சிக்கலற்ற அறவழிமக்களின் குறிக்கோளைக் குறள் ஐயத்திற்கு இடமின்றி உறுதியோடு தீற்றுகிறது. மனிதன் தன்னோடும் உலகோடும் நடந்து கொள்ளும் ஒழுக்கத்தினைக் குறித்து எழுகிற எண்ணற்ற கேள்விகளைப் பற்றிக் குறள் கூறுவன பெருமை படைத்தன; அறிவு நிரம்பியன. உலக இலக்கியத்தில், இவ்வளவு உயர்ந்த மெய்யுணர்வு ததும்பும் அறவுரைக்கொத்து வேறொன்று இருக்கக் காணோம். -தெ பொ மீனாட்சி சுந்தரம்.
சங்க இலக்கியத்தின் வலுவான பின்புலத் துணையுடன் புதிய யாப்பில், புதிய முறையில், பல புதுமைக் கருத்துக்களோடு சமூக முன்னேற்றத்தை அடிப்படை நோக்கமாகக் கொண்டு பொருட்பெருக்கமும் சொற்சுருக்கமும் கொண்ட தனிச்சிறப்புடன் எழுதப்பட்ட ஒப்புயர்வற்ற நூல் குறள். இது அற நூல், மெய்யியல் நூல், இலக்கிய நூல், அரசியல் நூல், இன்ப நூல், வாழ்வியல் நூல் என்ற பல பரிமாணங்களை உடையது. குறள் யாக்கப்பட்டது புலவர்களுக்காகவோ அறிஞர்களுக்காகவோ அல்ல. யாரையும் குறிப்பாக நோக்காமல் எல்லா நிலையில் உள்ள உலக மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வண்ணம் எளிய நடையில் படைக்கப்பட்ட பனுவல் ஆகும் இது. மனிதன் பலவேறு நிலமைகளில் கொள்ளவேண்டியவற்றையும் தள்ளவேண்டியவற்றையும் கூறி, நாட்டிலே நல்லாட்சி ஏற்பட, இல்வாழ்வான் சான்றாண்மையுடனே குடிமையை நடத்தி, இன்பம் நுகர்ந்து, வாழ்வாங்கு வாழ வழி கூறுவது நூலின் நோக்கமாகும்.
நூல்
திருக்குறள் என்பது அழகிய குறள் வெண்பாவினால் ஆகிய நூல் எனப் பொருள்படும். திரு என்னும் அடைமொழி ஒவ்வொரு குறளையும் சிறப்பித்து நிற்கிறது. இந்நூலை வள்ளுவர் குறட்பாக்களால் கூற எடுத்துக்கொண்டதால், சுருங்கச்சொல்லல், விளங்கவைத்தல், நவின்றோர்க்கினிமை, நன்மொழி புணர்த்தல் முதலான அழகுகள் இனிதாக அமைந்தன. ஏழு சீர்களில் எதுகை மோனை இன்பத்துடன், இலக்கியச் சுவை மிக்க, கவித்துவம் ஒளியிடும் நுலாக அமைந்துள்ளது. குறட்பாக்கள் அனைத்தும் கேட்டாரை மீண்டும் தம்மை நோக்கி நோக்கப் பயன்கொள்ள நிற்கும் நிலைமை வாய்ந்தன.
பதினெண்கீழ்கணக்கு
சங்க கால இலக்கியங்களில் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சேர்ந்து பதினெண்மேல்கணக்கு என்று பகுத்துக் காட்டப்பட்டது. சங்கம்/சங்கம் மருவிய கால பதினெட்டு நூல்களின் தொகுப்பு பதினெனண்கீழ்க்கணக்கு எனப்பெயர் பெற்றது. ஏறத்தாழ 500 ஆண்டுகளில் எழுதப்பட்ட பலவேறு சிந்தனை நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்ற ஒரே தொகை நுல்களாயின. கீழ்க்கணக்காவது- பெரும்பாலும் ஐந்தடியின் மிகாத பாடல்களால், ஐம்பதில் குறையாமல் ஐந்நூற்றில் மிகாமல், வெண்பா யாப்பில் அமைவது- என்ற இலக்கண வரையறையில் நூல்வகைப் படுத்தினர் என்று பழம் செய்யுட்களால் தெரியவருகிறது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பன்னிரண்டு நீதி நூல்கள். இவை யாவும் வெண்பாக்களால் ஆனவை. திருக்குறள் எழுசீர் வெண்பாவாகும். இந்நூல்களின் பாடல் மற்றும் யாப்புவகை ஒருதன்மைத்தானது எனக் கொள்ளப்பட்டு பதினெண்கீழ்க்கணக்கு என்ற இந்தத் தொகுப்பில் திருக்குறளையும் சேர்த்து விட்டனர்.
குறள் வெறும் நீதிநூல் எனப் பிற்காலத்தவர் முடிவு எடுத்துப் பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாகத் தொகுத்துள்ளனர். பதினெண்கீழ்க்கணக்குத் தொகுதி முறையே மிகத்தவறானது என்று ஆய்வாளர்கள் கருதுவர். இத்தொகுதியினுள் சங்க நூல்களும் சங்கம் மருவிய நூல்களும் இருக்கின்றன. குறள் இத்தொகுப்பில் கண்ட ஏனைய 17 நூல்களுக்கும் முற்பட்டது. மற்ற நூல்களின் பழமையையும் கருத்தையும் உயர்த்தவே குறள் இவைகளோடு இணைக்கப்பட்டதா? குறள் ஐந்நூறில் மிகுந்த ஆயிரத்து முந்நூற்று முப்பது பாடல்களால் ஆனது; எந்த வகையில் குறளை பதினெண்கீழ்க்கணக்குத் தொகை நூல்களில் ஒன்றாகப் பகுத்தார்கள்? என்ற கேள்விகள் எழுகின்றன. அத்தொகுதியில் சேர்க்கப்பட்டதால் திருக்குறளின் உள்ளார்ந்த மெய்ப்பொருளும், நுவல் பொருளும், மறுமலர்ச்சிச் சமுதாயத்தைப் படைக்கும் புதுமைக் கொள்கைகளும், மறைக்கப்பட்டு, திரிபு படுத்தப்பட்டுத் தோற்றம் தருகிறது என்றும் இதனால் குறள் வெறும் நீதி நூலாகவும் சிற்றிலக்கியமாகவும் வடமொழி வழிநூல் கருத்துக்களின் தொகுப்பாகவும் திசை திருப்பப்பட்டு விட்டது என்றும் அதன் நுண்மாண் நுழைபுலத் திறன்கள், அஃகி அகன்ற அறிவுக் கோட்பாடுகள், உண்மைப் பொருள் விளக்கங்கள் நமக்குத் தரப்படவேயில்லை என்றும் பதினெண்கீழ்க்கணக்கில் சேர்க்கப்பட்டதால் குறளுக்குப் பிறழ்ச்சியும் அநீதியும் நேர்ந்தன என்பார் கு ச ஆனந்தன். தனிப் பெருமை வாய்ந்த திருக்குறளை பதினெண்கீழ்க்கணக்கினுள் ஒன்றாக்கிக் மற்ற ஏனைய சிறு நூல்களில் ஒன்றாய்க் கூறியது பொருத்தமற்றது. குறளைத் தொகை நூல்களில் ஒன்றாகப் பார்க்காமல் தனி நூலாகப் பார்ப்பதே ஏற்புடையதாகும்.
முப்பால்
சங்ககாலத்தில் தமிழ் மரபைச் சார்ந்த இலக்கியக் கோட்பாடு அகம், புறம் என்றிருந்தது. வடநூலார் அறம், பொருள், இன்பம், வீடு என்று நான்கு உறுதிப் பொருட்களைச் சொல்கிறார்கள். சில சஙகப்பாடல்கள் முப்பொருள் பற்றிப் பேசின. அந்நிலை மருங்கின் அறமுத லாகிய மும்முதற் பொருட்கு முரிய வென்ப (செய். 105)என்று தொல்காப்பியமும் அறமும் பொருளும் இன்பமு மூன்றும் ஆற்றும் பெருமநின் செல்வம் (புற. 28) சிறப்புடை மரபிற் பொருளு மின்பமும் அறத்துவழிப் படூஉந் தோற்றம் போல (புற. 31) என்று புறநானூறும் கூறுகின்றன.
முப்பால் பகுப்புப் பற்றிய சோமசுந்தர பாரதியார் கருத்து இங்கு கவனிக்கத்தக்கது: "இனி, இதுவே போல், குறள் நூலும் இன்பமல்லா எல்லாப் பொருளுமே புறப்பகுதி ஒன்றிலே அடங்கும். அதை அறத்துப்பால்-பொருட்பால் என்றிரு வகையாக்க யாதோர் அவசியமும் நியாயமும் இல்லை.அது தமிழ்மரபும் ஆகாது. அறமற்ற பொருளும் பொருள் தொடர்பற்ற அறமும் கருத்தொணாதன. அது போலவே அறத் தொடர்பற்ற இன்பமும் இன்பமாகக் கொள்ளாத அறமும் தமிழறிஞர்கட்கு உடன்பாடில்லை. அறமே 'சிறப்பீனும் செல்வமும் ஈனும்' எனவும் 'அறத்தான் வருவதே இன்பம்' எனவும் பேசும் பொய்யில் புலவர் பொருளுரைகள் போற்றற் பாலனவாம். எனவே அறம், பொருள் என்ற இரண்டும் ஒன்றோடொன்று இன்றியமையாத் தொடர்புடைய வாகலும், அதனால் அவை வெவ்வேறு பொருவகைகளாகாமையும் இனிது விளங்கும். ஆனால், அவை அனைத்தும் அகத்தின் வேறாய புறப்பொருள் வகைகளாய் அடங்கும் என்பதும் மறுக்கொணாது. உண்மை இதுவாகவும் குறட்பொருளைத் தமிழ் மரபுக்கேற்ப அகம் புறம் என்றிருவகையாக்காமல் அறத்தை வேறு பிரித்து அறம், பொருள், இன்பம் என முப்பாற்படுத்தியதோடு, இன்பத்தைக் காமத்துப் பால் எனப் பெயரிட்டதும் உரைகாரர் குறளை வடநூல் வரன்முறையாக்கும் நோக்கத்தாலன்றி அதற்கு வேறு தக்க ஏது ஏதுவுமில்லை. மேலும் அப்பாகுபாடு குறளுக்குப் பொருள் நிறைவும் மாட்சியும் தருமாறில்லை எனக் கான்கிறோம். அது உரைகாரர் குறள் துவக்கத்தில் பாயிரம் என்று வேறு ஒரு பகுதி வகுப்பதால் தெளிவாகும். அவர் கொண்ட மூவகுப்பிலும் அடங்காத ஊழ்-உழவு-கள்ளாமை, கயமை- வரைவின் மகளிர்-மருந்து-மானம் போன்ற பலவற்றை வலிந்து பொருத்தமின்றிப் பொருள் வகையில் புகுத்தி இடர்ப்படுவதாலும் அவர் வீண் முயற்சி விருதாவாவது தெளிவும் தேற்றமுமாகும். அவை அனைத்தும் தமிழ்ப் புறப்பொருள் வகையில் அடங்கி அமைவதும் ஈண்டுச் சிந்திக்கத்தக்கதாம்."
வள்ளுவர் தமிழ் இலக்கியக் கோட்பாடோடு மேலே சொன்ன உறுதிப் பொருள்களை இணைத்துப் பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டார் போல் தோன்றுகிறது. மேலும் அறநெறியோடு இந்த உலகத்தில் வாழ்ந்தால் தானாகவே அமைவது வீடு என்பதால் சிந்தைக்கு எட்டாத வீட்டை கைவிட்டு வள்ளுவர் திருக்குறளை அறம், பொருள், காமம் என முப்பாலாய் தன் நூலில் பகுத்துக்கொண்டார் என்று விளக்கம் அளிப்பார் பரிமேலழகர். எனினும் குறளை ஒரே பாலாகக் கொண்டு நூல் முழுவதையுமே தொடர்ச்சியாக அறிந்து அதை ஒரு வாழ்வியல் நூலாகக் கொள்வது சிறப்புடைத்து.
குறள் அமைப்பு
இலக்கியப் படைப்புகள் சிறந்த வெற்றியினைப் பெறுவதற்குப் பாடு பொருளுடன் அவற்றின் வடிவமும் அடிப்படையாக அமையும். யாப்பின் கட்டுக்கோப்புடன் இருக்கும் இலக்கியங்கள் யாவும் இன்றும் அழியா இலக்கியங்களாக உள்ளன. எப்பொருள் எந்த யாப்பில் பாடினால் சிறக்கும் என்பதனை அறிந்த கவிஞர்கள் அந்தந்த அடிப்படையில் இலக்கிய வடிவங்களை வகுத்தனர். வெண்பா யாப்பும் அவ்விலக்கிய வடிவங்களுள் ஒன்றாகும். குறள் முழுமையும் குறுகிய எழுசீர் வெண்பாக்களால் ஆனது. குறட்பாக்களான வேறு ஒரு பெரிய இலக்கிய நூல் முன்பு இருந்ததாகத் தெரியவில்லை. இலக்கண நூல்கள் மட்டும் சில இருந்தனவென்று யாப்பருங்கலவிருத்தியால் தெரிகின்றது. வெண்பா பிரிவில் முதலில் வைக்கப்பட்ட பா வகை குறட்பா ஆகும். குறள் என்பது குறுமை - குறுகியதைக் குறிக்கும். குறுகிய பா குறட்பா. இது குறுவெண்பாட்டு என்றும், குறள் வெண்பா என்றும் சொல்லப்படும். முதல் அடி நான்கு சீரும், இரண்டாம் அடி மூன்று சீருமாக ஏழு சீர் கொண்டது குறள் வெண்பா. எளிதில் ஓதும் வண்ணம் பெரும்பான்மையும் ஓரசை முதல் மூன்றசைகளுடைய் எழுத்துக்களால் அமைந்துள்ளன. ஒவ்வொரு குறளும் முப்பதுக்குட்பட்ட எழுத்துக்களால் ஆனது. ஈற்றடியிலுள்ள இறுதிச்சீர், நேர், நிரை, நேர்பு, நிரைபு என்னும் நால்வகை அசையுள் ஓர் அசையாய் நிற்கும்.
"வெண்பாவில் வேற்றுச் சீர்கள் கலந்துவிட்டால் ஓசை கெட்டுப் போகும். உயர்ந்த ஒழுக்கத்தை வரையறுக்கும் நூலுக்கு வேற்றுச்சீர் விரவினும் ஓசை கெடும்; வெண்பா பாடுபவனுக்குத் துன்பம்; படிப்பனுக்கு எளிது. வெண்பாவை இருமுறை படித்தாலே பாடம் வந்துவிடும்; சிறந்த கருத்துக்களத் தாங்கி நிற்கும் பாக்களும் பயில்வார் மனத்தில் எளிதில் பதிய வேண்டும் என்பதால் வெண்பா யாப்பு வள்ளுவரால் விரும்பப்பெற்றது; வெண்பாவிற்கு உரிய ஓசை செப்பலோசை; செப்பல் என்றால் சொல்வது என்று பொருள்; அறக்கருத்துகளை எடுத்துச்சொல்வதற்கு செப்பலோசையுடன் பிற தளைகள் கலவாத தூய்மையுடையதாக வெண்பா கருதப்பட்டது."- இவை ச தண்டபாணி தேசிகர் கூறும் விளக்கங்கள். திருவள்ளுவர் தம்நூலை எல்லோரும் ஓதி உணர விரும்பியதால் செய்யுள் வழக்கினை மட்டும் மேற்கொள்ளாமல் பேச்சு வழக்கினையும் பின்பற்றிச் சென்றார்.
பகுப்பு
இந்நூலில் பெரும் பிரிவு பால் எனவும், சிறு பிரிவு இயல் எனவும், அதனில் சிறு பிரிவு அதிகாரம் எனவும் அமைக்கப் பெற்றுள்ளது. பால்: பகுதி என்னும் பொருள்பட்டது. இயல்: இலக்கணம் என்ற பொருள் கொண்டு பாலின் உட்பகுதியாகிய 'கற்பியல்' போன்றவற்றின் இலக்கணம் உணர்த்தும். அதிகாரம்: இயலின் உட்பிரிவாகி அதிகரித்தல் உடைய பகுதி எனப் பொருள்படும். ஏனைய நூல்களில், இப்பெயர் பெரும் பிரிவிற்கே வழங்கியிருக்கிறது. குறித்த பத்துக் குறளிலும் அந்தப் பொருள் அதிகரித்து நிற்பதால் இப்பெயர் இடப்பெற்றிருக்கலாம் என்கிறார் ச தண்டபாணி தேசிகர். பாக்கள்- ஒவ்வொரு அதிகாரமும் பத்து குறள்களை உடையது. இவ்வாறாக 133 அதிகாரங்களுக்கு மொத்தம் 1330 குறட்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு குறளும் முப்பதுக்குட்பட்ட எழுத்துக்களில் அமைந்தவையாய் உள்ளது. குறள் அமைப்பொழுங்கை நினைவிற்கொள்ள: நூல் - 1 ; பால் - 3 ; இயல் - 13; அதிகாரம் - 133; பாக்கள் - 1330 குறளைப் பெரும் பிரிவாகப் மூன்று பாலாகப் பிரித்தாலும், அறமே மூன்று பகுதியாகப் பிரிக்கப்பட்டு, ஒழுக்கம் பற்றிய அறமும், பொருளீட்டல் பற்றிய அறமும், இன்பம் பற்றிய அறமுமாக இயற்றப்பட்டதாக அறிஞர்கள் கருதுவர்.
குறளின் பகுப்பு முறையும் மிகுந்த ஐயப்பாட்டுடனே நோக்கப்படுகிறது. திருக்குறள் மூலநூல் அதன் ஆசிரியரால் செய்யப்பட்ட மெய்யான பகுப்புக்களுடன் இன்றுவரை முழுவடிவில் கிடைக்கவில்லை. திருக்குறளின் முப்பால் முறையும், இயல்கள் பகுப்பும் அதிகார அடைவும் வள்ளுவரால் செய்யப்பட்டனவா? திருக்குறள் என்ற பெயரோ முப்பால்களின், இயல்களின் அதிகாரங்களின் தலைப்புக்களோ குறட்பாக்களைத் தொகுத்தவர்கள் தந்தனவா? பாக்களையும் அதிகாரங்களையும் வரிசைப்படுத்தியது வள்ளுவர்தானா? என்ற ஐய வினாக்கள் எழுப்பப்ப்ட்டுள்ளன.. உரை ஆசிரியர்கள் வழியும் திருவள்ளுவமாலை பாடியவர்கள் வழியும் பால், இயல், அதிகாரம், பாக்கள் ஆகியவற்றின் துணையுடன்தான் அமைப்பு முறையைக் கணிக்க முடிகிறது. பாக்கள் இயற்றி அதிகாரப் பெயரிட்டுப் பகுப்பு செய்தது வள்ளுவர்தான் என்பதில் பெரும்பாலும் எல்லா ஆய்வாளர்களும் உடன்படுகின்றனர். ஆனால் இயற்பகுப்பு, அதிகார வரிசை, குறள் உட்பகுப்பு, முறை வைப்பு இப்பொழுது உள்ளபடியே மூலநூலில் இருந்தது என்று சொல்ல முடியாதிருக்கிறது. இவற்றில் உரைகாரர்கள் வேறுபடுகின்றனர். எனவே இவை உரைகாரர்களது பிற்காலப் படைப்பே என்று ஆய்வாளர்கள் கருதுவர்.
பரிமேலழகர் பகுத்தபடி 9 இயல்கள். அறத்துப்பால்: (38 அதிகாரங்கள்) 1. பாயிரம்- 4அதிகாரங்கள்; 2.இல்லறவியல்- 20அதிகாரங்கள்; 3.துறவறஇயல்-13அதிகாரங்கள்; 4.ஊழ்-1அதிகாரம். பொருட்பால்: (70அதிகாரங்கள்) 5.அரசியல்-25அதிகாரங்கள்; 6.அங்கவியல்-32அதிகாரங்கள்; 7.ஒழிபியல்-13அதிகாரங்கள். காமத்துப்பால்: (25அதிகாரங்கள்) 8.களவியல் (7 அதிகாரங்கள்); 9.கற்பியல் (18 அதிகாரங்கள்) மேற்சொன்னபடி மொத்தம் 133 அதிகாரங்களாகும். பரிமேலழகர் பகுப்பு முறையே பெரும்பாலும் பின்பற்றப்படுகிறது. ஆனால் “வள்ளுவரது முறையை உணர்வதற்குப் பரிமேலழகரைக் காட்டினும் பிற உரைகாரர்களே நாம் நம்பித் துணையாகக் கொள்வதற்கு உரியன. மணக்குடவர் நமக்கு துணையாகலாம் என்று தோன்றுகிறது. இவரது செய்யுள் வைப்புமுறை பெரும்பாலும் வள்ளுவரது ஆகலாம். ஆனால் இவர் உரை கிடைக்கக்கூடும் பிரதிகள் அனைத்தையும் ஒப்பு நோக்கி ஆராய்ச்சி முறையாகப் பதிப்பிக்கப்பெறவில்லை” என வையாபுரிப்பிள்ளை தனது ஆய்வுக் கருத்தில் சொல்கிறார்.
71,110 ஆகிய இரண்டு அதிகாரங்களுக்கும் 'குறிப்பறிதல்' என்ற பெயரே உள்ளது. எனவே 132 தலைப்புகளே 133 அதிகாரங்களுக்கு உள்ளன. காலிங்கர் தம் உரையில், 110-ம் அதிகாரத்தைக் 'குறிப்புணர்தல்' என வேறு பெயரில் குறிக்கிறார்.
பாயிரம்
பாயிரம் என்பது நூலைப் பற்றிய பருப்பொருள்களை அறிவிப்பது. பாயிரத்தால் நூற்போக்கு அறியப்படும். குறளின் முதல் நான்கு அதிகாரங்களான கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்பனவற்றைக் கூட்டாக பாயிரம் என்று கூறுவர். குறளின் கடவுள் வாழ்த்திற்கும் ஏனைய நூல்களின் கடவுள் வாழ்த்திற்கும் வேறுபாடு உண்டு. ஏனைய நூல்களில், எடுத்துக்கொண்ட நூல் இனிது நிறைவேறுதற்காகவும் நின்று நிலவுதற்காகவும் கவிஞர் கடவுளை வாழ்த்துவர். இந்நூலில் கடவுளின் பொது இயல்பும், சிறப்பியல்பும் கூறி, அவரை வாழ்த்துததால் உண்டாகும் பயனும் கூறப்படுகின்றன. குறளில் கடவுளை வாழ்த்துதலும் தலையாய அறம் அல்லது ஒழுக்கம் என்பது உணர்த்தப் பெற்றதேயன்றி, ஏனைய நூல்களைப் போலப் பயன் கருதிக் கடவுள் வாழ்த்தப்படவில்லை. கடவுளை வாழ்த்தாமல், கடவுளை வாழ்த்துதல் கற்றவருக்கும் மற்றவர்க்கும் உள்ள கடமை என்று அதனையும் ஓர் ஒழுக்க இயலாக வள்ளுவர் உரைத்தார். பாயிரத்திலுள்ள நான்கு அதிகாரங்களுமே வள்ளுவரால் இயற்றப்படவில்லை என்று ஒரு சாரார் கூறினர். வான் சிறப்பு அதிகாரம் எந்த வகையில் பாயிரத்தில் சேர்க்கப்பட்டது என்றும் வினவப்படுகிறது. ஆனால் அவர்கள் கூற்றில் வலு இல்லை என்பதும் பாயிரம் வள்ளுவர் இயற்றியதே என்பதுமே பெரும்பன்மையோர் கருத்தாகும்.
மூலநூலா? வழிநூலா?
திருக்குறளின் முதல்நூல்கள் எவை என்று ஆராய்ந்தவர்கள் மேம்போக்காக சில அடிப்படை உண்மையற்ற முடிவுகளைக் கூறினர். அவற்றில் ஒன்று குறள் வடமொழி இலக்கியங்களின் வழிநூல் என்பதாகும். தமிழ்நூல்களில் சங்க இலக்கியங்களும் தொல்காப்பியமும் எப்படி குறளுக்கு முன்னோடியாக வழிகாட்டி நூல்களாக இருந்திருக்கின்றனவோ அதேபோல சில வடமொழி இலக்கியங்களின் தாக்கமும் குறளுக்கு இருந்திருக்கலாம். எல்லா நூல்களும் பல்வேறு நூல்களிலிருந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு பிறப்பனவே என்ற புரிதலில் இருந்து எழும் எண்ணமாகவும் இது இருக்கக்கூடும். குறள் ஒருவரால் இயற்றப்பட்டதா? அல்லது பலரின் கூட்டு முயறசியால் நாலடியார் போல உருவான தொகை நூலா? என்றுகூட சிலர் ஐயுற்றனர். பரந்துபட்ட பல்வேறு துறைகளுக்குரிய விழுமிய கருத்துக்களை ஒரு தனிப் புலவரால் எடுத்துரைக்க இயலுமா என வியப்புற்றுதால் எழுந்த வினாக்களே இவை. "எல்லா நூல்களிலும் நல்லன வெடுத்து எல்லார்க்கும் பொதுப்படக் கூறுதல் இவர்க்கியல்பு" என்னும் பரிமேலழகர் (குறள் 322) கருத்துரை இங்கு நோக்கத்தக்கது.
குறள் எப்படி வடநூலின் வேறுபடுகிறது? வள்ளுவர் செய்த பனுவலில் வடநூலார் வழிகாட்டும் வீடில்லை . பெற்றோரும், மனைவி, குழந்தைகள் பசியால் வருந்துவராயின் தீயன செய்தாயினும் புறந்தருக என்பதும் இறக்க நேர்ந்தால் இளிவந்தன செய்தாயினும் உய்க என்பது வடநூன்முறையாகும். ஆனால் குறளோ உடம்பினது நிலையின்மையை வலியுறுத்தியும் மானத்தினது நிலையுடைமையைத் தூக்கியும் 'ஈன்றவள் பசி காண்பாளாயினும் சான்றோர் பழிக்கும் வினையைச் செய்யற்க' என்கிறது என்பதைப் பரிமேலழகர் சுட்டிக்காட்டியுள்ளார். சாணக்கியரும் சுக்கிரநீதி நூலுடையாரும் தத்தம் பொருள் நூல்களிற் கள்ளினை சிறிதளவுண்ண இடம் கொடுத்திருக்க, திருவள்ளுவர் கள்ளுண்ணாமையை நன்கு வற்புறுத்திச் சொல்லியுள்ளார். சுக்கிரநீதி சிறிதளவு உண்ணப்படும் கள் மதி நுட்பத்தையுந் தருவதாகும் என்கிறது. குறள் கள்ளுண்பவரைச் சாடி அவர்களைச் செத்தார் என்கிறது. பிறப்பால் உயர்வும் பீடில்லாத் தாழ்வும் மக்களுக்கு என்றும் மாறா நிலையில் உள்ளது என்று கூறி சாதிக்கொரு நீதி விதித்தது வடவர் நூல்கள். அதை மறுத்து ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்று முழங்கும் குறள் பிறப்பாலுரிமையும், சாதி நீதியும் பேசாது மட்டுமல்ல; ‘பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்’ என்று நம் சமுதாயக் கொள்கையையும் வரையறுக்கிறது. எல்லா ஸ்மிருதிகளும் நான்குவருணங்கள் நான்கு புருஷார்த்தங்கள் நான்கு ஆசிரமங்கள் இவற்றைப்பற்றியே விரித்துரைக்கின்றன. ஒரு நீதிநூலை இன்னொன்றுடன் நாம் வேறுபடுத்திப்பார்ப்பது எவ்வகையில் அது இந்த பொதுமையில் இருந்து வேறுபடுகிறது என்பதை வைத்தே. குறள் நான்குவருணங்களைப் பற்றிப் பேசவே இல்லை. நான்கு புருஷார்த்தங்களில் வீடுபேறை விட்டுவிட்டது. ஆல்பர்ட் சுவைட்சர் என்ற ஜெர்மனி நாட்டைச் செர்ந்த உலகப் புகழ் பெற்ற அறிஞர் "பண்டைக்கால இந்தியாவில் திருக்குறளில் காணாப்படுவதைப் போன்ற அன்புவழிப்பட்ட செயல்முறை வாழ்க்கையும், வாழ்க்கை மறுப்பு இன்மைக் கோட்பாடும் புத்த,(சமண)சமயத்திலோ, பகவத்கீதை வழி வளர்ந்துள்ள இந்து சமயத்திலோ இடம் பெறவில்லை" என்று தெளிவுபடக் கூறியுள்ளார். இவை குறளுக்கும் வடநூலார் மரபுக்கும் உள்ள வேற்றுமைகளில் ஒருசில. இதுவே குறள் வழிநூல் அல்ல; அது தனித்தன்மை வாய்ந்த மூலநூலே என்பதைத் தெள்ளிதின் விளக்கும்.
குறளின் சிறப்புக்கள் சில
தானே முழுது உணர்ந்து தண்தமிழில் ஓதற்கும் உணர்தற்கும் எளிதான குறளைப் படைத்தார் வள்ளுவர். “மிக எளிய நடை; பளிங்கு போலத் தெளிவாகத் தோன்றும் சிந்தனை, பொருத்தமான, அழுத்தமான, சிறிய தேர்ந்த சொல்லாட்சி, ஆழமான கல்வி, பண்பாடு, ஞானம், விரிந்து பரந்த மனப்பான்மை, தேவையானவற்றையெ தேர்ந்து தரும் திறம், மேன்மையான நகைச்சுவை, முழுமையான அறவுரை ஆகிய அனைத்தும், சேர்ந்து, அவரை எக்காலத்திலும் தொழத்தக்கவராய் ஆக்கியுள்ளன; தமிழ் மக்களின் மறைநூலாக அவரது நூல் மதிக்கப்படுகிறது.” என்று எஸ். வையாபுரிப் பிள்ளை குறளுக்கு ஒரு தெளிவான திறனுரை தந்துள்ளார்.
வள்ளுவர் தாம் கூற விரும்பும் பொருளை நன்கு உணர்த்துவதற்குப் பல்வேறு உத்திகளையும் மொழி நடைகளையும் பயன்படுத்துகின்றார். முன்னிலைப் படுத்தி விளித்தலையும், ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினா-விடைப் பாணியில் உரையாடல்களை அமைத்தலை ஒருவகைக் கலைத்திறனாகக் கையாண்டுள்ளார். உபநிடதங்கள், புத்தரின் போதனைகள், பிளேட்டோவின் உரையாடல்கள் போன்ற மெய்யியல் நூல்களும் இந்த உத்தி பின்பற்றப்படுவதை அறிஞர்கள் சுட்டிக்காட்டுவர்.
நூல் மிகச்சிறந்த அமைப்புடையது. மிக அரிய செய்திகளை வரையறைப்படுத்திச் சுருக்கமாக கூறுகிறது. சொல் வளனும், பொருட்சிறப்பும், நுண்ணோக்கும், அணி நலனும், ஓசையொழுக்கும், ஆழ்கருத்தும் ஒருங்கு நிறைந்தது குறள். சொல், தொடர், குறிப்புப்பொருள் எனப்பலவற்றில் நுட்பமான உத்திகளைப் பயன்படுத்திச் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது குறள். நூல் முழுவதும் உயர்வு நவிற்சியையோ, இல்பொருளையோ எடுத்துக் கூறாது பெரும்பாலும் தன்மை நவிற்சியாக இயற்கையோடு பட்டு, மக்கள் மனத்தில் தைக்குமாறு அழகுற எளிய நடையில் உவமைகளை ஆண்டுள்ள திறம் வியக்கவைக்கும். இப்பனுவலில் தமிழின் இனிமை உண்டு; தத்துவத்தின் தெளிவுண்டு; வாழ்க்கையின் விளக்கமுண்டு; உணர்வும் உண்மையும் ஒன்றி இருக்கும்; அறத்தோடு பொருளும் பொருளோடு இன்பமும், இன்பத்தோடு அறமும் பொருந்திக் கிடக்கும்; இனிமையும் எளிமையும் இணந்திருக்கும்; ஆழமும் அகலமும் அமைந்திருக்கும்.
சமயத்திலும் வாழ்க்கையிலும் மேல்நாட்டார் பெரும்பாலும் உலகையும் வாழ்க்கையயும் ஏற்றுக்கொள்ளுதல் (World and Life Affirmation) என்ற கோட்பாட்டையே பின்பற்றுகின்றனர் எனவும் இந்தியரோ பெரும்பாலும் உலகையும் வாழ்க்கையையும் மறுத்தல்(World and Life Negation) என்ற கோட்பாட்டைத் தழுவுகின்றனர் எனவும் மெய்யியல் அறிஞர் ஆல்பர்ட்டு சுவெட்சர் கருதினார். பிறப்புக்களினின்று விடுதலையடைதல் வேண்டும் என இந்தியச் சமயங்கள் கற்பிப்பதால் வாழ்க்கையும் உலகும் துன்பமானவை அல்லது குறையுள்ளவை என அவற்றை மறுத்து விடுதலையைத் தேடுதல் இந்திய மக்களின் நோக்கமாகிறது. உலகையும் வாழ்க்கையையும் மறுத்தல் என்னும் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளும் மக்கள் தீமை செய்யாமையையே சிறந்த அறமாகக் கொள்வார் அன்றி நன்மையைச் செய்தலாகிய அறங்களில் அதிகம் கருத்தைச் செலுத்தார். தீமை செய்யாமை ஒருவரை உலகினின்றும் காக்கிறது; நன்மை செய்தாலோ ஒருவரை உலக வாழ்க்கையில் ஈடுபடும்படி செய்யும். ஆகவே உலகையும் வாழ்க்கையையும் மறுக்க விழைவோர் தீமை செய்யாது தம்மைக் காத்துக் கொள்வாரேயன்றி நன்மை செய்தல், பிறர்க்கு உதவி செய்தல், பிறர் துன்பம் நீக்குதல் ஆகிய அறச் செயல்களில் போதிய அளவு ஈடுபடார் என சுவைட்சர் கருதினார். குறளை நன்கு ஆய்ந்துணர்ந்த சுவைட்சர், பிற இந்திய மொழி நூல்கள் வாழ்வின் நிலையாமையை வலியுறுத்தக் குறளோ வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உடன்பாட்டு நிலையை வலியுறுத்தும் நூல் என்று கூறினார். உலகமும், உயிர்களும், மானிட வாழ்வும் கனவுமல்ல, பொய்யுமல்ல, மாயையுமல்ல. மாறாக அவை மனிதன் உணரக்கூடிய உண்மையே என்னும் உடன்பாட்டுக் கொள்கையை ஏற்றுக் கொண்டு, மனிதனைச் செயற்பாட்டு வாழ்வில் நின்று ஒழுகச் செய்வதற்கு ஊக்கமளித்திடும் நெறியாகவும் குறளறம் மாட்சிமை கொண்டு விளங்குகிறது.
பொருளும் காமமும் பெரிதாகக் கொண்ட நூலை வெறும் அறநூலென்பது தவறு. குறள் ஒரு அறநூல் மட்டுமல்லாது கவிச்சுவையோடு கூடிய வாழ்வியல் நூலுமாகும். மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத பல கருத்துக்களைக் கொண்டு, சமயம், காலம், இடம், இனம் என்ற வேறு பாட்டுக்கு அப்பாற்பட்ட அடிப்படையான உண்மைகளச் சொல்லுகிறது. அற நூல் என்பதற்கும் வாழ்வு நூல் என்பதற்கும் நிரம்ப வேறுபாடு உண்டு. அற நூல்கள் பல சமயச் சார்பும் அறநெறியை விதிகளாக வகுத்துக் கூறும் போக்கும் மிக்கன. குறள் அறக்கருத்துகளைக் கூறும் வகையில் மட்டும் அற நூலுடன் ஒற்றுமை உடையது என்பதைத் தவிர தனக்கெனப் பல தனித் தன்மைகளை உடையது. பொருட்டொகையாலும், முறைவகையாலும் குறளுக்கு ஈடான நூல் வேறொன்று இல்லை.
இன்றைய காலகட்டத்தின் குடியரசுப் பண்புகளுடன் ஒத்துப்போகின்றவையாக குறட்பாக்கள் இருக்கின்றதையும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
மனித வாழ்க்கையினை உயர்ந்த வழியில் அமைத்துக் கொள்ளுவதற்கு அடிகோலும் நூல் இது. பொதுவாக உலகில் வழங்கிவரும் எல்லா அற நூல்களும் இறை வழிபாட்டினையும் தத்துவார்த்தமான சிந்தனையுடன் போதனை நுலாக மட்டுமே உள்ளன. ஆனால் திருக்குறள் மனிதன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய நெறிகள் அனத்தையும் கூறும் நடைமுறை நூலாகும்.
திருவள்ளுவர் அறநெறியில் ஆழ்ந்த பற்று உடையவர்; அரசியலிலும் மற்ற உலகியலிலும் தெளிந்த அறிவு உடையவர்; கலைத்துறையில் அழகுணர்ச்சியும் கற்பனை வளமும் நிரம்பியவர். -மு வரதராசன்
குறள் படைத்த வள்ளுவர் தம் நூற்பெருமையில் பெருநோக்குடையராய் இருந்தவர்; காலங்காலத்திற்கும் பின்பற்றக்கூடிய நன்னூல் படைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நூல் யாத்தார் என்பதைக் குறள் படித்தவர் உணர்வர். சமயக் கருத்துக்களை முற்றிலும் புறந்தள்ளியதால் அவை அவரைப் பாதிக்கவில்லை. எந்தக் கட்டுக்குள்ளும் சிக்காமல் செம்பொருள் கண்டு அடிப்படையான உண்மைகளை உணர்த்தினார். அவர் தாம் யார் என்பதையும் அடையாளம் காட்டவில்லை.
திருவள்ளுவர்
தமிழுக்குப் பெருமை சேர்த்த திருக்குறளை படைத்த ஆசிரியர் வள்ளுவர். தமிழனின் பண்புகளைத் திரட்டியும், அற்றை நாளைய பண்பாட்டில் காணப்பட்ட நல்வாழ்வுக்குப் பொருந்தாதவைகளைக் களைந்தெறியும் நோக்கத்திலும், புதிதாக வெளியில் இருந்து வந்த கோட்பாடுகளிலுள்ள தாழ்வுகளைக் கண்டித்தும், உலகத்து மக்கள் அனைவருக்கும் ஏற்ற வாழ்வியல் முறைகளை குறள் மூலம் நல்கியவர். வள்ளுவர் அறக்கொள்கைகளில் அசையாத நம்பிக்கை உடையவராதலால், உயிர் வாழ்வைப் பொருட்படுத்தாமல் மிக உயர்வான குறிக்கோளோடு அறவாழ்வு வாழவேண்டும் என்றார். தீயன செய்வதற்கு ஒரு சிறுதளவும் இடம் கொடார். பொருளீட்டுவதிலும் காமவாழ்விலும் அறம் பேண விழைவார். உலகத்தோடு ஒட்டிய வழக்குகளை பின்பற்றச் சொல்லுவார். காலத்தோடும் ஊரோடும் ஒட்டிச்சென்று நல்லனவென்று கருதப்பட்டதைக் கண்டுணர்ந்து அவற்றை அறவுரைகளாகத் தந்த நூல்தான் குறள். ஆயினும் மாற்றுச் சிந்தனையாளர்; எனவே மரபுகளை மீறியும் அறிவுரை பகன்றுள்ளார். கூர்ந்து கவனிக்கிறபோது பாடல்களிடையே நிற்கும் மௌனங்களும், ஆங்காங்கே சீற்றத்துடன் வெடிக்கும் சொற்களும் வள்ளுவரின் கலக மனநிலையையும் வெளிக்காட்டும்.
பன்முகம் கொண்டவர். பரந்துபட்ட பல்வேறு துறைகளுக்குரிய விழுமிய கருத்துக்களை எடுத்துரைத்த புலவர் கோமகன் அவர்; அறத்துப்பாலில் ஒரு சான்றோராய் தோற்றமளித்து அருள்மொழி பகர்கிறார்; பொருட்பாலில் அரசியல் அறிஞராகிறார்; காமத்துப்பாலில் கற்பனை நயங்களுடன் கூடிய ஒரு நாடகக் கவிஞனாக மாறி நம்மை இன்பத்தில் திளைக்க வைக்கிறார்.
இவர் தானே முழுவதுமாக உணர்ந்து வெண்பாக் குறளால் எழுதி உருவான நூல் அறநெறி கூறுவதோடு இலக்கியச் சுவையில் நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய் உள்ளது; இவர் பாட்டின் வளம் உரைக்கின் வாய்மடுக்கும்; எல்லாப் பொருளும் குறட்பாவில் உள; இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லை; அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்தது குறள்; இந்நூல் சிந்தைக்கு இனியது செவிக்கு இனியது வாய்க்கு இனியது. இவ்வாறாக பழம் புலவர்கள் இவரது படைப்பைப் போற்றிக் கொண்டாடினார்கள்.
பிற மொழித் தாக்குதலால் தமிழ் அழிந்து போவதைத் தொல்காப்பியர் தடுத்தார் என்றால், திருவள்ளுவர், வெளியில் இருந்து வந்தவர்களது செல்வாக்கால் தமிழ்ப்பண்பாடு அழிந்து போவதை நிறுத்தி அரண் அமைத்துக் காத்தார்.
வள்ளுவர் காலம்
சங்க இலக்கியங்களிலே குறளைப் பற்றிய செய்தி இல்லை; ஆனால் சங்க இலக்கியக் கருத்துக்கள் பல குறளில் காணப்படுகின்றன. சங்க நூல்களுக்குப் பிற்பட்டதே குறள் என்று குறிப்பதாக இது அமைகிறது என்று ஆய்வாளர்கள் கூறுவர். சங்க நூல்கள் எல்லாம் ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல்களிலே ஆக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் குறள் வெண்பாவினால் ஆகியது. இந்த யாப்பு முறையும் குறள் சங்க காலத்தைச் (கி மு 500-கி பி 200) சேர்ந்தது அல்ல என்பதற்கு ஒரு சான்றாக கருதப்படுகிறது. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க நூல்களிலே கள், புலால் உணவு, விலைமாதர் உறவு ஆகியன விலக்க வேண்டியவை என்று கூறப்படவில்லை. குறளிலே இவை கண்டிக்கப்படுகின்றன; விலக்கப்பட வேண்டியவை என்று வலியுறுத்தப்ப்டுகின்றன. இவற்றையெல்லாம் நோக்கி குறள் சங்க காலத்திற்குப் பிந்தியது என்று ஊகித்துச் சொல்லப்படுகிறது. அடுத்து, சங்க காலம் முடிவுக்கு வந்ததை சங்கம் மருவிய காலம் (கி பி 100-கி பி 500) என்று சொல்லுகிறோம். வள்ளுவர் காலத்தை வையபுரிப் பிள்ளை கி பி 5ஆம் நூற்றாண்டுக்குக் கொண்டு செல்கின்றார். ஆனால் தெ.பொ.மீ போன்றோர்க்கு அதில் உடன்பாடு இல்லை; அக்கருத்தை மறுத்து சங்க காலம் முடிகின்ற கி பி 3-ஆம் நூற்றாண்டுக்குள் வள்ளுவர் தோன்றியிருப்பார் என்று நிறுவியிருக்கின்றனர். ஆகவே வள்ளுவர் காலம் கி பி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி பி ஐந்தாம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலம் என்று கொள்ளலாம். வள்ளுவர் சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்தவர் என்பது பெரும்பான்மையான அறிஞர்களின் முடிவு.
வள்ளுவர் குலம்,தொழில்,தோன்றிய/வளர்ந்த இடம்
வள்ளுவர் தோன்றிய குலம் பற்றியும் செய்த தொழில் பற்றியும் பலவேறு வகையான மாறுபட்ட செய்திகளுடன் பழம்பாடல்களும் புனை கதைகளும் உள்ளன. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன மாபெரும் சிந்தனையாளரின் குலம் பற்றி ஆராய்வது பொருளற்றதாகும்; அவர் செய்த தொழிலும் அவர்க்குச் சிறப்போ இழிவோ தரப்போவதில்லை. வள்ளுவர் தோன்றிய, வாழ்ந்த இடங்களைப் பற்றியும் நிறைய ஆராய்ச்சிகளும் ஊகங்களும் காணக்கிடக்கின்றன. தோன்றிய ஊரினாலும் அவர் புகழ் கூடவோ குறையவோ போவதில்லை. அவர் தமிழர்; அவர் தோன்றிய இடம் தமிழ்நாடு; அவர் சிந்தித்தது தமிழில்; நூல் யாத்தது தமிழில். இவை நமக்குப் பெருமை தருவன.
சங்க நூல்களின் தாக்கம்
சில அடிப்படையான மேம்பாடுடைய வாழ்வியல் கருத்துக்கள் தமிழர்களிடையே வேரூன்றி வலுப்பெற்றிருந்தன என்பது சங்க நூல்களிலிருந்து பெறப்படும். இக்கருத்துக்களின் சாரத்தையெல்லாம் உட்கொண்டு குறள் புதிய இன்னும் சீரிய செம்மையான வழியில் படைக்கப்பட்டது. சங்க நூல்களின் செல்வாக்கு எவ்வளவு ஆழமாகக் குறளில் பதிந்துள்ளது என்பதற்குப் பல சான்றுகள் உள. வள்ளுவர் பின்பற்றிய ஆசிரியர் தொல்காப்பியர் ஆவார். தொல்காப்பிய இலக்கண அமைதியைக் கொண்டே குறள் ஆக்கப்பட்டது. கணியன் பூங்குன்றனின் புகழ்பெற்ற சங்கப் பாடல் வள்ளுவரைப் பாதித்த மெய்யியல் கோட்பாடு: யாதும் ஊரே யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன; சாதலும் புதுவ(து)அன்றே வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னா(து) என்றலும் இலமே மின்னொடு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொரு(து) இரங்கும் மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம்; ஆகலின், மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.(புறநானூறு:192) (பொருள்: சொந்த ஊர் என்று ஒன்று இல்லை. எல்லாம் நம் ஊரே. உறவினர் என்று சிலர் மட்டும் இல்லை. மக்கள் எல்லாரும் உறவினர்களே. தீமையும் நன்மையும் யாரோ ந்மக்குச் செய்வனவற்றால் வருவன அல்ல. துன்புறுதலும் ஆறுதல் பெறுதலும் அவ்வாறே பிறரால் வருவன அல்ல. சாதல் என்பதும் புதுமையானது அல்ல. வாழ்தல் இன்பமானது என்று யாம் மகிழ்ந்தது இல்லை. வெறுப்பால் வாழ்க்கை துன்பமானது என்று ஒதுங்கியதும் இல்லை. பெரிய ஆற்றில் நீர் ஓடும் வழியில் ஓடும் தெப்பம் போல், உயிர்வாழ்க்கை இயற்கை முறை வழியே நடக்கும் என்பதை தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம். ஆகையால் உலகில் பிறந்து வாழ்வோரில் சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை. பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.) இந்தச் சிந்தனை குறளில் பல இடங்களில் எதிரொலிப்பதைக் காணலாம். யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு. (கல்வி 397) என்ற குறட்பாவில் முதலடியில் மேலே சொல்லப்பட்ட புறநானூற்றுச் செய்யுள் வரியை நேரடியாகப் பயன் படுத்தியுள்ளார். மற்ற பிற சங்கப்பாக்களின் கருத்திற்கு ஒப்பான குறள்களில் சில: பகுத்தூண் தொகுத்த ஆண்மைப் பிறர்க்கென வாழ்திநீ ஆகன்மாறே [பதிற்றுப்பத்து] என்பது பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நுலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (கொல்லாமை 322) என்னும் குறளை ஒக்கும். பேதமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின் [பழைமை 805] என்பது பேதமையாற் பெருந்தகை கெழுமி நோதக செய்ததென்றுடையேன் கொல்லோ [குறுந்தொகை 230] என்னும் சங்கச் செய்யுளை நினைவுபடுத்தும். ஈதல் இரந்தார்க்கு ஒன்று ஆற்றாது வாழ்தலின் சாதலும் கூடுமாம் மற்று [கலித்தொகை 61] என்பது சாதலின் இன்னாதது இல்லை இனிது அதுவும் ஈதல் இயையா கடை (ஈகை 230.) என்ற குறளின் பொருள்படுகிறது.
காமத்துப்பாலில் சங்கப் பாக்களின் தாக்குறவு இன்னும் மிகையாக உள்ளது.
சமயம் நீங்கிய வள்ளுவர்
நமது சிந்தனை, செயல்பாடு, நடைமுறை நிலைகளில் சமயமும், சமயச் செயல்பாடுகளும் மரபுகளும் பிரிக்க முடியாதபடி கலந்துவிட்டபடியால், இவற்றினின்று உண்மையான மெய்யியலை அறிய நாம் தவறிவிடுகிறோம். குறளையும் அந்தக் கண்ணோட்டத்திலேயே, சமயமின்றி அது நிலைக்காது என்ற நிலையிலேயே சிலர் பார்க்கின்றனர். குறள் எந்தச் சமயத்தையும் வழிமொழிகிறதா? பழம் புலவர் கல்லாடர் தெளிவுபடுத்துகிறார்: ஒன்றே பொருள்எனின் வேறுஎன்ப; வேறுஎனின் அன்றுஎன்ப; ஆறு சமயத்தார் நன்றுஎன எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார் முப்பால் மொழிந்த மொழி.- கல்லாடர் (திருவள்ளுவமாலை) (பொருள்: ஆறுவகை மதத்தாரில் ஒரு மதத்தார், தாம் எழுதிய நூலிலே ஒரு பொருளின் இயல்பை இன்னது என்று ஒரு மதத்தைச் சார்ந்தவர் கூறினால், மற்றொரு மதத்தார் அதனை மறுத்து வேறு ஒரு பொருளைக் காட்டுவர். ஆனால், திருவள்ளுவர் முப்பாலில் சொன்னவற்றை அனைத்து மதத்தினரும் நன்றென்று ஏற்றுக்கொள்ள உடன்படுவர்.) சமயக் கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறிப் பொருளிது வென்ற வள்ளுவன் .... - கல்லாடர் (கல்லாடம்) (பொருள்: சமயங்களை வளர்ப்போர் தத்தம் சமயத்திற்குப் பொருந்துவன கூறுவர். அவ்வாறு கூறாமல் எல்லாச் சமயத்தார்க்கும் பொருந்தும் வழி உலகியல் கூறிய வள்ளுவர் ...) கல்லாடர் கூற்றுப்படி எக்காலத்தினருக்கும் எக்கொள்கையினருக்கும் ஏற்றதொரு பொது நூல் குறள்.
குறள் ஒரு சமய நூல் அன்று; வள்ளுவர் சமய வழி நின்று குறளைப் படைக்கவில்லை; இது சமயச்சார்புடைய சமயப் பொதுமையை நாட்டும் நூலும் அன்று. இங்கே சிந்தைக்கு எட்டாத 'வீடு' இல்லை; கன்மம் இல்லை; கழுவாய் இல்லை. வழிபாட்டு முறைகள், சடங்குகள், விழாக்கள்,சமயம் சார்ந்த நம்பிக்கைகள், கோவில்கள் இல்லை. "செய்யவள், செய்யாள், தாமரையினாள், தாமரைக்கண்ணன் போன்ற பெயர்கள் குறளில் கூறப்பட்டாலும் அவை வழிபடத்தக்கவகையில் வைக்கப்படவில்லை. சொல்லப்போனால், 1103 ஆம் குறளில் 'தன் தலைவியிடம் பெற்ற இன்பத்தைவிட, தாமரைக்கண்ணனின் உலகு இனியதா?' என்று தலைவன் கேட்பதிலிருந்து தாமரைக் கண்ணன் உலகை எந்தத் தளத்தில் வள்ளுவர் வைத்திருக்கிறார் என்பது நன்கு விளங்கும். வானோர், வானுலகம், மறுபிறப்பு பற்றிப் பேசினாலும், 'தேவர் அனையர் கயவர்' என்ற கூற்றை காணும்போது, வள்ளுவரின் நோக்கம், சொல்லும் செய்தி மக்களுக்கு எளிதில் சென்று அடைய வேண்டும் என்பதுதான் என்பது விளங்கும். ஆனால் அவர் தம் சமயத்தவர் என்று சமண, பெளத்த, சைவ, வைணவ போன்ற பல பிரிவினர் உரிமை கொண்டாடி சான்றுகள் பல கூறி வருகிறார்கள். சங்கக் கருத்துக்களை மிகையாகப் பயன்படுத்திக் கொண்டு அன்றிருந்த எந்தச் சமய கோட்பாடுகளுக்கும் சிறுதும் இடம் கொடுக்காமல் குறளை வழங்கினார். வள்ளுவரது சமயக் கோட்பாடு என ஒன்று தனித்து இல்லை. எந்தச் சமயத்தின் கருத்துக்களோடும் வள்ளுவர் கருத்துக்கள் முழுமையாக ஒத்து வரவில்லை. சமயக் கருத்துக்களுக்கு மாறான கருத்துக்கள் குறளில் உண்டு. மேலும் போலித் துறவிகளின் வேடங்கள் முதலியவற்றையும் கடுமையாகத் தாக்கியுள்ளார். குறளில் எந்த ஒரு குறிப்பிட்ட தெய்வத்தைப்பற்றிய குறிப்பும் இல்லை என்பது மிகத் தெளிவு. கடவுள் என்ற சொல் குறளில் எங்கும் இல்லை. ஆனால் குறளில் சங்ககாலச் சொல்லான 'அனைத்தையும் கடந்து நிற்கும் ஒன்று' என்று பொருள்படும் 'கடவுள்' உண்டு; "வாழ்க" என வாழ்த்தாது கடவுள் ஒருவர் உளர், அவரை நினைந்து வணங்க வேண்டும் என்ற கருத்துப்படக் கடவுளின் உண்மை கூறியுள்ளார். இவை சமயங்கள் உதவியின்றி கடவுளை அடைய முடியும் என்று வள்ளுவர் கருதினார் என்பதையே நமக்குக் காட்டுவன.
சான்றோர் வள்ளுவர்
சமணர்கள் தங்கள் நூல்களில் வைதிக சமய சடங்குகளை இழித்துப் பழித்து எழுதினர். அதுபோல் வைதிக நூல்களும் சமணர்களத் தாக்கி எழுதின. ஆனால் சான்றோராகிய வள்ளுவர், தமிழர் விரும்பாத ஆரிய வழக்குகளைப் பழிக்கமாட்டார்; புகழவுமில்லை; மக்கள் மனதில் பதிந்த ஆரிய கதை மாந்தரை குறளில் ஆங்காங்கே குறிப்பிட்டவர் ‘ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்துண்ணாமை நன்று’ என்று வேள்வியை விலக்குக என்ற பொருளில் இடித்துரைக்கவும் தயங்கவில்லை. வள்ளுவர் அறநெறியை விதிகளாக வகுத்துக் கூறவில்லை. கடவுளின் ஆணையாகக் குறளைச் சொல்லவில்லை. குறளின் அறச் செய்திகள் மிக மென்மையான ஒலியிலே வலியுறுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட சமயம், சடங்கு முதலியவற்றை வற்புறுத்தாதது போலவே தாம் போற்றிய கொள்கைகளையும் பிடிவாதமாக வற்புறுத்தித் திணிக்கவில்லை. அடிப்படை உண்மைகளை மட்டும் எடுத்துரைத்து மற்றவற்றை சிந்தனை செய்து உணரும் வகையில் தூண்டுகிறார். எந்தக் கருத்தையும் எத்தன்மைதாயினும் யார் சொன்னாலும் கண்மூடி ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பது அவர் தரும் அறிவுரை.
மாற்றுச் சிந்தனையாளர் வள்ளுவர்
மக்கள் வாழ்வில் காணப்படும் பொருந்தாத மூட நம்பிக்கைக் கொள்கைகளை எதிர்த்து போர் முழக்கம் செய்தவர் வள்ளுவர். சமுதாய நிலைப்பேற்றிற்கு என்ற பெயரில், வர்ணாசிரமம் என்ற மனித குலத்துக்கு எதிரான, மனித வரலாற்றின் மிகப் பெரிய மோசடி, ஆரிய செல்வாக்கால் இங்கு திணிக்கப்பட்டது. இதன்படி பிறப்பால் உயர்வும் இழிவான தாழ்வும் மக்களுக்கு என்றும் மாறாது என்று சொல்லி நால்வேறு வகையில் வாழ்க்கையுரிமை வகுத்துக் கொடுத்து சாதிக்கொரு நீதி விதிக்கப்பட்ட்து. கல்வி, புலமைச் சிந்தனை, விடுதலை வாழ்வு என்பன சாதியின் பெயரால் பெரும்பாலோர்க்கு விரும்பினும் குற்றமாகும் என்று சொல்லப்பட்டது. அதை மறுத்து பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் (பெருமை 972) (பொருள்: எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை. ஆயினும் தான்செய் தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது. எனவே, இது பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும் கூறிற்று.) என்று முழங்கினார் வள்ளுவர். ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்றது வர்ணாசிரம தர்மம் என்று சொல்லப்படுவதற்கு, நேர் எதிர்க் கருத்தாக அமைந்த முதல் தமிழ் இலக்கிய வரியாகும். பிறப்பாலுரிமை பேசியது மட்டுமல்ல ஒருவர்க்கு பெருமையும் சிறுமையும் எவ்விதம் ஏற்படுகிறது என்பதற்கு பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் (தெரிந்துதெளிதல் 505) (பொருள்: மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரை கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.) என்ற வரையறையையும் சொன்னார். கல்வி, மனைமாட்சி, தவம், துறவு என்பன எல்லா மாந்தர்க்கும் ஏற்றது என்பது குறளறம்; ஒழுக்கத்தால் உயர்ந்தாரே நல்ல குடியில் பிறந்தோர் ஆவார் என்று கூறினார்; கல்வி அனைவருக்கும் பொது என்றார்; உயிர்ப்பலி கொடுத்து வேள்வி செய்வதைக் கண்டித்தார்; “அந்தணர் யார்” என்று விளக்கம் கொடுத்து போலி அந்தணர்களை அடையாளம் காட்டி அவர்களைப் புறக்கணிக்க வழிகோலினார். இவையெல்லாம் மக்களைப் பிரித்தாளும் வைதிக சமயம் வலுவாய் இருந்த காலத்தில் விழிப்புணர்ச்சி ஏற்படச் செய்த வீர முழக்கங்களாகும்.
'சாதலைவிட கொடியது இல்லை, ஆனால் கொடைக்கு முடியாத நிலைவந்தால் அதுவும் இனிதே’ என்ற குறள் உண்மையில் மிகக் கடுமையானது. இரப்பவர்களுக்கும் அறவோருக்கும் கொடுப்பதே இல்லறத்தார் கடமை என்று சொல்லி அப்படிக் கொடுக்க முடியாதபோது சாவதே மேல் என்று அழுத்தமாகக் கூற வரும் குறள் அந்நிலையில் மரணமும் இனியதாகிவிடும் என்றே கூறி அமைகிறது. கொடுத்தலால் வீடு அடைதல் போன்றே பெறுதலாலும் வீடு அடையலாம் என்ற கொள்கை பரப்ப்பட்டு வந்தது; அந்தணர் கடமைகளாக வேட்டல் வேட்பித்தல், கற்றல், கற்பித்தல், இரத்தல், புரத்தல் ஆகியன சொல்லப்பட்டன; ஆனால் வள்ளுவர் நல்லாறு எனினும் கொளல் தீது; மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று (ஈகை 222) என்று சொன்னது எத்தகைய புரட்சிக் கொள்கை!
மகளிரின் உயர்வுக்காகப் போராட்டம் தொடங்கியவரும் வள்ளுவரே. பெண்களின் சமநிலைக்காக அவர் கூறியுள்ள கருத்துக்கள் இன்றும் என்றும் பொன்போலப் போற்றத்தக்கன. மனைவியை வாழ்க்கைத் துணை என முதல் முதலாக அழைத்தவரும் அவரே. கணவனும் மனைவியும் நண்பர் போன்று வாழ்தல் வேண்டும் என்று கட்டுரைத்தவரும் அவரே. ஆண்மகனுடைய ஒழுக்கத்திற்குப் பெண்மகளை எடுத்துக்காட்டாகக் கூறியவரும் இப்பெரியாரே - ஒருமை மகளிரே போல் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு(பெருமை 974) என்ற குறள் ஆண்கற்பை வலியுறுத்தும். (பொருள்: ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப் போல், பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.) பரத்தையர் பிரிவைக் கண்டித்த முதல் புரட்சியாளரான வள்ளுவர் ஊன் உண்ணுதலை எதிர்த்தார்; கள் உண்ணுதலைக் கடிந்தார்; சூதாடுதலை இகழ்ந்தார்.
வறியவரின் சார்பாக வள்ளுவரின் அறச்சீற்றமாக வரும் அனல் கக்கும் வரிகளை நோக்குங்கள்: இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான் (இரவச்சம் 1062) (பொருள்: பிச்சை எடுத்துதான் உயிர் வாழ வேண்டும் என்று படைத்திருந்தால், இந்த உலகத்தைப் படைத்தவனும் இரப்பவர்போல் அலைந்து கெடுவானாக!) வள்ளுவர் போன்ற தூய நேரிய அருளாளர்களால் மட்டுமே துயர் நீங்க வழியின்றி வாடும் உயிர்களுக்காக, மனதைக் கலங்கடிக்கும் இத்தகைய சொற்களால் கூறமுடியும்.
கவிஞர் வள்ளுவர்
வள்ளுவர் தேற்றம் மிகு கவிதை நலமும் மொழி மேலாண்மையும் கொண்டவர். கட்டுக்கோப்பான குறள் வடிவம், சொற் சிக்கனம், உவமை ஆளுமை, சின்னஞ்சிறு பாக்களில் செம்மையாக வடித்தெடுக்கும் யாப்பு வல்லமை, காலத்தை வென்று நிற்கும் உண்மைகளை இலக்கியமாக வடித்தது இன்னபிற அவரை சிறந்த கவிஞராக அடையாளம் காட்டுவன. சிறந்த சொற்தேர்வு, செம்மையான தொடர்கள், அழகு மிகுந்த அருமையான வாக்கியச் சேர்க்கைகள் இவற்றால் கவிதைகளை ஆக்கி வெற்றி கண்டவர் வள்ளுவர். கற்பனை கலவாமல் தாம் உணர்ந்தவற்றை உணர்ந்தவாறே எடுத்துரைத்துள்ள கருத்துகள் கொண்ட சில குறட்பாக்களில் வள்ளுவரின் உணர்ச்சிகளை நாம் நேரடியாக உணரமுடியும். வள்ளுவரின் உள்ளம் இவற்றில் மிகவும் ஈடுபட்டிருந்தமையால், அவற்றை உணர்ச்சியாக எடுத்துரைக்க அவரால் முடிந்தது.
செய்யுள் யாத்த முறையில் சங்க நூல்களிலிருந்து வேறுபடுகின்றார். மொழி இயல்புகளில் புதுமைப் போக்கையும் மொழியமைப்பில் புதுமைப் பண்புகளையும் காணமுடிகிறது. வழக்கிறந்த சொற்களோ இலக்கண முடிவுகளோ மரபுகளோ திருக்குறளில் இடம்பெறவில்ல; மாறாக மக்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திய பேச்சுமொழியின் இயல்புகள் பல திருக்குறளில் இடம்பெற்றிருக்கின்றன என்பார் க த திருநாவுக்கரசு. மேலும் இத்தமிழறிஞர் குறளில் தோன்றும் புதிய பண்புகள் பற்றி ஆய்ந்து இவ்வாறு கூறுகிறார்: 'இப்பண்புகள் சங்க நூல்களான அகத்திலும் புறத்திலும் காணப்படவில்லை. குறுந்தொகையிலும் நற்றிணையிலும் இடம் பெறவில்லை. கலித்தொகையிலும் பரிபாடலிலும் அவை அங்கொன்றும் இங்கொன்றுமாக நுழைந்துள்ளன. இவை இரண்டும் இசைப்பாடல்களால் இயற்றப்பட்டவை. இவ்விசைப்பாடல்களைச் செந்துறை மார்க்கப் பாடல்கள் என்பர். இவை செய்யுள் வழக்கினை மட்டும் பின்பற்றாமல் இசை வழக்கினையும் பின்பற்றுவதால் இப்பாடல்களை இயற்றிய புலவர்கள் எல்லாரும் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் பேச்சு வழக்கினயும் பின்பற்றி இருக்கலாம். இதைப்போன்றே உலகிற்கு அறத்தினை எடுத்துரைக்க முன்வந்த திருவள்ளுவர், தம்நூலை, எல்லோரும் ஓதியுணர்ந்து பயன்பெறவேண்டும் என்ற கருத்துடன் செய்யுள் வழக்கினை மட்டும் பின்பற்றாமல் அன்றைய மக்களின் பேச்சு வழக்கினையும் தழுவியே தம்முடைய 'முப்பாலை' இயற்றினார் எனக் கொள்ளுவது சாலவும் பொருந்தும்.'
ஒரு பொருளின் இலக்கணத்தைக் கூறுதலும், அதன் இன்றியமையாமையை விளக்குதலும் அதனால் பெறப்படும் பயனை அறிவுறுத்தலும், அதனை நாம் மேற்கொள்ளுதற்குரிய வழிமுறைகளை உரைத்தலும், நம் கண் முன்னே காணப்படும் பொருள்களின் வாயிலாக ஒப்பு நோக்கி மொழிதலும் வள்ளுவர் உத்திகள். மக்கள் விலக்க வேண்டியவற்றை வெஃகாமை. கள்ளாமை என்று எதிர்மறை முகத்தால் கூறுவார். ஒரு கருத்தை உடன்பாட்டு முகத்தாலும் மறைமுகத்தாலும் தெளிவுபடுத்துவார். ஒரு நீதிக்கு மற்றொரு நீதியை உவமையாக வைத்து இரண்டையும் வற்புறுத்துவார். நயம் தோன்றவும் நகைச்சுவையாகவும் அறவழியைக் கூறும் இடங்கள் பல. செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு (விருந்தோம்பல் 86) என்று ஒருவன் விருந்தோம்பி வாழ்வானாயின் வானுலகில் அவனுக்கு விருந்து காத்திருக்கிறது என்று சொல்லுவார். நன்றறி வாரின் கயவர் திருவுடையார் நெஞ்சத்து அவலம் இலர் (கயமை 1072) கயவர் நல்லவரை விடவும் பேறு பெற்றவர் என்று கூறும்போது இது ஏன் என்று குழம்புகிறோம். அடுத்து அவர் நெஞ்சில் எதைப்பற்றியும் கவலை கொள்ளாதவர் அதனால் என்று முடிக்கும்போதுதான் வள்ளுவருடைய கருத்து புலப்படும். தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவன செய்துஒழுக லான் (கயமை 1073) கயவர் தேவரைப் போன்றவர் என்று சொல்லும்போது தேவரை நிந்திக்கிறாரா அல்லது கயவரை பாராட்டுகிறாரா என்று புரிவதில்லை. ‘அவரும் தாம் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால்’ என்று விளக்கியபின்தான் அவரது கவித்திறன் தெரிகிறது. இது போன்ற எண்ணற்ற நயங்கள் நூல் முழுவதும் பரவிக் கிடக்கின்றன.
காமத்துப் பால் கற்பனைவளமும் இலக்கியச்சுவையும் சேர்ந்து அமைக்கப்பட்ட காதல் நாடகம். ஆண் பெண் உறவில் அக வாழ்வின் பதிவாக விளங்கும் சுவையான சொல்லோவியங்களாகவே புலவி, புலவி நுணுக்கம், ஊடலுவகை என்னும் காமத்துப் பாலின் இறுதி மூன்று அதிகாரங்களும் அமைந்துள்ளன. இலக்கியச்சுவை மிகுந்த இந்த இன்பப் பகுதியை படித்து முடிக்கும்போது 'வள்ளுவர் முற்றிலுமான நாடக இலக்கியங்களை ஏன் படைக்கவில்லை? அவற்றைப் படிக்கும் பேறு பெற்றோம் இல்லையே' என்ற எண்ணங்கள் இயற்கையாகவே எழுகின்றன.
நுண்ணோக்கம்
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற (அறன்வலியுறுத்தல் 34) (பொருள்: ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும்; அறம் அவ்வளவே; மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.) இவ்வாறு அறத்துக்கு எளிய ஆழமான இலக்கணம் வகுத்த பெருமை வள்ளுவர் ஒருவருக்கே உண்டு. இது உலகம் அனைத்தும் விரும்பி ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்தாகும்.
குறளின் கருப்பொருளாக விளங்கும் பாடல்களில் மிகச்சிறப்பானது: வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் (இல்வாழ்க்கை 50) (பொருள்: உலகத்தில் வாழவேண்டிய முறையில் இல்வாழ்க்கை நடத்தி வாழ்பவன், வானில் உள்ள தேவர்களோடு வைத்துப் போற்றத்தக்க பெருமையுடையவன்.) என்னும் குறளே. "பிற சமயவாதிகள் துறவறம் தவங்கட்குத் தரும் சிறப்பையெல்லாம் வள்ளுவர் இல்லறத்திற்குத் தரும் நுட்பம் காண்க. வாழ்வாங்கு வாழ்பவனைத் "தெய்வம்" என்றே கூறுவது, அவர் கருத்தின் மணிமுடியாகத் திகழ்கிறது. பிறரெல்லாம் துறவியர் முன் மக்களை மண்டியிட வைத்துள்ளனர். அதற்கு நேர் எதிரான கருத்து இது." என்று இக்குறளுக்குத் தமிழண்ணல் நுண்ணுரை வழங்கியுள்ளார். 'வாழ்வாங்கு வாழும் முறை' என்பது என்ன? திரு வி க விரிவுரை அதை விளக்குகிறது: "ஒருத்தனும் ஒருத்தியும் கற்பன கற்று, கேட்பன கேட்டு,மணம் புரிந்து, இல்வாழ்க்கையில் தலைப்பட்டு, மனமாசற்று, விடுதலை பெறுதற்குப், பிள்ளைப் பேறுண்டாகவும், அன்பு பெருகவும், விருந்து நிகழவும், அடக்கம் அமையவும், ஒழுக்கம் ஊடுருவவும், பொறை பொருந்தவும், ஒப்புரவு உயரவும், ஈகை எழவும், அருள் வளரவும், தவம் ஓங்கவும், வாய்மை சிறக்கவும், அவா அறவும், துறவு நிலைக்கவும், மெய்யுணர்வு மேம்படவும், வாழ்வு நடாத்தல் வேண்டும். இவ்வாறு வாழ்தல் முறைப்படி இல்வாழ்க்கையில் ஒழுகுவதாகும். இதை "வாழ்வாங்கு வாழ்பவன்" என்று சுருங்கச் சொற்றனர் ஆசிரியர்."
இதுதான் மனிதன் மன்பதைக்குச் சொன்ன அறம். அந்த மனிதன் திருக்குறள் தந்த தெய்வத்திருவள்ளுவர்.
ஒவ்வொரு அதிகாரத்தையும் பப்பத்துக் குறட்பாவாகக் கூறுவதனாலும் இந்நூலைக் குறளாற் கூறிய எடுத்துக் கொண்டதானாலும் எழுகின்ற இடர்ப்பாடுகளின்றி, இந்நூலில் வழூஉச் சொற்புணர்த்தல், மயங்கவைத்தல், வெற்றெனத்தொடுத்தல், சென்று தேய்ந்திறுதல், நின்றுபயனின்மை முதலான குற்றங்கள், பலமுறை தேடித் துருவிப் பார்த்தவிடத்தும், ஒன்றும் காணப்படா. -திருமணம் செல்வக் கேசவராயர்-
எக்காலத்திற்கும் ஏற்றவாறு எல்லா மானுடருக்கும் பயன்படும் வகையில் படைக்கப்பட்டது குறள். தெளிந்த சிந்தனையால் பெருநோக்குடன் உருவாக்கப்பட்ட பேரிலக்கியம் இது. பல்வேறு துறைசார்ந்த நூல்களை, பலவேறு மொழி இலக்கியங்களைப் பயின்றவர் வள்ளுவர். தெய்வப்புலவர் என்று அவரை நாம் கொண்டாடுகிறோம். அவர் குறை செய்திருக்கமாட்டார்; செய்யவில்லை என்று குறள் பற்றாளர்கள் கூறுவர். ஆனாலும் அவர் படைத்த குறளில் குற்றம் உண்டு என்று சொல்பவர்களும் உண்டு. குறளை ஆழப்படிப்போர்க்கு சில குறட்பாக்கள் ஐயத்திற்குரியனவாகவும் சிக்கல் உள்ளனவாகவும் தெரியும். இவைகளும் குற்றங்களால் ஏற்பட்டனவா? அவை என்ன வகையான குறைகள்? உண்மையிலேயே அவை குறைகள்தாமா? குறைகள் என்றால் அவற்றிற்கு அமைதி உண்டா?
குறைகள் தோன்றக் காரணங்கள்
குறளின் மூலச்சுவடி நமக்குக் கிடைக்கவில்லை. உரைகளே மூலத்துக்குச் சான்றாக உள்ளன.
குறள் படைக்கப்பெற்று ஓராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர்தான் உரையாசிரியர்கள் தோன்றுகிறார்கள். இடைப்பட்ட காலத்தில் திருக்குறள் பலமுறை ஏடெடுத்து எழுதப்பட்டிருக்க வேண்டும். இதனால் பாடவேறுபாடுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. பாடத்தவறுகள் கருத்துத் திரிபுக்குக் காரணமாயின. உரையாசிரியர்கள் தம் கருத்துக்கு ஏற்ப பாடத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாக மாற்றி தத்தம் கருத்துக்களை உரைகளில் புகுத்தியுள்ளனர்.
பொருள்கோள் முறையாலும், சொற்களுக்குப் பொருள் காண்பதில் ஏற்படும் தவறுகளாலும் குறைகள் காணப்படலாம்.
மாற்றமே கூடாது எனக் கருதி வலிந்து பொருள் கண்டுள்ளமையும் குறையாகத் தெரிவதற்கு காரணமாயிற்று. குறை என்று இல்லாவிட்டாலும் குறளில் பிழை இருக்கலாம் என்பது ஒருசாரார் கருத்து.
குறளின் அமைப்பும் குறைகள் நேரக் காரணமாயிற்று.
காலமாற்றத்தால் கருத்து விளங்கிக் கொள்ள இயலாமை.
குறள் மீது கொண்ட மிகைப்பற்றுக் காரணமாகத் திருக்குறளில் இல்லாதனவும் இருப்பதாகக் கூறப்பட்ட கருத்துக்களும் குறைகளாகக் கொள்ளப்பட்டன.
குறள் அமைப்பு: குறட்பா தேர்வு:
குறட்பாவால் யாக்கப்பட்டதால் குறை ஒன்று குறுக்கிடுகின்றது. அதிகாரத்துக்குட்பட்ட பொருள்களை ஒரு முடிபால் விளக்குவது விளங்கவைத்தலாக இருக்கும். அப்படி முடிபு ஒன்றால் முடித்துக் கூற முடியாதவாறு, பொருள் விரிவதாயின், அதனை ஒரு குறட்பாலில் விளங்கவைப்பது இயலாது. அமைச்சு-தூது-அரண்-நட்பு என்றாற் போல்வனவற்றை விளக்குகின்ற பொழுது, இக்குறை நன்கு விளங்கும்.
அதிகாரம்-பாக்கள் வரையறை:
ஒவ்வொரு அதிகாரமும் பத்துப் பத்து குறளைக் கொண்டதாக வரையறை செய்ததினால் இரண்டு வகையான இடர்ப்பாடு நேர்ந்தது. ஒன்று, ஒரு அதிகாரத்துக்குட்பட்ட பொருள் பத்துக்குறட்குக் குறைவதாயின், கூறியது கூறுதல், மற்றொன்று விரித்தல், மிகைபடக்கூறல் முதலான குற்றங்களுக்கு இடமுண்டாகும். கடவுள் வாழ்த்து அதிகாரத்தில், நீடுவாழ்வார் யார் என்பது பற்றி இரண்டு குறளால் உணர்த்தினார். அவ்விரண்டு குறளையும் ஒன்றாக இணைத்திருக்கலாம். இரண்டாவதாக ஒரு அதிகாரத்துக்குட்பட்ட பொருள் பத்துக்குறளின் மிகுவதாயின், குன்றக்கூறல், மிகைபடக்கூறல் முதலான குற்றங்களுக்கு இடமுண்டாகும். அது மட்டுமின்றி பல அதிகாரங்களில் அவற்றைக் கூற வேண்டி வரும். நட்பு அதிகாரப்பட்ட இடத்தில் கூற வேண்டுவனவெல்லாம் ஓரதிகாரத்தில் அடங்காமையால், அதனைப் பல அதிகாரங்களாக வகுத்துக்கொண்டார்.
இடப்பிறழ்வு: வலியறிதல் என்னும் அதிகாரத்தின் இறுதியில் உரைத்த ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கும் நெறி. (477) ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை போகாறு அகலாக் கடை.(478) அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்.(479) உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும். (480) என்னும் நான்கு பாக்களும் பொருள்செயல்வகையிலோ குடிசெயல்வகையிலோ உரைக்கத்தக்கவை. அவைகளை வலியறிதலில் உரைத்தது இடப்பிறழ்வாக உள்ளது.
மற்றொன்று விரித்தல்:
நட்பு தொடர்பான அதிகாரத் தொகுப்பில் சூது, மருந்து என்பனவற்றை விரித்துரைத்தது மற்றொன்று விரித்தல் என்னும் குற்றமாகும் என்பர் (திருமணம் செல்வக்கேசவராய முதலியார்).
பாடத்தவறுகள்
திருக்குறளை பலகாலங்களில் ஏடு பெயர்த்தெழுதியதால் பாடவேறுபாடுகள் நிகழ்ந்திருக்கின்றன. சிலர் தம் சமயம், கொள்கை ஆகியவற்றிற்கு மாறானவற்றை நீக்கிவிட்டு, தம் கருத்திற்கு ஏற்ப மாற்றினர். பழைய நூல்களைப் பதிப்பித்தவர்கள், கிடைக்காத பகுதிகளுக்கு, தாமே எழுதி அவ்விடத்தை நிரப்பியதாலலும் மூலபாடம் திருத்தம் கண்டது. இவ்வாறான இடைச்செருகல்கள் குறைகள் ஏற்பட ஏதுவாயிற்று.
பொருட்சிறப்பு இல்லை என்று கருதி பாடதிருத்தம் மேற்கொள்ளப்பட்டது; யாப்பு அமைதிக்காவும், எதுகை மோனை நயம் என்ற காரணம் கொண்டும், பல்வேறு பாடத்தவறுகள் நடந்தன.
கருத்து சார்ந்தவை
காலத்தால் சொற்கள் அடைந்த பொருள் வேறுபாடுகளும் சமுதாயத்தின் பழக்க வழக்க மாறுபாடுகளும் குறைகள் உண்டாக வழியாயின. புற நாகரிகச் சார்பும் சமயச் சார்பும் அரசியற் சார்பும் முன்னிற்க, வலிந்து கூறப்பட்ட உரைகள் கருத்துச் சிதைவு ஏற்பட காரணமாயிற்று. மூலத்திற்கும் உரைக்கும் தொடர்பே இல்லாமல் உள்ள உரைகளும் உண்டு. இவை குழப்பத்துக்கு இடமாயின.
குறள் துறவுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை நாம் இன்று தருவதில்லை என்றொரு சிந்தனை உள்ளது. புறத்துறவுக்கு வேண்டுமானல் இக்கருத்து பொருந்தலாம். ஆனால் அகத்துறவை எண்ணிக்கொண்டால் வள்ளுவர் கூறும் கருத்து இன்றும் என்றும் ஒத்துவரும்.
பெண்ணின் பெருமை பற்றிக் குறள் நிறையப் பேசுகிறது. ஆனாலும் அப்பெருமை வழக்கமான ஆண் மேலாண்மைக் கோணத்திலிருந்தே கூறப்படுவதாகவும், ஆணுடன் ஒத்த நிகர்நிலை வள்ளுவரால் பெண்ணுக்கு வழங்கப்படவில்லை என்றும் பெண்ணியக் கொள்கையினர் குற்றம் கற்பிக்கின்றனர். குறளிலிருந்து வாழ்க்கைத்துணை நலம், பிறனில் விழையாமை, பெண்வழிச் சேறல், வரைவின் மகளிர் ஆகிய அதிகாரங்களில் உள்ள குறள்கள் சிலவற்றை நீக்கி விட வேண்டும் என்றும் திருவள்ளுவர் ஒரு ஆணாயில்லாமல் பெண்னாயிருந்திருந்தால் இம்மாதிரிக் கருத்துக்களைக் காட்டியிருப்பாரா என்றும் எழுதினர். ஆனால் இது முற்றிலும் தவறான கருத்து. பெண்ணை இழித்துக் குறளில் எங்கும் கூறப்படவில்லை; ஆணுக்கு சமநிலையாகவே பெண் பேசப்படுகிறாள்; மாறாக ஆணைப் பழித்தும் குறட்கருத்துகள் உண்டு. ஆயினும் தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் (குறள் 55) போன்ற கருத்துக்கள் இன்று மறுஆய்வுக்கு உரியனவாக உள்ளன என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
முரண்பாடுகள்
குறளில் முரண்பாடுகள் உள்ளன என்ற குற்றச்சாட்டுக்கள் ஆங்காங்கே கூறப்படுகின்றன.
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது.(481) எனக்கூறிப் பின்னர் குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும். (1028)என்று கூறியது ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும். (380) எனக்கூறிப் பின்னர் ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர். (620) என்று கூறியது போன்றவை குறளில் முரண்பாடுகள் உள்ளன போலத் தோன்றுகின்றன. ஆனால், குறளின் திண்மையை, உண்மையை, நுண்ணிதின் உணர்ந்தால், உண்மையில் அவை முரணல்ல என்பது தெளிவாகும். வள்ளுவர் சொல்லிய இடம், காலம், சூழல், காரணம் ஆகியவற்றை நோக்கிக் கருத்தை உட்கொண்டால் அவை முரணே அல்ல என்று புரிந்துகொள்ளப்படும்.
இரவு, இரவச்சம் என்ற இரண்டு தலைப்புகள் அமைத்துப் பேசியிருப்பது பெரும்பாலோர்க்கு குழப்பமாகவே அமையலாம். ஆனால் சில மரபுகளை நினைவில் கொண்டு நாம் அவற்றை நோக்கினால் அவை யாவும் முரணல்ல, இரண்டும் தேவையானதே என்று தோன்றும். இரவலர், கொடையாளர் இருவரும் இருப்பது ஒரு நாட்டின் தேவையாகவும் அமையும். வள்ளுவர் உலகியல்படி நடந்தாக வேண்டும் என்ற கொள்கையுடையவராதலால் பெரும்பாலும் அதை ஒட்டியே குறட்கருத்துகள் அமைந்தன.
குறைகள் உள்ளனவா?
குறள் அமைப்பால் ஏற்பட்ட இடர்ப்பாடுகள் இருந்தும், இந்நூலில் குற்றமான சொற்களை அமைத்தல், தெளிவு இல்லாமல் மயங்குமாறு கூறுதல், பொருளற்ற சொற்களை அமைத்தல், விரிவாகத் தொடங்கிப் போகப் போகச் சுருக்கி முடித்தல், சொற்கள் இருந்தும் பொருட்பயன் இல்லாமற் போதல் முதலான குற்றங்கள், பலமுறை தேடிப் பார்த்தவிடத்தும், ஒன்றும் காணப்படவில்லை என்பார் திருமணம் செல்வக்கேசவராயர்.
நூலினை முழுதும் கற்று நூலின் நோக்கத்தைத் தொகுத்துப் பார்த்து நுனித்து அறிவார்க்கு முரண்பாடுகள் போன்று தோன்றுபவை குற்றங்களாகாமை தெளிவாகும்.
கால மாற்றத்தால் சில குறள் கருத்துக்கள் குறைகளாகத் தெரிகின்றன.
குறளில் பகுத்தறிவுக்குப் பொருந்தா கருத்து எதுவும் இல்லை.
திருக்குறள் மிகமிக ஆழமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது; செய்யப்பட்டு வருகிறது. ஆயினும் பொறுக்க முடியாத குறைகளை இதனுள் எவராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. ஆங்காங்கே சிறுசிறு குறை-சிறு பிழைகள் காணப்படலாம். அவை திருவள்ளுவரால் செய்யப்பட்டதாகக் கொள்ளமுடியாது. இப்பனுவலில் குறை இருப்பின் அவை மிகவும் பொதுவானவையே; அவையும் திருக்குறளின் புனிதம் காப்பற்றப்படவேண்டும் என்னும் விருப்பத்தால் எழுப்பப்படுவனவே.
குறளாட்சி, மரபு, சொல்லமைப்பு, பொருட்சிறப்பு, எதுகை மோனை நயம், யாப்பமைதி இன்ன பிற துணயாகக் கொண்டு, பல்வேறு பாடங்களுள் ஆசிரியன் பாடம் இஃதெனத் தேர்ந்து பொருட்டெளிவு பெறுதல் இன்றியமையாதது. திருக்குறளின் உண்மைக் கருத்தையறிந்து ஆசானின் உள்ளத்தை உணர அனைத்துப் பாடங்களையும் ஆய்ந்து தெளிந்த, நூற்பாடங்களைக் கொண்ட ஓர் ஆய்வுப் பதிப்பு திருக்குறட்கு வருதல் வேண்டும். -இரா சாரங்கபாணி
ஒரே குறளுக்குப் பல பேர் பல பொருள்களைச் சொன்னார்கள்; சொல்லி வருகிறார்கள். வள்ளுவர் கருதிய உரை இதுதான் என்று அறுதியிட்டுச் சொல்லுவதற்குச் சான்றாக அவர் கருதிய உரையை நமக்கு விளக்கக்கூடிய அவர் காலத்து உரைப்பிரதிகள் கிடைக்கவில்லை.
குறளும் பாடவேறுபாடுகளும்
வாய்வழி வந்த இலக்கண, இலக்கியங்கள் அல்லது ஏட்டில் கையால் எழுதப்பெற்ற நூல்கள் பிறர் படிப்பதற்குப் பயன்படும் நோக்கத்தில் படியெடுக்கப்பட்டன. இப்படிப் படியெடுக்கும்போது ஏட்டுச் சுவடியில் கண்ட எழுத்துக்களைத் தெளிவாக விளங்கிக் கொள்ளமுடியாததால் ஒன்றைப் பார்த்துப் படியெடுத்தோர் ஓரெழுத்தை பிறிதோரெழுத்தாக மயங்கி எழுதியதால் பிழைகள் நேர்ந்தன. ஒருவர் பாடம் கூற மற்ற மாணவர் பலர் அவற்றை எழுதிப் படியெடுப்பதும் உண்டு; இவ்வாறு எழுதும்போது மயங்கி எழுதுதல் இயல்பே. படியெடுப்போரின் விரைவு, சோர்வு, நெகிழ்ச்சி, மதிக்குறை இவற்றாலும் தவறுகள் நேர்ந்தன. புள்ளி இட்டெழுதும் வழக்கம் இல்லாத காலமும் உண்டு. அதன் காரணமாகவும் பிழைகள் உண்டாயிற்று. நூலைப் படித்தவர் மொழித் தேர்ச்சி பெற்றவராக இருந்தால் புதிய பாடம் கற்பிக்கவும், நூலின் கட்டமைப்பை மாற்றவும் முயல்வர். மற்ற நூல்கள் போலவே குறளும் பாடவேறுபாட்டுத் தீங்குக்கு உள்ளானது. படியெடுப்பதில் நேர்ந்த பிழைகள் தவிர, பாடங்களைத் திருத்துவதில் பயிற்சியும் துணிவும் பெற்ற சிலர் பேரார்வத்துடன் வலிந்து புகுத்தப்பட்ட இடைச்செருகல்கள் காரணமாகவும் குறளில் பாட வேறுபாடுகள் மிகுந்தன. உரையாசிரியர்களாலும் பாடவேறுபாடுகள் ஏற்பட்டன. இன்னபிற காரணங்களினால் பா ஒன்றுக்கே பாடங்கள் பல பெருகின.
எடுத்துக்காட்டுகள் சில......:
குறளில் பாடவேற்றுமை பற்றி இரா சாரங்கபாணி தொகுத்தளித்த நூலில் இருந்து சில இங்கே தரப்பட்டுள்ளன:
புள்ளி இட்டு எழுதும் வழக்கம் இல்லாததால் தோன்றிய பாடவேற்றுமை:
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து. (1236) என்னும் குறட்பகுதியில் ‘நோவல்’ எனப் பரிமேலழகர் கொள்ள, ‘நேர்வல்’ எனக் காலிங்கர் கொண்டு உரைசெய்கிறார். நோவல் என்னும் பாடமே சிறப்பானது.
யாப்பு நோக்கி எழுந்தன:
இலக்கணப் பொருத்தமின்றி வழுவுடையவாய்க் காணப்படும் பாக்களும் உள்ளன. ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயால் சொலல். (139) என்னும் குறளில் தாம் பாடமாகக் கொண்ட ‘ஒல்லாவே’ எனும் பன்மைக் கேற்ப சொலர்’ என்பதைச் ‘சொல்லுந் தொழில்கள்’ எனப் பொருள் கூறுவார் பரிமேலழகர். அதனினும், ‘ஒல்லாதே’ என ஒருமையாகப் பொருள் கண்ட மணக்குடவர் பாடம், பால் வழுவின்றிச் ‘சொலல்’ என்னும் ஒருமைக்கு ஏற்ற பயனிலையாக அமைதலின், அதுவே ஏற்கத்தகுந்ததாக உள்ளது. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற்று எல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர் (1033) என்ற குறளில் ‘வாழ்வார் மற்று எல்லாம்’ எனப் பரிமேலழகர் கொள்ள காலிங்கர் 'வாழ்வார் மற்றல்லாதார்' எனக் கொண்டது வெண்தளை பிழைத்தல் ஆதலால் பொருந்தாது.
எதுகை மோனை நயம் கருதிச் சிலரும் பொருட்சிறப்பு கருதிச் சிலரும் சில குறளுக்கு பாடவேறுபாடு கொண்டுள்ளனர். அவற்றை நோக்கின், வள்ளுவர் எதுகை மோனை நயத்தோடு தம் குறளினை யாத்தாரா? பொருட்செறிவுக்காக அந்நயத்தை விடுத்தாரா? என்றெல்லாம் ஐயுற வேண்டியுள்ளது. பொருட் சிறப்போடு யாப்பின்பம் இருப்பின் அப்பாடம் சரியென்று கொள்ளலும் பொருட் சிறப்பில்லாததாயின் அதனைத் தள்ளலுமே செய்யவேண்டியது.
எதுகைச் சிறப்புக்காக: தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை (43)‘ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை ’ எனப் பரிமேலழகர் பாடங்கொள்வர். அதனினும் ‘ஐம்புலத்தார் ஓம்பல் தலை’ எனக் கொண்ட தாமத்தர் பாடம் எதுகை முற்றிலும் இயைதல் காணலாம். மேலும் குறளில் எண்ணிய ஐவரையுங் குறிக்க ஐம்புலம் என்பதினும் ஐம்புலத்தார் என்பதே திணைவழுவின்றி அமைகின்றது. அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு (1081) இங்கு ‘அணங்கு கொல் ஆய்மயில் கொல்லோ கணங்குழை’ எனும் பரிப்பெருமாள் பாடம் எதுகைச் சிறப்பு பயத்தலால் கனங்குழை எனும் பரிமேலழகர் பாடத்தினும் நன்று.
மோனைச் சிறப்புக்காக:
மோனை நயம் பயக்கும் பாடங்கள்: வாள்அற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாள்ஒற்றித் தேய்ந்த விரல் (1261) என்ற மணக்குடவர்/பரிமேலழகர் உரையினும் ‘தேய்ந்த நகம்’ எனும் காலிங்கர் பாடம் மோனை நயம் வாய்ந்தது. அதுபோல ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் கூன்கையர் அல்லா தவர்க்கு (1077)எனும் மணக்குடவர்/பரிமேலழகர் பாடத்தினும் ‘கூர்ங்கை’ எனும் காலிங்கர் பாடம் மோனை நயம் கொண்டது. மோனை நயம் வாய்ந்திருப்பினும் ‘கூர்ங்கை’ எனும் பாடமும் ‘நாள் ஒற்றித் தேய்ந்த நகம்’ எனும் பாடமும் பொருட் சிறப்பில்லாதவை.
பொருள் வேறுபாடற்றவை
பொருள் வேறுபாடன்றி சொற்கள் வேறாகக் காணப்படும் சில பாடங்களும் உண்டு. வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல (4) என்பது பரிமேலழகர் கொண்ட குறள். இதனை ‘வேண்டுதல் வேண்டாமை யில்லா னடிசேர்ந்தார் யாண்டு யிடும்பையிலர்’ என மணக்குடவர் கொண்டுள்ளதாகக் குறிப்பர். ‘வாரி வளங்குன்றிக்கால்’ (14) என்பது ‘குன்றுங்கால்’ (மணக்குடவர், தாமத்தர்) எனவும் ‘யானையால் யானையாத்தற்று’ (678) என்பது ஆர்த்தற்று (காலிங்கர்) எனவும் ‘துணையல் வழி’ (1299) என்பது ‘தமரல் வழி’ (காலிங்கர்) எனவும் ‘என்பாக்கறிந்து’ (1312) என்பது ‘என்பதறிந்து’ (மணக்குடவர்) எனவும் பொருள் வேறுபாடின்றிப் பாடம் மட்டும் வேறாகி நிற்கின்றன.
பொருள் வேறுபடுபவை
எழுத்தாலும், சொல்லாலும், தொடராலும் வேறுபடும் பாடம் அமைந்த குறள்களும் சில உள. ‘அஞ்சுவதோரு மறனே’ (366) என்பதற்கு ‘அறிவே’ என நச்சரும் ‘அவாவே’ எனத் தாமத்தரும், ‘அறம் பொருளின்பம் உயிரச்சம்’ (501) என்பதற்கு ‘உயிரெச்சம்’ எனக் காலிங்கரும், ‘ஒற்றுமுரை சான்ற’ (581) என்பதற்கு ‘ஒற்றும் முறை சான்ற’ என மணக்குடவரும், ‘விழை தகையான் வேண்டியிருப்பர்’ (581) என்பதற்கு ‘விழை தகையால் வேண்டியிருப்பர்’ எனக் காலிங்கரும் பாடங் கொள்வதால் இவர் தம் உரைகள் பரிமேலழகர் உரையினும் வேறுபடுகின்றன.
இங்ஙனமே பரிமேலழகர் கொண்ட பாடங்கட்கு வேறாகப் ‘பகல் கருதிப் பற்றார் செயினும்’ (252), 'இறப்போர் இருந்த தொழிற்றாம்’ (977), ‘உழுவார் உலகத்தார்க்காணி அஃதற்றார் தொழுவாரே எல்லாம் பொறுத்து’ (1031) ‘தோட்டாழ் கதுப்பினாள்தோள்’ (1105) என மணக்குடவர் வேறுபாடமோதுவார்.
‘தானைக் கண் டன்ன துடைத்து’ (1082) என்பது பரிதி கொண்ட வேறு பாடம்.
குறளாட்சி கொண்டு அறிதல்: உரையாசிரியர்களின் சில உரை காணப்படும் மூலத்துக்கு முரணுவதால் அவ்வுரை கொண்டு அவ்வாசிரியர் தம் மூல பாடங்களை நாம் ஆய்ந்து காண வேண்டியுள்ளது. ‘பாத்தூண் மரீஇயவனை’ (227) என்னும் குறட்பகுதிக்கு உரை வரையும்போது, பசித்தவர் உண்டோ என்று பார்த்துக் கூட்டிக்கொண்டு வந்து பசியாற்றுவானை எனப் பரிதியார் கூறியுள்ளார். ‘பார்த்தூண்’ எனும் வழக்கு குறளாட்சி இல்லை. இவ்வுரையில் ‘பார்த்தூண்’ என்பது வள்ளுவர் பாடமல்ல; பரிதியார் பாடமே எனத் தெளியலாம். மேலும் தமது பாத்துண்டற்றால் (1107) என்னும் பாடலைக் கண்டும் 'பாத்தூண்' என்பதே பாடமெனத் துணியலாம்.
மிக்க பொருத்தம் கொண்ட பாடம் தெளிதல்: குறள்களுக்குக் காணப்படும் வெவ்வேறு பாடங்களுள் எது தக்கது எனக் காரணங்கண்டு உறுதி செய்தல் வேண்டும். தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும் (202) இக்குறளுக்குத் தீயவே தீயபயத்தலால் என ஒரு பாடமுண்டு எனக் காட்டுவார் அரஞ்சண்முகனார். நன்மையுந்தீமையுந் தரும் தீயினும் தீமையே தரும் தீயவை அஞ்சப்படும் எனும் கருத்தழுத்தம் தீயவே தீயபயத்தலால்’ எனும் பாடத்தாற் பெறப்படுதலின், அதுவே பரிமேலழகர் கொண்ட பாடத்திலும் சிறந்ததாகும். முகம்நக நட்பது நட்புஅன்று நெஞ்சத்து அகம்நக நட்பது நட்பு (786) எனும் பாடத்திலும், ‘நட்பதே நட்பு’ எனும் மணக்குடவர் பாடம் கருத்தழுத்தமுடைமை காணலாம்.
அதிகார அமைப்பு, குறள் வரிசை முறை போன்றவைகளில் பாடவேறுபாடுகள் காணப்படுகின்றன.
அதிகார வைப்பு முறை/அதிகாரப் பெயர்: மணக்குடவர் “குடி” என்று கூறிய அதிகாரத்தைப் பரிமேலழகர் “குடிமை” என்று மாற்றியுள்ளார். பரிமேலழகர் பாடத்தில் இரண்டு “குறிப்பறிதல்” உள்ளது. அவருக்கு முறபட்ட காலிங்கர் இன்பத்துப்பால் குறிப்பறிதலை “குறிப்புணர்தல்” என்று கூறியுள்ளார். மணக்குடவர் “பசப்புறுதல்” என்பதைப் பரிமேலழகர் “பசப்புறு பருவரல்” என்கிறார். காலிங்கர் “அவர்வயின் விரும்பல்” என்பதைப் பரிமேலழகர் “அவர் வயின் விதும்பல்” என்று கூறுகிறார்.
பாடல் வைப்பு முறை: பாடல் வைப்பு முறையிலும் உரையாசிரியர்கள் மாறுபடுகிறார்கள். “பழைய உரை” யில் “ஒழுக்கம் உடைமை” அதிகாரத்தில் “நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்” (138) என்ற குறளையே காணவில்லை. இதற்குப் பதில் “தன்மம் பெருக்கும் ஒழுக்கம் அதுவிடில் கன்மம் பெருக்கும் கவர்ந்து” என்ற பாடல் “பழைய உரை” யில் செருகப்பட்டிருக்கிறது. “வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு” (632) இக்குறளில் கூறப்படுவன நான்கு செய்திகள். ஆயினும் ஐந்துடன் என வருகிறது. இதில் ஐந்து செயல் இருந்திருக்க வேண்டும் அல்லது ஐந்துடன் என்பதற்குப் பதில் நான்குடன் என்றிருந்திருக்க வேண்டும். ஆனால் மூல வேறுபாட்டில் எடுத்து எழுதியவர்கள் மாறுபட எழுதியதுதான் இக்குறள். மணக்குடவர் ‘குடிகாத்தல்’ என்பதனை ‘குடியைக்காத்தல்’ ‘ஐம்பொறிகளைக் காத்தல்’ என இரண்டாக்கி மொத்தம் ஐந்து என உரைக்கின்றார். இது தவறுதான். ஆனால் இதை எல்லாரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். தொடக்கத்தில் எழுதப் பெற்றதுபோல் குறள் இல்லை என்பது தெளிவு.
மேலே சொல்லப்பட்டன தவிர இன்னும் பல பாடவேறுபாடுகளும் உண்டு..
பொதுவாகப் பரிமேலழகர் பாடத்தை ஒட்டியே பாடவேறுபாடு சுட்டப்படுகிறது. அதாவது இவரது உரையே மூலப்பாடத்தை ஒக்கும் என்றபடியான நிலை இன்று உள்ளது. பரிமேலழகரே முதல் உரையாசிரியராகக் கருதப்படும் மணக்குடவர் பாடத்தை ஒட்டியே பெரும்பாலும் தன் உரையைப அமைத்துக் கொண்டார். மேலும் பரிமேலழகருக்கு முந்தியவரான காலிங்கர் பாடங்களும் சிறப்பானவையே.
ரஷ்ய நாட்டுக் கிரெம்ளின் மாளிகையில் அமைந்துள்ள அணுவும் துளைக்க முடியாத சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள மிகச்சிறந்த நூல்கள் சிலவற்றுள் திருக்குறளும் ஒன்றாகும்.
பைபிளுக்கு அடுத்தபடியாக உலக மொழிகளில் அதிகம் மொழிபெயர்க்கப் பெற்ற நூல் குறள்.
1796-இல் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றிய ஃபிரன்சிஸ் வைட் எல்லிஸ் (18-10-1819)என்ற குறள் பற்றாளர் வள்ளுவர் உருவமும், ஐந்துமுனை நட்சத்திரமும் பொறித்த 'இரட்டை வராக-நட்சத்திர பகோடர்' தங்கக் காசுகளை வெளியிட ஏற்பாடு செய்தார் (அவை புழக்கத்திற்கு விடப்பட்டனவா என்பதற்கு இப்பொழுது ஆதாரம் கிடைக்கவில்லை). அக்காசுகளில் இரண்டு லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திலும் இரண்டு கொல்கத்தாவிலுள்ள இந்திய அருங்காட்சியகத்திலும் உள்ளன.
எல்லீஸ் 1831-ஆம் ஆண்டு முதலில் குறளை அச்சிட்டார்.
'தமிழ்' என்னும் சொல்லில் ழகரமாகிய தமிழ்ச் சிறப்பெழுத்து ஒன்று அமைந்திருப்பது போலக் 'குறள்' என்பதில் றகரமாகிய சிறப்பெழுத்து அமைந்திருக்கின்றது.
முதற்குறள் தமிழில் முதல் எழுத்தாகிய 'அ' என்னும் உயிரெழுத்தில் தொடங்கி இறுதி எழுத்தான 'ன்' என்னும் மெய்யெழுத்துடன் கடைசிப் பாடலில் முடிகிறது.
துணை எழுத்தே இல்லாத குறள் கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக (குறள்391)
வெஃகாமை அதிகாரத்தில் அதிகாரத் தலைப்பையும் சேர்த்து 14 இடங்களில் ஆயுத எழுத்து இடம் பெற்றுள்ளது.
குறளில் உள்ள மொத்தச் சொற்கள் 11597. அவைகளில் 4888 வெவ்வேறானவை; இன்னொரு வகையில் சொல்வதானால், ஒரு சொல் சராசரியாக இரண்டுக்கு மேற்பட்ட தடவை குறளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நூல் முழுமையும் ஐம்பது அல்லது அறுபது வடமொழிச் சொற்களே உள.
குறட்பா 1159 மட்டும் ஈற்றுச் சீரில் ஒரே ஒரு எழுத்தைக் கொண்ட 'தீ' என்னும் சொல்லுடன் முடிந்துள்ளது. அதுவும் அசைச் சொல்லாக இல்லாமல் பொருட்பெயராக அமைந்துள்ளது: தொடிற்சுடின் அல்லது காமநோய் போல விடிற்சுடல் ஆற்றுமோ தீ
தொடங்கிய சொற்களாலேயே முடித்திருப்பது இரண்டு பாக்கள்: 1. நாடுஎன்ப நாடா வளத்தன நாடுஅல்ல நாட வளம்தரு நாடு (குறள் 739) 2. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள் (குறள் 751)
முப்பால் எனவும் சொல்லப்படும் திருக்குறளில் அறம், பொருள், இன்பம் எனும் மூன்று சொற்களும் ஒரே பாடலில் இடம் பெற்றுள்ள குறள்: அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள் (குறள் 754)
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு (குறள் 350) என்ற குறளில் ஒரே சொல் 6முறை இடம் பெற்றுள்ளது.
ஒரே சொல் 5 முறை 5 குறட்பாக்களிலும், ஒரே சொல் 4முறை 22 குறட்பாக்களிலும், ஒரே சொல் 3 முறை 27 குறட்பாக்களிலும் இடம் பெற்றுள்ளன.
கடவுள் வாழ்த்து, கூடாஒழுக்கம், வினைத்தூய்மை, என்ற அதிகாரங்களில் எந்தப் பாடல்களிலும் அதிகாரப் பெயர் இடம் பெறவில்லை.
வெஃகாமை என்னும் அதிகாரம் ஒன்றில் மட்டுமே அதிகாரப் பெயரைச் சுட்டும் பெயர் அதிலுள்ள பத்துப் பாக்களிலும் பயின்று வந்துள்ளது.
71, 110 ஆகிய அதிகாரங்கள் 'குறிப்பறிதல்' என்ற பெயரில் உள்ளன. எனவே 133 அதிகாரங்களுக்கு 132 பெயர்களே உள்ளன.
கி மு 31-ல் திருவள்ளுவர் ஆண்டு தொடங்குவதாக தமிழ் அறிஞர் கொள்வர்.
ஒரே ஈற்றடி இரண்டு குறட்பாக்களில் அமைந்தவாறு ஐந்து இடங்களில் வருகின்றன: "மெய்ப்பொருள் காண்பது அறிவு" (குறள்கள் 355-423) "கோடாமை சான்றோர்க்கு அணி" (குறள்கள் 115-118) "தேரினும் அஃதே துணை" (குறள்கள் 132-242) "செய்யாமை மாசற்றோர் கோள்" (குறள்கள் 311-312) "தொல்கவின் வாடிய தோள்" (குறள்கள் 1234-1235) .
ஈற்றடியில் மூன்று சீர்களின் கூட்டுத் தொகையாக ஏழு எழுத்துக்களே கொண்ட குறட்பாக்கள் இரண்டு: 1. ஆகுல நீர பிற (குறள் 34) 2. காதலை வாழி மதி (குறள் 1118)
குறளில் எண்கள்:
குறளில் மிகவும் பயன்படுத்தப்பட்ட எண் '1' தான் (47 முறை). குறளில் கூறப்படாத எண்: 9. பழந்தமிழ் மரபில் 9 என்ற எண்ணைத் தொண்டு என்ற சொல்லால் குறிப்பிடுவர். ஆயினும் தொண்டு, தொண்பது போன்ற சொல்லாட்சி கூட குறளில் காணப்பெறவில்லை.
திருக்குறளைப் பாராட்டும் திருவள்ளுவ மாலையென்ற ஒரு நூல் இருக்கின்றது. அதிலுள்ள செய்யுட்களைப் பல புலவர்கள் பாடியுள்ளார்கள். அந்நூலைப் பாடியவர்கள் யாராயினும் அது பல நூற்றாண்டுகட்கு முன்பே உண்டாயிற்றென்பதற்கு நேமிநாதயுரை முதலிய நூல்களில் போதிய ஆதாரம் இருக்கின்றது. இங்ஙனம் ஒரு நூலைச் சிறப்பித்துப் பாடிய தனி நூலொன்று வேறு எந்த நூலுக்கும் முற்காலத்து அமையவில்லை -உ வே சாமிநாதைய்யர்
வள்ளுவமாலை தோன்றியது எங்ஙனம்? காலந்தோறும் குறளைப் பற்றிய பாடல்கள் பல புலவர்களால் இயற்றப்பட்டிருக்க, பிற்காலத்து வந்த கவிஞரொருவர் அவற்றுள் சிறந்தனவற்றை எடுத்து ஒருங்கு சேர்த்து ஒழுங்குபடுத்தி, அந்நாளில் நன்கு அறியப்பட்ட பழம்புலவர்கள் படைத்ததாக அவர்கள் பெயர்களில் ஒரு நூலாகத் தொகுத்திருக்கலாம். இவற்றுடன் அவரே தாமும் சில பாக்களை இயற்றி இதுபோலவே புகழ்பெற்ற பாவலர்கள் எழுதியதாக அவர்கள் பெயரில் சேர்த்து இத்தொகுப்பை வழங்கியிருக்கலாம்.
திருவள்ளுவமாலை
திருவள்ளுவமாலை என்பது திருக்குறளைச் சிறப்பித்துப் பாடிய பாடல்களின் கோவை என்று பொருள்படும். மொத்தம் ஐம்பத்து மூன்று வெண்பாக்களாலான பாக்களையுடையது.
இதில், பல பாக்கள் கருத்துச் செறிவுடனும், மேற்கோளாக ஆளத்தக்கனவுமாகமும் உள்ளன. சில பாக்கள் குறளின் முப்பாலின் இயற்பகுப்புகளை எடுத்தோதுகின்றன; கவிதை நலம் நிறைந்து கற்பனையால் குறளைச் சிறப்பிக்கின்றன சில; வடமறைநூலுக்கும் இதற்கும் வேற்றுமை காட்டி ஏற்றம் கூறுகின்றன சில; குறள் ஆசிரியரைப் பாராட்டுகின்றன சில; வள்ளுவரின் இதயத்தின் ஆழத்தையும், அவரது அறிவின் ஆற்றலையும் தெளிவையும் உணர்ந்து தாங்கள் பெற்ற இன்பத்திற்குக் கனிந்த கற்பனையுடன் செய்த பாக்கள் பிற.
காலம்
வள்ளுவமாலை திருக்குறள் அரங்கேற்றத்தின்போது சங்கப் புலவர்களால் பாடப்பெற்றது என்பர் ஒருசாரார். கல்லாடத்தில் கூறப்பட்டுள்ள குறள் அரங்கேற்ற நிகழ்ச்சி இத்தொகுப்பின் முதல் பாட்டுக்கு ஆதாரமாக இருக்கலாம். அப்பாடல் மதுரையில் உள்ள சங்கப்பலகையில் திருவள்ளுவரோடு ஒத்து இருத்தற்கு உருத்திரசன்மரே ஏற்றவர் என்று குறிப்பது. ஆனால் பழங்கதைகளில், குறள் அரங்கேறிய காலத்தில், சங்கப்புலவர் நாற்பத்தெண்மரும் திருவள்ளுவரோடு ஒக்க இருக்கத் தகுதியற்றவராய்ப் பொற்றாமரைக் குளத்தில் வீழ்ந்து மூழ்கினர் என்று கூறப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு வள்ளுவமாலை குறள் ஆசிரியர் காலத்தது அல்ல; பிற்காலத்தே தோன்றியதே என்பர்.
காலத்தால், பண்டைய குறள் உரை ஆசிரியர்கள் பதின்மருக்கு முந்தியது திருவள்ளுவமாலை என்பது பல அறிஞர்களின் முடிவு. இப்பாடல்கள் கி.பி. எட்டாம் நூற்றாண்டு வரையில் உள்ள காலகட்டத்தில் தொகுக்கப்பட்டதெனச் சில அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். சிலர் இதன் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தியதாக அமையும் என்று கூறியுள்ளனர். எவ்வாறாயினும் திருவள்ளுவமாலை வரலாறு பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தியதென்பதில் ஐயம் இல்லை என்பார் தெ பொ மீ.
தொடுத்தது யார்?
அசரீரி, நாமகள், இறையனார், உக்கிரப்பெருவழுதி உரைத்த பாக்களுடனே சங்கப்புலவர் நாற்பத்தொனபதின்மரும் பாடிய பாடல்களுமாகக்கூடி ஐம்பத்து மூன்று பாக்களைக் கொண்டதாக அறியப்படுவது வள்ளுவமாலை. இவ்வாறாக விண்ணிலிருந்து வந்த ஒலியாகவும் உடல்கொண்டோராலும் பாடப்பட்ட பாடல்களுடன் மேலும் ஔவையார், இடைக்காடர் ஆகியோர் பாக்களையும் சேர்த்து இப்பொழுது திருவள்ளுவமாலை ஐம்பத்தைந்து பாடல்கள் கொண்டதாக உள்ளது.
வள்ளுவமாலையில் இடம்பெற்றுள்ள புலவர் பெயர்களை அறிவதற்குரிய ஆதாரங்கள் சங்க நூல்கள் அன்றி வேறு ஒன்றுமில்லை. அவ்வாறு நோக்கும்போது இதில் காணப்படும் பெயர்களுள் சில சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கவில்லை. இறையனார் களவியலுரையின்படி கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் நாற்பத்தொபதின்மர் ஆவர். இவர்களில் சேந்தம் பூதனார், அறிவுடையரானார், பெருங்குன்றூர்க் கிழார், இளந்திருமாறன், மருதன்இளநாகனார் ஆகிய இவர்கள் பெயர் வள்ளுவமாலையில் காணப்படவில்லை. வள்ளுவமாலையில் காணப்படும் உருத்திரசன்மர், நத்தத்தனார், முகையலூர்ச் சிறுகருந்தும்பியார், எறிச்சனூர் மலாடனார், போக்கியார், நாகன் தேவனார், செங்குன்றூர்க் கிழார், கவிசாகரப் பெருந்தேவனார், செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார், வண்ணக்கஞ் சாத்தனார், களத்தூர்க் கிழார், நச்சுமனார், அக்காரக்கனி நச்சுமனார், குலபதி நாயனார், தேனீக்குடிக் கீரனார், கொடிஞாழன் மாணிபூதனார், கௌணியனார், மதுரைப் பாலாசிரியனார் என்பவர்களைச் சங்க இலக்கியங்களில் காண முடியவில்லை. சங்கப் புலவர்கள் வாழ்ந்தது ஒரே காலத்தில் அல்ல. அவர்கள் வாழ்ந்த கால இடைவெளி சில நூற்றாண்டுகள் ஆகும். எனவே பாடல்கள் ஒரே காலத்தில் தோன்றியன என்பதும் ஏற்க இயலாது. வள்ளுவமாலைப் பாக்கள் சங்ககாலத்தில் அமைந்துள்ள ஓசை தராமல் பிற்கால இலக்கணமமைந்த ஓசை தருகின்றன என்றும் சங்கநுல்களில் காணப்படாத சொற்சிதைவு இப்பாடல்களில் காணப்படுவதையும் ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். எனவே குறளைப் பற்றிச் சங்கப் புலவர்கள் பாடிய பாடல்களின் திரட்டே வள்ளுவமாலை என்பது பொருந்தாதாகிறது.
இந்நூல் அனைத்தும் ஒரே புலவரால் பாடி இயற்றப்பட்டிருக்கூடும் என்னும் கருத்தையும் ஆராய்ச்சி அறிஞர்கள் மறுத்துள்ளனர். இந்தப் பாராட்டு மாலை யாரோ ஒருவரோ அல்லது ஒரு சிலரோ வெவ்வேறு காலங்களில் எழுதிய பாடல்களின் தொகுப்பாக இருக்கலாம் என்பது பொதுவான கருத்து. வள்ளுவமாலையிலுள்ள பாடல்களுள் சில சங்கப் புலவர்களாலும், சில பிற்காலப் புலவர்களாலும் பாடப் பெற்றிருக்கலாம்; பின்னர் இவை நுலாகத் தொகுக்கப் பெற்றிருக்க வேண்டும் எனவும் கொள்ள முடிகிறது. சங்கப்புலவர்கள் பாடியதுபோலப் பிற்காலத்தவர் பாடிவைத்த பாடல் தொகுப்பே வள்ளுவமாலை என்பது மற்றொரு கருத்து. வள்ளுவமாலையை இயற்றியவர் தமது பல்வேறு பாடல்களுக்குத் தம் விருப்பத்திற்கேற்பப் புகழ்வாய்ந்த சங்கப் புலவர்களின் பெயர்களை அமைத்துக் கொண்டிருக்கலாம். பாடல்களின் அமைப்பையும் பாடுபொருளையும் காணும்போதும் இம்மாலையை ஒருவரே தொகுத்தார் என்பதற்கான காரணம் வலுப்படும்.
தாக்கங்கள்
பண்டைத் தமிழ் இலக்கியத்தில் காணப்பெறும் ஒரே திறனாய்வு நுல் திருவள்ளுவமாலையே என்பர் அறிஞர். திருக்குறள் பற்றிய ஆராய்ச்சிக்கு வள்ளுவமாலையில் ஓரு தொடக்கம் உண்டானது எனலாம். இது திருக்குறளுக்குச் செய்யப்பட்ட சிறப்பு எனவும் கொள்வர். வள்ளுவமாலை திருக்குறளின் நயத்தையும் சிறப்பையும் ஆராய்ந்துரைக்கும் திறனாய்வு மாலையாக விளங்குகிறது. இதிலுள்ள ஒவ்வொரு பாடலும் குறளை அணுகிய முறை வெவ்வேறாக உள்ளது. இப்பாடல்கள் வள்ளுவரை தெய்வ வாக்கு கொண்டவர் என்று வாழ்த்தும்; குறள் மறைநூலுக்கு மேலானது, இணையானது எனவும் வடமொழியின் சிறப்பிற்கு மறைநூல்; தமிழ்மொழியின் பெருமைக்குக் குறள், முப்பாலில் நாற்பால் மொழியப்பட்டது எனவும் ஒப்பாய்வு செய்யும்; பால், இயல், அதிகாரத் தொகுப்பு இவற்றைக் கூறி குறளின் சொற்பொருள், யாப்பின் அமைப்பு ஆகியவற்றின் சிறப்புபற்றிப் பேசும்; உள்ளத்து இருளை நீக்கும் வாழ்வியல் நூல் என்றும் இருவினை நீக்கும் மாமருந்தாகிய ஆன்மநூல் இது என்றும் போற்றும். இவ்வாறு பல்வேறு நிலைகளில் திருக்குறளின் பாடுபொருளும் பாடுமுறையும் ஆராயப்பட்டுள்ளன.
வடமொழியில் தோன்றிய வேதம் மூலநூல், குறள் அதன் வழிநூல் என்று ஒரு பாடல் கருத்து உரைக்க அதற்கு மாறாகத் திருக்குறள் மூலநூலே, திருக்குறளோடு எந்த நூல்களையும் ஒப்பிட்டுப் பார்த்தல் பொருத்தமாகாது என்பதை வேறு ஒரு பாடல் உணர்த்துகிறது. வடமொழிநூல்களோடு திருக்குறளை ஒப்பிட்டுப் பேசுதல் ஒவ்வாது என்பதனை வலியுறுத்தும் போக்கு அக்காலச் சூழலிலேயே தோன்றியமையும், திருக்குறள் தமிழில் எழுந்த மூலநூல் என்பதனை வள்ளுவமாலை மூலமும் நிறுவப் பெற்றமையையும் காணலாம். வள்ளுவமாலை எழுந்த காலத்தில் மாந்தர் பெரிதாக மதித்து வந்ததாகக் கருதப்படும் வைதீக நூல்களுடன் திருக்குறளை ஒப்பிட்டுப் பாராட்டிக் கூறியதன் நோக்கம் தமிழின் ஆற்றலை மற்றவரும் உணர வேண்டும் என்பதே என்று ஒரு கருத்து உள்ளது. ஆனால் காலப்போக்கில் இந்த ஒப்பீடே பிறழ உணரப்பட்டுப் பின்னையோர் திருக்குறள் கருத்துகள் வடநூற் கருத்துக்களின் பிழிவாகக் கருதத் தொடங்கி விட்டனர்; பின்வந்த உரையாசிரியர்களின் வெவ்வேறு அணுகுமுறைக்கு மாலைப்பாடல்கள் அடித்தளமாக அமைந்து விட்டன என்பதும் தெளிவாகும் என்பர் ஆய்வாளர்கள். வள்ளுவமாலை தரும் பாராட்டுரைகளே வள்ளுவத்திற்கு வேறுபொருள் காணத்தூண்டியிருக்கலாம்; அல்லது குறள் தோன்றிய காலத்திலிருந்து பின்னர் பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு கருத்துகள் அதில் ஏற்றியுரைக்கப்பட்ட பின் அக்கருத்துரைகளே வள்ளுவமாலை தரும் கருத்துரைகளாக மாறின எனவும் கொள்ளலாம். எவ்வாறாயினும் மூலம் கொண்டிருந்த கருத்துகள் காலப்போக்கில் வள்ளுவமாலையாலும், உரைகளாலும் மாறிப்போயின என்பது உண்மை.
வள்ளுவம் பெற்ற திரிபிற்கு வள்ளுவமாலையும் அடிப்படை என்னும் நிலையில் பல காரணங்களைக் காட்டுவார் கு ச ஆனந்தன். திருக்குறளின் உண்மைப் பொருளையும் உள்ளுறை நோக்கையும் அமைப்பையும் மூலத்திலிருந்து மாற்றியமைத்து வேறுவிளக்கம் தரும் பல பாட்டுகள் வள்ளுவமாலையில் இடம் பெற்றுள்ளன; தொன்மை நூலாகிய தொல்காப்பியம், சங்க நூல்கள், திருக்குறள் முதலியவற்றில் 'வீடு' பற்றிப் பேசும் நான்காம் உறுதிப்பொருள் இல்லை; அறம், பொருள், காமம் என்ற மூன்று மட்டுமே பேசப்படுகின்றன; ஆனால் வள்ளுவமாலையின் பல பாடல்களில் (7,8,20,22,33,38,40,50) திருக்குறளில் இல்லாத நாற்பால் வலியுறுத்திச் சொல்லப்பட்டுத் திருக்குறளின் ஆராய்ச்சிப் போக்கை அல்லது திருக்குறள் உணரும் நெறியை மாற்றிவிட்டது என்பார் இவர்.
அடுத்து வள்ளுவமாலை திருக்குறளுக்குத் தரும் இன்னொரு மதிப்பீட்டுரை வேதப்பொருளும் குறட்பொருளும் ஒன்றேயாம் என்பது. இது தவறான ஒப்பீடு. ஏனென்றால் வேதங்கள் இயற்கை சக்திகளையும் தெய்வங்களையும், யாகம்-சடங்குகள் செய்யும் முறைகளையும் விளக்குபவை; குறள் போல வாழ்வியல் நெறி; காதல் நெறிகளை விளக்குவன அல்ல. மேலும் குறளை இராமாயணம் போன்ற காப்பியங்களோடு ஒப்பிட்டதும் பொருத்தம் இல்லை.
வள்ளுவமாலைக் கருத்துக்கள் அந்தணர்-அந்தணர் அல்லாதவர் என்று வேற்றுமை பாராட்டும் கொள்கையைக் காட்டுவதாக உள்ளன என்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
தொகுப்புரை
முன்னர் வள்ளுவமாலை திருக்குறளின் சிறப்புப் பாயிரமாகப் பேசப்பட்டது. ஆனால் இன்று யாரும் அதைக் குறளின் சிறப்புப் பாயிரம் என்று கருதவில்லை; இது இப்போது சில உரைகளின் பிற்சேர்க்கையாகவும் தனி நூலாகவும் படிக்கப்படுகிறது.
பொறுப்பற்ற நாடோடிகளின் கற்பனையில் உருவான கதையே வள்ளுவமாலை என்று ஒரு புறம் கூறப்பட மறுகோடியில் சிலர்க்கோ இது நல்லதோர் திறனாய்வு மாலையாகத் தோன்றியது. வள்ளுவமாலைப் பாடல்களே திருக்குறளைத் திரித்துப் பொருள் கொள்வதற்குப் பயன்பட்டன என ஒருசாரார் கூற மற்றவர்கள் இது கவித்துவம் மிக்க பாராட்டுப் பாடல் தொகுதி எனப் போற்றினர். எவ்வாறாயினும் குறளைப் பற்றி அறிதற்கு இது ஓர் பண்டைக் கருவி நூலாகத் திகழ்கிறது என்பதிலும் திருக்குறளின் சிறப்பை நன்கு சுவைத்துப் பிறரையும் சுவைக்கச் செய்கின்றது என்பதிலும் ஐயமில்லை.
இதன் காலம் கல்லாடர் காலமாகிய கி பி 11-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்பது பலரின் முடிவு.
வள்ளுவமாலையில் உள்ள பாடல்களுக்குள்ளேயே, குறள் அமைப்பு பற்றிய பால், இயல், அதிகாரம் என்ற கூறுகளைப் பற்றி மாறுபட்ட கருத்துகள் கூறப்பட்டுள்ளன. அதுபோலவே முப்பாலில் நாலு உறுதிப் பொருளையும் கூறியது என்று ஒரு பாட்டு கூற, நாலு உறுதிப் பொருளையும் நேரடியாகக் கூறியது என்கிறது இன்னொரு பாடல். திருக்குறளை அதனுடன் ஒப்புமையற்ற வேதம், வடமொழி இலக்கியங்களான இராமாயணம், மகாபாரதம் ஆகியவைகளோடு இணைத்துக் கூறியது ஒப்பிலக்கிய நோக்கில் பிழையானது. திருக்குறள் முதல்நூல் அல்ல; அது வழிநூல்; குறள் வடமொழி வேதத்தைத் தழுவியது போன்ற வள்ளுவமாலைக் கருத்துக்கள், இதனுள் குறளின் புகழுரை மட்டுமே அடங்கியிருக்கவில்லை, குறளின் வரலாற்றைத் திரிக்கும் பாடல்களும் இருக்கின்றன என்பதையும் உணர்த்துகின்றன.
திருக்குறள் பற்றிய பாராட்டுரைகள், புகழுரைகள், திறனாய்வுரைகள் கொண்ட பாடல் தொகுப்பு வள்ளுவமாலை. வானொலி, தெய்வம், வேந்தன் பாராட்டுரை - இவை குறளுக்குத் தெய்வத்தன்மை தரும் நோக்கில் புனையப்பட்டதாகத் தோன்றுகின்றன. குறளாசிரியரின் மீது வழங்கி வந்த பழியை நீக்க வேண்டும் என்ற எண்ணம் சில பாடல்களில் தெரிகிறது. எந்த ஒரு நூலினும் மேம்பாடனது குறள் என்பதைக் காட்டவேண்டும் என்ற ஆர்வம் சில பாக்களில் காணப்படுகிறது. இயலும் அதிகாரமும் இத்தனையென்று அரண் செய்ய விரும்பிய நோக்கம் சில பாடல்கள் மூலம் வெளிப்படுகிறது. திருவள்ளுவரைக் கொண்டாடவும் திருக்குறளைப் புகழ்ந்தேத்தவும், குறள் பற்றிச் சுதந்திரமாக மொழியப்பட்ட பல புலவர்களின் கருத்துக்களின் தொகுப்பாக ஆக்கப்பெற்ற நூல் இது.