"வரலாறு எனப்படுவது மக்களால் ஒப்புக்கொள்ள முடிவு செய்யப்பட்ட கடந்தகாலத்தின் தொகுப்பே” -நெப்போலியன் பொனபார்ட்
கடந்து செல்லும் ஒவ்வொரு காலத்துளியும் வரலாறு எனும் பெருங்குளத்தையே அடைகின்றன. ஆனால் வெற்றி பெற்று நிலைகொண்ட மாந்தர்களே அவ்வரலாற்றை வருங்காலத்துக்கு பாய்ச்சுகின்றனர். தம் புகழுக்கு அணிசெய்பவை காக்கப்படும், அல்லாதவை அழிக்கப்படும். உலகவரலாற்றின் அநேக பக்கங்கள் வெற்றியால் விளைந்தவை. இப்பிரமானத்திற்கு எவரும் விதிவிலக்கல்ல. “கலைகளை போற்றி காருண்யம் போதித்தானாம் நம் மறத்தமிழன்” என மார்தட்டிக்கொள்ளும் எவரும் தம் வரலாற்றின் காரிருள் படிந்த பக்கங்கள் குறித்து அறிய முற்படுவதில்லை. ஆவண வரலாறு அமையாத காலத்தை நாம் காரிருள் காலம் என்பது தகும். ஆனால் முன்னும்,பின்னும் செழிப்பான வரலாறு அமைந்திருக்க ஒரு இடையீட்டுக்கலாம் மட்டும் கறுத்திருப்பதை கண்டும் அதை வினவாமல் இருப்பது முறையல்ல. உற்றுநோக்கினால் உணரலாம் அவை காரிருள் பக்கங்கள் அல்ல, கயவர்கள் எரித்தழித்த பக்கங்களின் கரியும் சாம்பலும் என. சங்கம் அமைத்து தமிழ்வளர்த்த நம் வரலாறு முந்நூறாண்டுகள் மூடிக்கிடந்து திடீரென பல்லவர்களுக்கு திறந்து விடப்பட்டது போல தொடர்வது வாதத்திற்குரியது.
‘தமிழ்த்தேசியம்’, ‘தமிழர் நாடு’, ‘தமிழ் ஆட்சி’ சமகாலத்தில் சமூகவலைத்தளங்கள் தொட்டு சட்டங்கள் இயலும் பாராளுமன்றம் வரை பேசப்பட்டு வரும் ஒரு பொதுவான தலைப்பு. தமிழன் என்ற வகையில் நம்மில் பலருக்கும் இத்தகைய சுதந்திர கருத்துக்களை செவியுறும் போதெல்லாம் உள்ளூர ஒரு கர்வமும், பெருமையும், அச்சமும், ஆர்வமும் உண்டாகும். காரணம் நாம் கண்முன் கண்ட வரலாறு. நாம் செவியுற்ற வரலாறு. தமிழ் என்ற வரையறைக்குள் நிற்கும் போதெல்லாம் நம் பெருமைக்கு சான்றாக நாம் முன்னிறுத்திக்கொள்வது நம் வரலாறு.
“லெமூரியா ஆண்ட தமிழன், சங்கம் வளர்த்த தமிழன், கங்கை முதல் கடாரம் வரை ஆண்டு வந்த தமிழன், முப்பதாண்டுகளாய் வீரப்போர் செய்து சுயம் காத்த தமிழன்” என ஒரு குறுகிய வட்டத்தினுள் நின்ற வண்ணம் புகழ்ப்பாடிக்கொண்டு இருக்கிறோம். எது பிறரால் விரும்பி கேட்கப்படுகிறதோ, எது நமக்கு புகழை சேர்க்கிறதோ அதுவே நம் மனங்களில் நின்று விடுகின்றன. மற்றவை எல்லாம் ஆற்றில் கரைத்த புளிக்கு சமானம். கற்களில் காவியம் பாடிய பல்லவர்களும், காவியத்தில் புது உலகம் சமைத்த சேரர்களும் நம் மனங்களை விட்டு அகன்று விட்டனர். வெற்றிடத்தை நிரப்ப வேற்றுநாட்டில் இருந்து சேகுவாராவும், ஹிட்லரும் வந்து விட்டனர்.
“கடந்தகாலத்தை கொண்டு நிகழ்காலத்தை திட்டமிடுவதன் மூலம் எதிர்காலத்தை வடிவமைத்துக்கொள்ள முடியும். நம் வரலாற்றை மறந்து செயற்படுவது அத்திவாரம் இல்லாத கட்டடத்திற்கு நிகர்த்தது” - பண்டித். ஜவஹர்லால் நேரு
அத்திவாரங்களின் அழகானது என்றும் வலிமை மட்டுமே, அதன் புறதோற்றம் இல்லை. ஆனால் நம்வரலாறு என்னவோ பெரும் அலங்காரங்களுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே நம் கைகளுக்கு தரப்பட்டுள்ளது. ஆனால் அவைகள் நமக்கு பெரிய விடயமாக இல்லை. அவ்வாறே எவரேனும் அதை கண்டறிய விளைந்தாலும் நாம் அலட்டிக்கொள்வதில்லை. அண்மையில் கீழடி ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்ட நேரம் உருவான பரபரப்பு சிறிதே நாட்களில் flying kiss அடித்து ட்ரெண்டிங் ஆன ஒரு ட்ரைலரால் மறைந்து போனது. வீரதமிழன் என பெயர்பெற்ற நாம் என்று வாட்ஸாப் தமிழர்கள் ஆனோமோ அன்றே நம் வரலாறு ‘sharing’ எனும் வட்டத்துக்குள் முடக்கப்பட்டு விட்டது. நம்மூதாதைகள் நமக்கென விட்டுச்சென்றதுடன் மாத்திரம் வாழப்பழகிவிடாமல், காலத்துக்கு உவக்காதென அவர்கள் மறைத்து சென்றதையும் தேடியாக வேண்டும். நம்முடைய வரலாறு நமது அத்திவாரம் என்பதை நாம் உணரத்தலைப்பட ஆரம்பித்தால் அன்றி நம்சமூகம் என்ற கட்டிடம் சரிவதை நம்மால் வேடிக்கை மட்டுமே பார்க்க இயலும்.
- சங்கம் எங்ஙனம் மருவிப்போனது?
- மூவேந்தர்கள் மூன்னூறாண்டாய் எங்கு சென்றனர்?
- எவர் ஆட்சி நிலவியது அப்போது?
- ஏன் அந்தக் காலம், தமிழகத்தின் இருளான பக்கங்களானது?
தமிழக வரலாற்றை ஒரு வாசகன் என்ற ரீதியில் அணுகும் போது இவற்றை நான் வினவிக்கொண்டேன். விடைத்தெரியாத வினவல்கள் தரும் ஆர்வம் அளப்பரியது. என் ஆர்வத்துக்கு உயிரளித்தது போல இந்த ஆக்கத்தை அமைத்தேன். இருண்ட காலம் என அறியப்பட்ட சங்கம் மருவியகாலத்தின் முற்காலத்தையும், பிற்காலத்தையும், சமகாத்தில் நிலவிய மாற்றரசுகளின் ஆதாரங்களையும் கொண்டு இந்த படைப்பு உருவாக்கப்படுகிறது.
ஒளிக்கீற்று
கணினி மாந்தர்களாக மாறிப்போன நம்மில் ஒருவரின் கேரக்டர் ஐ தெரிந்துகொள்ள வேண்டுமெனில் முன்னரைப்போல அக்கம் பக்கத்தாரிடம் வினவவேண்டியதில்லை. அவர்களின் கைப்பேசியே போதும், காலத்திற்கும் அவர்கள் செய்தது, செய்வது, செய்யப்போவது என அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம். எனினும் எவர் அதனை கையளிப்பார் பிறரிடம்? வீட்டின் சாவியைக்கூட தந்துவிடுவார்கள், ஆனால் கைப்பேசியை கட்டிய மனைவியை போல பிறர் தீண்டா வண்ணம் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வார்கள். கைபேசி கிடைக்காவிட்டால் என்ன, சமூகவலைதங்கள் தான் மலிந்து போய் உள்ளனவே. ஏதோ ஒரு செயலியை தெரிவு செய்து நாம் அறியவிரும்பும் அன்பரின் பெயரை தட்டிவிட்டால் போதும். திறம்பட அவர்களை பற்றி அறிந்துகொள்ளலாம். ஒன்றில்லை இல்லையெனில் இன்னொன்றென ஏதோ ஒரு வலைதளத்தில் சிக்காமல் போக எவராலும் இயலாது. ஒரு தனிமனிதன் குறித்து அறிவதற்கே இத்தினத்தில் நம்மிடம் இத்தனை வசதிகள் இருக்க, வரலாற்றின் இருண்ட பக்கங்களை அலசிக்கொள்வதற்கு தகுந்த ஊடகங்கள் இன்றளவும் நம் கைகளுக்கு கிடைக்கவில்லை.
தமிழகத்தின் வரலாற்றின் இருண்ட காலம் என வர்ணிக்கப்படும் காலமானது மூன்றாம் நூற்றாண்டில் இருந்து ஆறாம் நூற்றாண்டு வரையே ஆகும். இம்முந்நூறு ஆண்டுகள் பற்றி நமக்கு கிடைக்கும் வரலாற்று ஆதாரங்கள் மிகவும் சொற்பம். இதன் நிமித்தமே இக்காலப்பகுதி தமிழக வரலாற்றின் இருண்ட பகுதி என பொதுவாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் இப்பெயரிடலுக்கு பின்புறம் இன்னொரு காழ்ப்புணர்ச்சி மிக்க வரலாறும் அடங்கியுள்ளது என்பதை பின்பு நோக்கலாம். இருண்டகாலமான இந்த பெருங்குகையை ஊடறுத்துச்செல்ல சில ஒளிக்கீற்றுக்களே உறுதுணை செய்கின்றன. அவற்றுள்ளும் பெருவாரியானவை ஊகங்களை அடிப்படியாகக்கொண்டதும், கவித்துவம் மிக்கதும், பிறநாட்டு வரலாறுகளுடனும் தொடர்புடையதே ஆகும்.
ஒரு வரலாறு குறித்து அறிந்துகொள்ள இருவகையான மூலங்கள் பயன்படும். உள்வாரி மூலங்கள் (ஒருவரின் கைபேசியை போல) மற்றையது வெளிவாரி மூலங்கள் (சமூகவலைதளங்கள் போல). இவை இரண்டில் உள்ளக மூலங்களே பிரதானமானதும், பெரிதும் விரும்பப்படுவதும் ஆகும். ஆனால் இருண்ட காலத்தில் இத்தகைய உள்வாரி மூலங்கள் மிகவும் குறைந்த அளவே கிடைக்கின்றன.
- 1979 இல் கண்டுபிடிக்கப்பட்ட பூலங்குறிச்சி (பொன்னமராவதிக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூர்)கல்வெட்டுகள் சங்கம் மருவிய காலத்தை அறிந்து கொள்ளப்பயன்படும் மிகப்பிரதான மூலாதாரம்.
- கொங்குநாடு(அரசலூரில்) கண்டறியப்பட்ட கற்பலகை
- கரூர் அருகில் கண்டுபிடிக்கப்பட்ட வட்டப்பாறை கல்வெட்டு
- புத்ததத்தர் எழுதிய அபிதாமாவதாரம்
- வச்சிரதந்தி அமைத்த திரமிளசங்கம்
- ரோமநாணயங்கள், மட்பாண்ட சிதைவுகள்
வெளிவாரி மூலங்கள் என நோக்கும் போது சமகாலத்தில் கிடைக்கும் பிறநாட்டு ஆதாரங்களும், பிற்காலத்தில் கிடைக்கும் உள்நாட்டு ஆதாரங்களும் கிடைத்துள்ளன. அவை
- வேள்விக்குடி செப்பேடுகள். இவையே சங்கம் மருவிய காலத்தை குறித்து முதன்முதலில் குறிப்பிடும் வரலாற்று ஆதாரம்.
- திருஞானசம்பந்தரின் திருவையாற்றுப்பதிகம்
- கால்லாடம், யாபெருங்கோல் விருத்தி, சில தனிப்பாடல்கள்
- பெரியபுராணப்பாடல்கள்
- சாதவாகன கல்வெட்டுக்கள்
- சின்னமனூர் செப்பேடு
- பல்லவர்கால செப்பேடுகள்
- அபிச்சத்திரா, மதுரா, பிருந்தாவனம், புத்தகயா, வாரணாசி ஆகிய பகுதிகளில் கிடைத்த அகழாய்வு படிமங்கள்
இங்ஙனம் இந்தியா முழுவதும் கிடைத்துள்ள ஆதரங்களைக்கொண்டு மு.அருணாசலம் உள்ளிட்டோர் சங்கம் மருவிய காலம் தொடர்பான விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அதுவும் இருண்டகாலத்தை பற்றி தெரிந்துகொள்ள மிகவும் உதவுகிறது. சீவகசிந்தாமணி, மணிமேகலை ஆகிய காவியங்களை ஆதரமாகக்கொண்டு சங்கமருவிய காலம் குறித்த வாழ்க்கை முறைகளை ஒருவாறு ஊகிக்கவும் முடியும். கிடைக்கப்பெற்ற ஆதாரங்களை பயன்படுத்தி ஒரு எடுகோள் ரீதியான ஆக்கமாக இது உருவாக்கப்படுகிறது. ‘பேக் கிரௌண்ட்’ தெரியாமல் எந்த விடயத்தை ஆய்வு செய்தாலும் முழுமையான விளக்கம் கிடைக்காது. எனவே மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னரான சங்ககாலத்தில் நிலவிய பேக் கிரௌண்ட் குறித்து முதலில் காணலாம்.