நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார் வாய் சொல் - குறள் 959 குடிமை மு. வரதராசன் உரை: இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும்; அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச்சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.
நலத்தின்-கண் நார் இன்மை தோன்றின் அவனை குலத்தின்-கண் ஐயப்படும் - குறள் 958 குடிமை மு. வரதராசன் உரை:ஒருவனுடைய நல்ல பண்புகளுக்கிடையில் அன்பற்ற தன்மை காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப்பிறப்புப் பற்றி ஐயப்பட நேரும். மு. கருணாநிதி உரை:என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அரிந்து யாக்க நட்பு - குறள் 793 நட்பாராய்தல் மு. வரதராசன் உரை: ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனோடு நட்புக் கொள்ளவேண்டும்.
குடி பிறந்து குற்றத்தின் நீங்கி வடு பரியும் நாண் உடையான்-கட்டே தெளிவு - குறள் 51:2 மு.வரதராசனார் உரை:நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும். சாலமன் பாப்பையா உரை: நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம் பண்பு உடைமை தூது உரைப்பான் பண்பு - குறள் 681 தூது மு. வரதராசன் உரை: அன்புடையவனாதல், தகுதியான குடிப்பிறப்பு உடையவனாதல், அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல் அகிய இவை தூது உரைப்பவனுடைய தகுதிகள்.
குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு - குறள் 794 நட்பாராய்தல் மு. வரதராசன் உரை:உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வரக்கூடிய பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்புக் கொள்ளவேண்டும்.
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும் இழுக்கார் குடி பிறந்தார் - குறள் 952 குடிமை மு. வரதராசன் உரை:உயர்குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்.
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர். குறள் 973:பெருமை பரிமேலழகர் உரை: மேல் அல்லார் மேல் இருந்தும் மேல் அல்லர் - செயற்கரிய செய்கலாது சிறியராயினார் உயர்ந்த அமளி முதலியவற்றின் மிசை இருந்தாராயினும் பெரியராகார், கீழல்லவர் கீழ் இருந்தும் கீழ் அல்லர் -அவை செய்து பெரியராயினார்; தாழ்ந்த வறுநிலத்திருந்தாராயினும் சிறியராகார். (மேலிருத்தல் கீழிருத்தல்களால் செல்வ நல்குரவுகளும், மேல் கீழ்களால் பெருமை சிறுமைகளும் கருதப்பட்டன. இவை இரண்டு பாட்டானும் முறையே குடிமை மாத்திரத்தானும் செல்வ மாத்திரத்தானும் அஃது உளதாகாமை கூறப்பட்டது.). மணக்குடவர் உரை:மேலான இடத்திருந்தாலும், மேன்மையில்லாதார் மேன்மக்களாகார்: கீழான இடத்திருந்தாலும் கீழ்மை யில்லாதார் கீழ்மக்களாகார். இடமென்பது செல்வத்தினால் இருக்குமிடம்.
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு. குறள் 409: கல்லாமை மு.வரதராசனார் உரை:கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே. சாலமன் பாப்பையா உரை:படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே. பரிமேலழகர் உரை:கல்லாதார் மேற்பிறந்தார் ஆயினும் - கல்லாதார் உயர்ந்த சாதிக்கண் பிறந்தாராயினும், கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துப் பாடு இலர் - தாழ்ந்த சாதிக்கண் பிறந்து வைத்தும் கற்றாரது பெருமை அளவிற்றாய பெருமையிலர். (உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும் , உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத்து என்பதாம். இதனான் அவர் சாதி உயர்ச்சியால் பயனின்மை கூறப்பட்டது.). மணக்குடவர் உரை: கல்வியில்லாதார் உயர்குலத்திற் பிறந்தாராயினும், இழிகுலத்துப் பிறந்தும் கற்றாரோடு ஒத்த பெருமையிலர். இது குலமுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.
அடுக்கிய கோடி பெறினும் குடி பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் - குறள் 954 குடிமை மு. வரதராசன் உரை:பலகோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்குக் காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.
குடி பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின் மதி-கண் மறு போல் உயர்ந்து - குறள் 957 குடிமை மு. வரதராசன் உரை:உயர்குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும் பண்பு உடைமை என்னும் வழக்கு - குறள் 992 பண்புடைமை மு. கருணாநிதி உரை: அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்த நெறியாகும் சாலமன் பாப்பையா உரை:எல்லாரிடமும் அன்புள்ளவனாக வாழ்வது. உலகத்தோடு ஒத்து வாழும் குடும்பத்தில் பிறந்திருத்தல் இவை இரண்டும் பண்புடைமை என்னும் நல்ல வழிகளாகும்.
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்தியாக்க நட்பு. குறள் 793:நட்பாராய்தல் மணக்குடவர் உரை:ஒருவனுடைய குணமும் குடிப்பிறப்பும் குற்றமும் குறைவில்லாத சுற்றமும் முன்பே ஆராய்ந்து, பின்பு அவனை நட்பாகக் கொள்க. இவையெல்லாம் ஒத்தனவாயின் உறவு நீளச் செல்லு மென்றவாறாம். மு. வரதராசன் உரை:ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனோடு நட்புக் கொள்ளவேண்டும். மு. கருணாநிதி உரை:குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும். சாலமன் பாப்பையா உரை:ஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக் கொள்க.
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. குறள் 794: மணக்குடவர் உரை:மேற்கூறியவற்றுள் உயர்குடிப்பிறந்து தன்மாட்டுப் பிறர் சொல்லும் பழிக்கு அஞ்சுமவனை அவன் வேண்டிய தொன்று கொடுத்தும் நட்பாகக் கொள்ளல் வேண்டும். மு. வரதராசன் உரை:உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வரக்கூடிய பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்புக் கொள்ளவேண்டும். மு. கருணாநிதி உரை:பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும். சாலமன் பாப்பையா உரை:நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும்.
அரசன் தன் அமைச்சரை/ நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கையில் அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. குறள் 681: தூது மணக்குடவர் உரை:அரசன்மாட்டு அன்புடைமையும், அமைந்த குடியின்கண் பிறத்தலும், வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையும் தூதாகிச் சென்று சொல்லுமவனது இயல்பாம். வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையாவது அவன் விரும்புவனவற்றைத் தான் விரும்பாமை. மு. வரதராசன் உரை:அன்புடையவனாதல், தகுதியான குடிப்பிறப்பு உடையவனாதல், அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல் அகிய இவை தூது உரைப்பவனுடைய தகுதிகள். மு. கருணாநிதி உரை:அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும். சாலமன் பாப்பையா உரை:நாட்டு மக்கள், அரசு, உறவு இவற்றின் மீது அன்பும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், அரசு விரும்பும் பண்பும் கொண்டிருப்பவரே தூதர்.
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும். குறள் 501: தெரிந்துதெளிதல் மணக்குடவர் உரை:அறமும் பொருளும் இன்பமும் உயிரச்சமுமென்னும் நான்கின் கூறுபாட்டினையும் ஆராய்ந்து, ஆராய்ந்தபின்பு ஒருவன் அரசனால் தெளியப்படுவான். முன்பு நான்கு பொருளையும் ஆராயவேண்டுமென்றார் பின்பு தேறப்படுமென்றார். மு. வரதராசன் உரை:அறம், பொருள், இன்பம், உயிர்க்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான். மு. கருணாநிதி உரை:அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும். சாலமன் பாப்பையா உரை:அறத்தைக் காக்க அரசைக் கவிழ்ப்போம், சம்பள உயர்வு தராத அரசைக் கவிழ்ப்போம், உனக்காகவே வாழும் பெண் இவள் என்பது போல் கூறி அறம், பணம், பெண் என்னும் மூன்று பொய்க் காரணங்களால் சோதிப்பது, அவனது உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது போல் நடிப்பது என இந்நான்கு சோதனைகளால் ஒருவனின் மன இயல்பை ஆராய்ந்து அவனைப் பதவிக்குத் தேர்வு செய்ய வேண்டும்.
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் சுட்டே தெளிவு. குறள் 502:தெரிந்துதெளிதல் மணக்குடவர் உரை:உயர்குடியிற் பிறந்து காமம் வெகுளி முதலான குற்றித்தினின்று நீங்கி, தனக்கு வரும் பழியை அறுக்கவல்ல நாணமுடையவன்கண்ணதே அரசனது தெளிவு. இதுவும் உடன்பாடென்று கொள்ளப்படுமென்றவாறு. மு. வரதராசன் உரை:நல்ல குடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியான செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும். மு. கருணாநிதி உரை:குற்றமற்றவனாகவும், பழிச்செயல் புரிந்திட அஞ்சி நாணுகின்றவனாகவும் இருப்பவனையே உயர்குடியில் பிறந்தவன் எனத் தெளிவு கொள்ள வேண்டும். சாலமன் பாப்பையா உரை:நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.