ஒரே இடத்தில் அதிகமான தமிழிக் கல்வெட்டுக்கள் இருக்கும் மிகச் சில இடங்களில், அழகர் மலையும் ஒன்று.
இங்கு மொத்தம் 12 கல்வெட்டுக்கள் உள்ளன. படிப்பதற்கு ரொம்பவே பொறுமை வேண்டும். அனைத்துக் கல்வெட்டுக்களும் நல்ல உயரத்தில் உள்ளன. கிட்டத்தட்ட 30 அல்லது 40 மீட்டர் நீளமான குகை. குகை விளிம்பில் ஒட்டுமொத்த நீள வசத்தில் இரண்டு வரிசைகளில் அந்த 12 கல்வெட்டுக்களும் உள்ளன.
இந்தக் கல்வெட்டுக்களையும், அதன் அர்த்தங்களையும் பார்க்கும் முன்னர், இங்குள்ள பொதுவான சிறப்பம்சங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
1. இந்தக் குகையில் சில செங்காவி ஓவியங்களும் உள்ளன. அதன் காலத்தை தோராயமாக 8000 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு போக முடியும். அதன்படி பார்த்தால், இந்த இடம் தொடர்ச்சியாக மக்களின் வாழ்விடமாக இருந்ததை தெளிவாக உணர முடிகிறது..
2. இங்குள்ள கல்வெட்டுக்களில் பொற்கொல்லன், உப்பு வணிகன், கொழு வணிகன் ( கலப்பையின் கூர் பகுதியே கொழு ), அறுவை (துணி) வணிகன், பாணித (சர்க்கரைப் பாகு) வணிகன் போன்ற சொற்கள் நேரிடையாக இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் மூலம் வணிகர்கள் இங்குள்ள துறவிகளை எவ்வளவு தூரம் ஆதரித்துள்ளனர் என்பது தெளிவு.
3. இங்கு மதுரை மாநகரை மதிரை, மத்திரை என்று குறிக்கும் கல்வெட்டுக்கள் உள்ளன. இதேபோல், மேட்டுப்பட்டி கல்வெட்டிலும் “மதிரை” என்னும் சொல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை, பேச்சு வழக்கை அப்படியே பொறித்துள்ளதாகக் கொள்ளலாம்.
4. மோதிரம் போல் உள்ள சில குறியீடுகளை இங்கு காண முடிகிறது. இவை கொடுமணல் அகழ்வாராய்ச்சியிலும், சிந்துவெளி குறியீடுகளிலும் காண முடிகிறது. இதன் மூலமாக சிந்துவெளியுடனான தமிழகத்தின் உறவை ஓரளவிற்கு ஊகிக்க முடிகிறது. இந்தக் குறியீடுகளின் அர்த்தம் : இந்தக் குகைத்தளத்தில் உள்ள கற்படுக்கைகளையும், நீர்த்தேக்கத்தையும் உருவாக்க ஆன செலவின் மதிப்பாக இருக்கலாம் என்கிறது நமது தொல்லியல் துறை.
5. “ஆதன்” என்னும் சொல் சங்ககாலத்தில் மிகவும் பொதுவான பெயராகவோ அல்லது ஒரு பெரிய தலைவனைக் குறிக்கும் சொல்லாகவோ இருந்துள்ளது. அதில் நெடில் நீங்கி குறிலாக “ அதன்” என்னும் பெயர்ச் சொல்லும் “அதன் அதன்” என்னும் பெயர்ச் சொல்லும் இரண்டு மூன்று இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
6. சிலப்பதிகாரத்தில், கவுந்தி அடிகளுடன் மதுரைக்கு வரும் கண்ணகியும், கோவலனும் அழகர் மலையில் உள்ள குகையில் சில ஆசீவகத் துறவிகளைச் சந்தித்ததாகவும், அவர்கள் முக்காலத்தையும் உணர்ந்த “கணியர்களாக” இருந்ததாகவும், அதில் ஒருவர் இவர்களைப் பார்த்து சில வினாடிகள் கண் மூடி இருந்து விட்டு பின்னர் இவர்களை சைகையால் போகச் சொன்னதாகவும் ஒரு குறிப்பு வருகிறது. அப்போது அந்தத் துறவியின் கண்கள் கலங்கி இருந்ததாக இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். அதாவது, கோவலனுக்கு நடக்கப் போவது அந்தத் துறவிக்கு முன் கூட்டியே தெரிந்திருக்கிறது. அதை நிரூபிக்கும் வகையில், இங்குள்ள ஒரு கல்வெட்டில் “கணிநாகன், கணி நதன்” என்ற இரண்டு (ஆசீவகத் ) துறவிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஆசீவகத் துறவிகளுக்கே “கணி” “ கணியர்” என்ற அடைப் பெயர்கள் உண்டு (உ-ம்: கணியன் பூங்குன்றனார்).
7. இங்குள்ள தமிழிக் கல்வெட்டுக்களின் காலத்தை கி.மு.முதலாம் நூற்றாண்டு என்று நமது அரசாங்கம் உத்தேசமாக வரையறுத்துள்ளது. ஆனால், இதன் உண்மையான காலம், கி.மு. நாலு அல்லது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
8. இதே இடத்தில் கி.பி.9 அல்லது 10 ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரரின் ஜெயின சிற்பம் ஒன்றும் ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டும் உள்ளன. மற்ற இடங்கள் போலவே இங்கும் கி.பி. 9ம் நூற்றாண்டில் அச்சணந்தி முனிவர் ஆசீவகக் குகைகளைப் பின்தொடர்ந்திருப்பதை உணர முடிகிறது.
9. மற்ற இடங்களைப் போலவே, இங்கும் வானவியல் ஆராய்ச்சி செய்ய வசதியான “நிலாப்பாறை” உள்ளது. இரவில் இங்கு மல்லாந்து படுத்துக் கொண்டு வானத்தைப் பார்த்தால், வானத்தின் 360 டிகிரி கோணத்தையும் முழுமையாக பார்க்க முடிகிறது.
10. இங்குள்ள சில குகை ஓவியங்கள் ஆய்வுக்குட்பட்டது. குறிப்பாக “ஏணி” வடிவம். இது இறை நம்பிக்கை சம்பந்தப்பட்டது என்பது சில ஆய்வாளர்களின் கருத்து.
11. ஒரு கல்வெட்டில் “ தியன் சந்தன்” என்று வருகிறது. இதில் வரும் “தியன்” என்னும் சொல் “தீயர்” என்ற ஆதிகுடியைச் சேர்ந்தவரைக் குறிப்பதாக இருக்கலாம் என்பது வரலாற்று ஆய்வாளர் உயர்திரு ராஜகுரு அவர்களின் கருத்து. இந்தத் தீயர்கள் இன்று கேரளாவின் ஒரு பகுதியில் வாழ்ந்து வருவதாகவும், அங்கும் அவர்கள் தமிழ்தான் பேசுகிறார்கள் என்கிறார் ராஜகுரு. “பாண்டியர்” என்பதன் வேர்ச்சொல்லே “பாந்தீயர்” தான் என்பதும் அவர் கருத்து. “தியன்” என்ற சொல் வரும் ஒரே ஒரு தமிழிக் கல்வெட்டு இங்குதான் உள்ளது.
12. இன்னொரு கல்வெட்டு “ சபமிதா இன பமித்தி” என்று வருகிறது. இதில் வரும் “பமித்தி” க்கு சமணப் பெண்துறவி என்று பொருள் என்கிறது இந்தியத் தொல்லியல் துறை. அதேபோல் “சபமிதா” என்பது “சர்ப்பமித்ரா” என்ற சமஸ்கிருதச் சொல்லே என ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் மறுஆய்வுக்குட்பட்டது. தமிழகத்தில் உள்ள தமிழிக் கல்வெட்டுக்கள் சிலவற்றில் பிராகிருதத்தின் தாக்கம் இருந்தாலும் கூட, எங்குமே சமஸ்கிருதத்தின் தாக்கம் இல்லை. எனவே, “சர்ப்பமித்ரா” என்ற சமஸ்கிருதப் பெயர் “சில ஆய்வாளர்களால்” வலிந்து திணிக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது.
13. குகையின் உள்ளே ஒரு சுனை உள்ளதாக அரசு ஆவணம் சொல்கிறது. ஆனால், அது மழை நீர்த் தேக்கம் போல்தான் தெரிகிறது. அதன் மேல் விதானத்திலும் சில ஓவியங்கள் உள்ளன.
கல்வெட்டுப் புகைப்படங்கள் தெளிவாக இல்லாதலாலும், படிக்க முடியாமல் இருப்பதாலும், இந்தியத் தொல்லியல் துறையின் ஆவணத்திலிருந்து எடுத்துப் புகைப்படங்களாக இத்துடன் பதிகிறேன்.
டிப்ஸ்:
மதுரையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது அழகர் கோயில் பெருமாள் கோயில். அங்கிருந்து மேலூருக்கு ஒரு ரோடு செல்கிறது. பெருமாள் கோயிலிருந்து அந்த ரோட்டில் பயணித்தால் ஒரு 5 கி.மீ. தொலைவில், கிடாரிப்பட்டி என்னும் ஊருக்கு ஒரு கி.மீ. க்கு முன்னால் “சமணச் சின்னம் அழகர் மலை” என்ற மஞ்சள் போர்டு உங்களை வரவேற்கும்.
அந்த இடத்தில் இடது கைப்பக்கம் திரும்பி ஒரு கி.மீ. தூரம் கரடு முரடான ரோட்டில் பயணித்தால் தமிழிக் கல்வெட்டுக்கள் இருக்கும் குன்றின் அடிப்பகுதியை அடையலாம். மேலே செல்வது ஒன்றும் கடினம் இல்லை என்றாலும் கூட, ஒரே ஒரு இடத்தில் மட்டும் இரண்டு குன்றுகளை இணைக்க நமது அரசாங்கம் ஒரு இரும்பு ஏணிப்படியை போட்டு வைத்திருக்கிறது. அதில் கைப்பிடி இல்லாதலால், கொஞ்சம் ஜாக்கிரதையாய் ஏறி இறங்க வேண்டும்.
மற்ற சில இடங்களில் அழகான படிகளும் உள்ளன.
இந்த இடத்திற்கு தனியே செல்ல உங்களுக்குத் தயக்கமாக இருப்பின், மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த திரு.ரவிச்சந்திரன் என்பவரை அழைத்தால், அவர் மகிழ்ச்சியுடன் உங்களை அழைத்துச் செல்வார்.
அவர்தான் யானைமலை கல்வெட்டு இருக்கும் இடத்திற்கு செக்யூரிட்டி. அதனால், யானைமலையையும் சேர்த்தே காண்பித்து விடுவார்.
அவருடைய மொபைல் எண் : 8428412774 / 7092400566
இந்தக் கல்வெட்டுக்கள் இருக்கும் இடம் ஒரு அத்துவான காடு. எனவே, தண்ணீர், சாப்பாடு, பிஸ்கட் கைவசம் வைத்திருக்கவும்.
இந்த இடத்தில் கள்வர்களின் (அ) சமூக விரோதிகளின் நடமாட்டம் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதை நிரூபிக்கும் விதமாக ஏராளமான மது பாட்டில்களும், இறைச்சிகளை சமைத்த தடமும் உள்ளன. எனவே, இங்கு தனியே செல்வதைத் தவிர்க்கவும்.
இன்னொரு முக்கியமான விஷயம் : இங்கு குரங்குகள் அதிகம். ஜாக்கிரதை.
வெ.பாலமுரளி
நன்றிகள் :
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்ட “ தமிழ்-பிராமி கல்வெட்டுகள்” ஆவணம்.
உயர்திரு ராஜகுரு அவர்கள்
பேராசிரியர் க. நெடுஞ்செழியனின் ஆசீவகமும் ஐயனார் வரலாறும்