Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: முன்னுரை


Guru

Status: Offline
Posts: 7329
Date:
முன்னுரை
Permalink  
 


 முதற்பதிப்பின்
முன்னுரை

அண்மையில் இந்து மாபெருங்கடலை ஆழ்ந்து ஆராய்ந்த எழுபது பேரைக்கொண்ட இரஷியாவின் விஞ்ஞான அறிவுக் குழுவினர் அம்மாகடலின் அடிப்பொருள்களை ஆராய்ந்ததன் பயனாக அங்கே 1000 லட்சம் ஆண்டுகளுக்கு முன் (100 Million) நிலப்பரப்பு இருந்ததென்றும், இலங்கைக்குத் தென்கிழக்கில் 550 கல் தொலைவில் ஆழ்கடலில் 10,000 அடி உயர மலை உள்ளதென்றும் முடிவு செய்து அந்த உண்மையை உலகுக்கு உணர்த்தியுள்ளனர். அந்த ஆய்வுக் குழுவின் தலைவராகிய பேராசிரியர் P. பெஸ்ருகெள (Prof. P. Bezrukov) கல்கத்தாவில் 20.2.61ல் இவ்வுண்மையை வெளியிட்டதோடு, கண்டுபிடிக்கப்பட்ட அந்த ஆழ்கடல் மலைக்கு 15-ஆம் நூற்றாண்டில் இந்துப் பெருங்கடலில் முதல் முதல் கப்பலோட்டிய இரஷியப் பெருமகனாரின் பெயரையே[1] சூட்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.[2] இந்த ஆராய்ச்சியை உலகம் ஏற்று வியக்கின்றது. இத்தகைய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுமானால், நம் நினைவில் உள்ள பல உண்மைகள் வெளியாவதோடு, நாம் நினைத்தே அறியாத பலப்பல புது உண்மைகளும் புலனாகும். இமயம் கடலுள் ஆழ்ந்த காலமும், குமரிக்கண்டம் சிறப்புறத் திகழ்ந்த காலமும் உண்டு என்றால் எள்ளி நகையாடிய காலம் மறையத் தொடங்கிவிட்டது. ஆகவே, அறிவியல் ஆராய்ச்சி நன்கு வளர வளர நமக்குப் பல உண்மைகள் தெரியும். அவற்றுள் பல மனித வரலாற்று ஆராய்ச்சி எல்லையைக் கடந்து நெடுந்துாரம் முன்னே சென்று காண வேண்டிய நிலையில் உள்ளன. பரந்த அண்ட கோளத்தின் ஓர் அணுவாகிய உலகில் நின்றுகொண்டு, கணக்கிட்டறிய முடியாத கால எல்லையில் ஒரு நொடியே நிற்கும் மனித இனத்தின்-வாழும் இன்றைய மனிதன், வரலாற்றை வரையறுக்க முடியாது என்பதை இன்றைய விஞ்ஞான ஆய்வுகள் நிறுவுகின்றன. சிறப்பாகப் பரந்த இந்தியத் துணைக் கண்டத்திலும், அதன் பகுதியாய் உள்ள தமிழகத்திலும் இந்தக் கருத்துக்கள் விளக்கம் பெறாவிட்டாலும், பன்னெடுங் காலமாக நாட்டில் நிலவிக்கொண்டே வருகின்றன.

இந்திய நாட்டு வரலாற்றின் எல்லையை ஆராயத் தொடங்கின், கானும் வரலாற்று மூலங்கள் வழி சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் நம்மால் செல்ல முடியாது என்பது உண்மைதான். என்றாலும், அதற்கு முன் ஒன்றுமே இல்லாத அநாகரிக நாடாய் இது இருந்து, இதன்மேல் மையல் கொண்டு அலெக்ஸாந்தர் வந்தார் என்று ஆராய்ந்து, அதிலிருந்து வரலாற்றைக் கணிக்க முடியுமோ! அலெக்ஸாந்தர் படையெடுப்பே இன்று இந்திய நாட்டு வரலாற்று எல்லைக் கல்லாய் அமைகின்றது[3]. தமிழ் நாடாகிய தென்னகத்தைப் பொறுத்தவரையில் தொல்காப்பியர் காலத்தை அறுதியிட முடியவில்லை எனச் சிலர் நினைத்தாலும், அதன் காலமாகிய சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கால எல்லையே வரலாற்று எல்லையாகின்றது. இன்னும் சற்று முன் சென்றால் 5000 ஆண்டுகள் வரை தெளிவற்ற வரலாற்றை ஓரளவு காண இயலும். “அதற்கு முன் என்ன?” என்னும் கேள்விக்கு வருங்கால ஆராய்ச்சிகளே பதில் சொல்ல வேண்டும்.

தெளிந்த வரலாற்றுக் கால எல்லையாகிய தமிழ்நாட்டுக் கடைச்சங்க கால எல்லையிலும், வடநாட்டு வரலாற்றை வரையறுத்துக் காட்டும் அசோகர் கால எல்லையிலும் கீழ் வரம்பை அறுதியிட்டுக்கொண்டு, தெளிவு பெறாத 5000  ஆண்டுவரை செல்லும் அந்தச் சிந்துவெளி - குமரி முனைக் கால எல்லையை மேல் வரம்பாகக்கொண்டு, இரண்டிற்கும் இடையில் நாடு இருந்த நிலையை ஒரளவு காண முற்படுவதே இந்த நூலின் நோக்கமாகும். குமரி தாழ இமயம் உயர்ந்த நாள் எது என்று சொல்ல முடியாவிட்டாலும் அதுவும் உலக வாழ்நாளில் ஒருநாள்தானே என்ற எண்ண அடிப்படையில் தொடங்கி, கடைச்சங்ககால இலக்கியங்கள் காட்டும் வரலாற்று எல்லை வரையில் தெரியும் ஒரு சில பொருள்களை ஆராய்ந்தே இந் நூல் நாட்டுக்குச் சில கருத்துக்களைத் தருகின்றது. இக்கருத்துக்களின் அடிப்படையில் பல அறிஞர் கள் மேனாட்டிலும் வடநாட்டிலும் ஒரு சிலர் தென்னாட்டிலும் ஆராய்ந்துள்ளார்கள். எனினும், அக்காலத்தில் இந்திய நாட்டின் வடக்கும் தெற்கும் இணைந்த நிலையை அவர்கள் தொகுத்துக் காட்டவில்லை. எனவே அவர்களது ஆய்வின் துணைகொண்டே இத்தொகுப்பை நான் வெளியிட நினைத்தேன். இதில் கூறப்பட்ட முடிபுகளோ, அன்றிக் கருத்துக்களோ, முடிந்த முடிபினைப் பெற்று விட்டன என்று நான் வாதிட விரும்பவில்லை. இன்று வரலாற்றுலகில் காணும் பல்வேறு பொருள்களும் அவை பற்றி எழுந்த நூல்களும், பிறவும் இந்த முடிபுகளையே நமக்குத் தருகின்றன என்றே நான் காட்ட முயன்றுள்ளேன். வருங்கால ஆராய்ச்சி உலகம் எத்தனையோ புதுப்புது உண்மைகளைக் கண்டு விளக்கலாம். அக்காலையில் இவ்வர லாற்று எல்லையின் வாழ்க்கை முறைகளும் பிறவும் எவ்வாறு அமைந்ததென்று யார் சொல்ல இயலும்? இந்திய நாட்டு வரலாற்றையே சிந்துவெளி அகழ்ந்தெடுப்பு (Indus Walley Civilization) மாற்றி அமைத்ததை உலகம் அறியுமே. எனவே, வருங்கால ஆராய்ச்சிக்கு ஏற்ப ஒரு சில முடிபுகள் மாற்றமும் பெறலாம். எனினும், இன்றைய ஆய்வு நெறிவழி இம்முடிபுகள் ஏறகத்தக்கனவே என எண்ணுகிறேன். அன்றி இப்போதும் முடிபுகள் மாற்றம் பெற வழியும் விளக்கமும் இருப்பினும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளவும் தயங்கேன். இத்துறையில் இது முதல் முயற்சி. வரலாற்றுக்கு முன் தெற்கையும் வடக்கையும் பிணைத்துப் பார்த்துத் தொகுத்து எழுதியவர் உளரோ என எண்ணுகின்றேன். எனவே, எனது இந்த முதல் முயற்சியில் தவறோ மாறுபாடோ இருப்பின், எடுத்துக்காட்ட அறிஞர்களை வேண்டுகிறேன்.

“வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்” என்ற இந்நூல் பரந்த பாரத நாடாகிய இந்தியாவின் பழங்கால நிலையினையும், அன்றைய வாழ்க்கை முறை நாகரிகம் முதலியவற்றையும் ஒரளவு காட்டும் என்ற நம்பிக்கையோடு நாட்டு மக்கள் முன் இந்த நூலை வைக்கிறேன். “வடக்கும் தெற்கும்” பற்றி இன்று வளரும் பல்வேறு கருத்துக்களுக்கு இடையில் அவ்விரண்டின் பிணைப்பினையும் அதன் வழித் தெரிந்த வரலாற்றையும் இந்நூல் எடுத்துக் காட்டும் என்னும் துணிபுடையேன்.

இந்நூல் வெளிவருங்கால், ஒப்பு நோக்கிப் பிழை திருத்தி நல்ல முறையில் அச்சிட்டு வெளிவர உதவிய அறிஞர் மகா வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

 

தமிழ்க்கலை இல்லம்,பணிவார்ந்த,
சென்னை-30, 24.2.61அ. மு. பரமசிவானந்தம்

தமிழ்த்துறைத் தலைவர்
பச்சையப்பன் கல்லூரி சென்னை 30


  1.  Afanasy Nikitin.
  2.  The Mail (Dally) 22-2-61,
  3.  Indla's Past, by A. A. Macdonell, p. 9

 

இரண்டாம் பதிப்பின்

முன்னுரை

இந்நூல் எழுதி முப்பது ஆண்டுகள் கழிந்துவிட்டன. இதில்வரும் கட்டுரைகளுள் சில அதற்கு முன்பே இதழ்களில் வெளிவந்தவை. இந்நூலைப் பயின்ற பலரும்; (வங்கநாட்டு நன்னெற்முருகன்-சுனித்குமார் சாட்டாஜி உட்பட, நான் கூறியவை அனைத்தும் ஏற்புடையன என்றனர். “இராமனும் இராவணனும்” என்ற கட்டுரையினைக் காலந்சென்ற பெரியார் அவர்களுக்குப் படித்துக் காண்பித்த காலத்தில், அவர் 'எழுது; நீ உன் கருத்தை எழுதிக் கொண்டே இரு' என்று தான் சொன்னார்கள். தமிழ்நாட்டுப் பிறவரலாற்று அறிஞர்களும் ஏற்றுக்கொண்டனர் என்றே சொல்லலாம். இதற்கு மாறுபட்ட கருத்தோமறுத்த எழுத்தோ இதுவரை வரவில்லை. எனினும் இன்னும் இந்தவகையில் ஆழ்ந்த ஆய்வு காணவேண்டுமென வரலாற்று அறிஞர்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

இந்த நூலில் காட்டிய பல மேற்கொள்கள் பலப்பல ஆங்கில-தமிழ் நூல்களிலிருந்து எடுக்கப்பெற்றன. அந்த நூல்கள் பலவும்-ஏன்-அனைத்தும் இன்று நாட்டில் உலவவில்லை. புதிதாக அச்சிடப் பெறவில்லை. தமிழ் நலம் காணும்-திராவிட இனப்பெருமை பேசும் இன்றைய தமிழ்நாட்டு அரசு இவற்றுள் சிலவற்றையாயினும் விரைந்து அச்சிட்டு உதவின் நலம் விளையும். சென்னைப் பல்கலைக் கழகம் தன் வெளியிடுகளை (Foreign notices of South India போன்றன) மறுபடி வெளிக் கொணரலாம், உண்மை வரலாற்றினை மேலும் தெளிவாக வெளியிட அவை உதவும்.

இந்நூல் முப்பது ஆண்டுகள் கழித்துவரினும் கருத்துகள் அனைத்தும் இன்றும் முற்றும் ஏற்புடையனவே. இந்தப் பதிப்பினை அச்சிடும்போது ஒப்புநோக்கி உதவிய பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் சா. வளவன் அவர்களுக்கு நன்றி உடையேன். பயன்கருதி, நாட்டின் உண்மை வரலாறு தெரிய, என்னை மறுபடியும் இந்நூலை வெளிக்கொணர வேண்டும் எனத் தூண்டிய என் மாணவர்களுக்கும் பிறருக்கும் நன்றியும் வாழ்த்தும்.

தமிழ்க்கலை இல்லம்,பணிவார்ந்த,

சென்னை-30,அ. மு. பரமசிவானந்தம்

30-5-90__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard