Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 6. அகத்தியர் யார்? எங்கே?


Guru

Status: Offline
Posts: 7471
Date:
6. அகத்தியர் யார்? எங்கே?
Permalink  
 


6. அகத்தியர் யார்? எங்கே?


மயமும் குமரியும் நெடுநாட்களுக்கு முன்பே இணைந்து வாழ்ந்தன என்பது வரலாறு உணர்த்தும் உண்மை. அந்த உண்மையின் அடிப்படையில் பிற்காலத்தில் வரலாற்றுக்கு மாறுபட்ட எத்தனையோ புனைந்துரைகளும், கதைகளும், பிறவும் உண்டாயின. ஒரு சில வரலாற்று எல்லையில் அமைந்து எண்ணக் கூடியனவாய் இருப்பினும், பல வெறுங்கற்பனைக் கதைகளாகவே அமைந்துவிடுகின்றன. அகத்தியரைப் பற்றி இன்று நாட்டில் பலகதைகள் வழங்குகின்றன. அவற்றுள் பெரும்பாலன கற்பனைகளாகவே உள்ளன என்பர் ஆராய்ச்சியாளர்.[1] தமிழ் நாட்டில் எத்தனையோ அகத்தியர் பேசப்பெறுகின்றனர். அகத்தியர் மருத்துவநூலும், அகத்தியர் பாட்டிசை நூலும், அகத்தியர் இலக்கணமும், அகத்தியர் பாராயண நூலும், பிறவும் நாட்டில் உலவுகின்றன. இந்த அகத்தியரெல்லாரும் எவ்வெக்காலத்தவர் என்றும், இவர்கள் எந்த வகையில் தமிழ் நாட்டுக்கு உரியவர்கள் என்பதும் எண்ண இயலாதன.

கந்தபுராண வரலாற்றின்படி அகத்தியர் இமயத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்தவர் என்பர். வடமொழியில் உள்ள கந்தபுராணத்தில் அவரைப்பற்றிய குறிப்பு ஒன்றும் இல்லை. அவரைத் தமிழ் அறிந்த முனிவராகக் கந்தபுராணம் எங்கும் குறிக்கவில்லை. அவர் இறைவனை ஒத்தவர் எனினும், தமிழில் மொழிபெயர்த்த கச்சியப்பர் அந்த அகத்தியரைத் தமிழ் அகத்தியர் என்றே குறிக்கின்றார். ‘மலயத்து வள்ளல்’[2] என்றும், தமிழ் மாமுனி[3] என்றும் கந்தபுராணம் காட்டுகின்றது. எனவே, அப்படி அகத்தியர் சிவபெருமான் மணம் காணச் சென்றிருந்தாலும், அவர் தமிழ் நாட்டிலிருந்து சென்றார் எனக் கொள்ளல் வேண்டும். ஆனால், சில புராண வரலாறுகள் வடமொழி, தமிழ் இரண்டையும் சிவபெருமான் உலகுக்கு அருளினார் என்றும் வடமொழியைப் பாணினிக்கும், தமிழை அகத்தியருக்கும் அறிவுறுத்தினார் என்றும் காட்டுகின்றன. மொழியியல்பு அறிந்தாருக்கும், வரலாற்று அறிஞர்களுக்கும் இக்கருத்து முழுதும் ஏற்றுக்கொள்ளக் கூடியது அன்று என்பது நன்கு விளங்கும். புராணங்கள் பிந்திய காலத்தில் சமயமும் பற்றும் பின்னிப்பிணைந்த காலத்துப் புலவன் உள்ளத்தில் உதித்த கற்பனைகளே என்பதை இன்று சமயநெறி உணர்ந்த தக்கவர்களே ஏற்றுக்கொள்ளுகின்றார்கள்.

மற்றும் கந்தபுராணத்தில் காட்டப்படும் அகத்தியர், அப்புராணத்தை ஒட்டிக் காளிதாசர் எழுதிய குமார சம்பவத்தில் காட்டப்பெறவில்லை. சிவபெருமான் திருமணத்துக்கு எத்தனையோ கடவுளரும் முனிவரும் வந்தனர் எனக் காட்டும் ஆரியர் அகத்தியர் வந்ததாகக் குறிக்கவில்லை என்பதை வடமொழி வாயிலாகக் கற்ற அறிஞர்கள் நன்கு விளக்கிக் காட்டுகின்றார்கள். எனவே, அந்தப் புராண வரலாறே அகத்தியரைப்பற்றி மாறுபட்ட கருத்துக்களைத் தருகின்றது.

இனி அந்த வரலாற்றை அப்படியே ஏற்றுக்கொள்வோமானாலும், அவரை வரும் வழியில் விந்தியம் தடுத்த தென்றும் அவருக்கு வழி விடாது அது உயர்ந்தது என்றும் கூறுவதை நோக்கினால், மற்றோர் உண்மை புலப்படும். அகத்தியர் அப்படி வந்ததாகவே வைத்துக் கொண்டாலும், அது இராமாயணகாலத்துக்கு முற்பட்டதாகவே இருக்க முடியும். அக்காலத்தில் வடநாட்டிலிருந்து தென்னாட்டுக்குத் தம் கலாசாரக் கொள்கையைப் பரப்பப் பலர் வந்திருக்கலாம். அவர்களில் அகத்தியரும் ஒருவராய் இருந்திருக்கலாம் என்று கொள்ளுவதே பொருத்தமானதாகும். அப்படி வந்த அகத்தியருக்கு விந்தியம் வழி விடவில்லை என்று புராணக்காரர் கூறிய கதையால் அவரைத் தென்னாட்டுக் கலாசாரமும் பண்பாடும் விந்திய எல்லையிலேயே தடுத்து நிறுத்தின என்று கொள்வது பொருந்தும். விந்தியமலைச் சாரலை அடுத்த தண்டகவனத்தில் (தண்டகாரணியம்) அகத்திய முனிவர் தங்கியிருந்தார் என்றும், இராமன் சீதை யுடனும் இலக்குவனுடனும் தெற்கு நோக்கி வரும்போது அங்கே அந்த அகத்தியர் ஆசிரமத்தில் தங்கியிருந்தான் என்றும் ஆரணிய காண்டம் நன்கு காட்டுகின்றது. எனவே, வடநாட்டிலிருந்து வந்த அகத்தியர் அங்கே தங்கித் தம் காலத்தைக் கழித்தவராக வேண்டும். அவர் இராமனைக் கண்டு, அவனோடு கலந்து மகிழ்ந்ததோடு, அந்த இராம இலக்குமணர்களை அங்கே தம்முடன் தங்கியிருக்க வேண்டினார். எனினும், இராமன் அரக்கர்களைக் கொல்ல வேண்டியுள்ளமையின், மேலும் தெற்கே செல்ல வேண்டுவதன் தேவையைக் கூறிப் புறப்பட்டான் [4]. இந்தப் படலத்தில் அகத்தியரின் பல சிறப்புக்களையும் குறிப்பிடுகிற கம்பர், நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்'[5] எனவும் குறிக்கின்றனர். அவர் காலத்திலேயே அங்குள்ள அகத்தியர் தமிழ் அகத்தியர் என்ற எண்ணம் உண்டாகியிருக்க வேண்டும். என்றாலும், அவரே அடுத்துச் சுந்தரகாண்டத்தில் பொதியமலையையும் அகத்தியரையும் காட்டுகின்றார்.

தென்தமிழ்நாட்டு அகன்பொதியில் திருமுனிவன்
     தமிழ்ச்சங்கம் சேர்கிற் பீரேல்,
என்றும்அவன் உறைவிடமாம் ஆதலினால்
     அம்மலையை இறைஞ்சி ஏகி"

                                    (நாடவிட்ட படலம், 31)

என்று சுக்கிரீவன் அனுமன் முதலிய வானர வீரர்களுக்கு வழி கூறி அனுப்புகிறான். எனவே, அங்கே ஆரணிய காண்டத்தில் கண்ட அகத்தியர் வேறு என்பதும், பொதியமலை அகத்தியர் வேறு என்பதும் கொள்ளவேண்டியுள்ளன. கம்பர் தாம் முன் கூறியதைப் பின்னும் வலியுறுத்தும் கொள்கை உடையவர் என்பதை இராமாயணம் பல இடங்களில் எடுத்துக்காட்டும். இங்கு அகத்தியரைக் கூற வருமுன் சுக்கிரீவன் வாக்கிலேயே,

“பண்டு.அகத்தியன் வைகிய தாப்பகர்
தண்டகம்”

                    (நாடவிட்ட படலம், 17)

என முன் அகத்தியர் வைகிய இடம் எனக் காட்டுகின்றார். அவர் பண்டு அங்கே தங்கிய அகத்தியரே பிறகு பொதியிலில் சேர்ந்திருப்பார் என எண்ணி இருப்பதில் தவறில்லை. ஆயினும், அவர் தண்டகாரணியத்தில் சில நாட்களே தங்கியிருப்பவராயின், அங்கே தம்முடன் இராம இலக்குவர்களைத் தங்கியிருக்க வேண்டினர் என்று கொள்வது எவ்வாறு பொருந்தும்?[6] திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளை அவர்கள் தம் தொல்காப்பிய எழுத்ததிகார முன்னுரையில் அகத்தியர் இருவர் இருந்தனர் எனவும் அவர் இருவரும் பல்வேறு வகையில் வேறுபட்டு வாழ்ந்தவராவர் எனவும் குறிக்கின்றார்[7]. என்றாலும், இதில் உள்ள தவறு எண்ணத் தக்க ஒன்று. இருவரையும் ஒருவரெனக் கருதிய கம்பர், இடர்ப்பட்டு இவ்வாறு கூறினாலும், வான்மீகியார் இவற்றையெல்லாம் சொல்லவில்லை. மற்றொன்றும் நோக்கற்பாலது. மேலே நாம் காட்டியபடி, இராம இலக்குமணர் சீதையுடன் அகத்தியரிடம் தங்கிப் பிறகு தெற்கு நோக்கி நெடுந்தொலைவு வந்து பல அசுரரைக் கொன்று, பின்பு கீதையை இழந்து, அவளைத் தேடிக்கொண்டு தெற்கில் நெடுந்தொலைவு வந்த பிறகு கிட்கிந்தையில் அனுமன் முதலியவர்களைக் காண்கின்றனர். அங்கிருந்து தெற்கே அனுப்பப் பெறும் அனுமன் முதலியவர்களுக்கு மறுபடியும் வடக்கே விட்டு வந்த அகத்தியர் இருந்த இடத்தைப்பற்றிச் சொல்லுவது பொருத்தமானதாகுமா? எனவே, உண்மையில் அகத்தியர் இருவர் இருந்திருக்க வேண்டும் என்பதும், அவர் இருவரையும் கம்பர் ஒருவரெனக் கருதியதால் வந்த தடுமாற்றமே இது என்பதும் நன்கு விளங்கும். அகத்தியர் இருவராய் இருக்கலாமோ என ஸ்மித்து என்பாரும் ஐயுறுகிறார்.[8]

இனி, இக்காலத்தில் இவ்வாறு வரலாற்றுக்கு ஒவ்வாத கதைகளும் கருத்துக்களும் உள்ளமையின், அகத்தியர் கதையே வெறுங்கற்பனை என்றும், அது வட நாட்டவர் ஆதிக்கத்தை அந்த வரலாற்றுக்கு முற்பட்ட நாளிலே தென்னாட்டின்மேல் செலுத்த ஆண்ட வெறுங்கதையே என்றும் கூறுவர் அறிஞர்[9]. சற்று ஆராய்ந்து பார்ப்பின், இப்படி முடிவு செய்வதிலும் வடநாட்டு அகத்தியரின் வேறாகத் தமிழ்நாட்டின் பொதிய மலையில் வேறு ஓர் அகத்தியர் இருந்தார் எனவும், அவருக்கும் வடமொழிக்கும் தொடர்பு ஒன்றும் இருந்ததில்லை எனவும், பெயர் ஒற்றுமையால் இடைக்காலத்தில் இருவரையும் ஒருவரெனக் கருதியமையே இத்தகைய கற்பனைக் கதைகளுக்கும் பிறவற்றிற்கும் இடம் கொடுத்ததெனவும். உண்மையை எண்ணின், இருவேறு பகுதிகளில்—வடக்கிலும் தெற்கிலும்—இருவேறு அகத்தியர் வாழ்ந்தனர் எனக் கொள்ளலாம் எனவும், அவர்தம் பெயர் ஒற்றுமையைத் தவிர வேறு எதிலும் அவர்க்குள் தொடர்போ வேறு ஒற்றுமையோ இருந்ததில்லை எனவும் கொள்ளுதல் பொருத்தமாகும் என எண்ணுகின்றேன். எனினும், இக்கருத்து அறிஞர்தம் ஆராய்ச்சிக்கு உரியதேயாகும்.

தமிழ் இலக்கியங்களில் வரும் அகத்தியரைப் பற்றி இனி எண்ணிப் பார்க்கலாம்: பல இலக்கியங்கள் அகத்தியர் பொதிய மலையில் தங்கியவர் என்றும். அவர் இன்னும் அங்கேயே இருக்கிறார் என்றும் கூறுகின்றன. அக்கூற்றுக்கள் எவ்வளவு உண்மை என்பதை நான் இங்கே காட்டத் தேவை இல்லை. பொதியமலை தமிழ்நாட்டுத் தென்கோடிக்கருகில் இனிய தென்றலை வாரி வீசிக் கொண்டிருக்கின்றது. அத்ன் இனிமை மெள்ளத் தவழ்ந்து வடக்கே சென்றது. மதுரைக்கு அண்மையில் அத் தென்றல் வீசிய சிறப்பைப் பொதியத் தென்றல் போந்தது காணிர்’ என இளங்கோவடிகள் உணர்ந்து போற்றுகிறார். தென்றல் இனிமை தருவது; தமிழும் இனிமை தருவது இரண்டையும் பிணைத்துத் தென்றலும் தமிழும் பொதியத்திலிருந்து புறப்பட்டன எனக் கூறினார்களோ எனக் கருத வேண்டியுள்ளது. அன்றியும், தமிழகத்துக்குத் தெற்கே இருந்த பரப்பாகிய குமரிக் கண்டத்தில் (Lemuria) தமிழ் மொழி தோன்றியதென்ற ஒரு கொள்கை இருப்பதாலும், அப்பகுதி அழிய, மெள்ள மெள்ள வடக்கே வளர்ந்து அம்மொழி வளம் பெற்றதாய் இருப்ப தாலும், தெற்கே இன்று உயர்ந்துள்ள குன்றிலிருந்து அது தோன்றி வளர்ந்தது என்று கொண்டார்களோ என நினைக்க வேண்டியுள்ளது. பொதிய மலையில் அகத்தியர் வாழ்ந்தார் எனக் கொண்டு அவர் தமிழை வளர்த்தார் எனக் கொள்வது தவறு அன்று என்றாலும், அவரைப்பற்றித் தமிழ்நாட்டில் வழங்கும் கதைகள் வேடிக்கையாய் அமைந்துள்ளன.

முதற்சங்க நூல் அகத்தியம் எனக் குறிக்கின்றது இறையனார் களவியல் உரை. அச் சங்கத்தே திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும், குன்றம் எறிந்த குமரவேளும்' ஒருங்கிருந்து தமிழ் ஆராய்ந்தனர் என்ப. எனவே, அந்த வரலாற்றில் அகத்தியர் கடவுளர்களோடு சார்த்திப் பேசப் பெறுகின்றார். கடவுளர் தமிழ்நாட்டில் வந்து தங்கித் தமிழ் வளர்த்தனர் என்று பேசுவன யாவும் புராண மரபாய் அமைவனவேயன்றி, வரலாற்றுக்கோ ஆராய்ச்சிக்கோ ஏற்ற மரபாய் அமையமாட்டா. அப்படியே அவர்கள் இருந்து தமிழ் ஆராய்ந்தார்கள் எனக் கொள்ளினும், அது நம் நினைவுக்கு எட்டாத நெடுங்காலத்துக்கு முன்னர் நிகழ்ந்த நிகழ்ச்சியாகக் கொள்ளத்தக்க ஒன்றாகும். மற்றும், தொல்காப்பியர் தம் ஆசிரியராய் வாழ்ந்த அகத்தியர் அக் காலத்திலேயே இருந்து, அன்றே—பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே—தமிழ் வளம் பெற்றதாய் இருந்திருக்க வேண்டும் எனக் கொள்ளல் வேண்டும். இது வரலாற்றுக்குப் பொருந்தாத ஒன்று. எனவே, பொதிய மலையில் அகத்தியர் வாழ்ந்தார் எனக் கொள்ளினும், அவரைக் கடவுளர்களோடு சார்த்திப் பேசுதல் முறையன்று எனக் கூறி மேலே செல்லலாம்.[10]

இடைச்சங்க காலத்திலும் அகத்தியமும் தொல்காப்பியமும் இருந்தன என்பதைக் காண்கிறோம்; அத்தொல்காப்பியர்தம் ஆசிரியராகவே அகத்தியர் அமர்ந்து தமிழ் வளர்த்திருக்கின்றார். ஆயினும், தொல்காப்பியத்தின் ஒரு சூத்திரமும் கெடாத வகையில் நாம் அதை முழு நூலாகவே பெறுகின்றபோது அகத்தியத்தின் இரண்டொரு சூத்திரங்களையே நம்மால் பெற இயல்கின்றது. இதற்குக் காரணம் என்ன? அகத்தியம் மட்டும் எவ்வாறு அழிவு பெற்றது? சிவராசப் பிள்ளை அவர்கள் தம் நூலில் அவ்வாறு ஒரு நூல் இருந்திருக்க இடமே இல்லை எனக் குறிப்பிடுகின்றார். அவர் கூற்றும் ஒரளவு உண்மையே என எண்ண இடமிருக்கின்றது. அந்நூல்—தொல்காப்பியத்தின் முதல் நூல்—அத்துணைச் சிறந்த ஒன்றாய் இருந்திருப்பின், அது காலங் கடந்து வாழ வேண்டுமல்லவா? இறையருளால் மொழியறிந்து, இலக்கண வரம்பறிந்து, அவ்விலக்கணத்தை எழுதிய அகத்தியருக்கே, அந்நூல் வழக் கிழந்து அழிந்தது என்பது இழிவைத் தேடித் தருவதாகும். எனவே, அவ்வாறு அழிந்தது எனக் கொள்வதினும் இல்லை என்று கொள்வதே பொருந்தும் எனக் கருதினார்கள் போலும்!

தொல்காப்பியம் தோன்றிய பின் அகத்தியம் வழக்கழிந்தது எனக் கூறினாலும், அகத்தியர் பெருமை குறைக்கப்பட்டே தீரும். தம் மாணவர் நூலின் முன் தம் நூல் வாழ்விழந்துவிட்டதென அகத்தியர் அறியின் வருந்துவாரன்றோ? மேலும், சிறந்த நூல் இயல்பாக நெடுங்காலம்காலம் கடந்து வாழும் என்பது முறை. தொல்காப்பியம் அவ்வாறு வாழ, அகத்தியம் அழிந்தமையே அதன் பெருமை இன்மைக்கு ஒர் எடுத்துக்காட்டாகும். அகத்தியச் சூத்திரம் எனக் குறிக்கும் இரண்டொரு சூத்திரங்களும் சிறந்தவை எனக் கொள்ளக்கூடியன அல்ல. எனவே, இருக்கும் ஏதோ இரண்டொன்றைக் கண்டு அவற்றின்வழி அகத்தியர் பெருநூல் செய்தார் எனவும் அது மறைந்தது எனவும் கொள்ளுவதினும் அந்நூல் எழவில்லை என்றே கொள்ளல் பொருத்தமானதாகும்.

இனித் தொல்காப்பியனாருக்கும் அகத்தியனாருக்கும் இடையில் உள்ள உறவு பற்றிய ஒரு கதை நகைப்பிற்குரியதாகும். அகத்தியனார் தம் மாணாக்கராகிய தொல்காப்பியரைத் தம் மனைவியாரை அழைத்துவர அனுப்பிய தாகவும், அழைத்து வரும் வழியில் வெள்ளம் காரணமாகக் கோலொன்றின் முனையை அவரைப் பற்றிக்கொள்ளச் செய்து தொல்காப்பியர் அவரை அழைத்து வந்ததாகவும், அதனால் அகத்தியர் அவரைச் சபித்ததாகவும், அவரும் பதிலுக்கு ஆசிரியருக்குச் சாபம் கொடுத்ததாகவும் கதை அமைந்துள்ளது. இக்கதை நல்லாசிரியர் மாணவருக்கு இடையில் இருக்கவேண்டிய அன்பையும் பண்பையும் அகற்றுகின்றதன்றோ? அகத்தியனார் தம் மாணவரைப் பற்றித் தகாத வகையில் எண்ணியிருந்திருப்பாராயின், பின்பு அவர்கள் வழி இலக்கணம் எப்படிப் பிறந்து வாழ்ந்திருக்கக் கூடும்? இக்கதை போன்றவை எல்லாம் தேவையற்றன என ஒதுக்கப்படுதல் வேண்டும்.

மற்றும், தொல்காப்பியத்திலோ, அதன் பாயிரத்திலோ, அகத்தியனாரைப் பற்றிய குறிப்பு ஒன்றும் நாம் பெறவில்லை. பாயிரத்திலோ அரில் தபக் கேட்ட அதங்கோட்டு ஆசான் குறிக்கப்பெறும்போது, அகத்தியர் அத்தொல்காப்பியரின் ஆசிரியராய் இருந்திருப்பாராயின், எப்படி விடப்பட்டிருப்பார்? தொல்காப்பியரை ஐந்திறம் நிறைந்த தொல்காப்பியன்’ எனப் பாயிரம் குறிக்கின்றதே அன்றி, அகத்தியம் நிறைந்த தொல்காப்பியன்’ எனக் குறிக்கவில்லை. ஐந்திறமா, ஐந்திரமா என்னும் ஐயமும் நீங்குதல் வேண்டும். அது பற்றிப் பின்பு ஓரிடத்தில் கூடுமாயின் காணலாம். எனவே, அகத்தியருக்கும் தொல்காப்பியருக்கும் எவ்வாறு தொடர்பு கற்பித்தார்கள் என்பது விளங்காத புதிராய் உள்ளது.

அகத்தியனாரைப் பற்றித் தமிழ் இலக்கியங்கள் வேறொரு கதையையும் சொல்லுகின்றன. தமிழ்நாட்டு வற்றா வளஞ்சுரக்கும் காவிரியே அவர் கமண்டலத்திலிருந்து புறப்பட்டதாம்.

'அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை',

என்று மணிமேகலைப்பதிகம் (அடி, 11, 12) காட்டுகின்றது. அகத்தியர் அங்கு மைசூர் நாட்டு எல்லையில் குடகு மலையில் இருந்ததாகவும், அதுபோது சீகாழியில் இந்திரன் வைத்துக் காத்த பூந்தோட்டம் நீரின்றி வாடியதாகவும், விநாயகர் காக்கை வடிவம் கொண்டு சென்று அந்த அகத்தியர் கமண்டல நீரைக் கவிழ்த்ததாகவும், அதுவே பின்னர்க் காவிரியாய்ப் பெருகிப் பின்பு கொள்ளிடமாகவும் காவிரியாகவும் சீகாழிக்கு இரு மருங்கும் ஒடி அப் பூந்தோட்டத்தைச் செழிக்கச் செய்ததாகவும் கதை எழுதியிருக்கிறார்கள். இதைப் பின்னால் வந்த புலவர் ஒருவர் பாட்டாகப் பாடி விநாயகர் வணக்கமாக அமைத்துள்ளார்.

'சுரர்கு லாதிபன் தூய்மலர் நந்தனம்
பெருக வார்கடல் பெய்த வயிற்றினோன்
கரக நீரைக் கவிழ்த்த மதகரி -
சரண நாளும் தலைக்கணி யாக்குவாம்,'

[11]

எனப் பாடுகின்றார். இதில் மற்றொரு கதையும் அடங்கியுள்ளது. அகத்தியர் கடலை உண்டவர் என்ற கதையே அது இவ்வாறாய ‘கதைகள் கேட்பதற்கு வேடிக்கையாய் அமையினும், வரலாற்றுக்கு ஒவ்வாதனவாகவே உள்ளன. எனவே, இத்தகைய புராண மரபுக் கதைகளோடு பொருந்திய ஒரு முனிவர் அகத்தியர் என்ற பெயரோடு வாழ்ந்தார் எனக் கொள்வதினும், அகத்தியர் என்ற தமிழ் அறிஞர் வாழ்ந்தார் எனவும், அவர் பொதிகையில் சில காலம் தங்கியிருந்தார் எனவும், அவர் வாழ்ந்த காலத்தில் அவர் பெருமதிப்புப் பெற்று விளங்கினார் எனவும் கொள்ளுதல் பொருத்தமுடையதாகும் என நினைக்கின்றேன்.

எனவே, தமிழ் நாட்டில் பழங்காலத்திலே ஒர் அகத்தியர் வாழ்ந்தாரா என்பது ஐயத்திற்குரியதாய் உள்ளது என்பதும், அப்படி வாழ்ந்திருந்தாலும், அவர் தொல்காப்பியர்தம் ஆசிரியராய் இருந்திருத்தலியலாது என்பதும், அவரும் வடக்கிருந்து வந்த அகத்தியரும் ஒருவரே அல்லர் என்பதும், அவர் பொதியமலையில் தங்கித் தமிழ் பயின்று அதை வளர்த்து நிற்க, மற்றவர் வடக்கிருந்து வந்தவர் விந்திய மலைச் சாரலிலேயே தங்கியவராதல் வேண்டும் என்பதும், இருவரையும் ஒருவராகக் கருதி, அந்த வழியில் ஆராய்ச்சி செய்வது பொருத்தமற்றதென்பதும், அகத்தியம் என்ற இலக்கணம் சிறந்ததாய் இருந்திருப்பின், அது தொல்காப்பியத்தை ஒட்டி வாழ்ந்திருக்கும் என்பதும், இருந்ததாகக் கொள்ள நினைத்தாலும் அதன் காலம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் செல்வதால் ஆராய்ச்சி பொருந்தாது என்பதும் அறிய வேண்டுவனவாகும். பொதிய மலையில் தமிழ் அறிந்த நல்ல பண்பாடுடைய ஒரு புலவர் வாழ, அதே பெயரோடு வடக்கே இமயத்திருந்து வந்து விந்திய மலையில் மற்றொரு புலவர் வாழ்ந்தார் என்று கொள்ளுவதே அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருந்துவதாகும்.

‘தென்தமிழ்நாட்டு அகன்பொதியில் திருமுனிவன்என்றும் அவன் உறைவிடம் என்று கம்பன் காட்டுவது போன்று தமிழ் அகத்தயன் என்றும் பொதியில் வாழ்ந்தான். என்றும் வடநாட்டிலிருந்து வந்த அகஸ்தியன் விந்திய, மலைச்சாரலில் தங்கினான் என்றும் ஏற்றுக் கொள்ளல் நலம்.

  1.  Agasthia in Tamil Land, by K. N. Sivaraja Pillai
  2.  கந்தபுராணம், திருமணப்படலம், 50.
  3.  ஷை (மேலது). 54.
  4.  கம்பராமாயணம், அகத்தியப்படலம், 53
  5.  ஷை (மேலது). 54
  6.  அகத்தியப் படலம், 54.
  7.  தொல். எழுத். நச்சி. முன்னுரை பக்கம், X.XVIII (கழகப் பதிப்பு.)
  8.  The oxford History of India, by V.A. Smith.p. 42 (1958 Edition)
  9.  Agasthia in Tamil Land, p. 63.
  10.  Agasthia in Tamil Land
  11.  கந்தபுராணம், காப்புச் செய்யுள்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard