Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவ மாலை 1 - 5 of 55 பாடல்கள்


Guru

Status: Offline
Posts: 7387
Date:
திருவள்ளுவ மாலை 1 - 5 of 55 பாடல்கள்
Permalink  
 


https://valluvar-vaakku.blogspot.com/2015/09/thiruvalluva-malai-1-5-of-55.html

திருவள்ளுவ மாலை 1 - 5 of 55 பாடல்கள் 


thiruvalluva-maalai.jpg


உடம்பிலி (அசரீரி)


1. திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோ
டுருத்தகு நற்பலகை யொக்க-விருக்க
வுருத்திர சன்ம ரெனவுரைத்து வானி
லொருக்கவோ வென்றதோர் சொல்.

விளக்கவுரை :

உருத்திரசர்மன் கழகப் பலகையிடத்துத் திருவள்ளுவருடன் ஒக்கவிருக்க வென்று வானில் ஓர் உரையெழுந்த்து.

நாமகள்

2. நாடா முதனான் மறைநான் முகனாவிற்
பாடா விடைப்பா ரதம்பகர்ந்தேன்--கூடாரை
யெள்ளிய வென்றி யிலங்கிலைவேன் மாறபின்
வள்ளுவன் வாயதென் வாக்கு.

விளக்கவுரை :

பாண்டிய வேந்தே!நான் படைப்புக் காலத்தில் நான்முகன் நாவிலிருந்து நான்மறை பாடினேன்; இடைக்காலத்திற் பாரதம் பாடினேன்;இன்று வள்ளுவன் வாயது என் பாட்டு.


இறையனார்
.

3. என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினு
நின்றலர்ந்து தேன்பிலிற்று நீர்மையதாய்க்--குன்றாத
செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்
மன்புலவன் வள்ளுவன் வாய்ச்சொல்.

விளக்கவுரை :


திருவள்ளுவரின் திருக்குறள் நெடுங்காலஞ்செல்லினும் தேன் சொரியுந் தன்மையதான விண்ணக மலர்போலும்.

உக்கிரப்பெரு வழுதியார்.


4. நான்மறையின் மெய்ப்பொருளை முகப்பொருளா நான்முகத்தோன்
றான்மறைந்த வள்ளுவனாய்த் தந்துரைத்த - நூன்முறையை
வந்திக்க சென்னிவாய் வாழ்த்துக நன்னெஞ்சஞ்
சிந்திக்க கேட்க செவி.

விளக்கவுரை :

நான்முகன் வள்ளுவனாகத் தோன்றிக் கூறிய முப்பால் நூலை , என்தலை வணங்குக; வாய்வழுத்துக; மனம் ஊழ்குக (தியானிக்க) செவி கேட்க.

கபிலர்.

5. தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால் - மனையளகு
வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி.

விளக்கவுரை :

வீட்டுப் பறவைகள் வள்ளைப்பாட்டிற் குறங்கும் வளநாட்டரசே! திருவள்ளுவர் திருக்குறளின் சொற்சுருக்கப் பொருட்பெருக்கம். புல்நுனிப் பனித்துளி பனைவடிவைத் தன்னுள்ளடக்கிக் காட்டினாற் போலும்.

பரணர்

6. மாலுங் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியான்
ஞால முழுது நயந்தளந்தான் -வாலறிவின்
வள்ளுவருந் தங்குறள்வெண் பாவடியால் வையத்தா
ருள்ளுவ்வெல் லாமளந்தா ரோர்ந்து.

விளக்கவுரை :

திருமால் குறளாய்த் தோன்றித்தன் இருபேரடியால் உலகனைத்தையும் அளந்தான்; ஆனால் திருவள்ளுவர் தம்குறளின் இரு சிற்றடியால் மாந்தர் கருத்தனைத்தையும் அளந்தார்.

நக்கீரர்

7. தானேமுழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளா
லான வறமுதலா வந்நான்கு - மேனோருக்
கூழி னுரைத்தாற்கு மொண்ணீர் முகிலுக்கும்
வாழியுல கென்னாற்று மற்று.

விளக்கவுரை :


தாமே எல்லாவற்றையும் அறிந்து நாற்பொருளையுங் குறள் வெண்பாவால் எல்லார்க்கும் எளிதாயறிவித்த திருவள்ளுவர்க்கும் மழைபொழியும் முகிலுக்கும் உலகம் என்ன கைம்மாறு செய்யவல்லதாம் ?


மாமூலனார்.

8. அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின்
றிறந்தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும்
வள்ளுவ னென்பானோர் பேதை யவன்வாய்ச்சொற்
கொள்ளா ரறிவுடை யார்.

விளக்கவுரை :


அறமுதலிய நான்கையும் உள்ளவா றுலகிற் குணர்த்திய தெய்வப் புலவரை, மறந்தேனும் மாந்தனாகக் கொள்ளும் அறிவிலியின் கூற்றை அறிவுடையோர் கொள்ளார்.

கல்லாடர்

9. ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனி
னன்றென்ப வாறு சமயத்தார் - நன்றென
வெப்பா லவரு மியைபவே வள்ளுவனார்
முப்பான் மொழிந்த மொழி.

விளக்கவுரை :


அறுவகை மதத்தாரும் ஒருபொருளின் இயல்பை இன்னதென்று ஒருமதத்தார் கூறின், அதைமறுத்து வேறாகக் காட்டுவர் ஏனை மதத்தாரெல்லாரும் , ஆனால் திருவள்ளுவர் தம் முப்பாலிற் சொன்னவற்றையோ உண்மையென்று எல்லாரும் ஒத்துக்கொள்வர்.

சீத்தலைச் சாத்தனார்.

10. மும்மலையு முந்நாடு முந்நதியு முப்பதியு
மும்முரசு முத்தமிழு முக்கொடியு - மும்மாவுந்
தாமுடைய மன்னர் தடமுடிமேற் றாரன்றோ
பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்.

விளக்கவுரை :


திருவள்ளுவரின் முப்பால் , மலை , நாடு ஆறு நகர் , முரசு, கொடி , குதிரை, தமிழ் ஆகியவற்றை மும்மூன்றாகக் கொண்ட மூவேந்தரின் முடிமாலை போல்வதாம்.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

மருத்துவன் தாமோதரனார்

11. சீந்திநீர்க் கண்டந் தெறிசுக்குத் தேனளாய்
மோந்தபின் யார்க்குந் தலைக்குத்தில் - காந்தி
மலைக்குத்து மால்யானை வள்ளுவர்முப் பாலாற்
றலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு.

விளக்கவுரை :மலையப் பகையென்று குத்தும் யானைபோலும் அரசே! சீந்திற் சருக்கரையும் சுக்குப் பொடியும் தேனுங் கலந்து மோந்தால், யாருக்குந் தலைவலி நீங்கிவிடும். திருவள்ளுவர் திருக்குறளைப் பார்த்தபின் சீத்தலைச்சாத்தனாருக்குப் பிறர் பாடல்களால் ஏற்பட்ட தலைவலி நீங்கிற்று.

நாகன் தேவனார்.

12. தாளார் மலர்ப்பொய்கை தாங்குடைவார் தண்ணீரை
வேளா தொழிதல் வியப்பன்று - வாளாதா
மப்பா லொருபாவை யாப்பவோ வள்ளுவனார்
முப்பால் மொழிமூழ்கு வார்.

விளக்கவுரை :தாமரைக்குளத்திற் குளிப்பார் பிறகுளத்தை விரும்பார்.அதுபோல் திருவள்ளுவரின் திருக்குறளைக் கற்றார் பிற நூல்களை விரும்பார்.


அரசில் கிழார்.

13. பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு
தெரிந்து திறந்தொறுஞ் சேரச் - சுருங்கிய
சொல்லால் விரித்துப் பொருள் விளங்கச் சொல்லுதல்
வல்லாரார் வள்ளுவரல் லால்.

விளக்கவுரை : விரிவுபட்டுக் கிடக்கும் வெவ்வேறு பொருள்களையெல்லாம் ஒழுங்காகக் கூறுபடுத்திச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலில் வள்ளுவரன்றி வேறு யார்?

பொன்முடியார்

14. கானின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன்
கூநின் றளந்த குறளென்ப--நுன்முறையான்
வானின்று மண்ணின் றளந்ததே வள்ளுவனார்
தாநின் றளந்த குறள்.

விளக்கவுரை :மாலையணிந்த அரசே! முன்பு காசிபன் தந்த குறள் மண்ணில் நின்று உலகத்தை அளந்தது; இன்று திருவள்ளுவர் தந்த குறள் மண்ணிலும் விண்ணிலும் நின்று உலகத்தையளந்தது.

கோதமனார்


15. ஆற்ற லழியுமென் றந்தணர்க ணான்மறையைப்
போற்றியுரைத் தேட்டின் புறத்தெழுதா--ரேட்டெழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினு மாற்றல்சோர் வின்று.

விளக்கவுரை : பிராமணர் நால்வேதங்களையும் ஏட்டில் எழுதினால் அவற்றின் வலிமை கெடுமென்று வாய்ப் பாடமாகவே சொல்லிக் காத்துவருவர்; திருவள்ளுவரின் திருக்குறளையோ ஏட்டிலெழுதினாலும் எவர் படித்தாலும் அதன் வலிமை குறைவதில்லை.

நத்தத்தனார்

16. ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும்
பாயிரத்தி னோடு பகர்ந்ததற்பின்--போயொருத்தர்
வாய்க்கேட்க நூலுளவோ மன்னு தமிழ்ப்புலவ
ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்.

விளக்கவுரை : ஒருவர் திருக்குறள் முழுவதையுங் கற்றபின், பிறருக்கு ஆசிரியராகிக் கற்பிக்கலாம். ஆனால், ஒருவரிடம் மாணவரா யமர்ந்து கற்க நூலில்லை.

முகையலூர்ச் சிறுகருத்தும்பியார்


17. உள்ளுத லுள்ளி யுரைத்த லுரைத்ததனைத்
தெள்ளுத லன்றே செயற்பால--வள்ளுவனார்
முப்பாலின் மிக்க மொழியுண் டெனப்பகர்வா
ரெப்பா வலரினு மில்.

விளக்கவுரை :
திருக்குறளினுஞ் சிறந்தநூல் ஒன்றுண்டென்று எப்புலவருஞ் சொல்லார். ஆதலால் நாம் செய்யவேண்டியது அதை யுள்ளஞ்செறாது உரைத்துத் தெளிதலே.


ஆசிரியர் நல்லந்துவனார்


18. சாற்றிய பல்கலையுந் தப்பா வருமறையும்
போற்றி யுரைத்த பொருளெல்லாந்--தோற்றவே
முப்பான் மொழிந்த முதற்பா வலரொப்பா
ரெப்பா வலரினு மில்.

விளக்கவுரை : 
எல்லாக் கலைநூற்பொருள்களையும் எடுத்துக்கூறும் திருக்குறளை யியற்றிய, திருவள்ளுவரை யொத்த புலவர் ஒருவருமில்லை.

கீரந்தையார்


19. தப்பா முதற்பாவாற் றாமாண்ட பாடலினான்
முப்பாலி னாற்பான் மொழிந்தவ-- ரெப்பாலும்
வைவைத்த கூர்மேல் வழுதி மனமகிழத்
தெய்வத் திருவள் ளுவர்.

விளக்கவுரை : பாண்டியன் மனமகிழ நாற்பொருளையும் முப்பாலிற் குறள் வெண்பாவாற் கூறியவர் தெய்வப் புலமைத் திருவள்ளுவரே.

சிறுமேதாவியார்


20. வீடொன்று பாயிர நான்கு விளங்கற
நாடிய முப்பத்து மூன்றென்றூழ்-கூடுபொரு
ளெள்ளி லெழுப திருபதிற் றைந்தின்பம்
வள்ளுவர் சொன்னவகை.

விளக்கவுரை : 
திருக்குறள் அதிகாரத்தொகை:பாயிரம் நான்கு; அறத்துப்பால் முப்பத்து மூன்று; ஊழ் ஒன்று; பொருட்பால் எழுபது; இன்பத்துப்பால் இருபத்தைந்து.



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

நல்கூர்வேள்வியார்

21. உப்பக்க நோக்கி யுபகேசி தோண்மணந்தா
னுத்தர மாமதுரைக் கச்சென்ப-இப்பக்க
மாதாநு பங்கி மறுவில் புலச்செந்நாப்
போதார் புனற்கூடற் கச்சு

விளக்கவுரை :வட மதுரைக்குக் கண்ணனை நிலைக்களமாகக் கூறுவர்; வைகை மதுரையான தென்மதுரைக்குத் திருவள்ளுவர் நிலைக்களமாவார்.

தொடித்தலை விழுத்தண்டினார்

22. அறநான் கறிபொரு ளேழொன்று காமத்
திறமூன் றெனப்பகுதி செய்து-பெறலரிய
நாலு மொழிந்தபெரு நாவலரே நன்குணர்வார்
போலு மொழிந்த பொருள்.

விளக்கவுரை :
அறத்தைப் பாயிரம், இல்லறம், துறவறம், ஊழ் என நான்காகவும், பொருளை அரசு. அமைச்சு, அரண், கூழ், படை, நட்பு, குடி என ஏழாகவும், இன்பத்தை ஆண்பாற் கூற்று, பெண்பாற்கூற்று, இருபாற்கூற்று என மூன்றாகவும் வகுத்து, நாற்பொருளையுங் கூறிய திருவள்ளுவரே வேருபொருளிருப்பினும் அதையறிவார் போலும்! நாடு அரணுள் அடக்கப்பட்டது.


வெள்ளிவீதியார்

23. செய்யா மொழிக்குந் திருவள் ளுவர்மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே-செய்யா
வதற்குரிய ரந்தணரே யாராயி னேனை
யிதற்குரிய ரல்லாதா ரில்

விளக்கவுரை :ஒருவராலும் இயற்றப் படாத வேதமும் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளும் கூறும் பொருள் ஒன்றே. இவற்றுள் முன்னது பிராமணர்க்கே யுரியது; பின்னதோ எல்லார்க்கும் பொதுவாம்.

மாங்குடி மருதனார்

24. ஓதற் கெளிதா யுணர்தற் கரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றோ
ருள்ளாதோ றுள்ளுதோ றுள்ள முருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு.

விளக்கவுரை :
திருவள்ளுவரின் திருவாய்மொழி, படிப்பதற் கெளிதாயும் பொருளுணர்தற் கரிதாயுமுள்ள மந்திரநூலாக விளங்கி, தூயவறிஞர் நினைக்குந்தோறும் அவருள்ளத்தை யுருக்கும்.

எறிச்சலூர் மலாடனார்

25. பாயிர நான்கில் லறமிருபான் பன்மூன்றே
தூய துறவறமொன் றூழாக - வாய
வறத்துப்பா னால்வகையா வாய்ந்துரைத்தார் நூலின்
றிறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து.

விளக்கவுரை : திருவள்ளுவர் நன்றாக ஆய்ந்து பாயிரம் நான்கதி காரமும் இல்லறவியல் இருபததிகாரமும் துறவறவியல் பதின்மூன்றதிகாரமும் ஊழ் ஓரதிகாரமுமாக, அறத்துப்பாலை நால்வகையாக வகுத்துரைத்தார்.

போக்கியார்
 
26. அரசிய லையைந் தமைச்சிய லீரைந்
துருவல் லரணிரண்டொன் றொண்கூ - ழிருவியல்
திண்படை நட்புப் பதினேழ் குடிபதின்மூன்
றெண்பொரு ளேழா மிவை.
 
விளக்கவுரை :திருக்குறளின் பொருட்பால், அரசியல் இருபத்தைந் ததிகாரமும், அமைச்சியல் பத்ததிகாரமும், அரணியல் ஈரதிகாரமும் பொருளியல் ஓரதிகாரமும், படையியல் ஈரதிகாரமும் நட்பியல் பதினேழதிகாரமும்; குடியியல் பதின்மூன்றதிகாரமுமாக ஏழுபகுதிகளையுடையதாம்.
 
மோசிகீரனார்
 
27.ஆண்பாலே ழாறிரண்டு பெண்பா லடுத்தன்பு
பூண்பா லிருபாலோ ராறாக - மாண்பாய
காமத்தின் பக்கமொரு மூன்றாகக் கட்டுரைத்தார்
நாமத்தின் வள்ளுவனார் நன்கு.

விளக்கவுரை :
திருவள்ளுவர் ஆண்பாற்கூற்று ஏழதிகாரமும் பெண்பாற் கூற்றுப் பன்னீரதிகாரமும் இருபாற் கூற்று ஆறதிகாரமுமாக, இன்பத்துப்பாலை மூன்றாக வகுத்துரைத்தார்.
 
காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்
 
28. ஐயாறு நூறு மதிகார மூன்றுமா
மெய்யாய வேதப் பொருள்விளங்கிப் - பொய்யாது.
தந்தா னுலகிற்குத் தான்வள் ளுவனாகி
யந்தா மரைமே லயன்.

விளக்கவுரை :
நான்முகன் திருவள்ளுவனாகி வடமொழி வேதப் பொருளைத் தமிழில் 133 அதிகாரமாக விளக்கிக் கூறினான்.

மதுரைத் தமிழ் நாகனார்
 
29. எல்லாப் பொருளு மிதன்பா லுளவிதன்பா
லில்லாத வெப்பொருளு மில்லையாற் - சொல்லாற்
பரந்தபா வாலென் பயன்வள் ளுவனார்
சுரந்தபா வையத் துணை.
 
விளக்கவுரை :எல்லாப் பொருளும் இதன்கண் உள. இதில் இல்லாத பொருள் ஒன்றுமில்லை. ஆதலால், உலகத்தார்க்கு இவ்வொரு நூலே போதுமானதாம்.
 
பாரதம் பாடிய பெருந்தேவனார்
 
30. எப்பொருளும் யாரு மியல்பி னறிவுறச்
செப்பிய வள்ளுவர்தாஞ் செப்பவரு - முப்பாற்குப்
பாரதஞ்சீ ராம கதைமனுப் பண்டைமறை
நேர்வனமற் றில்லை நிகர்.

விளக்கவுரை :  
எல்லாப்பொருளையும் எல்லாரும் உள்ளவாறறியுமாறு திருவள்ளுவர் இயற்றிய திருக்குறட்குப், பாரதம், இராமாயணம் மனுதருமசாத்திரம், நால் வேதம் ஆகிய நான்கே ஒப்பாம்.


__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

உருத்திர சன்ம கண்ணர்
 
31. மணற்கிளைக்க நீரூறு மைந்தர்கள் வாய்வைத்
துணச்சுரக்குந் தாய்முலை யொண்பால் - பிணக்கிலா
வாய்மொழி வள்ளுவர் முப்பான் மதிப்புலவோர்க்
காய்தொறு மூறு மறிவு.

விளக்கவுரை :
 
நீர்நிலை யடுத்த மணலைத் தோண்டுந்தோறும் நீரூறும். குழந்தை வாய்வைத் துறிஞ்சுந்தோறும் தாய்முலை சுரக்கும். அவைபோல், திருக்குறளை ஆராயுந்தோறும் அறிவு பெருகும்.
 
பெருஞ்சித்திரனார்
 
32. ஏதமில் வள்ளுவ ரின்குறள்வெண் பாவினா
லோதிய வொண்பொரு ளெல்லா- முரைத்ததனாற்
றாதவிழ் தார்மாற தாமே தமைப்பயந்த
வேதமே மேதக் கன.

விளக்கவுரை :
 
மாலையணிந்த பாண்டிய வேந்தே! திருவள்ளுவர் வேதங்களின் சிறந்தபொருளை யெல்லாம் குறள்வெண்பாவாற் கூறிவிட்டமையால், இவற்றுள் எவை மேம்பட்டவை?

 







நரிவெரூஉத் தலையார்
 
33. இன்பம் பொருளறம் வீடென்னு மிந்நான்கு
முன்பறியச் சொன்ன முதுமொழிநூன்- மன்பதைகட்
குள்ள வரிதென் றவைவள் ளுவருலகங்
கொள்ள மொழிந்தார் குறள்.
 
விளக்கவுரை :
 
நாற்பொருளையும் மக்கட்கு அறிவிக்கும்படி இயற்றப்பட்ட நால் வேதங்கள் அவரால் உணர்தற்கு அரியதாயிருந்ததனால், அவற்றை யெளிதா யுணருமாறு திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.
 
மதுரைத்தமிழாசிரியர் செங்குன் றூர்கிழார்
 
34. புலவர் திருவருள் ளுவரன்றிப் பூமேற்
சிலவர் புலவரெனச் செப்பல் - நிலவு
பிறங்கொளிமா லைக்கும் பெயர்மாலை மற்றுங்
கறங்கிருண்மா லைக்கும் பெயர்.
 
விளக்கவுரை :
 
திருவள்ளுவரையும் பிற புலவரையும் புலவரென்று சமமாகச் சொல்லுதல், முழுமதி மாலையையும் காருவா அமாவாசை மாலையையும் மாலையென்றே ஒரே சொல்லாற் குறிப்பது போலும்.
 
மதுரை யறுவை வாணிகன் இளவேட்டனார்
 
35. இன்பமுந் துன்பமு மென்னு மிவையிரண்டு
மன்பதைக் கெல்லா மனமகிழ- வன்பொழியா
துள்ளி யுணர வுரைத்தாரே யோதுசீர்
வள்ளுவர் வாயுறை வாழ்த்து.
 
விளக்கவுரை :
 
மக்களெல்லாரும் தமக்கு வரும் இன்பதுன்பக்கரணியங்களை யறிந்து துன்பத்தினின்று தப்பி யின்புறும்பொருட்டு, திருவள்ளுவர் திருக்குறளை வாயுறை வாழ்த்தாகப்பாடினார். வாயுறை வாழ்த்தாவது, முன்பு வெறுப்பை விளைப்பினும் பின்பு நலம் பயக்கும் நன் மருந்துபோற் பயன்படும் அறிவுரை வாயுறுத்தும் மருந்து.
 
கவிசாகரப் பெருந்தேவனார்

36. பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புனத
மாவிற் கருமுனியா யானைக்- கமரரும்பல்
தேவிற் றிருமா லெனச்சிறந்த தென்பவே
பாவிற்கு வள்ளுவர்வெண் பா.

விளக்கவுரை :

பூவிற்குத் தாமரையும், பொன்னிற்கு நாவற் சாறமும், ஆவிற்குக் காமதேனுவும் யானைக்கு ஐராவதமும், தேவிற்குத் திருமாலும், நூலிற்குத் திருக்குறளும் சிறந்தனவாம்.

மதுரைப் பெருமருதனார்

37. அறமுப்பத் தெட்டுப் பொருளெழுப தின்பத்
திறமிருபத் தைந்தாற் றெளிய - முறைமையால்
வேத விழுப்பொருளை வெண்குறளால் வள்ளுவனா
ரோதவழுக் கற்ற துலகு.

விளக்கவுரை :

திருவள்ளுவர், அறத்தை முப்பத்தெட் டதிகாரங்களாகவும் பொருளை எழுபததிகாரங்களாகவும் இன்பத்தை இருபத்தைந் ததிகாரங்களாகவும் வகுத்து, வேதப் பொருளைக் குறள் வெண்பாவாற் கோவைபடக் கூறியதால், உலகம் தீயொழுக்கத்தினின்றும் தீர்ந்தது.

 

கோவூர் கிழார்

38. அறமுத னான்கு மகலிடத்தேச ரெல்லாந்
திறமுறத் தேர்ந்து தெளியக் - குறள்வெண்பாப்
பன்னிய வள்ளுவனார் பான்முறைநே ரொவ்வாதே
முன்னை முதுவோர் மொழி.

விளக்கவுரை :

நாற்பொருளையும் மக்கள் ஆய்ந்து தெளிதற்பொருட்டுத் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறட்கு முந்துநூல் ஒன்றும் நிகராகாது.

உறையூர் முதுகூற்றனார்

39. தேவிற் சிறந்த திருவள்ளுவர் குறள்வெண்
பாவிற் சிறந்திடுமுப் பால்பகரார்- நாவிற்
குயலில்லை சொற்சுவை யோர்வில்லை மற்றுஞ்
செயலில்லை யென்னுந் திரு.

விளக்கவுரை :

தெய்வப் புலமைத் திருவள்ளுவரின் திருக்குறளை ஓதாதவரின் நாவிற்கு இன்சொற் சொலவில்லை; உடம்பிற்கு நல்வினையில்லை என்று கருதித் திருமகள் அவரிடஞ் சேரான்.

இழிகட் பெருங்கண்ணனார்

40. இம்மை மறுமை யிரண்டு மெழுமைக்குஞ்
செம்மை நெறியிற் றெளிவுபெற - மும்மையின்
வீடவற்றி னான்கின் விதிவழங்க வள்ளுவனார்
பாடின ரின்குறள்வெண் பா.

விளக்கவுரை :


இம்மை மறுமைக்கும் எழுபிறப்பிற்கும் பயன்படவும் நாற்பொருளும் நடைபெறவும், திருவள்ளுவர் திருக்குறளியற்றினர்.


__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

செயிர்க்காவிரியார் மகனார் சாத்தனார்

41. ஆவனவு மாகா தனவு மறிவுடையார்
யாவரும் வல்லா ரெடுத்தியம்பத் - தேவர்
திருவள் ளுவர்தாமுஞ் செப்பியவே செய்வார்
பொருவி லொழுக்கம் பூண்டார்.

விளக்கவுரை :

மக்களுக்கு வேண்டியவற்றையும் வேண்டாத வற்றையும் அறிஞரும் எடுத்துச் சொல்லுமாறு, திருவள்ளுவர் இயற்றிய திருக்குறட் கூற்றுக்களையே, ஒழுக்கத்தில் உயர்ந்தோர் கடைப்பிடிப்பர்.

செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார்

42. வேதப் பொருளை விரகால் விரித்துலகோ
ரோதத் தமிழா லுரைசெய்தா - ராதலா
லுள்ளுந ருள்ளும் பொருளெல்லா முண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு.

விளக்கவுரை :

திருவள்ளுவர் ஆரிய வேதப்பொருளைத் தமிழுலகம் அறிதற்பொருட்டுத் தமிழில் விரித்துரைத்தார். ஆதலால், திருக்குறளில் மக்கள் கருதும்பொருள்களெல்லாம் உள்ளன.

 


வண்ணக்கஞ் சாத்தனார்


43.ஆரியமுஞ் செந்தமிழு மாராய்ந் திதனினிது
சீரிய தென்றொன்றைச் செப்பரிதா- லாரியம்
வேத முடைத்து தமிழ்திரு வள்ளுவனா
ரோது குறட்பா வுடைத்து.

விளக்கவுரை :

வடமொழியையும் தென்மொழியையும் ஒப்பு நோக்கி இது சிறந்தது என்று ஒன்றைச் சொல்ல முடியாது. வடமொழியில் வேதமுள்ளது; தென்மொழியில் திருக்குறள் உள்ளது. ஆதலால், இரண்டும் சமமே.

களத்தூர் கிழார்

44. ஒருவ ரிருகுறளே முப்பாலி னோதுந்
தரும முதனான்குஞ் சாலு - மருமறைக
ளைந்துஞ் சமயநூ லாறுநம் வள்ளுவனார்
புந்தி மொழிந்த பொருள்.

விளக்கவுரை :

இருக்குமுதல் பாரதம் ஈறான வேதங்கள் ஐந்தும் வேதவழிப்பட்ட சாத்திரங்கள் ஆறும், திருவள்ளுவர் நூலிலடங்கும்; ஆதலால் ஒருவர் உய்வதற்கு, ஓரெதுகையும் ஈரெதுகையுமாகிய இருவகைக் குறளாலு மமைந்த முப்பாலிற் சொல்லப்பட்ட நாற்பொருளையும் அறிந்தாற் போதும்.

நச்சுமனார்

45. எழுத்தசை சீரடி சொற்பொருள் யாப்பு
வழுக்கில் வனப்பணி வண்ண- மிழுக்கின்றி
யென்றெவர் செய்தன வெல்லா மியம்பின
வின்றிவ ரின்குறள்வெண் பா.

விளக்கவுரை :

எழுத்து முதல் வண்ணம் ஈறாகச் சொல்லப்பட்ட எல்லாம் அழகாக எவ்வெக்காலத்தில் எவ்வெவராற் சொல்லப்பட்டனவோ, அவையெல்லாம் இக்காலத்து இத்திருவள்ளுவரால் இயற்றப்பட்ட இனிய குறள் வெண்பாக்களிற் சொல்லப்பட்டுள்ளன.

அக்காரக்கனி நச்சுமனார்

46. கலைநிரம்பிக் காண்டற் கினிதாகிக் கண்ணி
னிலைநிரம்பு நீர்மைத் தெனினுந்- தொலைவிலா
வானூர் மதியந் தனக்குண்டோ வள்ளுவர்முப்
பானூ னயத்தின் பயன்.

விளக்கவுரை :

மதியமும் முழுமதியும் முப்பால் நூலும் முறையே பதினாறுகலைகளாலும் அறுபத்துநான்கு கலைகளாலும் நிறைந்து காண்பதற்கும் ஆராய்தற்கும் இனிதாகி, புறக் கண்ணிற்குத் தண்மையும் அகக்கண்ணிற்குப் பண்பும் உடைத்தாயினும், முப்பால் நூலால் விளையும் பயன் மதியினிடத்துண்டோ?

நப்பாலத்தனார்

47. அறந்தகளியான்ற பொருடிரி யின்பு
சிறந்தநெய் செஞ்சொற்றீத் தண்டு-குறும்பாவா
வள்ளுவனா ரியற்றினார் வையத்து வாழ்வார்க
ளுள்ளிரு ணீக்கும் விளக்கு.

விளக்கவுரை :


திருவள்ளுவர் அறத்தை அகலாகவும், பொருளைத் திரியாகவும் இன்பத்தை நெய்யாகவும், சொல்லை நெருப்பாகவும், குறட்பாவைத் தண்டாகவும் கொண்டு, உலகத்தோரின் அகவிருளை நீக்கும் விளக்கேற்றினார்.

 

குலபதிநாயனார்


48. உள்ளக் கமல மலர்த்தி யுளத்துள்ள
தள்ளற் கரியவிரு டள்ளுதலால்-வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பாவும் வெங்கதிரு மொக்குமெனக்
கொள்ளத் தருங்குணத்தைக் கண்டு.

விளக்கவுரை :


நெஞ்சத் தாமரையை விரியச் செய்து அகவிருளை நீக்குந் திருக்குறளும், நீர்த்தாமரையை விரியச் செய்து புறவிருளை நீக்கும் கதிரவனும், குணத்தால் ஒக்குமென்று கொள்ளத்தகும்.

தேனீக் குடிக்கீரனார்


49. பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத
மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே-முப்பாலில்
தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால்
வையத்து வாழ்வார் மனத்து.

விளக்கவுரை :


தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரின் திருக்குறளைக் கற்று அல்லது கேட்டு அறிந்ததனால், மக்கள் மனத்தில் மெய்த் தன்மையான வெல்லாம் மெய்யாகவும் பொய்த்தன்மையான வெல்லாம் பொய்யாகவும் விளங்கிவிட்டன.

கொடிஞாழன் மாணிபூதனார்


50. அறனறிந்தே மான்ற பொருளறிந்தே மின்பின்
திறனறிந்தேம் வீடு தெளிந்தேம்- மறனெறிந்த
வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயாற்
கேளா தனவெல்லாங் கேட்டு.

விளக்கவுரை :

பகைவென்ற பாண்டிய! திருவள்ளுவர் வாயினின்று, இதற்குமுன் கேட்டிராதவையெல்லாம் கேட்டு நாற்பொருளின் இயல்பையும் நன்றாய் அறிந்தேம்.


__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

 கவுணியனார்

 
51. சிந்தைக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய
வந்த விருவினைக்கு மாமருந்து-முந்திய
நன்னெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார்
பன்னிய வின்குறள்வெண் பா.
 
விளக்கவுரை :
 
நாம் நல்லொழுக்க வழியை அறிதற்பொருட்டுப் புலமை மிக்க திருவள்ளுவர் இயற்றிய இனிய குறள்வெண்பாக்கள் ஆராய்ந்தால் மனத்திற்கும் கேட்டாற் செவிக்கும் ஓதினால் நாவிற்கும் இன்பந்தருவன; தொன்றுதொட்டு வரும் இருவினைகளாகிய நோய்கட்குச் சிறந்த மருந்தாவன.
 
மதுரைப் பாலாசிரியனார்
 
52. வெள்ளி வியாழம் விளங்கிரவி வெண்டிங்கள்
பொள்ளென நீக்கும் புறவிருளைத்-தென்னிய
வள்ளுவ ரின்குறள் வெண்பா வகிலத்தோர்
ருள்ளிரு ணீக்கு மொளி.
 
விளக்கவுரை :
 
வெள்ளி வியாழன் கதிரவன் திங்கள் என்பன புறவிருளை நீக்கும் ஒளிகளாம். அவைபோலத் திருவள்ளுவரின் இனிய குறள் வெண்பா அகவிருள் நீக்கும் ஒளியாம்.

 

ஆலங்குடி வங்கனார்
 
53. வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்குந்
தெள்ளமுதின் றீஞ்சுவையு மொவ்வாதால்-தெள்ளமுதம்
உண்டறிவார் தேவ ருலகடைய வுண்ணுமால்
வண்டமிழின் முப்பால் மகிழ்ந்து.

விளக்கவுரை :
 
திருவள்ளுவர் பாட்டின் தீஞ்சுவைக்குத் தெள்ளமுதமும் ஒவ்வாது. தெள்ளமுதைத் தேவர் மட்டும் உண்டு சுவைப்பர்; முப்பாலமுதையோ உலகத்தாரனைவரும் உண்டு சுவைப்பர்.

இடைக் காடர்
 
54. கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறுத்த குறள்.

விளக்கவுரை :
 
திருக்குறளின் சொற்சுருக்கமும் பொருட்பெருக்கமும் நோக்கின், ஒவ்வொரு குறளும், கடுகின் நடுவில் துளைசெய்து அதில் எழுகடல் நீரையும் பாய்ச்சி, மேலும் அது அளவிற் குறுகும் வண்ணம் சற்றுத் தறித்துவைத்தாற் போன்றதாம்.
 
ஒளவையார்
 
55.அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்.

விளக்கவுரை :
 
திருக்குறளின் சொற்சுருக்கத்தையும் பொருட்பெருக்கத்தையும் நோக்கின், ஒவ்வொரு குறளும், கடுகினும் மிக நுண்ணிய அணுவைத் துளையிட்டு அதில் எழுகடல் நீரையும் பாய்ச்சி, மேலும் அது அளவிற் குறுகும் வண்ணம் சற்றுத் தறித்து வைத்தாற் போன்றதாம்.


__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

01. அசரீரி[தொகு]

மூலம்
திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோ
டுருத்தகு நற்பலகை யொக்க- விருக்க
வுருத்திர சன்ம ரெனவுரைத்து வானி
லொருக்கவோ வென்றதோர் சொல் (01)
பல இடர்ப்பாடுகள், எதிர்ப்புகளுக்கிடையே மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் திருவள்ளுவர் தம் முப்பாலை(திருக்குறளுக்கு ஆசிரியர் இட்டபெயர்) அரங்கேற்றினார். அரங்கேற்றத்தின் முடிவில் வானத்திலிருந்து ஓர் அசரீரிச்சொல் பாராட்டி எழுந்தது. அதுகுறித்து எழுந்த பாடலே இது.
பதப்பிரிப்பு
திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோடு
உருத்தகு நல்பலகை ஒக்க - இருக்க
உருத்திரசன்மர் என உரைத்து வானில்
ஒருக்க ஓ என்றது ஓர் சொல்
கருத்துரை
'அருள்திரு' என்று அழைக்கப்படும் தகுதியுடைய (அதாவது தெய்வம் என்பதாம்) தெய்வத் திருவள்ளுவரோடு, சங்கப்பலகையில் உருத்திரசன்மர் ஒருவரே ஏறியிருந்திடுக என்று ஓர் சொல், வானத்திலிருந்து 'ஓ' என்று இரைத்து (ஆரவாரத்தோடு) எழுந்து ஒலித்தது.

02. நாமகள்[தொகு]

நாமகள் என்பது சரசுவதியைக்குறிக்கும். அந்த நாமகளே- சரசுவதியே- கல்விக்கடவுளே திருக்குறளின் சிறப்பை உரைக்கின்றாள்.

மூலம்
நாடா முதனான் மறைநான் முகனாவிற்
பாடா விடைப்பார தம்பகர்ந்தேன்- கூடாரை
யெள்ளிய வென்றி யிலங்கிலைவேன் மாறபின்
வள்ளுவன் வாயதென் வாக்கு (02)
பதப்பிரிப்பு
நாடா முதல் நான்மறை நான்முகன் நாவில்
பாடா இடைப் பாரதம் பகர்ந்தேன் - கூடாரை
எள்ளிய வென்றி இலங்கு இலை வேல் மாற பின்
வள்ளுவன் வாயது என் வாக்கு
கருத்துரை
மாறனே(பாண்டிய மன்னனே) படைப்புக்கால முதலிலே நான், நான்முகனுடைய நாவில் இருந்து நான்மறைகளை- நான்குவேதங்களை- பாடினேன். பின் இடைக்காலத்திலே பாரதம் எனும் ஐந்தாம் வேதத்தினை அருளினேன். அதன்பின் கடைசியாக இப்பொழுது தமிழ்வேதமாகிய திருக்குறளை வள்ளுவனின் வாய்மொழி மூலம் என்வாக்காக (வேதவாக்காக) உலகுக்கு நான் உரைத்தேன்.

இதுவே இறுதிவேதம் என்பதுகுறிப்பு; அதாவது இதுவே முழுமைபெற்ற வேதம் என்பதாம். முதல், இடை என்பதை நோக்குக.

03. இறையனார்[தொகு]

மூலம்

என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினும்
நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க்- குன்றாத
செந்தளிர்க் கற்பகத்தின் றெய்வத் திருமலர்போன்ம்
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல் (03)
பதப்பிரிப்பு
என்றும் புலராது யாணர் நாள் செல்லுகினும்
நின்று அலர்ந்து தேன் பிலிற்றும் நீர்மையதாய்க் - குன்றாத
செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போன்ம்
மன் புலவன் வள்ளுவன் வாய்ச் சொல்
கருத்துரை
இறையனார் (சிவபெருமான்) கூறிய பாடல்.

இங்குத் தெய்வப்புலவரின் பாடலைக் கற்பகமரத்தின் தெய்வமலர் என்று அதனுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றார்.

கற்பகப்பூ என்றும் வாடாதது;அதுபோல் அவர் வாய்ச்சொல்லான திருக்குறளும் என்றும் வாடாதது,அதாவது புதியது, புத்தழகு உடையது.
நெடுங்காலம் சென்றாலும் கற்பகப்பூ தன்னழகு கெடாது நின்று மலர்ந்து தேன் சொரியும் தன்மையை உடையது. திருக்குறளும் காலத்தால் அழியாதது; தன்னழகு கெடாதது என்றும் பொருந்தும் கருத்துக்களை உடையது; இனிய சுவையான மருந்தனைய கருத்துக்களைத்தரும் தன்மைகொண்டது.
குறையில்லாத சிவந்த தளி்ர்களை(கொழுந்துகளை) உடையது கற்பகத்தரு (தரு=மரம்)அதுபோல் செஞ்சொற்களைக்கொண்டது திருக்குறள்.
கற்பகமலர் தெய்வத்திருமலர். திருக்குறளும் தெய்வத் திருக்குறள்.

மிகஅழகான ஒப்புமை.

04. உக்கிரப் பெருவழுதியார்[தொகு]

மூலம்
நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
றான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த- நூன்முறையை
வந்திக்க சென்னிவாய் வாழ்த்துக நன்னெஞ்சஞ்
சிந்திக்க கேட்க செவி (04)
பதப்பிரிப்பு
நான் மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
தான் மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த - நூல்முறையை
வந்திக்க சென்னி வாய் வாழ்த்துக நல் நெஞ்சம்
சிந்திக்க கேட்க செவி
கருத்துரை
இங்கு வள்ளுவப்பெருமானைப் படைப்புக்கடவுளான பிரம்மனாகக் கூறுகின்றார் உக்கிரப் பெருவழுதியார்.
நான்முகத்தோனாகிய பிரம்மதேவனே தன்னை மறைத்துக்கொண்டு இவ்வுலகில் வள்ளுவனாய்த்தோன்றி நான்கு வேதங்களின் பொரு்ள்களை அறம், பொருள் இன்பம் எனும் மூன்றுபொருள்களாக இவ்வுலகுக்குத் தந்தான். இந்த நூலாகிய திருமுறையை என் தலைவணங்கட்டும்; என் வாய் வாழ்த்தட்டும்; என் நெஞ்சம் சிந்திக்க அதாவது, தியானிக்கட்டும்; என் செவியானது கேட்டுக்கொண்டே இருக்கட்டும்.

05. கபிலர்[தொகு]

மூலம்
தினையளவு போதாச் சிறுபுன் னீர்நீண்ட
பனையளவு காட்டும் படிததான்- மனையளகு
வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி (05)
பதப்பிரிப்பு
தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட
பனையளவு காட்டும் படித்தால் - மனையளகு
வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி (௫)

(அளகு= பறவை; வள்ளை= பெண்கள், நெல் குற்றும்போது பாடும் உலக்கைப்பாட்டு வள்ளைப்பாட்டு; வெள்ளை- வெண்பா)

கருத்துரை
வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது? என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோலாம் என்க.

06. பரணர்[தொகு]

மூலம்
மாலுங் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால்
ஞால முழுதும் நயந்தளந்தான்- வாலறிவின்
வள்ளுவரும் தங்குறள்வெண் பாவடியால் வையத்தா
ருள்ளுவவெல் லாமளந்தா ரோர்ந்து (06)
பதப்பிரிப்பு
மாலும் குறளாய் வளர்ந்து இரண்டு மாண் அடியால்
ஞாலம் முழுதும் நயந்து அளந்தான் - வால் அறிவின்
வள்ளுவரும் தம் குறள் வெண்பா அடியால் வையத்தார்
உள்ளுவ எல்லாம் அளந்தார் ஓர்ந்து
கருத்துரை
இப்பாடலில் வள்ளுவப்பெருமானைக் காக்குங்கடவுளாகிய திருமால் எனக்கூறுகின்றார் பரணர். திருமால் வாமனாவதாரத்தில், திரிவிக்கிரமாவதாரத்தில் குறளனாய்த் தோன்றிப் பின் வளர்ந்து தன்னுடைய திருவடிகள் இரண்டால், இந்த உலகம் எல்லாவற்றையும் அளந்தான். அதேபோல் வள்ளுவரும் தன்னுடைய மெய்யறிவினால், தம் குறள்வெண்பா அடிகள் இரண்டைக்கொண்டு இந்த உலகத்தாரால் நினைக்கப் பட்டவற்றையெல்லாம் ஆராய்ந்து அளந்தார்; அதாவது அதுபற்றித்தெளிவான கருத்தை விளக்கமாகக் கூறியருளினார் என்பதாம்.

இங்கு வள்ளுவப்பெருமானைக் காக்கும் கடவுளாகிய திருமால் என்றும், அவரை அவதாரம் என்றும் கூறுகின்றார்.

07. நக்கீரர்[தொகு]

தானே முழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளா
லானா வறமுதலா வந்நான்கு- மேனோர்க்
கூழி னுரைத்தாற்கு மொண்ணீர் முகிலுக்கும்
வாழியுல கென்னாற்று மற்று (07)
தானே முழுதுணர்ந்து தண்தமிழின் வெண்குறளால்
ஆனா அறம்முதலா அந்நான்கும் - ஏனோர்க்கு
ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
வாழிஉலகு என்ஆற்றும் மற்று
(தண்=குளிர்ச்சி; வெண்குறள்=குறள்வெண்பா; ஆனா=நீங்காத/விட்டுப் பிரியாத; நான்கு= அறம் பொருள் இன்பம் வீடு; ஏனோர்=அறியாத பிறர்; ஊழ்=முறை; ஒண்ணீர்= ஒள்ளிய நீரை; முகில்= மேகம்; என்ஆற்றும்= என்ன செய்யும், பிரதியுபகாரமாக.)

கருத்துரை:
தாமே எல்லாவற்றையும் அறிந்து, குளிர்ந்த தமிழால் ஆன குறள் வெண்பாவினால் நீங்காத அறம் முதலான நான்கினையும்- அதாவது, அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கினையும்- அதனை அறியாதார்க்கு முறையாக உரைத்த வள்ளுவப் பேராசானுக்கும், உயிர்காக்கும் நீரை மழையாகப் பொழியும் மேகத்திற்கும் இந்த உலகம் என்ன கைம்மாறினைச் செய்யமுடியும், எதுவும் செய்ய முடியாது. ஆகையால், அவரும் அம்மேகமும் இந்த உலகும் வாழ்க எனவாழ்த்தி வணங்குவோம்!

08. மாமூலனார்[தொகு]

அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின்
றிறந்தெரிந்து செப்பிய தேவை- மறந்தேயும்
வள்ளுவ னென்பானோர் பேதை யவன்வாய்ச்சொற்
கொள்ளா ரறிவுடை யார். (08)
பதப்பிரிப்பு
அறம் பொருள் இன்பம் வீடு என்னும் அந்நான்கின்
திறம் தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும்
வள்ளுவன் என்பான் ஓர்பேதை அவன் வாய்ச்சொல்
கொள்ளார் அறிவுடையார்

கருத்துரை:
அறம் பொருள் இன்பம் வீடு என்னும் அந்த நான்கு உறுதிப்பொருள்களின் தன்மையைத் தெரிந்து தெளிவாகச் சொல்லியருளிய தெய்வத்தை, மறந்துபோயாகிலும் அவரை மனிதனாகக் கருதி, வள்ளுவன் என்று கூறினால் அவ்வாறு கூறுபவன் ஒரு பேதை (முட்டாள்) ஆவான். அறிவுடையார் அவன் கூற்றை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். (வள்ளுவர் தெய்வப்பிறவி கீதை உரைத்த 'கண்ணன்' போன்று ஓர்அவதாரம்! மூடர்கள் வேண்டுமானால் அவரை 'மனிதன்' என்று பெயரிட்டு அழைக்கலாம் என்பது கருத்து.)

09. கல்லாடர்[தொகு]

ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனி
னன்றென்ப வாறு சமயத்தார் - நன்றென
வெப்பா லவரு மியைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி (௯)

 

ஒன்றே பொருள் எனின் வேறு என்ப வேறு எனின்
நன்று என்ப ஆறு சமயத்தார் - நன்று என
எப்பாலவரும் இயைபவே வள்ளுவனார்
முப்பால் பொழிந்த மொழி. (09)

'கருத்துரை:
உலகில் உள்ளவை ஆறு சமயங்கள். அவ்வறுவகை மதத்தினரும், பொருள் ஒன்று என ஒருவர் கூறினால், மற்றொருவர் அதனை மறுத்து, ஒன்று இல்லை வேறு என்று கூறுவார்கள். பிறிதொருவர் வேறு என்று கூறினால், இல்லை அதுவன்று என்பார்கள்! இவ்வாறு தாம் கூறும் கருத்தில் ஒருவரோடு ஒருவர் முரண்பட்டு நிற்பர் ஆறுவகைச்சமயத்தார். ஆனால், எவ்வகைச் சமயத்தாரும் வள்ளுவனார் முப்பாலில் மொழிந்தவற்றை, முரண்படாமல், நன்று என மனமிசைந்து ஒத்துக்கொள்வார்கள். அப்படிப்பட்ட சிறப்புடையது அருங்குறள் என்பதாம். அதாவது, அனைத்துச் சமயத்தினரும் ஏற்றுப் போற்றுவது திருக்குறள் என்பதாம்.

10. சீத்தலைச் சாத்தனார்[தொகு]

மும்மலையு முந்நாடு முந்நதியு முப்பதியு
மும்முரசு முத்தமிழு முக்கொடியு - மும்மாவுந்
தாமுடைய மன்னர் தடமுடிமேற் றாரன்றோ
பாமுறைதேர் வள்ளுவர்முப் பால். (௰)

 

மும் மலையும் முந் நாடும் முந் ்நதியும் முப் பதியும்
மும் முரசும் முத் தமிழும் முக் கொடியும் - மும் மாவும்
தாம் உடைய மன்னர் தட முடி மேல் தார் அன்றோ
பா முறை தேர் வள்ளுவர் முப் பால். (10)

கருத்துரை:
சேர, சோழ, பாண்டியர்கள் மூன்று மலைகளைக் கொண்டவர்கள். (அவை சேரனுக்குக் கொல்லிமலையும், சோழனுக்கு நேரிமலையும், பாண்டியனுக்குப் பொதிகை மலையும் ஆம்) அவர்கள் முந்நாடு உடையவர்கள். (சேரனுக்குச்சேரநாடு சோழனுக்குச் சோணாடு, பாண்டியனுக்குப் பாண்டிநாடு) அவர்கள் மூன்று ஆறு உடையவர்கள்.(சேரனது ஆன்பொருநை, சோழனது காவிரி, பாண்டியனது வையை). அவர்கள் மூன்று தலைநகரங்கள் கொண்டவர்கள். சேரருக்குக் கருவூராம் வஞ்சி, சோழருக்கு உறையூர், பாண்டியருக்கு மதுரை) அவர்கள் மூன்று முரசுகளை உடையவர்கள்.(அவை மங்கல முரசு, வெற்றி முரசு, கொடை முரசு). அவர்கள் மூன்று தமிழ் உடையவர்கள். (அவை இயல் இசை நாடகம் என்பனவாம்.) அவர்கள் முக்கொடி உடையவர்கள் (சேரனுக்கு விற்கொடி, சோழனுக்குப் புலிக்கொடி, பாண்டியருக்கு மீன் கொடி). அவர்கள் மூன்று குதிரைகள் கொண்டவர்கள். (சேரனின் குதிரை, கனவட்டம், சோழனின் புரவி, பாடலம், பாண்டியர் பரி, கோரம் என்பனவாம்). இத்தகைய சிறப்புகளைக் கொண்ட(மும்மலை, முந்நாடு, முந்நதி, முப்பதி, மும்முரசு, முத்தமிழ், முக்கொடி, மும்மா) சேர சோழ பாண்டியர் ஆகிய மூன்று மன்னர்களின் பெருமை மிக்கமுடிமேல் அணிகின்ற மாலை எது தெரியுமா? அதுதான் மூன்று பால்களையுடைய(அறம், பொருள், காமம்) திருக்குறள் எனும் தமிழ்ப் பாமாலை என்கின்றார், மூன்றுமன்னர்களையும் நன்குஅறிந்த சீத்தலைச் சாத்தனார்.

11. மருத்துவன் தாமோதரனார்[தொகு]

சீந்திநீர்க் கண்டம் தெறிசுக்குத் தேன்அளாய்
மோந்தபின் யார்க்கும் தலைக்குத்தில் - காந்தி
மலைக்குத்தும் மால்யானை வள்ளுவர் முப்பாலால்
தலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு (11)

கருத்துரை:
தன்பகை எனக்கோபித்து வெகு்ண்டு, மலையைக் குத்துகின்ற பெரிய களிறு போலுள்ள மன்னனே! சீந்திநீர்ச் சருக்கரையையும் சிதைக்கப்பட்ட சுக்கையும், தேனோடு கலந்து மோந்தபின்னால், தலைக்குத்து அதாவது தலைவலி உடையோர் யாராயினும் அவர்க்குத் தலைவலி தீர்ந்து போகும். திருவள்ளுவர் அருளிய திருக்குறளினாலே சீத்தலைச் சாத்தனார்க்குத் தலைக்குத்து/ தலைவலி தீர்ந்து போனது அதாவது இல்லாமல் போயிற்று.

12. நாகன் தேவனார்[தொகு]

தாளார் மலர்ப்பொய்கை தாம்குடைவார் தண்ணீரை
வேளாது ஒழிதல் வியப்பன்று - வாளாதாம்
அப்பால் ஒருபாவை ஆய்பவோ வள்ளுவனார்'
முப்பால் மொழிமூழ்கு வார் (12)

கருத்துரை:
நாளம் எனப்படும் தண்டோடு பொருந்திய தாமரைமலர்களை உடைய பொய்கையில்/ குளத்தில் மூழ்கி நீராடுவார் வேறு தண்ணீரை விரும்பாது போதல் வியப்பன்று/ஆச்சரியமன்று. அதுபோல வள்ளுவனாரின் முப்பால் எனும் திருக்குறள் நூலில் தோய்ந்தவர்/ மூழ்கியவர் அதற்கு அப்பால் வேறொரு பாவினை/ பாட்டை விரும்புவார்களா? விரும்ப மாட்டார்கள். இதுவே உண்மையில் வியப்பைத்தருவதாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

அரிசில்கிழார்[தொகு]

பரந்த பொருள் எல்லாம் பாரறிய வேறு
தெரிந்து திறந்தொறும் சேரச் - சுருங்கிய
சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல்
வல்லார்ஆர் வள்ளுவர்அல் லால் (13)

கருத்துரை: (பொ--ரை.) விரிவுபட்டுக் கிடக்கும் வெவ்வேறு பொருள்களையெல்லாம் ஒழுங்காகக் கூறுபடுத்திச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலில் வள்ளுவரன்றி வேறு யார்?

பொன்முடியார்[தொகு]

கான்நின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன்
கூநின்று அளந்த குறளென்ப - நூல்முறையான்
வான்நின்று மண்ணின்று அளந்ததே வள்ளுவனார்
தாம்நின்று அளந்த குறள் (14)

கருத்துரை: மாலையணிந்த அரசே! முன்பு காசிபன் தந்த குறள் மண்ணில் நின்று உலகத்தை அளந்தது; இன்று திருவள்ளுவர் தந்த குறள் மண்ணிலும் விண்ணிலும் நின்று உலகத்தையளந்தது.

கோதமனார்[தொகு]

ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி யுரைத்துஏட்டின் புறத்தெழுதார் - ஏட்டெழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று (15)

கருத்துரை:பிராமணர் நால்வேதங்களையும் ஏட்டில் எழுதினால் அவற்றின் வலிமை கெடுமென்று வாய்ப் பாடமாகவே சொல்லிக் காத்துவருவர்; திருவள்ளுவரின் திருக்குறளையோ ஏட்டிலெழுதினாலும் எவர் படித்தாலும் அதன் வலிமை குறைவதில்லை.

பிராமணர் ஆரிய வேதங்களை ஏட்டிலெழுதாதிருந்தமைக்குக் கரணியங்கள்--

1. ஏட்டிலெழுதினால் அவற்றின் வெள்ளைக் கோட்டியும் பிள்ளைக் கருத்தும் வெளியாகிவிடுமென்னும் அச்சம்.

2. ஏட்டிலெழுதினால் எல்லாருங் கற்றுப் பூசாரித்தொழிலை மேற்கொண்டு பிராமணர்க்குப் பிழைப்பில்லாது செய்து விடுவாரென்னும் அச்சம்.

3. ஏட்டிலெழுதாதிருந்தால் மேன்மேலுங் காலத்திற்கேற்ற திருந்திய கருத்துக்களைச் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்புண்மை.

நத்தத்தனார்[தொகு]

ஆயிரத்து முன்னூற்று முப்பது அருங்குறளும்
பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின் - போயொருத்தர்
வாய்கேட்க நூலுளவோ மன்னுதமிழ்ப் புலவ
ராய்க்கேட்க வீற்றிருக்க லாம் (16)

கருத்துரை:  ஒருவர் திருக்குறள் முழுவதையுங் கற்றபின், பிறருக்கு ஆசிரியராகிக் கற்பிக்கலாம். ஆனால், ஒருவரிடம் மாணவரா யமர்ந்து கற்க நூலில்லை.

முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்[தொகு]

உள்ளுதல் உள்ளி உரைத்தல் உரைத்ததனைத்
தெள்ளுதல் அன்றே செயற்பால - வள்ளுவனார்
முப்பாலின் மிக்க மொழியுண்டு எனப்பகர்வார்
எப்பா வலரினும் இல் (17)

கருத்துரை:  திருக்குறளினுஞ் சிறந்தநூல் ஒன்றுண்டென்று எப்புலவருஞ் சொல்லார். ஆதலால் நாம் செய்யவேண்டியது அதை யுள்ளஞ்செறாது உரைத்துத் தெளிதலே.

ஆசிரியர் நல்லந்துவனார்[தொகு]

சாற்றிய பல்கலையும் தப்பா அருமறையும்
போற்றி உரைத்த பொருள் எல்லாம் - தோற்றவே
முப்பால் மொழிந்த முதற்பா வலரொப்பார்
எப்பா வலரினும் இல் (18)

கருத்துரை: எல்லாக் கலைநூற்பொருள்களையும் எடுத்துக்கூறும் திருக்குறளை யியற்றிய, திருவள்ளுவரை யொத்த புலவர் ஒருவருமில்லை.

கீரந்தையார்[தொகு]

தப்பா முதற்பாவால் தாம்மாண்ட பாடலினால்
முப்பாலின் நாற்பால் மொழிந்தவர் - எப்பாலும்
வைவைத்த கூர்வேல் வழுதி மனம்மகிழத்
தெய்வத் திருவள் ளுவர் (19)

கருத்துரை: பாண்டியன் மனமகிழ நாற்பொருளையும் முப்பாலிற் குறள் வெண்பாவாற் கூறியவர் தெய்வப் புலமைத் திருவள்ளுவரே.

சிறுமேதாவியார்[தொகு]

வீடொன்று பாயிரம் நான்கு விளங்கறம்
நாடிய முப்பத்துமூன்று ஒன்றூழ் - கூடுபொருள்
எள்ளில் எழுபது இருபதிற்றைந் தின்பம்
வள்ளுவர் சொன்ன வகை (20)

கருத்துரை: திருக்குறள் அதிகாரத்தொகை:பாயிரம் நான்கு; அறத்துப்பால் முப்பத்து மூன்று; ஊழ் ஒன்று; பொருட்பால் எழுபது; இன்பத்துப்பால் இருபத்தைந்து.

நல்கூர் வேள்வியார்[தொகு]

உப்பக்கம் நோக்கி உபகேசி தோள் மணந்தான்
உத்தர மாமதுரைக்கு அச்சென்ப - இப்பக்கம்
மாதானுபங்கி மறுவுஇல் புலச்செந்நாப்
போதார் புனற்கூடற்கு அச்சு 921)

கருத்துரை: வட மதுரைக்குக் கண்ணனை நிலைக்களமாகக் கூறுவர்; வைகை மதுரையான தென்மதுரைக்குத் திருவள்ளுவர் நிலைக்களமாவார்.

தொடித்தலை விழுத்தண்டினார்[தொகு]

அறம்நான்கு அறிபொருள் ஏழொன்று காமத்
திறம்மூன்று எனப்பகுதி செய்து - பெறல்அறிய
நாலும் மொழிந்தபெரு நாவலரே நன்குணர்வார்
போலும் ஒழிந்த பொருள் 922)

கருத்துரை: அறத்தைப் பாயிரம், இல்லறம், துறவறம், ஊழ் என நான்காகவும், பொருளை அரசு. அமைச்சு, அரண், கூழ், படை, நட்பு, குடி என ஏழாகவும், இன்பத்தை ஆண்பாற் கூற்று, பெண்பாற்கூற்று, இருபாற்கூற்று என மூன்றாகவும் வகுத்து, நாற்பொருளையுங் கூறிய திருவள்ளுவரே வேருபொருளிருப்பினும் அதையறிவார் போலும்!

நாடு அரணுள் அடக்கப்பட்டது.

வெள்ளி வீதியார்[தொகு]

செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருள்ஒன்றே - செய்யா
அதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனை
இதற்குரியர் அல்லாதார் இல் (23)

கருத்துரை:ஒருவராலும் இயற்றப் படாத வேதமும் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளும் கூறும் பொருள் ஒன்றே. இவற்றுள் முன்னது பிராமணர்க்கே யுரியது; பின்னதோ எல்லார்க்கும் பொதுவாம்.

குறிப்பு.-ஆரிய வேதத்தைச் செய்யாமொழி யென்றது ஒரு துணிச்சல் மிக்க ஏமாற்று. அதற்கும் திருக்குறட்கும் பொருள்ஒன்றே யென்றது நெஞ்சழுத்தம் மிக்க பொய். இவற்றை நம்பிய புலவரோ தமிழகத்தைக் கெடுத்த தசைப்பிண்டங்கள். திருக்குறளைப் பொய்யாமொழி யென்றமையின், வேதம் பொய்மொழியென்பது எதிர் நிலை யளவையாற் பெறப்படும்.

ஓதற்கு எளிதாய் உணர்தற்கு அரிதாகிமாங்குடி மருதனார்[தொகு]

வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றோர்
உள்ளுதொறு உள்ளுதொறு உள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு (24)

கருத்துரை: திருவள்ளுவரின் திருவாய்மொழி, படிப்பதற் கெளிதாயும் பொருளுணர்தற் கரிதாயுமுள்ள மந்திரநூலாக விளங்கி, தூயவறிஞர் நினைக்குந்தோறும் அவருள்ளத்தை யுருக்கும்.

எறிச்சலூர் மலாடனார்[தொகு]

பாயிரம் நான்குஇல் லறம்இருபான் பன்மூன்றே
தூய துறவறம்ஒன் றுஊழாக - ஆய
அறத்துப்பால் நால்வகையா ஆய்ந்துரைத்தார் நூலின்
திறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து (25)
திருவள்ளுவர் நன்றாக ஆய்ந்து பாயிரம் நான்கதி காரமும் இல்லறவியல் இருபததிகாரமும் துறவறவியல் பதின்மூன்றதிகாரமும் ஊழ் ஓரதிகாரமுமாக, அறத்துப்பாலை நால்வகையாக வகுத்துரைத்தார்.

போத்தியார்[தொகு]

அரசியல் ஐயைந்து அமைச்சியல் ஈரைந்து
உருவல் அரண்இரண்டு ஒன்றுஒண்கூழ் - இருவியல்
திண்படை நட்புப் பதினேழ்குடி பதின்மூன்று
எண்பொருள் ஏழாம் இவை
திருக்குறளின் பொருட்பால், அரசியல் இருபத்தைந் ததிகாரமும், அமைச்சியல் பத்ததிகாரமும், அரணியல் ஈரதிகாரமும் பொருளியல் ஓரதிகாரமும், படையியல் ஈரதிகாரமும் நட்பியல் பதினேழதிகாரமும்; குடியியல் பதின்மூன்றதிகாரமுமாக ஏழுபகுதிகளையுடையதாம்.

மோசிகீரனார்[தொகு]

ஆண்பால் ஏழ்ஆ றிரண்டுபெண்பால் அடுத்தன்பு
பூண்பால் இருபால்ஓர் ஆறாக - மாண்பாய
காமத்தின் பக்கம்ஒரு மூன்றாகக் கட்டுரைத்தார்
நாமத்தின் வள்ளுவனார் நன்கு
திருவள்ளுவர் ஆண்பாற்கூற்று ஏழதிகாரமும் பெண்பாற் கூற்றுப் பன்னீரதிகாரமும் இருபாற் கூற்று ஆறதிகாரமுமாக, இன்பத்துப்பாலை மூன்றாக வகுத்துரைத்தார். 


-- Edited by admin on Monday 20th of April 2020 11:00:18 AM

__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

 காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்[தொகு]

ஐயாரும் நூறும் அதிகாரம் மூன்றுமாம்
மெய்யாய வேதப் பொருள்விளங்கப் - பொய்யாது
தந்தான் உலகிற்குத் தான்வள் ளுவனாகி
அந்தாமரை மேல் அயன்
நான்முகன் திருவள்ளுவனாகி வடமொழி வேதப் பொருளைத் தமிழில் 133 அதிகாரமாக விளக்கிக் கூறினான்.

மதுரைத் தமிழ்நாகனார்[தொகு]

எல்லாப் பொருளும் இதன்பால்உள இதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால் - சொல்லால்
பரந்த பாவால் என்பயன் வள்ளுவனார்
சுரந்தபா வையத் துணை
எல்லாப் பொருளும் இதன்கண் உள. இதில் இல்லாத பொருள் ஒன்றுமில்லை. ஆதலால், உலகத்தார்க்கு இவ்வொரு நூலே போதுமானதாம்.

பாரதம் பாடிய பெருந்தேவனார்[தொகு]

எப்பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச்
செப்பிய வள்ளுவர்தாம் செப்பவரும் - முப்பாற்குப்
பாரதஞ் சீராம கதைமனுப் பண்டைமறை
நேர்வனமற் றில்லை நிகர்
எல்லாப்பொருளையும் எல்லாரும் உள்ளவாறறியுமாறு திருவள்ளுவர் இயற்றிய திருக்குறட்குப், பாரதம், இராமாயணம் மனுதருமசாத்திரம், நால் வேதம் ஆகிய நான்கே ஒப்பாம்.

உருத்திர சன்மகண்ணர்[தொகு]

மணற்கிளைக்க நீர்ஊறும் மைந்தர்கள் வாய்வைத்து
உணச்சுரக்கும் தாய்முலை ஒண்பால் - பிணக்குஇலா
வாய்மொழி வள்ளுவர் முப்பால்மதிப் புலவோர்க்கு
ஆய்தொறும் ஊறும் அறிவு
நீர்நிலை யடுத்த மணலைத் தோண்டுந்தோறும் நீரூறும். குழந்தை வாய்வைத் துறிஞ்சுந்தோறும் தாய்முலை சுரக்கும். அவைபோல், திருக்குறளை ஆராயுந்தோறும் அறிவு பெருகும்.

பெருஞ்சித்திரனார்[தொகு]

ஏதம்இல் வள்ளுவர் இன்குறள் வெண்பாவினால்
ஓதிய ஒண்பொருள் எல்லாம் உரைத்ததனால்
தாதுஅவிழ் தார்மாற தாமே தமைப்பயந்த
வேதமே மேதக் கன
மாலையணிந்த பாண்டிய வேந்தே! திருவள்ளுவர் வேதங்களின் சிறந்தபொருளை யெல்லாம் குறள்வெண்பாவாற் கூறிவிட்டமையால், இவற்றுள் எவை மேம்பட்டவை?

நரிவெரூஉத் தலையார்[தொகு]

இன்பம் பொருள்அறம் வீடுஎன்னும் இந்நான்கும்
முன்பு அறியச்சொன்ன முதுமொழிநூல் - மன்பதைகட்கு
உள்ள அரிதென்று அவைவள் ளுவர்உலகம்
கொள்ள மொழிந்தார் குறள்
நாற்பொருளையும் மக்கட்கு அறிவிக்கும்படி இயற்றப்பட்ட நால் வேதங்கள் அவரால் உணர்தற்கு அரியதாயிருந்ததனால், அவற்றை யெளிதா யுணருமாறு திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.

மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்க் கிழார்[தொகு]

புலவர் திருவள்ளுவர் அன்றிப் பூமேல்
சிலவர் புலவர் எனச்செப்பல் - நிலவு
பிறங்குஒளி மாமலைக்கும் பெயர்மாலை மற்றும்
கறங்குஇருள் மாலைக்கும் பெயர்
திருவள்ளுவரையும் பிற புலவரையும் புலவரென்று சமமாகச் சொல்லுதல், முழுமதி மாலையையும் காருவா அமாவாசை மாலையையும் மாலையென்றே ஒரே சொல்லாற் குறிப்பது போலும்.

மதுரை அறுவைவணிகன் இளவேட்டனார்[தொகு]

இன்பமும் துன்பமும் என்னும் இவைஇரண்டும்
மன்பதைக்கு எல்லாம் மனம்மகிழ - அன்பொழியாது
உள்ளி உணர உரைத்தாரே ஓதுசீர்
வள்ளுவர் வாயுறை வாழ்த்து

மக்களெல்லாரும் தமக்கு வரும் இன்பதுன்பக்கரணியங்களை யறிந்து துன்பத்தினின்று தப்பி யின்புறும்பொருட்டு, திருவள்ளுவர் திருக்குறளை வாயுறை வாழ்த்தாகப்பாடினார்.  வாயுறை வாழ்த்தாவது, முன்பு வெறுப்பை விளைப்பினும் பின்பு நலம் பயக்கும் நன் மருந்துபோற் பயன்படும் அறிவுரை வாயுறுத்தும் மருந்து.

கவிசாகரப் பெருந்தேவனார்[தொகு]

பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புநதம்
ஆவிற்கு அருமுனியா ஆனைக்கு அகரும்பல்
தேவில் திருமால் எனச்சிறந்த தென்பவே
பாவிற்கு வள்ளுவர்வெண் பா
பூவிற்குத் தாமரையும், பொன்னிற்கு நாவற் சாறமும், ஆவிற்குக் காமதேனுவும் யானைக்கு ஐராவதமும், தேவிற்குத் திருமாலும், நூலிற்குத் திருக்குறளும் சிறந்தனவாம்.

மதுரைப்பெருமருதனார்[தொகு]

அறம்முப்பத் தெட்டு பொருள்எழுபது இன்பத்
திறம்இருபத் தைந்தால் தெளிய - முறைமையால்
வேதவிழுப் பொருளை வெண்குறளால் வள்ளுவனார்
ஓதஅழக் கற்றது உலகு
திருவள்ளுவர், அறத்தை முப்பத்தெட் டதிகாரங்களாகவும் பொருளை எழுபததிகாரங்களாகவும் இன்பத்தை இருபத்தைந் ததிகாரங்களாகவும் வகுத்து, வேதப் பொருளைக் குறள் வெண்பாவாற் கோவைபடக் கூறியதால், உலகம் தீயொழுக்கத்தினின்றும் தீர்ந்தது.

கோவூர்க் கிழார்[தொகு]

அறம்முதல் நான்கும் அகலிடத்தோர் எல்லாம்
திறமுறத் தேர்ந்து தெளியக் - குறள்வெண்பாப்
பன்னிய வள்ளுவனார் பால்முறைநேர் ஒவ்வாதே
முன்னை முதுவோர் மொழி
நாற்பொருளையும் மக்கள் ஆய்ந்து தெளிதற்பொருட்டுத் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறட்கு முந்துநூல் ஒன்றும் நிகராகாது.

உறையூர் முதுகூற்றனார்[தொகு]

தேவிற் சிறந்ததிரு வள்ளுவர் குறள்வெண்
பாவிற் சிறந்திடும்முப் பால்பகரார் - நாவிற்கு
உயலில்லை சொற்சுவை ஓர்வில்லை மற்றும்
செயலில்லை என்னும் திரு

தெய்வப் புலமைத் திருவள்ளுவரின் திருக்குறளை ஓதாதவரின் நாவிற்கு இன்சொற் சொலவில்லை; உடம்பிற்கு நல்வினையில்லை என்று கருதித் திருமகள் அவரிடஞ் சேரான்.

இழிகண் பெருங்கண்ணனார்[தொகு]

இம்மை மறுமை இரண்டும் எழுமைக்கும்
செம்மை நெறியின் தெளிவுபெற - மும்மையின்
வீடவற்றின் நான்கின் விதிவழங்க வள்ளுவனார்
பாடினர் இன்குறள்வெண் பா
இம்மை மறுமைக்கும் எழுபிறப்பிற்கும் பயன்படவும் நாற்பொருளும் நடைபெறவும், திருவள்ளுவர் திருக்குறளியற்றினர்.

செயிர்க் காவிரியார் மகனார் சாத்தனார்[தொகு]

ஆவனவும் ஆகாதனவும் அறிவுடையார்
யாவரும் வல்லார் எடுத்தியம்பத் - தேவர்
திருவள்ளுவர் தாமும் செப்பியவே செய்வார்
பொருவில் ஒழுக்கம் பூண்டார்
மக்களுக்கு வேண்டியவற்றையும் வேண்டாத வற்றையும் அறிஞரும் எடுத்துச் சொல்லுமாறு, திருவள்ளுவர் இயற்றிய திருக்குறட் கூற்றுக்களையே, ஒழுக்கத்தில் உயர்ந்தோர் கடைப்பிடிப்பர்.


__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார்[தொகு]

வேதப்பொருளை விரகால் விரித்துலகோர்
ஓதத் தமிழால் உரைசெய்தார் - ஆதலால்
உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு
திருவள்ளுவர் ஆரிய வேதப்பொருளைத் தமிழுலகம் அறிதற்பொருட்டுத் தமிழில் விரித்துரைத்தார். ஆதலால், திருக்குறளில் மக்கள் கருதும்பொருள்களெல்லாம் உள்ளன.

வண்ணக்கஞ் சாத்தனார்[தொகு]

ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனினிது
சீரியது என்றொன்றைச் செப்பரிதால் - ஆரியம்
வேதம் உடைத்து தமிழ்திரு வள்ளுவனார்
ஓதுகுறட் பாஉடைத் து
வடமொழியையும் தென்மொழியையும் ஒப்பு நோக்கி இது சிறந்தது என்று ஒன்றைச் சொல்ல முடியாது. வடமொழியில் வேதமுள்ளது; தென்மொழியில் திருக்குறள் உள்ளது. ஆதலால், இரண்டும் சமமே.

களத்தூர்க் கிழார்[தொகு]

ஒருவர் இருகுறளே முப்பாலின் ஓதும்
தருமம் முதல்நான்கும் சாலும் - அருமறைகள்
ஐந்தும் சமயநூல் ஆறும்நம் வள்ளுவனார்
புந்தி மொழிந்த பொருள்
இருக்குமுதல் பாரதம் ஈறான வேதங்கள் ஐந்தும் வேதவழிப்பட்ட சாத்திரங்கள் ஆறும், திருவள்ளுவர் நூலிலடங்கும்; ஆதலால் ஒருவர் உய்வதற்கு, ஓரெதுகையும் ஈரெதுகையுமாகிய இருவகைக் குறளாலு மமைந்த முப்பாலிற் சொல்லப்பட்ட நாற்பொருளையும் அறிந்தாற் போதும்.

நச்சுமனார்[தொகு]

எழுத்துஅசை சீரடி சொற்பொருள் யாப்பு
வழுக்கில் வனப்பு அணிவண்ணம் - இழுக்கின்றி
என்றெவர் செய்தன எல்லாம் இயம்பின
இன்றிவர் இன்குறள்வெண் பா
எழுத்து முதல் வண்ணம் ஈறாகச் சொல்லப்பட்ட எல்லாம் அழகாக எவ்வெக்காலத்தில் எவ்வெவராற் சொல்லப்பட்டனவோ, அவையெல்லாம் இக்காலத்து இத்திருவள்ளுவரால் இயற்றப்பட்ட இனிய குறள் வெண்பாக்களிற் சொல்லப்பட்டுள்ளன.

அக்காரக்கனி நச்சுமனார்[தொகு]

கலைநிரம்பிக் காண்டற்கு இனிதாகிக் கண்ணின்
நிலைநிரம்பும் நீர்மைய தேனும் - தொலைவுஇலா
வான்ஊர் மதியம் தனக்குண்டோ வள்ளுவர்முப்
பால்நூல் நயத்தின் பயன்
மதியமும் முழுமதியும் முப்பால் நூலும் முறையே பதினாறுகலைகளாலும் அறுபத்துநான்கு கலைகளாலும் நிறைந்து காண்பதற்கும் ஆராய்தற்கும் இனிதாகி, புறக் கண்ணிற்குத் தண்மையும் அகக்கண்ணிற்குப் பண்பும் உடைத்தாயினும், முப்பால் நூலால் விளையும் பயன் மதியினிடத்துண்டோ?

நப்பாலத்தனார்[தொகு]

அறம்தகளி ஆன்ற பொருள்திரி இன்பு
சிறந்தநெய் செஞ்சொல் தீதண்டு - குறும்பாவா
வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள்
உள்ளிருள் நீக்கும் விளக்கு
திருவள்ளுவர் அறத்தை அகலாகவும், பொருளைத் திரியாகவும் இன்பத்தை நெய்யாகவும், சொல்லை நெருப்பாகவும், குறட்பாவைத் தண்டாகவும் கொண்டு, உலகத்தோரின் அகவிருளை நீக்கும் விளக்கேற்றினார்.

குலபதி நயனார்[தொகு]

உள்ளக் கமலம் மலர்த்தி உளத்துஉள்ள
தள்ளற்கு அரிய இருள் தள்ளுதலால் - வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பாவும் வெங்கதிரும் ஒக்கும்எனக்
கொள்ளத் தகுங்குணத்தைக் கொண்டு
நெஞ்சத் தாமரையை விரியச் செய்து அகவிருளை நீக்குந் திருக்குறளும், நீர்த்தாமரையை விரியச் செய்து புறவிருளை நீக்கும் கதிரவனும், குணத்தால் ஒக்குமென்று கொள்ளத்தகும்.

தேனிக்குடிக் கீரனார்[தொகு]

பொய்ப்பால பொய்யேயாய்ப் போயின பொய்அல்லா
மெயப்பால மெய்யாய் விளங்கினவே - முப்பாலின்
தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால்
வையத்து வாழ்வார் மனத்து
தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரின் திருக்குறளைக் கற்று அல்லது கேட்டு அறிந்ததனால், மக்கள் மனத்தில் மெய்த் தன்மையான வெல்லாம் மெய்யாகவும் பொய்த்தன்மையான வெல்லாம் பொய்யாகவும் விளங்கிவிட்டன.

கொடிஞாழல் மாணிபூதனார்[தொகு]

அறனறிந்தேம் ஆன்ற பொருளறிந்தேம் இன்பின்
திறன்தெரிந்தேம் வீடு தெளிந்தேம் - மறன்எறிந்த
வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயால்
கேளா தனவெல்லாம் கேட்டு
பகைவென்ற பாண்டிய! திருவள்ளுவர் வாயினின்று, இதற்குமுன் கேட்டிராதவையெல்லாம் கேட்டு நாற்பொருளின் இயல்பையும் நன்றாய் அறிந்தேம்.

கவுணியனார்[தொகு]

சிந்தைக்கு இனிய செவிக்கினிய வாய்க்கினிய
வந்த இருவினைக்கு மாமருந்து - முந்திய
நன்நெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார்
பன்னிய இன்குறள்வெண் பா
நாம் நல்லொழுக்க வழியை அறிதற்பொருட்டுப் புலமை மிக்க திருவள்ளுவர் இயற்றிய இனிய குறள்வெண்பாக்கள் ஆராய்ந்தால் மனத்திற்கும் கேட்டாற் செவிக்கும் ஓதினால் நாவிற்கும் இன்பந்தருவன; தொன்றுதொட்டு வரும் இருவினைகளாகிய நோய்கட்குச் சிறந்த மருந்தாவன.

மதுரைப் பாலாசிரியனார்[தொகு]

வெள்ளி வியாழம் விளங்குஇரவி வெண்திங்கள்
பொள்என நீக்கும் புறஇருளை - தெள்ளிய
வள்ளுவர் இன்குறள் வெண்பா அகிலத்தோர்
உள்இருள் நீக்கும் ஒளி
வெள்ளி வியாழன் கதிரவன் திங்கள் என்பன புறவிருளை நீக்கும் ஒளிகளாம். அவைபோலத் திருவள்ளுவரின் இனிய குறள் வெண்பா அகவிருள் நீக்கும் ஒளியாம்.

ஆலங்குடி வங்கனார்[தொகு]

வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்கும்
தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாதால் - தெள்ளமுதம்
உண்டறிவார் தேவர் உலகடைய உண்ணுமால்
வண்தமிழின் முப்பால் மகிழ்ந்து
திருவள்ளுவர் பாட்டின் தீஞ்சுவைக்குத் தெள்ளமுதமும் ஒவ்வாது. தெள்ளமுதைத் தேவர் மட்டும் உண்டு சுவைப்பர்; முப்பாலமுதையோ உலகத்தாரனைவரும் உண்டு சுவைப்பர்.

இடைக்காடர்[தொகு]

கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்
திருக்குறளின் சொற்சுருக்கமும் பொருட்பெருக்கமும் நோக்கின், ஒவ்வொரு குறளும், கடுகின் நடுவில் துளைசெய்து அதில் எழுகடல் நீரையும் பாய்ச்சி, மேலும் அது அளவிற் குறுகும் வண்ணம் சற்றுத் தறித்துவைத்தாற் போன்றதாம்.

அவ்வையார்[தொகு]

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்

திருக்குறளின் சொற்சுருக்கத்தையும் பொருட்பெருக்கத்தையும் நோக்கின், ஒவ்வொரு குறளும், கடுகினும் மிக நுண்ணிய அணுவைத் துளையிட்டு அதில் எழுகடல் நீரையும் பாய்ச்சி, மேலும் அது அளவிற் குறுகும் வண்ணம் சற்றுத் தறித்து வைத்தாற் போன்றதாம்.

குறிப்புகள்:

(1) இத் திருவள்ளுவ மாலை கடைக்கழகப் புலவரால் பாடப் பட்டதன்றாயினும் பலபாக்களிலுள்ள கருத்துக்கள் சிறந்தனவும் நடுநிலையானவும் மேற்கோளாக ஆளத்தக்கனவுமாக உள்ளன.

(2) சில பாக்கள் அவற்றைப் பாடியவரின் அளவிறந்த ஆரிய வெறியையோ அடிமைத் தனத்தையோ காட்டுவனவாக வுள்ளன.

(3) சிலபாக்கள் அளவிறந்த உயர்வுநவிற்சியாகவுள்ளன.

(4) சிலபாக்கள் நூலின் பாகுபாட்டையே எடுத்துக்கூறுவன.

(திருவள்ளுவமாலை நிறைவு)



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத் திறன்கள் – பகுதி 1

 

 

முப்பாலுக்[குஒப்புநூல்எப்பாலும்இல்லையால்,

       அப்பாலைஎப்போதும்செப்புதலும், — அப்படியே

ஒப்புடன்வாழுவதும்செப்பரியவாழ்வுதரும்;

எப்பாலும்தப்பாச்சிறப்பு.

      [வல்லிசைவண்ணத்துநேரிசைவெண்பா]

                                        –  பேராசிரியர் வெ.அரங்கராசன்

  thiruvalluvamaalaiyin_melaanmai

 

                   arangarasan pic

1.0. நுழைவாயில்

    பழம்பெரும்நூல்களுள் திருக்குறளுக்கு மட்டுமே போற்றுதலுக்கும், ஏற்றுதலுக்கும் உரிய திருவள்ளுவமாலை என்னும் ஓர் அருந்திறனாய்வுப் பெருநூல் கிடைத்துள்ளது.  அந்நூல் 53 ஆற்றல்மிகு புலவர்களால் ஆக்கப்பட்டது. அப்பெரும்புலவர்கள் திருக்குறளை அணுகியும், நுணுகியும், வீழ்ந்தும், ஆழ்ந்தும் கசடறக் கற்றுத் தேர்ந்தவர்கள்; அதில் தோய்ந்தவர்கள்; கூர்ந்து ஆய்ந்தவர்கள்; ஐயத்தின் நீங்கித் தெளிந்தவர்கள்; நுண்பொருளையும் எண்பொருளாகக் கண்டவர்கள்; அதை மனத்தே கொண்டவர்கள்; ஆழங்கால்பட்டவர்கள். அத்துணைச் சிறப்புமிகு பெருநூலை ஆக்கிய சொல்நய மேலாண்மைத்திறன்கள் மிக்க அப்புலவர்களின் தக்க சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள்திருவள்ளுவமாலை நிறைநூலில் உள்நிறைந்து உறைகின்றன..

2.0 ஆய்வுக்கட்டுரையின்நோக்கு –- நான்கு

     2,1. ‘உள்ளதன்நுணுக்கம்’ என்பது தொல்காப்பியம். அந்நுட்ப ஆய்வியல் வரைவிலக்கணத்திற்கு ஏற்பத் திருவள்ளுவமாலைச் சொற்களுக்குள்,  தொடர்களுக்குள் ஆழ்ந்து உறங்கும் பல்வேறு நுட்பங்களை ஆய்தல்.

         2.2 திருக்குறளின் விழுமியங்கள்,  நனிநுட்பங்கள், முன்மைப்பாடு போன்ற பல்வேறு சிறப்பியல்புகளை அழுத்தமாகவும், ஆழமாகவும்

விளக்கப்படுத்திக் காட்டும் திருவள்ளுவமாலையின் சிறப்புக்களைப் புறத்தே காட்டுதல்.       .

 2.3. திருவள்ளுவமாலைப் புலவர்களின் சொல்நுட்ப மேலாண்மைத் திறன்கள், பன்மாண் ஆற்றல்கள், நுண்மாண் நுழைபுலத் திறன்கள் போன்றவற்றை அளந்தும், ஆய்ந்தும் காட்டுதல்.

   2.4. மேற்குறிப்பிட்ட அனைத்தையும்பற்றிய, விழிப்புணர்வைத் திருக்குறள் உலகிற்கு ஊட்டுதல்.

3.0. ஆய்வுக்கட்டுரையின்ஆய்வுப்பொருள்:

   திருவள்ளுவமாலையின்சொல்நுட்பமேலாண்மைத்திறன்கள்

     வெல்திறத் திருக்குறள் பல்வகைச்சொல், தொடர், பா நுட்பங்களைத் தன்னுள் நிரம்பக் கொண்டஅருநூல், நுண்நூல், நன்நூல் என்பதை அனைவரும் அறிவர். திருக்குறளின் ஓதுதிறன், உணர்திறன்பற்றி மாங்குடிமருதனார் பேசுவது திருவள்ளுவமாலையின் 24 – ஆவது பாடல் தொடரில் கீழ்க்காணுமாறு அமைந்துள்ளது.

     ஓதுதற்[குஎளிதாய்உண்ர்தற்[குஅரி[து]ஆகி

பொருள்உரை

     திருக்குறள்படிக்கவும், கற்கவும், ஓதவும்  எளியதாகஇருக்கும். ஆனல், அதன் பொருளை உணர்வதற்கு அரியதாக இருக்கும். ஏனென்றால், அது பற்பல சொல், தொடர், பா நுட்பங்களையும், பொருள், நய நுட்பங்களையும் தன்னுள்ளே உள்ளடக்கமாகக் கொண்டு ஒள்ளியதாய் விளங்குகின்றது என்பதால்.

     திருக்குறளைப்போலவே ஓரளவு திருவள்ளுவமாலையும் தன்னுள்ளே சொல், தொடர்நுட்பங்களையும், சொல், பொருள்நுட்பங்களையும் கொண்டு விளங்குகிறது. அவற்றை ஆழ்ந்து ஆய்வதே இவ்ஆய்வுக்கட்டுரையின் ஆய்வுப்பொருள்ஆம்.

     இவ்ஆய்வு இறைப்பவர்க்கு ஊற்றுநீர்போல் [திருக்குறள்1161] மிகும். ஆதலின், அறுவர் பாடல்களில் அமைந்துள்ள சில சான்றுகள் வாயிலாக மட்டுமே திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் இங்குஆராயப்படுகின்றன.

 

4.0. சொல்நுட்பவரைவிலக்கணம்

      நுட்பச்சொல் என்பது சொல்நுட்பம் என்று ஏன் ஆயிற்றோ எனின், பின்மொழிநிலையல் என்னும் பரிமேலழகர் எடுத்துக்காட்டும் விதியின்படியாம்.

     ஒரு கருத்தை வெளிப்படையாகச் சொல்லாமல், கற்போரது நுண்நோக்கு ஆய்வு[MICRO STUDY] வழிப் புரிந்துகொள்ளுமாறு குறிப்பாகவும், மறைந்திருக்குமாறும் பல பொருள்களைச் சொல்லுக்குள் நுழைத்து நுணுக்கமாகச் சொல்லுதல் சொல்நுட்பம் எனலாம்.

     இதனை ஆங்கிலத்தில் சட்ல்டி [SUBTLETY] எனலாம். இதற்கு ஆங்கில அகரமுதலி[LONG MAN DICTIONARY OF CONTEMPORARY ENGLISH — PAGE 1056] தரும்பொருள்: நுட்பம்விளக்கம்: இதைக் கவனிப்பதற்கும்புரிந்துகொள்வதற்கும்விளக்குவதற்கும் எளியது அன்று[not easy to notice, understand or explain] என்பதாம்சொல்நுட்பத்தை ஆங்கிலத்தில் சட்ல்வேர்ட்[SUBTLE WORD]எனலாம்.

 

   இன்றைய அறிவியல், தொழில்நுட்ப உலகம் மீநுண் தொழில்நுட்பம்[NANO TECHNOLOGY]பற்றிப் பெரிதும் பேசுகிறது. அதாவது, மிகமிகச் சிறிய ஒன்றிலிருந்து மிகமிகப் பெரிய பயன்கள் பலவற்றைப் பெறுதல் என்பது. இவ்விளக்கம் சொல்நுட்பத்திற்கும் செல்லும். சிறிய சொல்லிலிருந்து பல பெரிய நற்பயன்தரும் பொருண்மைகளைப் பெறுதல்தானே சொல்நுட்பமும்.

5.0. சொல்நுட்பஅமைவு

     மணிகளால் தொடுக்கப்பட்ட மாலைக்குள்ளே மறைந்திருக்கும் நூல்போல்[திருக்குறள்1273] சொல்லுக்குள்ளே நுட்பப்பொருளும் மறைந்திருக்கும். மலர் மொட்டுக்குள்ளே மறைந்திருக்கும் நறுமணம்போல்[திருக்குறள்1274] சொல்லுக்குள்ளே நுட்பப்பொருளும் நிறைந்திருக்கும்.

படிக்கப்படிக்கத்தான் நூலில் மறைந்துள்ள பல்வேறு நயங்கள் வெளிப்படும்[திருக்குறள் 0783]. அதைப்போலத்தான்பாக்களில் /பாடல்களில் / செய்யுள்களில்/கவிதைகளில் அமைவுபெற்ற சொற்களைப் படிக்கப்படிக்கத்தான், அவரவர் நல்அறிவுத் திறனுக்கும், நுண்ஆய்வுத் திறனுக்கும்ஏற்ப, அச்சொற்களில் மறைந்துள்ள நுட்பப்பொருள்களும் வெளிப்படும்; ஒளிவிடும். உள்ளிடத்தை ஆராய்ந்து அங்குஉற்று / அங்கு அதனை உணர்வார் அறியும் வகையில் நுட்பப்பொருள் அமைவு பெற்றிருக்கும். [அகம்நோக்கி உற்றுஅது உணர்வார்— திருக்குறள்—0707] இத்தொடர்  பொதுமைப் பொருளில்]

சொல்நுட்பம் உடன்பாட்டிலும், எதிர்மறையிலும் அமையும். அவற்றை நுண்ஆய்வு செய்து உணர்ந்து, மற்றவர்க்கும் உணர்த்தல்வேண்டும்.

     பேராசிரியர் வெ.அரங்கராசன்



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

 திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 2

 

 

thiruvalluvamaalaiyin_melaanmai

 

(கார்த்திகை 28, 2045 / 14 திசம்பர் 2014 தொடர்ச்சி)

 

 

6.0. சொல்நுட்பத்தகவு

 நுட்பம்அமைந்தசொல்லின்தகவு / தகைமை எப்படி இருத்தல் வேண்டும் என்று ஆய்தலும் இங்குத் தேவையாகின்றது. அடைப்புக்களுக்குள் அடைக்கப்பட்டுள்ள எண்கள் திருக்குறட் பாக்களின் எண்கள்.

     ஆக்கம் தருவதாய் இருத்தல் [0642]. கேட்போரை ஈர்த்து, அவரது உள்ளத்திற்குள் சென்று பதியும் திறன்உடைத்தாதல் [0643], அறனும், பொருளும் அளிக்கும் திறன் பெற்றிருத்தல் [0644], நுட்பச்சொல்லைச் சொல்லும்பொழுது, அச்சொல்லை வெல்லும் வேறு ஒரு சொல் இல்லாதபடிச், சொல்லும் சொல்லே வெல்லும்படி அமைதல் [0645], கேட்போர் விரும்பும்படித் திறன் உடைத்தாதல் [0646], மாசு இல்லாத ஒரு சொல்லில் பல் நுண்பொருள்கள் அமைதல் [0649] போன்ற தகவுகளை உள்ளடக்கமாக நுட்பம் அமைந்த சொல் / சொல்நுட்பம் நிலைபெறல் வேண்டும். அத்தகவுகளால்தான், சொல்லுக்கும், சொல்வோர்க்கும் மதிப்பு, கற்போர்க்கும், ஆய்வோர்க்கும் மகிழ்வு. ஆய்வுக்கும்சிறப்பு.

7.0. சொல்நுட்பப்பயன்கள்

      பொருள்ஆழம், பொருள்அழுத்தம், ஒரு சொல்லில் பல பொருள்அமைவு, இலக்கியஇன்பம், சொல்திறன், புலவர்களின் சொல்மேலாண்மைத் திறன்கள், பொருள் புலப்பாட்டுத்திறன், கவிதைத்திறன், சொல்நுட்பத்தைப் படித்துஉணர்ந்தோர் மனத்தில். மகிழ்வும், வியப்பும் முகிழ்த்தல், தமிழ்ச்சொல்லின் அருமையும், பெருமையும் வெளிப்படல் போன்றவை சொல்நுட்பப் பயன்கள்ஆம்.

     திருவள்ளுவமாலையில் அமைந்த சொல்நுட்பங்கள் திருக்குறளின் அருமை, பெருமை, மதிப்பு, சிறப்பு, மாண்பு, நுட்பம், திட்பம், ஒட்பம், உயர்வு, விரிவு, அழகு, ஆழ்மை, வன்மை, மென்மை, பொதுமை, எளிமை, இனிமை, செம்மை, செழுமை, முதிர்மை   [பக்குவம்] செப்பம், ஓசைநயம் போன்ற பன்முகத் தன்மைகளை நன்முறையில் பெருக்கியும், விரித்தும் காட்டுதல் கற்போர்க்கும், ஆய்வோர்க்கும் நற்பயன்களை நல்கும்.

8.0. நற்றமிழ் இலக்கணிகளின் நுட்பஇயல் ஆய்வு

நற்றமிழ் இலக்கணிகள் நுட்பஇயலை நுணுகி ஆய்ந்துள்ளார்கள். அவ் ஆய்வை இங்கு ஆய்வோம். விரிவு அஞ்சி எல்லாவற்றிற்கும் சான்றுகள் தர இயலவில்லை.

8.1. தற்குறிப்பேற்றஅணி:  

      இயற்கையாக/ இயல்பாகநடக்கும் நிகழ்வுஒன்றில், புலவர் தாம்கருதியகுறிப்பை / நுட்பத்தை ஏற்றிச் சொல்லுவது.

8.2. ஒட்டு / பிறிதுமொழிதல் / நுவலாநுவற்சிஅணி

     புலவர் தாம் கருதிய பொருளை அங்ஙனமே சொல்லாது, மறைத்து, அதை விளக்குவதற்கு அதைப்போன்ற பிறிதுஒன்றினை நுட்பமாகச் சொல்லி விளக்குவது.

     சொல்நுட்பம், தொடர்நுட்பம், முற்றுத்தொடர்நுட்பம் ஆகியவற்றையும் தாண்டிப் பாடல்நுட்பம் என்பதையும் இலக்கணிகள் சிந்தித்துள்ளார்கள். பாடல்நுட்பம் என்னும் வகைப்பாட்டில் ஒட்டுஅணி அமையும்.

8.3. நுட்பஅணி

      ஒன்றினை வெளிப்படையாகச் சொல்லாமல் கேட்போர் புரிந்து கொள்ளுமாறு நுட்பமாகச் சொல்லித் தெரிவிப்பது.  இது புறத்திணை இயலில் வருவது.

8.4. உள்ளுறைஉவமம்

      புலவர் தாம் புலப்படச் சொல்லும் உவமையாலே, புலப்படச் சொல்லப்பட்டதே அன்றிப், புலப்படச் சொல்லாத / மறைந்திருக்கும் பொருளை / கருத்தை உவமையோடு ஒத்து முடிவதாக உள்ளத்தேகருதி, அதனை உள்ளுறுத்து நுட்பமாகச் சொல்வது.

8.5. இறைச்சிப்பொருள்

      உள்ளுறை உவமத்தில் உவமை மட்டுமே சொல்லப்பட்டிருக்கும். . அதிலிருந்து குறிப்பாக நுட்பமாக உள்ள பொருளை எடுத்துக்கொள்ளுவது. இத்தோடு உள்ளுறை முடிந்துவிடும்.    இறைச்சிப்பொருள் இத்தோடு நின்றுவிடாது. இதற்கு அப்பாலும் அத்தோடு தொடர்புடைய ஒரு பொருள் உள்தங்கி இருக்கும். அந்நுட்பப் பொருளைக் குறிப்பில் உணரும் நுண்திறத்தர் ஆய்ந்துகாண்பர்.      உள்ளுறை உவமையும், இறைச்சியும் அகத்திணை இயலில் முகம்காட்டும்.

8.6. குறிப்பெச்சப்பொருள்

     சொல்லிய சொல்லுக்குள்ளே இருக்கும் குறிப்பினை / நுட்பத்தை ஆய்ந்து உணருமாறு எஞ்சி நிற்கும் பொருள்.

8.7. அருத்தாபத்தி

      ஒன்றைச் சொல்லி அதன் வாயிலாக இன்னொன்றை விளக்குகின்ற முறையை அருத்தாபத்தி என்பர்.

     சான்று:அவன்பகலில்உறங்குவதுஇல்லை

அவன் இரவில் மட்டுமே உறங்குவான் என்னும் பொருள்நுட்பம் இம் முற்றுத்தொடரில் இருக்கின்றது.

     மேற்காணும் சான்றுகளால் தமிழ் இலக்கணிகள் சொல்நுட்ப இயல், தொடர்நுட்ப இயல், முற்றுத்தொடர்நுட்பஇயல் ஆகியவற்றை மிகநுட்பமாக ஆய்துள்ளார்கள் என்பது அறியப்படுகின்றது. அவ் இலக்கிய உத்திகளை இலக்கியப் புலவர்கள் தங்கள் பாடல்களிலும் இலங்குமாறு அமைத்து இலக்கிய இன்பத்தை வழங்கியுள்ளார்கள்.

9..0. திருக்குறளில்நுட்பம்

      திண்மை, திட்பம்எனவும்; ஒண்மை, ஒட்பம்எனவும்;  தண்மை, தட்பம் எனவும் மாறும். அவற்றைப் போலவே,  நுண்மை, நுட்பம் ஆயிற்று.

     நுட்பம் திருக்குறளில் ஒரே ஒரு திருக்குறட்பாவில் [0636] இருமுறை வந்துள்ளது. நுட்பம் என்னும் பொருள் சுமக்கும் நுண்மை, பல்வேறு வடிவங்களில் திருக்குறட்பாக்களில் 9 இடங்களில் அமைந்துள்ளது. அவையாவன:

  •      நுண்         –- 0407, 0424, 0726
  •      நுணங்கிய   –- 0419
  •      நுணுக்கம்   –- 0132
  •      நுண்ணிய   –- 0373
  •      நுண்ணியம் — 0710
  •      நுண்ணியர்   — 1126 .

       இதன் நுண்திறனை எண்ணியே நுண்ஆய்வாளர் திருவள்ளுவப்பேராசான், அச் சொல்லை 11 இடங்களில் அமைத்துச் சிறப்புச் செய்துள்ளார். இவ் ஆய்வுக்கட்டுரையில் இதுபற்றி ஏன் ஆராய்தல் வேண்டும் எனும் வினா எழலாம். அதற்கு விடை இதுதான்.

     திருக்குறளை எழுத்து எண்ணிக் கற்று நுண்ஆய்வு மேற்கொண்ட திருவள்ளுவமாலைப் பெரும்புலவர்கள், அச் சொல்லின் அருமை, பெருமை, சிறப்பு, சீர்மை கண்டுணர்ந்தார்கள். திருவள்ளுவப் பெருந்தகை வழியில் தாங்களும் அவ் உத்தியைப் பயன்படுத்தல் வேண்டும் என்னும் நோக்கு அவர்களிடம் ஆக்கம் பெற்றது.

     அவ் ஆக்க நோக்கமே, சொல்லில், தொடரில் நுடபங்களை உள்நுழைத்து ஆக்கும் நன்முயற்சியில் நுழையவைத்தது. வெற்றிகளும் விளைந்தன.



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

10.0. திருவள்ளுவமாலை அகச்சான்றுகள்      

     திருவள்ளுவமாலையில் சொல்நுட்பங்கள் நிறைந்து உறையினும், விரிவுஅஞ்சி முன்குறிப்பிட்டவாறு அறுவர்பாடல் சான்றுகளை மட்டுமே இங்கு நுண்ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறேன். எஞ்சியவற்றை நுண்ஆய்வு மேற்கொள்ளப் பிறரை இவ்ஆய்வுக்கட்டுரை தூண்டுமாயின், அத்தூண்டுதல் என்னை மேலும் ஆய்வுக்கட்டுரை எழுதத்தூண்டுமென நம்புகின்றேன்.,

10.1. அருவப்பாடல்— 01 [அசரீரிப்பாடல்]

     [உருவம்இல்லாததெய்வஒலி]

  •  சொல்தொடர்தெய்வத்திருவள்ளுவர்

திருவள்ளுவமாலையின் முதற்பாடலில் வரும் தெய்வத்திருவள்ளுவர் என்னும் சொல்தொடர், நுட்பம்நிறைந்தது. தெய்வஆற்றல் மிக்கவர் திருவள்ளுவர் எனப் பொருளால் சிறந்தது.

  • நுட்பங்கள்.

     திருக்குறள் உலகுதழீஇய நுட்பச்சிந்தனைகள், உயர்நிலைக்கொள்கைகள், உயிர்மைக்கோட்பாடுகள், என்றும் எவருக்கும் பொருந்தும் அறநிறை கொள்கைகள், பலதுறைசார்ந்த கருத்தியல்கள், மனிதனைத் தெய்வமாக உயர்த்தும் அனைத்து அடிப்படையான நெறிமுறைகள், வழிகாட்டுதல்கள், எண்ணற்ற அருமை, பெருமை, வலிவு, பொலிவுஅழகு, விரிவு, ஆழ்மை, ஆளுமை போன்ற அனைத்தையும் தன்னகத்தேகொண்டு, அது தனக்கு உவமை இல்லாது [0007] உயர்ந்துநிற்கின்றது.

     இவற்றைப் படித்தும், கற்றும், ஓதியும், தோய்ந்தும், ஆய்ந்தும் நோக்கியும், உரைகள் ஆக்கியும் கண்டவர்கள் பற்பலர். அவர்களுள் சிலர் திருக்குறளை ஒருவர் செதுக்கியிருக்க முடியாது என்பர். வேறு சிலர், பலர் உருவாக்கிய பாடல்களின் தொகுப்பு என்பர். வேறு சிலர் மனிதனால் ஆக்கியிருக்க முடியாது; தெய்வம்தான் இதைச் செய்திருக்க முடியும் என்பர். இயல்பான மனிதனால் செய்தற்கு இயலாத ஒன்றை மாமனிதர் திருவள்ளுவர் செய்திருக்கிறார் என்னும் நம்பிக்கையால்தான், திருவள்ளுவரைத் தெய்வம் என்றே நம்பினர். அதனால்தான் தெய்வத்திருவள்ளுவர் என அப்பாடல் பதிவுசெய்து பாராட்டுகிறது.

  தமிழ்விடுதூது நூலாசிரியரும் தெய்வமொழிப்பாவலர் எனவும், மாக்கவி பாரதியாரும் தெய்வவள்ளுவ எனவும் வழிமொழிந்து அக்கருத்திற்கு ஒளியூட்டிஉள்ளனர்.

அரும்பொருள் ஆய்ந்த திருவள்ளுவருக்கு அப்பாடல் வழங்கியிருக்கும் விருதுதான், தெய்வ என்னும் பொய்யில் அடைமொழி.

அது திருவள்ளுவர் மாபெரும் ஞாலப்பேராற்றலர்தெய்வச்சீராற்றலர் என்னும் நுட்பத்தைத் திட்பமுற நுவல்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

 10.2. இறையனாரதுநிறைபாடல்— 03

  • சொல்தொடர்:

என்றும்….நின்றுஅலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய் மன்புலவன் வள்ளுவன் வாய்ச்சொல்.

  • பொருள்உரை

     எக்காலத்தும் நின்று நிலைக்கும்படி மலர்ந்து தேன்சொரியும் தன்மையது, நிலைபெற்ற புலவர் திருவள்ளுவர் வாயிலிருந்து பிறந்தசொல் திருக்குறள்.

  • நுட்பங்கள்
  • சொல்தேன்

தேனின்மருத்துவக்குணங்கள்

  •      கண்பார்வையைத்தெளிவாக்கும்
  •     ]இருமலைத்தீர்க்கும
  •   குருதிக்கொதிப்புக்குச்சிறந்தமருந்தாகும்
  •      குருதியைத்தூய்மைப்படுத்தும்
  •      கொழுப்பைக்குறைக்கும்
  •      இதயத்தின்ஆற்றலைக்கூட்டும்
  • தேன்உடல்நோய்களைத்தீர்க்கும்.
  • திருக்குறள் உடல்நோய்களை வராமல் தடுக்கும்; வரும்முன் காக்கும். கற்க95—ஆவது அதிகாரம் மருந்து.
  • தேன் சுவைக்கச்சுவைக்கத் தெவிட்டும்.
  • திருக்குறள் சுவைக்கச் சுவைக்கச் சுவைகள் கூடும்; தெவிட்டாது;   இனிக்கும்.
  • தேன்மரங்களில், மலைகளின் உச்சிகளில் இருக்கும்.

   திருக்குறளும் உச்சியில் இருக்கும் உயர்அறப் பெருநூல்.

  • தேன் பருப்பொருள் வடிவ மருந்து.
  • திருக்குறள் நுண்பொருள் வடிவ மருந்து..
  • தேன்மனநோயைத்தீர்க்காது.
  • திருக்குறள்மனநோய்களையும்தீர்க்கும்.
  • தேன்இனிக்கும்; நல்ல வண்ணத்தது; இயற்கையாது.    .
  • திருக்குறள் படிக்கப்படிக்க இனிக்கும்.

   பல்வகை ஒலிவண்ணங்களால் நல்லிசை தருவது.

   மனிதனுக்குத் தேவையான இயற்கையான / இயல்பான

   வழிகளையும், நெறிமுறைகளையும் காட்டுவது.

  • சொல்தொடர்நின்றுஅலர்தல் 
  • பொருள்உரை

   மலர்ந்துநிலைத்துநிற்றல். அதாவதுகூம்பல்இல்லாதது.

  • நுட்பம்
  • திருக்குறள் அன்று மலர்ந்தது; இன்றும் மலர்ந்த நிலையிலேயே   உள்ளது. என்றும் மலர்ந்த நிலையிலேயே இருக்கும். திருக்குறளும் கூம்பல் இல்லாதது.
  •  சொல்தொடர்வள்ளுவன்வாய்ச்சொல்
  •   நுட்பங்கள்

   திருக்குறளைத் திருவள்ளுவர் ஒருவரே செய்திருக்கமுடியாது; பலர் பாடிய குறட்பாக்களைத் திருவள்ளுவர் தொகுத்தார் என்றெல்லாம் சொல்வார்க்கு வள்ளுவன் வாய்ச்சொல் [இறையனார்பாடல் — 03] என்னும் சொல் தொடரில் பதிலின் பதிவு உள்ளது. அதாவது, திருவள்ளுவரது வாயிலிருந்து வந்ததுதான் திருக்குறள் என்பதும், அது தொகுப்புநூல் அன்று என்பதும் அச் சொல்தொடர் நுட்பமாக அறிவிக்கின்றது.

  • இக்கருத்தை நுட்பமாவும்நேரடியாகவும்வலியுறுத்தும்   திருவள்ளுவமாலைப்பாடல்தொடர்கள்
  • வள்ளுவன்வாயது –– நாமகள் பாடல் — 01
  • வள்ளுவனார்தாம்அளந்தகுறள் — பொன்முடியார் பாடல் — 14
  • வள்ளுவர் வாய்மொழி — மாங்குடிமருதனார் பாடல் — 24
  • வள்ளுவர்ஓதியஇன்குறள் — பெருஞ்சித்திரனார் பாடல் — 32
  •   வள்ளுவர் உலகம் கொள்ள மொழிந்தார் குறள் — நரிவெரூஉத்தலையார் பாடல் — 33
  • வள்ளுவர்வாய்மொழி — செயலூர்க்கொடுங்கண்ணனார் பாடல் — 42
  • வள்ளுவனார் ஓதுகுறள் — வண்ணகஞ்சாத்தனார் — பாடல் 43
  • வள்ளுவனார் தம்வாயால் கேளாதன எல்லாம் கேட்டு –– கொடிஞாழல்மாணி பூதனார் பாடல் — 50
  • வள்ளுவனார் பன்னிய இன்குறள் வெண்பா —மதுரைப்பாலாசிரியனார்பாடல் — 52


__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

 10.3. கபிலர் பாடல் — 05

        தினைஅளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட

         பனைஅளவு காட்டும் படித்தால் — மனைஅளகு

         வள்ளைக்[குஉறங்கும் வளநாட..! வள்ளுவனார்

         வெள்ளைக் குறட்பா விரி

] பொருள் உரை

     தினைஅரிசியின் அளவுக்கும் ஒப்பாகாத மிகச் சிறிய புல்லின் நுனியின்மேல் உள்ள பனித்துளி நெடிது உயர்ந்த பனையின் உருவத்தைத் தன்னுள் கொண்டு காட்டும். அதுபோல் போல், திருவள்ளுவர் அருளிய ஈரடியாலான சிறிய திருக்குறட் பாவும், மிகப் பரந்து விரிந்த அறம் சார்ந்த பொருள்களைத் தன்னுள் கொண்டு காட்டும்.     

  •  சொல்பனித்துளி
  •      பனித்துளி சிறியது; தூய்மையானது; தெளிவானது; குளிர்வது.
  •      நுட்பம்

  திருக்குறள் சிறியது; தூய்மையானது; தெளிவானது; கற்றவர் மனத்தைக் குளிர்விக்கும் தன்மையது.

  • சொல்: பனித்துளி நீர்
  •      பனித்துளி நீர் இன்றி அமையாது உலகு.
  • நுட்பம்

 திருக்குறள் இன்றி உலகில் அறம் அமையாது.

  • சொல்பனை
  • பனை முழுவதும் பயன்படும் பெரிய மரம்.
  • நுட்பம்

திருக்குறள் முழுதும் பயன்படும் பெரும்நூல்.           

10.4. மதுரைத் தமிழ்நாகனார் பாடல் –29

        எல்லாப் பொருளும் இதன்பால் உளஇதன்பால்

         இல்லாத எப்பொருளும் இல்லையால் – சொல்லால்

         பரந்தபா வால்என் பயன்?வள் ளுவனார்

         சுரந்தபால் வையத் துணை.

  • சொல்தொடர்

    எல்லாப் பொருளும் இதன்பால் உள:இதன்பால்

      இல்லாத எப்பொருளும் இல்லையால்,

  • பொருள் உரை

     உலகத்தார் எல்லார்க்கும் இன்றியமையாத எல்லா அறநெறிகளும் திருக்குறளின் முப்பாலில் இருக்கின்றன. இம் முப்பாலில் இல்லாத எப்பொருளும் இல்லை என்பதனால்,.

  •  நுட்பம்

      இவ் வெண்பாவின் இல்லையால் என எச்சத் தொடராக முடிந்திருக்கிறது. அவ் எச்சத் தொடரை முற்றுத் தொடராக மாற்றினால் ஒரு நுட்பப் பொருள் கிடைக்கும். அவ் எச்சத் தொடரின் முற்றுத்தொடர் கீழே.

  இம் முப்பாலில் இல்லாத எப்பொருளும் இல்லை என்பதால், இம் முப்பாலை ஓதி அதன்படி வாழ்ந்தாலே போதும் வேறு எப்பால் நூல்களையும் எப்போதும் ஓத வேண்டிய தேவை இல்லை என்னும் நுட்பம் வெளிப்படுகிறது.

  • சொல்தொடர்          

      எல்லாப் பொருளும் இதன்பால் உள என உடன்பாட்டு முறையிலும், இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால்   என எதிர்மறை முறையிலும் இவை அமைந்துள்ளன.

  • நுட்பம்

    திருவள்ளூவப் பெருநாவலர் விதிப்பதற்கு உரியவற்றை உடன்பாட்டிலும், விலக்குதற்கு உரியவற்றை எதிர்மறையிலும் உரைப்பதை ஆங்காங்கே கண்ணுறலாம்.

     கருத்தாக்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பழுத்த பெருஞானி திருவள்ளுவர், இந் நுட்பமான இலக்கிய உத்தியை இயற்றினார். இதனைத் திருவள்ளுவமாலை ஒண்புலவர்களும் தங்கள் வண்பாடல்களில் நன்முறையில் இதனைப் பயன்படுத்திக் கொண்டார்கள் எனத் தெரிகிறது.

  • சொல்தொடர்
  •       சொல்லால் பரந்த பாவால் என் பயன்?
  • பொருள் உரை         

எல்லாப் பொருளும் இல்லாமல் சொற்களால் மட்டுமே பரந்து விரிந்து கிடக்கும் நூல்களால் என்ன பயன் விளையும்?

  •  நுட்பம்

      மேற்குறிப்பிட்டவாறு திருக்குறள் சொற்களால் பரந்தும், விரிந்தும் இல்லை. சொற்களால் சுருங்கிய நிலையிலேயே இருக்கிறது. எனினும் சொல்நுட்பங்களையும், பொருள்நுட்பங்களையும் நயநுட்பங்களையும் தன்னுள் நிரப்பிக் கொண்டிருக்கிறது. அவற்றுக்குள் பரந்து விரிந்த அறம் சார்ந்த கருத்தியல் நெறிமுறைகளும், கொள்கைகளும், கோட்பாடுகளும் கொட்டிக் கிடக்கின்றன. அதனால், திருக்குறளால் ஆகும் பயன்கள் அளவற்றவை.

  • சொல்தொடர்
  •      வள்ளுவனார் சுரந்த பால் வையத் துணை
  • பொருள் உரை

     திருவள்ளுவரிடமிருந்து சுரந்து வரும் முப்பால் எனும் நற்பால் எப்பாலோர்க்கும் எப்போதும் உயிர்த்துணை ஆம்.

சொல் சுரந்த எனும் பெயரெச்சம்

   சுரந்த என்பதைச் சுரத்தல் எனும் தொழிற்பெயராக்கி அதன் நுட்பப் பொருளைக் காண்போம்.

  • நுட்பம் — 1

   சுரத்தல் எனின் உண்டாதல், ஊறுதல், நிறைதல் எனப் பொருள்படும்.

  ஓர் அறநூலை எழுத வேண்டும் என்ற எண்ணம் திருவள்ளுவர்க்கு உண்டானது. உடனே அறநெறிக் கருத்தாக்கங்கள் அவர் உள்ளத்தில் ஊறத் தொடங்கின. அவை ஓலைச் சுவடிகளில் வந்து நிறைந்தன.

   அன்று திருக்குறளுக்கு உரைகள் எழுத வேண்டும் என்ற எண்ணம் உரையாசிரியர்களுக்கு உண்டானது. உடனே அவர்கள் உள்ளத்தில் உரைகள் ஊறின. அவை ஓலைச் சுவடிகளில் வந்து நிறைந்தன.

   இன்றும் திருக்குறளைப் பற்றிப் பேச நினைத்தாலும், கட்டுரைகள் எழுத நினைத்தாலும், உரைகள் எழுத நினைத்தாலும் சொற்கள் சுரக்கும் என்பது சுரக்கும் எனும் சொல்லுக்குள் மறைந்திருக்கும் நுட்பம் எனக் கொள்ளலாம்.

  • நுட்பம் — 2

   திருவள்ளுவரிடமிருந்து சுரந்து வரும் பால், அறத்துப் பால், பொருள் பால், காமத்துப் பால் எனனும் முப்பால். முப்பால் என்னும் பொருள்படும் அத் தொடர், திருவள்ளுவரை மும்மார்பகம் கொண்ட திருவள்ளுவத் தாய் ஆக்குகிறது, திருவள்ளுவர் மும்முலைத் தாய் எனும் கவிஞர் அப்துல் ரகுமான் அவர்களது கவிதை அடியும் இங்குக் கருதத் தக்கது.

     பசுவின் பால் போன்ற பால்கள் குடும்பத்திற்கு மட்டும் பயன்படும். அவை விற்பனைக்கு வந்தால், குறிப்பிட்ட பகுதியார்க்கு மட்டும் பயன்படும்.

  நோய் எதிர்ப்பு ஆற்றல் தருவதும்,, மூளை வளர்ச்சி, எலும்பு, வளர்ச்சி, கண் பார்வை தெளிவடைதல் போன்ற குழந்தைக்குத் தேவையான அனைத்து ஆற்றல்களுக்கும், வளர்ச்சிக்கும் மிகவும்

இன்றியமையாதது தாய்ப் பால். அப் பால் குறிப்பிட்ட காலத்தில் மட்மே சுரக்கும். அதைக் குடிக்கும் குழந்தைக்கு மட்டுமே பயன்படும்.

  திருவள்ளுவத் தாயிடமிருந்து சுரந்து வரும் ஒப்பற்ற முப்பால் உலகிற்கும், உலகத்தார் எல்லோர்க்கும் எப்போதும் செப்பமுறப் பயன்படும்.

 – பேரா.வெ.அரங்கராசன்



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள்

– பகுதி 6 (நிறைவு)

(மார்கழி 27, 2045 / சனவரி 11, 2015 தொடர்ச்சி)

http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/12/thiruvalluvamaalaiyin_melaanmai.png

10.5. இடைக்காடரது பாடற்கொடை — 54      

 

கடுகைத் துளைத்[து]ஏழ் கடலைப் புகுத்திக்

         குறுகத் தறித்த குறள்

  •   பொருள் உரை

     திருக்குறளின் சொற்சுருக்கத்தையும், பொருட்சுருக்கத்தையும் ஆய்ந்தால், கடுகின் நடுவே துளைபோட்டு, ஏழு கடல் நீரையும் அத் துளைவழி உட்செலுத்தி, அளவில் குறுகி இருக்கும்படித், தறித்து வைத்தது போன்ற வடிவினது திருக்குறள்.

  • நுட்பங்கள்     
  • சொல்கடுகு
    • கடுகு = திருக்குறட் பா
    • ஏழ்கடல் = அப் பாவில் உள்ள ஏழு சீர்கள்
  • கடுகு மிகவும் சிறியது.
  • திருக்குறளின் குறள் யாப்பும் அன்றைய இலக்கியச் சூழலில் மிகவும் சிறியது.
  •  கடுகு சிறிதெனினும். அப் பருப்பொருளுக்குள் பல்வேறு ஆற்றல்களும் [சத்துக்களும்], மருத்துவக் குணங்களும் இருக்கின்றன,

சான்றாக நச்சுத் தன்மையை நீக்கப் பயன்படுதல், நரம்பு மண்டலத்தில் செயல்படுதல், இருமலை நீக்குதல், சிறுநீர்  பிரிதலுக்குப் பயன்படல், கடுகு எண்ணெய் கூந்தல் வளர்ச்சிக்குப் பயன்படுதல், இதய நோயை நீக்குதல் போன்ற பல்வேறு பயன்பாடுகள்.

  • திருக்குறளின் குறள் யாப்பு சிறிதெனினும், அதற்குள் உள்ளம் சார்ந்த நோய்களுக்கும், உடல் சார்ந்த நோய்களுக்கும், சமுதாய நோய்களுக்கும் நற்பயன்கள் தரும் உலகத் தரம் மிக்க நுண்பொருள் மருந்துகள் பல்வகைகளில் நிறைந்துள்ளன.
  • கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.
  • திருக்குறள் குறள் யாப்பும் சிறிதெனினும், காரமாக இருக்க வேண்டிய இடத்தில் காரமாகவே இருக்கின்றது.
  • சான்றுஇரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின், பரந்து

            கெடுக உல[கு]இயற்றி யான். [1062]

 

  • பொருள் உரை
  • பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டுமாயின், அந் நிலைக்குக் காரணனான ஆட்சியாளன் அலைந்து கெட்டு ஒழியட்டும்.
  • கடுகு அனைவராலும் அறியப்பட்ட ஒன்று.
  •  திருக்குறளும் அனைவராலும் அறியப்பட்டதும் ஆகும்; அறியப்பட வேண்டியதும் ஆகும். இவை போன்ற நுட்பக் குறிப்புக்கள் இதில் இருக்கின்றன.

 

  • கடுகு சிறப்பாகப் பெண்களுக்கு நன்கு தெரியும்.
  • திருக்குறளும் எல்லோரையும்விடப் பெண்கள் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

 

  • கடுகு தாளிப்பில் சுவையைக் கூட்டும்.
  • திருக்குறளும் வாழ்க்கையில் இன்பச் சுவையைக் கூட்டும்.

 

  • கடுகு தாளிப்பில் மணத்தைக் கொடுக்கும்.
  • திருக்குறளும் அதன்வழி நடப்போர்க்குப் புகழ்மணம் கொடுக்கும். .

10.6. அவ்வையாரின் பாடல் — 55

  • அணுவைத் துளைத்[து]ஏழ் கடலைப் புகட்டிக்

         குறுகத் தறித்த குறள்.    

  • நுட்பங்கள்

 

  • அணு = திருக்குறட் பா
  •  ஏழ் கடல் = அப் பாவில் உள்ள ஏழு சீர்கள்   

 

 

  • அணு மிகவும் சிறியது.
  •  திருக்குறட் பாவும் அன்றைய இலக்கியச் சூழலில் மிகவும் சிறியது.

 

  • ஏழு கடல்கள் .
  •  கடலுக்குள் மூழ்கினால் ஒளிமுத்தும், பல்வேறு கனிமங்களும்   கிடைக்கும். அவை வாழ்க்கையில் வளம் படைக்கும்.
  •  திருக்குறட் பாச் சீர்களுக்குள் நுழைந்து நுண்ஆய்வு செய்வோர்க்குஒளியூட்டும் அறக் கருத்துக்களும், வழிகாட்டும் சிந்தனைகளும் கிடைக்கும். அவை வாழ்க்கையில் உளவளமும், உடல்வளமும் அடைக்கும்.
  • கடல் நீர் உப்புக் கரிக்கும்.
  • திருக்குறட் பாச் சீர்கள்படி நடப்பார்க்கு வாழ்க்கை இனிக்கும்.   நடவார்க்குக் கரிக்கும்.
  • கடல் உப்பு உணவின் சுவையைக் கூட்டும்.
  • திருக்குறளின் ஒவ்வொரு சீரும் அதன்படி நடப்பார் வாழ்க்கையில் இன்பச் சுவையைக் கூட்டும்.
  • கடல் இக் கரையிலிருந்து அக் கரைக்குச் செல்லப் பயன்படும்.
  •  திருக்குறட் சீர்களும் துன்பக் கரையிலிருந்து இன்பக் கரைக்குச் செல்லப் பயன்படும்.

 

  • கடல் அளவிலாத ஆழம், அகலம், நீளம் ஆகியவற்றால்   பெரும்பரப்பினது.
  • திருக்குறளின் ஒவ்வொரு சீரும் ஆழம், அகலம், நீளம், உயரம் ஆகியவற்றால் பெரும்பொருட் பரப்பைத் தன்னுள் கொண்டுள்ளது.
  • கடல் என்றும் வற்றாது; நிலைத்து வாழும் நிலையினது.
  • திருக்குறளும் என்றும் வற்றாது; மானுட இனம் உள்ளவரை  நிலைத்து நிற்கும் பெற்றியது..
  • கடல் தனியாள் எவருக்கும் உரிமை உடையது அன்று. அது  பொதுச் சொத்து..
  •  திருக்குறளும், அதன் ஒவ்வொரு சீரும் தனியாள் எவருக்கும் உரிமை உடையது அன்று. அது பொதுச் சொத்து.
  • கடலை நம்பி உலகமும் வளத்தோடு இருக்கின்றது; உயிர்களும்  உவப்போடு வாழ்கின்றன.
  • திருக்குறளின் ஏழு சீர்களை நம்பி நடந்தால், அனைத்து உயிர்களும்  மகிழ்வோடு வாழும். அவ் உயிர்களால் உலகமும் வளத்தோடு வாழும்.
  •  கடல் உலகும், உயிர்களும் இருப்பதற்கும், வாழ்வதற்கும் மிகவும் இன்றியமையாத மழைப்பொழிவுக்கு உற்ற துணை;   கடல் பருப்பொருள் [CONCRETE THING] நிலைத் துணை.
  •  திருக்குறள் அதே பணியை 2-ஆவது அதிகாரம் வான்சிறப்புவழி மழைப் பொழிவின் இன்றியமையாமையை வலியுறுத்துகிறது; திருக்குறள் நுண்பொருள் [ABSTRACT THING] நிலைத் துணை.

11.0. நிறைவுரை

      திருக்குறளின் முழுமையான விழுமியங்களைப் பழுதறக் கற்றுத் தோய்ந்த திருவள்ளுவமாலைப் பெரும்புலவர்கள், அவற்றை நுட்பமாக ஆய்ந்தார்கள். ஒட்பமாக ஆய்ந்து, இன்புற்றவற்றை உலகும் இன்புறக் காணத் திட்பமுடன் விழைந்தார்கள். அவ் விழைவின் விளைவே,, திருவள்ளுவமாலை என்னும் நுண்திறனாய்வு நன்னூல். அன்றைய இலக்கியச் சூழலின்படி, அந் நூல் 53 வெண்பாக்களோடும், 2 குறள் வெண்பாக்களோடும் மண்புக்கு மாண்பு கொண்டது. திருக்குறளை அன்றைய உலகிற்கு அடையாளப்படுத்தியது; விளக்கப்படுத்தியது. உணர்வது உடையார்க்கு உயிர்சுவை விருந்தாக உயர்ந்தது. உலகும் போற்றியது; மனத்துக்குள் ஏற்றியது. அதனால், அப் புலவப் பெருந்தகையோரும் உலகிற்கு அறிமுகம் ஆனார்கள்.                       

 

 12.0. சொல்நுட்பக் கோட்பாடு

           வெளிப்பட்டுத் தோன்றாமல் சொல்லுக்குள் நுட்பங்கள் குறிப்புக்களாக மறைந்தும், நிறைந்தும் இருத்தல், சுருக்கத்தில் பெருக்கப் பொருள் பல காட்டுதல், எளிமைக்குள் அருமைகள் வெளிப்படுதல், தோய்வோர், ஆய்வோர், பேசுவோரது நல்அறிவு, நுண்ஆய்வுத் திறன்களுக்கு எற்ப நுட்பப் பொருள்கள் காட்டுதல் சொல்லின் ஆற்றலை வெளிப்படுதல் போன்ற கூறுகளைக் கொண்டு விளங்குவது, சொல்நுட்பக் கோட்பாடு என ஒருவாறு வரையறுக்கலாம்.

(நிறைவு )

 

திருவள்ளுவமாலைச் சொல்நுட்பங்கள் உட்தலைப்புக்கள்     

   1. நுழைவாயில்

2. ஆய்வுக் கட்டுரையின் நோக்கு

3. ஆய்வுக் கட்டுரையின் ஆய்வுப் பொருள்

4. சொல்நுட்ப வரைவிலக்கனம்

5. சொல்நுட்ப அமைவு

6. சொல்நுட்பத் தகவு

7. சொல்நுட்பப் பயன்கள்

8. நற்றமிழ் இலக்கணிகளின் நுட்ப இயல் ஆய்வு

9. திருக்குறளில் நுட்பம்

10. திருவள்ளுவமாலை அகச் சான்றுகள்

   10.1. உடம்பிலிப் பாடல் [அசரீரிப் பாடல்]

    10.2. இறையனார் பாடல்

    10.3. கபிலர் பாடல்

    10.4. மதுரைத் தமிழ்நாகனார் பாடல்

    10.5. இடைக்காடனார் பாடல்

    10.6. அவ்வையார் பாடல் 

11. நிறைவுரை

12. சொல்நுட்பக் கோட்பாடு



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

 

திருவள்ளுவமாலை

பண்டைக் குறள் திறனாய்வுரைகள்

openQuotes.jpgதிருக்குறளைப் பாராட்டும் திருவள்ளுவ மாலையென்ற ஒரு நூல் இருக்கின்றது. அதிலுள்ள செய்யுட்களைப் பல புலவர்கள் பாடியுள்ளார்கள். அந்நூலைப் பாடியவர்கள் யாராயினும் அது பல நூற்றாண்டுகட்கு முன்பே உண்டாயிற்றென்பதற்கு நேமிநாதயுரை முதலிய நூல்களில் போதிய ஆதாரம் இருக்கின்றது. இங்ஙனம் ஒரு நூலைச் சிறப்பித்துப் பாடிய தனி நூலொன்று வேறு எந்த நூலுக்கும் முற்காலத்து அமையவில்லை
-உ வே சாமிநாதைய்யர்

 

வள்ளுவமாலை தோன்றியது எங்ஙனம்? காலந்தோறும் குறளைப் பற்றிய பாடல்கள் பல புலவர்களால் இயற்றப்பட்டிருக்க, பிற்காலத்து வந்த கவிஞரொருவர் அவற்றுள் சிறந்தனவற்றை எடுத்து ஒருங்கு சேர்த்து ஒழுங்குபடுத்தி, அந்நாளில் நன்கு அறியப்பட்ட பழம்புலவர்கள் படைத்ததாக அவர்கள் பெயர்களில் ஒரு நூலாகத் தொகுத்திருக்கலாம். இவற்றுடன் அவரே தாமும் சில பாக்களை இயற்றி இதுபோலவே புகழ்பெற்ற பாவலர்கள் எழுதியதாக அவர்கள் பெயரில் சேர்த்து இத்தொகுப்பை வழங்கியிருக்கலாம்.

திருவள்ளுவமாலை

திருவள்ளுவமாலை என்பது திருக்குறளைச் சிறப்பித்துப் பாடிய பாடல்களின் கோவை என்று பொருள்படும். மொத்தம் ஐம்பத்து மூன்று வெண்பாக்களாலான பாக்களையுடையது.

இதில், பல பாக்கள் கருத்துச் செறிவுடனும், மேற்கோளாக ஆளத்தக்கனவுமாகமும் உள்ளன. சில பாக்கள் குறளின் முப்பாலின் இயற்பகுப்புகளை எடுத்தோதுகின்றன; கவிதை நலம் நிறைந்து கற்பனையால் குறளைச் சிறப்பிக்கின்றன சில; வடமறைநூலுக்கும் இதற்கும் வேற்றுமை காட்டி ஏற்றம் கூறுகின்றன சில; குறள் ஆசிரியரைப் பாராட்டுகின்றன சில; வள்ளுவரின் இதயத்தின் ஆழத்தையும், அவரது அறிவின் ஆற்றலையும் தெளிவையும் உணர்ந்து தாங்கள் பெற்ற இன்பத்திற்குக் கனிந்த கற்பனையுடன் செய்த பாக்கள் பிற.

காலம்

வள்ளுவமாலை திருக்குறள் அரங்கேற்றத்தின்போது சங்கப் புலவர்களால் பாடப்பெற்றது என்பர் ஒருசாரார். கல்லாடத்தில் கூறப்பட்டுள்ள குறள் அரங்கேற்ற நிகழ்ச்சி இத்தொகுப்பின் முதல் பாட்டுக்கு ஆதாரமாக இருக்கலாம். அப்பாடல் மதுரையில் உள்ள சங்கப்பலகையில் திருவள்ளுவரோடு ஒத்து இருத்தற்கு உருத்திரசன்மரே ஏற்றவர் என்று குறிப்பது. ஆனால் பழங்கதைகளில், குறள் அரங்கேறிய காலத்தில், சங்கப்புலவர் நாற்பத்தெண்மரும் திருவள்ளுவரோடு ஒக்க இருக்கத் தகுதியற்றவராய்ப் பொற்றாமரைக் குளத்தில் வீழ்ந்து மூழ்கினர் என்று கூறப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு வள்ளுவமாலை குறள் ஆசிரியர் காலத்தது அல்ல; பிற்காலத்தே தோன்றியதே என்பர்.

காலத்தால், பண்டைய குறள் உரை ஆசிரியர்கள் பதின்மருக்கு முந்தியது திருவள்ளுவமாலை என்பது பல அறிஞர்களின் முடிவு. இப்பாடல்கள் கி.பி. எட்டாம் நூற்றாண்டு வரையில் உள்ள காலகட்டத்தில் தொகுக்கப்பட்டதெனச் சில அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். சிலர் இதன் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தியதாக அமையும் என்று கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும் திருவள்ளுவமாலை வரலாறு பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தியதென்பதில் ஐயம் இல்லை என்பார் தெ பொ மீ.

தொடுத்தது யார்?

அசரீரி, நாமகள், இறையனார், உக்கிரப்பெருவழுதி உரைத்த பாக்களுடனே சங்கப்புலவர் நாற்பத்தொனபதின்மரும் பாடிய பாடல்களுமாகக்கூடி ஐம்பத்து மூன்று பாக்களைக் கொண்டதாக அறியப்படுவது வள்ளுவமாலை. இவ்வாறாக விண்ணிலிருந்து வந்த ஒலியாகவும் உடல்கொண்டோராலும் பாடப்பட்ட பாடல்களுடன் மேலும் ஔவையார், இடைக்காடர் ஆகியோர் பாக்களையும் சேர்த்து இப்பொழுது திருவள்ளுவமாலை ஐம்பத்தைந்து பாடல்கள் கொண்டதாக உள்ளது.

வள்ளுவமாலையில் இடம்பெற்றுள்ள புலவர் பெயர்களை அறிவதற்குரிய ஆதாரங்கள் சங்க நூல்கள் அன்றி வேறு ஒன்றுமில்லை. அவ்வாறு நோக்கும்போது இதில் காணப்படும் பெயர்களுள் சில சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கவில்லை. இறையனார் களவியலுரையின்படி கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் நாற்பத்தொபதின்மர் ஆவர். இவர்களில் சேந்தம் பூதனார், அறிவுடையரானார், பெருங்குன்றூர்க் கிழார், இளந்திருமாறன், மருதன்இளநாகனார் ஆகிய இவர்கள் பெயர் வள்ளுவமாலையில் காணப்படவில்லை. வள்ளுவமாலையில் காணப்படும் உருத்திரசன்மர், நத்தத்தனார், முகையலூர்ச் சிறுகருந்தும்பியார், எறிச்சனூர் மலாடனார், போக்கியார், நாகன் தேவனார், செங்குன்றூர்க் கிழார், கவிசாகரப் பெருந்தேவனார், செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார், வண்ணக்கஞ் சாத்தனார், களத்தூர்க் கிழார், நச்சுமனார், அக்காரக்கனி நச்சுமனார், குலபதி நாயனார், தேனீக்குடிக் கீரனார், கொடிஞாழன் மாணிபூதனார், கௌணியனார், மதுரைப் பாலாசிரியனார் என்பவர்களைச் சங்க இலக்கியங்களில் காண முடியவில்லை. சங்கப் புலவர்கள் வாழ்ந்தது ஒரே காலத்தில் அல்ல. அவர்கள் வாழ்ந்த கால இடைவெளி சில நூற்றாண்டுகள் ஆகும். எனவே பாடல்கள் ஒரே காலத்தில் தோன்றியன என்பதும் ஏற்க இயலாது. வள்ளுவமாலைப் பாக்கள் சங்ககாலத்தில் அமைந்துள்ள ஓசை தராமல் பிற்கால இலக்கணமமைந்த ஓசை தருகின்றன என்றும் சங்கநுல்களில் காணப்படாத சொற்சிதைவு இப்பாடல்களில் காணப்படுவதையும் ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். எனவே குறளைப் பற்றிச் சங்கப் புலவர்கள் பாடிய பாடல்களின் திரட்டே வள்ளுவமாலை என்பது பொருந்தாதாகிறது.

இந்நூல் அனைத்தும் ஒரே புலவரால் பாடி இயற்றப்பட்டிருக்கூடும் என்னும் கருத்தையும் ஆராய்ச்சி அறிஞர்கள் மறுத்துள்ளனர். இந்தப் பாராட்டு மாலை யாரோ ஒருவரோ அல்லது ஒரு சிலரோ வெவ்வேறு காலங்களில் எழுதிய பாடல்களின் தொகுப்பாக இருக்கலாம் என்பது பொதுவான கருத்து. வள்ளுவமாலையிலுள்ள பாடல்களுள் சில சங்கப் புலவர்களாலும், சில பிற்காலப் புலவர்களாலும் பாடப் பெற்றிருக்கலாம்; பின்னர் இவை நுலாகத் தொகுக்கப் பெற்றிருக்க வேண்டும் எனவும் கொள்ள முடிகிறது.
சங்கப்புலவர்கள் பாடியதுபோலப் பிற்காலத்தவர் பாடிவைத்த பாடல் தொகுப்பே வள்ளுவமாலை என்பது மற்றொரு கருத்து. வள்ளுவமாலையை இயற்றியவர் தமது பல்வேறு பாடல்களுக்குத் தம் விருப்பத்திற்கேற்பப் புகழ்வாய்ந்த சங்கப் புலவர்களின் பெயர்களை அமைத்துக் கொண்டிருக்கலாம். பாடல்களின் அமைப்பையும் பாடுபொருளையும் காணும்போதும் இம்மாலையை ஒருவரே தொகுத்தார் என்பதற்கான காரணம் வலுப்படும்.

தாக்கங்கள்

பண்டைத் தமிழ் இலக்கியத்தில் காணப்பெறும் ஒரே திறனாய்வு நுல் திருவள்ளுவமாலையே என்பர் அறிஞர். திருக்குறள் பற்றிய ஆராய்ச்சிக்கு வள்ளுவமாலையில் ஓரு தொடக்கம் உண்டானது எனலாம். இது திருக்குறளுக்குச் செய்யப்பட்ட சிறப்பு எனவும் கொள்வர். வள்ளுவமாலை திருக்குறளின் நயத்தையும் சிறப்பையும் ஆராய்ந்துரைக்கும் திறனாய்வு மாலையாக விளங்குகிறது.
இதிலுள்ள ஒவ்வொரு பாடலும் குறளை அணுகிய முறை வெவ்வேறாக உள்ளது. இப்பாடல்கள் வள்ளுவரை தெய்வ வாக்கு கொண்டவர் என்று வாழ்த்தும்; குறள் மறைநூலுக்கு மேலானது, இணையானது எனவும் வடமொழியின் சிறப்பிற்கு மறைநூல்; தமிழ்மொழியின் பெருமைக்குக் குறள், முப்பாலில் நாற்பால் மொழியப்பட்டது எனவும் ஒப்பாய்வு செய்யும்; பால், இயல், அதிகாரத் தொகுப்பு இவற்றைக் கூறி குறளின் சொற்பொருள், யாப்பின் அமைப்பு ஆகியவற்றின் சிறப்புபற்றிப் பேசும்; உள்ளத்து இருளை நீக்கும் வாழ்வியல் நூல் என்றும் இருவினை நீக்கும் மாமருந்தாகிய ஆன்மநூல் இது என்றும் போற்றும். இவ்வாறு பல்வேறு நிலைகளில் திருக்குறளின் பாடுபொருளும் பாடுமுறையும் ஆராயப்பட்டுள்ளன.

வடமொழியில் தோன்றிய வேதம் மூலநூல், குறள் அதன் வழிநூல் என்று ஒரு பாடல் கருத்து உரைக்க அதற்கு மாறாகத் திருக்குறள் மூலநூலே, திருக்குறளோடு எந்த நூல்களையும் ஒப்பிட்டுப் பார்த்தல் பொருத்தமாகாது என்பதை வேறு ஒரு பாடல் உணர்த்துகிறது.
வடமொழிநூல்களோடு திருக்குறளை ஒப்பிட்டுப் பேசுதல் ஒவ்வாது என்பதனை வலியுறுத்தும் போக்கு அக்காலச் சூழலிலேயே தோன்றியமையும், திருக்குறள் தமிழில் எழுந்த மூலநூல் என்பதனை வள்ளுவமாலை மூலமும் நிறுவப் பெற்றமையையும் காணலாம்.
வள்ளுவமாலை எழுந்த காலத்தில் மாந்தர் பெரிதாக மதித்து வந்ததாகக் கருதப்படும் வைதீக நூல்களுடன் திருக்குறளை ஒப்பிட்டுப் பாராட்டிக் கூறியதன் நோக்கம் தமிழின் ஆற்றலை மற்றவரும் உணர வேண்டும் என்பதே என்று ஒரு கருத்து உள்ளது. ஆனால் காலப்போக்கில் இந்த ஒப்பீடே பிறழ உணரப்பட்டுப் பின்னையோர் திருக்குறள் கருத்துகள் வடநூற் கருத்துக்களின் பிழிவாகக் கருதத் தொடங்கி விட்டனர்; பின்வந்த உரையாசிரியர்களின் வெவ்வேறு அணுகுமுறைக்கு மாலைப்பாடல்கள் அடித்தளமாக அமைந்து விட்டன என்பதும் தெளிவாகும் என்பர் ஆய்வாளர்கள்.
வள்ளுவமாலை தரும் பாராட்டுரைகளே வள்ளுவத்திற்கு வேறுபொருள் காணத்தூண்டியிருக்கலாம்; அல்லது குறள் தோன்றிய காலத்திலிருந்து பின்னர் பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு கருத்துகள் அதில் ஏற்றியுரைக்கப்பட்ட பின் அக்கருத்துரைகளே வள்ளுவமாலை தரும் கருத்துரைகளாக மாறின எனவும் கொள்ளலாம். எவ்வாறாயினும் மூலம் கொண்டிருந்த கருத்துகள் காலப்போக்கில் வள்ளுவமாலையாலும், உரைகளாலும் மாறிப்போயின என்பது உண்மை.

வள்ளுவம் பெற்ற திரிபிற்கு வள்ளுவமாலையும் அடிப்படை என்னும் நிலையில் பல காரணங்களைக் காட்டுவார் கு ச ஆனந்தன். திருக்குறளின் உண்மைப் பொருளையும் உள்ளுறை நோக்கையும் அமைப்பையும் மூலத்திலிருந்து மாற்றியமைத்து வேறுவிளக்கம் தரும் பல பாட்டுகள் வள்ளுவமாலையில் இடம் பெற்றுள்ளன; தொன்மை நூலாகிய தொல்காப்பியம், சங்க நூல்கள், திருக்குறள் முதலியவற்றில் 'வீடு' பற்றிப் பேசும் நான்காம் உறுதிப்பொருள் இல்லை; அறம், பொருள், காமம் என்ற மூன்று மட்டுமே பேசப்படுகின்றன; ஆனால் வள்ளுவமாலையின் பல பாடல்களில் (7,8,20,22,33,38,40,50) திருக்குறளில் இல்லாத நாற்பால் வலியுறுத்திச் சொல்லப்பட்டுத் திருக்குறளின் ஆராய்ச்சிப் போக்கை அல்லது திருக்குறள் உணரும் நெறியை மாற்றிவிட்டது என்பார் இவர்.

அடுத்து வள்ளுவமாலை திருக்குறளுக்குத் தரும் இன்னொரு மதிப்பீட்டுரை வேதப்பொருளும் குறட்பொருளும் ஒன்றேயாம் என்பது. இது தவறான ஒப்பீடு. ஏனென்றால் வேதங்கள் இயற்கை சக்திகளையும் தெய்வங்களையும், யாகம்-சடங்குகள் செய்யும் முறைகளையும் விளக்குபவை; குறள் போல வாழ்வியல் நெறி; காதல் நெறிகளை விளக்குவன அல்ல. மேலும் குறளை இராமாயணம் போன்ற காப்பியங்களோடு ஒப்பிட்டதும் பொருத்தம் இல்லை.

வள்ளுவமாலைக் கருத்துக்கள் அந்தணர்-அந்தணர் அல்லாதவர் என்று வேற்றுமை பாராட்டும் கொள்கையைக் காட்டுவதாக உள்ளன என்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தொகுப்புரை

முன்னர் வள்ளுவமாலை திருக்குறளின் சிறப்புப் பாயிரமாகப் பேசப்பட்டது. ஆனால் இன்று யாரும் அதைக் குறளின் சிறப்புப் பாயிரம் என்று கருதவில்லை; இது இப்போது சில உரைகளின் பிற்சேர்க்கையாகவும் தனி நூலாகவும் படிக்கப்படுகிறது.

பொறுப்பற்ற நாடோடிகளின் கற்பனையில் உருவான கதையே வள்ளுவமாலை என்று ஒரு புறம் கூறப்பட மறுகோடியில் சிலர்க்கோ இது நல்லதோர் திறனாய்வு மாலையாகத் தோன்றியது. வள்ளுவமாலைப் பாடல்களே திருக்குறளைத் திரித்துப் பொருள் கொள்வதற்குப் பயன்பட்டன என ஒருசாரார் கூற மற்றவர்கள் இது கவித்துவம் மிக்க பாராட்டுப் பாடல் தொகுதி எனப் போற்றினர். எவ்வாறாயினும் குறளைப் பற்றி அறிதற்கு இது ஓர் பண்டைக் கருவி நூலாகத் திகழ்கிறது என்பதிலும் திருக்குறளின் சிறப்பை நன்கு சுவைத்துப் பிறரையும் சுவைக்கச் செய்கின்றது என்பதிலும் ஐயமில்லை.

இதன் காலம் கல்லாடர் காலமாகிய கி பி 11-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்பது பலரின் முடிவு.

வள்ளுவமாலையில் உள்ள பாடல்களுக்குள்ளேயே, குறள் அமைப்பு பற்றிய பால், இயல், அதிகாரம் என்ற கூறுகளைப் பற்றி மாறுபட்ட கருத்துகள் கூறப்பட்டுள்ளன. அதுபோலவே முப்பாலில் நாலு உறுதிப் பொருளையும் கூறியது என்று ஒரு பாட்டு கூற, நாலு உறுதிப் பொருளையும் நேரடியாகக் கூறியது என்கிறது இன்னொரு பாடல். திருக்குறளை அதனுடன் ஒப்புமையற்ற வேதம், வடமொழி இலக்கியங்களான இராமாயணம், மகாபாரதம் ஆகியவைகளோடு இணைத்துக் கூறியது ஒப்பிலக்கிய நோக்கில் பிழையானது. திருக்குறள் முதல்நூல் அல்ல; அது வழிநூல்; குறள் வடமொழி வேதத்தைத் தழுவியது போன்ற வள்ளுவமாலைக் கருத்துக்கள், இதனுள் குறளின் புகழுரை மட்டுமே அடங்கியிருக்கவில்லை, குறளின் வரலாற்றைத் திரிக்கும் பாடல்களும் இருக்கின்றன என்பதையும் உணர்த்துகின்றன.

திருக்குறள் பற்றிய பாராட்டுரைகள், புகழுரைகள், திறனாய்வுரைகள் கொண்ட பாடல் தொகுப்பு வள்ளுவமாலை.
வானொலி, தெய்வம், வேந்தன் பாராட்டுரை - இவை குறளுக்குத் தெய்வத்தன்மை தரும் நோக்கில் புனையப்பட்டதாகத் தோன்றுகின்றன.
குறளாசிரியரின் மீது வழங்கி வந்த பழியை நீக்க வேண்டும் என்ற எண்ணம் சில பாடல்களில் தெரிகிறது.
எந்த ஒரு நூலினும் மேம்பாடனது குறள் என்பதைக் காட்டவேண்டும் என்ற ஆர்வம் சில பாக்களில் காணப்படுகிறது.
இயலும் அதிகாரமும் இத்தனையென்று அரண் செய்ய விரும்பிய நோக்கம் சில பாடல்கள் மூலம் வெளிப்படுகிறது.
திருவள்ளுவரைக் கொண்டாடவும் திருக்குறளைப் புகழ்ந்தேத்தவும், குறள் பற்றிச் சுதந்திரமாக மொழியப்பட்ட பல புலவர்களின் கருத்துக்களின் தொகுப்பாக ஆக்கப்பெற்ற நூல் இது.



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

திருவள்ளுவ மாலை
இப்பாடற்றிரட்டு கடைக் கழகப் புலவராற் பாடப்பட்டதன்று.பிற்காலத்து ஆரியச்சார்பான ஒருவரோ ஒரு சிலரோ அவர்பெயரிற் பாடிவைத்ததாகும்.இதற்குச் சான்றுகள்:-
1. உடம்பிலி (அசரீரி) யுரையும் நாமகள் கூற்றும் இறைவன் பாராட்டும் என்று முப்பாக்கள் கலந்திருத்தல்.
2.இறையனாரகப் பொருளுரைக் கட்டுக் கதையிற் கூறப்பட்டுள்ள உருத்திரசன்மன் என்னும் ஐயாட்டை மூங்கைப் பிராமணச் சிறுவன், திருவள்ளுவரோடு ஒக்கவிருக்கவென்று வானுரையெழுந்ததாகக் கூறப்பட்டிருத்தல்.
3. இத்திருவள்ளுவமாலைப் பாடகராகக் குறிக்கப்பட்டவருட் பலர் திருவள்ளுவர் காலத்தவராக இருத்தல்.
4. திருக்குறள் ஆரியவேத வழிப்பட்டதாகப் பல பாட்டுக்கள் கூறுதல்.
5. பாக்களின் நடை பெரும்பாலும் பிற்காலத்த தாக விருத்தல்.
6. உருத்திரசர்மன் என்னும் இயற்பெயர் உயர்வுப்பன்மை வடிவிற் குறிக்கப்பட்டிருத்தல்.
7. நல்கூர்வேள்வியார் பெயரிலுள்ள பாவில் மாதாநுபங்கி என்னும் ஒரு பொருளற்ற வடசொல் ஆளப்பட்டிருத்தல்.
8. சில பாக்களில் திருவள்ளுவர் கருத்திற்கு மாறாகப் பிராமணரை அந்தணரென்று குறித்திருத்தல்.

உடம்பிலி (அசரீரி)
1. திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோ
டுருத்தகு நற்பலகை யொக்க-விருக்க
வுருத்திர சன்ம ரெனவுரைத்து வானி
லொருக்கவோ வென்றதோர் சொல்.
(பொழிப்புரை) உருத்திரசர்மன் கழகப் பலகையிடத்துத் திருவள்ளுவருடன் ஒக்கவிருக்க வென்று வானில் ஓர் உரையெழுந்த்து.

நாமகள்
2.நாடா முதனான் மறைநான் முகனாவிற்
பாடா விடைப்பா ரதம்பகர்ந்தேன்--கூடாரை
யெள்ளிய வென்றி யிலங்கிலைவேன் மாறபின்
வள்ளுவன் வாயதென் வாக்கு.
(பொ--ரை.) பாண்டிய வேந்தே!நான் படைப்புக் காலத்தில் நான்முகன் நாவிலிருந்து நான்மறை பாடினேன்; இடைக்காலத்திற் பாரதம் பாடினேன்;இன்று வள்ளுவன் வாயது என் பாட்டு.

இறையனார்
3.என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினு
நின்றலர்ந்து தேன்பிலிற்று நீர்மையதாய்க்--குன்றாத
செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்
மன்புலவன் வள்ளுவன் வாய்ச்சொல்.
(பொ-ரை.) திருவள்ளுவரின் திருக்குறள் நெடுங்காலஞ்செல்லினும் தேன் சொரியுந்தன்மையதான விண்ணக மலர்போலும்.

உக்கிரப்பெரு வழுதியார்.
4.நான்மறையின் மெய்ப்பொருளை முகப்பொருளா நான்முகத்தோன்
றான்மறைந்த வள்ளுவனாய்த் தந்துரைத்த - நூன்முறையை
வந்திக்க சென்னிவாய் வாழ்த்துக நன்னெஞ்சஞ்
சிந்திக்க கேட்க செவி.
(பொ-ரை) நான்முகன் வள்ளுவனாகத் தோன்றிக் கூறிய முப்பால் நூலை , என்தலை வணங்குக; வாய்வழுத்துக; மனம் ஊழ்குக (தியானிக்க) செவி கேட்க.

கபிலர்.
5.தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால் - மனையளகு
வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி.
(பொ-ரை) வீட்டுப் பறவைகள் வள்ளைப்பாட்டிற் குறங்கும் வளநாட்டரசே! திருவள்ளுவர் திருக்குறளின் சொற்சுருக்கப் பொருட்பெருக்கம். புல்நுனிப் பனித்துளி பனைவடிவைத் தன்னுள்ளடக்கிக் காட்டினாற் போலும்.

பரணர்
6.மாலுங் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியான்
ஞால முழுது நயந்தளந்தான் -வாலறிவின்
வள்ளுவருந் தங்குறள்வெண் பாவடியால் வையத்தா
ருள்ளுவ்வெல் லாமளந்தா ரோர்ந்து.
(பொ-ரை ) திருமால் குறளாய்த் தோன்றித்தன் இருபேரடியால் உலகனைத்தையும் அளந்தான்; ஆனால் திருவள்ளுவர் தம்குறளின் இரு சிற்றடியால் மாந்தர் கருத்தனைத்தையும் அளந்தார்.

நக்கீரர்
7.தானேமுழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளா
லான வறமுதலா வந்நான்கு - மேனோருக்
கூழி னுரைத்தாற்கு மொண்ணீர் முகிலுக்கும்
வாழியுல கென்னாற்று மற்று.
(பொ-ரை) தாமே எல்லாவற்றையும் அறிந்து நாற்பொருளையுங் குறள் வெண்பாவால் எல்லார்க்கும் எளிதாயறிவித்த திருவள்ளுவர்க்கும் மழைபொழியும் முகிலுக்கும் உலகம் என்ன கைம்மாறு செய்யவல்லதாம் ?

மாமூலனார்.
8.அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின்
றிறந்தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும்
வள்ளுவ னென்பானோர் பேதை யவன்வாய்ச்சொற்
கொள்ளா ரறிவுடை யார்.
(பொ-ரை) அறமுதலிய நான்கையும் உள்ளவா றுலகிற் குணர்த்திய தெய்வப் புலவரை , மறந்தேனும் மாந்தனாகக் கொள்ளும் அறிவிலியின் கூற்றை அறிவுடையோர் கொள்ளார்.

கல்லாடர்
9.ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனி
னன்றென்ப வாறு சமயத்தார் - நன்றென
வெப்பா லவரு மியைபவே வள்ளுவனார்
முப்பான் மொழிந்த மொழி.
(பொ-ரை) அறுவகை மதத்தாரும் ஒருபொருளின் இயல்பை இன்னதென்று ஒருமதத்தார் கூறின், அதைமறுத்து வேறாகக் காட்டுவர் ஏனை மதத்தாரெல்லாரும் , ஆனால் திருவள்ளுவர் தம் முப்பாலிற் சொன்னவற்றையோ உண்மையென்று எல்லாரும் ஒத்துக்கொள்வர்.

சீத்தலைச்சாத்தனார்.
10.மும்மலையு முந்நாடு முந்நதியு முப்பதியு
மும்முரசு முத்தமிழு முக்கொடியு - மும்மாவுந்
தாமுடைய மன்னர் தடமுடிமேற் றாரன்றோ
பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்.
(பொ-ரை) திருவள்ளுவரின் முப்பால் , மலை , நாடு ஆறு நகர் , முரசு, கொடி , குதிரை, தமிழ் ஆகியவற்றை மும்மூன்றாகக் கொண்ட மூவேந்தரின் முடிமாலை போல்வதாம்.

மருத்துவன் தாமோதரனார்
11.சீந்திநீர்க் கண்டந் தெறிசுக்குத் தேனளாய்
மோந்தபின் யார்க்குந் தலைக்குத்தில் - காந்தி
மலைக்குத்து மால்யானை வள்ளுவர்முப் பாலாற்
றலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு.
(பொ-ரை) மலையப் பகையென்று குத்தும் யானைபோலும் அரசே! சீந்திற் சருக்கரையும் சுக்குப் பொடியும் தேனுங் கலந்து மோந்தால், யாருக்குந் தலைவலி நீங்கிவிடும். திருவள்ளுவர் திருக்குறளைப் பார்த்தபின் சீத்தலைச்சாத்தனாருக்குப் பிறர் பாடல்களால் ஏற்பட்ட தலைவலி நீங்கிற்று.

நாகன் தேவனார்.
12.தாளார் மலர்ப்பொய்கை தாங்குடைவார் தண்ணீரை
வேளா தொழிதல் வியப்பன்று - வாளாதா
மப்பா லொருபாவை யாப்பவோ வள்ளுவனார்
முப்பால் மொழிமூழ்கு வார்.
(பொ-ரை) தாமரைக்குளத்திற் குளிப்பார் பிறகுளத்தை விரும்பார்.அதுபோல் திருவள்ளுவரின் திருக்குறளைக் கற்றார் பிற நூல்களை விரும்பார்.

அரசில் கிழார்.
13.பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு
தெரிந்து திறந்தொறுஞ் சேரச் - சுருங்கிய
சொல்லால் விரித்துப் பொருள் விளங்கச் சொல்லுதல்
வல்லாரார் வள்ளுவரல் லால்.
(பொ--ரை.) விரிவுபட்டுக் கிடக்கும் வெவ்வேறு பொருள்களையெல்லாம் ஒழுங்காகக் கூறுபடுத்திச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலில் வள்ளுவரன்றி வேறு யார்?

பொன்முடியார்
14.கானின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன்
கூநின் றளந்த குறளென்ப--நுன்முறையான்
வானின்று மண்ணின் றளந்ததே வள்ளுவனார்
தாநின் றளந்த குறள்.
(பொ--ரை.) மாலையணிந்த அரசே! முன்பு காசிபன் தந்த குறள் மண்ணில் நின்று உலகத்தை அளந்தது; இன்று திருவள்ளுவர் தந்த குறள் மண்ணிலும் விண்ணிலும் நின்று உலகத்தையளந்தது.

கோதமனார்
15.ஆற்ற லழியுமென் றந்தணர்க ணான்மறையைப்
போற்றியுரைத் தேட்டின் புறத்தெழுதா--ரேட்டெழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினு மாற்றல்சோர் வின்று.
(பொ--ரை.) பிராமணர் நால்வேதங்களையும் ஏட்டில் எழுதினால் அவற்றின் வலிமை கெடுமென்று வாய்ப் பாடமாகவே சொல்லிக் காத்துவருவர்; திருவள்ளுவரின் திருக்குறளையோ ஏட்டிலெழுதினாலும் எவர் படித்தாலும் அதன் வலிமை குறைவதில்லை.
பிராமணர் ஆரிய வேதங்களை ஏட்டிலெழுதாதிருந்தமைக்குக் கரணியங்கள்--
1. ஏட்டிலெழுதினால் அவற்றின் வெள்ளைக் கோட்டியும் பிள்ளைக் கருத்தும் வெளியாகிவிடுமென்னும் அச்சம்.
2. ஏட்டிலெழுதினால் எல்லாருங் கற்றுப் பூசாரித்தொழிலை மேற்கொண்டு பிராமணர்க்குப் பிழைப்பில்லாது செய்து விடுவாரென்னும் அச்சம்.
3. ஏட்டிலெழுதாதிருந்தால் மேன்மேலுங் காலத்திற்கேற்ற திருந்திய கருத்துக்களைச் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்புண்மை.

நத்தத்தனார்
16.ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும்
பாயிரத்தி னோடு பகர்ந்ததற்பின்--போயொருத்தர்
வாய்க்கேட்க நூலுளவோ மன்னு தமிழ்ப்புலவ
ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்.
(பொ--ரை.) ஒருவர் திருக்குறள் முழுவதையுங் கற்றபின், பிறருக்கு ஆசிரியராகிக் கற்பிக்கலாம். ஆனால், ஒருவரிடம் மாணவரா யமர்ந்து கற்க நூலில்லை.

முகையலூர்ச் சிறுகருத்தும்பியார்
17.உள்ளுத லுள்ளி யுரைத்த லுரைத்ததனைத்
தெள்ளுத லன்றே செயற்பால--வள்ளுவனார்
முப்பாலின் மிக்க மொழியுண் டெனப்பகர்வா
ரெப்பா வலரினு மில்.
(பொ--ரை.) திருக்குறளினுஞ் சிறந்தநூல் ஒன்றுண்டென்று எப்புலவருஞ் சொல்லார். ஆதலால் நாம் செய்யவேண்டியது அதை யுள்ளஞ்செறாது உரைத்துத் தெளிதலே.

ஆசிரியர் நல்லந்துவனார்
18.சாற்றிய பல்கலையுந் தப்பா வருமறையும்
போற்றி யுரைத்த பொருளெல்லாந்--தோற்றவே
முப்பான் மொழிந்த முதற்பா வலரொப்பா
ரெப்பா வலரினு மில்.
(பொ--ரை.) எல்லாக் கலைநூற்பொருள்களையும் எடுத்துக்கூறும் திருக்குறளை யியற்றிய, திருவள்ளுவரை யொத்த புலவர் ஒருவருமில்லை.

கீரந்தையார்
19.தப்பா முதற்பாவாற் றாமாண்ட பாடலினான்
முப்பாலி னாற்பான் மொழிந்தவ-- ரெப்பாலும்
வைவைத்த கூர்மேல் வழுதி மனமகிழத்
தெய்வத் திருவள் ளுவர்.
(பொ--ரை.) பாண்டியன் மனமகிழ நாற்பொருளையும் முப்பாலிற் குறள் வெண்பாவாற் கூறியவர் தெய்வப் புலமைத் திருவள்ளுவரே.

சிறுமேதாவியார்
20.வீடொன்று பாயிர நான்கு விளங்கற
நாடிய முப்பத்து மூன்றென்றூழ்-கூடுபொரு
ளெள்ளி லெழுப திருபதிற் றைந்தின்பம்
வள்ளுவர் சொன்னவகை.
(பொ--ரை.) திருக்குறள் அதிகாரத்தொகை:பாயிரம் நான்கு; அறத்துப்பால் முப்பத்து மூன்று; ஊழ் ஒன்று; பொருட்பால் எழுபது; இன்பத்துப்பால் இருபத்தைந்து.

நல்கூர்வேள்வியார்
21.உப்பக்க நோக்கி யுபகேசி தோண்மணந்தா
னுத்தர மாமதுரைக் கச்சென்ப-இப்பக்க
மாதாநு பங்கி மறுவில் புலச்செந்நாப்
போதார் புனற்கூடற் கச்சு
(பொ--ரை.) வட மதுரைக்குக் கண்ணனை நிலைக்களமாகக் கூறுவர்; வைகை மதுரையான தென்மதுரைக்குத் திருவள்ளுவர் நிலைக்களமாவார்.

தொடித்தலைவிழுத்தண்டினார்
22.அறநான் கறிபொரு ளேழொன்று காமத்
திறமூன் றெனப்பகுதி செய்து-பெறலரிய
நாலு மொழிந்தபெரு நாவலரே நன்குணர்வார்
போலு மொழிந்த பொருள்.
(பொ--ரை.) அறத்தைப் பாயிரம், இல்லறம், துறவறம், ஊழ் என நான்காகவும், பொருளை அரசு. அமைச்சு, அரண், கூழ், படை, நட்பு, குடி என ஏழாகவும், இன்பத்தை ஆண்பாற் கூற்று, பெண்பாற்கூற்று, இருபாற்கூற்று என மூன்றாகவும் வகுத்து, நாற்பொருளையுங் கூறிய திருவள்ளுவரே வேருபொருளிருப்பினும் அதையறிவார் போலும்!
நாடு அரணுள் அடக்கப்பட்டது.

வெள்ளிவீதியார்
23.செய்யா மொழிக்குந் திருவள் ளுவர்மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே-செய்யா
வதற்குரிய ரந்தணரே யாராயி னேனை
யிதற்குரிய ரல்லாதா ரில்
(பொ--ரை.) ஒருவராலும் இயற்றப் படாத வேதமும் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளும் கூறும் பொருள் ஒன்றே. இவற்றுள் முன்னது பிராமணர்க்கே யுரியது; பின்னதோ எல்லார்க்கும் பொதுவாம்.
குறிப்பு.-ஆரிய வேதத்தைச் செய்யாமொழி யென்றது ஒரு துணிச்சல் மிக்க ஏமாற்று. அதற்கும் திருக்குறட்கும் பொருள்ஒன்றே யென்றது நெஞ்சழுத்தம் மிக்க பொய். இவற்றை நம்பிய புலவரோ தமிழகத்தைக் கெடுத்த தசைப்பிண்டங்கள். திருக்குறளைப் பொய்யாமொழி யென்றமையின், வேதம் பொய்மொழியென்பது எதிர் நிலை யளவையாற் பெறப்படும்.

மாங்குடி மருதனார்
24.ஓதற் கெளிதா யுணர்தற் கரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றோ
ருள்ளாதோ றுள்ளுதோ றுள்ள முருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு.
(பொ--ரை.) திருவள்ளுவரின் திருவாய்மொழி, படிப்பதற் கெளிதாயும் பொருளுணர்தற் கரிதாயுமுள்ள மந்திரநூலாக விளங்கி, தூயவறிஞர் நினைக்குந்தோறும் அவருள்ளத்தை யுருக்கும்.

எறிச்சலூர் மலாடனார்
25.பாயிர நான்கில் லறமிருபான் பன்மூன்றே
தூய துறவறமொன் றூழாக - வாய
வறத்துப்பா னால்வகையா வாய்ந்துரைத்தார் நூலின்
றிறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து.
(பொ--ரை.) திருவள்ளுவர் நன்றாக ஆய்ந்து பாயிரம் நான்கதி காரமும் இல்லறவியல் இருபததிகாரமும் துறவறவியல் பதின்மூன்றதிகாரமும் ஊழ் ஓரதிகாரமுமாக, அறத்துப்பாலை நால்வகையாக வகுத்துரைத்தார்.

போக்கியார்
26.அரசிய லையைந் தமைச்சிய லீரைந்
துருவல் லரணிரண்டொன் றொண்கூ - ழிருவியல்
திண்படை நட்புப் பதினேழ் குடிபதின்மூன்
றெண்பொரு ளேழா மிவை.
(பொ--ரை.) திருக்குறளின் பொருட்பால், அரசியல் இருபத்தைந் ததிகாரமும், அமைச்சியல் பத்ததிகாரமும், அரணியல் ஈரதிகாரமும் பொருளியல் ஓரதிகாரமும், படையியல் ஈரதிகாரமும் நட்பியல் பதினேழதிகாரமும்; குடியியல் பதின்மூன்றதிகாரமுமாக ஏழுபகுதிகளையுடையதாம்.

மோசிகீரனார்
27.ஆண்பாலே ழாறிரண்டு பெண்பா லடுத்தன்பு
பூண்பா லிருபாலோ ராறாக - மாண்பாய
காமத்தின் பக்கமொரு மூன்றாகக் கட்டுரைத்தார்
நாமத்தின் வள்ளுவனார் நன்கு.
(பொ--ரை.) திருவள்ளுவர் ஆண்பாற்கூற்று ஏழதிகாரமும் பெண்பாற் கூற்றுப் பன்னீரதிகாரமும் இருபாற் கூற்று ஆறதிகாரமுமாக, இன்பத்துப்பாலை மூன்றாக வகுத்துரைத்தார்.

காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்
28.ஐயாறு நூறு மதிகார மூன்றுமா
மெய்யாய வேதப் பொருள்விளங்கிப் - பொய்யாது.
தந்தா னுலகிற்குத் தான்வள் ளுவனாகி
யந்தா மரைமே லயன்.
(பொ--ரை.) நான்முகன் திருவள்ளுவனாகி வடமொழி வேதப் பொருளைத் தமிழில் 133 அதிகாரமாக விளக்கிக் கூறினான்.

மதுரைத் தமிழ் நாகனார்
29.எல்லாப் பொருளு மிதன்பா லுளவிதன்பா
லில்லாத வெப்பொருளு மில்லையாற் - சொல்லாற்
பரந்தபா வாலென் பயன்வள் ளுவனார்
சுரந்தபா வையத் துணை.
(பொ--ரை.) எல்லாப் பொருளும் இதன்கண் உள. இதில் இல்லாத பொருள் ஒன்றுமில்லை. ஆதலால், உலகத்தார்க்கு இவ்வொரு நூலே போதுமானதாம்.

பாரதம் பாடிய பெருந்தேவனார்
30.எப்பொருளும் யாரு மியல்பி னறிவுறச்
செப்பிய வள்ளுவர்தாஞ் செப்பவரு - முப்பாற்குப்
பாரதஞ்சீ ராம கதைமனுப் பண்டைமறை
நேர்வனமற் றில்லை நிகர்.
(பொ--ரை.) எல்லாப்பொருளையும் எல்லாரும் உள்ளவாறறியுமாறு திருவள்ளுவர் இயற்றிய திருக்குறட்குப், பாரதம், இராமாயணம் மனுதருமசாத்திரம், நால் வேதம் ஆகிய நான்கே ஒப்பாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

உருத்திர சன்ம கண்ணர்
31. மணற்கிளைக்க நீரூறு மைந்தர்கள் வாய்வைத்
துணச்சுரக்குந் தாய்முலை யொண்பால் - பிணக்கிலா
வாய்மொழி வள்ளுவர் முப்பான் மதிப்புலவோர்க்
காய்தொறு மூறு மறிவு.
(பொ--ரை.) நீர்நிலை யடுத்த மணலைத் தோண்டுந்தோறும் நீரூறும். குழந்தை வாய்வைத் துறிஞ்சுந்தோறும் தாய்முலை சுரக்கும். அவைபோல், திருக்குறளை ஆராயுந்தோறும் அறிவு பெருகும்.

பெருஞ்சித்திரனார்
32.ஏதமில் வள்ளுவ ரின்குறள்வெண் பாவினா
லோதிய வொண்பொரு ளெல்லா- முரைத்ததனாற்
றாதவிழ் தார்மாற தாமே தமைப்பயந்த
வேதமே மேதக் கன.
(பொ--ரை.) மாலையணிந்த பாண்டிய வேந்தே! திருவள்ளுவர் வேதங்களின் சிறந்தபொருளை யெல்லாம் குறள்வெண்பாவாற் கூறிவிட்டமையால், இவற்றுள் எவை மேம்பட்டவை?

நரிவெரூஉத் தலையார்
33.இன்பம் பொருளறம் வீடென்னு மிந்நான்கு
முன்பறியச் சொன்ன முதுமொழிநூன்- மன்பதைகட்
குள்ள வரிதென் றவைவள் ளுவருலகங்
கொள்ள மொழிந்தார் குறள்.
(பொ--ரை.) நாற்பொருளையும் மக்கட்கு அறிவிக்கும்படி இயற்றப்பட்ட நால் வேதங்கள் அவரால் உணர்தற்கு அரியதாயிருந்ததனால், அவற்றை யெளிதா யுணருமாறு திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.

மதுரைத்தமிழாசிரியர் செங்குன் றூர்கிழார்
34.புலவர் திருவருள் ளுவரன்றிப் பூமேற்
சிலவர் புலவரெனச் செப்பல் - நிலவு
பிறங்கொளிமா லைக்கும் பெயர்மாலை மற்றுங்
கறங்கிருண்மா லைக்கும் பெயர்.
(பொ--ரை.) திருவள்ளுவரையும் பிற புலவரையும் புலவரென்று சமமாகச் சொல்லுதல், முழுமதி மாலையையும் காருவா அமாவாசை மாலையையும் மாலையென்றே ஒரே சொல்லாற் குறிப்பது போலும்.

மதுரை யறுவை வாணிகன் இளவேட்டனார்
35.இன்பமுந் துன்பமு மென்னு மிவையிரண்டு
மன்பதைக் கெல்லா மனமகிழ- வன்பொழியா
துள்ளி யுணர வுரைத்தாரே யோதுசீர்
வள்ளுவர் வாயுறை வாழ்த்து.
(பொ--ரை.) மக்களெல்லாரும் தமக்கு வரும் இன்பதுன்பக்கரணியங்களை யறிந்து துன்பத்தினின்று தப்பி யின்புறும்பொருட்டு, திருவள்ளுவர் திருக்குறளை வாயுறை வாழ்த்தாகப்பாடினார்.
வாயுறை வாழ்த்தாவது, முன்பு வெறுப்பை விளைப்பினும் பின்பு நலம் பயக்கும் நன் மருந்துபோற் பயன்படும் அறிவுரை வாயுறுத்தும் மருந்து.

கவிசாகரப் பெருந்தேவனார்
36.பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புனத
மாவிற் கருமுனியா யானைக்- கமரரும்பல்
தேவிற் றிருமா லெனச்சிறந்த தென்பவே
பாவிற்கு வள்ளுவர்வெண் பா.
(பொ--ரை.) பூவிற்குத் தாமரையும், பொன்னிற்கு நாவற் சாறமும், ஆவிற்குக் காமதேனுவும் யானைக்கு ஐராவதமும், தேவிற்குத் திருமாலும், நூலிற்குத் திருக்குறளும் சிறந்தனவாம்.

மதுரைப் பெருமருதனார்
37.அறமுப்பத் தெட்டுப் பொருளெழுப தின்பத்
திறமிருபத் தைந்தாற் றெளிய - முறைமையால்
வேத விழுப்பொருளை வெண்குறளால் வள்ளுவனா
ரோதவழுக் கற்ற துலகு.
(பொ--ரை.) திருவள்ளுவர், அறத்தை முப்பத்தெட் டதிகாரங்களாகவும் பொருளை எழுபததிகாரங்களாகவும் இன்பத்தை இருபத்தைந் ததிகாரங்களாகவும் வகுத்து, வேதப் பொருளைக் குறள் வெண்பாவாற் கோவைபடக் கூறியதால், உலகம் தீயொழுக்கத்தினின்றும் தீர்ந்தது.

கோவூர் கிழார்
38.அறமுத னான்கு மகலிடத்தேச ரெல்லாந்
திறமுறத் தேர்ந்து தெளியக் - குறள்வெண்பாப்
பன்னிய வள்ளுவனார் பான்முறைநே ரொவ்வாதே
முன்னை முதுவோர் மொழி.
(பொ-ரை.) நாற்பொருளையும் மக்கள் ஆய்ந்து தெளிதற்பொருட்டுத் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறட்கு முந்துநூல் ஒன்றும் நிகராகாது.

உறையூர் முதுகூற்றனார்
39. தேவிற் சிறந்த திருவள்ளுவர் குறள்வெண்
பாவிற் சிறந்திடுமுப் பால்பகரார்- நாவிற்
குயலில்லை சொற்சுவை யோர்வில்லை மற்றுஞ்
செயலில்லை யென்னுந் திரு.
(பொ-ரை.) தெய்வப் புலமைத் திருவள்ளுவரின் திருக்குறளை ஓதாதவரின் நாவிற்கு இன்சொற் சொலவில்லை; உடம்பிற்கு நல்வினையில்லை என்று கருதித் திருமகள் அவரிடஞ் சேரான்.

இழிகட் பெருங்கண்ணனார்
40.இம்மை மறுமை யிரண்டு மெழுமைக்குஞ்
செம்மை நெறியிற் றெளிவுபெற - மும்மையின்
வீடவற்றி னான்கின் விதிவழங்க வள்ளுவனார்
பாடின ரின்குறள்வெண் பா.
(பொ-ரை.) இம்மை மறுமைக்கும் எழுபிறப்பிற்கும் பயன்படவும் நாற்பொருளும் நடைபெறவும், திருவள்ளுவர் திருக்குறளியற்றினர்.

செயிர்க்காவிரியார் மகனார் சாத்தனார்
41.ஆவனவு மாகா தனவு மறிவுடையார்
யாவரும் வல்லா ரெடுத்தியம்பத் - தேவர்
திருவள் ளுவர்தாமுஞ் செப்பியவே செய்வார்
பொருவி லொழுக்கம் பூண்டார்.
(பொ-ரை.) மக்களுக்கு வேண்டியவற்றையும் வேண்டாத வற்றையும் அறிஞரும் எடுத்துச் சொல்லுமாறு, திருவள்ளுவர் இயற்றிய திருக்குறட் கூற்றுக்களையே, ஒழுக்கத்தில் உயர்ந்தோர் கடைப்பிடிப்பர்.

செயலூர்க் கொடுஞ்செங்கண்ணனார்
42.வேதப் பொருளை விரகால் விரித்துலகோ
ரோதத் தமிழா லுரைசெய்தா - ராதலா
லுள்ளுந ருள்ளும் பொருளெல்லா முண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு.
(பொ-ரை.) திருவள்ளுவர் ஆரிய வேதப்பொருளைத் தமிழுலகம் அறிதற்பொருட்டுத் தமிழில் விரித்துரைத்தார். ஆதலால், திருக்குறளில் மக்கள் கருதும்பொருள்களெல்லாம் உள்ளன.

வண்ணக்கஞ் சாத்தனார்
43.ஆரியமுஞ் செந்தமிழு மாராய்ந் திதனினிது
சீரிய தென்றொன்றைச் செப்பரிதா- லாரியம்
வேத முடைத்து தமிழ்திரு வள்ளுவனா
ரோது குறட்பா வுடைத்து.
(பொ-ரை.) வடமொழியையும் தென்மொழியையும் ஒப்பு நோக்கி இது சிறந்தது என்று ஒன்றைச் சொல்ல முடியாது. வடமொழியில் வேதமுள்ளது; தென்மொழியில் திருக்குறள் உள்ளது. ஆதலால், இரண்டும் சமமே.

களத்தூர்கிழார்
44.ஒருவ ரிருகுறளே முப்பாலி னோதுந்
தரும முதனான்குஞ் சாலு - மருமறைக
ளைந்துஞ் சமயநூ லாறுநம் வள்ளுவனார்
புந்தி மொழிந்த பொருள்.
(பொ-ரை.) இருக்குமுதல் பாரதம் ஈறான வேதங்கள் ஐந்தும் வேதவழிப்பட்ட சாத்திரங்கள் ஆறும், திருவள்ளுவர் நூலிலடங்கும்; ஆதலால் ஒருவர் உய்வதற்கு, ஓரெதுகையும் ஈரெதுகையுமாகிய இருவகைக் குறளாலு மமைந்த முப்பாலிற் சொல்லப்பட்ட நாற்பொருளையும் அறிந்தாற் போதும்.

நச்சுமனார்
45.எழுத்தசை சீரடி சொற்பொருள் யாப்பு
வழுக்கில் வனப்பணி வண்ண- மிழுக்கின்றி
யென்றெவர் செய்தன வெல்லா மியம்பின
வின்றிவ ரின்குறள்வெண் பா.
(பொ-ரை.) எழுத்து முதல் வண்ணம் ஈறாகச் சொல்லப்பட்ட எல்லாம் அழகாக எவ்வெக்காலத்தில் எவ்வெவராற் சொல்லப்பட்டனவோ, அவையெல்லாம் இக்காலத்து இத்திருவள்ளுவரால் இயற்றப்பட்ட இனிய குறள் வெண்பாக்களிற் சொல்லப்பட்டுள்ளன.

அக்காரக்கனி நச்சுமனார்
46.கலைநிரம்பிக் காண்டற் கினிதாகிக் கண்ணி
னிலைநிரம்பு நீர்மைத் தெனினுந்- தொலைவிலா
வானூர் மதியந் தனக்குண்டோ வள்ளுவர்முப்
பானூ னயத்தின் பயன்.
(பொ-ரை.) மதியமும் முழுமதியும் முப்பால் நூலும் முறையே பதினாறுகலைகளாலும் அறுபத்துநான்கு கலைகளாலும் நிறைந்து காண்பதற்கும் ஆராய்தற்கும் இனிதாகி, புறக் கண்ணிற்குத் தண்மையும் அகக்கண்ணிற்குப் பண்பும் உடைத்தாயினும், முப்பால் நூலால் விளையும் பயன் மதியினிடத்துண்டோ?

நப்பாலத்தனார்
47.அறந்தகளியான்ற பொருடிரி யின்பு
சிறந்தநெய் செஞ்சொற்றீத் தண்டு-குறும்பாவா
வள்ளுவனா ரியற்றினார் வையத்து வாழ்வார்க
ளுள்ளிரு ணீக்கும் விளக்கு.
(பொ-ரை.) திருவள்ளுவர் அறத்தை அகலாகவும், பொருளைத் திரியாகவும் இன்பத்தை நெய்யாகவும், சொல்லை நெருப்பாகவும், குறட்பாவைத் தண்டாகவும் கொண்டு, உலகத்தோரின் அகவிருளை நீக்கும் விளக்கேற்றினார்.

குலபதிநாயனார்
48. உள்ளக் கமல மலர்த்தி யுளத்துள்ள
தள்ளற் கரியவிரு டள்ளுதலால்-வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பாவும் வெங்கதிரு மொக்குமெனக்
கொள்ளத் தருங்குணத்தைக் கண்டு.
(பொ-ரை.) நெஞ்சத் தாமரையை விரியச் செய்து அகவிருளை நீக்குந் திருக்குறளும், நீர்த்தாமரையை விரியச் செய்து புறவிருளை நீக்கும் கதிரவனும், குணத்தால் ஒக்குமென்று கொள்ளத்தகும்.

தேனீக் குடிக்கீரனார்
49. பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத
மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே-முப்பாலில்
தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால்
வையத்து வாழ்வார் மனத்து.
(பொ-ரை.) தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரின் திருக்குறளைக் கற்று அல்லது கேட்டு அறிந்ததனால், மக்கள் மனத்தில் மெய்த் தன்மையான வெல்லாம் மெய்யாகவும் பொய்த்தன்மையான வெல்லாம் பொய்யாகவும் விளங்கிவிட்டன.

கொடிஞாழன் மாணிபூதனார்
50. அறனறிந்தே மான்ற பொருளறிந்தே மின்பின்
திறனறிந்தேம் வீடு தெளிந்தேம்- மறனெறிந்த
வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயாற்
கேளா தனவெல்லாங் கேட்டு.
(பொ-ரை.) பகைவென்ற பாண்டிய! திருவள்ளுவர் வாயினின்று, இதற்குமுன் கேட்டிராதவையெல்லாம் கேட்டு நாற்பொருளின் இயல்பையும் நன்றாய் அறிந்தேம்.

கவுணியனார்
51. சிந்தைக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய
வந்த விருவினைக்கு மாமருந்து-முந்திய
நன்னெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார்
பன்னிய வின்குறள்வெண் பா.
(பொ-ரை.) நாம் நல்லொழுக்க வழியை அறிதற்பொருட்டுப் புலமை மிக்க திருவள்ளுவர் இயற்றிய இனிய குறள்வெண்பாக்கள் ஆராய்ந்தால் மனத்திற்கும் கேட்டாற் செவிக்கும் ஓதினால் நாவிற்கும் இன்பந்தருவன; தொன்றுதொட்டு வரும் இருவினைகளாகிய நோய்கட்குச் சிறந்த மருந்தாவன.

மதுரைப் பாலாசிரியனார்
52.வெள்ளி வியாழம் விளங்கிரவி வெண்டிங்கள்
பொள்ளென நீக்கும் புறவிருளைத்-தென்னிய
வள்ளுவ ரின்குறள் வெண்பா வகிலத்தோர்
ருள்ளிரு ணீக்கு மொளி.
(பொ-ரை.) வெள்ளி வியாழன் கதிரவன் திங்கள் என்பன புறவிருளை நீக்கும் ஒளிகளாம். அவைபோலத் திருவள்ளுவரின் இனிய குறள் வெண்பா அகவிருள் நீக்கும் ஒளியாம்.

ஆலங்குடி வங்கனார்
53.வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்குந்
தெள்ளமுதின் றீஞ்சுவையு மொவ்வாதால்-தெள்ளமுதம்
உண்டறிவார் தேவ ருலகடைய வுண்ணுமால்
வண்டமிழின் முப்பால் மகிழ்ந்து.
(பொ-ரை.) திருவள்ளுவர் பாட்டின் தீஞ்சுவைக்குத் தெள்ளமுதமும் ஒவ்வாது. தெள்ளமுதைத் தேவர் மட்டும் உண்டு சுவைப்பர்; முப்பாலமுதையோ உலகத்தாரனைவரும் உண்டு சுவைப்பர்.

இடைக்காடர்
54.கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறுத்த குறள்.
(பொ-ரை.) திருக்குறளின் சொற்சுருக்கமும் பொருட்பெருக்கமும் நோக்கின், ஒவ்வொரு குறளும், கடுகின் நடுவில் துளைசெய்து அதில் எழுகடல் நீரையும் பாய்ச்சி, மேலும் அது அளவிற் குறுகும் வண்ணம் சற்றுத் தறித்துவைத்தாற் போன்றதாம்.

ஒளவையார்
55.அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்.
(பொ-ரை.) திருக்குறளின் சொற்சுருக்கத்தையும் பொருட்பெருக்கத்தையும் நோக்கின், ஒவ்வொரு குறளும், கடுகினும் மிக நுண்ணிய அணுவைத் துளையிட்டு அதில் எழுகடல் நீரையும் பாய்ச்சி, மேலும் அது அளவிற் குறுகும் வண்ணம் சற்றுத் தறித்து வைத்தாற் போன்றதாம்.

குறிப்புகள்:
(1) இத் திருவள்ளுவ மாலை கடைக்கழகப் புலவரால் பாடப் பட்டதன்றாயினும் பலபாக்களிலுள்ள கருத்துக்கள் சிறந்தனவும் நடுநிலையானவும் மேற்கோளாக ஆளத்தக்கனவுமாக உள்ளன.
(2) சில பாக்கள் அவற்றைப் பாடியவரின் அளவிறந்த ஆரிய வெறியையோ அடிமைத் தனத்தையோ காட்டுவனவாக வுள்ளன.
(3) சிலபாக்கள் அளவிறந்த உயர்வுநவிற்சியாகவுள்ளன.
(4) சிலபாக்கள் நூலின் பாகுபாட்டையே எடுத்துக்கூறுவன.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard