முனைவர் மா.பவானி உதவிப் பேராசிரியர் கல்வெட்டியல் துறை
அமைவிடம் : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்
எழுத்து:: சங்க காலத்தமிழ் (தமிழி) எழுத்து
மொழி: தமிழ்
காலம்: பொ.ஆ.மு. 1ஆம் நூற்றாண்டு(தோராயமாக)
குறிப்பு :
சங்க இலக்கியங்களில் முருகப்பிரானுடைய உறைவிடமாக்க் கருதப்பெறும் திருப்பரங்குன்றத்தில் 3 குகைகள் உள்ளன. 2 குடைவிக்கப்பெற்ற கோயில்கள் . ஒன்று இயற்கையாக அமைந்த குகையாகும் இப்பொழுது முருகப்பிரானுடைய பெருங்கோயிலாக வழிபாட்டில் திகழ்வது பொ.ஆ. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பராந்தக நெடுஞ்சடையன் என்ற பாண்டிய மன்னன் காலத்தில் தோற்றுவிக்கப்பெற்றது. இக்கோயிலில் நெடுஞ்சடையன் காலத்தில் துர்க்கைக்கும் ஜேஷ்டாதேவிக்குமாகக் கட்டப்பெற்ற கோயிலாகும். இயற்கையாக அமைந்த குகைத்தளத்தில் பல படுக்கைகள் உள்ளன. அவற்றில் தமிழி எழுத்துக்கள் உள்ளன. அவற்றுள் மிகக் குறிப்பிடத்தக்க கல்வெட்டு ஒன்று உண்டு.
எருக்காட்டூரைச் சேர்ந்த பொலாலையன் என்பவரும் ஆய்சயன் நெடுசாதன் என்பவரும் சமணர் படுக்கை செய்து கொடுத்ததைப் பற்றியது.
முக்கியத்துவம் :
ஈழத்தைச் சேர்ந்த பொலாலையன் என்று எடுத்துக்கொண்டால் இவர் ஈழம் குறித்துக் கிடைக்கும் முதல் கல்வெட்டாகக் கொள்ளலாம். ஆயினும், இதை ஈழக்குடும்பத்தைச் சேர்ந்த எக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் கொள்ளலாம். ‘’ஈழர்’’ என்பதற்குப் பனை மரத்திலிருந்து பதனி இறக்கும் இனத்தைச் சேர்ந்தவர் என்றும் பொருள் உண்டு.
ஆவியூர்க்கு அருகிலுள்ள குறண்டி என்னும் ஊரில் திருக்காட்டாம்பள்ளி என்ற ஒரு பள்ளி சிறப்பாகச் செயல்பட்டது. பராந்தக பருவதமாயின ஸ்ரீ வல்லபப் பெரும்பள்ளி என அது பெயர் பெற்றிருந்தது. இப்பள்ளியின் ஆசிரியர்களும், மாணாக்கர்களும் மதுரையைச் சுற்றியிருந்த பல பள்ளிகளோடும் தொடர்பு கொண்டிருந்தனர். அவர்கள் பல இடங் களுக்கும் சென்று சமணத் திருமேனிகளைப் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கி வழிபடச் செய்தனர். திருப்பரங்குன்றம், கிழக்குயில் குடி, முத்துப்பட்டி, குப்பல்நத்தம், ஐவர் மலை போன்ற பல ஊர்களில் இவர்களது பணிகள் பற்றிய கல் வெட்டுகள் உள்ளன. திருப்பரங்குன்றத்தில் உள்ள பழனியாண்டவர் கோயிலின் பின்புறம் ஓர் இயற்கை யான சுனை உள்ளது. அங்குள்ள பாறையில் இரண்டு புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒன்று மகாவீரர் உருவம், மற்றொன்று பார்சுவநாதர் உருவம். இவற்றின் கீழ் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் ஒன்று,
‘வெண்புநாட்டுத் திருக்குறண்டி
அனந்த வீர்யப்பணி’
அனந்த வீர்யன் என்னும் ஒரு சமண அடியவர் இங்குள்ள மகாவீரர் சிற்பத்தை அமைத்துள்ளார். இதன் அருகில் உள்ள பார்சுவநாதர் சிற்பத்தைச் செதுக்கியவர் பற்றிய குறிப்பு இன்னொரு கல்வெட்டில் உள்ளது.
‘ஸ்வஸ்திஸ்ரீ சிவிகை ஏறினபடையர்
நீலனாஇன இளந்தம்மடிகள்
மாணாக்கன் வாணன் பலதேவன்
செவ்விச்ச இப்பிரதிமை’
என்பது இதன் வாசகம். இக்கல்வெட்டுகள் கிபி.9-10 ஆம் நூற்றாண்டுகாலத்தைச் சேர்ந்தவை. இதே காலத்தில் மலை மேல் உள்ள காசிவிசுவநாதர் ஆலயத்தின் அருகில் உள்ள உயரமான பாறை யிலும் இரண்டு சமணச் சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. அதன்கீழ் கல்வெட்டுகளும் உள்ளன.