Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: முருகனும் சுப்பிரமணியரும் வேறுவேறா? : ஓர் விவாதம் By அரவிந்தன் நீலகண்டன்


Guru

Status: Offline
Posts: 7471
Date:
முருகனும் சுப்பிரமணியரும் வேறுவேறா? : ஓர் விவாதம் By அரவிந்தன் நீலகண்டன்
Permalink  
 


முருகனும் சுப்பிரமணியரும் வேறுவேறா? : ஓர் விவாதம்

“முருகனும் சுப்பிரமணியரும் ஒன்றா வேறுவேறா” என்ற தலைப்பில் பிரபல சொற்பொழிவாளர் சுகி சிவம் சில ஆதாரமற்ற, அபத்தமான கருத்துக்களைத் தெரிவித்த வீடியோ சில நாட்கள் முன்பு வெளியானது.

அதற்கு அரவிந்தன் நீலகண்டன் தனது ஃபேஸ்புக் பதிவில் கீழ்க்காணும் சிறப்பான எதிர்வினையை எழுதியிருந்தார்.

சுகி.சிவம் ஒரு திறமையான பேச்சு வியாபாரி. ஆனால் தான் பயிலாத கவசதாரணம் கௌரவரின் லட்சணம். பேச்சுவியாபாரி அதனை தவிர்த்தல் நலம். சுப்ரமணியம் என்றால் பிராம்மணியத்துடனோ பிராம்மணர்களுடனோ தொடர்புடையது அன்று. உயர்ந்த பிரம்மத்தின் ஒளியாக திகழ்பவன் முருகன். இந்த பெயர் தென்னகத்துக்கே உரிய பெயர். ’பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகி’ என்கிற கச்சியப்ப சிவாச்சாரியார் திருவாக்கின் ஆன்ம அழகின் தூய உண்மையின் ஒரு துளி, எந்த பிறப்பிலாவாது மேல் தெறித்திருந்தாலும் கூட, இப்படி உளறும் அபாக்கியம் ஏற்பட்டிருக்காது. தமிழ் சமுதாயம் என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை. இப்படிப்பட்டவர்கள் ஆன்மிக பேச்சாளர்களாக இருக்கிற உன்மத்த நிலைக்கு தமிழ்சாதி தள்ளப்பட்டிருக்கிறது.

திருமால் வேதத்தில் இல்லை. விஷ்ணு என்பது பின்னால் வந்தது என்கிறார் சுகி.சிவம் அவர்கள். இது முழுக்க முழுக்க தவறு. விஷ்ணு மூவடியால் உலகளந்தது ரிக் வேதத்தில் சொல்லப்படுகிறது. வேத இலக்கியங்களில் பகுதியான பிராமணங்களில் விஷ்ணுவே வேள்வியாக கருதப்படுகிறார். இவற்றை சங்க இலக்கியங்களிலும் காண முடியும். வேத வேள்வியே விஷ்ணுவின் வெளிப்பாடு என்பது பரிபாடல். ஆக வேதமும் தெரியாது பரிபாடலும் தெரியாது என்று பாண்டவர்கள் கட்டில் கால் போல மூன்று பேர் என்று இரண்டு விரல்களை காட்டியிருக்க வேண்டாம் திரு.சுகி.சிவம்.

‘சாமி உன்னுது பூசை என்னுது’ என்று கூட்டணி வைத்தார்கள் என்று வேறு கொச்சைப்படுத்துகிறார் இந்து சமயத்தை. வேத சமயத்திலும் சரி அதன் பன்மை வளர்ச்சியிலும் சரி பூசகர் முறைகள் வேற்றுமை உடையவை. மிக அண்மை காலங்கள் வரை விலங்கு பலியிடுதல் நம் பெரும் கோவில்களில் இருந்ததும் அதனை அருட்பிரகாச வள்ளலார் முதல் திருமுருக கிருபானந்த வாரியார் வரை எதிர்த்து பல கோவில்களில் இல்லாமல் ஆக்கியதும் வரலாறு. திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் இந்த பன்மை சிறப்பை கொண்டாடுகிறார்.

இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கின் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுஉவந்து
ஏரகத்து உறைதலும் உரியன்;

ஷடாக்ஷர மந்திரத்தை சொல்லி வழிபடுகின்றனர் அந்தணர். அவர்கள் வெளியிலிருந்து வந்தவர் என்றோ அன்னியர் என்றோ அல்லது வடக்கத்தியர் என்றோ அடையாளப்படுத்தப்படவில்லை. மாறாக ‘தொல்குடி’ என காட்டப்படுகின்றனர். இந்த வழிபாட்டை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்கிற அதே முருகன் குறமகள் அளிக்கும் பலியையும் ஏற்றுக்கொள்கிறார். எப்படிப்பட்ட வழிபாடு?

மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக்
குருதியொடு விரைஇய துரவெள் அரிசி
சில்பலிச் செய்து, பல் பிரப்பு இரீஇச்,
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப்
பெருந்தண் கணவீரம் நறுத்தண் மாலை
துணையுற அறுத்துத் துரங்க நாற்றி
நளிமலைச் சிலம் பின் நன்னகர் வாழ்த்தி,
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி
இமிழ்இசை அருவியொடு இன்னியம் கறங்க
உருவப் பல்பூத் து உய் வெருவரக் குருதிச் செந்தினை பரப்பி

இங்கு எங்கும் ஒரு முறை சிறந்தது மறுமுறை தாழ்ந்தது என நக்கீரர் கூறவில்லை. ஒன்று தமிழருடையது மற்றது அன்னியருடையது என அவர் சொல்லவில்லை. வேத வழிபாட்டிலும் ஊன் பலி உண்டு.வேத சமுதாயத்தில் ஆவேச வழிபாடுகள் – induced altered states of consciousness- உண்டு. வாக் சூக்தத்தில் தேவி ஆவேசிப்பதை கூறுகிறாள். ஆனால் வேதத்திலும் சரி சங்க இலக்கியத்திலும் சரி இவ்விரு முறைகளும் ஒன்று இழுக்காக ஒன்று மேலாக கருதப்படவில்லை. அவை இனரீதியாக அடையாளப்படுத்தப்படவும் இல்லை. இவை இரண்டுமே முருகனுக்கு விருப்பமானவைதாம். பின்னாட்களில் உயிர்பலி கொடுத்தலை பௌத்தமும் சமணமும் கீழாக கருதிய போது கண்ணப்பர் மூலம் வழிபாட்டு முறைகளல்ல சிரத்தையும் பக்தியுமே முக்கியம் என காட்டியது இந்து சமயம்.

இங்கு முக்கியமாக நக்கீரர் கூறுவதை கவனிக்க வேண்டும்:

வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட
ஆண்டாண்டு உறைதலும் அறிந்த வாறே.

விளக்கம் [கிவாஜ]: “தன்னை விரும்பும் அன்பர்கள் தாம் விரும்பியபடியே அடைந்து வணங்க அங்கங்கே உறைவதும் நான் அறிந்த வண்ணமாகும்.”

அரவிந்தன் நீலகண்டன் (புதுச்சேரி உரை, பிப்ரவரி 2019)

இதுவே பாரதிய ஞானத்தின் உச்சம். ஏறக்குறைய அனைத்து சமய சாத்திரங்களிலும் பிரஸ்தான த்ரயமோ பக்தி பனுவல்களோ பழந்தமிழ் இலக்கியமோ மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுவது இதுவே:

‘ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி’ என்பது வேதம்.

‘அவ்வவை மேய வேறுவேறு பெயரோய் எவ்வயி னோயும் நீயே’ என்பது பரிபாடல்.

‘யோ யோ யாம் யாம் தனும் பக்த: ச்ரத்தயார்ச்சிதுமிச்சதி/ தஸ்ய தஸ்யாசலாம் ச்ரத்தாம் தாமேவ விததாம்யஹம்’ 7:21

’எவர் எவர் என்னை எந்தெந்த மூர்த்தி வடிவத்தில் சிரத்தையுடன் வழிபட்டாலும் அவரவர் நிலைப்பாட்டை அவ்வடிவத்திலேயே உறுதிகொண்டதாக்குகிறேன்.’ என்பது பகவத் கீதை.

‘யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவார்’ என்பது அருணந்தி சிவாச்சாரியார் வாக்கு.

வேதம் கூறிய பெரும் சத்தியமான ஒருமையின் பன்மை பன்மையின் ஒருமை என்பதை சங்க இலக்கியங்களும் நம் அருளாளர்களும் சொல்லியிருக்கிறார்களே, ஒரு பேச்சுக்கு ஆரிய திராவிட இனவாத கோட்பாட்டை ஒத்துக் கொண்டால் அவர்கள் என்ன ஒப்பந்தம் வைத்து கொண்டிருப்பார்கள்? சுகி.சிவத்தின் பாணியில் சொன்னால் ‘மொழி உன்னுது தத்துவம் என்னுது எப்படி எப்படி மொழி உன்னுது தத்துவம் என்னுது’ என்று சொல்லியிருப்பார்களோ? இது எப்பேர்பட்ட அபத்தம் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

வழிபாட்டு முறைகளில் மாற்றங்கள் வரும். வழிபாட்டு முறைகளில் வேறுபாடுகள் இருக்கும். ஆனால் அவற்றை எல்லாம் அரவணைத்து பன்மையையும் மாற்றத்தையும் அரவணைத்து செல்லும் தர்மம் நம் சனாதன தர்மம். முருகன் என்கிற சுப்ரமணியன் அதில் ஒரு பெரும் ஞான தரிசனம், பக்தி பரவசத்தை ஏற்படுத்தும் பேருரு.

இன்னும் சொன்னால் முருகப் பெருமானுக்கு ஸ்கந்தன் என்று பெயர். கந்தன் என்கிற மிக மிக சகஜமான தமிழ் பெயரின் வேத வடிவம் ஸ்கந்தன். கல்வெட்டு ஆராய்ச்சியாளர் எஸ்.ராமச்சந்திரன், அருமையான கட்டுரையான ‘கழகக் கந்தனும் பரிஷத் முருகனும்’ என்பதில் கூறிய தரவுகள் சில இங்கு முக்கியமானவை: “சிவலிங்கம் என்று சைவர்களால் குறிப்பிடப்படும் வடிவம் சங்ககாலத்தில் கந்து அல்லது கந்தழி என குறிப்பிடப்பட்டது. இலங்கையின் பழமையான வரலாற்று நூலான மகாவம்சத்தில் தமிழகத்தில் லிங்க வழிபாடு வழக்கிலிருந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இக் குறிப்புகள் கந்து வழிபாட்டையே குறிப்பிடுகின்றன என்பதில் ஐயமில்லை. கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் எழுதப்பட்ட பட்டினப்பாலையில் (வரி 249) பூம்புகார் நகரிலிருந்த ‘கந்துடைப் பொதியில் ‘ குறிப்பிடப்பட்டுள்ளது. திருமுருகாற்றுப்படை (வரி 226) முருகன் உறைகின்ற இடங்களாக மன்றம், பொதியில், கந்துடை நிலை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. முருகனை ஸ்கந்தன் என அழைக்கின்ற சமஸ்கிருத மரபு கந்து வழிபாட்டு தொடர்பில் உருவான மரபாகலாம்.”

கந்து என்பதும் ’ஸ்கந்த’ ’ஸ்கம்ப’ என்கிற பிரபஞ்ச பெருந்தூண் வடிவில் நிற்கும் தெய்வத்துடன் தொடர்புடையது. ’கம்பு’ என்பதும் உறவுடைய சொல்லே. அதர்வ வேதத்தில் வரும் ஸ்கம்ப சூக்தம் ஸ்கம்பமாக வெளிப்படும் பிரம்மத்துக்கு வேத மந்திரங்கள் அனைத்துமே பாகங்கள் என கூறுகிறது. எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு பின்னால் இதை அருணகிரிநாத சுவாமிகள் ‘வேத மந்த்ர சொரூபா நமோநம’ என்கிறார்.

ஸ்கந்தனும் முருகனும் பிரிக்க முடியாத ஒரே பேருண்மையின் வெளிப்பாடு. பாரத பண்பாட்டின் மகத்தான ஞான உச்சம் முருகனின் திருவடிவம். இதில் ஆரிய- திராவிட இனவாதத்தையும் வேத கடவுள் வேறு தமிழ் கடவுள் வேறு என பிரிக்கவும் கற்றுக் கொடுத்தவர்கள் காலனியாதிக்க பிரிட்டிஷார். அதனை தொடர்பவர் இன்று இந்து சமய விரோதிகளான கால்டுவெல் சந்ததியார்.

இந்த பிளவுப்பார்வையை – நக்கீரர் சொல்லவில்லை. பரிபாடல் சொல்லவில்லை. கச்சியப்ப சிவாச்சாரியார் சொல்லவில்லை. அருணகிரிநாத சுவாமிகள் சொல்லவில்லை. அருட்பிரகாச வள்ளலார் சொல்லவில்லை. திருமுருக கிருபானந்த வாரியார் சொல்லவில்லை. இவர்களுக்கு இல்லாத ஆராய்ச்சி பார்வையும் அருட்பார்வையும் கால்டுவெல் சந்ததியாருக்கு ஏற்பட்டுவிடவும் இல்லை.

தன் வாழ்க்கைக்கு இந்து மத கோவில்களில் இந்து சமய கூட்டங்களில் ஆன்மிக பேச்சாளராக வாழ்ந்துவரும் ஒருவர், ஆன்மிக பெரியார்களின் அருட்பார்வையையும் ஆழமான ஆராய்ச்சிப் பார்வையையும் விடுத்து கால்டுவெல் பார்வையுடனும் சீமான் பார்வையுடனும் நம் தமிழ் கடவுளை அணுகுவது உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது அன்றி வேறென்ன?

வேதனை. வெட்கம்.

********

இப்பதிவை ஜடாயு தனது ஃபேஸ்புக் பதிவில் வெளியிட்டபோது மறுமொழிகளில் நிகழ்ந்த உரையாடல்:

மரபின் மைந்தன் முத்தையா: சுப்ரமண்ய புஜங்கத்தை மேற்கோள் காட்டி மஹா பெரியவர் சொல்லியிருக்கிற பகுதி இது. சுப்ரமணியன் வைதீகக் கடவுள் என்பதாக இதிலும் காணப்படுகிறதே.

அரவிந்தன் நீலகண்டன்: தாங்கள் மேற்கோள் காட்டியுள்ள பகுதி இதற்கும் முன்பாகவே சுகி.சி ஆதரவாளர்களிடமிருந்து வரும் என எதிர்பார்த்தேன். வந்திருக்கிறது. தவத்திரு சந்திரசேகரேந்திர சுவாமிகள் இங்கு சொல்லியிருப்பதை கொஞ்சம் கவனியுங்கள். ’‘ப்ரஹ்மம்’ என்றால் ஸ்த்யமான பரமாத்ம ஸ்வரூபம் என்று மாத்ரமே அர்த்தம் பண்ணிக்கொள்கிறோம். ‘ப்ரஹ்ம’ பதத்துக்கு இன்னொரு முக்யமான அர்த்தம் ‘வேதம்’ என்பது.’ – ஆனால் சுப்ரமணியர் என்கிற பெயருக்கு அவர் கொடுக்கிற நேரடி பொருளை பாருங்கள்: ‘வேதங்களின் பரம தாத்பர்யமான ப்ரஹ்மமாகிற பரமார்த்த ஸ்வரூபமாகவே இருப்பதால் ஸுப்ரஹ்மண்யராக இருக்கப்பட்ட மூர்த்தி…’ – இதுதான் சுப்ரமணியர் என்பதற்கான நேரடி பொருள்- ‘… வைதிகத்தின் விசேஷ தெய்வமாக வைதிகர்களின் விசேஷ தெய்வமாக இருப்பதாலும் ஸுப்ரஹ்மண்யராகிறார்’ ஒன்று முதன்மை காரணம், மற்றொன்று அதிலிருந்து பெறப்படும் காரணம். ஆனால் சுகி.சி கூறுவது இதுவன்று. சுப்ரமணியர் பிராம்மணர்களின் அல்லது பிராம்மணியத்தின் தெய்வமாக இருப்பதால் அவர் எப்படி குறமகளை மணம் செய்யமுடியும் என கேட்கிறார். தவத்திரு காஞ்சி சங்கராச்சாரியார் கூறும் வைதிகம் வேறு. சுகி.சிவம் பேசும் பிராம்மணியம் வேறு. பின்னது காலனிய கருத்தாக்கம். அதன் படி பிராம்மணிய கடவுள் குறமகளை மணம் செய்ய முடியாது. ஆனால் தவத்திரு சந்திரசேகரேந்திர சுவாமிகளின் வைதீக தெய்வம் குறமகளை மணமுடிக்க முடியும். இந்த அடிப்படையான திருகல் வேலையை சுகி.சி செய்வதுதான் அவருடைய வக்கிரத்தின் அல்லது அறியாமையின் அல்லது இரண்டினுடையவும் வெளிப்பாடு.

ம.மை.முத்தையா: வைதிகம் – பிராமணீயம் இரண்டிற்குமான வேறுபாடு நுட்பமான இடம் தான் . நன்றி. பிரஹ்மண்யம் – பிராமணீயம் இரு சொற்களும் வேறுபடும் இடத்தை விளக்கினால் நலம்.

ஜடாயு: பிராமணீயம் – Brahminism என்று நீங்கள் குறிப்பிடுவது 20ம் நூற். நவீன கருத்தாக்கம் – மார்க்சியம், பெண்ணியம் போல. பிராமணர்களின் சாதி ரீதியான கருத்தியல் என்ற பொருளில் அது கட்டமைக்கப் பட்டது. அதற்கும் இந்திய மரபுக்கும் தொடர்பில்லை. மரபு சார்ந்து வைதிகம், பிரஹ்மண்யம் இரண்டும் ஒன்றே. பிரம்மத்தை / வேதத்தைக் கொண்டிருத்தல், சார்ந்திருத்தல் என்கிற பிராம்மண இயல்பு. தமிழில் அதற்கான நேர்ச்சொல் அந்தண்மை.

*******

இதைத் தொடர்ந்து சுகி. சிவம் மேலும் அளித்த விளக்கங்களுக்கு அ.நீ எதிர்வினை:

விளக்கம் கொடுக்கிறேன் பேர்வழி என்று சுகி.சிவம் மீண்டும் உளறியுடதுடன் விஷமும் கக்கியிருக்கிறார். அவரை தனிப்பட்ட தாக்குதல் செய்துவிட்டோமாம். அவருடன் பழகிய பலரும் அவர் சொற்பொழிவு விஷயத்தில் பணத்துக்காக செய்த அழிச்சாட்டியங்களை பதிவு செய்திருக்கிறார்கள். எனவே அழுத்தியே சொல்லலாம் அவர் செய்வது அடிப்படையில் பேச்சு வியாபாரமேதான். அது தவறொன்றுமில்லை. அவருடைய அழிச்சாட்டியங்கள் கூட அவரது உரிமைதான். அது அவருக்கும் அவரை விலை கொடுத்து அழைப்பவருக்கும் இடையிலான விஷயம். அதில் தலையிட எவருக்கும் உரிமை கிடையாது. ஆனால் பேச்சு வியாபாரம் பேச்சுவியாபாரமேதான்.

ஊகித்தது போல உடனடியாக தவத்திரு சந்திரசேகரேந்திர சுவாமிகளை சரண்டைந்திருக்கிறார் சுகி.சி. எவரோ சுகி.சியின் வீடியோவை முன்னும் பின்னும் வெட்டி அவர் கண்டனம் செய்த விஷயத்தை அவர் சொன்னது போல் போட்டுவிட்டார்களாம். நிச்சயம் அவர்கள் செய்தது தவறுதான். ஆனால் தவத்திரு சந்திரசேகரேந்திர சுவாமிகள் தெளிவாக சொன்ன விடயத்தை வெட்டி தனக்கு சாதகமாக ஒரு சிலவரிகளை மட்டும் எடுத்து, தவத்திரு காஞ்சி சுவாமிகள் சொன்னதற்கு நேர் எதிராக நிலைபாடு கொள்கிறீர்களே திருவாளர் பேச்சு வியாபாரி அவர்களே அது எவ்வளவு அசிங்கம்? எவ்வளவு மன வக்கிரம் அதற்கு வேண்டும்!

இதோ சுவாமிகள் கூறியவற்றை தருகிறேன்: “வடபுலத்தின் பல ராஜ வம்ஸங்கள் அவரை ‘ப்ரம்மணிய குமாரர்’ என்று குலதெய்வமாகக் கொண்டிருக்கின்றன. அந்த ராஜாக்கள் தங்களையும் ‘ப்ரம்மண்யர்’கள் என்றே சொல்லிக் கொள்வார்கள். ‘ஸுப்ரம்மண்ய’த்தின் முதல் எழுத்தைத் தள்ளினால் ‘ப்ரம்மண்யம்’ தானே நிற்கிறது? இங்கே நம் தமிழ் நாட்டில் வேதத்துக்கும் சமஸ்கிருதத்துக்கும் ரொம்பத் தொண்டு செய்திருக்கிற காஞ்சிப் பல்லவ ராஜாக்களும், தங்களை சிவ பக்தியில் சிறந்த ‘பரம மாஹேசுவரர்களாகவும்’ விஷ்ணு பக்தியில் சிறந்த ‘பரம பாகவதர்’களாகவும் சொல்லிக் கொள்வதோடு, ஸ்கந்த உபாஸனையை விசேஷமாகச் செய்த ‘பரம ப்ராம்மண்யர்’களாகவும் வர்ணித்துக் கொண்டிருக்கிறார்கள். சாஸனங்களில் இவற்றைப் பார்க்கிறோம். … ஆனால் இந்தக் காலத்தில் தமிழ் மதம் வேறு, வேதநெறி வேறு என்று பேதம் செய்வதில் சிலருக்கு ருசி இருந்து வருகிறது. இது ஆராய்ச்சி என்று சொல்லிக் கொண்டு நம் ஜனங்களை பேதப்படுத்துவதற்காக வெள்ளைக்காரர்கள் செய்த விஷமத்தின் அனர்த்தமான விளைவு. வேத மதம்தான் என்றைக்கும் தமிழ் மதமாக இருந்திருக்கிறது என்பதுதான் என் அபிப்பிராயம். … வைதிக நெறியை வளர்க்கவே ஏற்பட்ட ஸ்வாமி அவர் என்பதற்கு “ஸுப்ரம்மண்யர்” என்ற பெயரே போதும் என்று சமநிலையிலிருந்து (Unbiased) பார்த்தால் தெரியும். பிரம்மண்யத்தை – அந்தணர்கள் பற்றி ஒழுகுகிற வேத நெறியை – வளர்க்கிறவர் சுப்ரம்மண்யர் என்பது வெளிப்படை. … தொன்மை வாய்ந்த பத்துப்பாடலில் முதலாவதாக இருக்கிற நூல் அது. தமிழ்நாட்டில் குறவரினத்திலிருந்து சகல சமுதாயத்தினரும் சுப்ரம்மண்யரை எப்படி எப்படி வழிபட்டார்கள் என்பதை அது சொல்கிறது.”

இது ’தெய்வத்தின் குரல் முதல் பாகம்’. இனி ’தெய்வத்தின் குரல் ஆறாம் பாகம்.’:

“ஸுப்ரஹ்மண்யன் என்றால்? நல்ல ப்ரஹ்மண்யன். தேர்ந்த ப்ரஹ்மண்யன். ப்ரஹ்மண்யன் என்றால்? ‘ப்ரஹ்மம்’ என்றால் ஸத்யமான பரமாத்ம ஸ்வரூபம் என்று மாத்ரமே அர்த்தம் பண்ணிக்கொள்கிறோம். ‘ப்ரஹ்ம’ பதத்துக்கு இன்னொரு முக்யமான அர்த்தம் ‘வேதம்’ என்பது. வேதத்துக்கு ‘ப்ரஹ்ம’ என்று ஒரு பெயர். … பல இடங்களிலும் ‘ப்ரஹ்ம’ என்றால் வேதம் என்றே அர்த்தம். வேதத்தை அநுஸரிப்பது, அநுஷ்டிப்பது – அதாவது வைதிகம் என்பதுதான் ப்ரஹ்மண்யம். அதை முக்கியமாகக் கொண்டவர்களே ப்ராஹ்மணர்கள்” என்று சொல்லி தவத்திரு சந்திரசேகரேந்திர சுவாமிகள் கூறுகிறார்: “வேதங்களின் பரம தாத்பர்யமான ப்ரஹ்மமாகிற பரமாத்ம ஸ்வரூபமாகவே இருப்பதால் ஸுப்ரஹ்மண்யராக இருக்கப்பட்ட மூர்த்தி வைதிகத்தின் விசேஷ தெய்வமாக வைதிகர்களின் விசேஷ தெய்வமாக இருப்பதாலும் ஸுப்ரஹ்மண்யராகிறார்”.

எனவே இங்கே முதன்மை (primary) பொருள் ’வேதங்களின் பரம தாத்பர்யமான ப்ரஹ்மமாகிற பரமாத்ம ஸ்வரூபமாகவே இருப்பதால் ஸுப்ரஹ்மண்யர்’ என்பது. ப்ராஹ்மண்யர்கள் என்பது கூட, பல்லவ ராஜாக்கள் ஸ்கந்த உபாசனையை விசேடமாக செய்தமையால் தம்மை சாஸனங்களில் ’ப்ராம்மண்யர்’ என சொல்லியிருப்பதை சுவாமிகள் முதல் பாகத்தில் சுட்டியிருக்கிறார்.

பேச்சு வியாபாரி சுகி.சி முதல் காணொளியில் என்ன சொல்கிறார்? பிராம்மணர்களின் தெய்வம் எப்படி தழிழ் தெய்வமாக இருக்க முடியும் என கேட்கிறார். ஆனால் அவர் தனக்கு சாட்சி பிரமாணமாக அழைக்கும் தவத்திரு காஞ்சியடிகள் என்ன கூறுகிறார்? அவர் தமிழ் தெய்வம் என்கிறார். தமிழ் vs. வைதீகம் எனும் இரட்டையை மறுக்கிறார்.

திராவிட கழகமும் இந்து விரோதிகளும் பிராம்மணியத்துக்கு ஒரு கட்டமைப்பை செய்துள்ளனர். அந்த கட்டமைப்பின் அடிப்படையில் மட்டுமே சுப்ரமணியர் குறத்தியை மணக்க முடியாது; தமிழ் தெய்வம் ஆக முடியாது. ஆனால் ’வேதங்களின் பரம தாத்பர்யமான ப்ரஹ்மமாகிற பரமாத்ம ஸ்வரூபமாகவே இருப்பதால் ஸுப்ரஹ்மண்யர்’ என அழைக்கப்படும் கடவுளுக்கு எப்படி அத்தகைய தடைகள் இருக்க முடியும்?

எனவே உண்மையிலேயே இந்த பேச்சு வியாபாரிக்கு தவத்திரு சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் மரியாதை இருக்குமென்றால் (அப்படி உண்மையிலேயே மரியாதை இருந்தால் அவரை ஈவெராவுடன் ஒப்பிடுவாரா என்பது ஒரு புறமிருக்க), இப்படி சுவாமிகளின் நிலைப்பாட்டுக்கு நேர் எதிரான தன் வக்கிர உளறலுக்கு ஓட்டையடைக்க சுவாமிகளின் ஒரு சில வார்த்தைகளை மட்டும் பயன்படுத்துவாரா?

பேச்சு வியாபாரி சுகி.சிவம் அடுத்து மேலும் சளைக்காமல் உளறுகிறார். வைதீக மரபு நெருப்பு வழிபாடாம் ஆனால் திராவிட வழிபாடு நீர் வழிபாடாம். இரண்டும் இணைந்ததால்தான் வேள்விகளில் பூர்ண கும்பம் இணைந்ததாம். இது சுருதி சுத்தமாக ஆரிய-திராவிட இனவாதக் கோட்பாட்டாளர்களின் உளறல். ஹரப்பா, மொஹஞ்சதாரோவில் பெரிய நீர் குளங்களைக் கண்ட பிரிட்டிஷ் அகழ்வாராய்ச்சியாளர்கள், அப்பண்பாட்டை வேத பண்பாட்டிலிருந்து பிரித்துக் காட்ட விரும்பினர். எனவே வேத பண்பாட்டின் மையம் நெருப்பு சடங்குகள் (வேள்விகள்) என்றும் சிந்து சமவெளி (எனவே திராவிட) பண்பாட்டின் மையத்தில் நீர்சடங்குகள் இருந்தன என்றும், பின்னர் இந்து மதத்தில் இவை இரண்டும் இணைந்தன என்றும் கூறினர். இதெல்லாம் 1920களில்.

ஆனால் 1970களில் அகழ்வாராய்ச்சிகள் லோதல் (எஸ்.ஆர்.ராவ்), கலிபங்கன் (பி.பி.லால்) ஆகிய இடங்களில் தெளிவாக அக்னி வழிபாட்டு மேடைகளை வெளிக்கொணர்ந்தன. அதே நேரத்தில் வேதத்திலேயே வருணன் வழிபாடு உள்ளது. நதி சூக்தம் உள்ளது. நீரில் செய்யக் கூடிய சடங்குகள் வைதீக வாழ்க்கை முறையுடன் இணைந்தவை. ஆனாலும் நம் பேச்சு வியாபாரி சொல்கிறார் நெருப்புதான் வைதீகம், நீர் வழிபாடு திராவிடம், பின்னாட்களில் இந்து மதத்தில் இவை இணைந்தன.

இதன் பின்னால் இருக்கிற ஒரு பிழைப்பார்வையை இங்கே சுட்ட வேண்டும். இந்தியாவில் அகழ்வாராய்ச்சி செய்த பிரிட்டிஷாரும் சரி பிரிட்டிஷ் கல்வி கற்றவர்களும் சரி ஒரு சமுதாயத்தில் ஒரு இனமும் ஒரு குறிப்பிட்ட வழிபாடும் மட்டுமே இருக்கும் என கருதியவர்கள். ஒரே சமுதாயத்தில் வழிபாட்டு பன்மை இருக்க முடியும் என்பது அவர்களின் கருத்தியல் ஏற்க முடியாத ஒன்று. இங்கோ அடிநாதமே ‘ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி’ என்பதுதான். நீரின் உயிர் கொடுக்கும் பிரவாகத்திலும், நெருப்பின் இருளழித்து மேலெழும் பிழம்புகளிலும் பிரம்மத்தை உணர்ந்தவர்கள் வேத ரிஷிகள். இந்த பாரத த்ரிசனத்தை புரிய முடியாதவர்களால், நெருப்பு சடங்கு வைதீகம், நீர் சடங்கு திராவிடம் என கோடு கிழித்துவிட்டு பின்னர் இரண்டும் இணைந்தன என்றுதான் பார்க்கமுடியும். அதைத் தாண்டிக் காணும் பார்வைத் திறன் இல்லாதிருப்பது பிரச்சனையல்ல. ஆனால் தன் பார்வைக் குறைப்பாட்டை பரந்த அறிவாக நீட்டி முழக்கி பேசாமல் இருக்கலாம் வெறுப்பையும் பிரிவினையையும் விதைக்கும் பேச்சு வியாபாரி.

படத்தில் இடப்பக்கம் இருப்பது லோத்தலில் உள்ள அக்னி வழிபாட்டு மேடையும் அதன் அருகில் குடுவையும். வலப்பக்கம் அக்னி வழிபாட்டு மேடைகள் கலிபங்கன். இரண்டுமே ஹரப்பா பண்பாட்டுக் கேந்திரங்கள்.

சுகி.சியின் பிற உளறல்களுக்கான பதில்கள் தொடரும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7471
Date:
RE: முருகனும் சுப்பிரமணியரும் வேறுவேறா? : ஓர் விவாதம் By அரவிந்தன் நீலகண்டன்
Permalink  
 


சுகி சிவத்துக்கும் எனக்கும் அப்படி ஒன்றும் நெருங்கிய பழக்கம் கிடையாது. தனிப்பட்ட வகையில், நான் நெருங்கிய பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு அவர் எளியவர் அல்லர் என்பதுதான் காரணம்! அது அவர் தான் ஒரு புகழ்பெற்ற பேச்சாளர் என்று தன்னைத்தானே நினைத்துக் கொண்ட கர்வத்தின் பால் அமைந்தது! எனவே அவர் அருகே நெருங்க எனக்கு விருப்பம் இல்லாமல் போனது!

இப்படி நான் நினைத்ததற்குக் காரணமும் உண்டு..!

விகடன் பிரசுரத்தின் பொறுப்பாசிரியராக நான் இருந்த 2007ல் ஒரு சம்பவம்…!

சென்னை கம்பன் கழகம், கிருஷ்ணா ஸ்விட்ஸ், ஆழ்வார்பேட்டை ஆஸ்திக சமாஜம் இணைந்து ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

கம்பனில் ராமன் எத்தனை ராமன் என்பது தான் அந்த நிகழ்ச்சியின் தலைப்பு!

கம்பனின் எட்டு கதாபாத்திரங்களை முதன்மையாக எடுத்துக்கொண்டு நிகழ்ச்சி! கம்பனில் ராமன் ஒரு புதிய பார்வை, ராமன் ஒரு மகனாக, ஒரு மாணவனாக, ஒரு சகோதரனாக, ஒரு கணவனாக, ஒரு வீரனாக, ஒரு தலைவனாக, ஒரு மனிதனாக என்று எட்டுத் தலைப்புகளில் அந்த நிகழ்ச்சி நடந்தது!

டாக்டர் சுதா சேஷய்யன், முனைவர்கள் கு.ஞானசம்பந்தன், லட்சுமிநாராயணன், தெ.ஞானசுந்தரம், சத்தியசீலன், திருவாளர் சுகிசிவம், முனைவர் அறிவொளி, முனைவர் செல்வக்கணபதி என எட்டு அறிஞர் பெருமக்கள் ஒவ்வொரு நாளும் மேற்கண்ட தலைப்புகளில் உரை நிகழ்த்தினார்கள்!

இந்த எட்டு உரைகளையும் தொகுத்து விகடன் பிரசுரத்தின் சார்பில், கம்பனில் ராமன் எத்தனை ராமன் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் ஆக்கினோம்! இதற்காக என் குழுவில் இருந்த இளவல் பாசுமணி இந்த உரைகளைத் தொகுக்கும் பணியை ஏற்றார். அவரும் தினமும் சென்று இவர்கள் உரையைத் தொகுத்து ஒரு புத்தகம் ஆக்கினோம். மேலும் ஒரு புதிய முயற்சியாக, திருவாளர் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி தங்கள் நிறுவன ஸ்பான்சராக இந்த 8 உரைகளையும் ஒரு சிடியில் பதிந்து இலவசமாகத் தருவதாக ஏற்றுக் கொண்டார். அது இந்த நூலுடன் இலவசமாக வழங்க ஏற்பாடானது.

இருப்பினும், இந்த எட்டு அறிஞர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை சன்மானமாக வழங்கவும் ஆசிரியர் குழுவில் அனுமதிக்கப் பெற்று, அதற்காக இந்த எட்டு அறிஞர்களிடமும் தொலைபேசி வாயிலாக தகவல் சொல்லி அவர்களின் ஒப்புதல் பெற வேண்டிய வேலையில் நான் இருந்தேன். அவர்களிடம் தொலைபேசி வாயிலாக ஒப்புதல் பெற்று பிறகு கடிதம் தயாரித்து அனுப்பினேன்.

அப்போது சுகிசிவம் அவர்களிடமும் தொடர்பு கொண்டு பேசினேன். நான் விகடன் பிரசுரத்தில் இருந்து பேசுகிறேன்… என்னுடைய பெயர்… என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் மேற்கண்ட தகவலை சொன்னேன்!

அதற்கு சுகிசிவம் உச்ச பட்ச சப்தத்துடன் சொன்ன வார்த்தை.. ஒரு புகழ்பெற்ற பேச்சாளரிடம் பேசக்கூடிய பேச்சா இது? எனக்கு இந்த அளவுக்கு சன்மானம் கொடுப்பதாகச் சொல்வதற்கு வெட்கமாக இல்லையா? போடாதீங்க..! நான் என் உரைகளை சிடி பதிந்து போடுகிறேன். நீங்கள் புத்தகத்திலும் போட வேண்டாம்… சிடியும் போடக்கூடாது என்று எடுத்த உடனேயே எடுத்தெறிந்து பேசினார்.

என்னை ஏனோ அவமானப்படுத்தியது போல் அப்பொழுது நான் உணர்ந்தேன். 30 வயதில் நின்ற ஓர் இளைஞனாக, எனக்குள் கடும் மனக் கொந்தளிப்பு. ஆனால் அதை நான் வெளிக்காட்டாமல், சரிங்க சார்… நான் அதைப் போடவில்லை என்று சொல்லி நிறுத்திக் கொண்டேன்.

அவரது பேச்சு வெகு நேரம் என் மனத்தைப் பாடாய்ப் படுத்தி எடுத்தது. ஆனால் பின்னர் ஒருவாறு சமாதானம் ஆனது மனம். அதாவது, சுகி சிவம் என்னை ஒன்றும் தனிப்பட்ட வகையில் அவமானப் படுத்தவில்லை; நான் அப்பொழுது என்னை முன்னிறுத்திக் கொள்ள வில்லை விகடன் பிரசுரத்தின் சார்பில் அதன் பொறுப்பாசிரியர் என்றுதானே பேசினேன்! இந்தப் பணியும் விகடனுக்கானது… எனக்கானது அல்ல…! சுகிசிவம் அவமானப்படுத்தியது என்னையல்ல! விகடன் பிரசுரத்தை! விகடன் குழுமத்தை! எந்த விகடன் குழுமம், சக்தி விகடன் தொடங்கும்போது, கௌரவ ஆசிரியராக சுகி சிவத்தை முன்னிறுத்தி அழகு பார்த்ததோ… அந்த விகடனைத்தான் அவர் அவமானப் படுத்தி பேசியிருக்கிறார்! … என்று அந்த அவமானப் படுத்தலில் இருந்து என்னை விடுவித்துக் கொள்வதற்காக என் மனத்தை ஒருவாறு சமாதானம் செய்து கொண்டேன்!

எனவே, சுகிசிவம் உரையை மட்டும் எடுத்து விட்டு மீதி 7 பேருடைய உரைகளை மட்டும் தொகுத்து கம்பனில் ராமன் எத்தனை ராமன் புத்தகமாக வெளிவந்தது!

அடுத்து இன்னோர் அனுபவம்! அப்போது நான் சக்தி விகடனில் பொறுப்பாசிரியர்! சுகிசிவம் ஒரு தொடர் எழுதிக் கொண்டிருந்தார்! இளைஞர் சக்தி என்ற பகுதியில்!

ஒரு கட்டுரையில் ஓரிடத்தில் விஷயங்கள் எனக்கு மிகவும் நெருடலாகவே இருந்தது. சிறுமையைச் சொல்லப் புகுந்த சுகி சிவம், காதி கிராமோத்யோக் பவன் கடலை உருண்டை மாதிரி என்று அளவில் சிறிது என்ற த்வனியில் சற்று கொச்சைப்படுத்தி கிண்டல் செய்திருந்தார்! இன்னோர் இடத்தில் சாதுக்களை கிண்டல் செய்திருந்தார்! அவை எனக்கு தரக்குறைவாகவே பட்டது.

ஆகவே அந்த இரண்டையும் எடிட் செய்து தூக்கி விட்டு ப்ரூப் அனுப்பி இருந்தேன்! அதை படித்துவிட்டு, அவர் “என்னுடைய எழுத்தை எடிட் செய்யும் அளவுக்கு எந்த பெரிய புத்திசாலி/ அறிவாளி சக்தி விகடனில் இருக்கிறான்” என்று தொலைபேசியில் படு கேவலமாக பேசினார்! அதையும் அப்போது நான் தாங்கிக் கொண்டேன்!
சக்தி விகடனில் நான்தான் முதல் ஆசிரியராக இருந்தேன் தெரியுமா? எனக்கு எழுத தெரியாதா? எப்படி எழுத வேண்டும் என்று எனக்கு தெரியும்? என் கட்டுரையில் கை வைப்பதாக இருந்தால் நான் எழுதுவதை நிறுத்திக் கொள்கிறேன். எந்தக் கொம்பனுக்கும் என் எழுத்தில் கை வைக்கும் உரிமை இல்லை” என்று சொல்லி போன் அழைப்பை துண்டித்துவிட்டார்.

ஆனால்… சற்று நேரத்தில் அவராகவே என் செல்போனுக்கு அழைத்தார். “நான் அப்படி பேசியிருக்கக் கூடாது! தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க எதுவாக இருந்தாலும் என்னிடம் பேசி விளக்கம் கேட்கலாம்.” என்றார்.

இவற்றை நான் வெளியில் சொன்னதில்லை…! ஆனால் என் தனிப்பட்ட கூகுள் கேலண்டரில் இந்த இரு சம்பவங்களையும் பதிந்து, வருடம் தோறும் நினைவூட்டும் செட்டிங்ஸில் பதிந்து கொண்டேன்!

என் இதழியல் பணியில் இப்படி எத்தனையோ?! அவற்றையெல்லாம் நான் வெளியில் சொல்ல இயலாது! அப்படியே வெளியிடவும் முடியாது! ஆசிரியப் பொறுப்புக்கான ரகசிய காப்பை நான் மீறவும் முடியாது!

ஆனால்… 2004ல் நான் மஞ்சரி ஆசிரியராக இருந்த போது, இவரது சகோதரர் எம்.எஸ்.பெருமாள் (வானொலி பணியில் இருந்தவர்) தனது தந்தை சுகி சுப்பிரமணியம் குறித்து ஒரு கட்டுரையை கொடுத்திருந்தார். அதைப் படித்தபோது… பிரமிப்பு ஏற்பட்டது நிஜம்!

இவற்றால் நான் பட்ட சூடு, மீண்டும் ஒரு முறை சுகிசிவத்துடன் தொடர்பு படுத்திக் கொள்ளும் எண்ணம் எழாமல் போனது! ஆனால் அதற்கு சோதனையாக மீண்டும் ஒரு வாய்ப்பு! கல்கியின் தீபம் பத்திரிகையில் பொறுப்பாசிரியராக இருந்தேன்! அப்போது சுகிசிவம் நம் தீபத்தில் ஒரு தொடர் எழுதினால் நன்றாக இருக்கும்; கேளுங்களேன்… என்று கல்கி குழும ஆசிரியர் சொன்னார்! நான் வேண்டாமே என்று இழுத்தேன்! நமக்கு சரியாக வராது என்று சொல்லி.. சற்று தயங்கினேன்!

பின்னர் நம் பத்திரிகை உலக மூத்த நண்பரிடம் பேசிய போது இதைச் சொல்ல… அவரோ, நீ சுகி சிவத்தை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய். அவர் எங்கள் நட்பு வட்டத்தில் சிறந்த நபர். சிலருக்கு உதவிகள் செய்திருக்கிறார். உனது பழைய அனுபவங்கள் ஏதோ புரிந்துணர்வற்ற தன்மையில் இருந்திருக்கும். முதலில் இத்தகைய எண்ணங்களை உன் மனத்தில் இருந்து அகற்றி விட்டு… ஒரு தொடர் எழுத ஏற்பாடு செய் என்றார்.

அந்த மூத்த நண்பரின் மீதிருந்த மரியாதையால், அவர் சுட்டிக் காட்டியபடி, நம் மனம்தான் கோணலோ என்று எண்ணிக் கொண்டு… என் மனத்தை நேராக்கி… அவர் கூறிய படியே செய்தேன். அதன்படி சுகி சிவமும், சித்தம் அழகியார் என்ற தலைப்பில் தாம் எழுதுவதாக ஒப்புக் கொண்டார்.

அதன்படி முதல் ஆறு பகுதிகள் ஒழுங்காக சென்று கொண்டிருந்தன! ஏழாவது பகுதியில் என் ஸ்வதர்மத்துக்கு ஒரு சோதனை! மூன்று பக்க கட்டுரையில் இரண்டரை பக்கத்துக்கு… யேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் என்று… சில சம்பவங்களாக ஒரு நீதி நெறி போதனை! அதைப் படித்ததும் எனக்கு ஒரு ஷாக்! உடனே நான் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன் மின்னஞ்சலில்…

“சித்தம் அழகியார் பகுதி 7 ப்ரூப் அனுப்பப் பட்டுள்ளது.

தீபம் வாசகர்கள் – முழுவதும் இந்து ஆன்மிக அன்பர்களே.
ஒரு மகான் என்ற வகையில் இயேசு குறித்த சம்பவத்தை தாங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். இருப்பினும், கூடுமானவரை இந்து, புத்த, ஜைன, சீக்கிய சூஃபி அடியார் சம்பவங்கள், கருத்துகளைத் தவிர்த்து மற்ற மதக் கருத்துகளைத் தவிர்க்கலாமோ என்பது அடியேன் கருத்து!” – என்று எழுதினேன்!

காரணம், ஓர் இதழின் வாசகர் வட்டம் எப்படிப்பட்டது, எதைப் படிக்கிறார்கள், எதை விரும்புகிறார்கள், எதைக் கொடுத்தால் நம் வாசகர் திருப்தியடைவார்கள், அவர்களை எப்படி மேலும் சிறப்புறச் செய்வது… – இதுதான் அந்த இதழின் ஆசிரியரின் பொறுப்பாக இருக்க வேண்டும், இருக்க முடியும்!

ஒரு முறை மஞ்சரியில் கிறிஸ்து குறித்த வெளிநாட்டு இதழில் வந்த அழகிய ஆங்கிலக் கட்டுரையைப் படித்து, அதன் தமிழாக்கத்தைப் போட… அதைப் பாராட்டி கடிதம் எழுதியவர்களை விட, கிறிஸ்துவ அமைப்புகளில், பிரசாரகர்கள் அனுப்பி வைத்த நோட்டீஸுகளும் சிறு சிறு பிரசுரங்களுமே மேஜையை நிரப்பி விட்டன. அதில் இருந்து கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருந்தேன்!

எனது மின்னஞ்சலைப் படித்து விட்டு, சுகி சிவம் ஒரு பதில் கடிதம் அனுப்பியிருந்தார்….

தங்கள் கருத்தை அறிந்து கொண்டேன்! ஓர் இந்து மத இதழாசிரியர் என்ற முறையில் தங்கள் யோசனை சரியானதே. ஆனால் ஓர் ஆன்மீக அலைவரிசையில் ஆனந்த அனுபவத்தில் திளைக்கும் என்னால் இந்தச் சிறைப்படல் சாத்தியமில்லை. சிறகுகளை முறித்துக் கொண்டு சிறையில் அடைபடும் அவசியமும் எனக்கு இல்லை. இப்போது இந்த இதழுடன் கட்டுரையை நிறுத்திக் கொள்வோம். பின்னர் திருவருள் சித்தம் என்று அவர் ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்!

இருப்பினும், அடுத்த இரு நாட்களில் அவராகவே தொடர்பு கொண்டு, “நீங்கள் சொன்னதை யோசித்துப் பார்த்தேன்! கட்டுரையில் ஓவர் டோஸ் கொடுத்து விட்டோமோ என்று எனக்கு தோன்றுகிறது! இனி அவற்றைக் குறைத்துக் கொள்கிறேன்” என்றார்

ஆக இவற்றால் நான் சொல்ல வருவது… அவருடைய இயல்பே இதுதான்! துவக்க காலத்திலிருந்தே தன்னை ஒரு மதசார்பற்ற பேச்சாளராக முன்னிலைப் படுத்திக் கொள்ள… அனைத்து மதத்தினருக்கும் ஏற்றவராக தன்னை முன்னிலைப் படுத்த… அனைத்து மதக் கருத்துகளையும் கரைத்துக் குடித்தவராக தன்னை மக்களிடம் எடுபட வைக்க வேண்டும் என்பதற்காக… பெரும்பான்மை இந்துக்களின் மத்தியில் கிறிஸ்துவ இஸ்லாம் பிரசாரகராக தன்னை நிறுத்திக் கொண்டாரோ என்றுதான் எனக்குத் தோன்றுகிறது! மற்றபடி அவர், ஹிந்து மத விரோதி என்றோ, கிறிஸ்துவத்துக்கு மாறி விட்டார் என்றோ இப்போது கூறப் படும் குற்றச்சாட்டுகள் அர்த்தமற்றது என்பேன். சுகிசிவம் – பெரும்பான்மை இந்துக்களிடையே காணப் படும் மதசார்பற்ற அறிவுஜீவித்தனக் கண்ணொட்டத்தின் ஓர் சாதாரண அடையாளம்!

மற்றபடி, சுகிசிவம் ஓர் ஆன்மீக பயிற்சியாளர் அல்லது கடை பிடிப்பாளர் அல்லர்! சுவாமிஜிக்கள் போல், அவர் ஞான யோகத்தையோ, கர்ம யோகத்தையோ, பக்தி யோகத்தையோ முழுதாய் உணர்ந்தவர் இல்லை! அவர் ஒரு பேச்சாளர் மட்டுமே! கடைப்பிடிப்பாளர் அல்லர்!

எனவே இந்த மார்க்கங்களை அவர் உள்ளூர உணர்ந்துகொண்டு அவற்றை வெளிப்படுத்தியதில்லை என்பேன். நாடக மேடை நடிகர்கள் எத்தனையோ பேர்… சினிமா நடிகர்கள் எத்தனையோ பேர்… கதாபாத்திரமாக ஒவ்வொரு காட்சியிலும் நடித்துவிட்டுப் போவார்கள். அதற்காக அவர்கள் நிஜ வாழ்க்கையில் அப்படியே வாழ்வார்கள் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது.

சுகி சிவம் வகையறாக்களும் நாடகத் தன பேச்சாளர்களே! அவர் பேசியதை அவர் வாழ்நாளில் ஒன்றாவது தான் கடைப்பிடித்திருப்பாரா என்பது சந்தேகத்துக்கு உரியது!

அவர் உண்மையிலேயே தான் பேசியவற்றை தன் வாழ்வில் கடைபிடித்து இருப்பார் என்றால் அவரை எத்தனையோ பேர் பின்பற்றி இருப்பார்கள்! பொதுமேடையில் பேசுபவர்கள் நாலு பேர் கை தட்டுவதற்காக நாலைந்து ஜோக்குகள் செய்து சிலரை யோசிக்க வைத்து தங்கள் பர்ஸை நிரப்பிக் கொண்டு சென்றுவிடுவார்கள்! அப்படிப்பட்ட ஒரு நபர் சுகிசிவம்! அவரிடம் பக்தி மார்க்கத்தின் உள்ளர்த்தத்தை, ஞான கர்ம மார்க்கங்களின் சிறப்பியல்புகளை எதிர்பார்த்தல் வீண்.

இதைச் சொல்லக் காரணம், அத்திவரதர் குறித்து அவர் இப்போது கிளப்பியிருக்கும் மோசமான சொல்லாடல்கள்!

பக்தனின் லட்சணம் – பக்தியின் லட்சணம் என வெறும் எழுத்தில் வடித்து விட முடியாது! சாமிக்கு பவர் இருக்கா என்று கேட்டுவிட முடியாது! ஆனால் இவர் கேட்கிறார். அப்படி என்ன சார் பவர் இருக்கு? என்று இவர் கேட்பதற்கு என் பதில் இதுதான்!

அத்திவரதருக்கு என்ன பவர் என்று, அவர் அடியார்கள் காட்டுவார்கள்!

நெல்லைச் சீமையில் தென் திருப்பேரை பெருமாள் திருப்பெயர் மகரநெடுங்குழைக்காதர். அவரின் அடியாராய் இருந்தவர், பஞ்ச காலத்தில் தம் நிலத்துக்கு வரி கட்ட வழியின்றி, ஒரு முறை சிறைப்பட்டார். சிறையில் இருந்து நாளொரு வெண்பா வீதம் பாடிக் கொண்டிருந்தார். ஒரு வெண்பாவில் அப்போதைய ஆட்சியாளர் வடமலையப்ப பிள்ளையின் பெயரையும் உச்சரித்தார். அதைக் கேட்ட காவலாளி, அதனை வடமலையப்ப பிள்ளையிடம் சொல்ல… அவரும் அடித்துப் பிடித்து ஒடோடி வந்து, இவரது பாடல்களையும் மனத்தையும் உணர்ந்து, தமது ஆளூகையில் தவறு நேர்ந்துவிட்டதாக மனம் வருந்தி, அவரை சிறையில் இருந்து விடுவித்து, மன்னிப்பு வேண்டினார்.

இது மகரநெடுங்குழைக்காதர் பாமாலை என்று இரு நூற்றாண்டுகளுக்கு முன் புகழ்பெற்ற பனுவலாயிருந்தது.

இதனைத் தொகுத்தார் உ.வே.சா! இது பின்னாளில் புத்தகமாகத் தொகுக்கப் பட்ட போது, அதற்கு முன்னுரை எழுதினார், அந்த மண்ணின் மைந்தரான பி.ஸ்ரீ.

முன்னுரையின் கடைசி இரு வரிகள்… பாமாலை போன்ற பக்திப் பனுவல்கள் இல்லாமற் போனால், கோயில் கருவறையில் தெய்வம் வெறும் கல்லாகவும் செம்பாகவுமே நின்று கொண்டிருக்கும்! -என்று!

அத்திவரதருக்கு என்ன ‘பவர்’ என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், பக்தர்கள் காட்டுவார்கள்! அகங்காரமும் மமதையும் கொண்ட மனத்தில் ‘பவர்’ புவராகத்தான் தெரியும்!

செங்கோட்டை ஸ்ரீராம்



__________________


Guru

Status: Offline
Posts: 7471
Date:
Permalink  
 

பார்ப்பனர்கள் கிழங்கு படையல் போடுவதில்லை ஏன்னா மண்ணுக்கு கீழே விளைவது தாழ்த்தப்பட்டது, கீரை படையல் போடுவதில்லை ஏன்னா அது கீழ்சாதிமக்களின் உண்வு என இந்த வர்லார் "ஆய்"வாளர் "தொ. பரமசிவன்" எழுதியதை காலையிலேயே படிக்கவேண்டி நேர்ந்தது.

புனிதமாக புனிதத்திற்கு அடையாளமாக கருதப்படும் மஞ்சள் எங்கே வானத்திலே விளைகிறதா? இந்த "ஆய்"வாளருக்கு மட்டும் காயாக காய்க்கிறதோ?
எனக்கு தெரிந்தவரையிலே வராஹிக்கு சர்க்கரைவள்ளிக்கிழங்கு படையல் உண்டு.
நாயன்மார் தாயானர் சிவனுக்கு கீரை படையல் செய்து வழிபட்டுள்ளார்.
கீரையிலே சூரியன் உறைவதாக நம்பி ஹிருஷிகேசனுக்கு கீரை படையல் உண்டு.

இதெல்லாம் எனக்கு தெரிந்தவரையிலானா எடுத்துக்காட்டுக்கள் தான். நண்பர்கள் மிச்ச உதாரணங்களை சொல்லலாம்.

இந்து மதத்தின் சிறப்பம்சமே கோடிக்கணக்கான கோவில்களிலே கோடிக்காணக்கான முறைகளிலே கோடிக்கணக்கான விதங்களிலே விதம்விதமாக வழிபடப்படுவது தான். மற்ற மதங்கள் போல இங்கே ஒரே மாதிரி உலகம்பூராவும் என்ற பொதுமைப்படுத்துதல் இல்லை.

அந்த பொதுமைப்படுத்தலை செய்வது, அதுவும் பார்ப்பானை முன்னிறுத்துவது என்பதை செய்வது எல்லாம் இந்த பஹூத்தறிவாளிகள் தான். அதுவும் பார்ப்பானை வைச்சு ஒரே மாதிரியா இந்து மதத்தை கட்டமைச்சுட்டா அப்புறம் பார்ப்பானை அழிச்சா இந்து மதம் அழிஞ்சும் பாருங்க. என்னே ஒரு கம்பிகுட்டர் பஹூத்தறீவு.

எழுதின ஆளுக்குத்தான் அறிவில்லைன்னா படிச்ச ஒரு ஆள் கூடவா பல கோவில்களிலே இருக்கிறதே என சொல்லமாட்டாங்களா? இதிலே இந்த டுபாக்கூர்கள் சமூகவியல ஆராய்ஞ்சு தமிழ்நாட்டை பத்தி பொஸ்தவம் எழுதி விளங்கினாப்ல தான்.

கீரை, கிழங்குகள் படையல்,நைவேத்தியம் இருக்கும் முறைகளை கோவில்களை நண்பர்கள் பதியவும்.

Aroumougam Sengalani பிராமணர்களை விமர்சனம் செய்வதை தயவுசெய்து தவிர்க்கவும். காலமாற்றத்திற்கேற்ப பிராமணர்கள் தங்களை இணைத்துக் கொண்டு சம்பிரதாயங்களில் மாற்றங்கள் செய்து வருகின்றனர். எனக்கு இப்போது வயது 64. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கிராமத்தில்தான். நான் எனது 14ஆம் வயதிலிருந்து பிராமண சகோதரர்களுடன் பயின்று,பழகி வருகிறேன்.கிராமத்தில் 1967 ஆம் ஆண்டில் இருந்த சாதிய பாகுபாடு இப்போது பிராமணர்களிடமிருந்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வசம் மாறியுள்ளது. இதை வெளிப்படையாக சொல்ல மறுக்கிறார்கள். ஒரு போலியான நட்புடன் தான் பிற பிற்படுத்தப்பட்ட மக்கள் தலித் மக்களிடையே பழகி வருகிறார்கள். தலித்துகள் அருந்ததியர் மக்களை தங்களைவிட தாழ்ந்த குடிகளாக நினைக்கிறீர்கள். தென்னகத்தை விட வடநாட்டில் தான் சாதித்துவேஷம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளாக முக்குலத்தோர்,கொங்கு வேளாளர்,வன்னியர் போன்ற ஜனத்தொகை அதிகம் கொண்ட சாதிப்பிரிவினர்கள் தான் தலித் மக்கள் மீது கடுமையாக தீண்டாமையை கடைபிடித்து வருவது தமிழகம் அறிந்ததே. தற்காலத்தில் பிராமணர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது. ஆகையினால் இனப்பாகுபாடு உண்டாக்கப்படுவதை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்போம்.

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard