முனைவர் மா.பவானி உதவிப் பேராசிரியர் கல்வெட்டியல் துறை
அமைவிடம்: புதுக்கோட்டை மாவட்டம், ஏழடிப்பாட்டம் என்று அழைக்கப்படும் மலைப்பகுதியிலுள்ள சமணர் கல்வெட்டு எழுத்து : சங்க காலத் தமிழ் எழுத்து (தமிழி) காலம்: பொ.ஆ.மு 1ஆம் நூ. ஆம் நூற்றாண்டு
ஊர்ச் சிறப்பு :
புதுக்கோட்டையிலிருந்து 9 கல் தொலைவிலுள்ள இவ்வூர் தமிழக வரலாற்றில் சிறப்பு வாய்ந்தது. இங்கு மலையைக் குடைந்து தோற்றுவிக்கப்பட்ட குகைக் கோயில் ஒன்று உள்ளது. இதில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஓவியங்கள் இருக்கின்றன. இந்த ஓவியங்கள் பொ.ஆ. 8ஆம் நூற்றாண்டில் ஆண்ட ஸ்ரீமாற ஸ்ரீ வல்லபன் என்ற பாண்டிய மன்னன் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டவை. இது சமணக்குகையாகும். இதே மலையிலேயே இயற்கையாக அமைந்த குகைத்தளத்தில் பல சமணப் படுக்கைகள் உள்ளன. அவற்றில் ஒன்றின் பக்கவாட்டில் இக்கல்வெட்டு உள்ளது. இங்கு வேறுபல கல்வெட்டுக்களும் உள்ளன. இது சிறப்புவாய்ந்ததாகும்.
காலம்: பொ.ஆ.மு1 ஆம் நூற்றாண்டு (தோராயமாக)
கல்வெட்டுப் பாடம்
எருமி நாடு குமுழூர் பிறந்த காவுடி ஈதென்கு சிறு போசில் இளயர் செய்த அதிட்டானம்.
பொருண்மை:
இந்தப் படுக்கையானது எருமி நாட்டு இளயரால் செய்யப்பட்டது. எருமி நாட்டின் குமுழூரைச் சேர்ந்த காவுதிக்குச் சிறுபொசிலைச் சேர்ந்த இளயர் படுக்கை அமைத்துக் கொடுத்ததை கல்வெட்டுக் கூறுகிறது. காவுதி என்பது சமண, புத்த மதத்தின் பெண் துறவிகளைக் குறிக்கும். எருமிநாடு என்பது மைசூரைக் குறிக்கும். இளயர் என்பது பழந்தமிழ் போர் வீரர் இனத்தைக் குறிக்கும்.
வரலாற்றுச் சிறப்பு :
• கர்நாடகா மாநிலம் மைசூரிலிருந்து சமண முனிவர் தமிழ் நாட்டுப் புதுக்கோட்டையைச் சேர்ந்த சித்தன்னவாசலில் உள்ள ஏழடிப்பாட்டம் மலைக்கு வந்து குடியமர்ந்துள்ளார்.
• இதுவே கர்நாடக - தமிழகத் தொடர்பாகக் கிடைத்த முதல் கல்வெட்டுச் சான்றாகும்.
• முன்பே கூறியதுபோல் இளயர் என்பவர் தமிழகத்தின் போரின வீரர்களாவர்
• “ஹொசிலு” என்றால் கன்னட மொழியில் “வாசல்” என்று பொருள் என எம்.டி.சம்பத் கூறுகின்றார். சித்தன்னவாசல் என்ற தமிழ்ச் சொல்லைச் சிறு “ஹொசிலு” என்று பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.