Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வாஞ்சிநாதன் சுதேசியவாதி


Guru

Status: Offline
Posts: 7329
Date:
வாஞ்சிநாதன் சுதேசியவாதி
Permalink  
 


வாஞ்சிநாதன் சுதேசியவாதியா அல்லது சாதியவாதியா ?!!!

தமிழ் கூறும் நல்லுலகிற்கு வணக்கம் ....

கடந்த இரண்டுநாட்களாக முகநூலில் சில பதிவுகளை பார்த்து அதிர்ந்தேன்.
வாஞ்சிநாதனை சாதிவெறியராகவும் ஆஷ்துரையை சமூக சீர்திருத்தவாதியாகவும் எழுதப்பட்ட சில பதிவுகள் எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது, அதுமட்டுமல்லாது ஆஷ்துரையின் நினைவுநாளன்று , அவரின் கல்லறையிலும், அவரின் சிலைக்கும் அஞ்சலி செலுத்தி வருவதும், வாஞ்சிநாதனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்படுவதும் கண்டு தலைசுற்றித்தான் போனேன்.

அப்படியென்றால், நாம் சிறுவயதில் கேட்டும் படித்தும் மெய்சிலிர்த்துப்போன, வாஞ்சிநாதனின் வீரதீர தியாக வரலாறு கட்டுக்கதையா????!!!

இது என் சிந்தையின் இருப்பை கலைக்கவே, அதுபற்றிய முழுமையையும் உண்மையையும் தெரிந்துகொள்ள முயன்றேன்...

வாஞ்சிநாதன் சுதேசியவாதி எனக்கூறும் வாஞ்சி தரப்பினரின் கட்டூரைகளையும், வாஞ்சிநாதன் சாதியவாதி எனக்கூறும் ஆஷ் தரப்பினரின் கட்டூரைகளையும் மற்றும் வரலாற்று பதிவுகளையும் என குறைந்தபட்டசமாக 50க்கும் மேற்பட்ட தரவுகளை ஆராய்ந்தேன்.
இதில், சம்பவங்களை பக்கத்தில் இருந்த பார்த்ததுப்போல எழுதுப்பட்டவைகளை முற்றிலுமாக தவிர்த்துவிட்டேன். அவற்றிலிருந்து எந்த தரவுகளும் எடுத்துக்கொள்ளவில்லை.
நடந்த சம்பவங்களையும், நடந்ததாக சொல்லப்படும் சம்பவங்களையும் மட்டுமே எடுத்துக்கொண்டு, அதற்கான தொடர்புகளையும், ஆதாரப்பூர்வ சான்றுகளையும், சான்றுகள் மீதான நம்பகத்தன்மையையும், சாத்தியக்கூறுகளையும் ஆராய்வதே இந்த பதிவின் முயற்சி...

வீரவாஞ்சிநாதன் என்று பரவலாக அறியப்படுகிற வாஞ்சி ஐயர் என்கிற சங்கர ஐயர் 1886ஆம் ஆண்டு ரகுபதி ஐயர் - ருக்குமணி அம்மாள் தம்பதியருக்கு மகனாக செங்கோட்டையில் பிறந்தார்.
பள்ளிபடிப்பை செங்கோட்டையிலும் பட்டப்படிப்பை திருவனந்தபுரத்திலும் முடித்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வன இலாக்காவில் புனலூரில் பணியமர்ந்தார்.
படிக்கும்போதே பொண்ணம்மாள் என்பவருடன் திருமணம் நடந்தது.

ஆஷ்துரை என்று பரவலாக அறியப்படுகிற ராபர்ட் வில்லியம் எஸ்கோட் ஆஷ் 23 நவம்பர் 1872ஆம் ஆண்டு மருத்துவர் ஐசக் ஆஷ் - சாரா ஆஷ் தம்பதியருக்கு மகனாக அயர்லாந்தில் பிறந்தார்.
அயர்லாந்தின் தலை நகரான டப்லினில் தனது பள்ளிப் படிப்பை முடித்தவர். 1892 ம் ஆண்டு டிரினிட்டி கல்லூரியில் உயர் படிப்பை தொடங்கினார். 1894ல் நடந்த இந்திய சிவில் சர்விஸ் தேர்வில் நாற்பதாவது இடத்தை பிடித்தார்.
1895ஆம் ஆண்டு பணியில் சேர இந்தியா வந்தடைந்தார்.
முதலில் ஒரிசாவிலும் பின் சென்னை உட்பட பல ஊர்களில் பல பதவிகளில் இருந்துவிட்டு இறுதியாக திருநெல்வேலியில் துணை ஆட்சியராகவும், மாஜிஸ்ட்ரேட் ஆகவும், தற்காலிக ஆட்சியராகவும் பின் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராகவும் பணியமர்ந்தார்.

ஆஷ் தனது மணைவி மேரியுடன் ஓய்விற்காகவும் தன் பிள்ளைகளை பார்ப்பதற்காகவும் கொடைக்கானலுக்கு, 17 ஜுன் 1911ஆம் ஆண்டு ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்துகொண்டிருந்தார், மணியாச்சி ரயில் சந்திப்பில் ரயில் நின்றபோது, மணி 10:30 அளவில், நவநாகரிக உடையணிந்து வந்த வாஞ்சிநாதன், ஆஷ்துரை பிராயாணம் செய்த ரயில் பெட்டிக்குள் புகுந்து, தன் கைதுப்பாக்கியால் மூன்று முறை ஆட்சியர் ஆஷை சுட்டார், இதில் ரத்தவெள்ளத்தில் ஆஷ் கீழே சரிந்தார்.
(ஆஷ் சிகிச்சைக்காக ரயில் திருநெல்வேலி நோக்கி திரும்புகையில், கங்கைகொண்டான் பாலத்திற்கு வரும் போது உயிர் பிரிந்தது, அதன் பின் இரண்டு நாட்கள் திருநெல்வேலி சந்திப்பு பாலம் காவல் நிலையத்தில் வைத்திருந்து பாளையங்கோட்டை மிலிடரி லைன் ஆங்கில சர்ச் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.)

ஆஷை சுட்டுவிட்டு தப்பியோடிய வாஞ்சிநாதன், மேற்கொண்டு தப்பிப்பதற்கான சூழல் இல்லாததனால் ரயில் நிலையத்தில் இருந்த கழிவறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டு தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தன் உயிரை போக்கிக்கொண்டார்.
அவர் சட்டைப்பையில் இருந்து இரண்டாம் வகுப்பு ரயில் டிக்கெட்டும், இரண்டு காகிதங்களும் கண்டெடுக்கப்பட்டது.
ஒன்று, பிரான்ஸில் இருந்து வெளிவந்த காமா அம்மையாரின் வந்தே மாதரம் பத்திரிக்கையின் தலையங்கப்பகுதி. அதில் "வெள்ளையர்களை கொன்று பாரத மாதாவிற்கு ரத்த அபிஷேகம் செய்யப்பட வேண்டும் " என அச்சிடப்பட்டிருந்தது.
மற்றொன்று, வாஞ்சிநாதன் காவல்துறைக்கு எழுதியது (வாக்குமூலம்?), அதில்....

"ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக்கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்துவருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்துவருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்துவருகிறது. அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும்பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்துகொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும்பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்யவேண்டிய கடமை.
இப்படிக்கு,
R.வாஞ்சிஅய்யர்
R. Vanchi Aiyar of Shencotta."

இந்த கடிதமே அவர் மீதான வழக்கிற்கு வாக்குமூலமாக அமைந்ததோடு பல்வேறு சர்ச்சைகளுக்கும் புதிராய் அமைந்திருக்கிறது.

இன்று ஆஷ்துரைக்கு வீரவணக்கம் செலுத்தும் ஈ.வே.ரா வாதிகளும், தமிழ் தேசியவாதிகளும் இந்த கடிதத்தையே ஆதாரமாக்கி வாஞ்சிநாதன் மீது சாதிவெறி குற்றப்பத்திரிக்கை படிக்கிறார்கள்.
அந்த கடிதத்தில் வரும் "சனாதன தர்மம்", கோமாமிசம் தின்னக்கூடிய மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை " என்ற சொற்களுக்கு பல அர்த்தங்கள் கற்பிப்பதோடு அக்கொலைக்கு காரணமாக சில சம்பவங்களும் சொல்லப்படுகின்றன.

ஆஷ்துரை சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக சில சமூக சீர்திருத்த நடவடிக்கைககள் எடுத்ததற்காவே கொல்லப்பட்டார் என்பது ஆஷ் தரப்பினரின் வாதம்.
அவ்வாறு அவர்கள் குறிப்பிடும் சமூக சீர்த்திருத்தங்கள் மூன்று :-
1) தன் ஆட்சியர் அலுவலகத்தில் சாதிய பாகுபாடின்றி அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து மதிய உணவை உண்ணவும் (சமபந்தி?), நீர் அருந்த ஓரே குவலையை பயன்படுத்துவும் உத்தரவிட்டார்..
2) குற்றால அருவியில் சாமி சிலைகளும் உயர்சாதியினரும் மட்டுமே குளிக்கலாம், மற்றவர் குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் குளிப்பதற்கு இருந்த தடையை நீக்கி அனைவரும் குளிக்க வழிவகை செய்யும் ஆணை பிறப்பித்தார்....
3) தாழ்த்ப்பட்ட கர்பிணிப்பெண் பிரசவ வலி எடுத்து அவதிப்பட்ட வேளையில், அப்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல அக்ரஹாரத்தை கடக்க வேண்டியிருந்ததனால், பிராமணர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, ஆஷ்துரையே தனது சாரட் வண்டியில் பிராமணர்களின் எதிர்ப்பை மீறி அக்ரஹாரத்தை கடந்து அழைத்துச்சென்று, அப்பெண்ணை மருத்துவமணையில் சேர்த்தார்.
(சிலர், ஆஷின் மேற்பார்வையில் மாட்டுவண்டியில் அப்பெண் அழைத்துச் செல்லப்பட்டார் என எழுதுகிறார்கள்)

இந்த மூன்று சம்பவங்களில் முத்தாய்ப்பாக, 'தாழ்த்தப்பட்ட கர்பிணிப்பெண் - அக்ரஹார தீட்டு' சம்பவத்தினால் கோபமடைந்த பிராமணர்கள் ஆஷ்துரையை பழிவாங்க நினைத்தனர்.
அதன் வெளிப்பாடே பிராமணரான வாஞ்சி ஐயர் ஆஷ்துரையை சுட்டுக்கொன்றார் என ஆணித்தரமாக தங்கள் வாதங்களை முன் வைக்கின்றனர்.

இந்த மூன்று விவகாரங்களை ஆராய்வோமேயானால், முதலில் 'சமபந்தி' விவகாரத்தை எடுத்துக்கொள்வோம்.
ஆஷ்துரை தனது ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியர்களை ஒரே இடத்தில் அமர்ந்து உண்ணவும், ஓரே குவலையில் நீர் அருந்தவும் அதிகாரப்பூர்வமான உத்தரவிட்டதற்கான எந்த சான்றும் இல்லை.
அதேவேளை, இது உண்மையாகவும் இருக்கக்கூடும் . ஏனெனில், தன் அலுவலகத்தில் தனக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு உத்தரவிட அதிகாரப்பூர்வமான அரசாணை அவசியமற்றது, ஆஷ்துரை வாய்மொழியாகக்கூட இந்த உத்தரவை பிறப்பித்திருக்கலாம்....

இரண்டாவதாக, 'குற்றால அருவியில் தாழ்த்தப்பட்டோர் குளிப்பதற்கு இருந்த தடையை நீக்கிய' விவகாரத்தை எடுத்துக்கொண்டால், அதற்கு கண்டிப்பாக அதிகாரப்பூர்வமான அரசாணை பிறப்பித்தாக வேண்டும். ஏனெனில் இது ஊர் கட்டுப்பாடு, ஊரார்கள் அவரின் அலுவலக ஊழியர்கள் இல்லை வாய்மொழி உத்தரவிற்கு கட்டுப்பட.
அதைவிட முக்கியமாக குற்றாலம் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பகுதி.
எனவே அரசாணை என்பது மிகமிக முக்கியமான ஒன்றாகும்.

அப்படி அரசாணை பிறப்பித்ததற்கான எந்த ஆதாரப்பூர்வமான சான்றும் இல்லை.
ஆனால் 1910ல் ஆஷ்துரை நீக்கியதாக சொல்லப்படும் ' குற்றால அருவியில் தாழ்த்தப்பட்டோர் குளிப்பதற்கான தடை' 1934ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தற்கான ஆதாரம் உண்டு.
அதாவது, மகாத்மா காந்தியடிகள் 1934ஆம் ஆண்டு வாக்கில், தமிழ்நாட்நாட்டில் சுற்றுப்பயணம் கொண்ட காலத்தில் அவர் குற்றாலத்திற்கும் சென்றிருக்கிறார்,
அப்போது இந்த தடையை கேள்வியுற்ற அவர் தானும் குளிக்க மறுத்துவிட்டார் என்ற வரலாற்று பதிவை நோக்கும்போது, ஆஷ்துரை 1910ல் நீக்கிய 'குற்றால அருவியில் தாழ்த்தப்பட்டோர் குளிப்பதற்கு தடை' என்பது 1934வரை நடைமுறையில் இருந்தற்கான காரணம் என்ன?! என்ற கேள்வியும் எழுகிறது.
ஒருவேளை, இடைப்பட்ட காலத்தில் குற்றாலத்தில் மட்டும் ஆட்சியதிகாரம், வெள்ளையர்களிடமிருந்து பிராமணர்களிடம் கைமாறிவிட்டதா? என்ன?!!!!

அதேவேளை குற்றாலத்தில், பொதுமக்கள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டு, அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் பொதுமக்கள் குளிப்பதற்கான தடை தொடரும் என தீர்ப்பளிக்கப்பட்டதாக வரலாற்று பதிவு உண்டு. (ஆனால் அந்த தடையை பிறப்பித்தது ஆஷ்துரை என்பதற்கான ஆதாரம் இல்லை.)

மூன்றாவதாக, 'தாழ்த்தப்பட்ட கர்பிணிப்பெண் - அக்ரஹார தீட்டு' விவகாரத்தை எடுத்துக்கொண்டால்,
அதற்கான எந்த ஆதாரப்பூர்வமான சான்றும் இல்லை.
அதாவது அக்ரஹார தீட்டு விவகாரத்தின் காரணமாக பிராமணர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவோ, போராட்டம் செய்ததாகவோ, கலவரம் ஏற்பட்டதாகவோ அல்லது ஆஷ்துரையின் செய்கையை கண்டித்து ஆங்கிலேய அரசிடம் மணு அளித்ததாகவோ என எந்தவிதமான அரசு ஆவணங்களோ அல்லது பத்திரிக்கை செய்திளாகவோ கூட பதியப்படவில்லை.
ஏனெனில், பிராமணர்களை பற்றி நமக்கு நன்றாகவே தெரியும்.
வீட்டில் உள்ள தங்கம் களவுபோனால்கூட பொறுத்துக்கொள்வார்கள், ஆனால் அக்ரஹாரம் தீட்டாகிவிட்டால் பொருத்துக்கொள்ள மாட்டார்கள், அதுவும் அன்றைய காலகட்டம் என்பது இன்னும் மோசம். அதனால் கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவித்திருப்பார்கள், அதுவும் அரசின் உயர் பதவிகளில் அவர்கள் வீற்றிருந்த காலத்தில், ஆஷ்துரையின் செய்கையை கண்டித்து மணுவாகவே அளித்திருப்பார்கள்.
ஆனால், அப்படியொரு ஒரு சான்று நமக்கு கிடைக்கப்பெறவில்லை.

அதுபோலவே வாஞ்சிநாதன் தரப்பினர் வைக்கும் வாதங்களையும் நாம் பரிசீலிக்க வேண்டும்.
அதாவது,
தாழ்த்தப்பட்ட கர்பிணிப்பெண் மருத்துவமனைக்கு செல்ல ஏன் அக்ரஹாரத்தை கடக்க வேண்டும்?
(பொதுவாக அக்ரஹாரம் என்பது கோவிலை ஒட்டிய மாடவீதிகளாகவும் ரதவீதிகளாகவும் அல்லது தனியான ஒரு குடியிருப்பு பகுதியாவுமே இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்)
மருத்துவமணை கோவிலை ஒட்டிய பகுதியில் அமைந்திருந்ததா?
அது எந்த மருத்துவமனை?
அது எந்த ஊர்?
இவற்றுக்கு ஆஷ் தரப்பினரிடம் ஒன்றுப்பட்ட தெளிவான பதில் இல்லை.
அதுபோலவே வாஞ்சி தரப்பினர் "அதெப்படி தாழ்த்தப்பட்ட கர்பிணிப்பெண்ணிற்கு பிரசவ வலி எடுக்கும் போது, ஆஷ் அந்த இடத்தில் இருந்தார்? எனும் கேள்வி சிறுபிள்ளைத்தனமாக தெரிந்தாலும், அக்கேள்வி எழுவதற்கான முகாந்திரமே இல்லை என முற்றிலுமாக ஒதுக்கிவிட முடியாது.
ஏனெனில், பாதிரிமார்கள்தான் மதப்பிரச்சாரத்திற்காக ஊருக்கு புறத்தே இருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான குடியிருப்பு பகுதியாக இருந்த சேரிவரை சென்றனர் .
ஆஷ்துரை பாதிரிமாரும் கிடையாது.
ஆட்சியர் அலுவலகங்களோ, ஆட்சியர் இல்லங்களோ ஊரை ஒட்டியேதான் அமைக்கப்பட்டிருந்தன.
ஊரை விட்டு ஒதுக்குபுறமாக இருந்த சேரிக்கு, அவர் காற்று வாங்க காலாற நடந்துபோனார் என்பதற்குக்கூட சாத்தியக்கூறுகள் இல்லை.

மற்றுமொரு முக்கியமான விஷயத்தை கவணிக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட கர்பிணிப்பெண் - அக்ரஹார தீட்டு விவகாரத்தினால்தான் வாஞ்சி ஆஷை சுட்டுக்கொன்றார் எனில், சர்ச்சைக்கு காரணமான அந்தப்பெண் யார்?
ஏனெனில் தென்னிந்திய வரலாற்றிலேயே ஆங்கிலேயேர் ஒருவர், குறிப்பாக உயரதிகாரி ஒருவர் கொல்லப்பட்டது என்றால் அது ஆஷ்துரை மட்டுமே.
இந்த கொலை இந்தியா முழுமையும் மட்டுமல்லாது, இங்கிலாந்திலும் பேரதிர்வுகளை உண்டாக்கிய விவகாரம்.
எனவே ஆஷை கொன்ற வாஞ்சியின் பெயர் புகழடைந்ததைபோலவே அந்த தாழ்த்தப்பட்ட கர்பிணிப்பெண்ணின் பெயரும் புகழடைந்திருக்கவேண்டும்.
( ஆஷின் கொலைக்கு தாழ்த்தப்பட்ட கர்பிணிப்பெண் - அக்ரஹார தீட்டு விவகாரமே முத்தாய்ப்பாக சொல்லப்படும் காரணம் உண்மையெனும் பட்சத்தில்)
ஆனால் அப்படி ஒரு பெண் அடையாளம் காணப்படவில்லை, குறைந்தபட்சமாக அந்த குழந்தையின் மீதாவது அந்த புகழ் ஒளி பாயப்பட்டிருக்கவேண்டும்.
அதுவே பெளதீக விதி.
ஆனால் அப்படி யாருமே இதுவரையிலும் அடையாளம் காணப்படவில்லை.

நடந்ததாக சொல்லப்படும் இந்த மூன்று சம்பவங்களுக்கும், நடந்ததற்கான ஆதாரப்பூர்வமான சான்றுகள் சமர்பிக்கப்படாதவரை அவை நடக்கவில்லை என்பதே பொருள்படும்.

அடுத்ததாக,
வாஞ்சிநாதன் ஆஷ்துரையை சுட்டுக்கொன்றதற்கு சாதிய வண்மம்தான் காரணமேயன்றி சுதந்திர வேட்கையல்ல என்றும், வாஞ்சிநாதன் சாதியவாதியே தவிர சுதேசியவாதி அல்ல என்பதை நிறுவுவதற்கு, ஆஷ் தரப்பினர் வைக்கும் பலமான வாதம் என்னவெனில் "வாஞ்சிநாதனுக்கும் வ.உ.சிதம்பரனாருக்கும் எவ்விதமான நேரடி பழக்கமும், தொடர்பும் இல்லாதபோது, வ.உ.சி க்காக வாஞ்சிநாதன் ஆஷை கொல்லவேண்டிய காரணமோ அவசியமோ என்ன?

இது தர்க்கரீதியான வாதமென்பதால் இதை ஆய்வுக்கு உட்படுத்தி அதற்கு பதிலளிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கத்தான் செய்கிறது.
அதற்கு நாம் திருநெல்வேலி சதி வழக்கு என்று அறியப்படுகிற ஆஷ் கொலை வழக்கை ஆராயவேண்டியிருக்கிறது.

ஆஷ்துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதன் தானும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதால்,
அந்த கடிதத்திலும் வேறு யார் பெயரையும் குறிப்பிடாததனால், இந்த திட்டமிட்ட சதிக்கு காரணம் என்ன? வேறு யார் யார் உடந்தை?
உடனே புலப்படாமல் சிக்கலானது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இந்தப் படுகொலைக்குப் பிறகு மிகப் பெரிய அளவில் தேடுதல் வேட்டையை தொடங்கியது அரசு.

காவல்துறை வாஞ்சி நாதனின் இல்லத்தில் சோதனையிட்டனர். நடந்த கொலை தனி மனித செயல் அல்ல என்பதும், இந்தச் சதியில் பலர் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்தது. கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் ஆறுமுகப் பிள்ளை, சோமசுந்தரம் பிள்ளை ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டார்கள். பின்னாளில் அவர்கள் இருவரும் அப்ரூவராக மாற்றப்பட்டார்கள். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் 16 பேர் கொண்ட பட்டியலை தயார் செய்தது அரசு. அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை தொடங்கியது. காவல்துறையின் கொடுமைகளுக்கு பயந்து தர்மராஜா ஐயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வேங்கடேச ஐயர் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைசெய்து கொண்டார். மீதமுள்ள 14 பேரையும் கைது செய்தது அரசு.

1. நீலகண்ட பிரம்மச்சாரி (முக்கியக் குற்றவாளி)
2. சங்கர கிருஷ்ண ஐயர் (வாஞ்சியின் மைத்துனர்) - விவசாயி
3. மாடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை - காய்கறி வியாபாரம்
4. முத்துக்குமாரசாமி பிள்ளை - பானை வியாபாரம்
5. சுப்பையா பிள்ளை - வக்கீல் குமாஸ்தா
6. ஜகனாத அய்யங்கார் - சமையல் தொழில்
7. ஹரிஹர ஐயர் - வியாபாரி
8. பாபு பிள்ளை - விவசாயி
9. தேசிகாச்சாரி - வியாபாரி
10. வேம்பு ஐயர் - சமையல் தொழில்
11. சாவடி அருணாச்சல பிள்ளை - விவசாயம்.
12. அழகப்பா பிள்ளை - விவசாயம்
13. வந்தே மாதரம் சுப்பிரமணி ஐயர் - ஆசிரியர்
14. பிச்சுமணி ஐயர் - சமையல் தொழில்

கைது செய்யப்பட்ட 14 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச். நீலகண்ட பிரம்மச்சாரிக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், சங்கர கிருஷ்ணனுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், ஏனைய குற்றவாளிகளுக்கு குறைந்த தண்டனையும் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு அப்பீல் செய்யப்பட்டது. பிரயோஜனமில்லை. தீர்ப்பு திருத்தப்படவில்லை

ஆஷ் கொலை சதித் திட்டத்தில் பங்கிருப்பதாக மேலும் ஐந்து நபர்களின் மேல் சந்தேகப்பட்டது ஆங்கில அரசு. அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியது.
அவர்கள் விவரம்:-
1. வ. வே. சுப்ரணிய ஐயர்
2. சுப்பரமணிய பாரதி
3. ஸ்ரீனிவாச ஆச்சாரி
4. நாகசாமி ஐயர்
5. மாடசாமி பிள்ளை

இதில் மாடசாமி பிள்ளை (கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் நடிகர் ஜெமினிகணேசன் ஏற்றிருந்த கதாப்பாத்திரம்) ஆஷ்துரை கொல்லப்படும்போது வாஞ்சிநாதனுடன் இருந்தவர், பின் மணியாச்சி ரயில் நிலையத்திலிருந்து தலைமறைவானார். அதன் பிறகு அவர் என்ன ஆனார் என்பது பற்றிய தகவல்கள் இன்றுவரை நமக்கு கிடைக்கவில்லை.
( இதிலும் ஒரு சர்ச்சை உள்ளது, அதாவது ஆஷ்துரையை சுட்டுக்கொல்ல வாஞ்சியுடன் சென்றது வாஞ்சியின் மைத்துனரான சங்கர கிருஷ்ண ஐயர் என்பதாகவே, ஆஷ் தரப்பினர் குறிக்கிறார்கள்.
அப்பபடியென்றால், ஆஷ் கொலைக்கு பிறகு மாடசாமிப்பிள்ளை தலைமறைவாகி காணாமலேயே போன காரணம் என்ன? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது .
ஒருவேளை, தப்பியோடிய அந்த நபர் மாடசாமிப்பிள்ளை என குறித்தால், அது தங்களின் -வாஞ்சியின்மீதான சாதிவண்ம- கட்டுக்கதைளை தவிடுபொடியாக்கிவிடும் என்ற காரணத்தால் பிராமணராகிய சங்கர கிருஷண ஐயரையே அந்த மர்ம நபராக குறிக்கிறார்களோ என்னவோ?!
ஏனெனில் மாடசாமிப்பிள்ளை வ. உ. சியின் செல்லப்பிள்ளை என்பதை உலகறியும்)

மீதமுள்ள நான்கு பேர்களும் பாண்டிச்சேரியில் தங்கிவிட்டார்கள். பிரெஞ்சு ஆதிக்கத்துக்கு உட்பட்ட பாண்டிச்சேரியில் அவர்களை உடனடியாக கைது செய்ய முடியவில்லை. அதனால் அவர்களை கண்காணிக்க ஒற்றர்களை நியமித்தது ஆங்கிலேய அரசு.

இதில் முக்கிய குற்றவாளியான சாது ஓம்கார் என்று அறியப்படுகிற நீலகண்ட பிரம்ச்சாரியின் சுயசரிதையை அவர் வாய்மொழியிலேயே கேட்டுவிடலாம்....

"1907ஆம் வருஷம் மே மாதம் வங்கம் தந்த சிங்கம் பிபின் சந்திர பால் சென்னைக்கு விஜயம் செய்தார். நான் அப்போது சென்னை திருவல்லிக்கேணி கூட்டுறவு சங்கம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். எனக்கு அப்போது வயது 18 இருக்கும். நானும் அவர் கூட்டத்துக்குச் சென்று அவருடைய அனல் கக்கும் சொற்பொழிவைக் கேட்டேன். அவருடையெ பேச்சு என் மனதில் புரட்சிக்கான வித்தை ஊன்றியது. தேசத்துக்காக நானும் ஏதாவது செய்ய வேண்டுமென்ற தாகம் உண்டாகியது. ஏதாவது செய்யத் துடித்தேன்; என்ன செய்வது எப்படி செய்வது என்று புரியவில்லை. மனக் குழப்பத்தோடு வீடு திரும்பினேன்.

வீட்டிலும் நிம்மதி ஏற்படவில்லை. ஏதாவது செய்தே தீரவேண்டுமென்கிற வெறி.
பிபின் சந்திர பாலைத் தனிமையில் சந்தித்துப் பேச விரும்பினேன். அவர் பீட்டர்ஸ் சாலையிலுள்ள கோவிந்ததாஸ் என்பவர் பங்களாவில் தங்கி இருந்தார். அவரோடு இருந்த குஞ்சு பானர்ஜி என்பவருடன் எனக்குத் பழக்கம் ஏற்பட்டது. இந்திய புரட்சியாளர் அமைப்பில், அவர் ஒரு உறுப்பினர். அவருடன் பேசியதில் என் மனம் புரட்சியில் ஈடுபட துடித்தது.

1907இல் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சூரத் காங்கிரசுக்குச் செல்வதற்காக வழியில் சென்னை வந்து தங்கினார். கவிச்சக்கரவர்த்தி பாரதியார் என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். பிள்ளை அவர்கள் என்னை தூத்துக்குடி வந்து சுதேசி கப்பல் கம்பெனியில் பணிபுரியுமாறு கேட்டுக் கொண்டார். வ.உ.சி.யும் பாரதியாரும் சூரத் காங்கிரஸ் மகாநாட்டுக்குச் சென்றிருந்தபோது அங்கு வங்கத்தின் புரட்சி வீரர் சந்திரகாந்த் சக்கரவர்த்தியைச் சந்தித்தனர். தென் இந்தியாவில் தங்கள் புரட்சித் திட்டத்தைப் பரப்ப வேகமும், துணிவும் மிக்க ஓர் இளைஞன் வேண்டும் என்று அவர் கேட்டார். அப்படிப்பட்ட இளைஞர் ஒருவர் இருக்கிறார், சென்னை வந்தால் அறிமுகப் படுத்துகிறோம் என்று சொல்லிவிட்டு வந்தனர். இந்த விவரம் எனக்கு அப்போது தெரியாது.

1908ஆம் வருஷம் ஜனவர் மாதம் 4 அல்லது 5 தேதியொன்றில் நான் சென்னை 'இந்தியா' பத்திரிகை அலுவலகத்துக்கு பாரதியாரைப் பார்ப்பதற்காகப் போயிருந்தேன். பாரதியாரை நான் அடிக்கடி சென்று பார்ப்பது வழக்கம். நான் போகவில்லையானால் அவர் என்னைத் தேடிக் கொண்டு வந்துவிடுவார், அந்த அளவுக்கு எங்களுக்குள் நெருங்கிய பழக்கம்.

நான் அங்கு போனபோது கல்கத்தாவிலிருந்து சந்திரகாந்த் சக்கரவர்த்தி அங்கு வந்திருந்தார். பாரதியார் என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். சூரத் காங்கிரசின் போது நான் குறிப்பிட்டது இந்த இளைஞரைத்தான் என்று அவரிடம் சொன்னார் பாரதியார். அப்போது சூரத்தில் அவர்களுக்குள் நடந்த பேச்சு பற்றியும் என்னிடம் பாரதி கூறினார். எனக்கு உற்சாகம் ஏற்பட்டது. அப்போது பாரதியார், தான் ஒரு கவிஞன், எழுத்தாளன், இரகசியத்தைக் காப்பாற்றத் தெரியாது, எதையும் பளிச்சென்று சொல்லிவிடும் பழக்கம் உண்டு ஆகையால் நீங்கள் இருவரும் தனிமையில் பேசுங்கள் என்று எங்களை அனுப்பிவிட்டார்.

1905ஆம் வருஷம் வைசிராயாக இருந்த லார்டு கர்சான் வங்களாத்தை இரண்டாகப் பிரித்தார். இந்து முஸ்லீம்களைப் பிரித்து வைத்து ஆளவேண்டுமென்கிற தீய நோக்கம் அவருக்கு இருந்தது. வங்கப் பிரிவினையை எதிர்த்து அப்போது நாட்டில் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. வங்கத்தில் பயங்கர கலவரம் ஏற்பட்டது. படித்த இளைஞர்கள் களம் இறங்கி போராடினர். அதைப் போல தென்னாட்டிலும் புரட்சி இயக்கம் ஒன்றை உருவாக்க சந்திரகாந்த் சக்கரவர்த்தி இங்கு வந்திருந்தார்.

அவரோடு பேசிய பின் எனக்குத் திருப்தி ஏற்பட்டது. தென்னாட்டில் புரட்சி இயக்கத்தை உருவாக்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன். அதன் பின் தொடர்ந்து நான் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, திருவிதாங்கூர் முதலான இடங்களுக்குச் சென்றேன். அங்கெல்லாம் சுதேசிப் பிரச்சாரம் செய்து கொண்டே, புரட்சி இயக்கத்துக்கு ஏற்ற இளைஞர்களைத் தேடினேன். அப்படிக் கிடைத்த இளைஞர்களை ஆங்காங்கே சிறு குழுக்களாகப் பிரித்து புரட்சிக்கான வேலைகளில் ஈடுபட வைத்தேன். ரகசியக் கூட்டங்கள் நடைபெற்றன. புரட்சிக்கான திட்டங்களும் வகுக்கப் பட்டன. அந்த ரகசியக் கூட்டங்களில் புரட்சி திட்டங்கள் விளக்கப்பட்டன. காளியின் திருவுருவம் ஒன்றை வைத்து அதன் முன் விபூதி குங்குமம் ஆகியவைகளை வைத்து எந்த நிலையிலும் ரகசியங்களைக் காப்பேன், எத்தனை சோதனைகள் ஏற்பட்டாலும் உறுதி தளரமாட்டேன், எல்லா தியாகங்களுக்கும் உடன்படுவேன் என்று ரத்தத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ள வைத்தோம்."

"மேடம் காமா அம்மையார், எம்.வி.திருமலாச்சாரியார் போன்ற புரட்சி இயக்கத் தலைவர்கள் ஜெர்மனியில் தங்கியிருந்தனர். புதுச்சேரிக்கு வந்து சேர்ந்த மண்டையம் குடும்பத்தைச் சேர்ந்தவர் புரட்சியாளர் திருமலாச்சாரியார் (ஸ்ரீநினிவாசாச்சாரி) .
உலக முழுவதுமுள்ள புரட்சியாளர்களுடன் தொடர்பு இருந்தது எங்களுக்கு. பரோடா மகாராஜா சாயாஜி ராவ் கெயிக்வாட் புரட்சியாளர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து வந்தார். பம்பாய், பரோடா, கல்கத்தா, காசி, டெல்லி, புதுச்சேரி, லாஹூர் முதலான இடங்களில் எங்கள் புரட்சி இயக்கப் பணி தீவிரமாக நடந்து வந்தது. நான் மேற்சொன்ன ஊர்களுக்கெல்லாம் சென்று ரகசியத் தொடர்பு வைத்துக் கொண்டேன்.

1908ஆம் வருஷம் தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் பிள்ளை வீட்டில் சென்று சில நாட்கள் தங்கினேன். அங்கு சுப்பிரமணிய சிவாவை சந்தித்தேன். அவருடைய தோற்றம், பேச்சு, பாட்டு, அனல் கக்கும் சொற்பொழிவுகள் இவை என்னைக் கவர்ந்தன. வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு அந்தப் பகுதிகளில் நல்ல செல்வாக்கும் ஆதரவும் இருந்தது.

பாஞ்சாலங்குறிச்சி சென்றேன். அங்கு சிதம்பரம் பிள்ளையின் அறிமுகத்தோடு பல இளைஞர்களைத் தொடர்பு கொண்டு புரட்சிக்குத் தயார் செய்தேன். கட்டபொம்மு நாயக்கர், ஊமைத்துரை அவர்களுடைய சந்ததிகள் செக்காக்குடியிலும், ஆதனூரிலும் வசித்து வந்தனர். ஆதனூரில் மாப்பிள்ளை சாமி மூலம் புரட்சிக்கு இருபதாயிரம் வீரர்களைத் தர அவ்வூர் நாட்டாண்மைக்காரர்கள் ஒப்புக் கொண்டார்கள். இவர்கள் அனைவரும் 'கம்பளத்தார்' எனும் பிரிவைச் சேர்ந்தவர்கள். மரவங்குறிச்சியைச் சேர்ந்த பிச்சாண்டித் தேவர் மூவாயிரம் வீரர்களையும், நடுவப்பட்டி வெள்ளையத் தேவர் ஆறாயிரம் வீரர்களையும், பெரியசாமித் தேவர் ஆயிரக்கணக்கான வீரர்களையும் தருவதாக வாக்குறுதி அளித்தனர். புரட்சிப் படை தயார். ஆனால் அவர்களைத் தலைமை தாங்கி நடத்திச் செல்ல தளபதிகள் வேண்டுமே! அப்படிப்பட்டவர்களைத் தேர்ந்தெடுக்க தீவிர முயற்சிகளில் இறங்கினேன்.

சங்கரகிருஷ்ணன் என்பவர் எனது செயலாளர். உண்மையில் பற்றும் சுறுசுறுப்பும் உள்ளவர். 'இந்தியா' பத்திரிகையில் சென்னையிலும் பின்னர் புதுவையில் பணியாற்றியவர். மிகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். அவரையும் அழைத்துக் கொண்டு 1910ஆம் வருஷம் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்த புனலூர் எனும் ஊருக்குச் சென்றேன். அங்கு காட்டிலாகாவில் பணியாற்றிக் கொண்டிருந்த 23 வயதான வாஞ்சிநாதன் எனும் இளைஞரைப் பார்த்துப் பேசினோம். சங்கரகிருஷ்ணனின் மருமான் இவர். வாஞ்சிநாதன் ஒரு துடிப்புள்ள இளைஞன். எளிதில் உணர்ச்சிவசப் படக்கூடியவர். சிறிதுகூட தயக்கமின்றி புரட்சி இயக்கத்தில் சேர சம்மதம் தெரிவித்தார். அதன் பின் தொடர்ந்து நேரிலும், கடிதம் மூலமும் அவருடன் தொடர்பு கொண்டிருந்தேன்.

ஒட்டப்பிடாரம் எனும் ஊரைச் சேர்ந்த மாடசாமி எனும் இளைஞர் எங்கள் புரட்சிப் படையில் தீரமிக்கவர். மகா வீரர், சூரர். இவரைப் போல உறுதியும், தைரியமும் உள்ளவர்களைக் காண்பது அரிது. இவர் ஒரு சகலகலா வல்லவர். எந்த நேரத்திலும் எந்த வேஷத்தையும் போடும் திறமை படைத்தவர். போலீசாரை பல முறை ஏமாற்றி தப்பியிருக்கிறார். மிக நெருக்கமான நண்பர்களைத் தவிர வேறு யாராலும் இவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாது. இவருக்குத் திருமணம் ஆகியிருந்தது. குழந்தைகளும் உண்டு. அப்படியிருந்தும் எல்லா தியாகங்களுக்கும் உட்பட்டுப் பணியாற்றி வந்தார்.

போலீசார் கண்களை மறைக்க நாங்கள் புனைபெயரில் நடமாடி வந்தோம். நீலகண்டன் என்பது பிரம்மச்சாரி என்றாகியது. நாராயணன் துபே என்ற பெயரைச் சேர்த்துக் கொண்டு பொதுக்கூட்டங்களில் பேசுவார். சங்கரகிருஷ்ணன் ஹரி என்று அறியப்பட்டார். மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை கோவிந்தன் என்ற பெயரை ஏற்றுக் கொண்டார். இப்படி அனைவரும் புரட்சிப் பணியில் ஈடுபட்டோம்.

அரசாங்கம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்குமா? அடக்குமுறைகளை ஏவிவிட்டது. தேசபக்தரும் தி ஹிந்து பத்திரிகை ஆசிரியருமான ஜி.சுப்பிரமணிய ஐயர் மீது வழக்குப் போட்டது. இந்தியா பத்திரிகைக்கு ஆபத்து வந்தது. புதுச்சேரிக்குத் தப்பிச் சென்றது இந்தியா. தொடர்ந்து பாரதியாரும் புதுச்சேரிக்கு வந்தார். நானும் சங்கரகிருஷ்ணனும் அவரைத் தொடர்ந்து புதுச்சேரி வந்தோம். "சூரியோதயம்" எனும் பத்திரிகைக்கு நான் ஆசிரியர் ஆனேன்.

'இந்தியா' "சூரியோதயம்" ஆகிய இரு பத்திரிகைகளும் பிரிட்டிஷ் இந்தியா பகுதிகளில் தடைசெய்யப்பட்டன. விற்பனை தடைபட்டதால் பத்திரிகைகள் நின்று போயின. அரவிந்தரும், வ.வெ.சு.ஐயரும் புதுச்சேரி வந்து சேர்ந்தனர். புரட்சிக் காரர்கள் ஒன்று சேர்ந்த இடமாக புதுவை மாறிப் போயிற்று. பாரதி ஒரு புரட்சிக் கவி. தீவிர தேசியவாதி. ஞான ரதத்தில் ஏறி சர்வ லோகத்தையும் சுற்றி வந்தவர். கள்ளம் கபடமற்ற குழந்தை உள்ளம் கொண்டவர். அரசியலில் தீவிரமாக இருந்தும், தீவிரமாக எழுதியும் வந்தாலும் ஒரு சிறு எறும்பிற்குக்கூட தீங்கு செய்யத் துணியாதவர். காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடி எல்லா உயிர்களையும் நேசித்தவர். எங்கள் கொள்கைகளை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை, அதற்காக எதிர்ப்பதும் இல்லை.

அரவிந்தர் ஓர் பயங்கரவாதியாக இருந்து, அதிலிருந்து விலகி ஆன்மீகத்திற்கு வந்தவர். மக்களின் ஆன்மீக உணர்வைத் தட்டி எழுப்பினால் நாடு தானாக விடுதலை பெறும் என்பது அவரது தீர்க்கமான நம்பிக்கை. ஆகவே அவர் தனது கவனம் முழுவதையும் ஆன்மீகத்தில் திருப்பினார்.

வரகநேரி வெ.சுப்பிரமனிய ஐயர் ஓர் மகா மேதை. அதிகம் படித்தவர். தமிழில் பெரும் பாண்டித்தியம் உள்ளவர். இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் படித்தவர். புரட்சிக்காரர் சவார்க்கருடன் நட்பு கொண்டவர். இங்கிலாந்தில் திங்க்ராவைத் தூண்டி இந்தியர்களுக்கு எதிரானவரான கர்சான் வில்லி எனும் ஆங்கிலேயனைச் சுட்டுக் கொல்ல வழி வகுத்தவர். ஆண்மையும், தைரியமும், வீரமும் ஒருங்கே பெற்றவர். புதுச்சேரி வந்து சேர்ந்த பின்னும் தனது புரட்சி எண்ணத்தில் இருந்தவர்.

எந்தவொரு தனிப்பட்ட ஆங்கிலேயனின் ரத்தத்தையும் சிந்தவைக்கும் ஆர்வம் எங்களுக்கு இல்லை. தனிப்பட்ட கொலைகளில் நம்பிக்கை இல்லை. தேசவிடுதலைக்காக ஒரே நேரத்தில் நடத்தத் தயாராக ஓர் ஆயுதப் புரட்சிக்கானப் பாதையைத் தான் தேர்ந்தெடுத்தோம். மற்றபடி தனிநபர் கொலைகளை நாங்கள் நம்பவுமில்லை, ஊக்குவிக்கவுமில்லை.

நிற்க, பத்திரிகை வாயிலாக மக்களைத் தூண்டும் பணி நின்று போனதால், ஜெர்மனியிலிருந்து புரட்சிக்கான உதவி வரும் என்ற எதிர்பார்ப்பில் நாங்கள் இருந்தோம். வ.உ.சி.யும் சிவாவும் கைது செய்யப்பட்டு விட்டனர். சிதம்பரம் பிள்ளைக்கு நாற்பது ஆண்டுகள் (இரண்டு ஜென்ம தண்டனை)யும் சிவாவுக்கு பத்து ஆண்டுகள் கடும் காவல் தண்டனையும் கிடைத்தன. பிள்ளை சிறையில் செக்கு இழுத்தார். கல் உடைத்தார். அவரது தகுதி, கல்வி போன்றவற்றைக் கவனிக்காமல் அவரை ஈவு இரக்கமின்றி நடத்தினர். சட்டம் படித்தவர் செக்கிழுத்தார், கல் உடைத்தார். மேடைகள் தோறும் சுதந்திர முழக்கம் செய்த சிவாவுக்கும் கல் உடைக்கும் வேலை.

சிதம்பரம் பிள்ளை அனுபவித்த சிறைக் கொடுமைகளுக்கெல்லாம் காரணமானவர் ஆஷ் எனும் ஆங்கில துரை. ஆளப் பிறந்தவன் எனும் ஆணவம். இதனை அறிய மக்களும் தேசபக்தர்களும் கொதிப்படைந்தனர். கம்பளத்தார்களில் சிலர் என்னை அணுகி ஆஷ் துரையைப் பழிவாங்குவது குறித்து என்னைக் கலந்து ஆலோசித்தபோது, அத்தகைய கொலைச் செயல்களில் ஈடுபடவேண்டாமென்று தடுத்து விட்டேன்.

நான் ஊரில் இல்லாத சமயம் வாஞ்சிநாதன் என்னைப் பார்க்கப் புதுச்சேரி வந்தார். நான் இல்லை என்றதும் வ.வெ.சு.ஐயரைச் சென்று பார்த்திருக்கிறார். அவர் இவரது துணிச்சலையும், உணர்ச்சி வேகத்தையும் பயன்படுத்திக் கொண்டு ஆஷ் துரையை பழிவாங்குவதற்கு தூண்டிவிட்டார். அதற்கான திட்டமொன்றையும் வகுத்து, துப்பாக்கி சுடும் பயிற்சியை அளித்து, அவருக்கென்று ஒரு துப்பாக்கியையும் கொடுத்து ஊருக்கு அனுப்பி விட்டர்.

1911ஆம் வருஷம் ஜுன் மாதம்17ஆம் தேதி, திருநெல்வேலியிலிருந்து கொடைக்கானலுக்குத் தன் மனைவியுடன் திருநெல்வேலி கலெக்டராக இருந்த ஆஷ் ரயில் மூலம் புறப்பட்டார். மணியாச்சி சந்திப்பில் ரயில் நின்றது. வீரன் வாஞ்சிநாதன் அவர் பெட்டியில் திடீரென்று நுழைந்து மூன்றுமுறை தன் கைத் துப்பாக்கியால் ஆஷைக் குறிபார்த்து சுட்டார். இரத்த வெள்ளத்தில் விழுந்தான் ஆஷ். அவர் மனைவி பயத்துடன் நடுங்கிக் கொண்டு கூச்சலிட்டார். அப்போது வாஞ்சி, "பயப்படாதே! வீரத் தமிழன் ஒரு பெண்ணைத் தொடமாட்டான். எங்கள் அன்புத் தலைவருக்கு இழைத்த கொடுமைகளுக்காக இவனைப் பழிவாங்கி விட்டேன், என் லட்சியம் நிறைவேறிவிட்டது" என்று சொல்லி பெட்டியிலிருந்து கீழே குதித்தார். அப்போது சிலர் வாஞ்சியைப் பிடிக்க ஓடிவந்தார்கள். தப்பிக்க வேறு வழியின்றி வாஞ்சிநாதன் அருகிலிருந்து கழிவறைக்குள் புகுந்து தன் வாயில் துப்பாக்கியை வைத்துத் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்து போனார்.

தேச விடுதலைப் புரட்சிக்காக என்னால் உருவாக்கப்பட்ட என் சீடன் ஒருவன் வாழ்வு, தவறான வழியில் செலுத்தப்பட்டதால் முடிந்து போயிற்று. என் வாழ்வில் அது ஒரு சோகம் நிறைந்த அத்தியாயம். அந்தோ! வீரவாஞ்சி, உன்னையும் உன் வீரத்தையும் நினைக்க நினைக்க என் மயிர்க்கால்கள் சிலிர்க்கின்றன. தப்பிப் பிழைக்க முடியாத நிலையில், வாயில் துப்பாக்கியை வைத்து சுட்டுக் கொண்டால், குறி தவற வாய்ப்பில்லை என்று வ.வெ.சு.ஐயர் சொல்லிக்கொடுத்த பாடத்தை வாஞ்சி மறந்துவிடவில்லை.

இந்த சம்பவம் நடந்தபோது நான் காசியில் இருந்தேன். பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் இந்தச் செய்தி வெளிவந்தது. இதைக் கேள்விப்பட்ட ஒவ்வொரு ஆங்கில அதிகாரிக்கும் பெரும் அதிர்ச்சியும், பீதியும், பயமும் ஏற்பட்டது. லண்டனில் இருந்த ஆங்கில ஆட்சியாளர்களையும் இந்த நிகழ்ச்சி ஆட்டி வைத்துவிட்டது. இந்தக் கொலையில் என்னையும் சம்பந்தப்படுத்தி எனக்கெதிராக வாரண்ட் பிறப்பித்திருப்பதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

நான் கல்கத்தா சென்று இந்த சூழ்நிலையில் நான் என்ன செய்ய வேண்டுமென்று கலந்து ஆலோசித்தேன். எனக்கு மூன்று வழிகள் புலப்பட்டன. அவை.
1. வெளி நாட்டிற்கு தப்பிச் சென்று மறைந்து வாழ்வது.
2. உள் நாட்டிலேயே தலைமறைவாகி புரட்சி வேலைகளில் ஈடுபடுவது.
3. ஆஷ் கொலையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எனக்கு எந்தவித தொடர்பும் இல்லையாதலால் போலீசாரிடம் சரண் அடைந்து நீதிமன்றத்தை அணுகுவது.

இதில் முதல் வழியைப் பின்பற்றினால் சிறைக்குப் போவதிலிருந்து தப்பிவிடலாம். ஆனால், நாட்டையும் புரட்சியையும் மறந்துவிட வேண்டும். நாடு சுதந்திரம் அடையும் வரையில் தாய்நாட்டைப் பார்க்க முடியாது. இரண்டாவது வழியைப் பின்பற்றினால் தேசசேவையைத் தொடரமுடியுமே தவிர எப்போது வேண்டுமானாலும் கைதாகி விடலாம். எத்தனை காலம்தான் கோழை போல மறைந்து வாழ்வது. மூன்றாவது வழியில் ஆபத்து அதிகம் இல்லை. கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததால் நீதிமன்றத்தில் நான் விடுதலை பெற வாய்ப்பிருக்கிறது.

வாஞ்சிநாதன் வீட்டைச் சோதனையிட்ட போது அவனுக்கு நான் எழுதிய கடிதம் ஒன்று போலீசிடம் கிடைத்திருக்கிறது. அவன் வன இலாகாவில் பணி புரிந்து கொண்டிருந்ததால் எனக்கு ஒரு புலித்தோல் இருந்தால் அனுப்பும்படி எழுதியிருந்த கடிதம் அது. அந்தக் கடிதம் எனக்கு ஒன்றும் பெரிய தண்டனையை வாங்கிக் கொடுக்க வாய்ப்பில்லை, ஆகையால் சரண் அடைந்துவிட முடிவெடுத்தேன்."......
( ஆஷ் கொலைவழக்கில், நீலகண்ட பிரம்மச்சாரி முக்கிய குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டதால்தான் அவரின் சுயசரிதையின் முக்கிய பகுதிகளை ஆராய்கிறோம், மற்றப்படி இவர் சொல்லும் விஷயங்கள் அனைத்தயும் சரிபார்த்திருக்கிறோம்)

நீலகண்ட பிரம்ச்சாரியின் இந்த சுயசரிதையில் நாம் கவணிக்க வேண்டிய விஷயங்களை பார்ப்போம்.
நீலகண்ட பிரம்ச்சாரி, வங்கத்து சிங்கம் பிபின் சந்திரபாலின் வீர உரையில் கவரப்பட்டு அவரின் சீடரானார் என்பது தெரிகிறது, நிற்க...
பிபின் சந்திரபால், லோகமான்யர் என்று அறியப்படுகிற பால கங்காரதிலகருடன் ஒன்றாக செயல்பட்ட சுதேசிய புரட்சியாளர்.
(மும்மூர்த்திகள் என்று அறியப்பட்ட பால் - லால் - பால் லில் ஒருவர் திலகர், அடுத்தவர் லாலா லஜபதி ராய், மற்றவர் பிபின் சந்திரபால் )
நீலகண்ட பிரம்மச்சாரி, வங்கத்து புரட்சியாளர் சந்திரகாந்த் சக்கரவர்த்தியின் புரட்சிகர இயக்கத்திற்கு தென்னாட்டில் தலைமையேற்றார் என தெரிகிறது, நிற்க...
சந்திரகாகந்த் சக்கரவர்த்தி, திலகருடன் வங்கப்புரட்சியில் ஈடுபட்ட முக்கியமான தலைவராவார்.
நீலகண்ட பிரம்மசாரிக்கு, வ.உ. சி யுடன் நட்புறவு இருந்தது தெரிகிறது, நிற்க...
வ. உ. சிதம்பரம் பிள்ளை, திலகரின் பிரதான சீடர்களில் ஒருவராவார்.
நீலகண்ட பிரம்மச்சாரிக்கு, வ. வே. சு ஐயருடன் நட்புறவு இருந்தது தெரிகிறது, நிற்க...
வ. வே. சுப்ரமணிய ஐயர், சாவர்க்கரின் நண்பராவார்.
சாவர்க்கர் திலகரின் பிரதான சீடர்களில் ஒருவராவார்.
நீலகண்ட பிரம்மச்சாரியின் பிரதான சீடர்களில் வாஞ்சிநாதன் ஒருவர் என தெரிகிறது, நிற்க....
வாஞ்சிநாதனுக்கு ஆயுதப்பயிற்ச்சி அளித்தது வ.வே.சுப்ரமணிய ஐயர் எனத்தெரிகிறது, நிற்க...
வ. வே. சு ஐயர், திலகரின் புரட்சிப்பாதையில் வந்தவர்.

இப்படி எல்லா புரட்சி கயிறுகளும் ஒரு இடத்தில் முடிச்சிடப்பட்டிருக்கிறது, அது லோகமான்ய பாலகங்காதர திலகர்.

திலகர் என்று அன்பாகவும், லோகமாண்ய திலகர் என்றும் திலகர் மகாராஜ் என்றும் மரியாதையுடன் இந்திய மக்களால் அழைக்கப்பட்ட பாலகங்காதர திலகர்தான் இந்திய மக்களிடம் சுதந்திர வேட்கையை தூண்டிய முதல் புரட்சியாளர்.
1857சிப்பாய் புரட்சிக்குப்பின் ஆங்கிலேயே அரசு நேரடி ஆட்சியின் கீழ் இந்தியாவை கொண்டுவந்தபின் எவ்வகையிலும் இந்தியர்களுக்கு புரட்சி எண்ணம் வந்துவிடாதவாறு அடக்குமுறையை கையாண்ட காலக்கட்டம் அது.
திலகரே முதல் சுதேசிய சிந்தனையாளர்.
அக்காலக்கட்டத்தில் இருந்த மற்ற மக்கள் தலைவர்கள் ஆங்கிலேயே அரசில் இந்தியர்களுக்கான பிரதிநிதித்துவம் தரப்படவேண்டும் என போராடிய தருணத்தில், திலகரே " சுயராஜ்ஜியம் எங்கள் பிறப்புரிமை என்று முழங்கி " நாடெங்கிலும் சுதந்திர வேட்கையை தூண்டி, ஆங்கிலேயே அரசிற்கு அதிர்ச்சியளித்தார்.
பொதுவாகவே இந்தியர்களுக்கு போராட்ட குணம் அதிகமென்பதால், திலகர் இந்தியர்களின் மனங்களில் சிம்மாசனமிட்டார்.
மகாத்மா காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்க கூறுகளை, வங்கப்புரட்சியின் போதே செய்துகாட்டிய முன்னோடி.
திலகரின் புகழை பாடிக்கொண்டே போகலாம், ஆனால் நாம் எடுத்துக்கொண்ட விஷயத்திற்கு ஆதாரமாக மட்டுமே திலகரின் அறிமுகத்துடன் நிறுத்திக்கொள்வோம்.

ஆக திலகரின் பிரதான சீடரான வ. உ. சி யை ஆங்கிலேய அரசு சிறையில் அடைத்து கொடுமைபடுத்தியதற்காக பழிவாங்க, திலகரின் புரட்சி பாதையில் வந்த வாஞ்சிநாதன், அதே திலகரின் புரட்சிப்பாதையில் வந்த மற்றொரு புரட்சியாளரான வ. வே. சுப்ரமணிய ஐயரிடம் அயுதப்பயிற்சி எடுத்து ஆஷ்துரையை சுட்டுக்கொன்றதில் எவ்வித அதிசயமும் இருக்க முடியாது.

ஆஷ் கொலையைத் தொடர்ந்து, மேடம் காமா தன்னுடைய பத்திரிகையான வந்தே மாதரத்தில் தெரிவித்த கருத்துகள் இவை:-
‘அலங்கரிக்கப்பட்ட இந்திய அடிமைகள், லண்டன் நகரத்தின் தெருக்களில் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவில் சர்க்கஸ் நடனம் நடத்தி, தங்களுடைய அடிமைத்தனத்தை வெளிப்படுத்திய வேளையில், நம் தேசத்தின் இரண்டு இளைஞர்கள் மட்டும் தங்களுடைய தீர செயலால், இந்தியா இன்னும் உறங்கிக் கொண்டிருக்கவில்லை என்று உணர்த்திருக்கின்றனர். வாஞ்சிநாதனின் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட குண்டுகள், நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்த தேசத்தை நிமிர்ந்து நிற்கச் செய்திருக்கிறது’ என்று எழுதியிருந்தார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

மற்றொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேணடும், அது இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மொத்த 16+5 = 21 பேரில் 15 பேர் பிராமணராகவும், 6 பேர் பிள்ளைமார்களாவும் இருக்கின்றனர், அதுபோலவே அப்ரூவராக மாறிய இருவரும் பிள்ளைமார்கள்
அக்ரஹார தீட்டிற்கு பழிவாங்க ஏன் பிள்ளைமார்கள் பங்கெடுக்க வேண்டும்?!!! என்ற கேள்வி எழுகிறது.
ஆனால் இதே கேள்வியை திருப்பிப்போட்டு, பிள்ளைமாரான வ. உ. சி க்காக ஏன் பிராமணர் ஏன் பங்கெடுக்க வேண்டும் என கேட்க முடியாது.
ஏனெனில், முன் சொன்னது சமூகப் பிரச்சனை, பின் சொன்னது நாட்டுப் பிரச்சனை..

மற்றொரு விஷயமும் கவனிக்கப்பட வேண்டும்.
தற்கொலை செய்துகொண்ட வாஞ்சியின் சட்டைப்பையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட காகிதங்களில் ஒன்று, புரட்சியாளர் காமா அம்மையாரின் வந்தே மாதரம் பத்திரிக்கையில் வெளியான ஆங்கிலேயே அரசிற்கு எதிரான தலையங்கப்பகுதி.
அதேப்போல ஆஷை சுட்டுக்கொள்ள பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பெல்ஜியம் தயாரிப்பு, அது பிரான்ஸ் வழியாக புதுவை வந்தடைந்ததும் நிருபிக்கப்பட்டது.
அப்ரூவரான இருவரில் ஒருவரான சோமசுந்தரம் பிள்ளையின் வாக்குமூலமும், இக்கொலை வ. உ. சிக்காக என்றிருக்கிறது.

இதில் இன்னொரு கேள்வியும் எழுகிறது, அது குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் மேல்சாதியினராக இருக்கும் மர்மம் என்ன?
இதில் மர்மம் ஒன்றுமில்லை,
1857 சிப்பாய் புரட்சி அடக்கப்பட்ட பின், நீர் பூத்த நெருப்பாய் கனன்றுக்கொண்டிருந்த சுதந்திர வேட்கை தீ, முதலில் படித்த உயர் சாதியினரிடம்தான் பற்றிக்கொள்ள ஆரம்பித்தது.
பின்பு மகாத்மா காந்தியடிகளும் சாவர்க்கரும், அந்த சுதந்திரத் தீ அரிஜன மக்கள் மனதில் பற்றாதவரை சுதந்திரம் என்பது வெறும்கணவே என்பதை உணர்ந்து அதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.
(இதில் சாவர்க்கர், காந்தியடிகள் போன்று நேரடி அரசியில் வாயிலாக இல்லாமல் மத உணர்வை தூண்டுவதின் மூலம் சுதந்திர உணர்வை தூண்ட முடியும் எனும் திலகர், அரவிந்தர் போன்றோரின் சித்தாந்தத்தை முழுமையாக கையிலெடுத்தார்.
அந்தமானின் சிறை அனுபவம் சாவர்கரை நேரடி அரசியலில் தள்ளி வைத்திருந்தது.
அந்த காலக்கட்டதில் மதப்பற்றும் தேசப்பற்றும் ஒன்றோடு ஒன்று பிணைந்திருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.)

சரி, வ. உ. சி க்காக வாஞ்சி ஆஷை பழிவாங்க வேண்டிய அவசியம் என்ன?
அதையும் பார்த்துவிடலாம்....

வ. உ. சி என்று அறியப்படுகிற
வ. உ. சிதம்பரம்பிள்ளை, 5 செப்டபம்பர் 1872ஆம் தூத்துகுடி ஒட்டப்பிடாரத்தில் செல்வச்செழிபான குடும்பத்தில் பிறந்தார்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார்.

தமிழ் மொழியில் உள்ள அநேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார்,ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். விடுதலைப் போராட்டம் குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. 1892- ஆம் ஆண்டு பால கங்காதர திலகர் அவர்களின் ஆற்றல் மிகுந்த, வீரம் செறிந்த எழுத்தால் கவரப்பட்டு திலகரின் சீடரானார்.

இவர், தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். ஆங்கிலேயர்களின்
அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர உரையாற்றினார்.

அந்த நாட்களில் தூத்துக்குடி முக்கியமான துறைமுகம். அதோடு மட்டுமின்றி நெசவுக்கும், பவழங்களுக்கும் புகழ் பெற்றது. ஐரோப்பாவைச் சேர்ந்த A&F ஹார்வி என்ற நிறுவனம் இந்த துறைகளை தன் வசம் வைத்திருந்தது. இதே நிறுவனம்தான் ‘பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி’, என்ற நிறுவனத்தின் ஏஜெண்டாகவும் செயல்பட்டு வந்தது. தூத்துக்குடிக்கும், கொழும்புவிற்கும் கப்பல் வர்த்தகங்களை கவனிப்பது இவர்களின் பணி. இந்த தொழிலில் இவர்களை எதிர்க்கவோ, போட்டியிடவோ யாரும் இல்லை. ஒரு ‘தனிக்காட்டு ராஜ்ஜியம்’ என்றே சொல்லலாம்.

ஆஷ்துரை திருநெல்வேலியில் துணை ஆட்சியராகவும், மாஜிஸ்ட்ரேட்டாகவும், இருந்த காலக்கட்டம் பிப்பரவரி 1908 முதல் மார்ச் 1910 வரை. பின்பு ஆகஸ்ட் 2, 1910 ஆட்சியராக பதவியேற்றார்.

ஆஷுடைய திருநெல்வேலி நாட்கள் அசாதாரணமானவை. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இடைவிடாது சிக்கல்களை உருவாக்கிக் கொண்டிருந்த மாவட்டம் அது. கர்சனுடைய வங்கப்பிரிவினைக்கு பிறகு ஒவ்வொரு நாளும் பிரச்னைகளோடு நகர்ந்தது. நாடு முழுவதும் சுதேசி இயக்கம் நலிந்து வந்த வேளையில் தூத்துக்குடியில் மட்டும் வலிமையுடம் வலம் வந்து கொண்டிருந்தது அதற்கு காரணம் வ.உ.சிதம்பரம் பிள்ளை. இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் காங்கிரஸின் தீவிரவாத பிரிவை சேர்ந்தவர். பாலகங்காதர திலகரை தலைவராக ஏற்றுக் கொண்டவர். பிரிட்டிஷ் கப்பல் வர்த்தகத்துக்கு போட்டியாக ‘சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி’ என்ற கப்பல் நிறுவனத்தை தொடங்கினார். முதலில் கப்பலை வாடகைக்கு எடுத்து நடத்தினார்.
அதையும் ஆங்கிலேய அரசு, தன் அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்ததால், சொந்தமாக கப்பல் வாங்க முடிவெடுத்து பங்குதாரர்களை சேர்த்த சொந்தமாக கப்பலை வாங்கி கப்பல் வணிகத்தை சேவையாக தொடர்ந்தார்.

அந்த நாளில் தூத்துக்குடியிலிருந்து இலங்கைச் செல்ல ஆங்கிலேயர் கப்பல்களில் பயணக் கட்டணம் 16 அணா என்று இருந்தது. சுதேசி இயக்கத்தை வளர்க்க வ.உ.சி. தனது கப்பல்களில் இதே பயணத்திற்கு எட்டணா மட்டுமே வசூலித்தார். மக்கள் ஆர்வத்துடன் சுதேசிக் கப்பல்களில் பயணம் செய்தனர். வ.உ.சியின் இந்த செயல் ஆங்கிலேய அரசிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. முக்கியமாக ஆஷிற்கு..

சுதேசி கப்பல்களை செயலிழக்க செய்யும் வகையில் ஒரு திட்டத்தை கொண்டுவந்தார். அதன்படி ஆங்கிலேய கப்பல்களில் கட்டணமே இல்லாமல் பயணிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட்டார். அதாவது எல்லோருமே ஓசியில் பிரயாணிக்கலாம். எந்த செலவும் இல்லாமல் இலங்கையை அடையலாம். அதோடு நிறுத்தாமல், பயணம் செய்பவர்களுக்கு ஒரு குடையையும் இலவசமாக வழங்கினார். ஓசிப் பயணத்திற்கு இலவசம் ஒரு குடை. இலவசங்களும், விலையில்லா பொருட்களும் தன்னையும், தன் நாட்டையும் சேர்த்து அழிக்கவல்லது என்பதை அன்றே நமக்கு உணர்த்தியது இந்த சம்பவம். தன்மானத்தையும், சுதேசி இயக்கங்களையும் புறக்கணித்த மக்கள் ஆங்கிலேய கப்பலில் பயணிக்கத் தொடங்கினர். ஆஷின் திட்டம் மகத்தான வெற்றி பெற்றது. சுதேசி கப்பல் பயணிக்க ஆளில்லாமல் கரை ஒதுங்கியது. மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தார் வ.உ.சி. (பிற்காலத்தில் வேறுவழியில்லாமல், இரண்டு கப்பல்களும் ஏலத்தில் விடப்பட்டது. அதையும் ஆங்கில அரசே ஏலத்தில் எடுத்தது.)

சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு பிறகு, 1907ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தூத்துக்குடி கடற்கரையிலும், திருநெல்வேலியிலும் தொடர்ச்சியாக கூட்டங்களை நடத்தினார் வ.உ.சி. அந்தக் கூட்டங்களில் சுப்ரமணியம் சிவாவின் பேச்சு தீப்பொறியை கக்கியது. இது அரசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. இத்தகைய கூட்டங்களை அரசு உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியது.

பிப்ரவரி, 27, 1908ம் நாள் தூத்துக்குடியில் ‘கோரல் மில்ஸ்’ தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதை முன்னிருந்து நடத்தியவர் வ.உ.சி. அந்த போராட்டத்தை கையாளும் பொறுப்பில் இருந்தவர் ஆஷ். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.
வ.உ.சி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இது வ.உ.சிக்கு கிடைத்த வெற்றி. ஆனால், தனிப்பட்ட முறையில் தனக்கு கிடைத்த தோல்வியாகவும், அவமானமாகவும் அமைந்தது ஆஷிற்கு..

சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சி ஆங்கிலயர்களை எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது. நூற்பாலை வேலை நிறுத்தத்தின் வெற்றி அவர்களை அச்சுறுத்தியது. இந்தியாவில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் வ.உ.சி.யைக் கைது செய்வது அவசியம் என்று உணர்ந்தார்கள். அவர்கள் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார்கள்.

வங்கத்து சிங்கம் பிபின் சந்திர பால் 1908-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் நாள் விடுதலையாக இருந்தார். ( அலிப்பூர் சதிவழக்கில், அரவிந்தருக்கு எதிராக சாட்சி சொல்ல மறுத்துவிட்டதால், பிபின் சந்திரபால் 6 மாத சிறைதண்டனை பெற்றிருந்தார்.)
வ.உ.சி. அதை ஒரு விழாவாக கொண்டாட எண்ணினார்.அந்த விழா நடந்தால் வ.உ.சி. மக்களிடையே பேசுவார். அதை ஆங்கில அரசு விரும்பவில்லை. அதனால் வ.உ.சி.யைக் கைது செய்ய முடிவு செய்தனர். ஆனால் அவரைத் தூத்துக்குடியில் கைது செய்தால் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்படும். அதனால் வ.உ.சி.யைத் திருநெல்வேலி வந்து தன்னைச் சந்திக்கும்படி மாவட்ட ஆட்சியர் ஒரு ஆணை அனுப்பினார். வ.உ.சி. அந்த ஆணையை ஏற்றுத் திருநெல்வேலி செல்லத் தயாரானார். அவர் கைது செய்யப்படுவார் என்று அனைவருக்கும் தெரியும். அதனால் எல்லோரும் அவரைச் செல்ல வேண்டாம் என்று தடுத்தனர். ஆனால் வ.உ.சி. அனைவரையும் சமாதானப்படுத்தி திருநெல்வேலிக்கு அவரது ஆதரவாளர்களுடன் சென்றார். விழாவினையும் பொதுக்கூட்டதையும் கைவிடுமாறு ஆட்சியர் விஞ்ச் இட்ட கட்டளையை வ. உ. சி நிராகரித்துவிடவே, 12 மார்ச் 1908 அன்று வ.உ.சிதம்பரம் பிள்ளை, பத்ம நாப ஐயங்கார், சுப்ரமணியம் சிவா ஆகியோரை கைது செய்து உத்தரவிட்டார் விஞ்ச்.
வ.உ.சி. கைது செய்யப்பட்டதை அறிந்தவுடன் மக்கள் கொந்தளித்தனர். திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பள்ளிகளும் கல்லூரிகளும் சேதப்படுத்தப்பட்டன. மண்ணெண்ணெய்க் கிடங்கு தீ வைக்கப்பட்டது. இரண்டு நாட்கள் இந்த நிலை நீடித்தது. அஞ்சல் நிலையமும் தீ வைக்கப்பட்டது.காவல் நிலையமும் நகராட்சி அலுவலகமும் தாக்கப்பட்டது. தூத்துக்குடியில் வ.உ.சி. கைது செய்யப்பட்டதை அறிந்தவுடன் மக்கள் இரவு முழுவதும் தூங்கவில்லை. கடைகள் மூடப்பட்டன. கோரல் நூற்பாலை மற்றும் "பெஸ்ட் அண்ட் க்ம்பெனி" தொழிலாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். நகராட்சி ஊழியர்கள், முடி திருத்துபவர்கள், துணி வெளுப்பவர்கள், குதிரை வண்டி ஓட்டுபவர்கள் போன்றோரும் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். இதுவே இந்தியாவில் முதல் அரசியல் வேலை நிறுத்தம்.1908-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் நாள் முதல் மார்ச் 19-ஆம் நாள் வரை நடைபெற்றது. பொதுமக்களும் அதில் கலந்து கொண்டனர். பொதுக் கூட்டங்களும் ஊர்வலங்களும் நடைபெற்றன.
வ. உ. சி யை விடுதலை செய்யக்கோரி மிகப்பெரிய ஊர்வலம் நடந்தது.
இந்த கலவரங்களை கட்டுப்படுத்தும் பொறுப்பு துணை ஆட்சியர் ஆஷிடம் கொடுக்கப்பட்டது.
ஊர்வலத்தை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தியது ஆங்கிலேய அரசு.
அதில் நான்கு பேர்கள் இறந்தார்கள். அத்தோடு நிறுத்தாமல், கைது செய்யப்பட்டவர்களை புரட்சிக்காரர்கள் என்று முத்திரை குத்தப்பட்டது.

காவல் துறையினர் வ.உ.சி.க்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

1. வ.உ.சி. ஆங்கில அரசுக்கு எதிராக சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.(பிரிவு 123-அ)

2. வ.உ.சி. சுப்ரமண்ய சிவாவிற்கு அடைக்கலம் கொடுத்தார்.(பிரிவு 153-அ)

வழக்கு நேர்மையாக நடைபெறாததால் வ.உ.சி. அதில் பங்கேற்க மறுத்துவிட்டார். இரண்டு மாதங்கள் நடந்த இந்த வழக்கு விவரங்களை இந்தியா முழுவதும் மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வந்தனர்.

நீதிபதி திரு. பின்ஹே தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பு விவரம் பின்வரமாறு:

1. ஆங்கில அரசுக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடும்படி மக்களைத் தூண்டிவிட்டதற்காக 20 ஆண்டு தீவாந்திரத் தண்டனை.
சிவாவுக்கு ஆதரவு அளித்ததற்காக மற்றுமொரு 20 ஆண்டு தீவாந்திரத் தண்டனை.

2. சிவாவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை.

40 ஆண்டு தீவாந்திரத் தண்டனை! அதுவரையில் யாருக்கும் கொடுக்கப்படாத கொடுமையான தண்டனை. ஆங்கில அரசுக்கு வ.உ.சி.யிடத்தில் அளவு கடந்த பயம். இந்தக் கொடுமையான தண்டனைக்கு அந்த பயமே காரணம். அவரைச் சிறையில் அடைத்தால்தான் அவர்களால் தொடர்ந்து இந்தியாவில் ஆட்சி செய்ய முடியும். வ.உ.சி.க்கு அப்பொழுது 36 வயது தான்.

இந்த அனைத்து கொடும்பாதகங்களுக்கும் துணை நின்றவர் இருவர்.
ஒருவர் ஆட்சியர் விஞ்ச், மற்றொருவர் துணை ஆட்சியர் ஆஷ்.

முதலில் கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்ட வ.உ.சி. பின் அந்தமான் சிறைக்கு மாற்றப்பட திட்டுமிட்டு, அது முடியாத போகவே, கேரளாவில் உள்ள கண்ணனூர் சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கே சிறைக்கைதிகளுக்கு ஒரு வித்தியாசமான தண்டனை கொடுக்கப்பட்டது. அவர்கள் கம்பளியால் போர்த்தப்பட்டு அடிக்கப்பட்டார்கள்.
அந்தமான் சிறைக்கு மாற்றப்பட திட்டமிட்டதிற்கு பிண்ணணியில் ஆஷ்துரை இருந்ததாக கூறப்படுகிறது.
அதற்கு சான்றாக அமைவதுபோல் அவர் ஆட்சியராக பதிவியேற்றப்பின்தான், இந்த சம்பவம் நிகழ்ந்தது.
( ஆங்கிலேய அரசு, தனது அரசியல் கைதிகளை தீர்த்துக்கட்ட முடிவெடுத்தால், அந்தமான் சிறைச்சாலைக்கு அனுப்பிவிடும்.
ஹிட்லரின் வதை முகாம்களுக்கு ஓரளவிற்கு நிகரானது, அந்தமானின் செல்லூலார் சிறைச்சசாலை.
ஒரே வித்தியாசம் என்னவென்றால், ஹிட்லரின் வதை முகாம்களில் தரப்படும் சித்தரவதைகளில் உயிர் உடனடியாக போய்விடும், அதுவே அந்தமான் சிறையில் சிறுக சிறுக சித்தரவதை அளிக்கப்பட்டு, உயிர் போனாலும் உடல் வெளியே வராது.
அந்தமான் சிறை சென்று மீண்டு வந்தவர் வெகு சிலரே.)

இதற்குமேல் வ. உ. சி க்கும் ஆஷிற்கும் என்ன தொடர்பு என்று ஆராய வேண்டிய அவசியமில்லை.

இப்படி, வ. உ. சி க்காகவே ஆஷ்துரையை வாஞ்சி பழிவாங்கினார் என்பதற்கு பல ஆதாரப்பூர்வமான சான்றுகள் இருந்தும், அதை ஆஷ் தரப்பினர் மறுப்பதென்பது கேலிக்கூத்தாகும்.

மிகமிக முக்கியமாக ஆஷ் கொலைவழக்கு, ஆங்கில அரசிற்கு எதிராக செயல்பட்டதாக - ராஜதுரோக வழக்காக - பதிவு செய்யப்பட்டதே தவிர தனிமனித விரோத வழக்காக பதிவு செய்யப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வளவு ஆதாரங்கள் வீரவாஞ்சிநாதனின் தியாகத்திற்கு சான்றாக இருந்தும், அவரை ஆதாரங்களே இல்லாமல் சாதிவெறியராக காட்டுக்கூடிய கட்டுக்கதைகள் எப்படி உருவாயின?!!!
இதற்கு வித்திட்டவர் அயோத்திதாச பண்டிதர்.

ஆஷ்துரை கொல்லப்பட்ட சில நாட்கள் கழித்து அவரின் தமிழன் பத்திரிக்கையில் இவ்வாறு எழுதினார் " சகல சாதி மனுஷரையும் சமமாக பாவித்தவர் கலக்டர் ஆஷ். "
( ஆஷ் தரப்பினர் அனைவரும் இந்த ஒரு செய்தியைத்தான், ஆதாரமாக சமர்ப்பிக்கிறார்கள்)
அதற்குமுன் இப்படியான செய்திகள் எந்த பத்திரிக்கையிலும் வந்ததாக சான்று இல்லை.
மேலும் சில சம்பவங்கள் தான் கேள்விபட்டதாக எழுத, அதற்கு கைககால் ஒட்டவைத்து சமுதாயத்தில் நடமாட வைத்துவிட்டார்கள்.

அயோத்திதாச பண்டிதருக்கு பிராமணர் மீது இருந்த வெறுப்பும், இந்துமத எதிர்ப்பும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
ஆங்கிலேய அரசின் மீது கொண்டிருந்த பற்று அளப்பரியது, ஆங்கிலேயரை எதிர்க்கும் எவரையும் அவர் எதிர்த்தார்.
தனது பத்திரிக்கையில் திலகர் முதல் பாரதியார், வ. உ. சி வரை அனைவரையும் சாடி எழுதினார்.
அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை.
பல நூற்றாண்டுகளாக நிகழ்த்தப்பட்டு வந்த சாதிய பாகுபாடு, இந்துமதம் ஒருசாராருக்கு செய்த வஞ்சனையே ஆகும்.
ஆங்கிலேயே ஆட்சயின்கீழ்தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் சற்று இளைப்பாற முடிந்தது.
ஏனெனில் ஐரோப்பியர்களுக்கு மதபாகுபாடும் இனபாகுபாடும் உண்டே தவிர சாதிபாகுபாடு கிடையாது, அவர்களை பொருத்தவரை ஐரோப்பியர்களை விட கீழானவர்கள் ஆசியர்கள் அவ்வளவே.

ஆனால்,
இங்கு புரையோடிப்போயிருந்த சமூக ஏற்றத்தாழ்வுகளை களைய எந்தவிதமான சமூக சீர்திருத்ததையும் செய்ய முயலவில்லை .
மாறாக, தங்களின் ஏகாதிபத்தியத்தை ஏற்றுக்கொள்ள வைக்கவும், வர்க்க சுரண்டலுக்கும் - ஏதுவாக உருவாக்கி வைக்கப்பட்டதுபோல் இருந்தது இந்த சாதிய வர்க்க பாகுபாடு - அதை அப்படியே பயன்படுத்திக்கொண்டார்கள்.
இந்துதர்மத்தை குற்றவழக்குகளில் மட்டும் சில மாறுதல்களை செய்து, மற்ற விவகாரங்களில் அப்படியே அதை பயன்டுத்தினார்கள் என்பதை கவனிக்கையில் புலப்படும்.
கிறுஸ்துவ மிஷனரிகள் மதம் மாற்றினாலும், சாதியமைப்பில் கைவைக்கவில்லை.
இந்து பறையர் கிறுஸ்துவ பறையரானார்.
சாதி இந்துக்கள் சாதி கிறுஸ்த்துவர்கள் ஆனார்கள்.
இந்து பிராமணர் கிறுஸ்துவ பிராமணர் ஆனார் அவ்வளவே.
அக்காலத்திலேயே சர்ச்சிற்கு நடுவில் தீண்டாமை சுவர் எழுப்பப்பட்டு, தனித்தனியாக பிரார்த்தனை நடந்த வரலாற்று பதிவுகளை நினைவில் கொள்ள வேண்டும்.
மற்றப்படி பிராமணருக்கோ சாதி இந்துக்களுக்கோ கிடைத்த உரிமைகள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்க்கும் கிடைத்திட எந்த வழிவகையும் ஆங்கிலேய அரசு செய்யவில்லை.
உண்மையில் சாதியமைப்பில் கைவைத்து, ஜமீன்களாகவும் நிலப்பிரபுக்களாகவும் இருந்த சாதி இந்துக்களை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை, ஏனெனில் அது வரிசசூலுக்கும் உற்பத்தி பொருளாதாரத்திற்கும் குந்தகம் விளைவித்து ஆங்கிலேய அரசின் அடிவயிற்றில் துண்டு போட்டதுபோலாகி விடும்.
கிறுஸ்துவ மிஷனரிகளின் கல்வி நிறுவனங்கள் கூட மதமாற்ற கருவியாகவே பயன்படுத்தப்பட்டது.
இன்னும் சொல்லப்போனால், சாதி இந்துக்களை கவர்வதே கிறுஸ்துவ மிஷனரிகளின் நோக்காக இருந்தது, அவர்களை கவர்வதின் மூலம் கீழ்சாதியனரையும் சுலபமாக கவர்ந்துவிடலாம் என்பது தெளிவாக தெரிந்தது.
சாதி இந்துக்களை பின்தொடருவதே தங்களுக்கு இருக்கும் ஓரே உரிமை எனும் மனோநிலையில்தான் அன்றைய தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் இருந்தனர்.

சரி அது செல்க, நாம் விஷயத்திற்கு வருவோம்..
இப்படி அயோத்திதாச பண்டிதர், பிராமணீய காழ்ப்புணர்ச்சியில் ஆரம்பித்துவைத்த வாஞ்சிநாதன் சர்ச்சை, இன்று வாஞ்சிநாதனை சாதிவெறியராகவும், ஆஷ்துரையை சமூக சீர்திருத்தவாதியாகவும் பாவித்து விழா எடுக்கும் அளவிற்கு பல கட்டுக்கதைகளால் வளர்ந்து நிற்கிறது.

இந்த இடத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் கூறும் ஒரு கூற்றினை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் :- "முதலில், ஆதாரமே இல்லாத ஒரு விஷயத்தை ஒரு நூலில் ஒருவர் பதிந்துவிடுகிறார், பிறகு அந்த நூலை மேற்கோள் காட்டி நூறு பேர் அதே விஷயத்தை பதிந்துவிடுகிறார்கள், இப்போது அந்த மேற்கோள்களுக்கு எல்லாம், ஆதாரமே இல்லாமல் எழுதப்பட்ட அந்த முதல் நூலே ஆதாரமாகிவிடுகிறது.. "
இதுவே இங்கு நடந்திருக்கிறது.
வாஞ்சிநாதன் மீது கட்டமைக்கப்பட்ட சாதிவண்ம கட்டுக்கதைகளின் ஆணிவேரை தேடிச்சென்றால், அது ஆஷ்துரை கொலையுண்ட பிறகான அயோத்திதாச பண்டிதரின் பத்திரிக்கை செய்திகளோடு நின்றுவிடுகிறது.

அடுத்ததாக வாஞ்சிநாதனின் சட்டைப்பையில் இருந்து கைப்பற்றப்பட்ட கடித (வாக்குமூலம்) விவகாரத்திற்கு வருவோம்.
அதில் வரும் 'ஸனாதான தர்மம்' என்பதை மனுதர்மத்துடன் முடிச்சுபோடுவெல்லாம் அதிகப்பிரசங்கித்தனமாகவே இருக்கும்.
ஸனாதான தர்மம் என்பது மிகப்பழமையான மதம் என்பதாகவே பொருள்படும்.
ஏனெனில் பிறமதங்கள் இல்லாத காலக்கட்டத்தில் மதம் என்ற சொல்லாடல் தேவையற்றதாக இருந்ததனால் தர்மம் என்ற சொல்லாடலே மதம் என்ற பதத்திற்கு பயன்படுத்தப்பட்டது, அது இன்று வரையிலும் நடைமுறையில் உயிர்ப்புடன் இருப்பதை கவனிக்கவேண்டும்.
அடுத்து 'கோமாமிசம் திண்ணக்கூடிய மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை ' என்பதை எடுத்துக்கொண்டால்,
மிலேச்சன் என்ற சொல் அந்நியர் என்பதை குறிக்கும், ஆனால் பின்வரும் பஞ்சமன் என்பது தீண்டத்தகாதவரையே குறிக்கும்.
இதற்கு வாஞ்சி ஆதரவாளர்கள், பஞ்சமன் என ஐந்தாம் ஜார்ஜை குறிப்பிட்டு இருக்கிறார் எனக்கூறுகிறார்கள், இது ஏற்றுக்கொள்ளும் வாதமாக இல்லை.
சாதிய அமைப்பில் மேல்தட்டில் இருந்த பிராமண குலத்தில் பிறந்த வாஞ்சிக்கு, பஞ்சமர் என்பதற்கான பதம் என்னவென்று நிச்சயமாக தெரிந்திருக்கும்.
பஞ்சமர் என்றால் யார்?
அது ஒரு சாதியா?
நால்வகை வருணங்களுக்குள் அடைக்க முடியாத குலம் என்றொன்று இருந்திருக்க வாய்ப்பில்லை, ஆகவே ஐந்தாம் வகுப்பினராக பஞ்மர் என அடையாளம் காணப்பட்டவர்கள், ஸனாதான தர்மத்தில் அதிசிறத்தையாக விலக்கி வைக்கப்பட்ட பசு இறைச்சியை உண்பவர்கள் .
பசு இறைச்சியை உண்பவர் யாராக இருந்தாலும், நால்வகை வருணங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஸனாதான தர்மத்திற்கு அந்நியராக, தீண்டத்தகாதவராக கருதப்படுவார்கள்.
உதாரணமாக ஒரு பிராமணர் பசு இறைச்சியை உண்டுவிட்டார் எனில், அவர் சாதி விலக்கம் செய்யப்பட்டு, ஸனாதான தர்மத்திற்கு புறத்தாராக வைக்கப்பட்டு தீண்டத்தகாதவராக கருதப்படவேண்டும்.
உடனே தாழ்த்தப்பட்ட ஏழை எளிய வகுப்பினருக்கான இறைச்சி உணவே மாட்டிறைச்சி தான் எனும் வாதத்தை தூக்கிக்கொண்டு வரக்கூடாது.
அக்காலத்தில் பசு என்பது தாய்க்கு நிகரான புனிதமான விஷயம் மட்டுமன்றி செல்வமதிப்பு பெற்றதாகவும் இருந்தது என்பதை, அரசர்கள் தானம் வழங்கும்போது பொன்பொருளைவிடவும் பெரும்பாலும் கிராமங்களையும் பசுக்களையுமே (அழியா செல்வங்களாக) வழங்கினார்கள் என்பதை உற்றுநோக்கையில் புலப்படும்.
வர்ணமும் வர்ணாசிரமும் பசு இறைச்சி விலக்கை பற்றி மட்டும்தான் பேசுகிறதே தவிர, காளை இறைச்சி பற்றி பேசவில்லை என அறிகிறேன்.
ஆனால் ஒட்டுமொத்தமாக மாட்டிறைச்சி உண்பவர்கள் எப்படி பஞ்சமர் (தீண்டத்தகாதவர்) ஆனார்கள் என தெரியவில்லை.
(தெரிந்தவர்கள் கூறவும்)
அது ஒரு மரபு சாதியாக எப்படி உருவெடுத்தது? என்பது மிகப்பெரிய ஆராய்ச்சியே...

எனவே மாட்டிறைச்சி உண்ணும் மிலேச்சனான (அந்நியர்) ஜார்ஜை பஞ்சமர் (தீண்டத்தகாதவர்) என வாஞ்சி குறிப்பிட்டதில் அப்படியொன்றும் கொலைக்குற்றம் இருப்பதாக தெரியவில்லை. உதாரணமாக இஸ்லாத்தில் பன்றியை கண்ணால் பார்ப்பது கூட பாவமாக கருதப்படுகிறது. அதற்காக "நீங்கள் எப்படி, அப்படி பாவிக்கலாம் " என கேட்டுக்கொண்டிருக்க முடியாது .. ஒவ்வொரு சமூகத்திற்கும், இனத்திற்கும், நாட்டிற்கும், மதத்திற்கும், கலாச்சாரத்திற்கும் ஒவ்வொரு கட்டுப்பாடு இருக்கத்தான் செய்கிறது.
அதை பின்பற்றித்தான் ஆகவேண்டுமென்பது உலக நியதியாக இருந்துவருகிறது.

இப்படியெல்லாம் ஒரு சர்சை கிளம்பி, தன் தியாகத்திற்கு அவதூறு பரப்பப்படும் என தெரிந்திருந்தால், வாஞ்சிநாதன் மிக கவனமாக வார்த்தைகளை கையாண்டிருக்கலாம்...

இறுதியாக ஆஷ் தரப்பினர் கூறும் எந்த சம்பவத்திற்கும், வைக்கும் எந்த வாதத்திற்கும் ஆதாரப்பூர்வமான சான்றுகளும், உண்மைக்கான எந்த முகாந்திரமும் இல்லாததனால், இவையனைத்தும் பிராமணீய காழ்ப்புணர்ச்சியில் உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளே என்பது திண்ணம்.

வீரவாஞ்சிநாதனின் தியாகம், அவர் பிராமணர் சாதியில் பிறந்தவர் என்ற ஒரே காரணத்திற்காகவே புறக்கணிக்கப்பட வேண்டுமென ஆஷ் தரப்பினரான ஈ.வே.ரா வாதிகளும், தமிழ் தேசியவாதிகளும் கருதுவார்களேயானால், உண்மையில் பிறப்பின் அடிப்படையில் குல ஏற்றத்தாழ்வுகளை வகுத்த வர்ணாசிரமத்தை தூக்கிப்பிடிப்பவர்கள் இவர்களேயன்றி வேறுயாருமில்லை..

- மதன்கார்த்திக்
புதுச்சேரி.
பின்குறிப்பு:- புகைப்படங்களை பார்க்கவும்..



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard