Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக்காசு


Guru

Status: Offline
Posts: 7329
Date:
திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக்காசு
Permalink  
 


திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக்காசு - 1
ஐராவதம் மகாதேவன்
 
(மார்ச் 4, 1995-ம் ஆண்டு தினமணி சுடரில் வெளியான கட்டுரை, சிறிய மாற்றங்களுடன் வரலாறு.காம் வாசகர்களின் பார்வைக்கு...)
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=539
திருவள்ளுவப் பெருமானின் திருவுருவம் பொறித்த ஒரு தங்க நாணயம் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி அரசால் சென்னையில் வெளியிடப்பட்டது என்பது இதுவரை எவருக்கும் தெரிந்திராத ஒரு வியப்பான செய்தியாகும்.
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=524
கும்பினியார் வெளியிட்ட காசு

கல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தங்க நாணயங்களின் பட்டியலின் முதல் தொகுதியில் இந்தத் தங்க நாணயத்தைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு முதன்முதலாகக் காணப்படுகிறது. இரட்டை வராகன் என்று அழைக்கப்பட்ட ஒரு தங்க நாணயத்தின் முன்புறத்தில் அமர்ந்த நிலையில் 'விஷ்ணு'வின் திருவுருவமும், பின்புறத்தில் ஐந்துமுனை நட்சத்திரமும் பொறிக்கப்பட்டுள்ளன என்று இக்குறிப்பு தெரிவிக்கிறது. இக்காசு ஆங்கிலேய கிழக்கிந்தியக் கும்பினியின் சென்னை அரசால் 1819-க்கு முன்னர் வெளியிடப்பட்டது என்றும், இது புத்தம் புதியதாகக் காணப்படுவதால் அச்சிடப்பட்டும் புழக்கத்திற்கு வெளியிடப்படாத நாணயமாக இருக்க வேண்டும் என்றும், இதே போன்று நான்கு நாணயங்கள் மட்டுமே கிடைத்துள்ளன என்றும், அவற்றில் இரண்டு லண்டனில் பிரிட்டிஷ் மியூசியத்திலும், மற்ற இரண்டு கல்கத்தாவில் இந்திய அருங்காட்சியகத்திலும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன என்றும் இக்குறிப்பிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

மேற்கண்ட குறிப்பில் இக்காசில் காணப்படும் உருவம் 'விஷ்ணு' என்று தவறாக அடையாளம் காட்டப்பட்டதாலும், நாணயத்தின் படம் அந்த நூலில் தரப்படாததாலும், சென்னையிலிருந்து கும்பினி அரசி வெளியிட்ட பல 'நட்சத்திர பகோடா' காசுகளில் இதுவுமொன்று என்று கருதி நாணயவியல் அறிஞர்கள் இந்த அரிய நாணயத்தைப் பற்றி மேலும் ஆய்வு செய்யாமலே விட்டுவிட்டனர் என்று தோன்றுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் கல்கத்தா பல்கலைகழகத்து வரலாற்றுப் பேராசிரியர் பி.என்.முகர்ஜி கல்கத்தா அருங்காட்சியகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தங்க நாணயங்களின் பட்டியலை மட்டும் தெளிவான வண்ணப்படங்களுடன் வெளியிட்டுள்ளார்.

இந்நூலில்தான் முதன்முதலாக இங்கு குறிப்பிடப்படும் தங்க நாணயத்தின் வண்ணப்படம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்திய நாணய வரலாற்றிலேயே மிகச் சிறந்த தங்க நாணய வெளியீடுகளில் இதுவுமொன்று என்று இந்த நூல் சுட்டிக் காட்டியிருக்கிறது. காசின் முன்புறம் அமர்ந்த நிலையில் காணப்படும் திருவுருவம் 'முனிவராகவோ அல்லது தெய்வமாகவோ' இருக்கலாம் என்று முகர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

நாணயத்தைப் பற்றிய விவரங்கள்

காசின் முன்புறத்தில் அமர்ந்த நிலையில் ஒரு முனிவரின் திருவுருவம் காணப்படுகிறது. அவர் ஒரு பீடத்தின் மீது பத்மாசனமிட்டு தியான நிலையில் அமர்ந்திருக்கிறார். வலது கை தொடை மீதும் இடது கை ஒரு சுவடியை ஏந்தி உள்ள பாவனையிலும் உள்ளன. இடையில் தட்டுச் சுற்றாக வேட்டியும் இடது தோளில் மடித்துப் போட்ட துண்டும் அணிந்துள்ளார். மழித்த தலை; தலைக்கு மேலே ஒரு குடை; பீடத்துக்கு முன் ஒரு தீர்த்த பாத்திரம் காணப்படுகிறது. காசின் பின்புறத்தில் ஐந்துமுனை நட்சத்திரம் புள்ளிகளாலான வட்டத்துக்குள் பொறிக்கப்பட்டுள்ளது.

thiruvalluvar_coin_back.jpg

thiruvalluvar_coin_front.jpg


யார் இந்த முனிவர்?

காசின் முன்புறம் காணப்படும் உருவத்தின் மேனியில் எந்தவிதமான ஆபரணங்களும் இல்லாததாலும், சுற்றிலும் கொடி, ஆயுதம் போன்ற எந்தவிதமான சின்னங்களும் காணப்படாததாலும் இவ்வுருவம் எந்த ஒரு தெய்வத்தையோ அல்லது அரசனையோ குறிக்கவில்லை என்று தெளிவாகத் தெரிகிறது. மேலே உள்ள குடை, அமர்ந்துள்ள பீடம், தீர்த்த பாத்திரம், பத்மாசனத்தில் தியான நிலை, எளிய உடை ஆகியவற்றிலிருந்து இத்திருவுருவம் ஒரு முனிவரைக் குறிக்கிறது என்று நிச்சயமாகக் கூறலாம். மேலும் அவருடைய இடையில் உள்ள வேட்டி தட்டுச் சுற்றாக இருப்பதினாலும், தோளில் துண்டை மடித்துப் பாங்கிலிருந்தும் இவர் ஒரு தமிழ் முனிவர் என்று அடையாளம் காண முடிகிறது. இவர் சுவடியை ஏந்தியுள்ள பாவனையில் சித்தரிக்கப்பட்டுள்ளது இவர் ஒரு ஆசானாகவோ பெரும்புலவராகவோ இருக்க வேண்டும் என்று உணர்த்துகிறது. யார் இந்த முனிவர்? இவருடைய திருவுருவம் கும்பினியார் போட்ட தங்கக் காசில் எப்படி இடம் பெற்றது? காசில் எழுத்துக்கள் இல்லாத நிலையில் இக்கேள்விகளுக்குப் பலதரப்பட்ட அகச்சான்றுகளையும் புறச்சான்றுகளையும் கொண்டுதான் விடை காண முடியும்.

எளிய உடையுடன் தியான நிலையில் ஒரு குடையின் கீழ் அமர்ந்து ஒரு நூலை ஏந்தியுள்ள பாவனையில் சித்தரிக்கப்பட்டுள்ள இத் திருவுருவம் திருவள்ளுவப் பெருமானுடையதாக இருக்கலாமோ என்று ஓர் எண்ணம் என் மனதில் பளிச்சிட்டது. இந்த யூகத்தை உறுதிப்படுத்திக்கொள்ள சென்னை ஆவணக் காப்பகத்தில் சேகரித்துப் பாதுகாக்கப்பட்டு வரும் கும்பினி அரசாணைகளையும் அக்கால நாணய சாலையின் அறிக்கைகளையும் பார்வையிட்டதில் சில முக்கியமான தடயங்கள் கிடைத்துள்ளன. இவ்வாய்வுக்கு எல்லா வசதிகளையும் செய்து உதவிய ஆவணக் காப்பகத்தின் ஆணையர் திரு.எம்.பரமசிவம் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

காசின் காலம்

இக் காசின் பின்புறத்தில் பொறிக்கப்பட்டுள்ள ஐந்து முனை நட்சத்திரச் சின்னத்திலிருந்து, ஆங்கிலேயக் கிழக்கிதியக் கும்பினி அரசு சென்னையிலிருந்து 19-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வெளியிட்ட "நட்சத்திரப் பகோடா" அல்லது 'வராகன்' என்று அழைக்கப்பட்ட பல தங்க நாணயங்களில் இதுவும் ஒன்று என்று தெரிகிறது. மேலும் இக் காசு இயந்திரத்தின் மூலம் மிகவும் நேர்த்தியாக அச்சடிக்கப்பட்டுள்ளது. கும்பினி அரசு சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதன் முதலாக 1807-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இயந்திர நாணய சாலையை நிறுவி தங்கம், வெள்ளி மற்றும் செப்புக் காசுகளை வெளியிடத் தொடங்கியது. 1817-ம் ஆண்டும் டிசம்பர் மாத இறுதியில் தங்க வராகன்கள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டு விட்டது. ஆகையால் இக்காசு 1807-ம் ஆண்டு முதல் 1817-ம் ஆண்டு வரையிலான பத்தாண்டு காலத்துக்குள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். மேலும், 1616-ம் ஆண்டும் ஆங்கிலேய கிழக்கிந்திய கும்பினியார் கல்கத்தாவில் வணிக மையம் நிறுவி, 200 ஆண்டுகள் ஆனதை கொண்டாட 1816-ம் ஆண்டு சில சிறப்பு நாணயங்களை வெளியிட்டார்கள். அவற்றுள் இது ஒன்றாக இருக்கலாம்.

எல்லிஸ் துரையும் திருக்குறளும்

அக்கால கட்டத்தில் ஃப்ரான்சிஸ் வைட் எல்லிஸ் என்னும் ஆங்கிலேய அதிகாரி சென்னை மாவட்டக் கலெக்டராகப் பணியாற்றி வந்தார். 1796-ம் ஆண்டு ஆட்சிப் பணியில் சேர்ந்த அவர் சில ஆண்டுகளிலேயே தமிழ் முதலிய தென்னிந்திய மொழிகளிலும் வடமொழியிலும் பெரும் புலமை பெற்றுவிட்டார். தமிழ் நூல்கள் அச்சேறிராத அக்காலத்திலேயே அவர் ஏட்டுச் சுவடிகளிலிருந்து முறையாகத் தமிழைக் கற்றுத் தேர்ந்தார். தமிழ் முதலிய திராவிட மொழிகள், சம்ஸ்கிருதம் போன்ற இந்தோ-ஆரிய மொழிகளிலிருந்து வேறுபட்டவை என்ற உண்மையை முதன்முதலாக உலகுக்கு அறிவித்த பெருமை இவரையே சாரும்.

எல்லிஸ் துரைக்கு திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீதும் அளப்பரிய பற்று இருந்தது. திருக்குறளிலிருந்து பல குறள்களை தேந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தெளிவான உரையுடன் ஓர் அரிய நூலை இவர் எழுதினார். இதுவே திருக்குறளின் முதல் ஆங்கில மொழி பெயர்ப்பாகும். துரதிருஷ்டவசமாக அந்நூல் முற்றுப்பெறும் முன்னரே எல்லிஸ் துரை இராமநாதபுரத்தின் அருகே முகாமிட்டு இருந்த போது தற்செயலாக விஷ உணவை அருந்தி அகால மரணமடைந்தார். அவர் இறந்த பின் வெளிவந்த அந்த நூலை மீண்டும் சிறந்த முறையில் ரா.பி.சேதுப்பிள்ளை பதிப்பித்துள்ளார். இந்நூலில் எல்லிஸ் துரை முன்னூறுக்கும் மேற்பட்ட பழந்தமிழ் நூல்களிலிருந்து காட்டியுள்ள மேற்கோள்களிலிருந்து அவருடைய ஆழ்ந்த புலமை வெளிப்படுகிறது. இன்று காணாமற் போய்விட்ட வளையாபதி போன்ற சங்க நூல்களிலிருந்தும் இவர் மேற்கோள்களைக் கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கல்வெட்டில் திருக்குறள்


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக்காசு
Permalink  
 


திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக்காசு - 2
ஐராவதம் மகாதேவன்
 
கல்வெட்டில் திருக்குறள்

எல்லிஸ் துரை திருவள்ளுவர் மீதும் திருக்குறளின் மீதும் கொண்டிருந்த பற்றுக்கு எடுத்துக்காட்டாக இரு அரிய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. சென்னை நகரில் 1818-ல் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது சென்னைக் கலெக்டராக எல்லிஸ் துரை பெரு முயற்சி செய்து நகரில் 27 இடங்களில் குடிநீர் கிணறுகளை தோண்ட ஏற்பாடுகள் செய்தார். அக்கிணறுகளில் ஒன்று இராயப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயிலில் இன்றும் உள்ளது. இக்கிணற்றின் கைப்பிடிச் சுவரில் பதிக்கப்பட்டிருந்து ஒரு கல்லில் எல்லிஸ் துரை 1818-ம் ஆண்டில் ஒரு நீண்ட கல்வெட்டை வெட்டி வைத்தார். (இக்கல்வெட்டு இப்பொழுது தமிழ்நாடு தொல்லியல் துறையின் மதுரை அருங்காட்சியகத்தில் உள்ளது.) அதில்

....சயங்கொண்ட தொண்டிய சாணுறு நாடெனும்
ஆழியில் இழைத்த வழகுறு மாமணி
புனகடல் முதலாக புடகலளவு
நெடுநிலந்தாழ நிமிர்ந்திரு சென்னப்
பட்டணத் தெல்லீஸனென்பவன் யானே
பண்டார காரிய பாரஞ்சுமக்கையிற்
புலவர்கள் பெருமான் மயிலையம்பதியான்
தெய்வப் புலமை திருவள்ளுவனார்
திருக்குறடன்னிற் றிருவுளம் பற்றிய
"இரு புனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணு நாட்டிற் குறுப்பு"
என்பதின் பொருளை யென்னுளாய்ந்து...

என்ற வரிகளில் ஓர் அழகிய குறளை மேற்கோளாகக் கையாண்டிருக்கிறார். மேலும் எல்லிஸ் துரை அக்காலத்தில் சென்னப்பட்டணத்து பண்டார காரிய பாரம் சுமந்திருந்ததையும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. அக்காலத்தில் நாணய சாலை பண்டாரத்தின் (treasury) மேற்பார்வையில் செயல்பட்டு வந்தது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

மற்றொரு கல்வெட்டு திண்டுக்கல் நகரில் உள்ல எல்லிஸ் துரையின் கல்லறையின் மீது பொறிக்கப்பட்டுள்ளது. இதில் "எல்லீஸன் என்னும் இயற்பெயருடையோன்"

'....திருவள்ளுவப் பெயர்த் தெய்வஞ் செப்பி
யருள் குறணூலுளறப்பாலினுக்குத்
தங்கு பல நூலு தாரண கடலைப் பெய்
திங்கி லீசுதனி லிணங்க மொழிபெயர்த்தோன்....'

என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகளிலிருந்து எல்லிஸ் துரையின் ஆழ்ந்த தமிழ்ப் புலமையும் அவருக்கு திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீதும் இருந்த மிகுந்த ஈடுபாடும் தெளிவாகத் தெரிகின்றது.

திருவள்ளுவரின் திருமேனியே!

Valluvar_OBV_BM.jpg
பிரிட்டிஷ் அருங்காட்சியக திருவள்ளுவர் காசுகள் முன்புறம்


Valluvar_REV_BM.jpg
பிரிட்டிஷ் அருங்காட்சியக திருவள்ளுவர் காசுகள் பின்புறம்



எனவே எல்லிஸ் துரை 1810-19-ம் ஆண்டுகளில் சென்னைக் கலெக்டராக பணியாற்றி வந்த பொது பண்டார காரியத்தையும் செய்து வந்தார் என்றும் அதே சமயத்தின் திருக்குறளை முற்றிலும் ஓதி உணர்ந்து அதன் அருமை பெருமைகளை அறிந்து அதற்கு ஆங்கிலத்தில் ஓர் உரை எழுதினார் என்றும் மேற்குறிப்பிட்ட கல்வெட்டுச் சான்றுகள் மூலம் தெரிய வருகின்றது. எல்லிஸ் துரை தமது அரசு பணியில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தாம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த திருக்குறளை இயற்றிய திருவள்ளுவப் பெருமானின் திருவுருவத்தைக் கும்பினி அரசின் பெரிய தங்க நாணயமான இரட்டை வராகனின் பதிப்பிக்க ஏற்பாடுகள் செய்தார் என்று நம்ப இடமிருக்கிறது.

சென்னையில் உள்ள ஆவணக் காப்பகத்துள் நான் ஆய்வு செய்த பொது, சென்னை நாணய சாலையில் அச்சடிக்கப்பட்ட தங்க நாணயங்களின் மாதிரிகள் பெட்டிகளில் வைக்கப்பட்டு அவற்றுடன் சென்னை அரசு மூலமாகக் கல்கத்தாவிலிருந்த மத்திய அரசுக்கும் லண்டனில் செயல்பட்ட கும்பினி டைரக்டர்களின் ஆணையத்திற்கும் அனுப்பப்பட்ட குறிப்புகள் கிடைத்தன. ஆயினும் அக்கடிதங்களுடன் இணைக்கப்பட்டிருந்த பட்டியல்களின் நகல்களோ, காசுகளின் வரைபடங்களோ கிடைக்காததால் இவ்வாண்டுகளில் அச்சிட்ட இரட்டை வராகன்களில் இதுவும் ஒன்றா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. என்றாலும் இக்காசுகள் லண்டனிலும் கல்கத்தாவிலும் உள்ள அருங்காட்சியகங்களில் மட்டுமே கிடைப்பதால் அவை மேற்கூறியவாறே அந்த இடங்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவு.

அச்சிடப்படும் இந்தத் தங்க நாணயம் புழக்கத்திற்காக ஏன் வெளியிடப்படவில்லை என்ற கேள்விக்கு இப்பொழுது விடை காண்பது கடினமே. ஒருக்கால் இக்காசின் மாதிரிகள் கல்கத்தாவில் இருந்த மத்திய அரசுக்கும், லண்டனில் இருந்த கும்பினி ஆணையத்துக்கும் போய்ச் சேரும் முன்னர், இனிமேல் வராகன்களை அச்சடிப்பது இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்; அல்லது திருவள்ளுவப் பெருமானின் அருமை பெருமைகளை உணராது, மத்திய அரசும் கும்பினி நிர்வாகமும் இக்காசை வெளியிடும் திட்டத்தை நிராகரித்திருக்கலாம். மேலும் ஆவணங்கள் கிடைத்தால்தான் இப்பிரச்னைக்குத் தெளிவான விடை கிடைக்கக் கூடும்.

அக்காலத்திய நாணய சாலை ஆவணங்கள் இப்பொழுது மிகவும் சிதிலமாகவும் இன்னும் சீர்படுத்தப்படாமலும் இருப்பதால் அவற்றை முற்றிலும் ஆய்வு செய்ய இயலவில்லை. எனினும் கிடைத்துள்ள எல்லாச் சான்றுகளையும் தொகுத்து ஒருங்கே நோக்கினால் இத்தங்க நாணயத்தின் திருக்குறளுக்கு உரை கண்ட எல்லிஸ் துரையின் செல்வாக்கால் திருவள்ளுவப் பெருமானின் திருவுருவம் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. சென்னை ஆவணக் காப்பகத்தில் மேலும் தேடினால் இம்முடிவுகளை உறுதிப்படுத்தும் சான்றுகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

திருவள்ளுவரின் திருவுருவ அமைப்பு

Tiruvalluvar_Image.jpg
மயிலாப்பூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை


Tiruvalluvar_Photo.jpg
திருவள்ளுவரின் தற்கால தோற்றம்.


இக்காசில் காணப்படும் திருவுருவத்தையும் சென்னை மயிலையில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் அண்மையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். சுமார் 14-15-ம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படும் இக் கற்சிலையை பற்றி தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வாளர் சா.கிருஷ்ணமூர்த்தி பின்வருமாறு கூறுகிறார்:

"இச்சிலையின் உருவம் பீடத்தில் இரு கால்களையும் மடக்கி அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. தியான நிலையில் வலக்கை சின் முத்திரையுடன் அக்க மாலை ஏந்தியும், இடக்கை ஓலைச்சுவடி ஏந்தியும், இச்சிலை காணப்படுகிறது. இவ்வுருவத்தின் தலையை முடிந்த கொண்டையும், முகத்தில் நீண்ட தாடியும் உடலில் ஓடும் பட்டையான அங்கியும், இடையில் ஆடையும் அணி செய்கின்றன." இன்று தமிழக அரசின் மூலம் பிரபலமாகி இருக்கும் திருவள்ளுவரின் திருவுருவப் படமும் ஏறத்தாழ இக் கற்சிலையின் அமைப்பை ஒத்துள்ளது எனலாம்.

இக்காசில் கணப்படும் திருவுருவத்திற்கும் மற்ற இரு உருவகங்களுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் கண்கூடாகத் தெரிகின்றன. ஆயினும், ஒரு முக்கிய வேறுபாடும் பளிச்சென்று தெரிகிறது. காசில் உள்ள முனிவரின் திருவுருவத்தில் தலை மழித்தும், முகத்தில் தாடி மீசை இன்றியும் குறிப்பிடத்தக்க வேறுபாடாகும்.

திருவள்ளுவர் சமணரா?

இக்காசில் முனிவரின் தலை மீதுள்ள குடையையும், மழித்த தலையையும், முகத்தையும் காணும் போது இவரை உருவகப்படுத்தியவர்கள் இவர் ஒரு சமண முனிவர் என்று கருதியுள்ளார்கள் எனத் தெளிவாகத் தெரிகிறது. திருக்குறளில் 'ஆதி பகவன்', 'மலர்மிசை ஏகினான்', 'அறவாழி அந்தணன்' போன்று வரும் சொல் தொடர்கள் வள்ளுவப் பெருமான் சமண சமயத்தினர் என்று கொள்வதற்கு வலுவான சான்றுகள் ஆகும்.

வேண்டுகோள்

வள்ளுவப் பெருந்தகையின் திருவுருவத்தைத் தாங்கி நிற்கும் பொற்காசு ஓர் அரிய கலைப் பொக்கிஷம் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. திருவள்ளுவப் பெருமானின் திருவுருவம் பொறிக்கப்பட்டிருக்கும் நான்கு தங்க நாணயங்களில் இரண்டு லண்டன் பிரிட்டிஷ் மியூசியத்தில் நமக்கு எட்டாக்கையில் உள்ளன. நம் நாட்டிலேயே கல்கத்தாவில் இந்திய அருங்காட்சியகத்தில் உள்ள மற்ற இரு காசுகளில் ஒன்றையாவது நிரந்தரக் கடனாகப் பெற்று அக்காசை திருவள்ளுவப் பெருமான் அவதரித்த சென்னை மாநகரின் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமெனக் கோருகின்றேன்.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

புறக்கணிக்கப்படுகிறதா திருவள்ளுவர் கோவில்?

 
 
Jump to navigationJump to search

வெள்ளி, சூலை 31, 2009, சென்னை, தமிழ்நாடு:


மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர்- வாசுகி கோயில் பல ஆண்டுகளாகப் பராமரிக்கப்படாததால், பொலிவை இழந்து வருகிறது.


உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் பிறந்த இடம் மயிலாப்பூர். அவர் அவதரித்த இடத்திலேயே வள்ளுவருக்கு தனிக் கோயில் எழுப்பப்பட்டுள்ளது.


இக் கோயிலின் மைய மண்டபம் அருகே இவர் பிறந்த இடத்தில் இருந்த புன்னை மரம் இன்றும் "தல விருட்சமாக' உள்ளது. இந்த மரத்தைச் சுற்றி கடந்த 6.5.1935-ல் மேடை அமைக்கப்பட்டு, செப்புத் தகடு கவசமாகப் பூணப்பட்டது.

எம்.கே. கன்னியப்பநாயகர், டி. சுப்பிரமணிய செட்டியார் ஆகியோர் இந்த மேடையை அமைத்ததாக தெரியவந்துள்ளது.

 

1974-ல் திருப்பணி


இதன்பின் இக் கோயிலின் திருப்பணி கடந்த 27.4.1973-ல் முதல்வர் கருணாநிதி தலைமையில் தொடங்கியது. திருப்பணிகளுக்கான புரவலராகவும் கருணாநிதியே பொறுப்பேற்றார்.


அப்போதைய அறநிலையத் துறை அமைச்சர் மு. கண்ணப்பன், கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் இவ் விழாவில் பங்கேற்றனர்.


இக் கோயிலின் வளாகத்தில் உள்ள ஸ்ரீகாமாட்சி- ஏகாம்பரநாதர் கோயில் திருப்பணியும் தொடங்கப்பட்டது. திருப்பணிக் குழுத் தலைவராக குன்றக்குடி அடிகளார் இருந்துள்ளார். திருப்பணிகள் நிறைவேற்றப்பட்ட பின், கடந்த 23.01.2001-ல் திருவள்ளுவர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இதில் முதல்வர் உள்ளிட்ட பலர் பங்கேற்றதாக கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

 

அறநிலையத் துறையின் பராமரிப்பில்...


மயிலாப்பூர் ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் கோயிலின் சார்புக் கோயிலாக உள்ள வள்ளுவர் கோயில் தற்போது அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ளது. இக் கோயிலின் உள்ளே உள்ள கருவறையில் வள்ளுவர் எழுந்தருளியுள்ளார். அருகில் வள்ளுவரின் மனைவி வாசுகிக்கும் தனி சன்னதி எழுப்பப்பட்டுள்ளது.

பகல் நேரத்தில் நாய்களின் கூடாரமாகவே இக் கோயில் வளாகம் மாறிவிட்டது. வள்ளுவர் அவதரித்த புன்னை மரத்தடி மேடையில் தனது பெற்றோரான ஆதி-பகவனின் திருக்கரங்களில் மழலையாக உள்ளது போல சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இச்சிலைகள் மீது பறவைகளின் எச்சமே பரவிக் காணப்படுகிறது. புண்ணிய தீர்த்தம் வழங்கிய கிணறு தற்போது "நல்லதங்காள் கிணறு' போல பராமரிப்பின்றி பாழடைந்துள்ளது.


கோயிலின் வெளிப்புறத்தில் 2 தோரண வாயில்கள் வள்ளுவர்-வாசுகியின் சிற்பங்களுடன் அமைக்கப்பட்டிருந்தும், சுண்ணாம்புப் பூச்சு கண்டு ஆண்டுக் கணக்கில் ஆனது போல பொலிவிழந்துள்ளது.


இக் கோயில் வளாகத்தில் தீவைத்து எரிக்கப்பட்ட அட்டைகளின் சாம்பல் குவியல்களாக எஞ்சியுள்ளன. மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளும் சேதமுற்றுள்ளன. சுற்றுச் சுவர்களில் போதிய விளக்குகள் இல்லாததால், இரவில் இக் கோயில் இருளில் மூழ்கியுள்ளது.

 

சிதிலமடைந்த நிலையில் நூலகம்


கோயில் வளாகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே தனி நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது என இப் பகுதி மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். பராமரிக்கப்படாததால் இந்த நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த திருக்குறளும், குறள் நெறி விளக்கும் அரிய ஆய்வு நூல்களும் தூசு படிந்து, செல்லரித்து சேதமுற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.


கோயிலின் அருகில் கட்டப்பட்டுள்ள வள்ளுவர்-வாசுகி திருமண மண்டபம் அரசுக்கு தொடர்ந்து வருவாய் ஈட்டித் தருகிறது. ஆனால், அதைப் பராமரிக்கும் அளவு கூட வள்ளுவர் கோயில் பராமரிக்கப்படாமல் உள்ளது. கோயிலின் பிரதான வாயிலின் இருகே பிரம்மாண்ட குடிநீர்த் தொட்டி நிறுவப்பட்டிருந்தது. தற்போது, இது பயன்படுத்தப்படததால் "துவார பாலகர்' போல் நிற்கிறது.

குப்பை சேகரிக்கும் இடமாக...


இதன் அருகே குப்பைக் குவியல்கள் கொட்டப்பட்டு, துப்புரவு வாகனங்கள் மொத்தமாக சேகரித்துச் செல்லும் அவல நிலை உள்ளது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதோடு, பொது சுகாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

புறக்கணிக்கப்படுகிறதா திருவள்ளுவர் கோவில்?


மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் குறித்து இளைய தலைமுறையினருக்கு எவ்வித தகவலும் கிடைக்க இயலாத நிலை உள்ளது.


அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள இக் கோயிலுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு எதுவும் இதுவரை இல்லை.


அறநிலையத் துறை மற்றும் சுற்றுலாத் துறையின் வரைபடங்கள், விளக்கக் கையேடுகள் மற்றும் இணையதளங்களில் கூட, வள்ளுவர் திருக்கோயில் பற்றிய விவரங்கள், படங்கள் எதிலும் இடம் பெறவில்லை.


கோயில்களின் தல வரலாற்றிலும் முழுமையான தகவல்கள் ஏதும் இல்லை. மாநகராட்சி பள்ளிகள் முதல் தமிழகத்தின் அனைத்து பள்ளி மாணவர்களும் இக் கோயிலுக்கு, கல்வி சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். சுற்றுலாத் துறை இப்போது தினமும் இயக்கும் சிற்றுந்துகள் இக் கோயிலுக்கும் பயணிகளை அழைத்து வர வேண்டும்.


பள்ளிகளில் பாடநூல்களிலும் இக் கோயிலைப் பற்றிய செய்திகள் விரிவாக இடம் பெற வேண்டும். தமிழக மக்கள், தமிழறிஞர்கள், இசை, நடனக் கலைஞர்கள் பெருந்திரளாக பங்கேற்கும் வகையில் ஆண்டுதோறும் வள்ளுவருக்கு பிரம்மாண்ட விழா நடத்த அரசு நடவடிக்கை என்பதே மக்களின் விருப்பம். சென்னை மயிலையில் பிறந்த வள்ளுவருக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில், இதை அரசு நிறைவேற்றுமா?



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

q%2B5ii%2Bavviyar.jpg 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

q%2Bvalluvar%2Btemple.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

q%2Bvalluvar%2Bcoin%2B2.jpg 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

q%2Bvalluvar%2Bcoin.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

q%2Bvalluvar%2Bcoin.jpg 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 q%2Bvalluvar%2Bcoin%2B2.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

q%2B5ii%2Bavviyar.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Q%2BVALLUVAR.png q%2Bvalluvar%2Bkoil.jpgq%2Bvalluvar%2Btemple.jpg



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard