கண்மூடித்தனமான ‘திராவிட’ எதிர்ப்பையும், திராவிட இயக்க எதிர்ப்பையும் இன்னும் சிலர் திட்டமிட்டே பரப்பிக் கொண்டுள்ளனர். அண்மையில் தமிழக மீனவர் ஒருவர் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டபோது, தமிழ் உணர்வும், மனித நேயமும் உள்ள அனைவரும் பதறித் துடித்தோம். அந்த வேளையிலும் கூட, சென்னையில் ஓரிடத்தில், ‘ திராவிடத்தின் பெயரால் நாம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டதால், இப்படிப் படுகொலைகள் தொடர்கின்றன’ என்று ஒரு பதாகை வைக்கப்பட்டி ருந்தது. அந்த நிகழ்விற்கும், திராவிடத்திற்கும் என்ன தொடர்பு? எதற்கெடுத்தாலும் திராவிட எதிர்ப்பைக் கையிலெடுப்பது, சிலரிடம் ஒரு விதமான மனநோயாகவே பரவிக் கொண்டுள்ளது.

ki_aa_pe_3401944ஆம் ஆண்டு, ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் சூட்டும் போதே, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. போன்றவர்கள் எதிர்த்தனர் என்று பரவலாகக் கூறப்படுகின்றது. ஆனால் பழைய வரலாற்றுச் செய்திகளைப் புரட்டினால், வேறு பல உண்மைகள் நமக்குக் கிடைக்கின்றன. அதேபோல, திராவிட இயக்கங்களால்தான், தெலுங்கர்களின் செல்வாக்கு இங்கே கூடிற்று என்றும் கூறப்படுகிறது. அதிலும் உண்மை யில்லை.

1938ஆம் ஆண்டு, பெரியார் சிறையிலிருக்கும்போது, நீதிக்கட்சியின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அடுத்த ஆண்டு அவர் விடுதலையாகி வெளியே வந்த பின்பு, கட்சியின் புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நீதிக்கட்சியில் செல்வாக்குப் பெற்றிருந்த தெலுங்கர்களின் நிலை, பெரியார் தலைவரான பிறகு குறைகிறது என்பதே உண்மை. பெரியார் தலைமையில், 14 புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுள் 5 பேர் மட்டுமே தெலுங்கர்கள். அவர்களுள்ளும், தொழிற்சங்கத் தலைவராகப் பொறுப்பேற்ற பாசுதேவ், 1939ஆம் ஆண்டே பதவி விலகிவிட்டார். அந்த இடத்திற்குக் கி.ஆ.பெ.விசுவநாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆக, இன்றைய ஆந்திராவின் 9 மாவட்டங்களில் பெரும்பாலானவற்றைத் தன்னுள் கொண்டிருந்த அன்றைய சென்னைத் தலை மாகாணத்தின் பொறுப்பாளர்கள் 14 பேரில், 10 பேர் தமிழர்களாக இருந்தனர். 4 பேர் மட்டுமே தெலுங்கர்கள். இது எப்படித் தெலுங்கர் ஆதிக்கம் ஆகும்?

1950களின் இறுதியில், தமிழக அதிகாரிகள் பலர் மலையாளிகளாக இருப்பதைப் பட்டியல் போட்டுக் காட்டி எதிர்ப்புத் தெரிவித்தவர் பெரியார்தான். இப்படியே நிலைமை தொடருமானால், ‘மலையாளிகள் எதிர்ப்பு  மாநாட்டை’ நடத்த வேண்டியிருக்கும் என்று எச்சரித்தவரும் பெரியார்தான்.

நீதிக்கட்சியின் பொறுப்பாளர்களாக இருந்த பி.டி.ராஜன், கி.ஆ.பெ. விசுவநாதம் போன்றவர்கள் பெரியாருடன் பல வேளைகளில் முரண்டுபட்டு நின்றனர் என்பது உண்மைதான். அதற்கான காரணங்களைப் பழைய குடி அரசு ஏடுகளில் நம்மால் காண முடிகிறது.

பி.டி.ராஜன், கம்பராமாயணம், புராணங்கள் ஆகியனவற்றை ஆதரித்தும், பாராட்டியும் பல கூட்டங்களில் பேசினார். இதனைப் பெரியார் ஏற்கவில்லை. நீதிக்கட்சிக்குள் உள்ள பழைமைவாதத்தையும் சேர்த்தே தான் எதிர்த்துப் போராடுவதாகப் பெரியார் கூறினார். பெரியாரின் பகுத்தறிவுப் பரப்புரைகளைப் பி.டி.ராஜன் போன்ற தலைவர்களால் ஏற்க முடியவில்லை. பி.டி.ராஜனின் பழைமைவாதத்தைக் கண்டித்து, 1944 இல் குடிஅரசு ஏட்டில், கைவல்யம் எழுதியுள்ள கட்டுரைகள் பல வெளியாகி உள்ளதை நம்மால் பார்க்க முடிகிறது.

சேலத்தில், 1944 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மாநாட்டில்தான், நீதிக்கட்சி, திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் பெறுகின்றது. அதனை கி.ஆ.பெ.போன்றோர் கடுமையாக எதிர்த்தனர் என்று திரும்பத் திரும்பக் கூறப்படுகின்றது. ‘தமிழர் கழகம்’ என்றுதான் பெயர் சூட்டப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியதாகவும் சொல்லப்படுகின்றது.

ஆனால், 1942 ஜுன் மாதமே, பெரியார் மீது 14 குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அதன் அடிப்படையில், கட்சிப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து கி.ஆ.பெ.விலகிவிட்டார் என்பதுதானே உண்மை! அந்தப் பொறுப்பில்தானே 42ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் நியமிக்கப்பட்டார்!

42ஆம் ஆண்டு பதவி விலகியவர், சுட்டிக் காட்டிய 14 காரணங்களில், 5ஆவது காரணம் என்ன தெரியுமா? அதனை அப்படியே கீழே தருகிறேன்.

“தனித்திராவிட நாட்டுக்கான அரசியல மைப்பின் நகலை வரையவும், கட்சிக்கு வெளியே உள்ள பார்ப்பனரல்லாத முக்கியஸ்தர்களைக் கட்சியில் சேர்க்க முயற்சி செய்யவும் அமைக்கப்பட்ட துணைக்குழுக் கூட்டங்கள் ஒன்றைக்கூட நடத்தவில்லை”

திராவிட நாட்டுக்கான அரசியலமைப்பின் நகல் வரையப்பட வேண்டும் என்னும் கோரிக்கை, எப்படித் திராவிடத்திற்கு எதிர்ப்பாகும்?

1944ஆம் ஆண்டு சேலம் மாநாட்டில், உறுப்பினராகக் கி.ஆ.பெ. கலந்து கொண்டார் என்பது உண்மைதான். அப்போதும் அவர் பேச்சுக்கு மாநாட்டுத் திடலில் கடும் எதிர்ப்பு இருந்திருக்கிறது.

pt_rajan_380சேலம் மாநாடு முடிந்த பின்னரும், பி.டி.ராஜன், ஏ.பி.பாத்தோ போன்றவர்கள், நீதிக்கட்சியிலேயே தாங்கள் தொடர்வதாக அறிவித்தனர். சேலம் மாநாட்டுத் தீர்மானம், தென்னிந்திய நல உரிçமைச்சங்க நிர்வாகக் கமிட்டியைக் கட்டுப்படுத்தாது என்று அவர்கள் கூறினர்.

பிறகு, ஏ.பி.பாத்தோ தலைமையில் ‘புதிய நீதிக்கட்சி மாநாடு’ ஒன்றையும் சென்னையில் நடத்தினர். அந்த மாநாட்டில்(?) 20 முதல் 30 பேர் வரை இருந்தனர். அன்றைக்கும் திராவிட எதிர்ப்பின் வலிமை அவ்வளவாகத்தான் இருந்தது. அந்த மாநாட்டில், பி.ராமச்சந்திர ரெட்டியார் என்பவரைத் தான் தற்காலிகத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். தங்களின் திராவிட எதிர்ப்பை, ‘ ரெட்டியார்’ தலைமையில் காட்டிய புதிரை என்னவென்பது?

அந்த மாநாட்டில் அவர்கள் நிறைவேற்றிய தீர்மானங்களில் ஒன்று, “இனிமேல் ஜஸ்டிஸ் மேடைகளில், கடவுள் எதிர்ப்பு, மத எதிர்ப்புப் பேச்சுகள் பேச அனுமதிக்கக் கூடாது” என்பதாகும்.

“அப்பாடா, பெரியார் தொலைந்தார். இனிமேல் எவரும் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசக்கூடாது. பார்ப்பனரல்லாதவர்களுக்கு அரசுப் பணிகளில் வேலைகள் பெற முயற்சிப்பது மட்டும்தான் நீதிக்கட்சியின் வேலை” என்று அவர்கள் கருதினர்.

ஆகவே ‘திராவிட’ எதிர்ப்பின் அடிநாதம், பகுத்தறிவு எதிர்ப்புதான் என்பது தெளிவாகின்றது. புராண, இதிகாசங்களையும், பார்ப்பனர்களையும் ஆதரித்தவர்களே அன்று ‘திராவிடர் கழகம்’ என்னும் பெயர் மாற்றத்தை எதிர்த்தனர். இன்றும் பார்ப்பனியத்திற்கு மறைமுகமாகத் துணை போகின்றவர்களே, திராவிடத்தையும், திராவிட இயக்கத்தையும் எதிர்க்கின்றனர்.

(சான்று : 1944ஆம் ஆண்டு, குடியரசு ஏடுகள் மற்றும் எஸ்.வி.ராஜதுரை எழுதியுள்ள, ‘பெரியார் : ஆகஸ்டு 15’)