ராவணனைப் பற்றிய புராணக் குறிப்புகள் அனைத்தும் ஆரியர்களால் கற்பிக்கப்பட்டவை, எழுதிவைக்கப்பட்டவை, அவ்வப்போது மேலும் சேர்க்கப்பட்டவை, காலவோட்டத்தின் வேண்டல்களுக்கு ஏற்பக் கூடுதலாகப் புனையப்பட்டவை என்பவற்றை மனத்தில் கொள்ளவேண்டும். ராவணனிடம் இருப்பதாகக் கூறப்பட்டிருக்கும் பெருமைகள் யாவும், தொடக்கத்தில் அவன் ஆரியர்களால் வெல்ல இயலாத ஆற்றலாக இருந்தான் என்பதைக் காட்டுகின்றன. அருங்குணங்கள் பல பெற்றிருந்த, வெல்ல இயலாத ஆற்றல்களை அடைந்திருந்த ஒருவன், ஆரியனாகவோ, ஆரியக் கலப்புக் கொண்டவனாகவோதான் இருக்க முடியும் என்பது ஆரியத்தின் வழமையான கற்பிதம். இதனால், ராவணனை ஆரியத்யோடு இணைத்துக் காட்டவேண்டிய நிலை ஏற்பட்டபோது, அவன் பிறப்பும் அதற்கேற்பக் கட்டமைக்கப்பட்டது. இதற்கு இயைபாக வேதங்களைக் கற்றவன், ஆரியத் தத்துவங்களோடு தொடர்புடைய நூல்களில் கரைகண்டவன், பல வரங்களைப் பெற்றவன் என்பனவெல்லாம் சேர்த்துக்கொள்ளப்பட்டன. திருவள்ளுவரிலிருந்து, அண்மைக்கால எம்.எஸ். சுப்புலட்சுமி வரை இந்தப் பிறப்புக் கட்டமைப்புக் கற்பிதம் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதைக் காண முடியும். ஆனாலும், முதல் நிலையில் மேன்மை பெற்றிருந்த புராணங்களான வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணம் போன்ற எதுவும் ராவணனை ஆரியனாகக் காட்டவில்லை. ஒரு சில ராமாயணக் கூறுதல்கள், ராவணனை ஆரியத் தொடர்புள்ள பிறப்புக்கொண்டவனாகக் காட்டுவதில் வியப்பேதும் இல்லை. சீதையைக் கவர்ந்தமைக்குப் பழிவாங்கும் நோக்குடன், ராமனது படையினர், ராவணன் மனைவி மண்டோதரியைத் தூக்கிச் செல்ல முயற்சிக்கும் ராமாயணக் கூறுதல்களும் இருக்கத்தான் செய்கின்றன. அரசன், படைத்தலைவன், பட்டத்து யானை ஆகியவற்றைக் கைப்பற்றினால், போரில் தோற்றதாக எடுத்துக்கொள்ளும் வழமை இருந்ததைப் போல, பட்டத்தரசியைக் கைக்கொண்டால் வெற்றி என்ற நிலையும் இருந்திருக்கலாம். ராவணன் சீதையைக் கவர்ந்ததும், மண்டோதரியை ராமன் படையினர் கவர முனைவதும் இதன்பாற்படலாம். இது தனி ஆய்வாகும். பல சிறப்புகள் கொண்டிருந்த ராவணன் அரக்கர் குல அரசன் என்பதும், ராமன் படையினராக அமைந்தோர் குரங்குகள் என்பதும் முரணாக அமைகின்றன. ஆரியர் நுழைவுக் காலத்தில், பண்டைய குடிகள் பண்பாட்டு வளர்ச்சியற்று இருந்தனர் என்றும் ஆரியர் பண்பாட்டு மேன்மையுடன் விளங்கினர் என்றும் கற்பனைக் கற்பிதத்தை முன்னிறுத்துவது அவர்களது மற்றொரு வழமையாகும். நடைமுறையில், தமிழர்களை ஆரியர் வெற்றிகொள்ளவுமில்லை, அடக்கி ஆளவுமில்லை. இதனால்தானோ என்னவோ இராமாயண புராணம், பண்டைய தமிழகத்தில் பெரிய அளவில் அறிமுகமாகவில்லை; செல்வாக்கும் பெறவில்லை. ஆரியரும் வேதங்களை ஓதும் 'ஓதல் அந்தணர்' என்ற அளவிலேயே ஒதுங்கிக் கிடந்தனர். விந்தியமலைக்கு வடக்கே நடந்த வெற்றியைத் தென்தமிழகத்துக்கு விரிவுபடுத்த முனைந்த ஆரியர், புராணக் கற்பனைவழியாக ராவணனை இலங்கை அரசனாகக் காட்டியிருக்கலாம். தமிழக அரசர் எவரையும் வெற்றிபெற இயலாத நிலையில், போர் நிகழ்விடமாகத் தமிழகத்தைக் காட்ட முடியாமல் இலங்கையைக் காட்டி மனநிறைவு கொண்டிருக்கலாம். இங்குகூட, ராவணனை வென்ற ஆரியர் தங்களது கட்டுப்பாட்டை நிலைநிறுத்த முடியாமல், ராவணனது இளவல் விபீடனனிடம் ஆட்சியைத் தரவேண்டியதாகிவிட்டது. ஆகையால், ராவணன் தமிழன் என்றோ அல்லது வேறு வகையிலோ உரிமை கொண்டாடும் வேண்டல் நிலை எதுவும் தமிழ்நாட்டுக்குப் பண்டைக் காலத்தில் வந்துசேரவில்லை. அடுத்ததாக, ஆரிய வரவு சற்று மிகுந்தவுடன், ராமாயணம் ஓரளவு அறிமுகமான சூழல் ஏற்பட்டது. அப்போது, ராவணன் என்ற ஒருவனைக் குறிப்பிட்ட பக்தி இயக்கக் காலப் பாடல்கள், அன்றைய நிலையில் அவனைச் சைவத்துக்குள் அடக்கிய பின்புலமே, அவன் தமிழனாகக் குறியீடு செய்யப்பட்டான் என்பதை மறைமுகமாகக் காட்டிவிடுகிறது. ஏனெனில், சைவம் இங்கு தமிழாகவே பார்க்கப்பட்டது. பிறப்பால் ஆரியரான திருஞானசம்பந்தர்கூட, தமிழோடுதான் இணைத்துப் பேசப்படுகிறார். ராவணன் எப்போது தமிழனாகக் குறியீடு செய்யப்பட்டான், ஏன் அவ்வாறு குறியீடு செய்யப்பட்டான் என்ற வினாக்களுக்கான விடைகளைத் தெரிந்துகொள்ள வேறொன்றை மட்டும் புரிந்துகொண்டால் போதும். ராமன் ஆரிய முறைமைகளின் குறியீடு. பண்டைய குடிகளை அடக்கி மேன்மை பெற்ற ஆரியர்களின் வெற்றிகளை வெளிப்படுத்தும் வகையிலேயே ராமாயண புராணமும் எழுந்துள்ளது. இதில், ராமனை எதிர்த்து நின்று, ஆரிய வெற்றிகளைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கும் பாத்திரமாகக் கட்டமைக்கப்பட்டுள்ள ராவணன், ஆரியத்தின் மற்றொரு வடிவமாக இருந்திருக்க இயலாது. ஆரியத்தின் எதிர் நிலையில் நின்ற பகைவனாகவே இருந்திருக்க முடியும். ஆரியத்தின் அத்தகைய பகைவன், தோற்றுவிட்ட பண்டைய குடிகளின் சார்பாளனாகவே இருக்க முடியும். அதனால்தான், சில பழங்குடியினர், இராவண வழிபாட்டினை இன்னும் தொடர்கின்றனர். ஆரியத்தை உருவகப்படுத்தும் ராமனுக்கு எதிராக நின்றதாகக் காட்டப்படுவதாலேயே, ராவணன் தமிழர்களின் குறியீடாகவும் எடுத்துக்கொள்ளப்பட்டான். ---------மே.து. ராசுகுமார் 12-06-2020
இந்திய வரலாற்றைப் பொறுத்தவரையில் குறிப்பாக நேருவின் காலத்தைப் பற்றி இரண்டு விதமான வரலாறுகள் இருக்கின்றன். ஒன்று உண்மையான வரலாறு. இரண்டாவது இந்தியாவில் வெறுப்புச்சாக்கடையை ஓடவிட கடைசி வரை மறுத்துக் கொண்டிருந்த நேருவைப் பற்றி அவதூறுகளைப் பரப்பும் வரலாறு. இரண்டாவது விதமான வரலாற்றைத் தூக்கிப் பிடிப்பவர்களில் தமிழ்நாட்டில் கணிசமானவர்கள் பிராமணர்கள். இவர்களுக்கு திராவிட இயக்கத்தினரின் பிராமண வெறுப்பு என்றால் வேப்பங்காய். இஸ்லாமிய வெறுப்பு என்றால் திருநெல்வேலி அல்வா. அடுத்தவன் அழிய வேண்டும் என்ற எண்ணத்தோடு பஜகோவிந்தத்தையும் விஷ்ணு சகஸ்ரநாமத்தையும் ஸ்மரணை செய்வது இந்து மதம் அல்ல என்பது இவர்களுக்குப் பிடிபடாத ஒன்று. அதனால்தான் இவர்களில் பலர் நேருவோடு காந்தியையும் சேர்த்துக் கொள்கிறார்கள்.
நான் இளைஞர்களுக்குச் சொல்ல விரும்புவது இது. திராவிட, இந்துத்துவ, வெறுப்புச் சாக்கடையில் ஊறித் திளைத்து ஒப்பேறாமல் போய் விட்ட இளைஞர்களுக்கு அல்ல. நம் சிந்தனைகள் சரியானவையா என்ற சந்தேகம் இன்னும் இருக்கும் இளைஞர்களுக்கு:
படியுங்கள்.
அறிவுச் சோம்பேறித்தனம் அபாயகரமானது. தமிழ் எழுத்துக்களில் பலவற்றிற்கு இந்நோய் பிடித்திருக்கிறது என்பதுதான் உண்மை. பெரியாரியவாதிகளின், தமிழ்நாட்டு மார்க்சியவாதிகளின் மற்றும் இந்துத்துவவாதிகளின் எழுத்துக்களில் பல தற்குறித்தனமானவை அல்லது அரைகுறைத்தனமானவை அல்லது நேர்மையான பார்வையற்றவை. விலைபோன சோம்பேறிப் பேராசிரியர்களும் அரையணா அறிஞர்களும் ஊடகச் சண்டியர்களும் குப்பைகளைத் தவிர வேறு எதையும் அடையாளம் கண்டு கொள்ள முடியாதவர்கள் என்று நான் கருதுகிறேன். இவர்களைப் படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் கூடவே முடிந்தால் மூலங்களைப் படியுங்கள். வரலாற்றையும் பொருளாதாரத்தையும் பொறுத்தவரை பல நல்ல புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றைப் படியுங்கள்
கட்சி சார்புள்ள, ஒரு மதத்தைச் சார்ந்த, பெரியாரிய வெறித்தனம் தோய்ந்த எந்த புத்தகமும் உண்மையை முழுவதுமாகச் சொல்லாது என்பதுதான் அப்பட்டமான உண்மை. எனவே மற்றைய புத்தகங்களைப் படிக்க முயற்சி செய்யுங்கள்.
மார்க்சியப் பார்வையுடனோ, முதலாளித்துவப் பார்வையுடனோ, இந்து, இஸ்லாமிய, கிறித்துவப் பார்வையுடனோ இருப்பது வேறு. ஆனால் அப்பார்வையுடன் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்பவர்கள் எழுதுவதையெல்லாம் விமரிசனப் பார்வையில்லாமல் அப்படியே எடுத்துக் கொள்வது வேறு.
'மாட்டேன். நான் எப்படி இருக்கிறேனோ அப்படியேதான் இருப்பேன்', என்று நினைப்பது உங்கள் விருப்பம். ஆனால் இங்கு வராதீர்கள். இளைஞர்களை விரட்டியடிக்கும் விருப்பம் எனக்கு இல்லை. என்னை விருப்பத்திற்கு மாறாக நடவடிக்கை எடுக்க வைத்து விடாதீர்கள்.