Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள் பூக்கள் - டாக்டர் ஐயப்பன் - முகவுரை & அணிந்துரை


Guru

Status: Offline
Posts: 7329
Date:
திருக்குறள் பூக்கள் - டாக்டர் ஐயப்பன் - முகவுரை & அணிந்துரை
Permalink  
 


முகவுரை

உலகின் பொதுமறை என்ற முறையில் திருக்குறள் தனிமனிதனின் வாழ்க்கைக்கும், சமூக பொது வாழ்க்கைக்கும் வழிகாட்டும் நூல். நல்லன எவை, அல்லன எவை என்பதை சுட்டிக்காட்டும் நூல். கடமைகளையும், நற்பண்புகளையும், நற்செயல்களையும் வரையறை செய்யும் நூல். தீய பண்புகளையும், தீய செயல்களையும் வெறுத்து ஒதுக்கி, அறிவுக்கும் ஆற்றலுக்கும் மதிப்பு அளிக்கும் நூல். முயற்சிக்கும் ஊக்கத்திற்கும் ஆக்கந்தரும் நூல். உழைப்பையும், உற்பத்திப் பெருக்கத்தையும் வலியுறுத்தும் நூல். மனிதகுலம் முழுமையும் ஒருவரை ஒருவர் நேசித்து வாழ்வதே வாழ்க்கை என்பதை வலியுறுத்தும் நூல்.. மேற்கூறியவை அனைத்தும் அனைவரும் அறிந்ததே. இத்துணை சிறப்பு வாய்ந்த திருக்குறளில் நான் சில குறட்பாக்களை மட்டும் தெரிவு செய்து அவற்றைப் பூக்களே போல் போற்றி, அவற்றிற்கான விளக்கங்களை விரிவு செய்திருக்கிறேன்.

உலகத் திருக்குறள் தகவல் மையத்தின் திருநெல்வேலிக் கிளை, பாளயங்கோட்டை மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தமிழ் ஆர்வலர்களால் இயக்கப்பட்டு வருகிறது. அக்கூட்டங்களில் நான் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்த நூல். இத்தொகுப்பில் பதினான்கு கட்டுரைகள் உள்ளன. அவற்றுள் பதின்மூன்று குறட்பாக்களை அடிப்படையாகக் கொண்டவை. மற்றொன்று திருவள்ளுவரின் இறைக்கொள்கை பற்றிய ஆய்வு.

இந்த சொற்பொழிவுகளை நான் ஆற்றும்போது என்னை ஊக்குவித்து, உற்சாகப்படுத்தி இவற்றைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிடத் தூண்டியவர், திருநெல்வேலியில் வாழும் முதுபெரும் தமிழ் அறிஞர், பேராசான், முது முனைவர் பா. வளன் அரசு அவர்கள். ஐயா அவர்களின் வழிகாட்டுதலிலேயே இந்த நூல் வெளியிடப்படுகிறது. தமிழை முறையாகக் கற்றுத் தேறாத என்னிடம் இயற்கையில் அமைந்திருந்த தமிழ் ஆர்வத்தை அடையாளம் கண்டு என்னை இந்நிலைக்கு உயர்த்தியவர் ஐயா அவர்கள் என்றால் மிகையாகாது. நான் அவருடைய நேரடி மாணவன் இல்லையென்றாலும், துரோணச்சாரியரிடமிருந்து மறைமுகமாக வில்வித்தை கற்றுக் கொண்ட ஏகலைவன் போல, நான் அவரிடமிருந்து ஏராளம் தமிழ் கற்றுக் கொண்டேன். இந்நூலுக்கு ஒர் அழகிய அணிந்துரையை அவர் அளித்திருக்கிறார். மேலும் பேராசான் அவர்கள் இந்நூலின் முதல் தட்டச்சுப் பிரதியைக் கவனமாகப் படித்து, மொழியறிவுக் குறைவினால் நான் செய்த பிழைகளைத் திருத்திக் கொடுத்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை நான் ஐயா அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்பணியை நான் செய்வதற்குப் பல தமிழ் அறிஞர்களின் நூல்களும், கட்டுரைகளும், தமிழ் இலக்கியங்களும் அவற்றின் மிகச்சிறந்த உரையாசிரியர்களின் உரைகளும் துணை புரிந்தன. அவற்றை இங்கு பதிவிட்டால் பக்கங்கள் நிறைந்துவிடும். அந்த அறிஞர்கள் அனைவர்க்கும் என் நன்றி உரித்தாகுக.

திருநெல்வேலி மாநிலத் தமிழ் சங்கத்தின் நிருவாகிகள் மற்றும் உறுப்பினர்களுடைய ஆதரவுக்கும், ஒத்துழைப்புக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக என்னை திருநெல்வேலி தமிழ் இலக்கிய மேடைகளில் சொற்பொழிவாற்றும்படி இரண்டு ஆண்டுகளுக்கு முன் முதன் முதலாக அறிமுகப் படுத்திய திருநெல்வேலி தமிழ் முழக்கப் பேரவையின் அமைப்பாளர் தேசிய நல்லாசிரியர் முனைவர் சு. செல்லப்பா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நூலை சிறப்பான முறையில் அச்சிட்டு வெளியிட்ட -------------------- பதிப்பகத்தாருக்கு என் நன்றி உரித்தாகுக.

மகாலிங்கம் ஐயப்பன்



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: திருக்குறள் பூக்கள் - டாக்டர் ஐயப்பன் - முகவுரை & அணிந்துரை
Permalink  
 


பேராசிரியர் முதுமுனைவர் பா,வளன் அரசு,
M.A.(Tamil), M.A. (GT), M.Ed., Ph.D., C.J.M.C., D.Litt,
முன்னைப் பேராசிரியர், தமிழ்த் துறைத் தலைவர், தூய யோவான் கல்லூரி, திருநெல்வேலி,
இயக்குநர், திருக்குறள் ஆய்வு மையம், திருநெல்வேலி,
தலைவர், உலகத் திருக்குறள் தகவல் மையம், திருநெல்வேலி.


அணிந்துரை

மலர் தரும் மணம், பலர் புகழ் குறள்!

மருத்துவ மாமணி மகாலிங்கம் ஐயப்பன் அவர்கள் இக்கால மருத்துவன் தாமோதரனாகத் திகழ்கிறார்; அவர் மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் திருக்குறள் குறித்து ஆற்றிய சொற்பொழிவுகள் அனைத்தும் நினைந்து போற்றி மகிழத் தக்கவை.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்திட வழிகாட்டும் ஒளிவிளக்காக மிளிர்வது திருக்குறள். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்ன்னரே தோன்றிய திருக்குறளைக் காப்பியப் புலவர் பலரும் புகழ்ந்து பாடியுள்ளனர். மணக்குடவர் முதல், உரையாசிரியர் முந்நூற்றுக்கு மேற்பட்டோர் விளக்கம் வழங்கிப் பெருமிதம் பெற்ற பாங்கு குறிப்பிடத் தக்கது. இத்தாலிய அறிஞர் வீரமாமுனிவர் இலத்தீன் மொழியில் எழுதத் தொடங்கிய மொழிபெயர்ப்பு கொரிய மொழிபெயர்ப்பு வரை நூற்றுநாற்பதாக விரிந்துள்ளது.

உரையாசிரியப் பெருமக்களின் கருத்துரைகள் பலவற்றையும் படித்துப் பார்த்து, “முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலம் தொகுத்த” சான்றோனாக மருத்துவ மாமணி விளங்குகிறார். முத்தொள்ளாயிரம் முதல் பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றின் மேற்கோள்களை ஆங்காங்கே தந்து தம் புலமை நலத்தைப் புலப்படுத்தியுள்ளார்.

உரையாசிரியருடைய கருத்தை ஆராய்ந்து விளக்கும்போது சேனாவரையர் போன்று தடை விடையோடு விளம்புகின்றார். செய்திப் படிப்போர் சிந்தனை ஆற்றலைச் சிறந்தொளிரச் செய்கிறார். அறிவியல் நுட்பங்களையும் இணைத்து மொழிவது குறிப்பிடத்தக்கது.

திருக்குறளின் பொருள் ஆழத்தைப் புலப்படுத்தப் பெரிதும் முயன்றுள்ளார். “திருக்குறளின் உறுதியும் தெளிவும் பொருளின் ஆழமும் விரிவும் அழகும் கருதி” என்னும் பாரதியாரின் கூற்றுக்கு ஏற்புடைய சான்றாக உரை வரைந்துள்ளார்.

பன்னூற் பயிற்சியும் கலந்த புலமை நலத்தோடு, “கலை பயில் தெளிவும் கட்டுரை வன்மையும்” பொருந்திய இந்நூல் வரவேற்றுப் போற்றத் தக்கது; பாராட்டி மகிழும் சிறப்பு மிக்கது.


3. நெல்லை நயினார் தெரு, பா. வளன் அரசு
பாளையங்கோட்டை 627002



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard