Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கன்னியாஸ்திரீ மாணவி அபயா வழக்கு


Guru

Status: Offline
Posts: 7474
Date:
கன்னியாஸ்திரீ மாணவி அபயா வழக்கு
Permalink  
 


இரு நாயகர்கள்

 

அபயா கொலைவழக்கு

1973ல் கோட்டையம் மாவட்டம் அரீக்கரை என்ற ஊரில் அய்க்கரைக்குந்நேல் எம். தாமஸின் மகளாகப் பிறந்த பீனா தாமஸ் என்னும் பெண் கத்தோலிக்க திருச்சபையில் கன்னியாஸ்திரீயாக தன் பதினேழு வயதில் சேர்ந்தார். சிஸ்டர் அபயா என்று பெயர் கொண்டார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் 1992 மார்ச் மாதம் 27ஆம் தேதி அவர் கோட்டையம் க்லானாய கத்தோலிக்க மறைமாவட்டத்தில் உள்ள செயிண்ட் பயஸ் பத்தாவது கான்வெண்ட்டின் கிணற்றில் இறந்து கிடந்தார். கிணற்றில் மூழ்கிச்சாகுமளவு நீர் இருக்கவில்லை. அவருடைய தலையின் பின்பக்கம் ஆழமான உடைவு இருந்தது.

சிஸ்டர் அபயா அப்போது புகுமுக வகுப்பு மாணவி. பதினெட்டு முடிந்து பத்தொன்பது வயது தொடங்கியிருந்தது. சிறுமி என்றுதான் சொல்லவேண்டும். அபயா கிணற்றில்குதித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் முடிவுகட்டியது. கோட்டையம் மேற்கு காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்த பி.வி.அகஸ்டின் சான்றுகளை சேகரித்து இந்த முடிவை எடுத்து வழக்கை முடித்துக்கொண்டார்.

ஆனால் அபயாவின் அப்பா ஏ.எம்.தாமஸும் அவருடைய ஊர்க்காரர்களும் வழக்கில் ஊழல் நடந்தது என்று எண்ணினர். ஊடகங்களுக்கு வழக்கை கொண்டுசென்றனர். கத்தோலிக்கத் திருச்சபைக்குள் நிகழ்ந்த ஏதோ பெரிய பிழை அபயா கண்களில் பட்டிருக்கவேண்டும், அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று வாதாடினர். அபயாவின் தலைக்குப் பின்பக்கமிருந்த பெரிய வெட்டுக்காயம் அவர்களின் ஐயங்களை வளர்த்தது.

மக்கள் போராட்டம் வலுப்பெற்றது. கோட்டையம் பிஷப் தலைமையில் கத்தோலிக்க திருச்சபை குற்றச்சாட்டுகளை மறுத்தது. பின்னர் பிஷப் ஆணைப்படி அமைக்கப்பட்ட ஓர் ஆய்வுக்குழு வழக்கை விசாரித்து சிஸ்டர் அபயா கொல்லப்படவில்லை, அது தற்கொலையே என உறுதிசெய்தது.

அப்போது கே.கருணாகரன் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. நிதி மற்றும் சட்ட அமைச்சகம் கத்தோலிக்க திருச்சபையின் கைப்பாவையான கே.எம்.மாணியின் நிர்வாகத்தில் இருந்தது. அவர் இதில் தலையிட்டார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அபயா தற்கொலைதான் செய்துகொண்டார் என்று போலீஸ் உறுதிப்பட சொன்னது.

ஆனால் தி இந்து ஆங்கில நாளிதழில் அவர்களின் குற்றச்செய்தி நிருபர் ஒரு முக்கியமான செய்தியை வெளியிட்டார். சிஸ்டர் அபயாவின் சடலப்பரிசோதனை அறிக்கை முழுமையாகவே மாற்றி எழுதப்பட்டது என ஆதாரங்களை திருவனந்தபுரம் ஃபாரன்ஸிக் நிறுவன இயக்குநர் அலுவலகத்திலிருந்து பெற்று முன்வைத்தார். வழக்கு மீண்டும் மக்களின் கவனத்துக்கு வந்தது. வழக்கை குற்றப்பிரிவு விசாரிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இவ்வழக்கில் 1992லேயே ஜோமோன் தோமஸ் புத்தன்புரைக்கல் என்னும் சமூக ஆர்வலர் களமிறங்கினார். சிஸ்டர் அபயா வழக்கில் உண்மை வெளிவரவேண்டும் என்று மக்களை திரட்டி சலிக்காமல் போராடினார். 1992 முதல் இருபத்தெட்டு வருடங்களாக ஜோமோன் களத்திலிருக்கிறார். சொந்தப்பணத்தில் பல லட்சம் ரூபாய் வழக்குக்காகச் செலவிட்டிருக்கிறார். ஆயிரம்முறை நீதிமன்றம் சென்றிருக்கிறேன் என்று ஒருமுறை சொன்னார். அபயாவுக்கும் அவருக்கும் எந்த ரத்த உறவும் இல்லை. சிஸ்டர் அபயாவின் அப்பா தாமஸ் மறைந்தார். அதன்பின் இன்றுவரை வழக்கின் முதன்மையான தரப்பு ஜோமோன் தாமஸ்தான்.

கேரளத்தின் காங்கிரஸ் அரசு குற்றப்பிரிவு விசாரணைக்கு ஆணையிட்டது. குற்றப்பிரிவும் அபயா தற்கொலைசெய்துகொண்டார் என்றே வழக்கை முடித்தது. ஜோமோன் தாமஸ் வழக்கை சிபிஐ விசாரிக்கவேண்டும் என்று சொல்லி நீதிமன்றம் சென்றார். சிபிஐ விசாரணை தொடங்கியதுமே சிஸ்டர் அபயா கொல்லப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக கண்டுபிடித்தது. முதல்தகவல் அறிக்கை உட்பட அனைத்து ஆவணங்களும் திருத்தப்பட்டிருப்பதை ரசாயனச் சோதனைகள் நிரூபித்தன.

ஜோமோன் தோமஸ் புத்தன்புரைக்கல்

ஆனால் சிபிஐ இந்த வழக்கை விசாரித்த விதமெல்லாம் அதிகாரம் என்னென்ன செய்யும் என்பதற்கான சான்றுகள். சிபிஐ அமைப்பின் 13 வெவ்வேறு குழுக்கள் இவ்வழக்கை விசாரித்திருக்கின்றன. திரும்பத்திரும்ப சிபிஐ வழக்கை முடித்துக்கொள்ளவே முயன்றது. நூற்றுக்கணக்கான கன்யாஸ்த்ரீகள் தெருவுக்கு வந்து அபயாவுக்கு நீதிகோரி போராடினர். ஊடகங்கள் போராடின. திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. ஆனால் இந்த வழக்கில் எதையும் கண்டடையமுடியவில்லை என சிபிஐ அறிக்கை அளித்தது. நீதிமன்றம் அந்த அறிக்கையை நிராகரித்தது.

இவ்வழக்கில் முக்கியமான திருப்பம் 1993ல் அன்று இவ்வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்டிருந்த வர்கீஸ் பி தாமஸ் ராஜினாமா செய்தது. அவர் ஒரு பத்திரிகையாளர்கூட்டத்தை கூட்டி சிபிஐ இயக்குநர் வி.தியாகராஜன் தன்னை நேர்மையான விசாரணைக்கு அனுமதிக்கவில்லை என்றும், வழக்கை தற்கொலையாக மாற்றும்படி கட்டாயப்படுத்தினார் என்றும், அபயா கொலை செய்யப்பட்டிருப்பது ஐயமில்லாமல் சிபிஐயால் கண்டுபிடிக்கப்பட்டது என்றும், நேர்மையாக பணிசெய்ய முடியாமையால் ஏழாண்டுகள் பணி எஞ்சியிருக்கையிலேயே ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார்.

வர்கீஸ் பி தாமஸ்

2008ல் இவ்வழக்கில் முதல்தகவல் அறிக்கை எழுதிய காவல் ஆய்வாளர் பி.வி.அகஸ்டின் சமூக அழுத்தம் தாளமுடியாமல் தற்கொலைசெய்துகொண்டார். தன்னை சிபிஐ கொடுமைசெய்வதாக எழுதிவைத்திருந்தார். அவருடைய மகளின் வீட்டில் 72 ஆவது வயதில் கையின் ரத்தக்குழாயை அறுத்துக்கொண்டு இறந்தார். முதல்விசாரணையில் உயர்மட்ட அழுத்தத்தால்தான் விசாரணை அறிக்கையில் திருத்தங்கள் செய்ததாக ஒப்புக்கொண்டு ஏற்புசாட்சியாக முன்வந்த அகஸ்டின் பின்னர் அழுத்தங்களால் அதை மறுத்தார். அதன்பின் தற்கொலைசெய்துகொண்டார்.

சிபிஐ உண்மையில் நடந்தது என்ன என்பதை அகஸ்டினுக்கு அளித்த அழுத்தம் வழியாக, அவர் வாயிலிருந்தே கண்டுபிடித்தது. உண்மையை சொன்னமையால் அகஸ்டின் கத்தோலிக்க அதிகார பீடங்களால் வேட்டையாடப்பட்டார். இருபக்கம் இடி தாளமுடியாமல் தற்கொலை செய்துகொண்டார். தனக்கு நான்குமாத அவகாசம் தந்திருந்தால் வழக்கை முடித்திருப்பேன், இருபதாண்டுகள் வழக்கு நீண்டிருக்காது என்று வர்கீஸ் தாமஸ் சொன்னார். ஆனால் முன்னரே ஓய்வுபெற்று, சோர்ந்த முதியவராக வழக்கின் முடிவைக் காண உயிருடனிருந்தார். தீர்ப்புச்செய்தி சொல்லப்பட்டபோது வர்கீஸ் தாமஸ் ஊடகங்களின் காமிராக்களுக்கு முன் கண்ணீர்விட்டு அழுதார்.

வழக்கு மீண்டும் நீதிமன்றம் சென்றது. கொலைநடந்தது உறுதி, குற்றவாளிகளை கண்டடையமுடியவில்லை என்று சிபிஐ சொன்னது. அதை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை. பல பின்னடைவுகள், பல போராட்டங்கள். 2008ல் சிபிஐ குற்றவாளிகளாக மூவரை கைதுசெய்தது. அருட்தந்தை தாமஸ் கோட்டூர், அருட்தந்தை ஜோஸ் புத்யக்கையில், அருட்சகோதரி செஃபி. இம்மூவருக்கும் கூட்டுப்பாலுறவு கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது. அதை சிஸ்டர் அபயா பார்த்தமையால் கொலை நடந்தது. சிஸ்டர் அபயாவை செபி சட்டென்று விறகுவெட்டும் கோடரியால் தலையில் வெட்டினார். பிணத்தை மூவருமாக தூக்கிச் சென்று கிணற்றில் போட்டனர்.

மீண்டும் பலவகையான சட்டப்போர்கள். 2009ல் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி கே.ஹேமா வெளிப்படையாகவே குற்றவாளிகளுக்குச் சாதகமாகச் செயல்படுவதாக கேரளகௌமுதி உட்பட நாளிதழ்கள் குற்றம்சாட்டின. சிபிஐ முன்வைத்த சாட்சியங்கள் எதையும் ஏற்காமல் ஹேமா குற்றவாளிகளுக்கு ஜாமீன் அளித்தார்.குற்றவாளிகள் ஜாமீனில் விடப்பட்டபின் வழக்கு தொய்வடைந்தது. அதன்பின் அருட்தந்தை ஜோஸ் புத்யக்கையில் குற்றத்தை ஒப்புக்கொண்டு அளித்த காணொளி வாக்குமூலம் ஊடகங்கள் வழியாக வெளிவந்தது. 2018ல் வழக்கின் பல அடிப்படைத் தகவல்களை திருத்திய போலீஸ் அதிகாரியான கே.டி.மைக்கேல் வழக்கில் குற்றவாளிகளில் ஒருவராகச் சேர்க்கப்பட்டார்.

பலவகையான பின்னடைவுகள். மார்ச் 2018ல் ஜோஸ் புத்யக்கையில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். அப்போதே வழக்கு மீண்டும் ஒடுக்கப்பட்டுவிட்டது என்னும் ஐயம் எழுந்தது. ஆனால் 28 ஆண்டுகளுக்குப்பின் கடைசியாக முதல்தீர்ப்பு வந்திருக்கிறது. கோட்டையம் வஞ்சியூரில் அமைந்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அருட்சகோதரி செபி, அருட்தந்தை தாமஸ் கோட்டூர் ஆகியோரை குற்றவாளிகள் என அறிவித்தது. இருவருக்கும் ஆயுள்தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக வழக்கை விசாரித்த டிஎஸ்பி நந்தகுமார் துணிவுடனும் விடாமுயற்சியுடனும் இறுதிவரை முன்னெடுத்து வெற்றிபெற்றிருக்கிறார்.

இது ஒரு தொடக்கத் தீர்ப்புதான். இதைப்போல மக்களின் கோபம் வெளிப்பட்ட பல வழக்குகளில் முதல்தீர்ப்புகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும், பின்னர் அவர்கள் உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படுவதும் இந்தியாவில் வழக்கம், அது இங்கும் நடக்கலாம். குற்றவாளிகள் சிறைத்தண்டனை பெறுவதாக இருந்தால்கூட அதற்கு இன்னும் பல ஆண்டுகளாகும். அவர்கள் உடனே மேல்முறையீட்டுக்கே செல்வார்கள்.

இந்த இருபத்தெட்டு ஆண்டுகளில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் திருச்சபையில் பலவகையான பதவி உயர்வுகள் பெற்று உயர்ந்த இடங்களில் இருக்கிறார்கள். குற்றம்சாட்டப்பட்ட காவலதிகாரிகளும் பதவி உயர்வுகள் பெற்றிருக்கிறார்கள். இப்போதுகூட கிறிஸ்தவ ஊடகங்கள் குற்றவாளிகள்மேல் அனுதாபத்துடனேயே செய்தி வெளியிடுகின்றன. இன்னும் சிலநாட்களில் அவர்கள் தவறாக தண்டிக்கப்பட்டார்கள் என்ற பிரச்சாரமும் தொடங்கலாம்.

கத்தோலிக்கத் திருச்சபை குற்றவாளிகளை ஆதரித்து உறுதியாக நிலைகொள்கிறது. இந்த வழக்கு இத்தனை தீவிரமாக வெளிப்பட்டபின்னர்தான் பிஷப் ப்ராங்கோ முல்லைக்கல் போல கன்யாஸ்திரீகளை பாலியல்வன்முறைக்கு ஆளாக்கிய பல குற்றவாளிகளைப் பற்றிய செய்திகள் வெளிவந்தன. அவையும் நீதிமன்றங்களில் உறைகின்றன. அபயா வழக்குக்குப்பின் ப்ராங்கோ முல்லைக்கல் வழக்கு வரை தொடர்ச்சியாக கன்யாஸ்திரீகள் தங்களுக்கு எதிரான பாலியல்கொடுமைகளுக்கு எதிராக திரண்டு போராடுகிறார்கள். ஆனால் கத்தோலிக்கத் திருச்சபை எவ்வகையிலும் அறவுணர்ச்சியுடன் இந்தப்பிரச்சினையை எதிர்கொள்ளவில்லை. நீதிவிசாரணைகளைக்கூட அது தன் அதிகாரத்திற்கு எதிரான சவால்களகாவே கருதுகிறது.

கேரள வரலாற்றில் கால்நூற்றாண்டாக நடந்த குற்றவழக்கு இது. ஒரு தலைமுறையே நினைவறிந்தநாள் முதல் இந்தவழக்கை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதில் இருவர் கொண்டாடப்படவேண்டியவர்கள். இவ்வழக்கை ஒரு வாழ்க்கைத்தவமாக எடுத்துக்கொண்டு நீதிக்காகப் போராடிய சமூக ஆர்வலர் ஜோமோன் தாமஸ் புத்தன்புரைக்கல். மிகக்கடுமையான அழுத்தமிருந்தாலும் மனசாட்சிக்கு விரோதமாகச் செயல்படமுடியாது என்று மறுத்த சிபிஐ அதிகாரி வர்கீஸ் பி தாமஸ்.

அவ்விருவருக்கும் சென்ற கால்நூற்றாண்டில் கொலைமிரட்டல்கள் உட்பட ஏராளமான சிக்கல்கள். அவர்கள் மதநீக்கம் செய்யப்படவும் வாய்ப்பிருந்தது. சமூகத்தில் அவர்களுக்கிருந்த செல்வம் பதவி அனைத்தையும் இழந்தனர். ஆனால் அதைக்கடந்து நீதிக்காக நிலைகொண்டனர். இது அவர்கள் தங்கள் கண்ணாலேயே நீதி என்பது சாத்தியம்தான் என்று காணும் ஒரு தருணம். அவர்களின் அந்நம்பிக்கை நீடிக்கவேண்டும்.

தமிழகத்திலும் இதற்கிணையான பலவழக்குகள் சென்றகாலங்களில் நிகழ்ந்தன. நமக்கு ஜோமோன் தாமஸ்களும் வர்கீஸ் பி தாமஸ்களும் இல்லை. வரலாற்றில் அவர்கள்தான் நாயகர்கள். பொதுவான சூழல் என்பது பல்டியடிக்கும் சாட்சிகளும், பக்கம்சாயும் நீதிபதிகளும், அதிகார அமைப்புகளின் ஆணவமும் கலந்து உருவானது. அதுதான் நம் கண்ணுக்கு படுகிறது. ஆனால் வரலாற்றில் எப்போதும் மனசாட்சிக்கு அஞ்சும் வர்கீஸ் பி தாமஸ் இருந்துகொண்டிருக்கிறார். நீதி என்னும் தொலைதூர நம்பிக்கைக்காக முழுவாழ்க்கையையும் எடுத்துவைக்கத் துணியும்  ஜோமோன் தாமஸ் இருந்துகொண்டிருக்கிறார். அவர்களை நம்பி முன்னகர்கிறது மானுடம்.

நவீன இலக்கியம் பெரும்பாலும் அதிகாரத்தின் மூர்க்கத்தை, அநீதியின் பேருருவை வெளிப்படுத்தவே முயல்கிறது. அபயா வழக்கில் கூட வர்கீஸ் தாமஸ், ஜோமோன் தாமஸ் ஆகியோரின் பெயர்களை நாம் தமிழில் வெளிவந்த செய்திகளில் எங்கும் பார்க்கமுடியவில்லை. இவ்வழக்கை கிறிஸ்தவத்திற்கு எதிரானதாக சித்தரிக்கும் ஒரு தரப்பு ஒலிக்கிறது. நான் திருச்சபையை கிறிஸ்தவத்தின் அடையாளமாக காணமாட்டேன். அது ஒருவகை அரசாங்கம். நான் வர்கீஸ் தாமஸையும் ஜோமோன் தாமசையுமே கிறிஸ்தவர்கள் என்பேன். இவ்வழக்கை கிறிஸ்தவத்துக்கு எதிராக சித்தரிப்பவர்களிடம் உங்களிடமிருக்கும் வர்கீஸ்களும் ஜோமோன்களும் எங்கே என்று கேட்பேன்.

கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையினர் திருச்சபையுடன் இணைந்தே நின்றிருக்கிறார்கள். அவர்களிடமும் நீங்கள் உங்களவராகக் கொள்ளவேண்டியவர்கள் வர்கீஸ் தாமசும் ஜோமோன் தாமசும்தான் என்பேன். மெய்யான கிறிஸ்தவ இலட்சியவாதம் அவர்களிடமே உள்ளது.

நவீன இலக்கியம் உருவாக்கும் இருள்மேல் எனக்கு பெரும்சலிப்பு ஏற்பட்டுவிட்டது. அது அங்கிருப்பதை நானும் அறிவேன். நானும் ஏராளமாக எழுதிவிட்டேன். என் நாயகர்களாக நான் ஜோமோனையும் வர்கீசையுமே காண்பேன். அவர்களே மானுடத்தின் முகங்கள். அவர்களை பின்தொடர்வதும் வருந்தலைமுறையினரிடம் அவர்களை மேலும் பெரிதாக புனைந்தளிப்பதும்தான் இலக்கியத்தின் கடமை.

 
 


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

https://www.jeyamohan.in/142048/?fbclid=IwAR1FvIubwcn9vbeCAhdUNdvruTJroNzOGim_wd6AUwDOv9dTFDiApTYXa9Y

https://youtu.be/oWu8eFxpASE

https://youtu.be/G1XIiVO91bY



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard