Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள் மதச்சார்பற்றதா? | ஆமருவி தேவநாதன்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
திருக்குறள் மதச்சார்பற்றதா? | ஆமருவி தேவநாதன்
Permalink  
 


திருக்குறள் மதச்சார்பற்றதா? | ஆமருவி தேவநாதன்

8-1.jpg
 
‘திருக்குறள் உலகப்பொதுமறை; சாதி, மத, மொழி, இன, நில வேறுபாடுகளைக் கடந்து எல்லா மதத்தவருக்கும் பொதுவான மறை நூல்; மதச்சார்பற்றது.’ இந்தப்  பரப்புரையில் உண்மையின் விழுக்காடு எவ்வளது? திருக்குறள் இறை மறுப்பு நூலா? திருக்குறளுக்கும் பாரதத்தின் ஆன்மிகக் களஞ்சியங்களான வைணவ, சைவ, சமண, பௌத்த மதங்களுக்கும் தொடர்பில்லையா? பார்க்கலாம்.
பலருக்கும் தெரிந்த பின்வரும் குறட்பாக்கள் வைணவத் தொடர்பைக் காட்டுவன.
1954ல் பண்டித ரெ.திருமலை ஐயங்கார் எழுதிய ‘திருவாதிமாலை’ நூலில் ‘ஆதிபகவன்’ என்னும் சொல்லாடல் எவ்வாறு ஆழ்வார்களின் பாசுரங்களிலும், விஷ்ணுபுராணம் முதலிய வைணவ நூல்களிலும் கையாளப்படுகிறது என்று தெளிவாகக் கூறி, அதனால் திருக்குறள் வைணவ நூலே, திருவள்ளுவர் வைணவரே என்பதை நிறுவுகிறார். பகவான் என்னும் சொல் ‘பகவந்’ என்னும் வடமொழிச் சொல்லின் திரிபே என்று கூறுகிறார். இதற்கு அவர் காட்டும் விஷ்ணுபுராண ஸ்லோகம் இதோ:
‘’ஜ்ஞாநசக்தி பலைச்வர்ய வீர்யதேஜான் ஸ்யசேஷத:
பகவச்சப்த வாச்யாநி விநா ஹேயைர் குணாதிபி:
ஏவமேஷ மஹாசப்தோ மைதேய பகவாநிதி
பரமப்ரஹ்மபூதஸ்ய வாஸுதேவஸ்ய நாக்யக:
தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷாஸமந்வித:
சப்தோயம் நோபசாரேண அந்யத்ர ஹ்யுபசாரத:’
(ஸம்பூர்ணமான ஐச்வர்யம், வீர்யம், கீர்த்தி, செல்வம், ஜ்ஞாநம், வைராக்யம் என்னும் இந்த ஆறு குணங்களுக்கும் ‘பக’ என்னும் பதம் வாசகமாயிருக்கிறது. பூதங்களைச் சரீரமாகக் கொண்டவனும், எல்லாவற்றுக்கும் ஆத்மாவாயிருப்பனுமான அவனிடத்தில் பூதங்கள் வஸிக்கின்றன. அவனும் எல்லா பூதங்களிலும் வஸிக்கிறான். ஆகையால் அழிவற்றவனான பகவான் ‘வ’காரத்திற்கு அர்த்தமாகிறான். கீழானவையான முக்குணங்கள் முதலியவற்றுடன் சேராத ‘ஜ்ஞானம், ‘சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ்’ என்னும் எல்லா குணங்களும் ‘பகவான்’ என்னும் சப்தத்தினால் சொல்லப் பெறுகின்றன. மைத்ரேயரே, இம்மாதிரியாக பகவான் என்ற இந்த மஹாசப்தம் பரப்ரஹ்மமான வாஸுதேவனுக்கே உரியது. வேறு ஒருவரையும் குறிக்காது.)
1904ம் ஆண்டு மதுரை ஜில்லா, சிறுகூடற்பட்டி சே.சுப்பராய ஐயர் அவர்கள் விஷ்ணுபுராணத்தைத் தமிழ்ப் பாக்களாக மொழிபெயர்த்து எழுதினார். அப்பாக்களில் சில பின்வருமாறு. இவற்றிலும் ‘பகவன்’ என்னும் சொல் இடம்பெறக் காணலாம்.
‘அகமதி னினைக்க வேண்டு மப்பர மான்மா ரூபம்
பகவனென் றுரைக்கா நின்ற பதத்திற்குப் பொருளா மந்தப்
பகவனா நாம மன்னோன் பற்பல குணஞ்சொ ரூப
முகவைசால் விபவ மின்ன வுரைத்திடத் தக்க தன்றே.
மற்றுமிப் பகவ னென்னும் வாசக நாம ரூபம்
பெற்றில னாகி யன்ன பிரமத்திற் கிணையாய் நின்ற..
அவித்தையென் றிவற்றை யோர்ந்தோன் பகவனென் றறைதல் வேண்டும்…’
விஷ்ணுபுராணம் மேலும் சொல்வது :
‘ததேவ பகவத் வாச்யம் ஸ்வரூபம் பரமாத்மந:
வாசகோ பகவச்சப்தஸ் தஸ்யாத்யஸ்யாக்‌ஷயாத்ம ந:’
(அந்த பரமாத்ம ஸ்வரூபமே பகவான் எனப்படுவது. அழிவற்றவனான அந்த ஆதிபுருஷனுக்கே வாசகமாயிருப்பது பகவச்சப்தம்.)
‘பகவாநிதி சப்தோயம் ததா புருஷ இத்யபி
நிரூபாதி வார்த்தேதே வாஸுதேவே ஸநாதநே’
(பகவான் என்னும் சப்தமும், புருஷன் என்னும் சப்தமும் இயற்கையாகவே பழமையானவனான வாஸுதேவனிடமே விளங்குகின்றன.)
‘அந்தமிலாதியம்பகவன்’ என்று திருவாய்மொழி திருமாலைச் சொல்கிறது. ஒன்பதினாயிரப்படி என்னும் வைணவ உரை ‘தனக்கு அந்தமின்றி எல்லார்க்கும் தான் ஆதியாய் ஸ்வாபாவிகமாய் ஹேயப்ரத்நீகமான ஜ்ஞாநாதி கல்யாண குண பரிபூரணன்’ என்று மஹாவிஷ்ணுவை விவரிக்கிறது. இவ்விடத்தில் ‘ஆதி’, ‘பகவன்’ என்பது வைணவத்தின் மூலமான திருமாலைக் குறிப்பதை உணரலாம்.
இவைமட்டுமன்றி, திருவள்ளுவர் ‘எண்குணத்தான்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார். ‘கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை’ என்பது குறள். மாலவனின் எட்டுக் குணங்களாகச் சாந்தோக்ய உபநிஷத் சொல்வது:
பாபமின்மை, நரையின்மை, மரணமின்மை, சோகமின்மை, பசியின்மை, தாகமின்மை, ஸத்யகாமம், ஸத்யஸங்கல்பம் என்பன. இவற்றையே திருவள்ளுவர் எண்குணத்தான் என்கிறார். திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் ‘எண்குணத்தான்’ என்னும் சொல்லிற்குச் சொல்லும் விரிவிரை : ‘ தன்வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உயர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை’.
இதனைத் தொடர்ந்து, ‘கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅ ரெனின்’ என்பதாலும், ‘மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்’ என்பதாலும் அடியைத் தொழும் வைணவ மரபு சுட்டப்படுகிறது. ஆண்டாள் எழுதிய திருப்பாவையை ‘பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்’ என்று போற்றுவதை நாம் அறிவோம். மேலும் திருப்பாவையில் ‘அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி’ என்று வாமனாவதாரத்தைப் பாடுகிறாள். வள்ளுவரும் ‘அடியளந்தான் தாயது எல்லாம் ஒருங்கு’ என்னும் போது மூவடியால் மூவுலகையும் அளந்த வாமனனைப் பற்றிப் பேசுகிறார்.
‘வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல’
என்னும் குறட்பாவினால், எந்தப் பொருளையும் விரும்புதல் இல்லாதவனும், வெறுத்தல் இல்லாதவனுமாகிய பரம்பொருளைப் பார்க்க முடிகிறது. இந்த இரண்டு குணங்களும் ஒருங்கே இருப்பதால், எந்த விதப் பாபமும் இல்லாதவன் என்றாகிறது. எனவே அவன் இயல்பாகவே பாபங்களில் இருந்து நீங்கியவன் என்பதைக் காண்கிறோம். இதுவும் மாலவனின் எண் குணங்களில் ஒன்றே.
‘இருள் சேர் இருவினையும் சேரார் இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு’
என்னும் குறளால் இறைவனது குணங்களான ஸத்யகாமம் (பழுதடையாத இச்சை), ஸத்யஸங்கல்பம் (பழுதடையாத நினைவு) முதலியன புலனாகின்றன.
‘பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீ ரொழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார்’
என்னும் குறளில் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகள் வழியாக வந்தடையும் ஐந்து ஆசைகளையும் ஒழித்தவனது மெய்யான ஒழுக்க நெறியின் கண் வழுவாது நின்றவர், பிறப்பில்லாமல் எக்காலத்திலும் ஒரு தன்மையராய் வாழ்வார் என்பதாகச் சொல்லும்போது, பசியின்மை, தாகமின்மை, சோகமின்மை, மரணமின்மை என்கிற நான்கு குணங்களையும் அறிய முடிகிறது. பசி, தாகம் இருந்தால் அவற்றை நீக்கிக்கொள்ள வேண்டிப் புலன்களை மேயப் பொறிகள் செல்லும். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பன புலன்கள். மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன பொறிகள். பசி, தாகம் முதலியன இல்லாதவனாதலால் பொறிவாயில் ஐந்தவித்தவன் ஆகிறான். பசி, தாகம் இல்லாததால் அவற்றால் உண்டாகும் சோகம் அற்றவனாகிறான். உண்ணும் சோறும் பருகு நீரும் பசி தாகங்களை அகற்ற உதவுகின்றன. இவை இல்லாவிட்டால் மரணமே. இறைவன் பசி, தாகம் இல்லாதவன். ஆதலால், உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டியதில்லை. அதனால் வளர்தல், தேய்தல் அற்றவனாகிறான். இவற்றினால் எல்லாம் மரணம் அற்றவன் ஆகிறான்.  
இதுகாறும் திருக்குறளில் வைணவக் கோட்பாடுகள் குறித்துக் கண்டோம்.
மணிவாசகர் பதிப்பத்தார் வெளியீட்டில் திருக்குறள் மாமுனிவர் முனவர்.கு.மோகனராசு எழுதிய ‘திருவள்ளுவர் கண்ட கடவுள்களும் தெய்வங்களும்’ நூலில் பாரதத்தின் பல சமயங்களின் கடவுளர்கள் திருக்குறளில் எவ்வாறு காட்டப்பட்டுள்ளனர் என்பது பற்றிச் சொல்லப்பட்டுள்ளது.
முனைவர் சு.மாதவன் என்பார் எழுதிய ‘சமூக மெய்யியல் நோக்கில் திருக்குறள்’ (செம்மொழிப் பதிப்பகம், தஞ்சாவூர்) என்னும் நூலில், திருக்குறள் சைவ மரபை ஒத்து வருகிறது என்கிறார். அவரது பார்வை புதியது.
நிலைத்த பேருண்மையை உணர்த்த மட்டுமே திருவள்ளுவர் ‘ஏ’காரத்தைப் பயன்படுத்தியுள்ளார் என்கிறார் முனைவர் சு.மாதவன்.
1330 குறட்பாக்களில் 114ல் மட்டுமே ஏகாரங்கள் உள்ளன. அதாவது 133 அதிகாரங்களில் 74ல் மட்டுமே ஏகாரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடவுள் வாழ்த்தில் ஏகாரம் உண்டு. வான் சிறப்பில் இல்லை. ஏனெனில் கடவுள் என்பது நிலைத்த பேருண்மை, வானம் அப்படியானதன்று. அவ்வப்போது மாறுபடும், நிலையானதாக இருக்காது. எனவே வான் சிறப்பில் எந்தக் குறளிலும் ஏகாரம் இல்லை. நீத்தார் பெருமையில் ஏகாரம் உண்டு என்பதையும் உற்று நோக்குக.
‘சுவை ஒளி ஊறு, ஓசை நாற்றம் என்று ஐந்தின்
வகை தெரிவான் கட்டே உலகு.’
‘அறத்தான் வருவதே இன்பம்’
‘அறமெனப் பட்டதே இல்வாழ்க்கை’
‘அமிழ்அமிழ்தினும் ஆற்ற இனிதே’
‘அன்றே மறப்பது நன்று’
பரிதியார் வியாக்கியானம்: அனந்த ஞானம், அனந்த வீரியம், அனந்த குணம், அனந்த தெரிசனம், கோத்திரமின்மை, அவாவின்மை, அழியாவியல்பு என்பன’.
‘சைவ சித்தாந்த அறிஞர் கி.லெக்ஷ்மணன் ‘தாடலை’ என்னும் சொல் குறித்துக் கூறுவது:
‘சைவ சித்தாந்தப் படி முத்தி என்பது துன்பம் துளியும் இல்லா நிலை மட்டுமன்றிப் போரின்பமயமான உடன்பாட்டு நிலையும் ஆகும். இம்முத்தியாலேயே ஆன்மா இறைவனோடு இரண்டறக் கலந்தபோதும் தன் தனி இயல்பை முற்றாய் இழந்துவிடுவதில்லை. இக்கலப்புக்குத் தமிழில் ‘தாள்’, ‘தலை’ என்னும் இரு சொற்களின் புணர்ச்சியை உதாரணமாக காட்டுவது மரபு. தலை ஆன்மாவையும், தாள் இறைவனையும் குறிப்பனவாகக் கொள்ளலாம். அதாவது, இறைவனது திருவடிகளில் ஆன்மாவின் தலை பொருந்துகிறது என்பதே கருத்து. தாளும் தலையும் தமிழ் இலக்கண விதிப்படிப் புணரும் போது ‘தாடலை’ ஆகும்.’ இத்தாடலைக் கோட்பாட்டின் சிந்தனைக் கட்டிணைவைக் கடவுள் வாழ்த்தில் காணமுடிகிறது ‘  என்கிறார் முனைவர் மாதவன். ஆக, சைவ சித்தாந்தக் கருத்தும் வெளிப்படுகிறது.
இவை தவிரவும் ‘மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்’, ‘ஆ பயன் குன்றும் அறு தொழொலோர் நூல் மறப்பர் காவலன் காவான் எனின்’, ‘ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவர்க் கெழுமைக்கும் ஏமாப்புடைத்து’, ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு இரப்பின் இளி வந்தது இல்’ முதலிய குறட்பாக்களால் வைணவ, சைவ மத நம்பிக்கைகளான அந்தணன் ஒழுக்கம், வேதம் ஓதுதலின் அத்தியாவசியம், பசுவின் மேன்மை, கர்ம வினை, மறுபிறப்பு முதலியன சுட்டப்படுகின்றன. ‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்’ என்னும் ஆண்டாளின் வரிகள் நினைவிற்கு வரலாம்.
 


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
RE: திருக்குறள் மதச்சார்பற்றதா? | ஆமருவி தேவநாதன்
Permalink  
 


திருக்குறள் சமண நூல் என்பதற்கான சான்றுகளும் கொட்டிக்கிடப்பதாகவும் சில நூல்கள் தெரிவிக்கின்றன. தஞ்சை சரசுவதி மகால் வெளியீடாக ‘திருக்குறள் – ஜைன உரை’ என்றொரு நூலில் உள்ள சில சான்றுகளைக் காண்போம்.
திருவள்ளுவர் ஶ்ரீ குந்த குந்த ஆச்சாரியர், பத்ம நந்தி, வக்கிர கிரீவர், கிருத்ர பிஞ்சர், ஏலாசாரியர் என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளார். இவர் கிமு 52 – கிபி 44 வரை வாழ்ந்தவர் என்று தெரிகிறது. இவரைப்பற்றிய சிலாசாசனம் சிரவணபேளாகோளாவில் உள்ளது என்கிறது மேற்சொன்ன நூல்.
குந்த குந்தர், தற்போது திருப்பாதிரிப்புலியூர் என்றும், அன்னாட்களில் பாடலிபுரம் என்றும் அழைக்கப்பட்ட ஊரில் வாழ்ந்த சமண ஆச்சாரியர் என்று அறியப்படுகிறார், பிராகிருத மொழியில் பல நூல்களையும், குறிப்பாக ‘பிரப்ருதத்திரயம்’ என்று அறியப்பட்ட பஞ்சாஸ்திகாயம், பிரவசனஸாரம், ஸமயஸாரம், மற்றும் தமிழில் திருக்குறளையும் இயற்றினார். இவரது சீடர் திருவுள்ளம் நயினார். இவரே ‘கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்’ என்று குறளைக் கொண்டாடியதாகவும், அதனால் ஶ்ரீ குந்த குந்தர் அவரையே மதுரைக்குச் சென்று குறளை அரங்கேற்றம் செய்யச்சொன்னதாகவும், பின்னர் சீடரின் பெயர் திருவுள்ளம் நயினார் என்பதில் இருந்து திருவள்ளுவர் என்றானதாகவும் ஜைன மரபு தெரிவிக்கிறது. (‘கடுகைத் துளைத்து’ இடைக்காடர் செய்தது என்றும் கூறுவர்).
சமணர்களின் கடவுள் வணக்கம் நான்கு வகையானது.
1. அருக சரணம்
2. சித்த சரணம்
3. சாது சரணம்
4. தர்ம சரணம்
சீவக சிந்தாமணிக்கு உரையெழுதிய நச்சினார்க்கினியனார் ‘நல்லறத் திறை வனாகி நால்வகைச் சரணமெய்தி’ என்ற பகுதிக்கு உரை எழுதுகையில் மேற்சொன்ன நான்கு வணக்கங்களைப் பற்றிக் கூறுகிறார்.
இந்த நான்கையும் திருக்குறளின் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் காணமுடிகிறது. அவ்வதிகாரத்தில் முதல் ஏழு செய்யுட்களால் ‘அருக சரணமும்’, ’பொறிவாயில் ஐந்தவித்தான்’ செய்யுளால் ‘சாது துசரண’மும், ‘அறவாழி அந்தணன்’ குறளால் ‘தர்மசரண’மும் குறிக்கப்படுகின்றன என்கிறது ‘திருக்குறள் – ஜைன உரை’ என்னும் நூல்.
அத்துடன் ‘திருக்குறள் ஆய்வு – கவிராஜ பண்டிதர் உரை’ என்னும் நூல், ‘கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்துள் அருக சரணமும் சித்த சரணமும் அடங்கியுள்ளனவென்றும், நீத்தார் பெருமை என்னும் அதிகாரத்துள் சாது சரணமும், அறன் வலியுறுத்தல் என்னும் அதிகாரத்துள் தரும சரணமும் கூரப்பட்டுள்ளன என்றும் ஜைன சமயப் பெரியோர் கூறுவர்’ என்கிறது.
‘ஆதிபகவன்’ என்பது அருகரையே குறிப்பதாக ‘கயாதர நிகண்டு’ என்னும் சமண நூல் பின்வரும் செய்யுளால் தெரிவிக்கிறது:
‘கோதிலருகன் திகம்பரன் எண்குணன் முக்குடையோன்
ஆதிபகவன் அசோகமர்ந்தோன் அறவாழி அண்ணல்’.
மேற்சொன்ன செய்யுளில் திருக்குறளில் காணப்படும் ‘ஆதிபகவன்’, ‘எண்குணத்தான்’, ‘அறவாழி அண்ணல்’ என்ற சொற்கள் சுட்டப்படுகின்றன.
சமண நூலாகிய சீவக சிந்தாமணி ‘அறவாழியண்ணல் இவன் என்பார்’ என்று அருகரைக் குறிக்கிறது.
‘பண்ணவன் எண்குணன் பாத்தில் பரம்பொருள்’ என்று சிலப்பதிகாரம் குறிப்பதும் அருகனையே.
மேரு மந்திர புராணம் என்னும் சமண நூல் ‘இறைவனீ ஈசனீ எண்குணத் தலைவனீ’ என்று அருகனுக்கு எண்குணத்தானெனும் பெயரிட்டு அழைக்கிறது.
மேற்சொன்ன செய்யுட்கள் ஒன்று அருகனை நேரடியாகக் குறிக்கின்றன அல்லது ஜைன சித்தபரமேட்டிகளைக் குறிக்கின்றன.
‘அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்’
என்னும் குறளுக்கு விளக்கம் போல அமைந்துள்ளது பின்வரும் ஜைன மரபுக்கதை.
பரத சக்கரவர்த்தி மகாஜனங்களுக்குத் தானம் செய்ய விழைகிறான். அரண்மனை வாயிலில் பூ, பழம், இலை முதலியன பரப்பிக் காத்திருக்கிறான். அரசர்கள், செல்வந்தர்கள் வருகின்றனர். ஓரிரு மகாஜனங்கள் மட்டுமே வருகின்றனர். சிலர் வெளியில் காத்திருக்கின்றனர். அவர்கள் வேறு வழியில் உள்ளே வர சம்மதிக்கின்றனர்.
‘நீங்கள் ஏன் வாயில் வழியாக வரவில்லை?’ என்று சக்கரவர்த்தி வினவுகிறான்.
‘நீ வாயிலில் பரப்பிவைத்துள்ள பொருட்கள் ஏகேந்திரிய ஜீவன்கள். ஏகேந்திரிய ஜீவ ஹிம்சைகூட செய்யாதவர்கள் நாங்கள்’ என்கின்றனர் அம்மகாஜனங்கள்.
‘நீங்களே உண்மையான மகாஜனங்கள்’ என்று சொல்லி, அவர்களுக்கு ஒன்று முதல் பதினோரு சூத்திரம் ஈராக, யக்ஞோபவீதம் இட்டுச் சன்மானம் பண்ணி ஆரிய ஷட்கர்மங்களை (ஆறு தொழில்கள்) உபதேசித்தான். இவர்களே அந்தணர்கள். இவர்களே செந்தண்மை பூணாத, ஏகேந்திரிய ஜீவ ஹிம்சை கூட செய்யாத அந்தணர்கள் என்கிறது ஜைன மரபு.
‘அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்’
என்னும் குறளில் குறிக்கப்பெறும் நூல் ஜைன வேதங்களான பிரதமாநு யோகம், கரணாநு யோகம், சரணாநு யோகம் மற்றும் திரவியாநு யோகம் என்கிறது ‘திருக்குறள் – ஜைன உரை’ நூல்.
 
‘த்ரிகுப்தி’ என்னும் மூன்று அவசியமான கோட்பாடுகளை ஜைன சமயம் வலியுறுத்துகிறது. அவையாவன ‘காயத்தின் அடக்கம்’, ‘வாக்கின் அடக்கம்’, ‘மனோவடக்கம்’. ‘அடக்கமுடைமை’ அதிகாரத்தின் கீழ் உள்ள குறட்பாக்களால் ’த்ரிகுப்தி’யை அறியலாம்.
 
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின் – காயத்தின் அடக்கம்.
 
ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும் – வாக்கின் அடக்கம்.
 
கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி
யறம்பார்க்கு மாற்றி னுழைந்து  – மனோவடக்கம்.
‘மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்’
என்னும் குறள் சைவ, பௌத்த சமயங்களை ஒரே நேரத்தில் இழித்துரைப்பதாகசவும் தொனிக்கிறது. (மழித்தல் – பௌத்தத் துறவியர் செய்வது. நீட்டல் – ஜடா முடி வளர்க்கும் சைவ சமயத் துறவியர்). இக்குறளின் வாயிலாகவும் திருக்குறளின் ஜைனத் தொடர்பு தெரிகிறது.        
17ம் நூற்றாண்டில் வாழ்ந்த தருமபுர ஆதீனத்தின் அடியார் கூட்டத்தில் ஒருவரான வெள்ளியம்பலவாண முனிவர் என்பார் ‘முதுமொழி மேல்வைப்பு’ என்னும் நூலை இயற்றியுள்ளார். திருக்குறளைப் பின்னிரண்டடிகளில் வைத்து, மேற்கோள் செய்தியை முன்னிரண்டடிகளில் வைத்து எழுதப்பட்ட இந்த நூலில் திருக்குறள் ஜைன நூல் அன்று என்கிற வகையில் பல வெண்பாக்கள் உள்ளன. அவற்றுள் பின்வரும் ஒன்று சிறப்புடையது:
‘ஒருவர் செய வேண்டா உலகியல்பா மென்னும்
அருகர் பிறர்கோள் சிதைக்குமாற்றால் – வருவது
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற் றியான்’
இதன் பொருளாவது: ‘உலகில் பிச்சை எழுத்தே ஒருவன் உயிர் வாழ வேண்டும் என்றால் இந்த உலகத்தைப் படைத்தவனான இறைவன் அழியட்டும் என்று சொல்கிறது திருக்குறள். இக்கருத்து, ஜைனக் கோட்பாடென்று அருகர் சொன்ன ‘உலகத்தை யாரும் இயற்றவில்லை, அது தானாகவே இருப்பது’ என்ற கருத்துக்கு முரணாகவன்றோ உள்ளது?’
இதனால் 17ம் நூற்றாண்டு வரை திருக்குறள் ஜைனை நூலாகவே அறியப்பட்டது என்பது புலனாகிறது.
மேலும் கொல்லாமை, புலால் உண்ணாமை, கள்ளுண்ணாமை, உணவு, மருந்து முதலியன பற்றியும் குறட்பாக்கள் அமைந்துள்ளதால் சமண அறங்களான ‘அன்ன அறம்’, ‘மருத்துவ அறம்’, ‘சாத்திர (கல்வி) அறம்’ முதலியன சுட்டப்படுகின்றன.
‘கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்’ என்னும் ஒரு குறள் ‘தானம்’ செய்வதைக் கெடுப்பதால் ஏற்படும் கேட்டைக் குறிக்கிறது. மற்றவனுக்குச் செய்யும் உதவியை ஒருவன் கெடுத்தால், அவனது சுற்றம் உடுக்க உடையின்றியும், உண்ண உணவின்றியும் கெட்டழியும் என்று சாபம் இடுவதைப்போல் அமைந்துள்ளது இக்குறள். உதவியைக் கெடுப்பவனது கேட்டைக் குறிக்காமல், கெடுப்பவனின் சுற்றத்தார் இதனால் பெரும் இன்னலுக்கு ஆளாவர் என்றுரைத்ததால், இது பெரிய அளவில் ஜைனக் கோட்பாடான ‘தானம்’ என்னும் அறத்தை  வலியுறுத்துகிறது என்பதைக் கணிக்க முடிகிறது. 
திருக்குறளை மேலும் ஆராய்ந்தால் பௌத்த மதக் கருத்துகளும் புலப்படும் என்பது தெளிவு.

ஆக, ஜைன, வைணவ, சைவக் கருத்துக்களை உள்ளடக்கிய திருக்குறள் பாரதத்தின் ஆன்மிகம் சார்ந்த பண்பாட்டின் விஸ்வரூப தரிசனம் என்றே கொள்ளவேண்டும். எனவே, கடவுள் மறுப்பு, சனாதன மறுப்பு, மதங்களின் மறுப்பு என்று மதச்சார்பின்மைச் சாயத்தைப் போலியாகத் திருக்குறளின் மீது ஊற்ற முயல்வது, வள்ளுவரின் கூற்றின்படியே, ‘காயாத மண் பானையில் நீர் சேகரிப்பது’ போன்றதாகும். 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

திருக்குறளில் தமிழ்க் கடவுள் யார்?

 
திருக்குறளில் தமிழ்க் கடவுளா? :)

ஒன்றை முதலில் தெளிவு படுத்த விரும்புகிறேன்!
வள்ளுவம் பெருஞ்சொத்து!
அதனால் தான் சொத்துப் பிரச்சனை! :)

 


திருக்குறள்.....என் சொத்து, உன் சொத்து-ன்னு....சொத்துச் சண்டை இன்னைக்கும் போட்டுக்கிட்டே இருக்காங்க! :))
திருவள்ளுவர்.....எங்காளு, உங்காளு-ன்னு....தாத்தாவின் சொத்துக்கு இத்தனை பிரச்சனையா? :)

அவரவருக்குப் பிடித்தமானதை வள்ளுவத்தின் மேல் ஏற்றிப் பார்க்க முனைகின்றார்கள்!
* திருவள்ளுவர் சமணர்!
* இல்லவே இல்லை அவர் சைவ சித்தாந்தியே!,
* அவர் பெளத்தராய்க் கூட இருக்கலாம்!
* அவர் வைணவக் கருத்துகளை ஆங்காங்கே உதிர்க்கிறார்!
வள்ளுவர் காலத்தில் கிறித்துவம், இஸ்லாம் இல்லை! அதனால் அவை பற்றிப் பேச்சில்லை!

அவ்வளவு ஏன்... வள்ளுவருக்கு விபூதிப் பட்டை போட்டு, வள்ளுவ தேவ நாயனார் என்றெல்லாம் கூடச் சொல்பவர்கள் உண்டு!
இன்றும் விபூதி போட்ட வள்ளுவர், சென்னை மயிலாப்பூரிலே, சிலையாக நடு ரோட்டில் காட்சி அளிக்கிறார்! :)

மயிலாப்பூர் சமஸ்கிருதக் கல்லூரிக்கு வடக்கே, வள்ளுவர் கோயில் வேற ஒன்னு இருக்கு! கோயிலின் மூலவர் ஏகாம்பரேஸ்வரர்! :)
யாரு கட்டினாங்களோ? கோயில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு உட்பட்டதாகத் தான் இருக்கும்! வள்ளுவரின் அம்மா-அப்பா = ஆதி பகவன்??? அவங்களுக்கும் கோயிலில் சிலை உண்டு! :)

"ஆதி பகவன் முதற்றே உலகு" என்பதை வைத்துக் கொண்டு, அவர் தாய் தந்தையர் பேரு = ஆதி பகவன்-ன்னு சொன்னா எப்படி? :)
தன்னுடைய அம்மா-அப்பா தான், உலகம் முழுமைக்கும் முதல், முதற்றே உலகு-ன்னு சொல்லக் கூடியவரா என்ன வள்ளுவப் பெருந்தகை? :)

அடக் கடவுளே! இதுக்கெல்லாம் ஒரு அளவே இல்லியா? சிறந்த ஒன்றைத் தங்கள் வசமாக்கிக் கொள்ள வேணும்-ன்னா, அதுக்காக இப்படியெல்லாமா செய்வது? ஒரு நல்ல தலைவரின் கொள்கைகளை ஒன்னுமில்லாப் போகச் செய்யணும்-ன்னா, அவருக்குச் சிலை வைச்சி, அபிஷேகம் பண்ணாப் போதும் போல இருக்கே? :)

இப்படித் தான், சிறந்த சங்கத் தமிழ்க் கவிஞர்களான கபிலர்-பரணரை, கபில தேவ நாயனார் - பரண தேவ நாயனார்-ன்னு ஆக்கி....
அவர்கள் எழுதியதாகச் சொல்லப்படும் "நாயனார் இரட்டை மணிமாலை"-யை, பன்னிரு திருமுறைகளில் வேறு வைக்கப்பட்டு விட்டது!

நல்ல வேளை, வள்ளுவர் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில், "திருவடிகள்" பற்றி நிறைய பேசுவதால், அவருக்கு "நாமம்" போடாமல் இருந்தார்களே! அது வரைக்கும் ரொம்ப சந்தோசம்! :)

இப்படி, தனிப்பட்ட ஒருவரை/ஒன்றை, இத்தனை பேர் "உரிமை" கொண்டாடுவது வேறு எந்த தமிழ் நூலுக்காவது உள்ளதா?
இப்படித் தமிழர் அனைவரையும் ஆட்டிப் படைக்கும் ஒரு அற்புத சக்தி = வள்ளுவம்!



வள்ளுவரை "உரிமை" கொண்டாடுவது ஒரு வழியில் மகிழ்ச்சியே என்றாலும்...
வள்ளுவரை "உரிமை" கொண்டாடுவோர் கட்டாயம் ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும்!

* வள்ளுவர் செய்ய வந்தது சமய நூல் அல்ல!
* நக்கீரர் செய்ய வந்தது = சமய நூல்!

* நக்கீரர் - கடைச் சங்க காலம் - அவர் செய்தது திருமுருகாற்றுப்படை என்னும் சமய நூல்! அதை அவரே வெளிப்படையாகச் சொல்கிறார்!
* வள்ளுவர் - நக்கீரருக்கும் பின்னால் - சங்கம் மருவிய காலம் - வள்ளுவர் ஒரு சமயநூலைச் செய்ய வந்திருந்தால், அந்தச் சமயக் கோட்பாடு, அதன் கதைகள் என்றெல்லாம் நக்கீரர் போலவே அவரும் விளக்கி இருப்பாரே! ஆனால் வள்ளுவத்தில் அப்படி ஒன்னும் இல்லையே!

நினைவில் வையுங்கள்: வள்ளுவரின் நோக்கம்: ஒரு சமய நூலைச் செய்வது அல்ல!

அவரே அப்படிச் செய்யாத போது...
அவர் பயன்படுத்திய சில சொற்களை மட்டுமே வைத்துக் கொண்டு...
வள்ளுவர்=சமணம்,சைவம்,பெளத்தம் என்று மல்லுக்கு நிற்பது ஏனோ? :(


ஒரு படைப்பாளியின் மேல், அவரவர் தனிப்பட்ட முத்திரைகளைக் குத்தல் என்பது சான்றாண்மை ஆகாது!

அப்படிப் பார்த்தால் என் பதிவுகளில், அன்னை மரியாள் பற்றிச் சிலாகித்துப் பலமுறை எழுதி உள்ளேன் - நான் கிறித்தவனா?
கூகுளில் "பக்ரீத் - சரணாகதிப் பார்வை"-ன்னு தேடுங்கள்! என் பதிவு தான் வந்து நிற்கும்! "பக்ரீத்/ஈமான்" என்ற "சொல்லை"ப் பயன்படுத்திய ஒரே காரணத்துக்காக, நான் முஸ்லீம் என்று முடிவு கட்டி விடுவீர்களா? :)

* வள்ளுவத்தில், "திருவடி" என்ற சொல் வருகிறது = எனவே அது வைணவம் (அ) பெளத்தம்!
* வள்ளுவத்தில், "எண்குணத்தான்" என்ற சொல் வருகிறது = எனவே அது சமணம் (அ) சைவம்!
* வள்ளுவத்தில், "இந்திரனே சாலும் கரி" என்று வருகிறது = எனவே அது இந்து மதம்! => இப்படியெல்லாம் கிளம்புவது நமக்கே லூசுத்தனமா இல்லை?:)
ஆறு குருடர்கள் யானையைத் தொட்டுப் பார்த்த கதையாகத் தான் முடியும்!

வள்ளுவரின் கால கட்டத்தில், அவர் கண்ட சமூகத் தாக்கங்களை, தன் நூலில் பதிந்து வைத்திருப்பார் - ஒரு சமூகக் கண்ணாடி போல!

இந்திரன் ஒழுக்கம் தவறி, சாபம் பெற்ற கதை, மக்களிடையே அன்று பேசப்படுமானால்...
அதைத் தன் கவிதையில் குறித்துக் காட்டி...தான் சொல்ல வந்த நெறியை விளக்குவது...
- இது எந்தவொரு கவிஞரும் செய்யக் கூடியது தான்! அதற்காக "இந்திரன் கதையை" சொன்னதால் அவர் "தமிழ்-ஹிந்து" என்று கிளம்புதல் தகுமா?

* இந்திரன் கதை வள்ளுவருக்குத் தெரியும் என்று வேண்டுமானால் சொல்லுங்கள்! = சரியே!
* பொறி வாயில் ஐந்து அவித்தல் - ஆசை அறுத்தல் என்னும் சமணக் கோட்பாடு வள்ளுவருக்குத் தெரிந்திருக்கு என்று வேண்டுமானால் சொல்லுங்கள்! = சரியே!
* திருவடிகளே தஞ்சம் என்று வள்ளுவம் பேசுவதும், வைணவத் தத்துவமும் ஒத்துப் போகின்றது என்று வேண்டுமானால் சொல்லுங்கள்! = சரியே!

ஆனால் அதற்காக வள்ளுவருக்கு, சைவர்/சமணர்/வைணவர்/நாத்திகர் என்றெல்லாம் முத்திரை குத்துவது என்பது கூடவே கூடாது!
அவர்
 செய்ய வந்தது சமய நூல் அல்ல! அவர் செய்ய வந்தது அறம்-பொருள்-இன்பம்!

* வள்ளுவத்தின் கருத்துக்கள் போல எங்கள் சமயத்திலும் உண்டு என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள்!
* ஆனால் வள்ளுவம் = சைவமே, சமணமே, வைணவமே என்பதெல்லாம் சான்றாண்மையே இல்லாத ஒன்று!



ஆத்திக -நாத்திக ஒற்றுமை:

சரி ஆத்திகர்கள் தான் இப்படி-ன்னா, இதே தவறைத் தான் நாத்திகர்களும் செய்கிறார்கள்! அடக் கொடுமையே! என்னமா ஆத்திக-நாத்திக ஒற்றுமை! :)

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்


இந்தக் குறளில், "இறைவன்" என்பதை அழுத்தமாகவே குறிக்கிறார் வள்ளுவர்! "பிறவிக் கடல்" என்று வேறு சொல்கிறார்!
ஆனால் இதற்கு உரை எழுதும் தமிழ்ப் பற்றுள்ள நாத்திகர்கள் (அ) அப்படிச் சொல்லிக் கொள்பவர்கள், இறைவன் = தலைவன் என்று எழுதுகின்றனர்! :)

வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில்...நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.

ஓபாமா கட்சிக் காரவுக, ஓபாமா அடி சேரலீன்னா, அட்லாண்டிக் கடல் நீந்த முடியாது-ன்னு வேணும்-ன்னா சொல்லலாம்! ஆனா, பிறவிக் கடல் நீந்த முடியாது-ன்னு சொன்னா எப்படிப்பா? :)

தங்கள் நாத்திகக் கருத்தை, வள்ளுவத்தில் வலியத் திணிப்பது என்பதும் கூடாது!
வள்ளுவத்தில் நாத்திகம் பேசப்பட்டு இருக்கு! அறம் பேசப்பட்டு இருக்கு! மறம் பேசப்பட்டு இருக்கு! = எல்லாப் பொருளும் இதன் பால் உள!

"இறைவன் அடி" என்று வள்ளுவர் சொன்னால்.... அதை ஏதோ "தலைவன் அடி" என்று வலிந்து மாற்றிப் பொருள் கொள்வது...போலியான விளக்கம் என்று தானே பல் இளித்து விடும்! :) ஓபாமா வழியில் போவாதவங்க எல்லாம் பிறவிக் கடலில் மாட்டிப்பாங்க-ன்னு படிங்க! ஒங்களுக்கே சிரிப்பு வருது-ல்ல? :)))






__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 இன்னொரு சான்றையும் எடுத்துக் கொள்வோம்!


திருவடி வணக்கம் வெளிப்படையாக உள்ளது வைணவம்!
எல்லா வைணவப் பூசைகளிலும் திருவடி உண்டு! திருவடி முக்கியத்துவம், பாடல்களில் மட்டுமல்லாது, தினப்படிப் பழக்கத்திலும் உண்டு! சடாரி என்னும் திருவடி நிலைக்கு ஏற்றம் அதிகம்!
வேறு சமயங்களிலும் (புத்த சமயம்) திருவடி வணக்கம் உண்டென்றாலும், இந்த அளவுக்கு வெளிப்படையாக இல்லை!

ஆனால்...அதற்காக...வள்ளுவர் முதல் பத்து குறட்பாக்களிலும், திருவடிகளைப் போற்றுகிறார்! எனவே வள்ளுவம் = வைணவ நூல்! வள்ளுவர் = வைணவர் என்று சொன்னால், அதை விட முட்டாள்தனம் வேறில்லை! நல்ல வேளை யாரும் அப்படிச் சொல்லவில்லை-ன்னே நினைக்கிறேன்!

வேண்டுமானால், குறட்பாக்களில் வரிக்கு வரி வரும் திருவடிகளை, வைணவத் தத்துவங்களோடு பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்!
அவ்வளவு தான்! அத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்!

வள்ளுவர் காலத்துக்கு முன்னமேயே, தொல்காப்பியர் காலம் தொட்டே, மாயோன் வழிபாடு இருந்திருக்கு! = மாயோன் மேய காடுறை உலகமும்! மாயோன் அன்ன மன் பெரும் சிறப்பின்....தாவா விழுப் புகழ்!
அப்படி, சமூக வாழ்வியலில் காணலாகும் திருவடி வணக்கம் வள்ளுவர் கருத்தையும் கவர்ந்திருக்கு! என்று வேண்டுமானால் "ஊகிக்கலாமே" தவிர...
"திருவடி" என்ற சொல்லை மட்டுமே வைத்துக் கொண்டு, வள்ளுவர் = வைணவர் என்றெல்லாம் பேசுவது முட்டாள்தனம்!

இன்னொரு முறையும் சொல்கிறேன், வள்ளுவர் செய்ய வந்தது சமய நூல் அல்ல!
* அவர் திருமுருகாற்றுப்படை போல் ஒரு சமய நூலைச் செய்து, அதில் திருவடியைச் சொல்லி இருந்தால், அப்போ விஷயம் வேறு!
* ஆனால், நோக்கமே = அறம், பொருள், இன்பம் என்னும் போது...
* அந்த நூலில் அங்கொன்றும் இங்கொன்றும் கிடைக்கும் சொற்களை வைத்து...
* வள்ளுவர் இந்த சமயம் தான், அந்த சமயம் தான் என்ற விவாதம் - யானையை அளந்த ஆறு குருடர்கள் கதையாகத் தான் முடியும்!

சமயம் வளர்க்க எத்தனையோ நல்ல சமய-நூல்கள் உள்ளன!
அதை விடுத்து,
சமயத்தை நோக்கமாகக் கொண்டு எழாத ஒரு நூலுக்கு,
இப்படி ஒரு பிக்கல்-பிடுங்கல் மெய்யாலுமே தேவையில்லை!


திருக்குறளுக்கு முத்திரை குத்த வேண்டாம்!
அது மொத்த உலகுக்கும் தமிழ் மொழி வழங்கிய தமிழ்க் கொடையாகவே இருக்கட்டும்!
திருக்குறள் = உலகப் பொது மறை!
அது உலகப் பொது மறையாகவே இருக்கட்டும்!



சரி, தமிழ்க் கடவுள் என்னும் இந்தத் தொடர் பதிவுகளில், நாம் எடுத்துக் கொண்ட பேசு பொருளுக்கு வருவோம்! = தமிழ்க் கடவுள் திருமாலும், முருகனும்!

"திருமால் பண்டைத் தமிழ்க் கடவுள் அல்ல! முருகன் மட்டுமே பண்டைத் தமிழ்க் கடவுள்" என்ற ஒரு சிலரின் வாதத்தால், இந்த முயற்சியை முன்னெடுத்தேன்!
சங்க இலக்கியங்களில், தமிழ்க் கடவுளான திருமால் எங்கெங்கெல்லாம் பயின்று வருகிறான் என்று தக்க தரவுகளோடு சொல்லப் போந்தேன்! இதோ! http://madhavipanthal.blogspot.com/p/tamizhkadavul.html

தொல்காப்பியத்தில், நற்றிணையில், அகநானூற்றில், கலித்தொகையில்...என்று பல சான்றுகளைப் பார்த்தோம் அல்லவா?
ஆனால்.....அதற்காக பரிபாடல் என்பது வைணவ நூல்! அதில் எழுதிய நல்லந்துவனார் ஒரு வைணவர் என்று சொல்வேனா என்றால்?
..............மாட்டேன்! அது தவறான போக்கு! உடன்பட மாட்டேன்!

சங்க நூல்கள், சங்க காலத்தைக் காட்டும் கண்ணாடி!
அதில் பண்டைத் தமிழர், திருமாலை, தங்கள் வாழ்வியலில் எப்படி வைத்திருந்தனர் என்பதைக் காட்டுவதோடு மட்டும் சரி!
ஒரு தலைவன், தன் காதலை நிரூபிக்க, திருமால் மேல் சத்தியம் செய்கிறான்! இப்படி ஒரு நிகழ்வைக் காட்டுவது கலித்தொகை!

ஆனால் அதற்காக கலித்தொகை வைணவ நூலாகி விடாது!
அது சங்க இலக்கியமே!
பண்டைத் தமிழ் வாழ்வியலின் அகச் சான்று மட்டுமே!

இந்தத் தெளிவோடு, நாம் திருக்குறளை அணுகுவோம்!
திருமால் பற்றி வள்ளுவர் ஏதேனும் குறிப்பிட்டுள்ளாரா? பார்ப்போமா?




பலரும் உடனே எடுத்துக் காட்டும் குறள்...

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு?

குறள் 1103 - இன்பத்துப் பால் - அதிகாரம்: புணர்ச்சி மகிழ்தல்

இவள் தோளில் தூங்கும் சுகம், அந்தத் தாமரைக் கண்ணான் உலகிலும் இருக்குமோ? இச்-சுவையை விட அச்-சுவை பெரிதோ??

தாமரைக் கண்ணான் = திருமால் என்றே பலரும் நினைத்து விடுகிறார்கள்! இதற்கு உரையாசிரியர்கள் என்ன சொல்லுறாங்க-ன்னு பார்ப்போமா?

மு. வ உரை:
தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில்போல் இனிமை உடையதோ?

சாலமன் பாப்பையா உரை:
தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தை விடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?

கலைஞர் கருணாநிதி உரை:
தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அது என்ன! அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா?

தனித் தமிழ் மரபுரை - மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்:
தாமரைக் கண்ணான் உலகு = நீ மிகச் சிறந்ததாக உயர்த்திக் கூறும் செங்கண் மாலின் வீட்டுலகம்;
தாம் வீழ்வார் மெல்தோள் துயிலின் இனிதுகொல் = ஐம்புல இன்பம் நுகர்வார்க்கு தாம் விரும்பும் மகளிர் தோளிடத்துத் துய்க்கும் துயில் போல இன்பஞ் சிறந்ததோ?

தாமரைக்கண்ணான் உலகை "இந்திரனது சுவர்க்கம்" என்பர் மணக்குடவ பரிப்பெருமாளர். இந்திரனுக்குத் தாமரைக் கண்ணான் என்னும் பெயரின்மையானும்; இனி, ஆரியச் சூழ்ச்சியான முத்திருமேனிக் கொள்கையையும் நான்முகன் என்னும் படைப்புத் தெய்வத்தையும் தமிழறிஞர் ஏற்காமையால், "ஆயிரம் வேள்வியின் எய்துவாராக அருமறை கூறும் அயனுலகு" என்றும், "தாமரைக் கண்ணான் என்பது தாமரையிடத்தான் என்றது" என்றும் காளிங்கர் கூறியதும் பெருந்தவறாம்.

இனி, 'இனிது' என்பதற்கு 'எளிது' என்று பரிமேலழகர் பொருள் கொண்டதும் தவறாம். 'தோட்டுயில்' என்பது இடக்கர் அடக்கல். 'கொல்' வினாவிடைச்சொல்.
திருமாலுக்குத் தாமரைக் கண்ணான் என்னும் பெயர் கண்ணன் தோற்றரவினின்று தோன்றியதாகும்.

மணக்குடவர்:
தம்மால் விரும்பப்படுவாரது மெல்லிய தோளின்கண் துயிலுந் துயிலினும் இனிதோ? இந்திரனது சுவர்க்கம். இது சுவர்க்கத்தின்பமும் இதுதானே யென்று கூறியது.

பரிமேலழகர்:
தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் - ஐம்புலன்களையும் நுகர்வார்க்குத் தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோளின்கண் துயிலும் துயில் போல வருந்தாமல் எய்தலாமோ;
தாமரைக் கண்ணான் உலகு - அவற்றைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மால் உலகம்.

(ஐம்புலன்களையும் நுகர்வார் என்னும் பெயர் அவாய் நிலையான் வந்தது. 'இப்பெற்றித்தாய துயிலை விட்டுத் தவயோகங்களான் வருந்த வேண்டுதலின், எம்மனோர்க்கு ஆகாது' என்னும் கருத்தால், 'இனிதுகொல்' என்றான். இந்திரன் உலகு என்று உரைப்பாரும் உளர். தாமரைக்கண்ணான் என்பது அவனுக்குப் பெயரன்மையின், அஃது உரையன்மையறிக.)

என்ன மக்களே, ஏதாச்சும் புரிஞ்சுதா? :)

தாமரைக் கண்ணான் = திருமால் என்று தேவநேயப் பாவாணரே சொல்லியது தான் எனக்கு வியப்பிலும் வியப்பு! அவர் தனித் தமிழ் இயக்கத் தந்தை!

டாக்டர் மு.வ, சாலமன் பாப்பையா, இவர்களும் தாமரைக் கண்ணான் = திருமால் என்கின்றனர்!
கலைஞர், தாமரைக் கண்ணானுக்கு ஒன்னுமே சொல்லாமல் எஸ்கேப் ஆகிறார்! இவர்கள் அனைவரும் இக்கால அறிஞர்கள்!

முற்கால அறிஞர்களில் மணக்குடவர் மட்டும் தான் தாமரைக் கண்ணான் = இந்திரன் என்கிறார்! ஆனால் இது சுத்தமாகப் பொருந்தவில்லை! யாரும் இப்படி இந்திரனை முன்பும் சொன்னதில்லை! பின்பும் சொன்னதில்லை!

பரிமேலழகர் உரையோ நம்பத் தகுந்தது அல்ல என்ற ஒரு தோற்றத்தைப் பகுத்தறிவுவாதிகள் உருவாக்கி விட்டமையால், நானும் அவர்களையே ஃபாலோ பண்ணிக்கறேன்! பரிமேலழகரைப் படிப்போம்! ஆனால் அவர் பரி மேல் ஏற வேணாம்! :)

பெரும்பான்மையாக....
தாமரைக் கண்ணான் = திருமால் என்று தான் காட்டுகிறார்கள்!


ஆனால், என் மனம் இன்னமும் அலை பாய்கிறது! ஒரு வேளை, தாமரைக்கு + அண்ணான் என்றும் பொருள் கொள்ளலாமோ? (அண்ணான் என்றால் அண்ணன்/தமையன், அண்ணாதவர்/பகைவர் என்றும் பொருள் உண்டு - அண்ணார் புரம் அவிய நின்று நகை செய்த...என்னும் பாட்டும் இருக்கு! ஆனால் அண்ணார் என்னும் சொல்லின் பயன்பாடு மிகவும் குறைவு)

அண்ணான் = பகைவன்/பொருந்தாதவன்!
தாமரைக்குப் பொருந்துவது = கதிர்! பொருந்தாது = நிலவு!
எனவே தாமரைக்கு, அண்ணான் உலகு = நிலாவுலகு!

பெண்ணே, உன் தோளில் சாய்ந்து கொள்ளும் இன்பத்தை விட, அந்த நிலா உலகமா எனக்கு இன்பம்? என்று கேட்பதாக வைத்துக் கொள்வோமா?
இதில் எந்தச் சமயமும் இல்லை! கே.ஆர்.எஸ் உரை-ன்னு போட்டுறலாமா? :)

எது எப்படியோ....வள்ளுவரின் தாமரைக் கண்ணான் உலகு என்பதற்கு திருமால் உலகு என்பதே பெரும்பான்மை உரையாசிரியர்கள் கருத்து!
ஆனால் ஒன்றை நினைவில் வையுங்கள்:
தாமரைக் கண்ணான் என்று ஒரு இடத்தில் பயன்படுத்தி விட்டார் என்பதற்காக, வள்ளுவர் = வைணவர் என்று கும்மி அடிக்கக் கூடாது!

வள்ளுவர் சொன்ன தாமரைக் கண்ணான் திருமாலாகவே கூட இருக்கலாம்!
ஆனால் அவர் நோக்கம் = "காதலர்க்கு, அச்சுவையை விட இச்சுவையே இனிது" என்று காட்டுவது தான்!
முல்லைத் தெய்வமான திருமாலுக்கு அர்ச்சனை செய்வது நோக்கமல்ல! :)

இதைப் புரிந்து கொண்டால் போதும்!
திருக்குறள் சமய நூல் அல்ல! சமூக நூல்! - சமூகத்தில் அன்று விளங்கிய தாமரைக் கண்ணானை ஒரு உவமை காட்டுகிறார், அவ்வளவே!!!



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 




அடுத்த குறளைப் பார்ப்போம்! "அடி அளந்தான்" என்று குறிக்கிறார்!
இது திருமால் தானா என்பது ஒரு சிலருக்கு ஐயம்!
ஆனால் திருமால் என்று பெரும்பான்மை உரையாசிரியர்கள் கொள்கிறார்கள்!

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தா அய தெல்லாம் ஒருங்கு
குறள் 610 - பொருட்பால் - அதிகாரம்: மடியின்மை

மு.வ உரை:
அடியால் உலகத்தை அளந்த கடவுள், தாவிய பரப்பு எல்லாவற்றையும், சோம்பல் இல்லாத அரசன் ஒருசேர அடைவான்.

சாலமன் பாப்பையா உரை:
தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன், கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.

கலைஞர் கருணாநிதி உரை:
சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடம் அனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.

தனித் தமிழ் மரபுரை - மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்:
மடி இலா மன்னவன் - சோம்பலில்லாத அரசன்; 'அடி அளந்தான் தாயது எல்லாம் - கதிரவன் மூவெட்டாற் கடந்த மாநிலம் முழுவதையும் ; ஒருங்கு எய்தும் - ஒருமிக்க அடைவான்.

திருமால் தன் குறள் தோற்றரவில் மூவுலகத்தையும் அளந்ததாகச் சொல்லப்படுவதால், அவற்றை ஊக்கமுள்ள அரசன் ஒருங்கே அடைவான் என்பது பொருந்தாது. கதிரவன் இயக்கம் கீழிருந்து மேலும் மேலிருந்து மேற்கும் மீண்டும் மேலிருந்து கீழும் ஆக மூவெட்டுப்போற் புறக்கண்ணிற்குத் தோன்றுவதால், அது மூவெட்டால் ஞால முழுவதையும் கடப்பதாகச் சொல்லப்பட்டது.

வேத ஆசிரியர் கதிரவனை விண்டு (விஷ்ணு) என அழைத்ததால், திருமால் மூவடியால் உலகமுழுவதையும் அளந்தான் என்றொரு கதையெழுந்தது. இதுவே, குறள் தோற்றரவுக் கதைக்கு மூலம். இதன் விளக்கத்தை என் ' தமிழர் மதம்' என்னும் நூலிற் கண்டுகொள்க.

கதிரவன் நாள்தோறும் அளந்தாலும், முன்னை நிகழ்ச்சி பற்றி 'அடியளந்தான்' என்று இறந்தகால வினையாலணையும் பெயராற் குறிக்கப்பெற்றது. உழிஞைக்கொடி முடக்கொற்றான் (முடங்கொன்றான்) என்றும் சுடுகாடு மீட்டான் என்றும் பெயர் பெற்றிருத்தல் காண்க. ' தாஅய' இசைநிறை யளபெடை. தா-தாய்- தாய .ஒ நோ; ஆ- ஆய் - ஆய.

மணக்குடவர் உரை:
மடியில்லாத மன்னவன் எய்துவன், அடியினால் அளந்தானால் கடக்கப்பட்ட வுலகமெல்லாம் ஒருங்கே. இது மடியின்மையால் வரும் பயன் கூறிற்று

பரிமேலழகர் உரை:
அடி அளந்தான் தா அயது எல்லாம் - தன் அடியளவானே எல்லா உலகையும் அளந்த இறைவன் கடந்த பரப்பு முழுதையும்;
மடி இலா மன்னவன் ஒருங்கு எய்தும் - மடியிலாத அரசன் முறையானன்றி ஒருங்கே எய்தும். ('அடியளந்தான்' என்றது வாளா பெயராய் நின்றது. 'தாவியது' என்பது இடைக் குறைந்து நின்றது. எப்பொழுதும் வினையின் கண்ணே முயறலின், இடையீடின்றி எய்தும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் மடியிலாதான் எய்தும் பயன் கூறப்பட்டது.)

என்ன விளங்கிச்சா? :)
இப்படி, உரையெல்லாம் படிக்கறதுக்கு, பேசாம, மூல நூலான திருக்குறளையே படிச்சிறலாம் போல தோனுதா? :)

சூப்பர்! அப்படி வாங்க வழிக்கு!
எது மூல நூலோ, அதை வாசித்துச் சரி பார்க்கும் பழக்கம் வந்து விட்டால், பல கசடுகள் தானே மறைந்து விடும்!

அதற்காக உரை நூல்கள் தேவையில்லை என்பதில்லை!
பல மூலப்பாடல்களின் சுவடி கிடைக்காத போது, உரைகளில் மேற்கோள் காட்டியதில் இருந்து தான், மூலப் பாடல்களையே திரட்டித் திரட்டி எடுத்தார்கள் தமிழ் அறிஞர்கள்! அவர்களை இந்த நேரத்தில் நன்றியோடு நினைத்துப் பார்த்துக் கொள்கிறேன்!




திருமால் பற்றிய இன்னொரு குறளும் உள்ளது!
* முன் சொன்ன இரண்டு குறள்களாவது.....தாமரைக் கண்ணான், அடி அளந்தான் என்பதில் சிலருக்கு மட்டும் ஐயம் இருந்தது!
* ஆனால் இந்தக் குறளில் ஒருவருக்குக் கூட சந்தேகம் இல்லை! ஏன்-னா திருமாலை நேரடியாகக் காட்டாது...திருமகளைக் காட்டுகிறார்!

வூட்டுக்கார ஐயாவை எப்படி வேணும்-ன்னாலும் பேசலாம்! ஆனா வூட்டுக்கார அம்மா-ன்னு வந்துட்டா கலைஞர் உட்பட அத்தனை உரையாசிரியர்களும் ஏனோ ஒத்துப் போய் விடுகிறார்கள் :))

மடி உளாள் மாமுகடி என்ப, மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்.

குறள் 617 - பொருட்பால் - அதிகாரம்: ஆள்வினையுடைமை

மு.வ உரை:
ஒருவனுடைய சோம்பலிலே கரிய மூதேவி வாழ்கின்றாள்; சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.

சாலமன் பாப்பையா உரை:
சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவான். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர்.

கலைஞர் கருணாநிதி உரை:
திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டப் பயன்படுவனவாகும்

தனித் தமிழ் மரபுரை - மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்:
மாமுகடி மடி உளாள் - கரிய மூதேவி ஒருவனது சோம்பலின்கண் தங்குவாள்;
தாமரையினாள் மடி இலான் தாள் உளாள் - திருமகள் தாளாளனின் முயற்சிக்கண் தங்குவாள்;

என்ப - என்று சொல்லுவர் அறிந்தோர். கூரை முகட்டில் தங்குவதாகக் கருதப்படுவதால் மூதேவி முகடி எனப்பட்டாள். இனி முகடு என்னுஞ் சொற்குப்பாழ் என்னும் பொருளிருப்பதால், பாழான நிலைமையுண்டு பண்ணுபவள் முகடி யென்றுமாம்.

அவளது பேய்த்தன்மையாலும் வறுமையின் பஞ்சத் தன்மையாலும், அவளுக்குக் கருமை நிறம் கொள்ளப்பட்டது. திருமகள் செந்தாமரை மலர்மேல் தங்கியிருப்பதாகச் சொல்லப்படுவதால், தாமரையினாள் எனப்பட்டாள். தாமரை யென்னும் செந்தாமரைப் பெயர் இன்று தன் சிறப்புப் பொருளிழந்து வழங்குகின்றது.

வறுமையும் செல்வமும் அமைவதை, அணி வகைபற்றி, அவற்றிற்குரிய தெய்வங்கள் தங்குவதாகக் கூறினார். அக்கூற்றிலும் பண்பியின் நிலைமை பண்பின்மேல் ஏற்றப்பட்டது. முகடி சோம்பேறியின் மடியிலும், திருமகள் தாளாளனின் காலிலும் தங்குவர் என்று, வேறும் ஒரு போலிப்பொருள் தோன்றுமாறுஞ் செய்தார்.

மணக்குடவர் உரை:
வினை செய்யுங்கால் அதனைச் செய்யாது சோம்பியிருப்பானது சோம்பலின்கண்ணே மூதேவி உறைவள்; அதனைச் சோம்பலின்றி முயலுபவன் முயற்சியின்கண்ணே திருமகள் உறைவளென்று சொல்லுவர்.

பரிமேலழகர் உரை:
மா முகடி மடி உளாள் - கரிய சேட்டை ஒருவன் மடியின் கண்ணே உறையும்; தாமரையினாள் மடிஇலான் தாள் உளாள் என்ப - திருமகள் மடியிலாதானது முயற்சிக்கண்ணே உறையும் என்று சொல்லுவர் அறிந்தோர். (பாவத்தின் கருமை அதன் பயனாய முகடிமேல் ஏற்றப்பட்டது. மடியும் முயற்சியும் உடையார்மாட்டு நிலையை அவைதம்மேல் வைத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவ்விருமைக்கும் ஏது கூறப்பட்டது.)



இப்படியாகத், திருக்குறளில், திருமால் பற்றிய குறிப்புகள் உள்ளன!

அவற்றில்...இரண்டு குறட்பாக்களில்...
தாமரைக் கண்ணான், அடி அளந்தான்
என்பதற்கு, ஒரு சிலர் மட்டும் வேறு ஒரு பொருள் கொண்டாலும்,
பெரும்பான்மை உரையாசிரியர்கள் திருமால் என்றே கொள்கின்றனர்!

இன்னொன்றில் தாமரையாள்...
என்று திருமகளைக் குறிப்பது பற்றி யாருக்கும் எந்த ஐயமும் இல்லாமல்.......அனைத்து உரையாசிரியர்களும் ஒத்துப் போகின்றனர்!

தாமரையாளுக்கு ஒத்துப் போகும் இவர்கள், அதே தாமரைக் கண்ணானுக்கு ஏன் ஒத்துப் போகவில்லை என்பது அந்தத் தாமரைக் கண்ணனுக்கும் வள்ளுவப் பெருந்தகைக்கும் மட்டுமே வெளிச்சம்! :)

எது, எப்படியோ....
சமயத்தை நோக்கமாகக் கொண்டு எழாத ஒரு நூலுக்கு,
சமய முத்திரை குத்தக் கூடாது!

திருக்குறளுக்கு முத்திரை குத்த வேண்டாம்!

திருக்குறளில் திருமால் பற்றிய குறிப்புகள், ஒரு இடத்தில் நேரடியாகவும், இரண்டு இடங்களில் குறிப்பாகவும் வருகின்றன என்று வேண்டுமானால் சொல்லலாம்! அவ்வளவே!

திருக்குறள் வைணவ நூல் அல்ல! திருவள்ளுவர் வைணவர் என்று சொல்ல எந்தவொரு தரவும் கிடையாது!



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

அறக்கடவுள்
என்பிலதனைவெயில்போலக்காயுமே
அன்பிலதனைஅறம். குறள் 77: அன்புடைமை.
மணக்குடவர்உரை:என்பிலாத சீவனை வெயில் சுடுமாறு போற் சுடும்அன்பிலாதவுயிரினை அறம்.

சாலமன்பாப்பையாஉரை:எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்

கதங்காத்துக்கற்றடங்கல்ஆற்றுவான்செவ்வி
அறம்பார்க்கும்ஆற்றின்நுழைந்து. குறள் 130: அடக்கமுடைமை
மணக்குடவர்உரை:வெகுளியும் அடக்கிக் கல்வியுமுடையனாய் அதனால் வரும் பெருமிதமும் அடக்கவல்லவன்மாட்டுஅறமானது நெறியானே வருந்தித் தானே வருதற்குக் காலம் பார்க்கும்இஃது அடக்கமுடையார்க்கு அறமுண்டாமென்றது.

மறந்தும்பிறன்கேடுசூழற்கசூழின்

அறஞ்சூழம்சூழ்ந்தவன்கேடுதீவினையச்சம்குறள் 204:
மணக்குடவர் உரை:பிறனுக்குக் கேட்டை மறந்துஞ் சூழாதொழிகசூழ்வனாயின் அவனாற் சூழப்பட்டவன் அதற்கு மாறாகக் கேடு சூழ்வதன்முன்னே சூழ்ந்தவனுக்குக் கேட்டைத் தீமை செய்தார்க்குத் தீமை பயக்கும் அறந்தானே சூழும்இது தீமை நினையினுங் கேடு தருமென்றது.

சாலமன் பாப்பையா உரை:றந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதேஎண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

உலகியற்றியான்
இரந்தும்உயிர்வாழ்தல்வேண்டின்பரந்து
கெடுகஉலகியற்றியான். இரவச்சம். குறள் 1062:
மணக்குடவர் உரை:துப்புரவு இல்லாக்கால் இறந்துபடாதே பிறர்மாட்டு இரந்து கொண்டும் உயிர் வாழ்தல் வேண்டுமாயின்உலக நடையை இவ்வாறாகக் கற்பித்த முதல்வன் மிகக் கெடுவானாக வேண்டும்இஃது இரக்குமதனின் இறத்தல் அமையு மென்றது.

சாலமன் பாப்பையா உரை:பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால்இந்த உலகைப் படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெடுவானாக.

இந்திரன்

ஐந்தவித்தான்ஆற்றல்அகல்விசும்புளார் கோமான்
இந்திரனேசாலுங்கரி.             குறள் 25: நீத்தார் பெருமை.
மணக்குடவர்உரை:நுகர்ச்சியாகிய வைந்தினையுந் துறந்தானது வலிக்கு அகன்ற விசும்பிலுள்ளார்க்கு நாயகனாகிய இந்திரனே யமையுஞ் சான்றுஇந்திரன் சான்றென்றது இவ்வுலகின்கண் மிகத் தவஞ் செய்வாருளரானால் அவன் தன்பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான்இது தேவரினும் வலியனென்றது.

 சாலமன்பாப்பையாஉரைஅகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனேபுலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

செய்யவள் -தவ்வை

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல். குறள் 84: விருந்தோம்பல்.
மணக்குடவர் உரை:திருவினாள் மனம்பொருந்தி உறையும்நல்ல விருந்தினரை முகம் பொருந்திப் போற்றுவானது மனையின்கண்இது கேடின்மையன்றிச் செல்வமுமுண்டா மென்றது.           சாலமன் பாப்பையா உரை: இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.

இருமனப்பெண்டிரும்கள்ளும்கவறும்

திருநீக்கப்பட்டார்தொடர்புவரைவின்மகளிர்குறள் 920:

மணக்குடவர் உரை:கவர்த்த மனத்தையுடைய பெண்டிரும்கள்ளும்கவறும் திருமகளால் கடியப்பட்டாரது நட்புஇது நல்குரவாவார் சார்வரென்றது.

சாலமன் பாப்பையா உரை:உள்ளம் ஓரிடமும்உடம்பு ஓரிடமுமாக இருமனம் கொண்ட பாலிய் தொழிலாளர்கள்சூதாட்டம் இவை எல்லாம் திருமகளால் விலக்கப்பட்டவருக்கு நட்பாகும்.

அகடாரார்அல்லல்உழப்பர்சூதென்னும்
முகடியான்மூடப்பட்டார்.                    சூதுகுறள் 936:
மணக்குடவர் உரைதமக்கு உள்ளதாகிய இந்திரியங்களும் மனமும் இன்புற்று நிறையப்பெறார்அதுவேயன்றி அல்லற்படுவதும் செய்வர்சூதாகிய மூதேவியாலே மறைக்கப்பட்டார்மறைத்தல்நற்குணங்களைத் தோன்றாமல் மறைத்தல்.             சாலமன் பாப்பையா உரை:சூதாட்டம் என்னும் மூதேவியால் மூடப்பட்டவர் வயிறும் நிறையாமல்துன்பத்தையும் அனுபவிப்பர்.


மடியுளாள்மாமுகடிஎன்பமடியிலான்
தாளுளான்தாமரையினாள்.                 ஆள்வினையுடைமைகுறள் 617:

மணக்குடவர் உரை:வினை செய்யுங்கால் அதனைச் செய்யாது சோம்பியிருப்பானது சோம்பலின்கண்ணே மூதேவி உறைவள்அதனைச் சோம்பலின்றி முயலுபவன் முயற்சியின்கண்ணே திருமகள் உறைவளென்று சொல்லுவர்இது வினையை மடியின்றிச் செய்யவேண்டுமென்பது கூறிற்று.

முகருணாநிதி உரை:திருமகள்மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும்முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும்.

சாலமன் பாப்பையா உரை:சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவான்சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர்.

 

அவ்வித்துஅழுக்காறுஉடையானைச்செய்யவள்
தவ்வையைக்காட்டிவிடும்.                அழுக்காறாமைகுறள் 167:
மணக்குடவர்உரை:அழுக்காறுடையானைத் திருமகள் தானும் அழுக்காறு செய்துதன் தவ்வையாகிய மூதேவிக்குக் காட்டி இவன்பாற் செல்லென்று போம்இது நல்குரவிற்குக் காரணங் கூறிற்று.

முகருணாநிதிஉரை:செல்வத்தை இலக்குமி என்றும்வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டுபொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்.
சாலமன்பாப்பையாஉரை:பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

மடியிலாமன்னவன்எய்தும்அடியளந்தான்
தாஅயதெல்லாம்ஒருங்குமடியின்மைகுறள் 610:
மணக்குடவர் உரை:மடியில்லாத மன்னவன் எய்துவன்அடியினால் அளந்தானால் கடக்கப்பட்ட வுலகமெல்லாம் ஒருங்கேஇது மடியின்மையால் வரும் பயன் கூறிற்று.

சாலமன் பாப்பையா உரை:தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும்சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.

 

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.     குறள் 580: கண்ணோட்டம் 

முவரதராசன் உரை:யாவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர்பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர்.

 

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.             குறள் 72: அன்புடைமை.
மணக்குடவர் உரை:அன்பிலாதார் எல்லாப் பொருளையுந் தமக்கு உரிமையாக வுடையர்அன்புடையார் பொருளேயன்றித் தம்முடம்புக்கு அங்கமாகிய வெலும்பினையும் பிறர்க்கு உரிமையாக வுடையர்அன்புடையார்க்கல்லது அறஞ்செய்த லரிதென்றாயிற்று.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 தாம்வீழ்வார்மென்றோள்துயிலின்இனிதுகொல்

தாமரைக்கண்ணான்உலகு.புணர்ச்சிமகிழ்தல். குறள் 1103:

மணக்குடவர் உரை:தம்மால் விரும்பப்படுவாரது மெல்லிய தோளின்கண் துயிலுந் துயிலினும் இனிதோஇந்திரனது சுவர்க்கம்இது சுவர்க்கத்தின்பமும் இதுதானே யென்று கூறியது.

சாலமன் பாப்பையா உரைதாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ

பருவரலும்பைதலும்காணான்கொல்காமன்
ஒருவர்கண்நின்றொழுகுவான்          குறள் 1197: . தனிப்படர்மிகுதி
மணக்குடவர் உரைதான் ஒருவர் பக்கமாகநின்று ஒழுகித் துன்பஞ்செய்கின்ற காமதேவன் நமது தடுமாற்றமும் நாம் உறுகின்ற துன்பமும் காணானோகாண்பானாயின் நம்மை வருத்தானேதெய்வமாகலான்.

முகருணாநிதி உரை:காமன்ஒரு பக்கமாக மட்டும் இருப்பதால்என்னைக் காதல் நோய் வருத்துவதையும்என் மேனியில் பசலை படர்வதையும் கண்டு கொள்ளமாட்டான் போலும்!.
சாலமன் பாப்பையா உரை:ஆண்பெண் இருவரிடமும் இருந்து செயல் ஆற்றாமல் ஒருவரிடம் மட்டுமே போரிடும் காமன்இன்னொருவரின் மேனி நிற வேறுபாட்டால் வரும் துன்பத்தையும் வருத்தத்தையும் அறிய மாட்டானோ?



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard