Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 10. நந்தரும் மெளரியரும்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
10. நந்தரும் மெளரியரும்
Permalink  
 


10. நந்தரும் மெளரியரும்



ந்திய நாட்டு வடமேற்குக் கணவாய் வழியாகக் கடந்த நான்கு அல்லது ஐந்தாயிர வருடங்களாகப் பலப்பல இனத்தைச் சேர்ந்த மக்கள் மெள்ள மெள்ள உட்புகுந்து சிந்துநதிக் கரையிலும், அதன்பின் கங்கைச் சமவெளியிலும் குடியேறியிருக்கிறார்கள். மேற்கே கிரேக்க நாடு தொடங்கி, கிழக்கே மத்திய ஆசியா, சீன நாடு வரையிலிருந்து பல இனமக்கள் கூட்டமாகப் படையெடுத்தும், பண்பாட்டின் வழியும் வடவிந்திய எல்லை வந்து தங்கள் ஆதிக்கத்தையும் ஆணையையும் நிலைநாட்டியுள்ளார்கள். வரலாற்றுப் பேராசிரியராகிய ஸ்மித்து அவர்கள், ஆரியர் பல பாகங்களுக்குப் பிரிந்து போக, இந்திய எல்லையில் இவ்வாறு வந்தவர்களே இருக்குவேத ஆரியர்கள் என்று குறிக்கின்றார்கள்.[1] பார்நெட்டு என்பவர் செய்த ஆராய்ச்சியால் இரு முறை ஆரியர்கள் இந்தியாவில் புகுந்தார்கள் என்பதும், அவர்கள் கி மு. 2500 லும் 1500லும் வந்தவர்கள் என்பதும் புலப்படுகின்றன.[2] அக்காலத்திலெல்லாம் தெற்கே பாண்டியரும் சோழரும் சேரரும் ஆந்திரரும் ஆண்டனர் என்பதும், அவர்தம் மொழிகள் தமிழும் தெலுங்கும் என்பதும், தமிழ் எழுத்துக்கள் செமிட்டிக்கு (Semitic) இனத்தைச் சேர்ந்தவை என்பதும் புலப்படுகின்றன[3]எனவே, தென்னாட்டு மக்களாகிய திராவிடர்கள். ஆரியர்கள் இந்திய எல்லையில் புகுந்த அந்த நாளிலேயே தங்களுக்கெனத் தனிப் பண்பாடும் நாகரிகமும் மொழியும் பெற்று வாழ்ந்தார்கள் என்பது அறியக் கிடக்கின்றது. வடநாட்டிலும் ஒரு காலத்தில் அவர்கள் பரவி இருந்தார்கள் என்பதைச் சிதைந்த சிந்துவெளி நாகரிகம் நமக்கு நன்கு காட்டுகின்றதன்றோ?

வருவிருந்து பார்த்திருந்து, வந்தவர்களுக்கு வழிவிட்டு, தம் வாழ்வைத் தென்னாட்டு எல்லையிலேயே அமைதியாக அமைத்துக்கொண்ட திராவிடர் - சிறப்பாகத் தமிழர் - வடவிந்தியாவில் ஆணை செலுத்தவில்லை என்று கொண்டாலும், அன்றுதொட்டு இன்றுவரை வடவிந்திய மக்களோடு பல வகையில் தொடர்புகொண்டே வாழ்ந்தனர் என்பது தெரிகின்றது. தமிழ்நாட்டு இலக்கியங்களும், வடநாட்டு வரலாற்றுக் குறிப்புக்களும் இவ்வுண்மையை நன்கு விளக்குகின்றன. அவற்றுள் ஒன்று, மெளரியரின் தென்னாட்டுப் படையெடுப்பாகும்.

கி.மு. ஏழாம் நூற்றாண்டிற்குப் பிறகு இந்தியாவில் சிறுசிறு அரசுகள் பல தோன்றலாயின. அவை தமக்குள் மாறுபட்டு போர் விளைத்துத் தம் ஆணையைப் பரப்ப முயன்று கொண்டிருந்தன. அதே வேளையில் மேலை நாட்டுக் கிரேக்க நாட்டிலிருந்தும், பாரசீகம் போன்ற பிர நாடுகளிலிருந்தும் சில அசுகள் வந்து இந்திய நாட்டில் தங்கள் ஆணையைப் பரப்ப முயன்றன. வடநாட்டுக்கு அரசியல் காரணமாக வந்த அந்த மேலை நாட்டினர் சிலர், வாணிபத்தின் பொருட்டுத் தென்னாட்டுக்கும் வந்தனர். தமிழ் நாட்டு மேலைக் கடற்கரையில் பொன்னும், மிளகும், வாசனைப் பொருள்களும் வாணிபம் செய்யப் பெற்றன. கீழைக் கரையில் பட்டு வாணிபம் சிறந்திருந்தது. இவ்வுண்மையைக் கி.மு ஆறாம் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க எழுத்தாளர் ஹெகேதயஸ்[4] என்பவர் நன்கு விளக்கியுள்ளார். ஆறாம் நூற்றாண்டில் பாரசீகத்தில் ஆண்ட சைரஸ் (Cyrus), டேரியஸ் (Darius) போன்றார் காலத்திலேயும் அவர்தம் படைகள் இந்தியாவுக்கு வந்தன என்பது தெரிகிறது. இந்தத் தொடர்பு பின்னும் சில நூற்றாண்டுகள் தொடர்ந்திருந்தது. அப்படையெடுப்புக்களுள் ஒன்றுதான் கிரேக்க அலெக்ஸாந்தரின் படையெடுப்பு.

கிரேக்க நாட்டு மன்னனான அலெக்ஸாந்தர் பாரசீக மன்னரை வெற்றி கண்டு, மெள்ள மெள்ளக் கிழக்கு நோக்கி, கி.மு. 326ல் சிந்து நதிக் கரையில் வந்து சேர்ந்தான். அக் காலத்தில் கங்கைச் சமவெளியை நந்தர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்கள் செல்வத்திலும் புகழிலும் சிறந்தவர்களாய் விளங்கினார்கள். அவர்கள் புகழ் தென்கோடி வரையில் பரவியிருந்தது. அவர்களுடைய புகழையும் செல்வத்தையும் அக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் பாராட்டியிருக்கிறார்கள். எனவே, அவர்கள் புகழின் அளவை நாம் அறியக் கூடுமன்றோ?

அக்காலத்திலேதான் அலெக்ஸாந்தர் இந்திய மண்ணில் கால் வைத்தார். அவருடைய படை வீரர்கள் நாடு திரும்ப வேண்டும் என்று புரட்சி செய்யாதிருந்தால், ஒரு வேளை அவர்கள் கங்கைச் சமவெளிக்கு வந்திருக்கக் கூடும். அதுகாலை தமக்கு ஆட்சியே வேண்டும் என்று முயன்று கொண்டிருந்த சந்திரகுப்த மெளரியர் அலெக்ஸாந்தரின் துணையை நாடியிருக்க வேண்டும். சந்திரகுப்தரின் எண்ணம் நந்தப் பேரரசை வீழ்த்தவேண்டுமென்பதே. அதற்கு அவர் அலெக்ஸாந்தரின் துணையை நாடினார். பிறகு சாணக்கியரின் துணையும் கிடைத்தது. எனவே, அவர் பாடலிபுரத்தில் அரசாண்ட நந்தரை வென்று, தாமே அப்பரந்த நிலப் பரப்புக்குத் தலைவரானார்.

சந்திரகுப்தரின் மண்ணாசை அத்துடன் அமையவில்லை இந்திய நாடு முழுவதையும் அவர் தம் ஆணையின்கீழ்க் கொண்டுவரத் திட்டமிட்டார். எனினும், அவர் தம் விருப்பத்தை முழுதும் நிறைவேற்ற இயலவில்லை. தெற்கே உள்ள ஆந்திரரும் தமிழரும் அவரது படையை உள்ளே அனுமதிக்கவில்லை. அவருடைய ஆட்சியின் எல்லைகள் கிழக்கே கலிங்கநாடு (ஒரிசா) வரையிலும், மேற்கே வடக்கு மைசூர்ப் பகுதி வரையிலும் அமைந்துவிட்டன. என்றாலும், அவர் குமரி வரையில் தம் படையைச் செலுத்தத் திட்டமிட்டார்[5]. அதற்குக் காரணம் இரண்டு: ஒன்று, நாட்டு ஆசை; எப்படியும் பரந்த இந்தியா முழுவதையும் தம் ஆணையின் கீழ்க் கொண்டு வரவேண்டுமென்பது; மற்றொன்று, தமிழ் வேந்தர்கள் தனது பகைவர்களாகிய நந்தர்களுக்கு நண்பர்களாய் இருந்ததோடு அவர்கள் புகழை பாடத் தமிழ்ப் புலவர்களையும் அனுமதித்ததாகும். எனவே, எப்படியாவது தமிழ் நாட்டு வேந்தரைத் தாக்க வாய்ப்பை எதிர்நோக்கிக்கொண்டிருந்தார் சந்திரகுப்தர். ஆம்! அந்த வாய்ப்பும் கிட்டியது. தமிழ் நாட்டு மன்னரோடு கலந்து வாழ்ந்த கோசர், எக்காரணத்தாலோ மோகூர் அரசனுடன் மாறுபட்டனர் போலும்! அவனை அவர்களால் வெல்ல முடியவில்லை. எனவே, அவர்கள் சந்திரகுப்தரைத் துணைக்கு அழைத்தார்கள். அவரும் பொதியம் வரையில் வந்து சென்றனர். ஆந்திரநாடு வழியாக வர இயலாத அவர் கொங்கணிப்பாதை வழியாக, மைசூர் எல்லையிற் புகுந்து, அதில் சில பகுதிகளைக் கொண்டு, அப்படியே தமிழ்நாட்டில் புகுந்தனர் எனக் காட்டுகின்றார் பானர்ஜி அவர்கள்[6] மைசூர்க் கல்வெட்டு ஒன்றும் சந்திரகுப்தர் தென்னாட்டுப் படையெடுப்பைக் குறிப்பதோடு அந்நாட்டுச் சில பகுதிகள் அவர் ஆணையின் கீழ் இருந்தன என்றும் குறிக்கின்றது.[7] அந்த நாளில் அவரது ஆட்சி எல்லையைக் குறித்த படம் அத்துடன் கீழே தரப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டு எல்லை வரை சந்திரகுப்தர் வந்தார் என்பது வெளிப்படை. திரு பானர்ஜி அவர்களின் எழுத்துப்படி[8] ஆரியர்கள் இந்தோ ஆரியர்களாகிப் பஞ்சாபில் தங்கள் ஆட்சி எல்லையைப் பெருக்கிக்கொண்டபோது வடக்கே மகத நாட்டிலும் காமரூப நாட்டிலும் ஆண்டவர்கள் திராவிட மன்னர்களே என்பது விளங்குகின்றது. எனவே, அக்காலத்தில் ஆண்ட திராவிடர் அல்லது தமிழ் மன்னர்தம் பரம்பரையின் கடைசித் தலைமுறையாக நந்தர்கள் மகதத்தை ஆண்டிருக்கக்கூடும். எனவேதான் அவர்களுக்கும் தமிழருக்கும் இருந்த நட்பினைக்காண முடிகிறது. தமிழ் இலக்கியங்களும் அவர்களைப் பாராட்டுகின்றன.

தமிழர் அல்லது திராவிடர் பரம்பரையை அழிக்கச் சாணக்கியருடன் சேர்ந்த சந்திரகுப்தர் முயன்றிருப்பது இயல்பானதே. எனவே, வடநாட்டு ஆதிக்கத்தை ஒழித்த அவர், அவரது தென்னாட்டு ஆணையை அழிக்கவும் காலம் பார்த்திருப்பார். அது கோசர்வழி ஒரளவு நிறைவேறிற்று என்பது பொருந்தும்.

அவர் காலத்தில் இருந்த அலெக்ஸாந்தருக்குப் பின் வந்த கிரேக்க நாட்டு மன்னர் செலூக்கஸ் (Selukos) என்பவர் மெகஸ்தனிஸ் என்பவரைத் தூதுவராக அவர் அவைக்கு அனுப்பிவைத்தார் என்பது நாடறிந்த வரலாறாகும். மெகஸ்தனிஸ் வடநாட்டோடு நின்றுவிடாது தென்னாட்டுக்கும் இலங்கைக்குங்கூட வந்து, அவ்வந்நாட்டு வளப்பத்தையும் வாழ்வையும், பாண்டியர் போன்ற மன்னரையும், பிற சிறப்பியல்புகளையும் குறித்துச் சென்றார் என்பதை அவருடைய எழுத்துக்கள் நன்கு எடுத்துக்காட்டுகின்றன.[9] தாம்பிரபரணி பற்றியும் ஈழநாடு பற்றியும் அவர் குறித்துள்ளார்.

சந்திரகுப்தர் கடைசி நாளில் மைசூர் நாட்டில் வந்து தங்கி, சமண உண்மைகளைக் கேட்டறிந்து, அந்த நாட்டிலேயே கி.மு. 298 அல்லது 297ல் மறைந்தார் என்பர்.[10] சந்திரகுப்தர் பத்திரபாகு (Bhatrabahu) என்ற சமண ஆசிரியருடன் மைசூர் நாட்டுச் சிரவணபெலகோலாவில் வந்து தங்கினார் என்றும், வந்ததும் பத்திரபாகு மறைந்ததாகவும், சந்திரகுப்தர் பின்னர்ப் பன்னிரண்டு ஆண்டுகள் சமண நியதிப்படி உண்ணா நோன்பிருந்து உயிர்விட்டதாகவும், பின்பு அவரைப் பின்பற்றிய பல்லோர் தெற்கே புன்னாடு (Punnad - புனல்நாடு) நோக்கிச் சென்றதாகவும் கூறுவர். [11]

சந்திரகுப்தரையும், அவரது மெளரியப் பரம்பரையையும் நந்தர் பரம்பரையையும் அவர்தம் செல்வத்தையும் தலைநகரையும் குறிக்க வருகின்ற தமிழ்ப் பாடல்கள் சங்க இலக்கியத்தில் சில உள்ளன. கடைச் சங்ககால இலக்கியத் தொகுப்பு என்று அவை பொதுவாகக் கூறப்படினும், சில செய்யுள்கள் அக்கடைச் சங்கத்துக்கு (கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. முதல் நூற்றாண்டு வரை) முற்பட்டன என்பதை ஆராய்ச்சியாளர் நன்கு உணர்வர். இடைச் சங்கப் பாடல்களோ என எண்ணத்தக்க சிலவும் உள்ளன. இங்கு நாம் காண இருக்கும் பாடல்களெல்லாம் கி.மு. நான்காம் நூற்றாண்டில் சிறந்த புலவர்களால் பாடப் பட்டனவாகும்.

................செல்லலொடு
நாம்படர் கூரும் அருந்துயர் கேட்பின்
நந்தர் வெறுக்கை எய்தினும் மற்று அவண்
தங்கலர் வாழி தோழி! வெல்கொடித்
துனைகால் அன்ன புனைதேர்க் கோசர்
தொல்மூ தாலத்து அரும்பணைப் பொதியில்
இன்னிசை முரசம் கடிப்பிகுத்து இரங்கத்
தென்முனை சிதைத்த ஞான்றை மோகூர்
பணியா மையின், பகைதலை வந்த
மாகெழு தானை வம்ப மோரியர்’
 (அகம், 251:3-12)

என்றும்,

'புகையிற் பொங்கி வியல்விசும்பு உகந்து
பனிஊர் அழற்கொடி கடுப்பத் தோன்றும்
இமயச் செய்வரை மானுங் கொல்லோ?
பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇ, கங்கை
நீர்முதல் கரந்த நிதியங் கொல்லோ?
எவன்கொல் வாழி தோழி’ 
(அகம்:265;1—7)

என்றும் மாமூலனார் பொருள்வயின் பிரிந்த தலைவனை எண்ணி வருந்திய தலைவியைத் தோழி தேற்றிய வகையில் கூறுகின்றார். இரண்டிலும் நந்தர்தம் புகழும் செல்வமும் பேசப்படுகின்றன. நந்தர் தமிழ் மன்னருக்கு நட்பினராய் இருந்தமையாலும், அவர்தம் செல்வம் உண்மையில் அளவிறந்து நின்றமையாலும், அதை எல்லையாக வைத்துப் பேசுகின்றார் புலவர்; ஆனால், உடனே அவரை அழித்த புதியராய் வந்த மோரியர் கொடுமையையும் புலப்படுத்துகின்றார். பழையரான நந்தரைவிடப் பின் வந்த மோரியர் புதியராதலின், அவரை ‘வம்ப மோரியர்’ என்றார் புலவர். 'வம்பு’ என்ற சொல்லுக்குப் புதுமை என்றும் (பிங்கலம்) நிலையின்மை என்றும் (தொல்காப்பியம்) பொருள் உண்டு. தம் நண்பராகிய நந்தர்மேல் படை எடுத்து வந்தவரைப் புதியர் எனக் கூறியதன்றி, நிலையற்ற வாழ்வை உடையவர் என இழித்துரைத்தலும் இயல்வதேயாகும். நந்தர் தம்முடைய பெருஞ்செல்வத்தை -பாடலியில் சேர்த்து வைத்திருந்த செல்வத்தை - இப்புதிய மோரியருக்கு அஞ்சிக் கங்கைக் கரையில் மூடி மறைத்துவைத்தனர் என்பதை இரண்டாவது பாட்டு (265) நன்கு காட்டுகின்றது, நந்தர் பரம்பரையைப் பல்வேறு இன்னல்களுக்கு உட்படுத்தி, அவர்தம் ஆட்சியையும் செல்வத்தையும் சந்திரகுப்தர் கைப்பற்றினார் என்னும் உண்மையை ஸ்மித்து அவர்கள் நன்கு காட்டியுள்ளார்கள்.[12] மேலும், அவர் அவர்தம் பாடலிபுத்திரம் இப்போதைய பாட்னா அன்று எனவும், அது அக்காலத்தில் சோன் (sonn) நதிக்கரையில் இருந்தது எனவும் காட்டுகின்றார்.[13] எனவே, நந்தர் செல்வ நிலையையும், அதை அழித்த மோரியரையும் நினைத்த மாமூலனார், ஒரே பாட்டில் இருவரையும் குறிக்கின்றார்; மோரியரைக் குறிக்கும் போது அவர்தம் தமிழ் நாட்டுப்படை எடுப்பு நினைவுக்கு வர, அதையும் விளக்கிக் காட்டிவிடுகின்றார். மெளரியர் மேலைக் கடற்கரை வழியாக மைசூர்ப் பகுதியிற் புகுந்து தமிழ் நாட்டு எல்லையில் போர் கருதி வந்தனர் என வரலாற்று ஆசிரியர் காட்டியதை மேலே கண்டோம். ஆனால், அவர்கள் வரக் காரணமாயிருந்தவர்களைக் காணமுடியவில்லையே! மாமூலனார் அந்த ஐயத்தை நன்றாக விளக்குகின்றார் தமது அகப்பாட்டிலே (251).

தமிழ் நாட்டு எல்லைக்கு அப்பாலிருந்து சிறந்த படையை உடைய கோசர் என்பார், பொதியிலின் பக்கத்திலிருந்த பலரையும் வென்று, தம்மடிப்படுத்தினர். அது காலை ஆண்டு ஒரு பக்கத்திலிருந்த மோகூர் மன்னன் பணியவில்லை. அவனை வெல்லும் ஆற்றல். தமக்கு இல்லாமையைக் கண்ட கோசர், வேற்றவர் துணையை நாடினர். அதே வேளையில் தமிழர்மேல்—தம் மாற்றலர் நண்பர்மேல்—பழி தீர்க்க நினைத்த சந்திர குப்தர் மைசூர் எல்லையில் வந்து தங்கியிருப்பர். அவர் செல்வத்தையும் படை வலியையும் கோசர் கேள்வியுற்றிருப்பர். எனவே, அவரை அழைத்திருக்கலாம் காலம் பார்த்திருந்த அவரும் துணை செய்திருக்கலாம். அவரே பொதியில் வரையில் வந்தார் என்று கொள்ள வேண்டுவதின்று. அவருடைய படைகள் அனுப்பப்பட்டிருக்கலாம். அப்படையுடன் கோசர் வந்து மோகூரைப் பணிய வைத்திருக்கலாம். எனினும், அவர்கள் நெடுங்காலம் தமிழ்நாட்டில் தங்கினார்கள் என்றோ, அன்றி ஆண்டார்களென்றோ கூறுதல் இயலாது. நாட்டின் நிலையும் மக்கள் எழுச்சியும் அவர்களைப் பிறகு விரட்டி அடித்திருக்கக் கூடும். எனினும், அவர்கள் துணையுடன் தமிழ் நாட்டில் வந்த 'கோசர்' நிலைத்துத் தங்கி விட்டனர் என்பது நன்கு தெரிகின்றது.[14] திரு. இராக வையங்கார் அவர்கள் தம் ஆராய்ச்சி நூலில் சந்திர குப்தர் மகிஷ மண்டலமாகிய மைசூர் நாட்டில் சிரவணவேள் குளத்து (சிரவணபெலகோலா)த் தங்கினார் என்பதையும் காட்டுகின்றார்.[15]

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

திரு. இராகவையங்கார் அவர்கள் மதுரைக் காஞ்சி அடிகளையும் அகநானூற்று (251) அடிகளையும் ஒன்றாக இணைக்க முயல்கின்றார். வடுகரை முன்னிறுத்தி (அகம் 281) வந்தவர் மோரியர் எனவும், அவர்கள் மோகூர்ப் பழையனை எதிர்த்த போது கோசர் மோகூர்ப்பழையனுக்குத் துணையாய் இருந்தனர் எனவும், எனவே, மோரியர் கோசரையும் மோகூர்ப்பழையனையும் எதிர்த்தவர் எனவும் குறிக்கின்றார்.[16] எனினும், அகநானூற்று 251-ஆம் பாடல் கோசர் தமிழ் நாட்டு வெளியிலிருந்து சூறைக்காற்றெனத் தமிழ் நாட்டுத் தென்கோடி வரையில் சென்றனர் எனவும், மோகூர்ப் பழையன் பணியவில்லை எனவும், அதற்கெனவே மோரியர் வந்தனர் எனவும் நன்கு காட்டுகின்றது. மற்றும், அகம் 281ல் குறிக்கும் 'வடுகர்’ எனப்படுவார் கோசரேயாவர். அவர்கள், கி. மு. நான்காம் மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் மன்னரோடு மாறுபட்டுப் படையெடுத்து இந்நாட்டுக்கு வந்தவராயினும், சில நூற்றாண்டுகள் கழித்து, மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சி பாடிய காலத்து, அவர்தம் பகைவனாகிய மோகூர்ப்பழையனுடன் நண்பராகவே விளங்கினர் எனக் கொள்ளல் பொருந்தும். இது பற்றிப் பின்னும் காண்போம்

மேலும், ஜயங்கார் அவர்கள் மோரியர் குறைத்த அறைவாய் கள்ளக்குறிச்சி மலையிடை வழியாகும் என்றும், கோசர் பாடி என்னும் ஊர்கள் அப்பக்கத்திலே உள்ளனவென்றும் காட்டுகிறார், எனவே, சந்திரகுப்த மெளரியர் அந்தப் பழங்காலத்தே தமிழ்நாட்டுள் புகுந்து போர் செய்தனர் என்பது நன்கு விளங்குகிறதன்றோ!

இந்தப் போராட்டத்தைப் பற்றி இந்த இரு அகப் பாடல் மட்டுமன்றி வேறு சில பாடல்களும் குறிக்கின்றன. மோரியர் பற்றிய குறிப்புக்கள் புறப் பாடல்களிலும் உள்ளன. அவற்றையும் காண்போம்.

பரங்கொற்றனார் என்ற புலவர், அகம் 69ல் இம் மோரியர் திகிரி திரிதரக் குறைத்த நிலையைக் கூறி அதன் எல்லை கடந்து சென்றவராயினும், பொருள்வயின் சென்ற தலைவர் காலம் நீட்டிக்காது வந்துவிடுவார் எனக் காட்டு கின்றார்.

'விண்பொரு நெடுங்குடை இயல்தேர் மோரியர்
பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த
அறைஇறந்து அகன்றன ராயினும் எனையதூஉம்
நீடலர் வாழி தோழி'
 (அகம், 69:10-13)

 

........................'வென்வேல்
விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
தின்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
உலக இடைகழி அறைவாய் கிலை இய
மலர்வாய் மண்டிலத்து அன்ன, நாளும்
பலர்புரவு எதிர்ந்த அறத்துறை கின்னே,'
                                      
 (புறம், 175)

என்று வேங்கடமலை எல்லையில் வாழ்ந்த ஆதனுங்கன் என்ற மன்னனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடிய பாட்டு அமைந்துள்ளது. இதில் மோரியர் பற்றிய குறிப்பு வருவதைக்காணலாம். எனவே, மோரியர் அல்லது மெளரியர் தமிழருக்குத் தெரிந்தவரே என்பதும், அவர்கள் காலத்தில், அதாவது கி.மு. நான்காம் நூற்றாண்டில், தமிழ் நாட்டவர்கள் செல்வத்தாலும் பிற சிறப்பாலும் மேலோங்கி இருந்ததோடு, இமயம் வரை பல மன்னர்களுடன் நல்லுறவு கொண்டு சிறந்திருந்தார்கள் என்பதும், நந்தர் பரம்பரையினர் இவர்களுக்கு உற்ற நண்பர்களாகவே, அவர்தம் மாற்றார் காலம் பார்த்துக் கோசர்களுக்காக இவர்தம் நாட்டின்மேல் படை எடுத்தனர் என்பதும் அறியக் கிடக்கின்றன.

இனி, நம் குறிப்பில் வரும் கோசர் யார்? அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்? அவர்களுக்கும் தமிழ் நாட்டுக்கும் என்ன தொடர்பு? இவை பற்றி ஒரு சிறிது காணலாம் : கோசர்களைத் தமிழ் இலக்கியங்கள் 'நான் மொழிக்கோசர்' (மதுரைக்காஞ்சி), 'செம்மற்கோசர்' (அகம். 15), 'புனைதேர்க் கோசர்' (அகம், 251), 'இளம்பல் கோசர்' (புறம். 146), 'கருங்கட் கோசர்' (அகம். 90), 'பல்வேற் கோசர்' (அகம். 113), 'ஒன்றுமொழி கோசர்' (அகம். 196), 'வளங்கெழு கோசர்' (அகம். 205), ‘பல்லிளங் கோசர்' (அகம். 216), 'முதுகோசர்' (அகம். 262) எனக் குறிக்கின்றன. எனவே, அவர்கள் தமிழ் நாட்டுக்கு நெடுநாள் பழக்கமானவர்களானதோடு, சிறந்த வீரர்களாயும் உண்மை பேசுபவர்களாயும் இருந்தார்கள் எனக் கொள்ள வேண்டும். அவர்களை வரலாற்று ஆசிரியர் சத்திய புததிரர்கள் என்பர். ஒரு சிலர் இக்கொள்கைக்குத் தக்க சான்றுகள் இல்லை எனக்கூறி மறுப்பினும், பலர் அவர்களைச் சத்திய புத்திரர் எனவே கொள்ளுவர். அவர்கள்கள் வாழ்ந்த அல்லது ஆணை செலுத்திய இடம் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் இருப்பினும், திரு. 'தோமா’ (P. J. Thoma) அவர்கள் கூற்றே ஏற்றுக்கொள்ளக் கூடியதாய் உள்ளது. அவர் கூற்றுப்படி, அவர்கள் நாடு, வட மலையாளப் பகுதியும், தென்கன்னட காசக்கோடு பகுதியும் உள்ளடங்கிய நாடு என்று கொள்வதே பொருத்தமாகும். அப்பகுதி 'சத்திய பூமி' எனவும் வழங்கப் பெறுகிறதாம்[17]. இது சந்திரகுப்தர் மைசூர் வழியை மேற்கொண்டதற்கு ஒரு காரணமாகவும் அமையலாம். மற்றும் பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட செங்குட்டுவனுக்கும் பழையனுக்கும் போர் நடந்ததும் பதிற்றுப்பத்தால் அறிய இயல்கின்றது.[18]. இப்போர் நீண்ட காலம் நிலவியது போலும்!

இவ்வாறு கோசருக்காக வடக்கே பாடலியில் வாழ்ந்து மைசூர் வரை ஆண்ட சந்திரகுப்தர் தமிழ் நாட்டின்மேல் படை எடுத்தார் என்பது முழுதும் பொய் என்று அறிஞர் சிலர் துணிந்து எழுதுகின்றனர். எனவே, அவர்தம் கருத்துப் பற்றி ஆராய்ந்து, அக்கருத்தும், அதற்கு அவர் காட்டும் சான்றுகளும் பொருத்தமற்றவை என்று எடுத்துக்காட்ட வேண்டுவதும் நம் கடமையன்றோ? அவர்கள் மோரியர் என்ற சொல்லே சந்திரகுப்த மெளரியரையோ, அவர் பரம்பரையையோ குறியாது என்பர். அதற்கு அவர்கள் காட்டும் சான்று, புறம். 175ஆம் பாட்டுக்கு உரையாசிரியர் எழுதிய உரையாகும். அதில் உரையாசிரியர் மோரியர் என்ற சொல்லுக்கு 'நிலமுழுதும் ஆண்ட வேந்தர்' எனக் குறித்துள்ளாராம். அதைக் கொண்டு, மோரியர் ஒர் இனமாயின், அதைக் குறியாது இப்படிப் பொதுப்பட எழுதுவாரா எனக் காட்டி, எனவே மோரியர் என்ற சொல். ஒரியராகத்தான் இருக்கவேண்டும் என வாதிடுவர். 'ஒரியர்' என்ற சொல், ஊலி' என்ற சொல்லை முதலாகக் கொண்டது என்றும், அதற்கு அகன்ற நிலப்பரப்பை உடையது' என்றபொருள் உண்டு என்றும் காட்டி, அந்த வட சொல்லே இங்கு எடுத்தாளப்பெறுவது என்பர். இது பொருந்துமா? புறநானூற்று உரையாசிரியர் அவர் காலத்தில் வழங்கிய எம்முறை கொண்டு அத்தொடருக்கு இப்பொருள் கொண்டாரோ யாமறியோம்! எனினும், அவர் கொண்ட அதே பொருளிலும் இழுக்கு ஒன்றும் இல்லையல்லவா? ஒரு சிறு பகுதியாகிய தமிழ் நாட்டை மூன்று பிரிவுகளாகக் கொண்டதோடு, இவற்றுக்குள்ளும் சிறுசிறு அரசுகளை அமைத்துக்கொண்டு அடிப்படுத்தி ஆளும் இந்த நிலை நோக்க, இமயம் முதல் மைசூர் வரை ஆண்ட மன்னர் பெருநிலப் பரப்பை உடையவர் என்று கொள்ளுதல், தவறில்லையே! மற்றும் இந்திய வரலாற்றிலேயே, வரலாற்று எல்லைக்கு உட்பட்ட காலத்தில் முதல் முதல் இத்துணைப் பரந்த நிலப்பரப்பைக் கொண்டு ஆண்ட பெருமை அந்த மோரிய பரம்பரையைச் சார்ந்ததுதானே? இதைக் கொண்டாலும் அவருக்கு இவர் காட்டிய உரை பொருந்தியே தோன்றும். மற்றும், இதே சொல்லுக்குப் பிறவிடங்களில் வரும் பொருள்களையும் நோக்கின், உண்மை தெளிவாகுமல்லவா? மற்றும் ஒரே பாட்டில் நந்தரையும் அவருக்கு மாறுபட்ட மோரியரையும் கொண்டு வந்து காட்டும் மாமூலனார் கருத்து என்ன? நந்தர்களுக்கு வேறு எப்படி உரை காண்பது? மோகூர்ப் பழையன் பணியாமையின் கோசர் மோரியரை அழைத்து வந்தனர் என்ற உண்மையைத் திட்டமாகக் காட்டுகின்றாரே! இதை எக்காரணம் கொண்டு மறைக்க இயலும்?

'முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர்
தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு’

                                         (அகம் 281)

என்று அகநானூற்றிலே இதே மாமூலர் தெள்ளத் தெளிய வடக்கே உள்ள வடுகர் முன்னுற, அவர் பின் தென்திசை வந்த மோரியர் எனக் காட்டுகின்றாரே! இதற்கு என்ன பொருள் கொள்ள முடியும்? எனவே, மோரியர்தம் தென்னாட்டுப் படையெடுப்பு உறுதி எனக் கொள்ளலாகும்.

மற்றொரு காரணம் காட்டியும் இப்படையெடுப்பை மாற்ற நினைப்பர். அதையும் எண்ணிப் பார்க்கலாம். மோரியர் 'கோசர்'களுக்காகத்தானே தமிழ்நாட்டுக்குஅதிலும் சிறப்பாகப் பொதியத்தின் பக்கல் வாழ்ந்த பழையன் நாட்டுக்கு வந்தார்கள் எனவும், ஆனால் கோசரும் பழையனும் நண்பர்களாய் உள்ளார்கள் என மதுரைக்காஞ்சி மூலம் நாம் காண்பதால் அவர்கள் மாறுபடவில்லை எனவும், அவர்வழி மோரியர் படையெடுப்பு இல்லையெனவும் காட்ட முனைவர். மதுரைக்காஞ்சியில் வரும் அடிகள் இவையே :

'பழையன் மோகூர் அவையகம் விளங்க
நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன

                                 (மதுரைக்காஞ்சி, 508-9)

இவற்றில் கோசர்கள் மோகூர்ப் பழையனுக்கு நண்பர்களாய் இருந்தார்கள் எனக்கொள்ள இடமுண்டாகின்றது. இதனால் கோசருக்கும் பழையனுக்கும் போர் உண்டாகவில்லை என்று கொள்ள முடியுமா? மாமூலனார் காலத்துக்கும் மாங்குடி மருதனார் காலத்துக்கும் இடையில் இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளாவது கழிந்திருக்க வேண்டும். எனவே, பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில் நண்பராய் இருந்த இருவரும் அதற்கு முன்னோ பின்னோ மாறுபடவில்லை என்று யார் கூற முடியும்? இக்காலத்திலும் இவ்வுண்மை நமக்கு நன்கு தெரிகின்றதே! வரலாற்றில் எத்துணைப் பெருமன்னர்கள் ஒருகால் இணைந்து சிறந்தும், அடுத்தொருகால் மாறுபட்டுப் போரிட்டும் வேறுபடுவதைக் காண்கின்றோம்! இன்றும் நேற்று எதிர்க் கட்சியில் இருந்தவர் இன்று மாற்றுக் கட்சியிற்புகுந்து தலைவராதலையும் பழைய கட்சியைப் பழிப்பதையும் காண்கின்றோமே! நேற்றைய நண்பர் இன்றைய பகைவராயும், நேற்றைய பகைவர் இன்றைய நண்பராயும் மாறுதல் அரசியலில் மிக எளிமையாக நடக்கக் கூடியனவேயாகும். இந்த மதுரைக் காஞ்சியின்படி கோசர் பழையனுக்குக் கண்ணும் கவசமும் போன்று அருகிருந்து பிழையா நெறி காட்டும் நாற்பெருங்குழுவென இருந்தார்கள் என்று கொள்ள முடிகின்றது. எனினும், அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன் அவர்கள் மாறுபடவில்லை என்று எப்படி கொள்ள முடியும்? எனவே, இதைக்கொண்டு மோரியர் படை எடுப்பு இல்லை என அறுதியிட முடியாது.

எனவே, கி.மு. நான்காம் நூற்றாண்டில், வடக்கே மோரியப் பேரரசு தழைத்த காலத்தில், தமிழகமும் சிறந்து நின்றதென்பதும், தமிழர் புகழும் பண்பும் இமயம்வரை சென்றன என்பதும், சந்திரகுப்தர் நாடு தமிழ்நாட்டு எல்லை வரை இருந்ததென்பதும், அவர் தமிழ்நாட்டின்மேல் கோசருக்காகப் படை எடுத்து வந்தனர் என்பதும், படை எடுப்பினும் தமிழ்நாட்டை அடக்கி ஆள முடியவில்லை என்பதும், எனவே அக்காலத்தில் தென்னாடு வடநாட்டினும் ஏற்றம் பெற்றே விளங்கியதென்பதும், அக்காலத்தில் வந்த கிரேக்க நாட்டுத் தூதுவர் மெகஸ்தனிஸ் இத்தமிழ் நாட்டை யும் புகழ்ந்துள்ளார் என்பதும், தமிழர் தலைநகரங்களில் சீன நாடு தொடங்கிக் கிரேக்க நாடு வரை உள்ள வணிகர்கள் மண்டிக் கிடந்தார்கள் என்பதும் தேற்றமாகும்.

 

 

  1.  Oxford History of India, Vol. I, pp. 70-72.
  2.  Antiquities of India, by Barnet, pp. 7 and 8.
  3.  Historical Inscriptions of South India, by Robert Sewell, p. 2.
  4.  Hekataius Qf Miletus, B, C, 549-486
  5.  Political History of Ancient India, by H. Ray-chaudhri and Alex XII by Plutarch
  6.  Pre-historic, Ancient and Hindu India, by R.D. Banerji, M.A., p.85
  7.  Rice-Mysore & Coorg from the inscription, p. 10
  8.  Pre-historic, Ancelent and Hindu India, p. 30
  9.  Foreign Notices of South India (University of Madras), p. 41
  10.  Political History of Ancient India, p. 199.
  11.  Historical Inscriptions of South India, University of Madras, p. 6.
  12.  The Early History of India, by W. A. Smith, p. 124.
  13.  The Oxford History of India, p. 77.
  14.  கோசர். ஒரு சிற்றாராய்ச்சி— ரா. இராகவையங்கார் (அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பதிப்பு, 1951.)
  15.  ௸ ப. 17.
  16.  கோசர்-ஒரு சிற்றாராய்ச்சி, ப. 16
  17.  Journal of Royal Asiatic Society, 1923, p. 412.
  18.  பதிற்றுப்பத்து (44.11-18; 49; 7-16)


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard