Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 10. நன்னயஞ் செய்து விடல்’


Guru

Status: Offline
Posts: 7329
Date:
10. நன்னயஞ் செய்து விடல்’
Permalink  
 


10. நன்னயஞ் செய்து விடல்’

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்’ (திருக்குறள் 314 )

குறளுக்குப் பெரும் சிறப்புச் சேர்த்த பாடல் இது. தீங்கு செய்தவர்கள் வெட்கப்படும்படி அவர்களுக்கு நன்மை தரும் செயல்களைச் செய்துவிடுக என்கிறது.
மணக்குடவர் உரை: இன்னாதன செய்தாரை ஒறுக்குமாறு என்னையெனின், அவர் நாணும்படியாக நல்ல நயமுடையவற்றைச் செய்துவிடுக. இஃது ஒறுக்கும் நெறி கூறியது.
பரிமேலழகர் உரை: தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரைத் துறந்தார் ஒறுத்தலாவது: அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல். (மறவாவழிப் பின்னும் வந்து கிளைக்கும் ஆகலின் , மறக்கற்பால ஆயின. அவரை வெல்லும் உபாயம் கூறியவாறு.)
குன்றக்குடி அடிகளார் உரை: தமக்குத் தீங்கு செய்தாரைத் தண்டிக்கும் முறையாவது தீங்கு செய்தவர் வெட்கப்படும் அளவுக்கு நன்மையைச் செய்வதுடன் அவர் செய்த தீமையயும் தாம் செய்த நன்மையையும் மறந்து விடுதலாகும். பிறர் செய்த தீமையை நினைப்பதால் பகைமை உணர்வும், தாம் செய்த நன்மையை நினைப்பதால் தன் முனைப்பும் துளிர்க்கும். அதனால் மறந்து விடுக என்றார். உளவியல் அடிப்படையில் ஒருவரைத் திருத்த, உடன்பாட்டு முறையிலே அணுகுதல் வேண்டும். பழிவாங்கும் உணர்வில் நின்ற ஒருவனை "ஒறுத்தல்" "நாண" என்ற சொற்களின்வழி, பழி வங்குதலுக்கு உடன்பட்டு நிற்பார் போலக் காட்டி அவன் வெகுளியைத் தணிய வைத்துப் பின் நன்னயம் செய்யும் நெறியில் ஆற்றுப்படுத்தும் நிலையில் இக்குறள் அமைந்திருப்பதறிக.
இன்னா செய்தாரை ஒறுத்தல்:
'தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரை ஒறுக்குமாறு என்னையெனின்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தமக்குத் துன்பம் தருவனவற்றைச் செய்தவர்களைத் தண்டித்தல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அவர் நாண நன்னயம் செய்துவிடல்
'அவர் நாணும்படியாக நல்ல நயமுடையவற்றைச் செய்துவிடுக' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். ‘செய்துவிடல்’ என்ற தொடரிலுள்ள ‘விடல்’ என்பதைத் தனியே பிரித்து அதற்குப் பிறர் செய்த இன்னாமையையும் தான் செய்த நன்னயத்தையும் மறக்க வேண்டும் என்று பரிமேலழகர் கூடுதல் உரை செய்கிறார்.
இன்றைய ஆசிரியர்கள் 'அவர் தாமே நாணுமாறு அவர்க்கு நன்மை தருவனவற்றைச் செய்து அவர் செய்த குற்றத்தையும் தாம் செய்த நன்மையையும் மறந்து விடலாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
ஒருவர் நமக்குத் தீமை செய்தால் நாம் திரும்ப அவருக்குத் தீமை செய்தல் பழி வாங்குதல் ஆகும். இந்த பழிவாங்கும் உணர்வு இயல்பாகவே மாந்தரிடம் அமைந்துள்ளது. ஆயினும், நல்லொழுக்கம், பண்பாடு என்பது பழி வாங்காமையேயாகும். ஏனெனில், உணர்ச்சி வசப்படுதல் என்பது இயல்பு என்பதால் பழிவாங்குதலிலும், பொறுத்துக் கொள்ளுதல் கடினமான காரியம்.

ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு. ‘பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண்’’ பழிக்குப் பழி என்பதைச் சித்திரிப்பதற்காக ஏற்பட்ட சொலவடை இது. 1947ல் நாட்டுப் பிரிவினைக்குப் பிறகு நாட்டின் தலைநகரான தில்லியில் ஒலித்த முழக்கம் இது. அப்பொழுது காந்தி அடிகள் சொன்னார் ‘கண்ணுக்குக் கண் என்றால் நாடு முழுவதும் குருடாகிவிடும்’ ஆகையால் அமைதியாக இருங்கள் என்று சொன்னார்.
இப்பொழுது நாடு முழுவதையும் குருடாக்கிவிடும் முயற்சிகள்தாம் சமயத்தின் பேராலும், சாதியின் பேராலும், மொழியின் பேராலும் நிகழ்ந்து வருகின்றன.
நமக்கு ஒருவன் துன்பம் இழைத்தால், அவன் வெட்கப்படும்படியாக, அவனுக்கு நாம் நல்லது செய்வதுதான் அவனைத் தண்டித்தலாகும்’ "ஐயோ! இப்படிப்பட்ட குணவானுக்குத் தீங்கு இழைத்து விட்டோமே" என்றெண்ணி அவன் நாணுவான். அதுவே அவனுக்குத் தக்க தண்டனை. அத்தண்டனையால் திருந்துவான்; இனிமேல் தீங்கு செய்ய எண்ணான்.
இந்தக் காலத்துக்கு இந்தக் குறள் கூறுவது பொருந்துமா என்ற கேள்வி எழுவது இயல்புதான். வள்ளுவர் காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடிய | கண்ணியமானவர்கள் மிக்க | சமூகத்தில்தான் தீமைக்குத் தண்டனையாக நன்மை செய்தல் துன்பம் செய்கின்றவர்களுக்கு வெட்கத்தைத் தந்திருக்கிறது. ஆகவே இக்குறள் மூலம் வள்ளுவர் காலத்தில் எந்த அளவுக்கு நாகரிகம் மிக்க சமூகம் இருந்திருக்கின்றது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால் தற்காலத்தில் நமக்குத் துன்பம் செய்தவனுக்கு, தண்டனையாக நாம் நன்மை செய்தால், இக்காலத்தில் நிலவிவரும் மதிப்பீடுகளுக்கேற்ப, நாம் அவனுக்கு அஞ்சி, நல்லது செய்து அவனிடம் சரணடைகிறோம் என்றுதான் அவன் நினைப்பான். நாம் அவனுக்குத் தண்டனையாக நல்லது செய்கிறோம் என்று அவன் நிச்சயமாக வெட்கப்படமாட்டான்.
ஒரு தமிழ்த் திரைப்படத்தில்..
கதாநாயகன் தெருவழியே சென்றுகொண்டிருப்பான்.
அங்கு மரத்தில் சிக்கிய பட்டத்தை எடுக்க ஒரு சிறுவன் கல் எறிந்துகொண்டிருப்பான்.
அந்தக் கல் எதிர்பாராமல் இந்த கதாநாயகன் நெற்றியின் மேல் மீது விழுந்து காயம் ஏற்படுத்தி விடும்.

அப்போது கதாநாயகன் அவனை அழைத்து தெருவிலே கல்லெறியக்கூடாது, யார் மேலேயாவது பட்டுவிடும் என்று அறிவுரை சொல்லி, வள்ளுவர் சொன்னமாதிரி அவனைத் திருத்தலாம் என்று எண்ணி, அருகே இருந்த கடைக்கு அழைத்துச் சென்று சாக்கலேட்டுகள் வாங்கித் தந்துவிட்டுப் போவான்..

அப்பாடா, இன்று ஒரு பையனைத் திருத்திவிட்டேன் என்ற மனநிறைவோடு அடுத்த தெருவுக்குத்தான் சென்றிருப்பான்.

அங்கே பத்து சிறுவர்கள் கூட்டமாகக் கையில் கல்லோடு நிற்பார்கள்.

என்னடா இப்படி நிற்கிறீர்கள்? என்று கேட்பான்.
அவர்களுள் கல்எறிந்து இனிப்புவாங்கிய சிறுவன் முதலாவதாக நிற்பான். அவன் சொல்வான்..

“டேய்.. இந்த மாமா தான்டா கல்லைவிட்டு எறிஞ்சா மிட்டாய் வாங்கித் தருவார் எறிங்கடா எல்லோரும்” என்பான்..
ஆகவேதான் மற்றொறு குறளில் நல்லது செய்வதிலும் தவறுண்டு, அவரவர் குணத்தை அறிந்து செய்யாவிடில் என்று வள்ளுவர் எச்சரிக்கிறார்!
நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை. (குறள் 469)
நாம் செய்கின்ற நன்மையின் மாண்பைப் புரிந்துகொள்ள இயலாத அற்பப் பண்பினை உடைய மாந்தர்களுக்கு உதவும் நற்செயலைச் செய்யப் போனோமானால் அது விழலுக்கு இறைத்த நீராகிவிடும்.

இது ஒரு பக்கமிருக்க,
இக்குறளுக்கு உரை கண்ட பரிமேலழகர், வள்ளுவர் உள்ளத்தை உய்த்துணர்ந்தவர். அவர் கூறுகிறார்:’ தீங்கு செய்தவன் செய்த துன்பத்தை மறந்து அவனுக்கு நன்மையைச் செய்வதோடு மட்டுமல்லாமல், நாம் அவனுக்குத் ‘தண்டனையாகச் செய்த நன்மையையும் நாம் மறந்து விட வேண்டும்.’ என்கிறார்.
ஏன்?
‘அவன் எனக்குத் துன்பம் செய்தான், நான் அவனுக்கு நன்மையைச் செய்தேன்’ என்ற இறுமாப்பு வந்துவிடக் கூடிய ஆபத்து இருக்கிறது. ஆகவே குறளில் வரும் ‘விடல்’ என்ற சொல், ஒருவன் செய்த தீமையை மறத்தல், அதற்குத் தண்டனையாக,அவனுக்கு நாம் செய்த நன்மையை மறத்தல் ஆகிய இரண்டையும் குறிக்கின்றது என்கிறார் பரிமேலழகர். அவ்விதம் நன்மையைச் செய்தபின், அவர்கள் செய்த தீங்கு | தாம் செய்த நன்மை இவை இரண்டையும் மறந்து விடவேண்டும்; மறக்காவிட்டால் நெஞ்சில் பகையும், காழ்ப்பும் வளர இடம் ஏற்படும்; இன்னா செய்தவனின் கெடுதியையும், தான் செய்த இனிய நன்மையையும் பாராட்டாதிருத்தல் வேண்டும். இது பரிமேலழகர் தனது உரைத்திறன் தோன்றச் சொல்லப்பட்டது.

திருவள்ளுவர் மற்றொரு குறளில் இக்கருத்தை வலியுறுத்தி, தமக்கு இன்னல் விளைவித்தவருக்கு திரும்ப தீங்கு செய்யாமலிருத்தல் சான்றோரின் கொள்கை என்று கூறுகிறார்.

கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள். (312)

வஞ்சம் கொண்டு ஒருவன் துன்பம் செய்தபோதும், திரும்ப அவனுக்குத் துன்பம் தருவனவற்றைச் செய்யாதிருத்தலே குற்றமற்ற அறிவாளரின் கொள்கை.

நாலடியார் பாடல் ஒன்று இவ்வாறு இக்கருத்தையே வலியுறுத்துகிறது.
உபகாரம் செய்ததனை ஓராதே, தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும், உபகாரம்
தாம்செய்வ தல்லால், தவற்றினால் தீங்கூக்கல்
வான் தோய் குடிப் பிறந்தார்க்கு இல்.

தாம் முன்பு உதவி செய்ததை நினையாமல் பிறர் தம்மிடம் தீமைகளை மிகுதியாகச் செய்தாலும் அவருக்குத் தாம் திரும்பவும் உதவி செய்வதல்லாமல், அவர் குற்றங் காரணமாக அவருக்குத் தீங்கு செய்ய முயலுதல் உயர்குலத்தில் தோன்றிய மேலோர்களுக்கு இல்லை.
அதாவது, தாம் நன்மை செய்தும் தமக்குத் தீமை செய்வோர்க்கு மேலும் மேலும் நன்மை செய்வதல்லாமல், தீங்கு செய்ய முயலார் சான்றோர்.
பழிவாங்கும் நிகழ்வு சங்கிலித்தொடர் போலத் தொடரும். ஆனால் பொறுத்தாற்றும் பண்பு தீமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடும்.

திருவள்ளுவர்பழிவாங்குதலை வெறுக்கிறார்; வெறுத்து ஒதுக்குகிறார். ஆயினும் உயர்ந்த பண்புகளை எளிதில் எடுத்துக் கொள்ளும் இயல்பறியா மாந்தரிடத்தில் பழிவாங்குதல் தீது என்ற அறிவு எளிதில் வராது. ஆதலால் திருவள்ளுவர் உளவியல் நியதியில் பழிவாங்கும் உணர்ச்சிவசப்பட்டு நிற்கும் மனிதனை அணுகுகிறார்.

ஆம்! எடுத்த எடுப்பில் யாரிடமும் அறிவுரைகள் – உபதேசங்கள் விலைபோகா. முதலில் அவருடைய நம்பிக்கையைப் பெறவேண்டும். உணர்ச்சி வெள்ளம் வடிவதற்குரிய காலம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் உணர்ச்சியிலிருந்து விடுதலை பெற்றுச் சமநிலைக்கு வந்த பின்னரே எத்தகைய அறிவுரையையும் கூறவேண்டும். அப்போதுதான் அறிவுரைகள் எடுக்கும்.

"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்பது குறள்.

பழிவாங்கும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நிற்பவன் குறை அறிவு உடையவன். ஆதலால் முதல் நிலையில் பழிவாங்கும் உணர்ச்சியின் உச்சியில் நிற்பவனுக்கு உடன்பட்டே பேசியாக வேண்டும். இல்லையெனில் வள்ளுவரையுமே அவன் மறுத்து விடுவான்.

ஆதலால் வள்ளுவர் "இன்னா செய்தாரை ஒறுத்தல்" என்று தொடங்குகின்றார். தமக்குத் துன்பம் செய்தாருக்குத் தாம் ஒறுத்தல் செய்ய வேண்டும்; கட்டாயம் ஒறுத்தல் செய்ய வேண்டும். இந்த அறிவுரை தொடக்க நிலையிலேயே வெகுளியின் உச்சக்கட்டத்தில் நிற்பவனுக்கு ஆறுதலாக இருக்கிறது. அதனால் சினம் தணிகிறது; உணர்ச்சி வடிகிறது. மனிதன் மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கு இறங்கி வருகின்றான். தன்னுடைய கொள்கைக்கு உடன்பட்டு நிற்கும் அவனுக்கு வள்ளுவர் மீதும் நம்பிக்கை பிறக்கிறது.

இந்தச் சூழ்நிலையைத் வள்ளுவர் பயன்படுத்திக்கொண்டு தம் நிலைக்கு அந்த மனிதனை அழைக்கின்றார்; உயர்த்துகின்றார். ஆம்! பழிவாங்க வேண்டும். ஆனால் எப்படி? "தவறு செய்தவன் வெட்கப்படும்படியாக நன்மை செய்துவிடு!" என்று வள்ளுவர் கூறுகின்றார்.
இக்கருத்து எல்லா சமயங்களிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விவிலியத்தில், புதிய ஏற்பாட்டில் பவுல் ரோமருக்கு எழுதிய கடிதம் என்ற புத்த்கம் உள்ளது. அதில் 12 ஆம் அதிகாரம் 20, 21 வசனங்களில் “ உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.
நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு”. என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இயேசு மலைபிரசங்கம் செய்யும்போது
"உங்கள் சத்துருக்களைச் சினேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்"

என்று உபதேசித்தார் (மத்தேயு 6: 44).

மனு நீதியில் 6 ஆம் அதிகாரம் 47, 48 வது சுலோகங்களில்

கோபத்துடன் சீறுவோனிடத்தில் கோபம் காட்டாதே அவன் சுடு சொற்களைப் பொறுத்துக் கொள்வாயாக; அவன் சுடு சொற்களைச் சொல்லும்போது அவனுக்கு இனிமையான சொற்கள் சொல்லி வாழ்த்து; எவனையும் இகழாது இருப்பாயாக;

என்று சொல்லப்பட்டிருக்கிறது

இக்குறளில் இன்னொன்றையும் கவனிக்கவேண்டும். ‘அவர் நாண’ என்ற தொடர் அவர் வெட்கப்படவேண்டும், தவறு செய்துவிட்டோம் என்று நாணக்கூடியவராக இருக்கவேண்டும் என்ற நிபந்தனையைக் கோடிட்டுக் காட்டுகிறது. இயல்பாக நல்லவர்தான்; ஆனால், யானைக்கும் அடி சறுக்கும் என்றபடி ஏதோ குணங்கெட்டுப் போய்க் கெடுதி இழைத்துவிட்டார் என்றால்தான் நாம் பதிலுக்கு நன்மை புரியலாம்.
சிலர் நம் பெருந்தன்மையைப் பலவீனம் என்று கணித்து மேன்மேலும் தீங்கு செய்ய முயல்வர். இவர்களுக்குச் சட்டப்படியோ, வேறு தக்க நடவடிக்கையாலோ பதிலடி தர வேண்டும்.
பலர் வினை என்ற சொல்லையோ அதன் விளக்கத்தையோ புரிந்து கொண்டிருந்தாலும், அன்றாட வாழ்வியலில் அதன் பொருளை உணர்வதில்லை.
ஆக்கமும், நடத்தலும், நீக்கலும் அவன் செயல்தான் என்றாலும், ஒருவருடைய வினைகளை இறைவன் நிர்ணயிப்பதில்லை. ஒருவருக்கு உடலில் புற்று நோய் வந்து வாடவும், இன்னொருவர் திடகாத்திரமான உடல் கட்டுடன் விளையாட்டு வீரராக புகழின் உச்சிக்கு செல்ல வேண்டும் என்றும் எங்கிருந்தோ இறைவன் நிர்ணயிப்பதில்லை. எப்படி அவரவர் செய்யும் உடற்பயிற்சிக்கு ஏற்றவாறு அவர் உடற்கட்டு அமைகிறதோ, அதுபோல, உங்கள் வினைப்பயனும் அமையும்.
இன்னமும் சொல்லப்போனால், வினையையே உங்களுக்கு ஒரு ஆசானாக ஆக்கிக் கொள்ள முடியும்.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக்கல் (505)

எனத் தெளிதலும், எந்த வினை எந்த விளைவினை ஏற்படுத்தும் என்னும் அனுபவ அறிவும், இருந்தால், அதுவே அவரவர்க்கு படிப்பினையாகும்..
மக்கள் ஒருவரையொருவர் தண்டிப்பு தற்கு உரிமையற்றவர்கள். துன்பம் செய்தவர்கள் தமது செய்கையை உணரக் கூடியவர்களாகவும், உணர்ந்து வருந்தக் கூடியவர்களாகவும் நாணயமுடையவர்களாகவும் இருந்தால் அப்படிப்பட்டவர்கள் மனம் திருந்துவதற்கு வேறு ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டுமேயன்றி, ஒறுப்பது கூடாது. அந்த ஒன்று அவர்கள் நாணும்படி யாக அவர்கட்கு இனிய நன்மை செய்வதுதான். மேலும் அவர்கள் செய்த தீமையையும் தாம் செய்த நன்மையையும் மறந்து விடல் வேண்டும் என்பது வள்ளுவர் பெரு மானின் அறவுரை:

காஞ்சி யூரன் கொடுமை கரந்தனள் ஆதலின் நாணிய வருமே!’ ( குறுந். 10.)
என்ற ஒரம்போகியாரின் வாக்கும் இதையொட்டியதே. தலைவிக்குத் தலைவன் செய்த கொடுமை அவனது பரத்தமை. தலைவன் இவ்வாறு கொடுமை செய்த காலத்தும் அதனைப் பொருட்படுத்தாமல் எதிரேற்றுக் கொள்ளும் தலைவியின் செயல் தலைவனுக்கு நாணத்தை உண்டாக்கும். கண்ணகி அதைச் செய்ததனால்தான் உலகத்தரால் போற்றப்படுகிறாள்.
பிறரைத் தண்டிப்பதில் சிலர் இன்பம் கொள்ளுவதும் உண்டு; பிறர் துயரத்தில் கொள்ளும் அதுவும் ஓர் இன்ப மாகுமா? அந்த வெற்றின்பமும் நிலைக்காது
ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்கு
பொன்றும் துணையும் புகழ்'. (156)

இந்தச் சிறிது நேர இன்பத்திற்காக தமது பெருந்தன்மையை இழந்துவிட அறிஞர் ஒருநாளும் ஒருப்படார். தனக்கு வலிமைகூடி வந்த காலத்தும், திரும்பத் திரும்ப ஒருவன் பகைமை பாராட்டி வந்தபோதும், சிறிதளவு மனத்தாலும் இன்னாதன செய்யாதவர்களே தலை சிறந் தவர்கள் ஆவர்!
எனைத்தாலும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மானாசெய் யாமை தலை (317)

என்பது வள்ளுவம். மனத்தாலும் தீமை விளைக்காம லிருப்பதே அறங்களில் தலையாயது. இதுவே உயர்ந்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய இன்றியமையாத நோன்பாகும்
அறத்துக்கு முன்னுதாரணமான மனிதர்களைப் பெற்றிருக்கும் தங்கள் குடும்பத்தில் வன்மத்தோடும் வன்கண்மையோடும் கூடிய சிந்தனைகள் இறந்தவர் உள்ளத்திலோ, இருப்பவர் நெஞ்சிலோ என்றுமே தொடரக்கூடாது என்று குறிக்கோள் நிலையில் இராமன் எடுக்கும் உறுதியை இயற்கை இறந்த நிகழ்வு ஒன்றின் வாயிலாக நிறைவேற்றி வைக்கிறான் கம்பன். மீட்சிப் படலத்தில் சீதையின் தீக்குளிப்பு நிகழ்ந்தபிறகு இராமனுக்கு முன்பாக வானில் காட்சி தரும் தசரதன் தன்னிடம் வேண்டிய வரம் ஏதேனும் கேட்குமாறு பணிக்க, வேண்டுதல் வேண்டாமை அற்றவனாகிய இராமன்
“தீயள் என்று நீ துறந்த என்தெய்வமும் மகனும்
தாயும் தம்பியும் ஆம் வரம் தருக”
என்றபடி தந்தையைத் தலைதாழ்த்தி வணங்குகிறான். இராமன் கேட்கும் இந்த வரம், வன்மம், வஞ்சகம், பகைமை என்ற சராசரி மனித உணர்வுகள் அனைத்தும் கடந்த பெருந்தன்மைப் பண்பு ஒன்றினாலேயே சாத்தியப்படக்கூடியது. ‘அதி’ மனிதர்களுக்கும் மகாத்மாக்களுக்கும் மட்டுமே வசப்படக்கூடிய மகத்தான மாண்பு இது,
குறள் வழியைக் கூட விஞ்சியவனாய் - தனக்கு இன்னா செய்த அவளை ஒறுக்கவோ, நாணித் தலைகுனிய வைக்கவோ சற்றும் எண்ணாமல் கருணையின் எல்லை தொட்டு விடுகிறான் இராமன்.
“பிறர் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதையே பிறருக்குச் செய்யுங்கள்” என்று இயேசு கிறிஸ்து தீங்கு செய்யாமையை வலியுறுத்துகிறார்.
உலகியல் நடைமுறையை வழக்கு என்கின்றோம். பண்பாடு இல்லாதவருடைய பழக்கவழக்கங்களை உலகத்தார் வழக்கு என்று கருதுவதில்லை. உயர்ந்தவர்களது நெறிமுறைகளே வழக்கு என்று போற்றப்படுகின்றன. பெரியவர்களது பழக்கமே மக்களிடையே வழக்கமாகி பின்னர் அதுவே மக்களால் நடைமுறைப்படுத்தப் படுகின்றன .

வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே (தொல்காப்பியம், 1592)

இக்குறளுள்ளும், விடல் என்னும் ஈற்றுச் சொல் சிறப்பு வாய்ந்தது. ஆது, இன்னா செய்தோன் நாணுமளவில் நல்லனவற்றைச் செய்ததோடல்லாமல், அவன் செய்த தீமையை முழுமையாக மறந்து விடுத்து விட வேண்டும் என்பதாம். மேலும்,

இன்னா செய்தார்க்கு இனியவே செய்யாக்கால்
என்னபயத்ததோ சால்பு'' (987)

என்றும் வள்ளுவர் ஒரு வினா எழுப்புகிறார். தமக்கு துன்பமே செய்த ஒருவருக்கும் கூட, இனியவற்றையே நினைத்தலும், செய்தலும் இல்லாவிட்டால், ஒருவர் மற்ற மேன்மையான பண்பு நலன்களைக் கொண்டு உயர்ந்திருப்பதால் என்ன பயன், என்று வினவுகிறார் வள்ளுவர்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ஒரு கோவில் மண்டபத்தில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவியின் பேச்சுப் பிடிக்காமல், ஒருவன் ஒரு செருப்பை எடுத்து அவர்மீது வீசினான், அச்செருப்பு துறவியின் தலையில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது. துறவியின் துன்பத்தைக் கண்ட மற்ற பக்தர்கள், எழுந்து ஓடி, அந்த இளைஞனைப் பிடித்துத் தாக்கத் துவங்கினர்.
அதைக் கண்ட துறவி, அவனை அடிக்க வேண்டாம், அவனைத் தன்னிடம் அழைத்து வருமாறும் சைகை செய்தார்.
அவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள், இளைஞனை மேடைக்கு இழுத்துச் சென்றார்கள். பயத்தோடு நின்ற அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே துறவி, அருகில் பக்தர்களால் வைக்கப் பட்டிருந்த தட்டிலிருந்த மாம்பழம் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினார், அவன் பயத்துடன் தயங்கினான். “அவனைத் தண்டிக்காமல் அவனுக்குப் பழம் தருகிறீர்களே சுவாமி….” என்று பக்தர்கள் கூச்சலிட்டார்கள். அவர்களை அமைதிப்படுத்திய துறவி, கூட்டத்தினரைப் பார்த்துக் கூறினார்:
“ஓரறிவு உடைய மரமானது தன்மீது கல் எறிபவனுக்கு பழத்தைத் தருகிறது. ஆறறிவு உடைய நான், எனக்குத் துன்பம் செய்தவனுக்கு ஏதேனும் நன்மை செய்யவேண்டாமா?” என்று கேட்டார்.
துறவி கூறியதைக் கேட்டவுடன் அவர் பாதங்களில் தடால் என்று விழுந்து அழுதான் அந்த இளைஞன்.
ஜெகவீர பாண்டியனார் தான் எழுதிய திருக்குறள் குமரேச வெண்பாவில்
பண்டு சுயோதனனைப் பாண்டவர்ஏன் கட்டவிழ்த்துக்
கொண்டுவந்து விட்டார் குமரேசா – மண்டிவந்து
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல். என்று பாடி, ஒரு கதையும் சொல்கிறார்.

மகா பாரதத்தில் பாண்டவர் வனவாசம் செய்யும்போது கானகத்திலிருந்த முனிவர்களும், வனவாசிகளும் அவர்களுக்கு மரியாதை செய்து உதவிகள் செய்து வந்ததால் அவர்கள் அங்கே சிறப்பாக வாழ்ந்தனர். பாண்டவர் நிலை அறிந்த துரியோதனன் கவலையுற்றான். பதின்மூன்று ஆண்டுகளில் செயலிழந்து போவார்கள் என எண்ணியது தவறு என எண்ணினான்.

சகுனி..துரியோதனனிடம்..'நாமும் காட்டிற்குச் சென்று பாண்டவர் நிலையறிந்து..நம் செல்வச் சிறப்பையும் காட்டி வருவோம்' என்றான்.

பின் துரியோதனன் முதலானோர் மனைவி மக்களுடன்..உயர்தர ஆடை, அணிகலன்கள் அணிந்து கானகம் வந்து பாண்டவர் இருக்குமிடம் அருகே கூடாரம் அமைத்து தங்கினர்.

அருகில் இருந்த தடாகத்தில்..கூட்டம் கூட்டமாக கந்தர்வர்கள் வந்து நீராடுவது கௌரவர்களுக்கு இடையூறாக இருக்க கந்தர்வர்களை உடனடியாக விலகுமாறு துரியோதனன் கட்டளையிட்டான்.

இதனால் கந்தர்வர்களுக்கும் துரியோதனன் கூட்டத்திற்கும் இடையே போர் மூண்டது. சித்திர சேனன் என்ற கந்தர்வன் தலைமையில் கந்தர்வர்கள் போரிட சித்திரசேனனும் மாயப்போரில் ஈடுபட கர்ணனின் தேர் உடைந்தது.அவன் போர்க்களத்தை விட்டு ஓடினான். துரியோதனின் தம்பியரும் புறமுதுகிட்டனர். எஞ்சிய துரியோதனனையும் அவனுடைய மனைவியையும் மற்றும் சில கௌரவர்களையும் கைகளைக் கட்டி இழுத்துச் சென்றனர் கந்தர்வர்கள்.

கௌரவர்களின் எஞ்சிய வீரர்கள் சிலர் தர்மரிடம் வந்து 'துரியோதனனைக் காப்பாற்றுங்கள்' என முறையிட்டனர். ஆனால் பீமனோ 'அவர்கள் தீவினையின் பலனை அனுபவிக்கிறார்கள் அனுபவிக்கட்டும்' என்றான். தம்பி, ஆபத்தில் யார் சிக்கியிருந்தாலும் உதவ வேண்டுவது சான்றோர் தர்மம். மேலும் இப்போது நம் சகோதரர்கள் ஆபத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை உடனே காப்பாற்ற வேண்டும் என்றார் தருமர்.

உடனே, அர்ச்சுனனும் தம்பியரும் போய் கந்தர்வர்களை தடுத்தி நிறுத்தி பலரை அழித்தனர். அப்போது அர்ச்சுனனுக்கு தான் இந்திர லோகத்துக்குச் சென்றபோது அங்கே தன்னோடு நட்பு கொண்டு பல போர் நுணுக்கங்களை தனக்குப் போதித்தவன் சித்திரசேனன் என்ற உணர்வு வர, அவனிடம் சென்று பணிந்து நடந்த விவரங்களை அறிந்தான்.

'அர்ச்சுனா, இந்த துரியோதனன் உங்களை அவமானப் படுத்த வந்தான். அதை அறிந்த தேவர்கோமான் அவன் கூட்டத்தை கட்டி இழுத்துவர என்னைப் பணித்தான்' என்றான் சித்திரசேனன்.

பின்னர் தருமனும், அர்ச்சுனனும் கேட்டுக்கொண்டதற்கிணங்க துரியோதனன் கூட்டம் சித்திரசேனனால் விடுவிக்கப்பட்டது.

போரில் இறந்த கந்தர்வர்களை..இந்திரன் மீண்டும் உயிர் பிழைக்க வைத்தான்.நாணித் தலைக்குனிந்திருந்த துரியோதனனை நோக்கி தருமர் 'நகரம் சென்று நல்லாட்சி செய்வாயாக' என்றார்.
மற்றவர்க்கு மனத்தினால் கூட துன்பம் செய்யக் கூடாது. செய்தால் காலைப் பொழுதில் கேடு இழைத்தான் எனில் அதன் அடித்தடம் மாறும் முன்பே மாலையில் அவனைக் கேடு வந்து சூழ்ந்து கொள்ளுதல் உறுதி என்பதை,

நெடியது காண்கலாய், நீ அளியை நெஞ்சே
கொடிதே கூறினாய் மன்ற – அடியுளே
முற்பகல் கண்டான் பிறன் கேடு, தன்கேடு
பிற்பகல் கண்டு விடும் (பழமொழி.47)
என்று பழமொழி நானூறு என்ற நூலில் முன்றுறை அரையனார் கூறுகிறார்.
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும். (319)
என்று வள்ளுவரும் கூறுகின்றார்.

மகாகவி பாரதி பகைநட்பாய்க் கொண்டொழுகும் பண்புடை யாளன். அவர் பாடுகிறார்:
பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!
பகைவனுக் கருள்வாய்!
புகை நடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோ மே - நன்னெஞ்சே!
பூமியிற் கண்டோ மே.
பகை நடுவினில் அன்புரு வானநம்
பரமன் வாழ்கின்றான் –
பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!
மனிதர்கள் எல்லோரும் நல்லவர்கள் அல்லர் அவர்களில் தீயவர்களும் இருக்கிறார்கள்.
தீயவர்கள் நமக்குத் தீங்கு செய்யும்போது அதற்குப் பழி வாங்க வேண்டும் என்ற உணர்வு எழுவது இயற்கை. ஆனால், ஒவ்வொருவரும் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று பழிவாங்கத் தொடங்கிவிட்டால் உலகத்தில் ஊனமுடையவர்கள்
மட்டுமே இருப்பார்கள். பொறுமை இல்லாதவர்களால்தான் உலகத்தில் பிரச்சினைகள் உண்டாகின்றன. பொறுமை உடையவர்களோ அமைதியின் தூதுவர்களாக
இருக்கிறார்கள். உலகம் அத்தகையவர்களால்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு. (874) என்று வள்ளுவர் கூறுகின்றார்.
பகையையும் நட்பாக செய்து கொண்டு நடக்கும், பண்புடையவனது பெருந்தன்மையில் தான் உலகம் தங்கியிருப்பதாகும்..
இதுவரை கூறியவை எல்லாம் வள்ளுவர் தனிமனிதனுக்குக் கூறியவை.
ஒரு மன்னன் நாட்டிற்குப் பகையாக விளங்கும் எதிரிகளையும், சமுதாயத்துக்குப் பகையாக விளங்கும் கொடியவர்களையும் மன்னித்துப் பெருந்தன்மையுடன் அவர்களுக்கு நன்னயம் செய்தால் என்ன நடக்கும்? ஆகவேதான் பின்வரும் குறளையும் சொல்லியிருக்கிறார்.
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர். (550)
நன்றாக உழவு செய்து புழுதியாக்கி அதிலே நீர் விட்டு சேறாக்கிய நிலத்திலும் களை வரலாம். அதை திரும்பவும் வராதபடி செய்வது எப்படியோ அப்படி இருக்கவேண்டும், கொடியவர்களை ஒடுக்குவது என்பது. அதாவது ஒரு முறை என்று இல்லாமல் தொடர்ந்து இந்த களை பிடுங்கும் செயலை விவசாயி செய்வது போல் அரசனும் கொடியவர்களை தண்டிக்கவேண்டும் என்ரு வள்ளுவர் சொல்கிறார்..
இக்குறளின் கருத்து பற்றி நாமக்கல் கவிஞர் கூறுகிறார்: "பரிமேலழகர் சொல்வது போல வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்தல்" என்று வலிந்து பதங்களைச் சேர்த்து 'கொடியவர்களை எல்லாம் கொன்று விடவேண்டும்" என்று பொருள் கொள்ளுவது திருவள்ளுவர் கருத்துகளுக்கு முற்றிலும் விரோதமானது. மேலும் தீவைப்பவர் , விஷம் கொடுப்பவர், ஆயுதங்களால் கொலை செய்பவர், பிறர் மனைவியிடம் வன்புணர்வு செய்பவர் ஆகிய இவர்களெல்லாம் கொன்றுவிடத்தக்க கொடியார் என்று குறிப்பது திருக்குறளின் பெருமைக்குத் தீங்கானது.

கொலை செய்தவனைக் கொன்றுவிடுவதில் குற்றமில்லை என்று சொல்லவும் கூசி 'கொன்றுவிடுதல்' என்பதைச் சொல்லாமல் 'ஒறுத்தல்' என்று வள்ளுவர் சொல்லுகிறார். 'ஒறுத்தல்' என்பது 'கொல்லுவது' என்பது அல்ல. சமயோசிதம் போல் 'தண்டிப்பது' என்ற பொருளே தருவது. கொலைக்குக் கொலை சரியான தண்டனை என்று சொல்லவும் கூசினார் என்பதை அனுமானிக்க இடமிருக்கிறது. ஆதலால், 'வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்து' என்று பதங்களைக் கூட்டிக் கொன்றுவிடத்தான் வேண்டும் என்று பொருள் கொள்ளுவது திருவள்ளுவருடைய கருத்தாக இருக்க முடியாது. 'களையெடுப்பது' என்ற உவமானத்திலும்கூட, களைகளைப் பயிர்களுக்கிடையிலிருந்து அப்புறப்படுத்துவது காரியமேயல்லால் அவற்றை அழிக்க வேண்டுமென்பது காரியமல்ல. பிடுங்கி எறியப்பட்ட களை பயிரில்லாத வேறு இடத்தில் விழுந்து அங்கே உயிரோடிருந்து விடுவதைப் பற்றிக் களைபறித்த விவசாயி கவலைப்பட மாட்டான்."
இக்குறளில், சூட்சுமமே ‘கட்டுதல்’ என்ற சொல்லில் வள்ளுவர் வைத்துள்ளார் எனக் கருதுகிறேன்.

கட்டல் என்பதைத் தமிழ்ச் சொல்லாகப் பார்த்தால் நாமக்கல்லார் உரை பொருள் வருகிறது. கட்டு (மாடு கட்டுதல், தாலி கட்டுதல் , கட்டுப்பாடு ... ) போல.
மேலும்,
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை (328)

என்று கூறும் வள்ளுவர் கொலைத்தண்டனை கொடுக்கச் சொல்வாரா என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும். கோறலை நீக்கி, கடுந்தண்டனை கொடுக்க வள்ளுவர் பரிந்துரைக்கிறார் என்றால்தான் மற்றத் திருக்குறள்களோடு பொருள் இசையும் என்பது வெள்ளிடைமலை.
எனவே
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல் (314)

என்ற குறள் தனி மனிதனுக்காகவே வள்ளுவரால் எழுதப்பட்டிருக்கிறது, சமுதாயத்திற்கு அல்ல என்றுதான் கருத வேண்டும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard