Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 11. நாவினால் சுட்ட வடு


Guru

Status: Offline
Posts: 7329
Date:
11. நாவினால் சுட்ட வடு
Permalink  
 


 11. நாவினால் சுட்ட வடு


தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு (திருக்குறள் 129)
இக்குறளுக்கான விளக்கம்: ஒருவனுக்குத் தீயினால் சுட்ட புண்ணின் தழும்பு உடம்பிலே இருப்பினும், அப்புண்ணால் ஏற்பட்ட வேதனை அவன் உள்ளத்தில் ஆறிவிடும். ஆனால் ஒருவன் தன் நாவினால் (கடுஞ்சொல்லால்) சுட்டால் அது பாதிக்கப்பட்டவனது உள்ளத்தில் ஆறாமல், மாறா வடுவாய் இருக்கும்.
தண்டியலங்காரத்தில் எட்டாவதாகக் கூறப்படும் அணி வேற்றுமை அணி ஆகும்.
இரு பொருள்களுக்கிடையே உள்ள ஒப்புமையை வெளிப்படையாகவோ, குறிப்பாகவோ முதலில் கூறிப் பின்னர் அவற்றுக்கிடையே வேற்றுமை தோன்றக் கூறுவது வேற்றுமை அணி ஆகும்
தீயும் வெவ்வுரையும் சுடுதல் தொழிலான் ஒக்கும் ஆயினும், ஆறாமையால் தீயினும் வெவ்வுரை கொடிது என்பது போதரலின், இது குறிப்பால் வந்த வேற்றுமை அலங்காரம் என்று பரிலேலழகர் குறிப்பிடுகின்றார்.

புண்- வடு, இரண்டிற்கும் வேறுபாடு என்ன? புண் என்பது மருந்திட்டால் ஆறிவிடும். அதனால் உண்டாகும் வடு அல்லது தழும்பு என்றுமே மாறாது, அப்படியே இருக்கும்.
புண் என்பது மருந்திட்டால் ஆறிவிடும். ஆனால் அதனால் உண்டாகும் வடு அல்லது தழும்பு என்றுமே மாறாது. அது அப்படியே இருக்கும்.
'உள்ளாறும்' என்றது வலி மறைந்து போய்விடும் என்ற பொருளிலும், ஆறாது என்றது நினைக்குந்தோறும், அப்போது உண்டாவது போல, மனம் கொதிக்கும் என்ற பொருள் தருமாறும் பாடலில் சொல்லப்பட்டன.
சுடுசொல் ஏற்றவன் மனநிலையைக் காட்டுவதாக உள்ள இப்பாடல் ஏன் 'அடக்கமுடைமை' அதிகாரத்துள் சொல்லப்பட்டது? இதற்குப் பரிப்பெருமாள் 'சொற்சோர்வினால் வருங்குற்றம் என்னை? என்றார்க்கு அது கேட்டார்க்குச் சுடும், அதனானே தனக்குக் குற்றம் வரும் என்றது' என விளக்கம் தருகிறார். அதாவது 'கேட்பவர் உள்ளம் வேகும்படியான எரியூட்டும் சொற்களால் பேசாது நாவை அடக்குக; பிறருடைய உள்ளத்தைப் புண்படுத்தும் சொல்லைச் சொல்லித் தனக்குக் குற்றம் வராமல் காத்துக்கொள்க' என்பது இதன் உட்பொருள். கேட்போர் மனம் புண்படுமாறு கொடுஞ்சொற் கூறலாகாது என்பது பாடல் தரும் செய்தி.
புண் என்பது காயத்தைக் குறிக்கும். வடு என்ற சொல் தழும்பு என்ற பொருள் தரும்.
புண் ஆறிப்போகும் இயல்புடையது. வடுவோ ஆறிப்போன புண்ணுடைய தழும்பாய்ப் பலகாலம் நீடித்து இருக்கும். இவ்வேறுபாடு தோன்றவே இரண்டு வெவ்வேறு சொற்களை ஆண்டார் வள்ளுவர். ஆறிவிடும் தீச்சூட்டை வள்ளுவர் புண் என்றும் நீண்டகாலம் ஆறாத நாச்சூட்டை வடு என்றும் அடையாளப்படுத்திக் கூறினார். நாவினாற் சுட்டது புண்ணின் நிலைமையும் வடுநிலைமையும் ஒருங்கே கொண்டது என்பதை உணர்த்தச் 'சுட்ட வடு' என்றார். தீப்பட்ட இடம் புண்ணாகிப் பிறகு உலர்ந்து போய்விடும். ஆனால் சுடுசொற்களால் பட்ட புண், மனத்து உள்ளே இருந்து மாறாத வடு போல வலி தந்துகொண்டே இருக்கும். ஆற்ற முடியாத வடுவை ஏற்படுத்தக் கூடிய கொடுமையானது அது.
பரிதியார் 'தீயினால் சுட்டபுண் உள்ளே ஆறி மேலே வடுவாகி இருக்கும். நாவினால் சுட்டபுண் மேலே ஆறி உள்ளே வடுவாகி இருக்கும்' எனவும் பரிமேலழகர் 'ஆறிப்போதலால் தீயினால் சுட்டதனைப் 'புண்' என்றும், ஆறாது கிடத்தலால் நாவினால் சுட்டதனை 'வடு' என்றும் கூறினார்' எனவும் விளக்கம் தந்தனர்.
இக்குறளில், தீயினை சொல்லுடன் ஒப்பிடுகிறார் திருவள்ளுவர். இதை அறிவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால், ‘தீ’ என்ற வெப்ப ஆற்றலோடு, (ஒலி வடிவ) ’சொல்‘ என்ற ஒலியாற்றல் ஒப்பிடப்பட்டிருப்பதை உணர முடிகிறது. இவ்விருவகை ஆற்றலையும் அளவிற்கு அதிகமாக பயன்படுத்துவதால் தீமையே விளைகிறது. இதனை சற்று விரிவாக பார்ப்போம்.
எந்த ஒரு செயலை செய்வதற்கும் ஆற்றலானது அவசியம். எடுத்துக்காட்டாக, , பார்த்தல், பேசுதல், நடத்தல், விளையாடுதல், தூங்குதல், படித்தல், உள்ளிட்ட எல்லா வினைகளுக்கும் ஆற்றல் வேண்டும். இவ்வினைகளுக்கான ஆற்றலை ‘உணவு’ என்கிற வேதியாற்றலில் இருந்து நாம் பெறுகிறோம். விலங்குகளும் உணவின் மூலமே, தமது ஆற்றல் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன.
நமக்கும், விலங்குகளுக்கும் உணவளிக்கும் தாவரங்கள் எப்படி ஆற்றலை பெருகின்றன? சூரிய ஒளி மூலம் தான். சூரிய ஒளியின் முன்னிலையில் கரியமில வாயுவும் நீரும் சேர்ந்து கார்போஹைட்ரேட்டான உணவினை தாவரங்கள் தயாரிக்கின்றன. இவ்வினைக்கு பச்சையம் என்ற (தாவரத்தில் இருக்கும் chlorophill பச்சை நிறமி) இன்றியமையாதது. தாவரங்கள் இப்படி உணவு தயாரித்தலை ஒளிச்சேர்க்கை (photosynthesis) என்று சொல்கிறார்கள்.
உயிரினங்களான தாவரங்களுக்கும், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஆற்றல் தேவைப்படுகிறது. இதேப்போன்று உயிரற்றவைகளுக்கும் ஆற்றல் தேவைப்படுமா? என்றால், ஆம், என்ற பதிலே கிடைக்கிறது. நகரும் உயிரில்லா பொருளை நகர்த்துவதற்கும், நிலப்பரப்பிலிருந்து மேலே உயர்த்துவதற்கும் ஆற்றல் அவசியம். இது மின்னாற்றல் மற்றும் வேதியாற்றல் மூலமாக நிறைவேற்றப்படுகிறது..
ஒளியாற்றல், வேதியாற்றல், மற்றும் மின்னாற்றல், மின்காந்த ஆற்றல் தவிர வெப்ப ஆற்றலும், ஒலியாற்றலும் நம் அன்றாட வாழ்வில் நீக்க முடியா ஆற்றல் மூலங்களாகும்.

இங்கு குறிப்பிட வேண்டியது என்னவெனில், வினையை பொறுத்து ஆற்றலின் அளவும், மூலமும் மாறும் என்பதே. நாம், ஒரு செயலை செய்வதற்கு தேவையான அளவைவிட அதிகப்படியான ஆற்றலை கொடுத்தால் என்ன நிகழும்? இரண்டு விளைவுகளுக்கு வாய்ப்புண்டு. ஒன்று, அதிகப்படியான ஆற்றல் வீணாக்கப்படுகிறது. இதற்கு உதாரணமாக மின்சாதனங்களைச் சொல்லலாம். அதாவது திடீரென்று அதிகப்படியான மின்சாரத்தை கொடுத்தாலும், மின்சாதனம் ஒரு குறிப்பிட்ட சதவிகித மின்னாற்றலை மட்டுமே தான் வேலை செய்யப் பயன்படுத்துகிறது. அதிகப்படியான மின்னாற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றி வெளியேற்றுகிறது. அந்த சாதனம் மிகவும் சூடாகிவிடுகிறது.
மற்றொரு விளைவு? மிதமிஞ்சிய ஆற்றலானது, அச்செயலை செய்யும் சாதனத்தையே தாக்கலாம்! வரையறையை மீறி அளிக்கப்படும் மின்னழுத்தம், சிலவகை வீட்டு உபயோக மின்சாதனங்களை செயலிழக்கச் செய்வதை அனைவரும் அறிவோம். எனவே, ஆற்றலை அளவுக்கு மீறி பயன்படுத்தினால், விரும்பத்தாகாத விளைவுகள் உண்டாகும். இவ்விளைவு, மனிதர்களுக்கு பொருந்துமா? என்ற வினா எழுகிறது. இதற்கான விடையாகத்தான் திருவள்ளுவரின் குறள் அமைகிறது.
உண்மையில் சீரான உடற்செயலியல் நிகழ்வுகளுக்கு வெப்ப ஆற்றல் அவசியம். இதனை 37 டிகிரி செல்சியஸ் (சராசரி அளவு) என்று கண்டறிந்துள்ளனர் அறிவியலாளர். இச்சராசரி வெப்பமானது, உடலில் புகுந்த நுண்ணுயிரிகளினால் அதிகரிக்கப்பட்டால், நமக்கு கேடு உண்டாகிறது. வெளியிலிருந்து தீயினால் சுடப்பட்டால் அல்லது வெப்பம் கொடுக்கப்பட்டால் உடல் திசுக்களுக்கு அழிவு உண்டாகிறது. இதேப்போன்று, தொடர்பு கொள்வதற்கு சொற்கள் அவசியம். நம் நாவின் இனிய சொற்கள் பிறருக்கு மகிழ்வை உண்டு பண்ணும். தீய சொற்களோ, தீயை போல் சுடும். தீய சொற்களைப் பேசும்போது மனத்தில் கபடம் அல்லது வெஞ்சினம் தோன்றி அதிகப்படியான ஆற்றல் விளைந்து அதைச் செலவழிக்கிறோம். இதிலிருந்து நாம் அறிவது என்னவெனில், உயிரற்ற பொருட்களை போன்றே, உயிரினத்திற்கும் அதிகப்படியான ஆற்றலை கொடுக்க, தீமையே விளையும்.
தற்போது, அறிவியல் நோக்கில் தீயினை சொல்லோடு (ஒலி வடிவம்) ஒப்பிட முடியுமா? என்பதை ஆராய்வோம்
தீ மூட்டும் பொழுது, வெப்பம் உயருகிறது. இதிலிருந்து வெப்ப ஆற்றல் வெளிப்படுகிறது. வெப்ப ஆற்றலை பயன்படுத்தி இயற்பியல் மாற்றங்களை அல்லது வினைகளை நிகழ்த்த முடியும். உதாரணமாக, திரவ நிலையில் இருக்கும் நீரினை சுமார் நூறு டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு சூடுபடுத்தும் பொழுது தண்ணீர் நீராவியாக மாறுகிறது. சூடுபடுத்துவதால், நீரின் நிலை (திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு) மட்டுமே மாறுகிறது. வினைபொருளில் மாற்றம் இல்லை. அதாவது, சூடுபடுத்துவதற்கு முன்னும், பின்னும், இருப்பது நீர் மட்டுமே. எனவே இதனை இயற்பியல் மாற்றம் (physical change) என்கிறோம்.

தவிர, வேதியியல் வினைகளை நிகழ்த்தவும் வெப்ப ஆற்றல் பயன்படுகிறது. உதாரணமாக, காய்ந்த மரக்கட்டை எரியும் வினையை கருதலாம். காய்ந்த மரக்கட்டையில் கார்போஹட்ரேட் இருக்கிறது. இதனை காற்று வெளியில் எரிக்கும் பொழுது ஆக்சிஜனுடன் சேர்ந்து நீராகவும், கரியமில வாயுவாகவும் மாறுகிறது. இத்துடன், வெப்பமும், ஒளியும் உண்டாகிறது. இவ்வினை முடிந்த பின்னர் எரிக்கப்படாத கார்போஹைட்ரேட் கருகி சாம்பலாக மிஞ்சுகிறது. எரித்தல் வினைக்கு பின் புதிய வினைபொருள் கிடைப்பதால், இதனை வேதிவினை (chemical change) என்கிறோம். எனவே, வெப்ப ஆற்றல் இயற்பியல் மற்றும் வேதியியல் வினைகளை நிகழ்த்த பயன்படுகிறது.
வெப்ப ஆற்றலுடன் ஒப்பிடபட்ட ஒலி ஆற்றலால், இயற்பியல் மாற்றங்களையும், வேதியியல் வினைகளையும் நிகழ்த்த முடியுமா? என்ற வினாவிற்கு பதில் முடியும் என்பதே! முதலில் ஒலி ஆற்றலால் (இங்கு பேசும் சொற்களை குறிக்கவில்லை) நிகழும் இயற்பியல் மாற்றத்திற்கான எடுத்துகாட்டினைப் பார்ப்போம். சில வகை காய்கறிகள், பழங்கள், மீன் உள்ளிட்ட உணவு பொருட்கள் கெடாமல் பாதுகாப்பதற்கு உப்பு (சோடியம் குளோரைட்) நீர் கரைசல் பதப்படுத்தியாக (preservative) பயன்படுத்தப்படுகிறது. இவ்வுப்பு கரைசலை உருவாக்கிட ஒலி ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, உப்பு, நீரில் கரையும் என்றபொழுதும், ஒலி ஆற்றலை பயன்படுத்தும் பொழுது நேர்த்தியான உப்பு கரைசல் கிடைக்கிறது. எனவே, வெப்ப ஆற்றலை போன்றே, ஒலி ஆற்றலையும் இயற்பியல் மாற்றத்தினை நிகழ்த்துவதற்கு பயன்படுத்தலாம்.
மேலும், ஒலி ஆற்றலை பயன்படுத்தி வேதிவினைகளும் நிகழ்த்தப்படுகின்றன. அவைகளுக்கு ஒலிவினைகள் என்று பெயர். உதாரணமாக, சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு முறையில், ஒலி ஆற்றல் (20–1000 kHz) பயன்படுகிறது. அதாவது, நீரில் இருக்கும் சாயங்களை அழிக்க ஒலி ஆற்றலை பயன்படுத்தலாம். இது எப்படி சாத்தியமாகிறது? சுருக்கமாக பார்ப்போம்.
போதுமான அதிர்வெண் (ஒரு வினாடியில் தோற்றுவிக்கப்படும் அலைகளின் எண்ணிக்கை) கொண்ட ஒலி ஆற்றலை, சாயங்கலந்த கழிவு நீரில் செலுத்தும் பொழுது, ஆற்றல் மிக்க ஹைட்ராக்ஸைடு தனிமங்கள் (ions) (OH•) உண்டாக்கப்படுகின்றன. இந்த தனிமங்கள் சாயங்களை கரியமில வாயுவாகவும், நீராகவும் சிதைக்கிறது. இதன் மூலம் சாயப்பட்டறைக் கழிவு நீர் தூய்மையாக்கப்படுகிறது. இதே முறையில் கழிவு நீரில் இருக்கும் தீங்கிழைக்கும் நுண்ணுயிரிகளையும் அழிக்க முடியும் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மேலும் நடைமுறையில் பயன்படுத்தப்படும் குளோரின் சேர்மங்களுக்கு சிறந்த மாற்றாகவும் ஒலிவினையூக்க முறை கருதப்படுகிறது.
மேற்கண்ட செய்திகள் மூலம், வெப்ப ஆற்றலும், ஒலியாற்றலும் வினைகளுக்கு பயன்படுவது சாத்தியம் என்பதை பார்த்தோம். எனவே, வள்ளுவரின் ’தீயிற்கும் சொல்லிற்குமான ஒப்பீடு (இங்கே சொல்லை ஒலி என கொள்க) அறிவியில் பார்வையிலும் மிக பொருத்தமாக இருப்பது கண்கூடு.
சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் எழுதப்பட்ட சில பாடல்களில் அசுணம் எனும் ஒரு விலங்கு பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. சங்ககாலப் பாடல்களின் பல இடங்களில் இந்த விலங்கு "அசுணமா" என்றே அறியப்படுகின்து. இசையை அறியக்கூடிய அல்லது கேட்ககூடிய ஒரு உயிரிணமாம் இந்த அசுணமா. இந்த விலங்கினம் அடர்ந்த காடுகளில் வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகின்றது. இதன் சிறப்பம்சம், இசையை உணர வல்லது. இசைக்கு மயங்கும் தன்மை கொண்டது. ஆனால் மிகவும் பலமானது. எனவே இதை எதிர்த்து நின்று வேட்டையாடுவது என்பது கடினம்.

இதை உணர்ந்த வேடுவர்கள் இந்த விலங்கை வேட்டையாட, மனதை மயக்கும் அழகிய இசையை, இசைகருவிகள் கொண்டு மீட்டுவர். அந்த இசைக்கு மயங்கி, அசுணமா இசை கேட்கும் திசை நோக்கி நகர்ந்து வரும். இசை மயக்கத்தில் அருகில் நெருங்கி வந்ததும், காதைக் கிழிக்கும் அளவுக்கு சத்தமான ஒலியை பறை போன்ற இசைக்கருவிகளால் ஏற்படுத்துவர். அந்த சப்தத்தைக் கேட்டு தாங்க முடியாது, காதுகளில் வலிவந்து மிரண்டுவிடும் சூழ்நிலையில் ஆயுதங்களால் தாக்கி கொன்றுவிடுவர். அழகான இசை மீட்டி ஏமாற்றி வரவழைத்து, மிக அதிகமான சத்தம் உண்டாக்கி துடிக்கவிட்டு அசந்த நேரம் பார்த்து ஆயுதங்களால் தாக்கி வஞ்சகமாக கொன்றுவிடுவர் என்று சொல்கிறார்கள்.
நற்றிணைப் பாடல் 304 - பாடியவர் மாறோக்கத்து நப்பசலையார்
மணிமிடை பொன்னின் மாமை சாய, என்
அணிநலம் சிதைக்குமார் பசலை; அதனால்
அசுணம் கொல்பவர் கைபோல், நன்றும்"

இதன் பொருள் - குளிர்ந்த மணம் கமழும் மாலை அணிந்த என் காதலனின் மார்பு அசுணம் என்னும் விலங்கைக் கொல்பவர் கை போன்றது. அதாவது இன்பம் தந்து பின்னர் துன்பத்தைக் கொடுக்கும் என அசுணத்தின் இயல்புக்கு உவமிக்கிறார்.
நான்மணிக்கடிகை,
"பறைபட வாழா அசுணமா..." - இதன் பொருள் பறையின் ஒலி செவியில் விழுந்தால் ‘அசுணமா’க்கள் உயிர் வாழாது.
இந்த உயிரினம் உண்மையில் இருந்ததா அல்லது கற்பனையா என்பது குறித்த விரிவான விளக்கங்கள் எங்கும் காணோம்
ஒலியாற்றலை வினைகளுக்கு பயன்படுத்துவதை அறிந்த பொழுதும், ஒலி வடிவமான சொற்களே வினைகளை நிகழ்த்துமா? என்ற வினாவும் எழுகிறது. இதற்கான பதிலை பார்பதற்கு முன்னதாக, திருவள்ளுவரின் மற்றொரு குறளை காண்போம்.
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. (642)
ஒருவனுக்கு ஆக்கமும் கேடும் அவன் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லில் தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்.
சிலபேருக்கு நாக்கில் சனி என்று சொல்லக் கேட்டிருக்கிறோம்.
’ஆக்கமும் கேடும்’ அதாவது நன்மையும் தீமையும் நம்முடைய சொற்களினால் வரும் என்றுரைக்கிறார் திருவள்ளுவர். நன்மை அல்லது தீமையானது ஒரு செயலினால் விளைவது. எனவே, சொல்லின் மூலம் நிகழ்வது செயல். இச்செயலின் விளைவு நன்மை அல்லது தீமை. ஆக சொற்களின் வடிவத்தில் வினையை நிகழ்த்தும் என்பது தெளிவு. மேலும், அனைவரும் அறிந்த பழமொழியை இங்கு சொல்ல விரும்புகிறேன்.
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி.
’பாம்பு’ என்ற ஒலிவடிவ சொல்லே, ’நடுக்கம்’ என்ற செயலை நிகழ்த்துகிறது. மேலும், நம் அன்றாட வாழ்விலும், சொற்கள் செயலை நிகழ்த்துகின்றன. ஆம், நம்முடைய சொற்களால் பிறரை செயல்பட வைப்பதும், பிறரின் சொற்களால் நாம் செயல்படுவதும் வழக்கம். சொற்களால் நம் அன்றாட வாழ்வில் செயல்கள் நிகழும் பொழுது, இயற்பு அல்லது வேதிவினைகளை நிகழ்த்தாமல் இருக்க முடியுமா? இதுவரையிலும் சொற்களை கொண்டு வினைகளை ஆய்வகத்தில் நிகழ்த்தியிருக்கிறார்களா? இக்கேள்விக்கான விடையை பார்ப்போம்.
பொதுவாக ஒரு வேதிவினை நிகழ வேண்டுமெனில், ஆற்றல் தேவை என்பதை அறிவோம். மேலும், கொடுக்கப்படும் ஆற்றலை அதில் ஈடுபடும் வினைபடு பொருட்கள் எடுத்துக்கொண்டு வினையை நிகழ்த்துகின்றன. உதாரணமாக மரக்கட்டையை எரிக்கும் பொழுது வினை நிகழுகிறது. அதாவது மரக்கட்டை எரிந்து சாம்பலாகிறது. இதுவே, ஒரு கூழாங்கலை எரிக்க எவ்வித வினையும் நிகழ்வதில்லை. மாறாக, கல் சூடாகலாம். இதற்கு காரணம் கொடுக்கப்பட்ட வெப்ப ஆற்றலை கூழாங்கல் ஏற்கவில்லை , அல்லது அந்த வெப்ப ஆற்றல் கூழாங்கல்லை எரிக்கப் போதுமானதாக இல்லை. எனவே, சொற்கள் வேதிவினைகளை நிகழ்த்த வேண்டுமெனில், வேதிப்பொருட்கள் பேசுகின்ற சொற்களை ஏற்க வேண்டும். அறிந்த வரையில் எந்த வேதிபொருளும் சொற்களை கேட்பதில்லை. எனவே, ஒலியாற்றலை ஏற்று சில வினைபடு பொருட்கள் வினையை நிகழ்த்தினாலும், ஒலி வடிவில் வரும் சொற்களை வினைபடு பொருட்கள் ஏற்காதலால் வேதிவினைக்கு சாத்தியமில்லை. இருப்பினும், ஏதேனும் ஒருசில மாற்றங்கள் நிகழுவதற்கு வாய்ப்புகள் உண்டா? என கேட்கலாம்.
இக்கேள்விக்கு அடிப்படை முகாந்திரம் இருக்கிறது. ஆம் முன்னர் பார்த்தாற்போல், கூழாங்கல் வெப்ப ஆற்றலை ஏற்காவிடினும், அக்கல்லின் வெப்பத்தில் சிறிது மாற்றம் நிகழுகிறது. சொற்களினால் மாற்றங்கள் நிகழும் என்பதற்கு சில ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஜப்பான் நாட்டைச் சார்ந்த இயற்பியல் பேராசிரியரான முனைவர் மஸாரு இமோடோ (Dr. Masaru Emoto), சொற்களினால் நிகழும் வினைகளை பற்றி ஆய்வுகளை செய்திருக்கிறார். ‘Messages from Water‘ என்ற தலைப்பில் அவர் செய்த ஆய்வுகளை புத்தகமாக வெளியிட்டுள்ளார். அவரது ஆய்வின் சாராம்சம் என்னவெனில், சொற்களினால், வாழ்த்துகள், வேண்டுதல் உள்ளிட்டவைகளை நீரின் முன் உரைக்க வேண்டும். பின்னர் அந்த நீரினைக் குளிர்வித்து உறையவைக்க வேண்டும். அப்பொழுது அந்த நீர் குறிப்பிட்ட வடிவத்தில் படிகமாக்கப்படுகிறது. இவரது இந்த ஆய்வின் முடிவு என்னவெனில், நாம் கூறிய சொற்களைப் பொறுத்து படிகமாக்கப்பட்ட நீரின் வடிவும் அமைகிறது என்பது தான்! நீர் படிகமாக்கல் என்பது வேதிவினை அல்ல. இது இயற்பியல் மாற்றமே.
வாழ்த்துக்களையும். இனிய செய்திகளையும் தண்ணீரிடம் சொல்லும்போது தண்ணீர் மகிழ்கிறது. அது உறையும்போது அதன் படிகங்கள் அழகான பூக்களைப்போல் உருவெடுக்கின்றன. கோபமான சொற்களைத் தண்ணீருடன் பேசினால் அதன் படிகங்கள் தாறுமாறாக உருவெடுக்கின்றன.

இவரது ஆய்வின் அடிப்படை தத்துவம் என்பது, சொற்கள், எண்ணங்கள், ஒலி உள்ளிட்ட எல்லாமே, ’ஆற்றல்’ என்பது தான். இவரது ஆய்வு முடிவுகளின் மீது பல எதிர்மறை விவாதங்கள் இருப்பினும், அடிப்படை தத்துவமான, ’சொற்கள் ஆற்றலுடையது’ என்பதை ஏற்கத் தானே வேண்டும்.
ஒருவன் இடைவிடாது நல்லொழுக்கத்தில் நின்றொழுகி, மன, மொழி, மெய்களால் தீய எண்ணங்கள் அணுகாதபடி காத்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே தனிமனிதன் பெறத்தக்க பண்புகளில் சிறந்ததாகும் என்பதனைத் திருவள்ளுவர்,

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்” (குறள். 139)

என்று குறிப்பிடுகின்றார். மனத்தூய்மை நற்செயல்கள் அனைத்திற்கும் அடிப்படையாக அமைகின்றது. ஆதலின் தனிமனிதன் தான் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்களில் முதலில் சிந்தனைத் தூய்மை பெறல் வேண்டும் , அதனால் தவறியும் கூட தீய சொற்களைச் சொல்லக்கூடாது என்பது பெறப்படுகின்றது.
மணிமேகலை (30-68) பொய், குறளை, கடுஞ்சொல், பயனில் சொல் என தீச்சொற்களை நான்கு வகைப்படுத்துகிறது. பொய்யென்றால் நமக்குத் தெரியும். குறளை என்றால் பிறரைப் பற்றி அவர்கள் இல்லாத பொழுது கோள் சொல்வது, கடுஞ்சொல் என்பது ஒருவரை நிந்தனை செய்வது. பொருளில்லாத பயனற்ற சொற்களைப் பேசுவதும், அவை நன்மை பயப்பது இல்லையாதலால் தீச்சொல்லாகவே கருதப்படுகிறது. “பயனில சொல்வானை மக்கள் பதடியெனல்” என்று திருவள்ளூவரே சொல்கிறார்.
திருப்பாவையில் ஆண்டாள்,

மையிட் டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம்,
செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்றோதோம் என்று பாடுகிறாள்.

திருவள்ளுவரை அப்படியே அடியொற்றி வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் வருக்கக் குறள் என்று ஒரு நூலை யாத்துள்ளார். அதில் ‘தீயினால் சுட்ட புண்’ என்ற இக்குறளைப் பின்பற்றி,
தீயின் கொடுஞ்சொல் தினம்பேசு வார்பலரும்
நாயிற் கடையாம் நார்” (வருக்கக் குறள் 107)

என்று தீச்சொல்லின் கொடுமை காட்ட ஒரு குறளை இயற்றியுள்ளார்.
பிறர் மனம் வருந்தும்படியான சொற்களைச் சொல்லிக் குதர்க்கம் பேசுபவர்கள் இன்று மட்டும் அல்ல அன்றும் இருந்திருக்கிறார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

சிலப்பதிகாரத்தில் கோவலனும், கண்ணகியும் புகார் நகரை விட்டு மதுரை நோக்கி செல்லும் வழியில் கவுந்தி அடிகளை சந்திக்கிறார்கள். அவர்கள் மூவரும் ஒரு சோலையில் ஓய்வு எடுக்கிறார்கள். அப்போது ஒரு குதர்க்கவாதி வருகிறான். அவனை வறு மொழியாளன் என்கிறார் இளங்கோவடிகள். .(வறுமையான மொழி)...மொழியில் சிறப்பு இல்லாது வறண்ட மொழியை உடையவன்.

அவன் கவுந்தி அடிகளை பார்த்து கேட்கிறான், காமனும் அவன் மனைவி ரதியும் போல் இருக்கும் இவர்கள் இருவரும் யார் என்று.

கவுந்தி அடிகள், இவர்கள் என் பிள்ளைகள் என்று பதில் கூறினார்

அதற்கு அவன் “ உங்கள் பிள்ளைகள் என்றால் எப்படி அவர்கள் கணவன் மனைவியாக இருக்க முடியும் ?” என்று அவன் நக்கலாகக் கேட்டான்.

அதை கேட்டவுடன் கண்ணகி நடுங்கிப் போனாள். கைகளால் காது இரண்டையும் பொத்திக் கொண்டாள். அப்படியே போய் கோவலன் பின்னால் மறைந்து கொண்டாள். தீய சொல்லை கேட்டாலே நடுங்கும் குணம். சிறந்த குடிப் பிறப்பினால் அவளுக்கு ஏற்பட்டிருக்கிறது...
தீ மொழி கேட்டு, செவிஅகம் புதைத்து,
காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க- கவுந்தி அடிகள் இதைப் பார்த்தார்.
‘எள்ளுநர் போலும் இவர், என் பூங்கோதையை; என்று கவுந்தி அடிகள் கோபம் கொண்டு
முள்ளுடைக் காட்டின் முது நரி ஆக’ என- அந்த வம்பனை நரியாகும்படிச் சபித்தார்
இங்கே தீய சொல் அதைக் கேட்கும் நல்லவர்களை எப்படிப் பாதிக்கிறது என்பதுடன் அதைச் சொல்பவர்க்கு எத்துணை கெடுதலாக முடிகிறது என்பதையும் பார்க்கிறோம்.
விவிலியத்தில் மத்தேயு 5 ஆம் அதிகாரம் 22 ஆம் வசனத்தில், இயேசு கிறிஸ்து,. “தன் சகோதரனை நியாயமில்லாமல் மூடனே என்று சொல்கிறவன் எரி நரகத்துக்கு ஏதுவாயிருப்பான்” என்று கூறுகிறார்.

பழமொழி நானூறு நாவினால் கூறும் சுடுசொற்களையும் நெருப்பின் தன்மையையும் ஒப்பிட்டு ஒரு பாடலில் சொல்கிறது

நோவ உரைத்தாரைத் தாம்பொறுக்க லாகாதார்
நாவின் ஒருவரை வைதால் வயவுரை
பூவின் பொலிந்தகன்ற கண்ணாய், அதுவன்றோ
தீயில்லை ஊட்டும் திறம்

நாம் மனம் வருந்தும்படி ஒருவர் பேசினாலும் அதைப் பொறுக்காமல் பதிலுக்கு நாவினால் தீய சொற்களை அவரை நோக்கிப் பேசுவோமானால் , அது நம்மை தீ வீட்டை எரிப்பதுபோல் எரித்துவிடும் என்று முன்றுரை அரையனார் கூறுகிறார்.

நாலடியாரில் ஒரு பாடல் இக்குறளையொத்து வருகிறது.

காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லும்சொல்
ஓவாதே தன்னைச் சுடுதலால் –ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து.

ஒருவன் தன் வாயினைக் காவாது அதனைத் திறந்து பிறனிடம் சொல்லும் தீச்சொல், பின் தன்னையே தவறாது வருத்துதலால், இடைவிடாது ஆராய்ந்த கேள்வியறிவினையுடையவர் பிறர் குற்றம் செய்த காலத்தும் அதற்காக அவரைச் சினந்து சுடுசொற்களைச் சொல்லார் என்பது இதன் பொருள்.

இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஓல்லைக் கெடும்” (564)
என்று வெருவந்த செய்யாமை என்ற அதிகாரத்தில் ஒரு குறள் வருகிரது.
மக்கள் கூறும் தீச்சொல்லுக்கு ஆளாகும் வேந்தனுடைய வாழ்நாளும் குறையும். செல்வமும் விரைந்து கெடும். என்று வாள்ளுவர் கூறுகிறார்.
காமத்துப் பாலில்
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டு பெற்றாள் இவள். என்ற குறளில் (1104)
பெண்ணைத் தீயென்று சொல்கிறார் வள்ளுவர். ஆனால் ஒரு வேற்றுமை. தீ நெருங்கினால் சுடும் , பெண்ணோ நீங்கினால் சுடுகிறாள், இத்தகைய புதுமையான தீயை இவள் எங்கிருந்து பெற்றாள் என்கிறார்.

தீயாரைக் காண்பதுவும் தீதே; திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்,
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு –
இணங்கி இருப்பதுவும் தீது.’ (வாக்குண்டாம் 9)

என்று ஔவை மூதாட்டி உரைக்கின்றார்.

சிலப்பதிகாரத்தில் வழக்குரை காதையில் பாண்டிய மன்னனைப் பார்த்து கண்ணகி ‘தேரா மன்னா!’ என்று விளிப்பாள். ‘ஆராய்ச்சி இல்லாத மன்னவனே’ என்பது இதன்பொருள். இது இறைகடியன் என்னும் இன்னாச்சொல். அச்சொல் வலிமைபெற்று பாண்டிய மன்னனை ஆட்சிக்கு ‘என்னால் தவறு நேர்ந்து விட்டதே’ எனக் கதற வைத்தது,
யானோ அரசன்? யானே கள்வன்!
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது; கெடுகஎன் ஆயுள்!” (சிலப்பதிகாரம்:20:75&77)
எனத் தனக்குத் தானே தண்டனை விதித்துக் கொண்டு உயிர் துறக்கச் செய்தது
கம்பராமாயணத்தில் இராவணன் சூழ்ச்சிப் படலம். மாயமானைப் பின்தொடர்ந்து சென்ற இராமன் அதைப் பிடிக்க இயலாமல் அதன்மீது அம்பெய்து வீழ்த்துகிறான். மாயமானாக வந்த மாரீசன் இராமனின் குரலில் இலக்குவா காப்பாற்று என்று குரலெழுப்புகிறான். அண்ணனின் ஆணையை மீறி அறியாத இலக்குவன், இராமனின் அபயக் குரல் கேட்டு, அது பகைவர் தம் சூழ்ச்சியே என உணர்ந்து பர்ணசாலையை நீங்க மறுக்கிறான். சீதை கொதிக்கிறாள்.

இலக்குவனை நோக்கி மிகுந்த சீற்றத்துடனும், கொதிக்கும் உள்ளத்துடனும், “ (இராமனின் துயர்நிலை அறிந்தும்) நீ இவ்விடமே நின்றது நெறியின்பாற் பட்டதன்று ” எனச் சினந்த கண்களுடன் பகை பாராட்டிக் கூறுகிறாள் சீதை,
ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்
பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும் நீ
வெருவலை நின்றனை வேறுஎன் யான்இனி
எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென் ஈண்டு ”

என்று கோபக்கனல் உமிழ்கிறாள். “ ஒரு நாள் பழகினாலே இராமனுக்கு எவரும் உயிர் கொடுப்பர் (குகனைப் போல). அவ்வாறிருக்க தலைவன் இராமன் அங்கு இன்னலுக்குள்ளாக நீயோ இங்கு வாளாவிருந்தது என்னே ! நான் தீயில் பாய்ந்து என் உயிரை மாய்ப்பேன் ” என்று தீயினும் சுடும் சொற்களை வீசுகிறாள்;.
இப்பாடலில் சீதை இலக்குவனைச் சினந்து கொடிய சொற்களைக் கூறுகிறாள். வால்மீகி எழுதியதைப் போல், “தமையன் இறந்தால் என்னைப் பெண்டாளலாம் என்று நினைத்தாயோ? ” என்றெல்லாம் பேசும் நாகரிகமற்றவளாய் சீதையைக் காட்டவில்லை கம்பன். தமிழ் மாந்தர் நாகரிகம் அறிந்தவர் என்பதை உணர்ந்தவன் கம்பன். எனினும் சீதையின் சொற்கள் இலக்குவனைத் தீயினும் மிகுதியாகச் சுட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை..

காட்சிப் படலத்தில்,
“ என்னை நாயகன் இளவலை எண்ணலா வினையேன்
சொன்ன வார்த்தை கேட்டு அறிவிலள் எனத் துறந்தானோ என்
தலைவன்

என்று பின்னர் தான் இலக்குவனை நோக்கிக் கூறிய தீச்சொற்களுக்குத் தண்டனையாகத்தான் இராமன் என்னைத் துறந்தானோ என அரற்றுகிறாள்.
யுத்த காண்டம் மீட்சிப் படலத்தில் மீட்கப்பட்ட சீதை இராமனைக் கண்டதும் கரை காணா உவகையுற்று ‘நான் இனி மறப்பினும் நன்று; இனி மாறு வேறு வீழ்ந்து இறப்பினும் நன்று’ ( இப்பிறவியின் பேறனைத்தும் பெற்றேன்; இனி நான் அவனை மறந்தால்தான் என்ன, வீழ்ந்து இறந்தால்தான் என்ன !) என ஏக்கம் நீங்கிக் காதலுடன் நோக்குகிறாள். ஆனால் இராமனோ படம் எடுத்த பாம்பைப்போல் அவலைச் சினந்து பார்த்து பின்னர் வரும் எட்டுப் பாடல்களிலும் சொல்லம்புகளால் அவளைத் தன் வார்த்தைக் கனலில் எரிய விடுகிறான்.
குலத்தினில் பிறந்திலை கோள் இல் கீடம்போல்
நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய் அரோ.

என்று அவள் பிறப்பைப் பற்றி கூட கேவலமாகப் பேசுகிறான். சனகனுக்கு சீதை பூமியில் கிடைத்ததால் நல்ல குடியில் பிறக்காமல் மண்ணில் பிறந்த புழுவைப்போல கீழானவள் என்று ஏசுகிறான்.
ஆக மிக உயர்ந்த இறை நிலையில் வைத்துப் போற்றப்படுகின்ற இராமனும், சீதையுமே கடுஞ்சொற்களைப் பேசியிருக்கிறார்கள், அதற்கான தண்டனையையும் பெற்றிருக்கிறார்கள் என்பது வெளிப்படை.

ஏலாதியில் கணிமேதாவியார் கூறுகிறார்:

கொல்லான், கொலை புரியான், பொய்யான், பிறர் மனைமேல்
செல்லான், சிறியார் இனம் சேரான், சொல்லும்
மறையில் செவி இலன், தீச் சொற்கண் மூங்கை, -
இறையில் பெரியாற்கு இவை. ( ஏலாதி 19)

தான் கொலை செய்யாதவனும், பிறர் கொலை செய்வதை விரும்பாதவனும், பொய் சொல்லானும், பிறர் மனைவியினிடம் செல்லாதவனும், தீயவர்களிடம் சேராதவனும், தீய சொற்களைப் பேசாதவனும் கேளாதவனும் ஆகிய வன் பெரியோன் என்று போற்றப்படுவான் என்று கொடிய பாவங்களுடன் சேர்த்து தீச்சொல் பேசுவதை வைத்துச் சொல்கிறார்.

மாணிக்கவாசகரும் திருவாசகத்தில்

கள்வன் கடியன் கலதி யிவன்என் றெண்ணாதே
வள்ளல் வரவர என்மனத்தே வந்தொழிந்தான்

என்று “தான் கள்வன், கடுஞ்சொற்களைப் பேசுகிறவன், கலகம் விளைவித்தவன் ஆதலால் இறைவன் என் மனத்திலிருந்து போய்விட்டான்” என்று கூறுகிறார்.
திருக்குறள் குமரேச வெண்பாவில் ஜெகவீரபாண்டியனார் இக்குறளை வைத்து ஒரு வெண்பா இயற்றியுள்ளார்.
ஆற்றாத சீற்றத்தோடு அன்றகன்றான் ஏனரசன்
கூற்றால் விதுரன் குமரேசா – மாற்றாத
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
மகாபாரதத்தில் பாண்டவர்க்காகப் பரிந்து பேசினான் என்பதற்காகத் துரியோதனன் விதுரனைச் சிற்றப்பன் என்று கூடக் கருதாமல் ‘தாசி மகனே” என்று வைதான். விதுரன் அவெவ்வுரையை எண்ணி எண்ணி நொந்தான். துரியோதனன் நாவினால் சுட்ட சொற்களின் வடு அவன் உள்ளத்தில் மாறாதிருந்தது.

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்பிழைத்துஒழுகுவார்.’ (896)

என்கிறது திருக்குறள். நெருப்பில் அகப்பட்டவர் பிழைத்தாலும் பிழைக்கலாம் ஆனால் பெரியாரை இகழ்ந்தவர்கள் உய்ய மாட்டார்கள் என்பது பொருள்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் தீயினால் சுட்ட வடு நம் உடம்பில் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். தீப்புண் உண்டான அன்று நாம் பட்ட வேதனையை அப்படியே இன்று நாம் நினைவு படுத்திக் கொள்ளமுடியுமா? கடினம் தான். அந்த வடு பெளியே தெரிந்தாலும் நம்மால் அந்த வலியை முழுதுமாக மீட்டு உணர முடியாது. அந்த வலியின் தன்மை இல்லாமலே போய்விடக் கூடும். அதனால் தான் தீயினால் சுட்டபுண் உள்ளாறும் என்றார் வள்ளுவர்.

அதுவே ஒரு தீச்சொல்லாக இருந்தால் நம் உள்ளத்தில் காயம் ஏற்படுத்துகிறது. காலம் அதை மறக்கச் செய்யலாம். ஆனால் அந்தத் தீச்சொல்லின் நினைப்பு வரும்போதோ அல்லது நம்மைப் பார்த்து அத்தீச்சொல்லை சொன்னவரைக் காணும்போதோ மீண்டும் அதே வலி நம் உள்ளத்தில் உண்டாகும்.

தீ ஆயுதமாகும் பொழுது அதனால் ஏற்படும் வடு அந்த ஆயுதத்தின் மீது படிவதில்லை, நம் உடம்பின் மீதுதான் படிகிறது. மீண்டும் வலி தோன்றுவதில்லை. ஆனால் சொல் ஆயுதமாகும் போது வடு அந்த சொல்லின் மீதே படிகிறது. அந்தச் சொல்லை நினைவு கூறும்போதெல்லாம் அல்லது அந்த சொல்லுக்கு உரியவரைப் பார்க்கும் போதெல்லாம் அச்சொல் நினைவுக்கு வந்து உள்ளத்தை வருத்துகிறது.

தீயினால் சுட்ட புண் நம் உடலில் ஏற்பட்டால் வடுவும் அதே இடத்தில் தான் உண்டாகும். ஆனால் சொல்லினால் ஏற்பட்ட புண் நம் உள்ளத்தில் உண்டானாலும் வடு மட்டும் அந்த சொல்லிலே தங்கி விடுகிறது !

நாவலர் சோமசுந்தர பாரதியார் இக்குறளுக்கு செய்த உரையில், ஆறுதல் வடுவின் தன்மையன்று, புண்ணின் தன்மையே. ஆதலால் ஆறாது என்று கொள்ளாமல் மாறாது என்றே கொள்ளவேண்டும்.
நாவினால் சுட்ட வடு அதனால் உண்டான புண் ஆறியும் வடுவானது மாறாமல் நிலைத்திருக்கும் . இதை நோக்கியே மாறாது என்றார் வள்ளுவர். ‘உள்ளாறும் + மாறாதே’ என்று பிரித்து உள்ளாறும் மாறாதே என்ற இரு சொற்களையும் கொள்ளவேண்டும் என்கிறார்.

வ.உ.சி. அவர்கள் எழுதிய உரையில் இக்குறளில் ஒரு பாடபேதம் இருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
வாயினால் சுட்ட வடு (129)

என்றுதான் இதை வாசிக்கவேண்டும் என்று சொல்கிறார். ஏனெனில் ‘வாயினால்’ என்பது எதுகையும் மோனையும் ஒத்துத் தொடையின்பம் பயத்தல் காண்க.அன்றியும் ‘வாயினால்’ என்பது திருவள்ளுவர் அடிக்கடி வழங்கும் சொற்களில் ஒன்று. ஆகலான் ‘வாயினால்’ என்பதே திருவள்ளுவர் பாடம் என்று கொள்ளப்பட்டது என்று வ.உ.சி. கூறுகிறார்.

எது எப்படியிருந்தாலும், இந்தக் குறள் காயம் பட்டவருக்காகச் சொல்லப்பட்டதில்லை. காயப்படுத்துபவருக்காகச் சொல்லப்பட்டது. எவரையும் சொற்களால் காயப்படுத்தாதீர்கள், சொற்களால் பிறரைக் காயப்படுத்தி அதனால் உண்டாகும் வடுக்களைச் சுமந்து திரியாதீர்கள் என்று வள்ளுவர் கூறுகிறார். தீச்சொற்கள் சொல்பவரையும் வருத்தும் என்பதாலன்றோ, வள்ளுவர்

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (124) என்றும் கூறியிருப்பார்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard