Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 132 புலவி நுணுக்கம் அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7471
Date:
132 புலவி நுணுக்கம் அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
புலவி நுணுக்கம் 
ஊடல் உண்டாவதற்குக் காட்டப்படும் நுட்பமான காரணம்.
குறள் திறன்-1311 குறள் திறன்-1312 குறள் திறன்-1313 குறள் திறன்-1314 குறள் திறன்-1315
குறள் திறன்-1316 குறள் திறன்-1317 குறள் திறன்-1318 குறள் திறன்-1319 குறள் திறன்-1320

openQuotes.jpgபுலவி நுணுக்கம்=புலவியது நுட்பம். புலப்பதற்குக் காரணம் இல்லை. ஆதலால், புலப்பதற்குரிய காரணத்தைத் தேட வேண்டியுள்ளது. நுட்பமாகத் தென்படும் காரணத்தைப் பெரிதாக்கிப் புலவி மேற்கொள்ளப்படுகின்றது. காதல் உணர்வு மிகுதியாக ஏற்பட்டதன் விளைவே இது. படித்தின்புறுவதற்கு மிகவும் சுவை பயப்பது. ஏற்ற மிகு இலக்கியப் பகுதிகளாய் என்றும் நிலைத்திருக்கக் கூடியது.
- சி இலக்குவனார்

 

தலைவனுடன் தலைவி ஊடிக்கொண்டிருக்கும் படுக்கையறைக் காட்சி தொடர்கிறது. பிறமகளிர் தொடர்பு உள்ளவன் தலைவன் என்று பொய்யான உறவைக் கற்பனை செய்து அவனைக் காய்கிறாள் காதலி. சினமும் கண்ணீரும் அழுகையுமாக இவ்வதிகாரத்தில் தோன்றுகிறாள் அவள். அவன் எது செய்தாலும் அவளுக்கு எரிச்சல் உண்டாகிறது; அவன் எது சொன்னாலும் குற்றமாகப்படுகிறது. இந்த ஊடல் நாடகத்தின் வழி தலைவி தலைவனைத் தனக்கு-தனக்குமட்டுமே உரிமைகொண்டாடுதலும் (possessiveness) அவர்களிடையேயான உழுவலன்பும் (எழுமையுந் தொடர்ந்துவரும் அன்பு) கலைத்திறனோடு சொல்லப்பட்டுள்ளன.

புலவி நுணுக்கம்

புலவி நுணுக்கமாவது தலைவனிடம் தவறில்லை என்றாலும், தன் காதல் மிகுதியால் சொல்லெச்சத்தினாலும் குறிப்பெச்சத்தினாலும் வேறுபடப் பொருள் கொண்டு, தலைமகள் புலந்து கூறுதல். பொய்யான காரணங்கள் மிகவும் திறமையோடு கற்பித்துச் சொல்லப்படுவதால் நுணுக்கம் எனப்பட்டது. புலவி உண்டாவதற்குக் காட்டப்படும் நுட்பமான காரணம் புலவி நுணுக்கம் எனக் கொள்ளப்படுகிறது. இப்பகுதியில் உள்ள முதலிரண்டு பாக்கள் தலைவி கூற்றாகவும் பின்னர் வரும் எட்டுக் குறள்களும் தலைவன் கூற்றாகவும் அமைந்துள்ளன.
பொய்யாகப் புனைந்த காரணங்களாதலால் இங்கு சொல்லப்பட்ட ஊடலில் விளையாட்டுத் தன்மை உள்ளது. ஆயினும் சினம் கொள்ளல், கண்ணீர், அழுகை என்று வேறுபட்ட உணர்ச்சிகளையும் காட்டுகிறாள் தலைவி; குற்றமற்ற தலைவனிடம் வேண்டுமென்றே பழி கூறி, அவன்படும் கலக்கத்தில் இன்பம் காண்கிறாள். ஊடல் கொள்வது போல் இப்படி நடிப்பது எளிதன்று.

இரவு நேரம். பள்ளியில் தலைமகனும் காதலியும் இருக்கிறார்கள். ஊடலுக்குப் பின் கூடலாம் என முடிவு செய்த தலைவி, தலைவன் புறத்தொழுக்கம் உடையவன் என்று அவனைச் சீண்டி பூசலைத் தோற்றுவிக்கலாம் என எண்ணுகிறாள். காதலன் தன் ஊடலைத் தீர்க்க வேண்டும் என்பதும் தன் மேல் அன்பை வெளிப்படையாகச் சொரிந்து உரிமை பாராட்ட வேண்டும் என்பது அவள் விருப்பம். அம்மா வந்து தூக்கி முத்தமிடும் வரை குழந்தை கத்தி அழுமே அந்த மனநிலைக்கு மாறுகிறாள்.
அவன் அவளிடம் நெருங்குகிறான். அவள் மறுப்பவள் போல நெருங்காதே! ஊர்ப்பெண்கள் பார்த்து மகிழ்ந்த மார்புடைய பரத்தனே! என்கிறாள். இந்தச் சொற்களில் கடுமை இருப்பதுபோல் தோன்றுகிறது. வேறு பெண்கள் தன்னைப் பார்ப்பதற்கு அவன் என்ன செய்ய முடியும்? ஆனால், காதலனுக்குச் சிறிதும் பொருந்தாத குற்றச்சாட்டாக இருப்பதால், விளையாட்டாக அமைகிறது. அவனும் தன்னையறியாமல் அந்த ஆட்டத்தில் ஈடுபடுத்திக் கொள்கிறான். அவன் எது செய்தாலும் வேறுபடக் கருதுவது எதுசொன்னாலும் வேறுபடப் பொருள் கொள்வது என்று ஊடல் நீளுகிறது. தலைவன் பூச்சூடுதல், தும்முதல், அஞ்சித் தும்மல் அடக்குதல், ஊடல் உணர்த்தல், வாளா தலைவியை உற்று நோக்குதல் என்றிவை காதலியின் புலத்தலுக்கு ஏதுக்கள் ஆகின்றன. தலைவனது செயல்களில் மட்டுமன்றி, யாம் காதலையுடையோம், இப்பிறப்பில் நாம் பிரியமாட்டோம், உன்னை நினைத்தேன் என்று அவன் நயந்து பணிந்து சொன்னாலும் அவற்றிற்கு வேறுபடப் பொருள் கண்டு அவனுடன் சண்டையிட்டு நிற்கின்றாள் தலைவி. பிறபெண்கள் மீது பொறாமை கொள்வது போலவும் அவர்கள் செயல்கள் இவளுக்கு அச்சமூட்டுவது போலவும் புனைந்து புலக்கிறாள். ஊடலைத் தணிவிக்க தலைவன் எடுக்கும் முயற்சிகளை பயனற்றுப் போகச்செய்கிறாள் தலைவி.
தலைவன் கூறும் மொழிகளுக்கு அவள் தன் புலமைத்திறத்தால் வேறு பொருளைக் குறிப்பினாற் கொண்டு ஊடுவது இலக்கியச்சுவை நல்குவதாய் உள்ளது.

புலவி நுணுக்கம் அதிகாரத்தில் பிறமகளிரைத் தலைவனோடு தொடர்புபடுத்தி வெளிப்படையாகத் தலைவி பேசுகிறாள். இங்குத் தலைவி கண்ட குற்றமனைத்தும், பொய் என்பதனை தலைவியே பின்னர் கூறுவாள் இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல் வல்ல தவரளிக்கு மாறு (ஊடலுவகை குறள்எண்: 1321 பொருள்: அவரிடம் ஒரு தவறும் இ்ல்லையாயினும், ஊடலால் அவருடைய அன்பை முழுதுமாகப் பெற முடிகிறது. அதனால்தான் ஊடுகிறேன்) என்று

'காமத்துப்பால் இருபத்தைந்து அதிகாரங்களுள்ளும் புலவி நுணுக்கத்தை ஒப்பது பிறிதில்லை' என்று மிக உயர்வாய்ச் சொல்வார் வ சுப மாணிக்கம். மேலும அவர் 'பரத்தயரை ஒதுக்கி ஊடல் அதிகாரங்களை நுணுக்கமாக யாத்த புதுப்பெருமை யுடையவர் வள்ளுவர் எனினும் பரத்தமைக் குறிப்பை அவர் ஒதுக்கவில்லை. ஆடவன் நிறையாளன் எனினும் அந்நிறைவு குறைவாகவே பெண்ணுள்ளத்திற்குப் படும் போலும். இந்த இப்பிறவிக்கு இருமாதரைச் சிந்தையாலும் தொடேன் என்ற வரத்தை பெருமகன் இராமனிடங்கூடச் சீதை பெற்றாள் என்பர் கம்பர். ஆடவன் தவற்றுக்குச் சமுதாயத்தில் வாய்ப்பு உண்டு என்பதையும் அவள் அறிவாள். தன் கணவன் தவறிலன் என்பதையு அறிவாள். அறிந்து வைத்தும் ஊடற்காலத்துத் தவறுடையான் போலச் சுட்டிப் புலவி மிகுப்பாள். பெண்ணினத்தின் உள்ளோட்டத்தைப் புலவி நுணுக்கத்திற்குப் பயன்படுத்துவர்' எனவும் இவ்வதிகாரம் பற்றிக் கூறியுள்ளார்.

புலவி நுணுக்கம் அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 1311 ஆம்குறள் பெண்மை உடையார் எல்லாரும் தமக்குப் பொதுவாக நினைத்துக் கண்ணாலே நுகர்வர், பரத்தனே! உன் மார்பை யான் பொருந்தேன் எனத் தலைவி புலப்பதைச் சொல்கிறது.
  • 1312 ஆம்குறள் காதலரோடு ஊடியிருந்தேனாக, அவர் தும்மினார், நாம் அவரை 'நீடுவாழ்க' என்று சொல்வேனெனக் கருதி எனக் காதலி சொல்வதைக் கூறுகிறது.
  • 1313 ஆம்குறள் மரக்கொம்பில் உள்ள பூ அணிந்திருந்தாலும், பிற ஒருத்திக்குக் காட்டும் பொருட்டு அதனைச் சூடினீரென்று சினப்பாள் எனக் காதலன் சொல்வதைக் கூறுகிறது.
  • 1314 ஆம்குறள் யாரையும் விடக் காதல் உடையோம் என்று கூறினேனாக யாரைவிட யாரைவிட என்று ஊடினாள் எனத் தலைவன் சொல்வதைக் கூறுகிறது.
  • 1315 ஆம்குறள் இந்தப் பிறப்பில் நாம் பிரிய மாட்டோம் என்று சொன்னேனாக, கண்கள் நிறைய நீர் பெருக்கினாள் எனத் தலைவன் கூறுவதைச் சொல்கிறது.
  • 1316 ஆம்குறள் (உன்னை) நினைத்தேன் என்றேன்; அப்படியென்றால் ஏன் மறந்தீர் என்று தழுவாதிருந்து புலத்தற்கு அமைந்தாள் எனக் காதலன் கூறுவதைச் சொல்கிறது.
  • 1317 ஆம்குறள் தும்மினேனாக உடன் வாழ்த்தினாள்; அதைவிட்டு, 'யார் உம்மை நினைக்க நீர் தும்மினீர்' என்று அழுதாள் எனத் தலைவன் கூறுவதைச் சொல்கிறது.
  • 1318 ஆம்குறள் தும்மல் அடக்கினேன்; உமக்கு வேண்டியவர் உம்மை நினைப்பதை எமக்கு மறைக்கின்றீரோ என்று அழுதாள் எனத் தலைவன் சொல்வதைக் கூறுகிறது.
  • 1319 ஆம்குறள் தன் ஊடல் தீர்த்தாலும் சினப்பாள், பிறரிடமும் இவ்வாறுதானே நடந்து கொள்வீர் என்று சொல்லி எனத் தலைவன் கூறுவதைச் சொல்கிறது.
  • 1320 அவள் அழகை உற்றுநோக்கினாலும் வெகுள்வாள், அவ்வளவையும் யாரை நினைத்துப் பார்த்தீர் என்று கேட்டு எனக் காதலன் சொல்வதைக் கூறுகிறது.

 

புலவி நுணுக்கம் அதிகாரச் சிறப்பியல்புகள்

வரவு நீட்டித்தமை, செய்தி அனுப்பாமை முதலான காரணங்களுக்கு வாய்ப்பிருக்க மணம் சாரா உறவுகள் போன்ற பொய்க்காரணங்கள் கூறித் தலைவி ஊடுவதாக புலவி நுணுக்கம் அதிகாரம் அமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவரது தலைவனுக்குத் தலைவியைத் தவிர வேறுபெண்களிடம் காம உறவு கிடையாது. எனவே மிகுந்த நுட்பத்துடன், மற்றெங்கும் காணாத வகையில், இலக்கியச் சுவை நிறைந்ததாய் இவ்வதிகாரம் யாக்கப்பட்டிருக்கிறது.
க த திருநாவுக்கரசு 'வள்ளுவர் இங்குக் காதலருடைய அனுபவத்தைப்பற்றிக் கூறவில்லை. அவர்களுடைய அனுபவத்தை நம் மனத்தில் அப்படியே கிளர்ந்தெழச் செய்கிறார். தம்முடைய விரிந்த அறிவாலும், ஆழ்ந்த அனுபவத்தாலும், செறிந்த கற்பனையாலும் ஒரு தனி அனுபவம் நிறைந்த உலகத்தைப் படைத்து, நம்மை அதில் நுழைத்து இன்பத்தை நுகருமாறு அவர் தூண்டுகிறார். அந்நிலையில் நாம் நம்மை மறக்கின்றோம்; நம்முடைய உணர்ச்சிகள் பண்படுகின்றன; நம்முடைய அனுபவமும் கனிகின்றது; நம்முடைய உள்ளம் கவிதை இன்பத்தில் தோய்ந்துவிடுகிறது' என்கிறார்.

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு (1311) என்ற குறள் பிற பெண்களின் பார்வை பட்டதாலே ஒரு ஆண்மகன் எச்சில் பண்டமாகத் தலைவிக்குத் தெரிகிறாள் என்றும் அந்த மிச்சிலைத் தான் தீண்டமாட்டேன் என்றும் சொல்கிறது. எவ்வளவு தூய சிந்தனை வள்ளுவரது தலைவிக்கு!
இப்பாடலில் தலைவன் பரத்தன் என்ற இழிசொல்லால் விளிக்கப் பெறுகின்றான். (தலைவி இங்கு தன் கற்பனையில் தலைவனைப் பரத்தனாகக் கூறுகின்றாளே அன்றி அவனை எவ்விடத்தும் பரத்தமைத் தன்மை உடையவனாக வள்ளுவர் கூறவில்லை.)

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண்டனள் (1315) என்ற பாடல் தலைமகன் தலைமகள் இவர்களிடையேயான உழுவலன்பை உணர்ச்சிமிக்க சொற்களால் கூறுகிறது.

ஏற்கனவே ஒருமுறை தும்மியதால் அது தலைவி ஊடுவதற்கு ஏதுவானது. எனவே மறுமுறை தும்மல் வந்தபோது அதை அடக்க முயல்கிறானாம் தலைவன். இக்காட்சியை படிப்போர் மனத் திரையில் காணும்போது சுவையாக இருக்கும். இது தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று (1318) என்ற பாடலில் வருவது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard