கோபம் காட்டுதலே நெஞ்சோடு புலத்தலாகும். நெஞ்சைத் தனித்து நிறுத்தி, அது செய்யும் கொடுமைகளைக் காட்டித் தலைவி அதனோடு கோபிப்பதைப் போலக் கூறுகிறாள்.
- ஜி வரதராஜன்

 

காதலன் பணி முடித்து இல்லம் திரும்பிவிட்டான். அவன் வரவு அறிந்து தலைவி தன்னை நன்கு அணிசெய்து மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகிறாள். வீட்டில் மற்றவர்களும் இருப்பதால் இவர்கள் இருவரும் இன்னும் தனிமையில் சந்திக்க முடியாதிருக்கிறது. அவனை நெருங்கிக் கூடும் வேளைக்காகக் காத்திருக்கிறாள் காதலி. இவர்கள் ஒருவர்க் கொருவர் குறிப்பறிவுறுத்தியாகிவிட்டது. இப்பொழுது தன் நெஞ்சோடு புலந்து பேசுவதுபோல் பாவனை செய்து உள்மனதில் ஓடும் எண்ணங்களை வெளிக் கொட்டுகிறாள். நீண்ட இடைவெளிக்குப்பின் அவரை நெருங்கி இருக்க்கப்போகும் களிப்பே அவள் தன் நெஞ்சைக் கடிவது போலப் பேசுவதில் தெரிகிறது. வருத்தம் இல்லாமல் கொணட்டல் மொழியில் புணர்ச்சி விதும்புகின்ற நெஞ்சுடனே புலக்கிறாள்.

நெஞ்சோடுபுலத்தல்

கண்ணுக்கு மையெழுதி மணிமாலை யணிந்து, கைநிறைய வளைஏந்தி, புன்னகை பூத்த முகத்துடன், பெண்மை நிறைந்த பொலிவுடன் விளங்குகிறாள் தலைவி. இன்னும் சிறுது நேரத்தில் அவர்கள் தனிமையில் படுக்கையறையில் சந்திக்க இருக்கிறார்கள். கூடுவதற்கு முன் அவனுடன் ஊடுவதா வேண்டாமா என்ற தடுமாற்ற நிலையில் தலைவி இருக்கிறாள். ஊடுதலுக்கு முன்னால் இங்கு தன் நெஞ்சுடன் விளையாட்டுத்தனமாக உரையாடுகிறாள்.

இவ்வதிகாரம் முழுக்க தலைமகளின் பேச்சுத்தான். பிரிவு நிலையில் படர் மெலிந்திரங்கல், கண் விதுப்பழிதல், பசப்புறுபருவரல், தனிப்படர்மிகுதி, நினைந்தவர் புலம்பல், கனவுநிலையுரைத்தல், பொழுதுகண்டிரங்கல், உறுப்புநலனழிதல் இவற்றில் தலைவி அவலம் நிறைந்த மொழியில் பேசினாள். நீண்டகாலப் பிரிவிற் சென்ற தலைவன் இன்று இல்லம் திரும்பி வந்துள்ளவேளையில், தலைவன், தலைவி இவர்கள் ஒருவர் குறிப்பினை ஒருவர்க்கு அறிவுறுத்து விட்டபின் புணர்ச்சிக்காக விரைகின்ற மனநிலையில் உள்ளனர். இவ்வதிகாரத்தில், தன் துன்பநிலை நீங்கி, காதலனுடன் கூடுவதற்கு முன், பதற்றமற்ற உளநிலையில், தலைவி புணர்ச்சி விதும்புகின்ற நெஞ்சைக் கொஞ்சலாகக் கடிந்து புலக்கிறாள்.
அவரிடம் சென்றுவிட்டாயே என்று திரும்பத் திரும்பத் தன் கருத்துக்கு மாறாகத் தன் நெஞ்சு செயலாற்றுவதாகக் கற்பனை செய்து அதைக் கடிகிறாள். இது காதலன் அருகே தான் நெருங்கிப்போவதற்காக ஏங்குவதை உணர்த்துவதாகும்.

நெஞ்சோடுபுலத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 1291 ஆம்குறள் அவருடைய நெஞ்சு அவர்பக்கம் நிற்றலைப் பார்த்தும், என் நெஞ்சே! நீ என்பக்கம் நில்லாதது எதனால்? எனத் தலைவி கேட்பதைச் சொல்கிறது.
  • 1292 ஆம்குறள் என் நெஞ்சமே! அன்புறாதவர் என அறிந்தபொழுதும் வெகுளமாட்டார் எனக் கருதி அவரிடம் செல்கின்றாயே! எனத் தலைவி சொல்வதைக் கூறுகிறது.
  • 1293 ஆம்குறள் நெஞ்சே! நீ விரும்பியபடி அவரிடம் செல்லுதல் கேடுற்றவர்க்கு நண்பர் இல்லை என்பதனாலேயோ? எனத் தலைவி சொல்வதைக் கூறுவது.
  • 1294 ஆம்குறள் நெஞ்சே! முதலில் பிணங்கிப் பின் கூட நினைக்கமாட்டாதிருக்கிறாயே; இனி அத்தகையனவற்றை உன்னோடு கலந்து பேசுவார் யார்? என்று தலைவி கேட்பதைச் சொல்கிறது.
  • 1295 ஆம்குறள் காதலரைப் பெறாமைக்காக வருந்தும்; பெற்றகாலத்துப் பிரிவினை நினைந்து அஞ்சும்; ஆதலால் என் நெஞ்சம் எப்போதும் தீராத துன்பத்தை யுடையது எனத் தலைவி வருந்துவதைக் கூறுவது.
  • 1296 ஆம்குறள் தனித்திருந்து அவரை நினைத்த போது என் நெஞ்சம் என்னைத் தின்னுவதற்கு வந்ததுபோல் இருந்தது எனத் தலைவி சொல்வதைக் கூறுகிறது.
  • 1297 ஆம்குறள் அவரை மறக்கமுடியாத, குணம்கெட்ட என் மட, நெஞ்சுடனே சேர்ந்து என் நாணினையும் மறந்தேன் என்று தலைவி கூறுவதைச் சொல்கிறது.
  • 1298 ஆம்குறள் இகழ்ந்தால் இழிவாகும் என்று கருதி அவரோடு உயிர்க்காதல் உற்ற என் நெஞ்சானது அவர் பக்கம் செல்லுதலையே நினைக்கின்றது எனத் தலைவி சொல்வதைக் கூறுகிறது.
  • 1299 ஆம்குறள் தம்முடைய நெஞ்சமே தமக்குத் துணையாகாதபோது ஒருவரது துன்பக் காலத்து யார்தான் துணையாவார்? எனத் தலைவி வினவுவதைச் சொல்கிறது.
  • 1300 ஆவதுகுறள் தம்முடைய நெஞ்சம் உறவாகாத போது, அயலார் உறவினர் அல்லாராதல் இயல்பு எனத் தலைவி புலம்புவதைச் சொல்கிறது.

 

நெஞ்சோடுபுலத்தல் அதிகாரச் சிறப்பியல்புகள்

தன்னையும் நெஞ்சையும் வேறு வேறாகப் பிரித்துக் கொண்டு பேசும் இலக்கிய மரபில் அமைந்த அதிகாரம் இது. தலைவி ஊடல் மேல் கருத்துச் செலுத்தாது கூடல் மேல் நாட்டம் கொள்கிறாள். ஆனால் தான் புணர்ச்சி விதுப்பத் தன்மையள் அல்லள், தன் நெஞ்சமே காரணம் எனத் தோற்றம் அளிக்கும்படி காதலனைக் கூடுதற்கு விரைகின்ற நெஞ்சைப் பார்த்துத் தலைவி புலந்து பேசுவதாக உள்ளது.

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ பெட்டாங்கு அவர்பின் செலல் (1293 )என்பதிலுள்ள கெட்டார்க்கு நட்டார்இல் என்ற முதுமொழித் தொடர் பழமொழி நானூறு (59) என்ற தொகுப்பிற்கு இக்குறள்வழி சென்றிருக்க வேண்டும்.

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் அறாஅ இடும்பைத்துஎன் நெஞ்சு (1295) என்ற குறள் தலைவியின் ஆழ்ந்த காதலை வெளிப்படுத்துவதாக உள்ளது. காதலன் அருகிலேயே தான் எஞ்ஞான்றும் இருக்கவேண்டும் என்னும் தலைவியின் விருப்பத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாம்உடைய நெஞ்சம் துணையல் வழி (1299). காமத்துப்பாடலில் இடம்பெற்றுள்ள அறச் செய்திகளில் இதுவும் ஒன்று. மெய்யுணர்வு பெற்றவள்போல் தலைவி கூறும் இப்பாடல் கருத்தாழம் மிக்கது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard