Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வள்ளுவம் ஒரு வைதிக நூலே!


Guru

Status: Offline
Posts: 7387
Date:
வள்ளுவம் ஒரு வைதிக நூலே!
Permalink  
 


வள்ளுவம் ஒரு வைதிக நூலே!

’வள்ளுவம் சமண நூல்’ எனும் பொய்க்கட்டமைப்புப் பன்னெடுங்காலமாகப் பரப்பப்பட்டுள்ளது; அதிலிருந்து நடுநிலையோர் முதலில் மீள வேண்டும்.

இன்னுமொரு பக்கம் மனு உழுதொழிலை ஆதரிக்கவில்லை எனும் இடையறாத பொய்ப்பரப்புரை வேறு.

சமணத்தின் இறை மறுப்பும், வள்ளுவம் போற்றும் இறையுணர்வும்:

சமணம் உலகுக்குக் காரணமான இறைவனை அடியோடு மறுத்துப் பேசுகிறது; இறை மறுப்பும், நாத்திகமுமே சமண அடிப்படை. இறைமை போற்றுதலை ‘தெய்வ மூடம்’ எனும் சொல்லால் சுட்டுகிறது சமணம்:
வாழ்விப்பர் தேவர் என மயங்கி வாழ்த்துதல்
பாழ்பட்ட தெய்வ மயக்கு.
- அருங்கலச் செப்பு (சமண நூல்)

தேவர்களை யாரையும் வாழ்விக்க மாட்டார். அவரவர் வினைகளே அவரவர்தம் இன்ப துன்பங்களுக்குக் காரணம். அவற்றை அனுபவித்தே நீக்கிக் கொள்ள வேண்டும்.

(சிலம்பு காட்டும் சாவக நெறிசார் கண்ணகி எந்த தெய்வத்தையும் வணங்கி வேண்டிக் கொள்ளவில்லை, மிக நெருங்கிய தோழி தேவந்தி வெகுவாக வற்புறுத்திய போதிலும்)

அருங்கலச் செப்பு, செப்பும் கோணத்தில் குறளைப் பார்ப்போமானால், வள்ளுவத்தின் ‘கடவுள் வாழ்த்து’ எனும் அதிகாரமே ஒரு ‘பாழ்பட்ட தெய்வ மயக்கு’ ஆகிறது. வள்ளுவத்தின் கடவுள் வாழ்த்து சொல்லும் ’பொருள்சேர் புகழ் புரிதல்’ எனும் ஆன்மிக சாதனை சமணத்தில் கிடையாது. புலன்களை நன்கு அடக்கி, மெய் வருந்தத் தவம் செய்தல் ஒன்றே சமணம் ஒப்புக்கொள்ளும் ஆன்மிக சாதனை.

சமணர் போற்றும் தீர்த்தங்கரருக்கும் யாரையும் உய்விக்கும் தனியான ஆற்றல் கிடையாது என்பதே சமண நம்பிக்கை; பஞ்ச நமோகார என்பது ஒருவித மரியாதையேயன்றி, அதில் எவ்வித எதிர்பார்ப்பும் கிடையாது. ஏனெனில் உய்வடைந்த முக்த ஜீவர்களுக்கு இவ்வுலகோடு எவ்விதத்திலும் தொடர்பு கிடையாது என்பதே சமண முடிவு. அண்டத்தின் மிக உயர்ந்த தானம் ’ஸித்தசிலா’. முக்தி பெற்ற சமணத் துறவியர் சேருமிடம் அது. அங்கு சென்றபின் வேறு எதனோடும் அவர்களுக்குத் தொடர்பு கிடையாது.

”மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்தத்
தாவாத இன்பம் தலை ஆயது தன்னின் எய்தி....”
எனும் சீவக சிந்தாமணிச் செய்யுள் உலகுக்கு மூப்பும், முடிவும், தோற்றமும், காரணமும் இல்லை என்கிறது. அது ஒரு தான்தோன்றி, தன்படியே மாற்றங்களோடு இயங்குகிறது.

வள்ளுவம்:
வள்ளுவத்தின் முதற்குறளே உலகத்துக்கு முதற்காரணம் ஆதிபகவன் என்கிறது.

முதலா உலகு - நாஸ்திக வாதம் (சிந்தாமணி)
முதற்றே உலகு - ஆஸ்திக வாதம் (வள்ளுவம்)

இறையடி சேர்தலை முதன்மைப் படுத்தி,
பிறவிப் பெருங்கடலை நீந்துவோர் யார் நீந்தாதவர் யார் என வகைபிரித்துக் காட்டுகிறது.

உலக விதிகளை வகுக்கும் இறைவன் ஒருவன் உளன் என்கிறது- ’வகுத்தான் வகுத்த வகையல்லால்...’

சமண அண்டவியலில் தென்புலத்தார்க்குரிய தானம் காட்டப்படவில்லை; வள்ளுவம் தென்புலத்தார் ஓம்புதலைத் தலைக்கடன் என்கிறது.

சமணம், தெய்வம் பேணச் சொல்வதில்லை; தெய்வம் பேணுதல் தலைக்கடன் என்கிறது வள்ளுவம்.

"குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்."
-- திருக்குறள்

(தன் குடியை உயர்த்துவேன் என்று முனைபவனுக்கு தெய்வம் ஆடையை இறுகக் கட்டிக்கொண்டு உதவ முன் வந்து நிற்கும்)

இது எந்த சிரமண மதத்தின் கருத்தும் அன்று. தெளிவாக வைதிகச் சார்புடைய கருத்தே.

எல்லாம் வல்ல கடவுள் ஒருவரைச் சமணம் ஏற்கவில்லை. முக்தி நலம் வாய்க்கப்பெற்ற சமணத் துறவியர் / சாதகர்களுக்கே சமண சமயம் ‘கடவுளர்’ எனும் உயர்ந்த அந்தஸ்தை அளிக்கின்றது. அவர்கள் கர்மத்தளை அனைத்தும் நீங்கப்பெற்றோராய் ‘ஸித்த சிலா’ எனும் உயர்ந்த தானத்தில் வாழ்வர். உலகச் சார்புடைய செயல்களில் அவர்கள் இறங்க மாட்டார்கள். அவர்களுக்கு உலகின் தொடர்பு அடியோடு கிடையாது. உலகின் உயிர்களுக்கு அவர்கள் உதவ வழியில்லை. இச்சமணக் கோட்பாடுகளைக் கருத்தில் கொள்ளாமல் ஆய்வுகளில் இறங்குவது அறியாமையின் விளைவே.

சமண அண்ட இயலில் முக்தி பெற்ற ஜீவர்களுக்கு அனைத்துக்கும் மேற்பட்ட இடம் ஒதுக்கப்படுகிறது.

வேதமும் வள்ளுவமும்:
உலகுக்கு முதன்மைக் காரணம் கூறும் முதற் குறட்பா சமணத்தின் ‘மூவா முதலா உலகு’ எனும் உலகை விவரிக்கும் கோட்பாட்டோடு ஒத்துப்போகவில்லை.
சமணம் முன்னிறுத்துவது அரச குடும்பத் தீர்த்தங்கரர் அறவாழி வேந்தனை;
வைதிக நூல் வள்ளுவம் முன்னிறுத்துவதோ அறவாழி அந்தணனை!

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
- திருக்குறள்

அறவனை ஆழிப்படை அந்தணனை,
மறவியை யின்றி மனத்துவைப் பாரே!
- திருவாய்மொழி

எண்குணத்தான் -
அபஹதபாப்மா, விஜர:, விம்ரு’த்யு:, விசோக:, விஜிகதஸ:, அபிபாஸ:, ஸத்யகாம:, ஸத்யஸங்கல்ப:,
(பாவம், மூப்பு, மரணம், துயரம், பசி-தாகம் ஆகிய குறைபாடுகளற்ற தன்மை, விருப்பம் - தீர்மானம் இவற்றில் பழுதற்ற தன்மை) ஆகிய பரம்பொருளின் எட்டுத் தன்மைகளைச் சாந்தோக்யம் பேசுகிறது. வள்ளுவம் கடவுள் வாழ்த்தில் அதையே பின்பற்றுகிறது.

சமணம் எழுதா மறையை ஒப்புக் கொள்ளவில்லை.
திருவள்ளுவதேவ நாயனார் மூவா மறை ஓத்துக்கு, வேத பாடத்துக்கு முதன்மை தந்து பேசுபவர் -"மறப்பினும் ஓத்துக் கொளலாகும்....."

மறைக்கு ஏன் வள்ளுவம் முக்கியத்துவம் தர வேண்டும் ?
யார் மறந்தால் என்ன ?
யார் அதை நினைவிற் கொண்டால் என்ன ?
சமணம் அதுபற்றிக் கவலை கொள்ள வேண்டாம்;
ஆனால் வள்ளுவம் கவல்கிறது.

சமணம் கடவுட்கொள்கையை மறுக்கிறது; தென் புலத்தார் கடன் சமணத்தில் அறவே இல்லாதது.
வள்ளுவம் வலிந்து பஞ்ச மஹாயஜ்ஞத்தைப் பகர்கிறது-
"தென்புலத்தார், தெய்வம், விருந்துஒக்கல்,
தானென்றாங்கு ........................"

"முப்பெயர் மூன்றும் உடன்கூட்டி ஓரிடத்துத் தப்பிய .. " [தெய்வ மூடம், தீர்த்த மூடம், பாகண்ட மூடம்] தெய்வ மூடம் எனும் சமணத் தடைக்கு முரணானவை தென்புலத்தார், தெய்வம் தொழுதல்; ஆனால் வள்ளுவம் பெரிதும் அவற்றை வற்புறுத்துகிறது.

மறை வகுத்த ஆசிரம முறைகளைச் சமணம் மறுக்கிறது. கர்மச் சுழற்சியின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக [ஆஸ்ரவ] ஒருவன் கூடியவிரைவில் துறவேற்பதையே சமணம் வலியுறுத்தும்; இல்லறத்தை ஓர் அறமாகச் சமணம் ஒப்புவதில்லை. அதனால் மேலும் மேலும் கர்ம ஸஞ்சயம் மிகுதியாகும் வாய்ப்பே அதிகம் என்பது சமண நம்பிக்கை.

"இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்.." இங்கு மறை வகுத்த ஆசிரம நெறியைச் சுட்டுகிறது வள்ளுவம்.

'प्रजातन्तुं मा व्यवच्छेसीः' [சந்ததி நூலை அறுத்துவிடாதே] மறை பயின்று முடித்த மாணாக்கனை இல்லறம் ஏற்கச்சொல்கிறது, எழுதாக்கிளவி; இல்லறம் ஜைனதர்மத்துக்கு முரணானது.

அறத்துக்கு முரணாகாத காமம் மறைகளும், மறைவழி நூல்களும் பேசிவரும் கருத்தே ஆகும்; நிஷேகம் (புணர்ச்சி) முக்கியமான வைதிக ஸம்ஸ்காரங்களுள் ஒன்று; இதில் எவ்விதமான பாசாங்கு - பூதஞ்சித்தனங்களும் கிடையா;
’அறம் பிறழாத காமம் எனது விபூதி’என்கிறான் கண்ணபிரான்; வள்ளுவமும் மனையறம், தாம்பத்யம் இவற்றை விவரிக்கிறது. இந்து சமுதாயத்தில் புதுமணத் தம்பதியரின் முதலிரவு அறைக்கு வெளியே மணமான குலமகளிர் கூடிக் கும்மியடித்துச் சிருங்காரம்பாடி மகிழும் வைபவம் நடைபெறும்.

‘ந ச புநராவர்த்ததே’ என உலகுக்கு மீண்டு வருதல் நேராத முக்தகதி கூறுகிறது மூவாமறை; கீதையிற் கண்ணபிரானும் ‘யத்கத்வா ந நிவர்த்தந்தே தத்தாம பரமம் மம’ எனும் மற்றீண்டு வருதலற்ற தம் திவ்யதாமத்தைக் கூறுவார். अनावृत्तिः शब्दादनावृत्तिः शब्दात् || (Brahma sutra IV.iv.22) ’அநாவ்ருத்தி சப்தாத்’ என இதையே இருமுறை வலியுறுத்துகிறார் வியாச முனிவர், இதுவே வள்ளுவத்தின் ‘மற்றீண்டு வாரா நெறி’ ஆகிறது.

நீதிநெறி தவறாத செங்கோல், அறநெறி மாறாத அந்தணர், மாரிவளம் அனைத்துக்கும் உள்ள பிணைப்பைப் பிற மறைசார் நூல்கள் சொல்கின்றன; வள்ளுவரும் அதையே சொல்கிறார்.
’அவியுணவின் ஆன்றோர்’ என அவியுணவு பெறும் வானவரை வள்ளுவம் சொல்லும்; அவியுணவு தருவது சமண அறத்தில் இல்லாத வழக்கம்.

வேதத்தில் ’சூதாடாதே, உழுதுண்டு வாழ்’ இரு அறிவுரைகளும் ஒரே வாக்கியத்தில் -
அக்ஷைர்மா தீ₃வ்ய: க்ருʼஷிமித்க்ருʼஷஸ்வ
வித்தே ரமஸ்வ ப₃ஹு மந்யமாந: (ரு’க் 10.34.13)

வள்ளுவத்தில் ஒன்றெய்தி நூறிழக்கும் சூதைக் கடிந்து ஓர் அதிகாரமும், உழவுக்கென ஓர் அதிகாரமும், ஆக இரு அதிகாரங்கள். உழவை வலியுறுத்தும் மறைமொழியை எடுத்துக்காட்ட முடிகிறது; உழுதொழிலைக் குறள் வலியுறுத்துவது உலகறிந்ததே. சமணம் உழவைப் பற்றி என்ன கூறிற்று?

மறைவழி எழுதப்பட்ட அற நூல்கள் மன்னவன் கோல், அந்தணாளர்தம் அறம், வான் மழை இவற்றின் பிணைப்பைப் பலவாறாகக் கூறுகின்றன.

’யஜ்ஞாத் பவதி பர்ஜந்ய:’ [வேள்வியால் மழை ஏற்படும்] - கீதை. வள்ளுவமும் பல குறட்பாக்களால் அதையே வலியுறுத்துகிறது.

தர்ம சாஸ்த்ர சுலோகங்களுக்கும், குறளுக்கும் உள்ள நெருங்கிய ஒற்றுமை:

देवतातिथिभृत्यानां पितॄणां आत्मनश्च यः ।
न निर्वपति पञ्चानां उच्छ्वसन्न स जीवति । ।

தேவதாதிதிப்ரு'த்யாநாம் பித்ரூ'ணாம் ஆத்மநஸ்ச ய​: |
ந நிர்வபதி பஞ்சாநாம் உச்ச்வஸந்ந ஸ ஜீவதி | | [3:72]

தேவதா - அதிதி - ப்ரு'த்யாநாம் பித்ரூ'ணாம் ஆத்மநஸ்ச ய​:

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

தென்புலத்தார் - பித்ரூணாம்
தெய்வம் - தேவதா
விருந்து - அதிதி
தான் - ஆத்மந:
ஒக்கல் - ப்ரு'த்யாநாம் [பணியாளர்]
----------------------------------------------------

யதா² க²நந் க²நித்ரேண நரோ வார்யதிக³ச்ச²தி |
ததா² கு³ருக³தாம் வித்யாம் ஶுஶ்ரூஷுரதிக³ச்ச²தி ||
[2:218]

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றணைத் தூறும் அறிவு.
[396]
------------------------------------------------

அரக்ஷிதா க்ருʼஹே ருத்தா: புருஷேராப்தகாரிபி: |
ஆத்மாநமாத்மநா யாஸ்து ரக்ஷேயுஸ்தா: ஸுரக்ஷிதா: ||
[9:12]

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. [57]
------------------------------------------------

தூய்மை -
அத்பி: காத்ராணி ஶுத்யந்தி, மந​: ஸத்யேந ஶுத்யதி |
[தர்ம சாஸ்த்ரம்]

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
[அறத்துப்பால் :298]
----------------------------------------------------
மறை ஓத்தைக் காட்டிலும் ஒழுக்கமே உயர்ந்தது என பகவான் மனுவும், திருவள்ளுவ நாயனாரும் ஒரே குரலில் பேசுவர் -

आचाराद्विच्युतो विप्रो न वेदफलं अश्नुते ।
आचारेण तु संयुक्तः सम्पूर्णफलभाग्भवेत् ।।

ஆசாராத்விச்யுதோ விப்ரோ ந வேதபலம் அஶ்நுதே |
ஆசாரேண து ஸம்யுக்த​: ஸம்பூர்ணபலபாக்பவேத் | |

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

மணக்குடவர் உரை:
பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.
[மணக்குடவர் சமணர்]

---------------------------------------------

कृषिगोरक्षं आस्थाय जीवेत् “
"க்ருஷி - கோரக்ஷம் ஆஸ்தாய ஜீவேத்” என்று மநு ஸ்ம்ருதி பத்தாம் அத்யாயத்தில் சொல்லப்பட்டுள்ளது. தர்ம சாஸ்த்ரம் வேளாண்மையை ஆதரித்துள்ளது;
குறளில் உழுதொழிலுக்கென்றே ஓர் அதிகாரம்.

--------------------------------------------------
இன்று நம் தேசத்தை ஆள்வோர் கட்டாயம் செய்ய வேண்டியது -

यथोद्धरति निर्दाता कक्षं धान्यं च रक्षति ।
तथा रक्षेन्नृपो राष्ट्रं हन्याच्च परिपन्थिनः । । ७.११०

யதோத்தரதி நிர்தாதா கக்ஷம் தாந்யம் ச ரக்ஷதி |
ததா ரக்ஷேந்ந்ருபோ ராஷ்ட்ரம் ஹந்யாச்ச பரிபந்திந : | | 7.110

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்
[குறள் 550]

------------------------------------------------------

वर्षे वर्षे अश्वमेधेन यो यजेत शतं समाः |
मांसानि च न खादेद् यस्तयोः पुण्यफलं समं ||

வர்ஷே வர்ஷே அஶ்வமேதே₄ந யோ யஜேத ஶதம் ஸமா​: |
மாம்ஸாநி ச ந கா₂தே₃த்₃ யஸ்தயோ​: புண்யப₂லம் ஸமம் || 5:53

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.
----------------------------------------------

எண்ணற்ற மறைசார் நூல்களுடன் வள்ளுவர் தந்துள்ள நீதிநூலை ஒப்பிட முடிகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

வள்ளுவம் ஒரு வைதிக நூலே! (தொடர்ச்சி)

வான்புகழ் வள்ளுவம் வேள்விக்கு எதிரானதா?

‘அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின்.......’

திருக்குறளின் உட்கருத்து வேள்வி மறுப்புத்தான் எனும் வாதம் இடையறாமல் பரப்பப்பட்டு வந்துள்ளது. வள்ளுவம் சமண நூல் என நிறுவுவதற்கு அனைவரும் முன்வைக்கும் ஒரே குறட்பா -
”அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்,
உயிர்செகுத் துண்ணாமை நன்று"
வள்ளுவர் யஜ்ஞ கண்டநம் செய்தார்; ஆகவே அவர் ஜைனர் எனும் வாதம் மறை மறுப்பாளர்க்கு கிளு கிளுப்பைத் தரும்.

வள்ளுவத்தின் போக்கு உணராதவரே இவ்வாறு வாதிடுவர்.

வள்ளுவம் முழுவதும் "உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை" (தொல். உவம. 3) எனும் தொல்காப்பிய உவமயியல் நூற்பாவை ஒட்டி அமைந்துள்ளது. உவமேயம், உவமை இரண்டிலே உவமையே உயர்ந்தது என்பது இலக்கணம் காட்டும் வழி.

வள்ளுவர்பிரான் பெரும்பாலும் ஒரே வழிமுறையைத்தான் நூல் நெடுகிலும் கையாள்கிறார்; உயர் செயலை உயர்ந்தவற்றோடும், இழி செயல்களை மிக இழிந்தவற்றோடும் ஒப்பீடு செய்வது அவர் கையாளும் முறை. திருகலாகிய சிந்தை படைத்தோர் பொருளைச் சிதைத்துத் திரித்துத் திசை மாற்றுகின்றனர். அது திருவள்ளுவ நாயனாரின் திருவுள்ளக் கருத்துக்கு முரணானது.

பொதுவான கவிமரபும் அதுவே. ஒரு பொருளின் உயர்வைச் சொல்லும்போது மற்றோர் உயர்ந்த பொருளுடன் மட்டுமே ஒப்பீடு செய்யப்படும். ஆழ்வார் காவிரியைச் சொல்லும்போது ‘கங்கையிற் புனிதமாய காவிரி’ எனச் சொல்வதைக் காண்கிறோம்; படியில் குணத்து பரத நம்பி ஒருவனுக்கு ஆயிரம் இராமபிரானும் நிகராக முடியாது என்றார் கம்ப நாட்டாழ்வார். (’ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ’ என்கிறார் குகப்பெருமாள்) இதைக்கொண்டு கம்பர் இராமபிரானை நிந்திகிறார் என்று சொல்ல முடியுமா? இதே ரீதியில்தான் ஆயிரம் வேள்வி எனும் ஒப்பீடும்.

மஹாபாரதம் ‘அச்வமேதஸஹஸ்ராத் ஹி ஸத்யம் ஏகம் விசிஷ்யதே’ என்றது, ஆயிரம் அச்வமேத வேள்விகளைக் காட்டிலும் வாய்மையே மிக உயர்ந்தது எனும் கருத்தில். இதே கருத்தையே மார்க்கண்டேய புராணமும் வலியுறுத்துகிறது.
இதே உட்கருத்தோடு அஹிம்ஸையையும், அச்வமேதத்தையும் ஒப்பிடும் மனுவின் சுலோகமும் ஒன்றுள்ளது; வள்ளுவரைப்போல மனுவையும், வேத வியாசரையும் சமணர் ஆக்குவார்களோ!

குறள் வேள்வியெனும் மறை வழக்கைக் கண்டிக்குமாயின் மற்றோரிடத்தில் ‘அவியுணவின் ஆன்றோர்’ என்று வேள்வியில் தரப்படும் அவியுணவை ஆதரித்து எடுத்துப்பேசத் தேவையில்லை.

குறள் வேள்வியைக் கண்டிக்கிறது; ஆகவே அது மறைசார் நூலாக முடியாது எனும் கருத்தை மறுத்து விளக்குகிறார்
திரு Natesan Muthukumaraswamy:

"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்,
உயிர்செகுத் துண்ணாமை நன்று"
இந்தக் குறள் புலால் மறுத்தல் என்னும் அதிகாரத்தில் உள்ளது. இந்தத் திருக்குறளை வைத்துக் கொண்டு திருவள்ளுவர் அவிசொரியும் வேள்வியைக் கண்டித்தார் என்றும் அதனால் வேள்வியை மறுக்கும் அவைதிக சமணம் அல்லது பவுத்தத்தைச் சார்ந்தவர் திருவள்ளுவர் எனப் பெரிய மேதாவிகளான சீனி. வேங்கடசாமி போன்றவர்கள் சாதிப்பர்.

தெய்வப் புலவர் ஓர் அறத்தை வலியுறுத்த மற்றொரு அறத்தினொடு உறழ்ந்து கூறுவார். இங்கு அதிகாரப்பட்டது, புலால் மறுத்தல் என்னும் அறம். அது வேள்வி செயல் என்னும் அறத்தினொடு உறழ்ந்து காட்டி,இந்த அறத்தைக் காட்டிலும் இந்த அறம் உயர்ந்தது எனக் கூறியதே அன்றி வேள்வியைக் கண்டித்தது ஆகாது. வேள்வியும் ஒரு அறம், புலால் உண்ணாமையும் ஒரு அறம். இவ்விரண்டில் வேள்விகளான் வரும் பயனைக் காட்டிலும் புலால் உண்ணாமை என்னும் இவ்விரதமாகிய அறத்தினால் வரும் பயனே பெரிது என்பது இக்குறளின் கருத்தாம். வேள்வியை மறுத்தல் இக்குறளின் கருத்தன்று. பரிமேலழகரும் இவ்வாறே கூறினார்.

மேற்சுட்டிக் காட்டிய குறளைப் போன்றே அறங்களை ஒப்பிட்டுக் காட்டி அதிகாரப்பட்ட அறத்தை வலியுறுத்தும் ஏனைய குறட்பாக்களையும் ஒப்பு நோக்க வேண்டும்.-
"ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க ,
சான்றோர் பழிக்கும் வினை"

இந்தக் குறட்பா ’வினைத் தூய்மை’ எனும் அதிகாரத்தில் உள்ளது. இக்குறட்பாவில் இரண்டு பாவங்களை ஒப்பு நோக்கி இந்தப் பாவத்தைக் காட்டிலும் இந்தப் பாவம் கொடிது என வள்ளுவர் சுட்டிக் கூறுகின்றார். பெற்ற தாயின் பசியைப் போக்காதிருத்தல் பாவம்; சான்றோர் பழிக்கும் வினையைச் செய்தலும் பாவம். இவ்விரண்டினையும் ஒப்பு நோக்கும்போது தாய் பசியோடிருப்பதைக் காண்பதைக் காட்டிலும் சான்றோர் பழிக்கும் வினை செய்வது கொடிய பாவம் என்பதே கருத்து.

"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலினும்' என்னும் குறளில் உடன்பாட்டில் சொன்ன வலியுறுத்தலை இந்தக் குறளில் எதிர்மறையில் வலியுறுத்துகின்றார். அங்கு வேள்வியை மறுத்தார் எனப் பொருள் கொண்டால் இங்கு தாயின் பசியோடு வைத்திருத்தல் அறம் எனக் கொண்டார் எனப் பொருள்படும்.

"ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்,
நீரினும் நன்றதன் காப்பு"
இக்குறளில் உழுதொழிலின் நான்கு முக்கியச் செயல்களைத் திருவள்ளுவர் ஒப்பிட்டுப் பேசுகின்றார். ஏர் உழுதல் ஒன்று. எருவிடுதல் மற்றொன்று. இந்த இரண்டில் ஏர் உழுதலைக் காட்டிலும் எருவிடுதல் நன்று எனக் கூறினார், ஏர் உழவேண்டா, எருவிடுதல் ஒன்றே போதும் என்பது அவர்கருத்தன்று. அதே போல் களை கட்டல் ஒன்று, நீர் பாய்ச்சல் மற்றொன்று. இங்கு நீர்பாய்ச்சலே போதும் களைகளைக் களைய வேண்டுவதில்லை என்பது அவர்தம் கருத்தன்று. அதே போல் களை கட்டல் ஒன்று காப்பிடுதல் மற்றொன்று. காப்பிடுதல் இன்றியமையாதது என வலியுறுத்தினாரேயன்றிக் களை கட்டல் தேவையில்லை எனக் கூறினாரல்லர்.

அவ்வாறே, ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை பேரறம் என வலியுறுத்தினாரேயன்றி, அவிசொரிந்து வேட்டலைத் தெய்வப்புலவர் மறுத்தார் எனக் கொள்ளக் கூடாது.

வள்ளுவமும் வாக்யபதீயமும்:
முப்பால் எழுதிய வள்ளுவ நாயனார்போல், ராஜா பர்த்ருஹரி சதகத்ரயம் எனும் முத்தொகுப்பாக நூல் எழுதியவர்; அவரே’வாக்யபதீயம்’ எனும் இலக்கண நூலையும் எழுதினார்.

Dr. Shriramana Sharma
வாக்யபதீயம்:
प्रज्ञा विवेकं लभते भिन्नैरागमदर्शनैः ।
कियद्वा शक्यम् उन्नेतुं स्वतर्कम् अनुधावता ॥ २.४८९ ॥

பலவிதமான சாஸ்த்ரங்களைக் கற்பதால்தான் புத்தி, விவேகத்தைப் பெறும். தனது சொந்த யுக்திகளை மட்டும் அனுசரிப்பதால் எவ்வளவு தெரிந்துகொண்டு விடமுடியும்?

तत्तदुत्प्रेक्षमाणानां पुराणैरागमैर्विना ।
अनुपासितवृद्धानां विद्या नातिप्रसीदति ॥ २.४९० ॥

பெரியோர்களைத் துணைக்கோடாமலும் ப்ராசீனமான சாஸ்த்ரங்களின் ஆதாரங்களின்றி ஒவ்வொரு கருத்துகளைக் கல்பிப்பவர்களுக்குக் கல்வியில் வல்லமை ஏற்பட்டுவிடாது.

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.
(திருக்குறள்: 441)

தர்மத்தை அறிந்து முதிர்ச்சி பெற்ற அறிவுடையவர்களின் நெருக்கத்தால் அனைத்தின் தன்மையைத் தெரிந்து சரியானதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும்.

(பெரியோரைத் துணைக்கோடல் அதிகாரம் முழுவதும் பெரியோரை நாட வேண்டியதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது.)

अथ यदि ते कर्मविचिकित्सा वा वृत्तविचिकित्सा वा स्यात् ये तत्र ब्राह्मणाः सम्मर्शिनः युक्ताः आयुक्ताः अलूक्षाः धर्मकामाः स्युः यथा ते तत्र वर्तेरन् तथा तत्र वर्तेथाः (तैत्तिरीयोपनिषत्)

பெரியோர் துணைக்கோடல் குறித்து வேதம், வாக்யபதீயம், வள்ளுவம் மூன்றும் ஒரே குரலில் பேசுகின்றன.

வள்ளுவம் வலியுறுத்துவது சமணத்துக்கு முரணான வேத சமயமே என்றோர்க!

”செய்யா மொழிக்குந் திருவள்ளுவர்மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே!”

#திருக்குறள்

जिह्वा प्रवर्ग्यस्तव शीर्षकं क्रतोः
सत्यावसथ्यं चितयोऽसवो हि ते ॥

ஜிஹ்வா ப்ரவர்க்₃யஸ்தவ ஶீர்ஷகம் க்ரதோ​:
ஸத்யாவஸத்₂யம் சிதயோ(அ)ஸவோ ஹி தே ||
- ஸ்ரீமத்பாகவதம்



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

 வள்ளுவம் வைதிக நூலே! (தொடர்ச்சி)

’திருக்குறளைச் சமயச் சிமிழுக்குள் அடக்க முயல வேண்டா’
சமயநூற் பயிற்சியற்ற, வள்ளுவத்துக்கான உரைகளையும் பார்த்திராத போலி முற்போக்கு கும்பலின் வெற்றுவேட்டு ஜல்லி!

குறட்பாக்களைக் கட்டாயம் சமயச் சிமிழுக்குள் அடைத்தே ஆகவேண்டும் எனும் நேர்ச்சைக்கடன் எதுவும் எமக்கில்லை.

திருக்குறளின் ‘முப்பால்’ பகுப்பே மறைசார் நூல்களின் தாக்கத்தால் விளைந்ததுதான்;
அறம், பொருள், இன்பம் எனும் இம்மைசார் இலக்குகளை ‘த்ரிவர்கம்’ எனவும் , வீடுபேறு எனும் மறுமைசார் இலக்கை ‘அபவர்கம்’ எனவும் பிரிப்பது மறை வழக்கம். மஹாபாரதம் சாந்தி பர்வத்தில் பீஷ்மர் தர்மநந்தனரிடம் இதை விரிவாகக் கூறுவார் -
ததோ(அ)த்₄யாயஸஹஸ்ராணாம்
ஶதம் சக்ரே ஸ்வபு₃த்₃தி₄ஜம்।
யத்ர த₄ர்மஸ்ததை₂வார்த₂:
காமஶ்சைவாநுவர்ணித:॥
த்ரிவர்க₃ இதி விக்₂யாதோ
க₃ண ஏவ ஸ்வயம்பு₄வா।
இதை முற்காலத்தில் நான்முகர் ஒரு லக்ஷம் சுலோகங்கள் கொண்ட ‘தண்ட நீதி’ நூலாக இயற்றினார் எனவும் பீஷ்மர் சொல்கிறார்.

மனுவும் தண்ட நீதிவல்ல மன்னன் அறம், பொருள் எனும் துறைகளில் மிகவும் தேர்ச்சி கொண்டிருத்தல் வேண்டும் என்பார் -
तस्याहुः संप्रणेतारं राजानं सत्यवादिनम् ।
समीक्ष्यकारिणं प्राज्ञं धर्मकामार्थकोविदम् । । ७.२६ । ।

பற்றுநீங்கி ஆன்மிகத்தில் தோய்ந்தாருக்கென்றே ‘நீத்தார் பெருமை’ எனும் அதிகாரம் வகுத்துள்ளது வள்ளுவம். குறளின்கண் மறைமுகமாக இடம் பெறும் புராணத் தகவல்களும் பல. ’அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ ததீசி முனிவரைச் சொல்வதை மறுப்பது பாசாங்குத்தனம் இல்லாமல் வேறு என்ன?

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவர்பிரான், உயிரினம் பல இருக்க ஆவுக்கு நீரளிக்கும் உயர்ந்த தர்மத்தை உவமை கூறுவார்.

சேரமான் பெருமாள் நாயனாரின் ‘திருக்கயிலாய ஞான உலா’ குறட்பாக்களை அப்படியே எடுத்தாண்டுள்ளது.

குறளின்கண் இடம் பெறும் சமயம்சார் சொற்கள் பல. அவற்றையெல்லாம் நீக்க முடியுமா? அவ்விதம் நீக்க முடியுமானால் சமயச் சிமிழுக்கு வெளியே வள்ளுவத்தை எடுத்து விடலாம்.

*ஆதி பகவன்
*எண்குணத்தான் (விஜரத்வாதி அஷ்டகுணா:)
*அடியளந்தான் (திரிவிக்கிரமன்)
*செய்யாள் (இலக்குமி)
*உலகியற்றியான் (விச்வஸ்ய கர்த்தா)
*இந்திரன்
*அவியுணவின் ஆன்றோர் (தேவர்கள்)
*ஆவுக்கு நீர் (கோ ஸம்ரக்ஷணம்)
*அளறு (நரகம்)
*புத்தேள் உலகு (சுவர்க்கம்)
*ஓத்து (வேத அத்யயநம்)
*பார்ப்பான் (வேதியன்)
*அறுதொழிலோர் (ஷட்கர்ம நிரதர்)
*தென் புலத்தார் (பித்ருக்கள்)
*விருந்து (ஆதித்யம்)
*தவம்
*அவி சொரிந்து வேட்டல் (யாகம்)
*நோன்பு (விரதம்)
*புத்தேளிர் (தேவர்)
*கூற்று (யமன்)
*பிறவாமை (அபுநர்பவம்)
*மறை மொழி (மந்திரம்)
*ஊழ் (விதி)
*திங்களைப் பாம்பு கொள்வது (சந்திர கிரஹணம்)
*வாய்மை (ஸத்யம்)
*கள்ளாமை (அஸ்தேயம்)
*கொல்லாமை (அஹிம்ஸை)
*மற்றீண்டு வாரா நெறி (மோக்ஷம்)
*தாமரைக் கண்ணான் உலகு (பரமபதம்)

மறை ஓத்துக்கு (வேத அத்யயனத்துக்கு) முதன்மை தரும் விதத்தில் ‘ஓத்தூர்’ என்றே ஒரு பாடல் பெற்ற சைவத்தலம் ஒன்றும் தமிழகத்தில் உள்ளது - ‘குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்' (காழிப் பிள்ளையார்).

வள்ளுவத்தை சநாதனத்திலிருந்து பிரிப்பதும், சமணத்தோடு ஒட்ட வைப்பதும் மிகவும் செயற்கையான பயனற்ற நிலைக்காத முயற்சிகள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard