Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஐந்தவித்தான் யார்


Guru

Status: Offline
Posts: 7602
Date:
ஐந்தவித்தான் யார்
Permalink  
 


ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி

(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:25)

பொழிப்பு (மு வரதராசன்): ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.



மணக்குடவர் உரை: நுகர்ச்சியாகிய ஐந்தினையுந் துறந்தானது வலிக்கு அகன்ற விசும்பிலுள்ளார்க்கு நாயகனாகிய இந்திரனே யமையுஞ் சான்று.
இந்திரன் சான்றென்றது இவ்வுலகின்கண் மிகத் தவஞ் செய்வாருளரானால் அவன் தன்பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான். இது தேவரினும் வலியனென்றது.

பரிமேலழகர் உரை: ஐந்து அவித்தான் ஆற்றல் - புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு; அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி - அகன்ற வானத்துள்ளார் இறைவன் ஆகிய இந்திரனே அமையும் சான்று.
(ஐந்தும் என்னும் முற்று உம்மையும் ஆற்றற்கு என்னும் நான்கன் உருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், 'இந்திரனே சாலும் கரி' என்றார்.

தமிழண்ணல்: ஒருவன் தன் தவ வலிமையால் இந்திரபதவி அடைவானென்பது சமயம் சார்ந்த புராணவழி நம்பிக்கை. ஐம்பொறிகளின் வேகத்தை அடக்கி ஆள்பவனது பேராற்றலுக்கு, அகன்ற வானுலகில் உள்ளார்க்குத் தலைவனாகிய இந்திரனே சான்று; அவன் அத்தவ வலிமையால் அப்பதவியை அடைந்தானாகலின்.
புத்த சமயத்தில் இந்த நம்பிக்கை இருந்தது. ஐந்து பொறி, புலன்களைப் பக்குவப்படுத்தினால் இந்திர பதவியையும் அடையலாம். மேன்மேல் உயரலாம் என்பது கருத்து.

பொருள்கோள் வரிஅமைப்பு:
ஐந்து அவித்தான் ஆற்றல், அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி.

பதவுரை: ஐந்து- ஐந்து (புலன்கள்); அவித்தான்-பக்குவப்படுத்தியவன், அடக்கியவன், அறுத்தவன்; ஆற்றல்-வலிமை; அகல்-விரிவான; விசும்புளார்-வானிலுள்ளவர்கள்; கோமான்-மன்னவன்; இந்திரனே- இந்திரனே; சாலும்-அமையும்; கரி-சான்று.


ஐந்தவித்தான் ஆற்றல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நுகர்ச்சியாகிய ஐந்தினையுந் துறந்தானது வலிக்கு;
பரிதி: பொறிவழியிலே புலன் செல்லாமல் தன்வழி மனசிருப்பானுக்கு;
காலிங்கர்: கீழ்ச்சொன்ன பரிசே ஐம்புலனையும் வென்றவன் சித்தவலிமைக்கு;
பரிமேலழகர்: புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு;
பரிமேலழகர் கருத்துரை: ஐந்தும் என்னும் முற்று உம்மையும் ஆற்றற்கு என்னும் நான்கன் உருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன.

இப்பகுதிக்குப் பழம் ஆசிரியர்கள் புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினவனது வலிமைக்கு என்று பொருள் கூறினர்

இன்றைய ஆசிரியர்கள் 'ஐந்தும் அடக்கியவன் ஆற்றலுக்கு', 'ஐந்து அவாக்களையும் அடக்கினவனது வலிமைக்கு', 'ஐம்பொறிகளையும் அடக்கினவனது வல்லமைக்கு', 'ஐம்பொறிகளின் வேகத்தை அடக்கி ஆள்பவனது பேராற்றலுக்கு' என்று உரை தந்தனர்

ஐம்பொறிகளையும் அடக்கினவனது வல்லமைக்கு என்பது இப்பகுதியின் பொருள்.

அகல் விசும்புளார் கோமான் இந்திரனே சாலுங் கரி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அகன்ற விசும்பிலுள்ளார்க்கு நாயகனாகிய இந்திரனே யமையுஞ் சான்று.
மணக்குடவர் விரிவுரை: இந்திரன் சான்றென்றது இவ்வுலகின்கண் மிகத் தவஞ் செய்வாருளரானால் அவன் தன்பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான். இது தேவரினும் வலியனென்றது.
பரிதி: இந்திரனே சாட்சி என்றவாறு.
காலிங்கர்: பரந்த வானில் வாழும் தேவர்கட்கெல்லாம் அரசனாகிய இந்திரனே அமையுஞ் சான்று என்றவாறு.
காலிங்கர் விரிவுரை: மற்று இது என்சொல்லியவாறோ எனின், ஈண்டுத் தன் பதங்கருதித் தவஞ்செய்யும் நீத்தார்மாட்டுத் திலோத்தமை முதலிய தெய்வமகளிரை விடுத்து, மற்று அத்தவமழித்துத் தவம் அழியாமைநிலைநிற்கையாலும், தனது பதம் விரும்பாமையாலும் தானே சான்றாய் அமையும் என்றவாறு.
பரிமேலழகர்: அகன்ற வானத்துள்ளார் இறைவன் ஆகிய இந்திரனே அமையும் சான்று.
பரிமேலழகர் விரிவுரை: தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், 'இந்திரனே சாலும் கரி' என்றார்.

இப்பகுதிக்கு 'பரந்த வானில் வாழும் தேவர்கட்கெல்லாம் அரசனாகிய இந்திரனே அமையுஞ் சான்று' என்ற பொருளில் பழைய ஆசிரியரகள் உரை கண்டனர். ஆனால் ஒவ்வொருவரும் வேறுவேறு இந்திரனைக் குறிப்பிடுகின்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வானவர் தலைவனாம் இந்திரனே தக்க சான்று', 'பெரிய விண்ணுலகத்திலுள்ள தேவர்கள் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்றாவன்', 'அகன்ற வானத்துள்ளார் தலைவனாம் இந்திரனே சான்றாவான்', 'அகன்ற வானுலகில் உள்ளார்க்குத் தலைவனாகிய இந்திரனே சான்று' என்றபடி உரை வழங்கினர்.

அகன்ற வானுலகில் உள்ளவர்களுக்குத் தலைவனாம் இந்திரனே சான்றாவான் என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
ஐம்பொறிகளையும் அடக்கினவனது வல்லமைக்கு அகன்ற வானுலகில் உள்ளவர்களுக்குத் தலைவனாம் இந்திரனே சான்றாவான் என்பது பாடலின் பொருள்.
இங்கு குறிப்பிடப்படும் இந்திரன் யார்?

தவமுயற்சியுடன் செயல்பட்டு இந்திரபதவி பெற்றவன் போல ஐம்பொறிகளையும் அடக்கிய தன்னலம் நீத்தார் தமது குறிக்கோளை அடைவர்.

ஐம்பொறிகளையும் பக்குவப்படுத்தினவனது வல்லமைக்கு அகன்ற வானுலகில் உள்ளவர்களுக்குத் தலைவனாம் இந்திரனே சான்று.
ஐந்தவித்தான் எனப்படுபவன் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐம்புலன்களால் ஆகும் அவாக்களைக் கட்டுப்படுத்தி அவற்றை அவித்தவன் ஆவான். அவித்தல் என்பது புலன்களின் செயல்களை ஒழித்து அழித்தல் என்பதல்ல; அவற்றால் முளைக்கும் ஆசைகளைப் அடக்குதல் என்பதாகும். உலக வெறுப்பு பேசப்படவில்லை; ஐம்பொறிகளை அடக்கி ஆளும் அறக் குணமே கூறப்படுகிறது. அவித்தல் என்ற சொல்லுக்குப் பக்குவப்படுத்தல் (கிழங்கு அவித்தல் போல) என்று விளக்கம் அளிப்பர்.
நீத்தார் ஆற்றல் அளவு கடந்தது என்று கூற வரும் வள்ளுவர் அதற்கு எடுத்துக்காட்டாக இந்திரன் என்பவனைக் குறிப்பிடுகிறார். இது இந்திரனைப் பெருமைப்படுத்தும் முறையில் அமைந்தது. வானவர்களின் தலைவனான இந்திரன் என்று பாடல் சொல்வதால் அவன் தொன்மங்களில் வரும் கதைமாந்தனாகவே இருக்கவேண்டும் என்று கொண்டனர். பழம் நூல்களில் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற பல இந்திரன் கதைகள் காணக்கிடக்கின்றன. அவற்றில் இக்குறட்கருத்துக்கு முற்றிலும் பொருந்துவதாக எதுவும் இல்லை.
பரிதி தனது உரையில் 'ஐந்தவித்து நோற்ற தவச் சிறப்பான இந்திரபதம் பெற்றிருப்பது பற்றி இந்திரனே சாலுங்கரி என்றார்' எனச் சொல்லிச் செல்கிறார். இதன்படி இந்திரன் என்பவன் இந்திர பதவி அடைந்தவன் என்ற பொருளில் ஆண்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. இந்திரபதவி என்பது புலனடக்கம் மேற்கொண்டு, பெருமுயற்சியின் விளைவாய்ப் பெறப்படுவது என்பது பொதுவாகத் தொன்மங்கள் கூறுவது. இந்திரனே போதிய சான்று எனக் கூறப்பட்டதால், ஐந்தடக்கல் என்ற தவத்தின், வலிமையால் யாவருமே இந்திரனாக அதாவது, வானுலகத்தாருக்குத் தலைவனாக, கோமகன் பதவியைப் பெற்றுப் புகழ் பெறமுடியும் என்பதை உணர்த்துவதாகத் தோன்றுகின்றது. புலன்களை அடக்கினால் இந்திர பதவி கிட்டும் அதாவது மேன்மேல் உயரலாம் என்பதாகக் கொள்ளலாம். புத்த சமயத்தில் இந்த நம்பிக்கை உள்ளது.

இந்திரபதவி அடைந்தவன் எப்படி முனைப்புடன் செயல்பட்டு அதைப் பெற்றானோ அது போலப் பொதுநலத் தொண்டாற்றும் நீத்தார் தமது குறிக்கோளை அடைவர் என்பதை இக்குறளுக்கான குறிப்புப் பொருளாகக் கொள்ள முடியும்.


இங்கு குறிப்பிடப்படும் இந்திரன் யார்?

இப்பாடலில் கூறப்படும் ஐந்தவித்தான் ஆற்றலைச் சொல்லும் அந்தப் பழங்கதை எது? இந்திரன்தான் ஐந்தவித்தவனா? அல்லது வேறு யாரோவா? முற்றும் துறந்த முனிவர்களின் தவவலிமையைப் பணிந்து போற்றும் இந்திரன், நீத்தாரின் தவவலிமையை அழித்துத் தன் பதவியைக் காத்துக் கொள்ளும் வல்லமை கொண்ட இந்திரன், தான் ஐந்தவியாது சாபம் எய்தி நின்று ஐந்தவித்தானது ஆற்றலை உணர்த்திய இந்திரன், தானே ஐம்புலன்களையும் அடக்கி இந்திரபதவி பெற்ற இந்திரன் என்றவாறு பல இந்திரன்கள் தொன்மங்களில் காணப்படுகின்றனர். இப்பாடலில் கூறப்பட்டுள்ள அந்த இந்திரன் யார்?

"இந்திரன் சான்று என்றது, இவ்வுலகின்கண் மிகத்தவஞ் செய்வார் உளரானால், அவன் தன்பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான், இது தேவரினும் வலியன் என்றவாறு" என்கிறது மணக்குடவர் உரை. சமணத் தொடர்புடைய இலக்கியங்கள் கூறும் கதையை இவர் சுட்டுவதாக உள்ளது. சமண இந்திரன் பெருமை பெற்றவன். சமண நூல்களில் இந்திரனின் பண்பும் பணிவும் அன்பும் ஆர்வமும் குறிக்கப்பட்டுள்ளன. சமணர் கூறும் கதைப்படி, தவத்தால் உயர்ந்த தேவர் வானவர் எனப்படுகின்றனர். வானவர்க்குத் தலைவனே இந்திரன் என்பவன். நிலஉலகில் ஒருவன் ஐம்புல வகைகளை ஆய்ந்து, தெளிந்து, புலன்களைக் காத்து, அடக்கி, வென்று, மனமாசுகளினின்றும் விடுதலையடைந்து நீத்தாராயின், அவரது நிலை தேவர்களுக்குத் தலைவனான இந்திரனுக்கு நன்கு புலனாகும். அப்போது உலகில் பல நற்குறிகள் தோன்றும். அவ்வுயிர் இறை நிலை அடையும்போது இந்திரனது பாண்டு கம்பளம் எனும் வெண்போர்வை நடுங்கும். இதை அறிந்து இறை நிலை அடைவோர் நடந்துசெல்லத் தாமரை மலர்களைப் பரப்பி அத்துறவியாரை, இந்திரன் தேவர் சூழ எழுந்து, வரவேற்று வழிபடுவான். இது மேருமந்தர புராணம் முதலிய நூல்களில் காணப்படும் கதை.
ஐந்தவித்தானது ஆற்றல் உயர உயர இந்திரனுக்கு ஊறுபாடு நேர்தல் பற்றி அவ்விந்திரன் மூலம் ஐந்தவித்தான் ஆற்றலை அறியலாம் எனவும் கருத்துக் கொள்வர். இங்கு முற்றும் துறந்தவர் ஆற்றலைக் கண்டு இந்திரனும் அஞ்சுவான் என்பதைச் சான்றாக கருதுகிறார் மணக்குடவர். இந்திரனே வரவேற்று வழிபடும் வலிமை கொண்டது நீத்தார் ஆற்றல் என இதை விளக்குவர்.

அடுத்து, இந்து சமயத் தொடர்புடையதாகச் சொல்லப்படும் பழங்கதைகளில் தோன்றும் மூன்று இந்திரன்களை நோக்கலாம்:
காலிங்கர் "மற்று இது என்சொல்லியவாறோ எனின், ஈண்டுத் தன் பதங்கருதித் தவஞ்செய்யும் நீத்தார்மாட்டுத் திலோத்தமை முதலிய தெய்வமகளிரை விடுத்து, மற்று அத்தவமழித்துத் தவம் அழியாமைநிலைநிற்கையாலும், தனது பதம் விரும்பாமையாலும் தானே சான்றாய் அமையும் என்றவாறு." என்று தம் உரையில் கூறுகிறார்.
இங்கு நீத்தார் தவமழிக்க இந்திரன் திலோத்தமையை அனுப்பிய கதை காட்டப்பெறுகிறது. தவமிருப்போர் ஆற்றலால் தன் பதவிக்கு ஆபத்து என்பதால் இந்திரன் திலோத்தமை போன்ற அழகிய வானவர் பெண்களை அனுப்பி அவர்களது தவத்தைக் கலைக்க முயற்சிப்பானாம். கோசிகன் மேற்கொண்ட தவத்தை அழிக்க நினைத்து, தேவர்களுக்குத் தலைவனாகிய இந்திரன் திலோத்தமையை அனுப்ப, அவளைக் கண்டு மயங்கித் தவத்தைக் கைவிட்டு அவளுடன் இன்பத்தில் ஈடுபட்டான் கோசிகன். அதனால் அவனது தவம் அழிந்தது. இவ்வாறு, தவம் செய்து இந்திரபதவி அடைய நினைக்கும் மற்ற நீத்தாரையும் இந்த இந்திரன் தடுத்து நிறுத்தித் தன் பதவி காக்கும் வல்லமை கொண்டவன்.
இரண்டாவது, "தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், 'இந்திரனே சாலும் கரி' என்றார்" என்ற பரிமேலழகர் உரையில் சொல்லப்பட்டுள்ள குறிப்பு கொண்டு இராமயணத்தில் சொல்லப்பட்டுள்ள அகலிகை கதையைத்தான் இக்குறள் கூறுகிறது எனச் சொல்லப்பட்டது. அகலிகை கதையானது: வானுலக தேவர்களின் தலைவனான இந்திரன், முனிவரான கெளதமரின் மனைவி அகலிகையின் அழகில் மயங்கி அவளைக் கூடுகிறான். இதைக் காணநேரிட்ட கெளதமர் வெகுண்டு சபித்ததால் ("எந்தப் பெண் குறியில் நீ ஆசைப்பட்டு இங்கு வந்தாயோ, அந்த உறுப்பு உன் உடலெங்கும் ஆயிரக்கணக்கில் உருவாகட்டும்") வெட்கக் கேடான தண்டனையை அடைந்து இந்திரன் இறவாப் பழிக்கு ஆளாகிறான்; அகல்யாவையும் நோக்கி "விலைமகள் அனைய நீயும் கல்லியல் ஆதி" (கம்பர்) என்று கல்லாய்க் கிடக்கும்படி சபிக்கிறார். (அகல்யாவுக்கு சாப மீளுகை பின்னாளில் அயோத்தி இராமனால் கிடைத்தது).
இந்தக் கதையில் சொல்லப்படும் கெளதமர்தான் ஐந்தவித்தானாகக் குறளில் குறிக்கப்பட்டுள்ளார்; இதன்படி கௌதமரே ஐந்தவித்தான் ஆகிறார்; வானவர்களுக்குத் தலைவனான இந்திரனையே ஒறுக்கத்தக்க ஆற்றல் கொண்டவர் கௌதமர்; இந்த ஆற்றல் ஐம்புலன்களையும் அடக்கி ஆண்டதால் அவருக்குக் கிடைத்தது அதையே வள்ளுவர் இக்குறளில் குறிப்பிடுகிறார் என்பது பரிமேலழகர் உரையின் பொருளாக விளக்கப்பட்டது. பரிமேலழகர் உரையில் எந்த இந்திரன் என்று வெளிப்படையாகச் சொல்லப்படவில்லையாதலால் சாபம் விட்ட அகத்தியர் வரலாற்றில் காண[ப்படும் இந்திரனைப் (இக்கதை அடுத்துச் சொல்லப்பட்டுள்ளது) பரிமேலழகர் குறித்திருக்கலாம் எனவும் அறிஞர் கருதுவர்.
மூன்றாவதான வைதிக சமய இந்திரன் கதை மகாபாரதத்தில் உள்ளது. நகுடன் என்பான் நூறு குதிரைவேள்வி செய்து இந்திரபதவி பெற்றபின் இந்திராணியை நாடிச் சென்றான். இந்திராணி ஒரு நிபந்தனை விதித்தாள். ஏழு முனிவர்கள் சுமந்து கொண்டுவரும் பல்லக்கில் ஏறி நகுடன் அவளிடம் வரவேண்டும். அகத்தியர் உட்பட ஏழு முனிவர்களைப் பல்லக்கு தூக்க வைத்தான் நகுடன். இந்திராணியை விரைவில் அடையும் காமவெறியில்-புலனடக்கமின்றி- பல்லக்கு தூக்கி வந்த அகத்தியரின் தலையை உதைத்து 'சர்ப்ப! சர்ப்ப' (ஓடு, ஓடு) என விரைந்து செல்லும்படி ஏவினான். இதனால் அகத்தியர் வெகுண்டு நகுடன் பாம்பாக மாற சாபமிட்டார். பாம்பாய் ஓடிய நகுடன் தான் அடைந்த இந்திர பதவியையும் இழந்தான்.
இம்மூன்றையும் (கோசிகன்-திலோத்தமை, கெளதமர்-அகலிகை, நகுடன்-இந்திராணி) வைதீக இந்திரன் கதைகள் என்று நாம் அழைக்கலாம்.

இனி புத்த சமயத்தார் நம்பும் இந்திரன் கதை ஒன்றும் உண்டு.
ஒருவர் கடும் தவம் செய்தால் இந்திர பதவி அடையலாம் என்று புத்தசமயத்தார் நம்பினார்கள். இந்த இந்திரனையே வள்ளுவர் இக்குறளில் சொல்லியிருக்கிறார் என்பது ஒரு கருத்து. புத்த சமய இந்திரனைப் பற்றிக் கு ச ஆனந்தன் சொல்வதாவது: "புத்த சமயம் சாற்றும் தேவர்கள் தலைவனான இந்திரன், இந்து புரணங்கள் கூறும் இழிதகை கொண்ட இந்திரனுக்கு முற்றும் மாறுபட்டவன். புத்த சமய மெய்யியல் நெறிக்கேற்ப ஐம்பொறி-புலன்களை அடக்கி, அனைத்தையும் துறந்தவன்; பேராற்றல் பெற்றவன். சிலப்பதிகாரத்தில் பேசப்படும் "இந்திர விழா", ஐந்தினை அவித்து ஆற்றல் பெற்ற புத்த இந்திரனுக்கு எடுக்கப்பட்ட விழா. இந்து புராண இந்திரன் காமவெறி கொண்டவன். புலனடக்கம் அற்றவன். ஐந்தவித்தான் ஆற்றலுக்குச் சான்றாவதற்கு, எவ்வகையாலேனும் பொருந்தாதவன். ஐம்பொறி-புலன்களை அடக்கிப் பக்குவப்படுத்திய ஞானியின் ஆற்றலுக்கு வானத்தில் உள்ளவர்களின் நாயகனான, (புத்த) இந்திரனே சான்று."

காலிங்கரின் உரைவிளக்கத்தில் (கோசிகன் கதையில்) நீத்தார் பெருமையும் இல்லை; இந்திரனைச் சான்றாகக் கொள்ளவும் ஏதும் இல்லை. இக்கதையை வலிந்து இக்குறட்பொருளுக்குக் காலிங்கர் பொருத்துவதாகத் தோன்றுகிறது. எனவே இக்குறளுக்கான இவரின் உரை தள்ளத்தக்கதாகிறது.
பரிமேலழகர் சொல்லிய இந்திரன் - அகலிகை சாபம் பெற்ற கதையும் முழுமையாகப் பொருந்தவில்லை. துறவுஉள்ளம் கொண்ட நீத்தாரின் புகழ்பாடவே இவ்வதிகாரம் அமைந்தது. கௌதமர்தான் இங்கு குறிப்பிடப்படும் ஐந்தவித்தான் என்பது பரிமேலழகர் உரை. 'எப்படி மனைவியுடன் வாழும் கௌதமரை ஐம்புலன்களையும் அடக்கியவர் என்று அழைப்பது? எனவே கௌதமர் ஐந்தவித்தான் அல்லர்' என்று சிலர் கருத்துத் தெரிவித்தனர். ஆனால் இதை மறுத்து 'கௌதமர் இல்லறத்தின் நின்றுமே மெய்யுணர்ந்த பெரியோர் ஆவர்; அறத்தாற்றி இல்வாழ்க்கை ஆற்றிய துறவறவாளர். எனவே அவரும் வள்ளுவர் வரையறை செய்யும் ஐந்தவித்தான் இலக்கணத்துக்குள் வருகின்றார் என்று சிலர் அமைதி கூறுவர். அடுத்து துறவிகளிடம் விருப்பு, வெறுப்பு, காழ்ப்பு போன்ற குணங்கள் அமையா. அப்படிப்பட்டவர்கள் யாருக்காவது சாபம் விடுவார்களா? அப்படி சாபம் விட்டால் எப்படிக் குணமென்னும் குன்றேறிய நீத்தார் வகையில் அடங்குவர்? சாபம் பற்றியோ அதைக் கொடுத்தது யார் என்பதையோ வள்ளுவர் குறிப்பிட்டுச் சொல்லவுமில்லை. கெளதமரைக் குறிப்பால் உணர்த்தினார் வள்ளுவர் என்றால் கடுஞ்சினப்பட்டு சாபம் கொடுத்தவரான கெளதமரை நீத்தார் பெருமை அதிகாரத்தில் எடுத்துக்காட்டும் அளவிற்கு அவருக்கு உயர்வு தருவார் என்பது ஐயமே
கௌதமர் ஐந்தவித்தான் இல்லையெனில் அது இந்திரனா? கோமான் என்று இந்திரனைச் சிறப்படை மொழி கொடுத்து உயர்த்தியே வள்ளுவர் இங்கு கூறுகிறார். பிறன் மனைவியைக் கூடிய காமுகனை கோமான் என்று அவர் அழைக்கமாட்டார். பரிமேலழகர் இந்திரன் தனது பலமின்மை கொண்டு ஐந்தவித்தானது ஆற்றலை உணர்த்தினான் என்ற கருத்துடன் உரை கண்டுள்ளார் என்பர். சான்று எனக் காட்டப்படுவர் சான்றாக நிற்றல் வேண்டும்; தம் உறுதி குன்றியமையால் உறுதி கொண்ட பிறரைக் கொண்டு சான்று காட்டினார் என்பது பொருத்தமாகுமா? எனவே பரிமேலழகர் சுட்டும் இந்திரனையோ (அல்லது கௌதமரையோ) இக்குறள் குறிப்பதாகக் கொள்ள முடியாது.
இதே அடிப்படையில் நகுடன்-இந்திராணி கதையும் இக்குறளுக்குப் பொருந்திவராது; அதில் காணப்படும் இந்திரனையும் இப்பாடல் குறிக்காது. சாபம் விட்ட அகத்தியரும் நீத்தாருள் அடங்கார்.

சமயங்கள் கூறும் இந்திரன்கள் தவிர்த்து பழந்தமிழ்நூல்கள் கூறும் இந்திரனையும் காணலாம். தமிழர்களின் ஐந்திணைகளில் குறிஞ்சிக்கு முருகன், பாலைக்குத் துர்கை, முல்லைக்கு திருமால், மருதத்திற்கு இந்திரன், நெய்தலுக்கு வருணன் எனத் தெய்வங்கள் குறிக்கப்பட்டன. தமிழர்களின் மருத நிலத்துத் இறைவனாகவும் மழையை இயக்கும் தெய்வமாகவும் இந்திரன் கருதப்பட்டான் என்பர்.

எந்த இந்திரனை இக்குறள் சான்றாக்குகிறது?
பரிதி 'ஐந்தவித்து மனத்தைத் தன்வயமாக்கி நடத்துவனான இந்திரனே சாட்சி' என்று உரை எழுதினார். அதாவது தனது தவ வலிமையால் இந்திரன் சான்றானான் எனப் பரிதி சொல்கிறார். இவர் கூறும் இந்திரன் கு ச ஆனந்தன் குறிப்பிடும் சமண/புத்த இந்திரனை ஒத்து வருகிறான். சமயக் காலங்களுக்கு முந்தைய பழைய கதைகளில் இந்திரன் தவமிருந்து அப்பதவியைப் பெற்றான் என்று வழங்கி வந்ததும் எண்ணத்தக்கது.
இந்திரனைச் சிறப்பித்த வள்ளுவர் அவன் குறையையன்றி ஏற்றத்தைக் கருதியே அவனைச் சான்றாக ஆக்கினார் என்று கொள்ளுதலே சிறப்புடையதாதலால் பரிதி/ கு ச ஆனந்தன் உரையில் கண்ட இந்திரனே இக்குறளில் கூறப்பட்டுள்ளான் என்று கொள்ள முடியும்.



ஐம்பொறிகளையும் அடக்கினவனது வல்லமைக்குப் பரந்த வானுலகத்திலுள்ளவர்களுக்குத் தலைவனாகிய இந்திரனே சான்றாக அமைவான் என்பது குறட்கருத்து. .

அதிகார இயைபு

நீத்தார் பெருமை ஐந்தடக்கல் ஆற்றலில் பெறப்படுகிறது.

பொழிப்பு

ஐம்புலன்களையும் அடக்கியவன் வலிமைக்கு பரந்த வானத்துள்ளார் தலைவனாம் இந்திரனே சான்று.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:6)

பொழிப்பு (மு வரதராசன்): ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.

மணக்குடவர் உரை: மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம் பொறிகளின் வழியாக வரும் ஊறு சுவை யொளி நாற்ற மோசை யென்னு மைந்தின்கண்ணுஞ் செல்லும் மன நெகிழ்ச்சியை அடக்கினானது பொய்யற்ற வொழுக்க நெறியிலே நின்றாரன்றே நெடிது வாழ்வார்?
இது சாவில்லையென்றது.

பரிமேலழகர் உரை: பொறி வாயில் ஐந்து அவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது; பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார்-மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார், நீடு வாழ்வார் - பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார்.
(புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து ஆயிற்று. ஒழுக்க நெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது. 'கபிலரது பாட்டு' என்பது போல. இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது)

நாமக்கல் இராமலிங்கம் உரை: பஞ்சேந்திரிய ஆசைகள் என்பதே இல்லாத இயல்பினன் பகவான் பொய்த்தல் இல்லாத அந்த இயல்பை உணர்ந்து அதற்கான நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்து நடக்கின்றவர்கள் அந்த இயல்பின் பரிபூர்ண அருளுக்குப் பாத்திரம் ஆவார்கள்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார் நீடு வாழ்வார்.

பதவுரை: பொறி-ஐம்பொறி (மெய்,வாய்,கண்,மூக்கு,செவி); வாயில்-வழி; ஐந்து-ஐந்து (இங்கு ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகிய ஐந்து புலன்களைக் குறிக்கும்); அவித்தான்-பண்படுத்தியவன், பக்குவப்படுத்தியவன், அறுத்தவன், அழித்தவன்; பொய்-மெய் அல்லாதது; தீர்-நீங்கிய; ஒழுக்கநெறி-ஒழுக்கமுறை; நின்றார்-நின்றவர்; நீடு-நெடிது; வாழ்வார்-நன்கு வாழ்வார், நிலைபெற்றிருப்பவர்.


பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார்::

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரை:
மணக்குடவர்: மெய், வாய், கண், மூக்கு, செவியென்னும் ஐம்பொறிகளின் வழியாக வரும் ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை என்னும் ஐந்தின்கண்ணுஞ் செல்லும் மன நெகிழ்ச்சியை அடக்கினானது பொய்யற்ற வொழுக்க நெறியிலே நின்றாரன்றே;
பரிதி: சத்த பரிச ரூப ரச சுத்தம் என்கிற பொறியை வழியாக உடையவற்றிற்கு மனசைப் போக்காமல் காக்க வல்லார்;
காலிங்கர்: சுவை,ஒளி, ஊறு,ஓசை, நாற்றம் என்கின்ற ஐம்பொறிகளை நுகர்வதற்கு வழிக்கருவியாகிய மெய்,வாய்,கண்,மூக்கு,செவி என்கிற ஐம்பொறிகளையும் அகத்தடக்கியவன் இறைவனது உபதேசமுறைமையாகின்ற நல்லொழுக்கத்தின் கண் வழிப்பட்டு நின்றவர்;
பரிமேலழகர்: மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார்;
பரிமேலழகர் குறிப்புரை: புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து ஆயிற்று. ஒழுக்க நெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது. 'கபிலரது பாட்டு' என்பது போல.

'பொறிவாயில் ஐந்தவித்தான்' என்றதற்கு மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தான் என்றபடியே அனைத்து பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். ஆனால் அவன் யார் என்பதைச் சொல்வதில் இவர்கள் வேறுபடுகின்றனர். மணக்குடவரும், பரிமேலழகரும் ஐந்தவித்தான் என்ற சொல்லுக்குக் கடவுள் எனப் பொருள்படும்படியாக உரை காண்கின்றனர். பரிதி 'புலன்களைக் 'காக்கவல்லார்' என்ற பொருள்படும்படி உரை செய்திருப்பதாலும் காலிங்கர் 'ஐம்பொறிகளையும் அகத்தடக்கியவன், (கடவுள் கூறிய நல்லொழுக்க நெறியில் நின்றவர்)' என்று மொழிந்ததாலும் இவர்கள் இருவரும் ஐந்தவித்தான் என்பது மனிதர்களைக் குறிப்பதாகிறது. 'மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார்' என்றதற்கு இறைவனது ஒழுக்க நெறியிலே நின்றார் என்று மணக்குடவரும் பரிமேலழகரும் கூறுகின்றனர். காலிங்கர் 'இறைவனது உபதேசமுறைமையாகின்ற நல்லொழுக்கத்தின் கண் வழிப்பட்டு நின்றவர்' என்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஐம்புலனையும் அழித்தவனது மெய்ந் நெறியைக் கடைப் பிடித்தவர்', 'ஐம்பொறிகளின் வழியாக எழும் ஐவகை அவாவும் அற்றவனது மெய்யான ஒழுக்க நெறி நிற்பவர்', 'ஐம்பொறிகளின் வழியாக எழும் ஐந்துவகை ஆசைகளும் இயல்பாகவே இல்லாது அடங்கப்பெற்ற கடவுளை யடைதற்குரிய நிலைபெற்ற நல்லொழுக்க முறையைப் பற்றியவர்கள்', 'மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாகவுடைய ஐந்து விருப்பங்களையும் கெடுத்தவனாகிய கடவுளின் பொய்யை நீக்கிய ஒழுக்கவழியின்கண் தவறாது நின்றவர்கள்' என்ற பொருளில் உரை தந்தனர்.

ஐம்பொறிகளின் வழியாக எழும் ஐவகை அவாவினையும் பக்குவப்படுத்தியவனாகி, மெய்யான ஒழுக்க நெறி நிற்பவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நீடுவாழ் வார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரை:
மணக்குடவர்: நெடிது வாழ்வார்.
மணக்குடவர் குறிப்புரை: இது சாவில்லையென்றது.
காலிங்கர்: முத்தராவர். [முத்தர்- வினைக்கட்டிலிருந்து விடுபட்டவர்]
பரிதி: இகபரம் இரண்டிலும் நெறிநின்று அநேக காலம் வாழ்வர் என்றவாறு. [இகபரம்-இம்மை, மறுமை]
பரிமேலழகர்: பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார்.
பரிமேலழகர் குறிப்புரை: இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது.

நெடிது வாழ்வார் என்ற பொருளில் மணக்குடவரும் பரிதியாரும் உரை கூறினர். 'இகபரம் இரண்டிலும்' என்றதால் பரிதியார் உரை இம்மை மறுமை இரண்டிலும் அநேக காலம் வாழ்வார் என்றவாறு அமைந்துள்ளது. காலிங்கர் 'முத்தராவர்' என்கிறார். பரிமேலழகர் 'பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார்' என்றுரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நெடுங்காலம் வாழ்வர்', 'நெடிது வாழ்வார்', 'எக்காலத்தும் செவ்விதின் வாழ்வார்கள்', 'எக்காலத்தும் வாழ்வார்கள்', என்ற பொருளில் உரை தந்தனர்.

நெடுங்காலம் நன்கு வாழ்வார் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஐம்பொறிகளின் வழியாக எழும் ஐவகை அவாவினைப் பக்குவப்படுத்தியவனாகி, பொய்தீர் ஒழுக்க நெறியில் நிற்பவர், நெடுங்காலம் வாழ்வார் என்பது பாடலின் பொருள்.
'பொய்தீர் ஒழுக்க நெறி' குறிப்பது என்ன?

ஒழுக்கத்தின்வழி நின்று கடவுள் வணக்கம் செய்க.

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து ஐம்பொறிகளின் வழியாக ஏற்படும் உணர்வுகளைப் பக்குவப்படுத்தியவனாகி, மெய்யான ஒழுக்க நெறி நிற்பவர், நெடுங்காலம் இவ்வுலகின்கண் நெடுங்காலம் இனிது இருப்பர்.

பொறிவாயில் ஐந்தவித்தான்
பொறிவாயில் ஐந்தவித்தான் என்பது மெய்வாய்‌ கண்‌ மூக்குச்‌ செவி என்னும்‌ ஐம்பொறிகளின்‌ வழியாக வரும்‌ ஊறு, சுவை, ஒளி, நாற்றம்‌, ஒசை என்னும்‌ ஐந்து புலன்களின் இயக்கத்தை முறைப்படுத்தி, நெறிப்படுத்தி வாழ்ந்தவன் எனப் பொருள்படும்.
இக்குறளில் சொல்லப்பட்டுள்ள ஐந்தவித்தான் இறைவனே என்று ஒரு சாராரும் மனிதர்தான் என்று மற்றொரு சாராரும் கூறுவர். ஐந்தவித்தான் என்பதை அடுத்து 'பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார்' என்ற தொடர் வருகிறது. இந்த இரண்டாவது தொடரை விளக்குவதற்காகவே முதலில் உள்ள ஐந்தவித்தான் என்பதற்கு இறைவன் என்று பொருள் கூறினர் எனத் தோன்றுகிறது. இவ்விரண்டையும் இணைத்து இறைவன் சொன்ன நெறிகள் என்று கொண்டு ஐந்தவித்தானாகிய இறைவன் கூறிய நெறிகள் என்று செய்யுள் படைக்கப்பட்டதாகப் பலரும் கூறுவர். இவர்கள் கூற்றுப்படி ஐந்தவித்தான் என்ற சொல் இறைவன் குறித்தது ஆகும். இறைவன் அதாவது கடவுள் என்னும்போது உருவம், அருவம், அருவுருவம் எல்லாவற்றையுங் கடந்தவன்; அவன் பிறப்பிறப்பு இல்லாதவன் என்றே புரிந்து கொள்கிறோம். இப்படிப்பட்ட இறைவனுக்கு பொறிகள்-புலன்கள் உண்டா? அவனுக்குப் பொறி/புலன் இருக்க முடியாது. பொறி/புலனேயில்லாத ஒன்றைப் புலனை அவித்தவன் என்று சொல்ல இயலாது. ஐந்தவித்தான் என்பது இறைவனுக்குப் பெருமை சேர்க்கும் சொல் அல்ல; அது எந்தவகையிலும் அவனுக்குப் பொருந்தாது. எனவே ஐந்தவித்தான் என்ற சொல் இறைவனைச் சுட்டுவது அல்ல. வேறு சிலர் அடியார்களின் அவாவை அடக்குகின்ற இறைவன் என்றும் ஐந்துவகை ஆசைகளும் இயல்பாகவே இல்லாது அடங்கப் பெற்ற கடவுள் என்றும் கூறினர். இவையும் இச்சொல்லை விளங்கவைப்பதாக இல்லை.
அடுத்து, ஐந்தவித்தான் என்பது மனிதனாகப் பிறந்து ஐம்பொறிகளையும் அவற்றினால் உண்டாகும் ஐம்புலன்களையும் அவித்துத் தெய்வ நிலையை அடைந்தவர்க்குப் பொருந்தும் என்றனர் சிலர். சமண சமய நம்பிக்கையின்படி ஐம்பொறிகளையும் ஐம்புலன்களையும் உடைய மனிதனாகப் பிறந்து மனிதனாக வளர்ந்து ஐம்புலன்களையும் அடக்கித் தவம் செய்து பிறவித் துன்பத்தை நீக்கி வீடுபேறு என்ற உயர்ந்த நிலையை அடைந்தவர் தெய்வமாகக் கருதப்படுவர்; அவர்தான் அருகக் கடவுள் என்றும் தீர்த்தங்கரர் என்றும் கூறப்படுபவர்; இவரைத்தான் பொறிவாயில் ஐந்தவித்தவன் என்று இக்குறள் கூறுகிறது என்பர் சமண சமயத்தைச் சார்ந்தோர். அதுபோலவே, புத்தரும் மனிதனாகப் பிறந்து வளர்ந்து தம்முடைய புலன்கள் ஐந்தையும் அவித்துப் போதி ஞானம் பெற்றுப் புத்த பதவியை அடைந்தவர். ஆகையால் ஐந்தவித்தான் என்பது புத்தரைக் குறித்தது என்பர் புத்த சமயத்தைப் பின்பற்றுபவர்கள்.
வள்ளுவர் எச்சமயத்தையும் உடம்பட்டவர் அல்லர். பொதுமை நூல் இயற்றியவர் சமயங்கள் தோன்றக் காரணமாக இருந்த சான்றோர்களை மனதில் நிறுத்தி கடவுள் வாழ்த்தில் கூறினார் என்பது ஏற்கக் கூடியதே அல்ல.
இறைவன் இல்லை, இறைநிலை பெற்றவர் இல்லை. பின் யார் இந்த ஐந்தவித்தான்? ஐந்தவித்தான் என்பதற்கு ஐம்புலன்களையும் அடக்கிஆளப் பக்குவப்பட்டவன் என்பது பொருள். ஐம்புலன்களை அடக்குவதற்கு அருகன், புத்தன் போன்ற மாமனிதர்களாகத்தாம் இருக்க வேண்டுமென்பதில்லை. ஐந்தடக்கல் மாந்தராகப் பிறந்த அனைவருக்கும் இயலக்கூடியதுதான். ஐந்தவித்தான் என்ற சொல் ஐந்தவித்த மாந்தர் குறித்தது.

பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார்
'பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார்' என்பது பாடலின் அடுத்த பகுதி. இது மெய்யான ஒழுக்க நெறி நிற்பவர் என்ற பொருள் தருவது.
பொய்தீர் என்ற சொல்லுக்குப் பொய்ம்மை நீங்கிய, பொய்யற்ற, அல்லது பொய்யில்லாத என்பது பொருள். அதாவது மெய்யான ஒழுக்க நெறியே பொய்தீர் ஒழுக்க நெறி. குறளின் சொல்லமைப்பு, ஒழுக்கநெறிகள் பல உள்ளன என்பதாகவும் அவற்றுள் மெய்யான ஒழுக்க நெறி எதுவென்பதைத் தெளிந்து, அந்நெறியில் நின்று ஒழுகுபவர் என்று சொல்வதுபோல் உள்ளது.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் என்றதைத் தெளிவுபடுத்தக் காலிங்கரது உரை உதவுகிறது. அவ்வுரை 'ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை என்கின்ற ஐம்பொறிகளை நுகர்வதற்கு வழிக்கருவியாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி என்கிற ஐம்பொறிகளையும் அகத்தடக்கியவன் இறைவனது உபதேசமுறைமையாகின்ற நல்லொழுக்கத்தின் கண் வழிப்பட்டு நின்றவர்' என்கிறது. இவ்வுரையின்படி ஐந்தவித்தான் தனிச் சொல்லாகவும் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் தனியாகவும் அமைகின்றன. அதாவது 'ஐந்தவித்தான், இறைவனது ஒழுக்கநெறியின் வழுவாது நிற்பாராயின் அவர்கள் நீடுவாழ்வார்கள்' என்பது காலிங்கர் உரைக்கருத்து. ஐந்தவித்தான் மனிதரைக் குறிப்பது என்கிறார் காலிங்கர். இறைவன் என்றோ உபதேசம் என்றோ இக்குறளில் சொல்லாட்சிகள் இல்லை; அவை இவரது உரையில் வருவித்துத் தரப்பட்டவைதாம். ஆனாலும் காலிங்கர் உரையே இக்குறளுக்குத் திறவாக அமைகிறது. ஆனால் இங்கும் ஒரு தடை உண்டு. ஐந்தவித்தான் என்ற தொடர் ஒருமையையும், 'நின்றார்', 'வாழ்வார்' என்பன பலர்பாலும் உணர்த்துததால் இடர்ப்பாடு நேர்கிறது. காலிங்கர் உரைக்கு மேற்கண்டவாறு பொருள்கொள்வதற்குக் குறள் 'பொறிவாயில் 'ஐந்தவித்தார்' பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்' என இருத்தல் வேண்டும். ஆனால் செய்யுளோ பொறி வாயில் ஐந்தவித்தலை ஒருமையில் 'ஐந்தவித்தான்' என ஒருவர் செயலாகக் கூறுகிறது. இதற்குத் தண்டபாணி தேசிகர் 'ஐந்தவித்தான் ஆகி என ஆண்பால் எழுவாய், ஆகி என்ற வினைஎச்சத்தை ஏற்க, அங்ஙனம் அவித்த பலர் ஒழுக்கநெறி நின்றாராயின் நீடு வாழ்வார் எனச் சில சொல் வருவித்து முடிக்க இவ்விடர்ப்பாடு அகலும்' என்று இலக்கண அமைதி காணமுடியும்' எனச் சொல்லி 'ஐந்தவித்தானது ஒழுக்கநெறி நின்றார்' என்று கொள்ளாமல், 'ஐந்தவித்தான் ஆகி ஒழுக்கநெறி நின்றார்' என உரை கொள்ளலாம் என்வும் கூறுவார்.
எனவே காலிங்கர் உரை ஐந்தவித்தான் என்பது ஐந்தடக்கல் ஆற்றும் மனிதரைக் குறிக்கிறது எனவும் பொய்தீர் ஒழுக்க நெறி என்றது 'இறைவனது உபதேசமுறைமையாகின்ற நல்லொழுக்கம்' பற்றியது எனவும் அறியலாம். இவ்வுரையால் அதிகார இயைபு அமைந்ததோடு குறட்பொருளும் தெளிவு பெறுகிறது. பொய்தீர் ஒழுக்க நெறி என்பது வழிவழியாக உபதேசமுறையான் வருவது; அதுவே நல்லொழுக்கம் பேண உதவுவது; அது தவறுகட்கு இடந்தராதது என்று பின்வந்தவர்கள் காலிங்கர் உரையை வழிமொழிந்தனர்.
இனி, கடவுள் வாழ்த்தில் எஞ்சிய குறட்பாக்களெல்லாம் கடவுளின் குணங்களைக் குறிக்க, இக்குறள் மட்டும் மனிதர் பற்றிப் பேசுவது என்பது பொருந்துமா என்று கேள்வி எழுப்பினர். ஒழுக்க நெறியில் நிற்கும் மாந்தர் இறைவனது வழியில் நிற்கின்றார் என்பது குறள் கூற வரும் செய்தி ஆதலால் இங்கு கடவுள் ஏன் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்பது ஆராயப்பட வேண்டியதில்லை.

நீடு வாழ்வார்:
நீடு வாழ்வார் என்று சொல்லிப் பாடல் முடிகிறது. 'நீடு நிலமிசை வாழ்வார்' என்று இவ்வதிகாரத்து மற்றொரு குறளில் (3) கூறப்பட்டதால் இங்கு 'நீடுவாழ்வார்' என்பதற்கு மண்ணுலகத்திலும் விண்ணுலகத்திலும் நிலைத்து வாழ்வார் என்று பொருள் கூறினர்.
ஐம்பொறிகளையும் அகத்தடக்கி நன்னெறியில் ஒழுகுபவர் நீண்ட நாள் நன்கு வாழ்வர் என்கிறது இக்குறட்பா. கட்டுப்பாடுடைய இவர்கள் உடல் நலமும் உளநலமும் பெற்றவர்களாயிருப்பதால் நெடிய வாழ்வு கொள்வர் என்பதை மருத்துவ அறிவியல் உலகமும் உடன்பட்டுக் கூறும். இவர்கள் கவலை, பிணி, கட்டு, துயர் இன்றி நிலமிசை நீடு வாழ்வார்.

மக்கள் ஐந்தவித்தார் ஆகி ஒழுக்கநெறியின் நிற்பாராயின் நிலமிசை நீடுவாழ்வார் என்னும் உரையே இக்குறட்பாவிற்குச் சிறப்புடையதாகும். முற்குறட்பாக்களில் இறைவனை நினைத்தலும் புகழ்ந்தேத்துதலும் கடவுள் வாழ்த்தாகச் சொல்லப்பட்டன. ஒழுக்கநெறி நிற்றலும் கடவுள்வாழ்த்தாகும் என்பது இக்குறள் வழங்கும் நுண்ணிய கருத்து. இவ்வாறாக, நினைத்தல், வாழ்த்தல், ஒழுக்கநெறி நிற்றல் என்பன மனமொழிமெய்கள் என்னும் மூன்றன் செயல்களைக் கடவுள்வாழ்த்தாகக் குறள் குறிப்பனவாகின்றன.
'ஐந்தவித்தான்' என்பது பேராற்றலையும் ''ஒழுக்கநெறி'' என்பது ஆற்றலை நெறிப்படுத்தும் தூய்மையையும் ஒருங்கு கூட்டி நிற்பக் காண்மின்!! வினையாற்றலும் மனத்தூய்மையும் இக்குறட்கண் வள்ளுவர் உறுத்தும் பிரிவில் இறைக்கூறுகள் அல்லவா? இறைநெறியைப் பலர் உளறுமாப் போல அறிவுக்கு விளங்கா நெறியாக்காது, வாழ்வுக்குப் பின்னெறி யாக்காது, அறிவுநெறியாக, வாழ்க்கைச் செயல் நெறியாக, நன்றாகக் குறிக்கொண்மின் - ஒழுக்கநெறியாகக் காண்பது வள்ளுவ இறைமை. பல்வேறு ஒழுக்கத்துள்ளும் வாய்மை நெறியாக -பொய்தீர் நெறியாகத் துணிவது இறை வள்ளுவம்" என்று இக்குறளுக்குச் சிறந்த விளக்கவுரை தந்துள்ளார் வ சுப மாணிக்கம்.

'பொய்தீர் ஒழுக்க நெறி' குறிப்பது என்ன?

'பொய்தீர் ஒழுக்க நெறி' என்றால் என்ன? ''பொய்தீர் ஒழுக்க நெறி' என்ற தொடர் மெய்யான ஒழுக்கநெறி எனப்பொருள்படும். இத்தொடர்க்குக் 'கடவுளது நெறி, குற்றமற்ற ஒழுக்கநெறி, தவறுகட்கு இடங்கொடாத நெறி, யாங்கணும் பொய்ம்மையில்லாத வழி, 'பொய்த்தல் அறியாத ஒழுங்கான இயல்பை உணர்ந்து அடக்குகிறவர்கள்' என்று பலவாறாக உரை கூறினர். பெரும்பாலான உரையாசிரியர்கள் இத்தொடரின் முன்னால் வரும் ஐந்தவித்தான் என்ற சொல்லுக்கு இறைவன் என்று பொருள் கொண்டவர்கள். இவர்கள் இத்தொடரை அதனுடன் சேர்த்து வாசித்து 'பொய்தீர் ஒழுக்க நெறி' என்றதற்கு இறைவனது ஒழுக்க நெறி என்று பொருள் கூறினர். இக்குறளில் இறைவன் என்ற சொல் இல்லையென்றாலும், அது இறைவனது ஒழுக்க நெறியைக் குறிப்பது எனவே கொண்டனர். 'இறைவனது ஒழுக்க நெறி அல்லது இறைவன் கூறிய ஒழுக்க நெறி' என ஒன்று உள்ளதா? அப்படி ஒன்று இருந்தால் அதை எப்பொழுது யாருக்கு இறைவன் கூறினார்?

மெய்யான ஒழுக்கநெறியை விளக்கப் புகுந்த சில உரையாசிரியர்கள் அது இறைவனால் வகுப்பப்பெற்ற அல்லது இறைவனோடு தொடர்புடைய ஒழுக்கநெறி என்றனர். ஒழுக்கநெறி என்றதால் திருக்குறள் போன்ற அறநூல்களில் கூறப்பட்ட நெறியைக் குறிக்கலாம் என்றும் தொன்மக்கதைகளில் காணப்படும் இராமனாக வந்து நடந்து காட்டியருளிய ஒழுக்கநெறியாக இருக்கலாம் என்றும் கூறினர்.
'இறைவனது ஒழுக்க நெறி' என்றவர்கள் அதற்குச் சமயங்கள் கூறும் உபதேசங்கள் என்று பொருள் கூறி, அது சமய நூல்களான நான்குமறைகள் (வைதீகம்), பரமாகமம் (சமணம்) புத்தர் போதனைகள் போன்றவற்றில் சொல்லப்பட்ட ஒழுக்க அறிவுரையாகவும் இருக்கலாம் என்று கூறினர். வெவ்வேறு சமயங்கள் வெவ்வேறு நெறிகளை, இறைவன் பெயரால் அல்லது இறை தொடர்பானவற்றால் கூறி வருகின்றன. இவ்வாறு இறைவனோடு தொடர்புடைய ஒழுக்க நெறியைச் 'சமயம்' என்றும் 'மதம்' என்றும் 'கடவுள் நெறி' என்றும் அழைக்கின்றனர். இதையே குறள் பொய்தீர் ஒழுக்க நெறி என்கிறது என்பது இவர்கள் தரும் விளக்கம்.
இவ்வாறு அறநூல்களும் தொன்மங்களும் சமயங்களும் பலவகையான நெறிகளை வகுத்து வழங்குகின்றன. இன்னும் எவையெல்லாம் வழிவழியாக உபதேசமுறையான் வருவனவோ அவை அனைத்தும் ஒழுக்க நெறிகளாம். இவற்றுள்ளும் பொய்தீர் ஒழுக்க நெறி என்று தெளிவு பெற்றன எவை என அறிந்து அவற்றின்படி ஒழுக வேண்டும் என்கிறார் வள்ளுவர். 'பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண்', 'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு' - இவற்றுள் எது மெய்யான உபதேச நெறி? 'பிறப்பாலேயே சிறப்பு', 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' - இவற்றில் எது பொய்தீர் நெறி? என்பதை அறிந்து தெளிதல் வேண்டும் என அவர் உணர்த்துகிறார்.

கடவுளின் இருப்பில் நம்பிக்கை கொண்டு, உலகப் படைப்பின் உட்பொருளை உணர்ந்து ஒழுகும் வாழ்க்கை நெறியைக் 'கடவுள் நெறி' என்று பொதுவாகக் கூறுவது மரபு (க த திருநாவுக்கரசு). பொய்ம்மை தீர்த்த ஒழுக்கநெறியைக் கடைப்பிடித்து வாழ்தலும் கடவுள் வழிபாடுகளில் ஒன்று என்கிறது குறள்.

மக்கள் ஐந்தவித்தான் ஆகி பொய்யற்ற ஒழுக்கநெறியில் வழுவாது நிற்பாராயின் நீடுவாழ்வார் என்பது இக்குறள் கூறும் கருத்து.



அதிகார இயைபு

நல்லொழுக்கம் பேணுதலும் கடவுள் வாழ்த்துவகையில் ஒன்று.

பொழிப்பு

பொறிகளுக்கு வாயிலாகிய சுவை, ஒளி, ஓசை,ஊறு, நாற்றம், ஆகிய ஐந்தையும் பக்குவப்படுத்தியவன், மெய்யான ஒழுக்கநெறியில் நின்றார், நெடுநாள் வாழ்வர்.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள

(அதிகாரம்:புணர்ச்சி மகிழ்தல் குறள் எண்:1101)

பொழிப்பு (மு வரதராசன்): கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாலாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.

மணக்குடவர் உரை: கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலனும் இவ்வொள்ளிய தொடியை யுடையாள் மாட்டே யுள.
இது பொறிகள் ஐந்தினுக்கும் ஒருகாலத்தே யின்பம் பயந்ததென்று புணர்ச்சியை வியந்து கூறியது.

பரிமேலழகர் உரை: (இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் சொல்லியது.) கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் -கண்ணால் கண்டும் செவியால் கேட்டும் நாவால் உண்டும் மூக்கால் மோந்தும் மெய்யால் தீண்டியும் அனுபவிக்கப்படும் ஐம்புலனும்; ஒண்டொடி கண்ணே உள - இவ்வொள்ளிய தொடியை உடையாள் கண்ணே உளவாயின.
(உம்மை, முற்று உம்மை, தேற்றேகாரம்: வேறிடத்து இன்மை விளக்கி நின்றது. வேறுவேறு காலங்களில் வேறு வேறு பொருள்களான் அனுபவிக்கப்படுவன ஒரு காலத்து இவள் கண்ணே அனுபவிக்கப்பட்டன என்பதாம். வடநூலார் இடக்கர்ப் பொருளவாகச் சொல்லிய புணர்ச்சித் தொழில்களும் ஈண்டு அடக்கிக் கூறப்பட்டன.)


அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு. குறள் 343: துறவு

மணக்குடவர் உரை:துறப்பார்க்குப் பொறிக ளைந்தினுக்கும் நுகர்ச்சியான ஐந்தினையுங் கொல்லுதல் வேண்டும்: அதற்காகத் தாம் விரும்பின எல்லாவற்றையும் ஒரு காலத்திலே விடுதல் வேண்டும்.

பரிமேலழகர் உரை:ஐந்தன் புலத்தை அடல் வேண்டும் - வீடு எய்துவார்க்குச் செவி முதலிய ஐம்பொறிகட்கு உரியவாய ஓசை முதலிய ஐம்புலன்களையும் கெடுத்தல் வேண்டும், வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும் ; - கெடுக்குங்கால் அவற்றை நுகர்தற்பொருட்டுத் தாம் படைத்த பொருள் முழுவதையும் ஒருங்கே விடுதல் வேண்டும். (புலம் என்றது, அவற்றை நுகர்தலை. அது மனத்தைத் துன்பத்தானும் பாவத்தானும் அன்றி வாராத பொருள்கள் மேலல்லது வீட்டு நெறியாகிய யோகஞானங்களில் செலுத்தாமையின், அதனை 'அடல் வேண்டும்' என்றும், அஃது அப்பொருள்கள் மேல் செல்லின் அந்நுகர்ச்சி விறகுபெற்ற தழல்போல் முறுகுவதல்லது அடப்படாமையின், 'வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும்' என்றும் கூறினார்.).

மு. வரதராசன் உரை: ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.

இரா சாரங்கபாணி உரை: கண்டும் கேட்டும் உண்டும் மோந்தும் தொட்டும் துய்க்கின்ற ஐம்புல இன்பங்களும் இந்த ஒளி பொருந்திய வளையல் அணிந்தவளிடத்தே உள்ளன.



ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. குறள் 354:மெய்யுணர்தல்

மணக்குடவர் உரை: மெய் முதலாகிய பொறிகளைந்தினானும் அறியப் படுவனவெல்லாம் அறிந்தவிடத்தும், அதனான் ஒருபயனுண்டாகாது; உண்மையை யறியும் அறிவிலாதார்க்கு.

பரிமேலழகர் உரை: ஐயுணர்வு எய்தியக்கண்ணும் பயம் இன்றே - சொல்லப்படுகின்ற புலன்கள் வேறுபாட்டான் ஐந்தாகிய உணர்வு அவற்றை விட்டுத் தம் வயத்ததாய வழியும், அதனால் பயனில்லையேயாம், மெய்யுணர்வு இல்லாதவர்க்கு - மெய்யினையுணர்தல் இல்லாதார்க்கு. (ஐந்தாகிய உணர்வு : மனம் , அஃது எய்துதலாவது, மடங்கி ஒரு தலைப்பட்டுத் தாரணைக்கண் நிற்றல். அங்ஙனம் நின்ற வழியும் வீடு பயவாமையின் 'பயம் இன்று' என்றார். சிறப்பு உம்மை எய்துதற்கு அருமை விளக்கி நின்றது. இவை இரண்டு பாட்டானும் மெய்யுணர்வு உடையார்க்கே வீடு உளது என மெய் உணர்வின் சிறப்புக் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை: மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.

மு. கருணாநிதி உரை: உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை: மனம் அடங்கக் கற்றவர் என்றாலும், உண்மையை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. 
குறள் 124:அடக்கமுடைமை

மணக்குடவர் உரை:தனது நிலையிற் கெடாதே யடங்கினவனது உயர்ச்சி மலையினும் மிகப் பெரிது. நிலை- வன்னாச்சிரம தன்மம்.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுநம்யும் ஏமாப் புடைத்து. 
குறள் 126: அடக்கமுடைமை

மணக்குடவர் உரை:ஒருபிறப்பிலே பொறிகளைந்தினையும் ஆமைபோல அடக்க வல்லவனாயின், அவனுக்கு அதுதானே எழுபிறப்பினுங் காவலாதலை யுடைத்து.

பரிமேலழகர் உரை:ஆமை போல் ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின் - ஆமைபோல, ஒருவன் ஒரு பிறப்பின்கண் ஐம்பொறிகளையும் அடக்கவல்லன் ஆயின்; எழுமையும் ஏமாப்பு உடைத்து - அவ் வன்மை அவனுக்கு எழுபிறப்பின் கண்ணும் அரண் ஆதலை உடைத்து. (ஆமை ஐந்து உறுப்பினையும் இடர் புகுதாமல் அடக்குமாறு போல இவனும் ஐம்பொறிகளையும் பாவம் புகுதாமல் அடக்க வேண்டும் என்பார் 'ஆமை போல்' என்றார். ஒருமைக்கண் செய்த வினையின் பயன் எழுமையும் தொடரும் என்பது இதனான் அறிக. இதனான் மெய்யடக்கம் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.

மு. கருணாநிதி உரை:உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை:ஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுக்குப் பிறவி தோறும் ஏழு பிறப்பிலும் - அரணாக இருந்து உதவும்.

நீத்தார் பெருமை.

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது. 
குறள் 24:

மணக்குடவர் உரை: அறிவாகிய தோட்டியானே பொறியாகிய யானையைந் தினையும் புலன்களிற் செல்லாமல் மீட்பவன் மேலாகிய விடத்தே யாதற்கு இவ்விடத்தேயிருப்பதொரு வித்து.

பரிமேலழகர் உரை: உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் - திண்மை என்னும் தோட்டியால் பொறிகள் ஆகிய யானை ஐந்தினையும் தத்தம் புலன்கள்மேல் செல்லாமல் காப்பான்; வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து - எல்லா நிலத்திலும் மிக்கது என்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்கு ஓர் வித்து ஆம். (இஃது ஏகதேச உருவகம். திண்மை ஈண்டு அறிவின் மேற்று. அந்நிலத்திற்சென்று முளைத்தலின், 'வித்து' என்றார். ஈண்டுப் பிறந்து இறந்து வரும் மகனல்லன் என்பதாம்.).

மு. வரதராசன் உரை: அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.

கலைஞர் உரை: உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.

சாலமன் பாப்பையா உரை: மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்.

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. 
குறள் 27:

மணக்குடவர் உரை:சுவை முதலாகக் கூறிய வைந்து புலன்களின் வகையை யாராய்வான் கண்ணதே யுலகம். எனவே, இவற்றின் காரியம் வேறொன்றாகத் தோன்றுமன்றே அதனை அவ்வாறு கூறுபடுத்துக் காணக் காரணந் தோற்றுமாதலால், காரியமான வுலகம் அறிவான் கண்ணதா மென்றவா றாயிற்று.

பரிமேலழகர் உரை:சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை - சுவையும், ஒளியும், ஊறும், ஓசையும், நாற்றமும் என்று சொல்லப்பட்ட தன் மாத்திரைகள் ஐந்தனது கூறுபாட்டையும்; தெரிவான்கட்டே உலகு - ஆராய்வான் அறிவின்கண்ணதே உலகம். (அவற்றின் கூறுபாடு ஆவன :பூதங்கட்கு முதல் ஆகிய அவைதாம் ஐந்தும், அவற்றின்கண் தோன்றிய அப்பூதங்கள் ஐந்தும், அவற்றின் கூறு ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆக இருபதும் ஆம். 'வகைதெரிவான் கட்டு' என உடம்பொடு புணர்த்ததனால், தெரிகின்ற புருடனும், அவன் தெரிதற் கருவிஆகிய மான் அகங்கார மனங்களும், அவற்றிற்கு முதல் ஆகிய மூலப்பகுதியும் பெற்றாம். தத்துவம் இருபத்தைந்தனையும் தெரிதல் ஆவது, மூலப்பகுதி ஒன்றில் தோன்றியது அன்மையின் பகுதியே ஆவதல்லது விகுதி ஆகாது எனவும், அதன்கண் தோன்றிய மானும், அதன்கண் தோன்றிய அகங்காரமும், அதன்கண் தோன்றிய தன் மாத்திரைகளும் ஆகிய ஏழும், தத்தமக்கு முதலாயதனை நோக்க விகுதியாதலும் , தங்கண் தோன்றுவனவற்றை நோக்கப் பகுதியாதலும் உடைய எனவும், அவற்றின்கண் தோன்றிய மனமும், ஞானேந்திரியங்களும், கன்மேந்திரியங்களும், பூதங்களும் ஆகிய பதினாறும் தங்கண் தோன்றுவன இன்மையின் விகுதியே ஆவதல்லது பகுதி ஆகா எனவும், புருடன், தான் ஒன்றில் தோன்றாமையானும் தன்கண் தோன்றுவன இன்மையானும் இரண்டும் அல்லன் எனவும், சாங்கிய நூலுள் ஓதியவாற்றான் ஆராய்தல். இவ் விருபத்தைந்துமல்லது உலகு எனப் பிறிதொன்று இல்லை என உலகினது உண்மை அறிதலின், அவன் அறிவின்கண்ண தாயிற்று. இவை நான்கு பாட்டானும் பெருமைக்கு ஏது ஐந்து அவித்தலும், யோகப் பயிற்சியும், தத்துவ உணர்வும் என்பது கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.

கலைஞர் உரை:ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்.

சாலமன் பாப்பையா உரை: சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

முதல் (4)
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை மதலை ஆம்
  சார்பு இலார்க்கு இல்லை நிலை - குறள் 45:9
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய் வினை
  ஊக்கார் அறிவுடையார் - குறள் 47:3
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
  வாய் நாடி வாய்ப்ப செயல் - குறள் 95:8
ஊடியவரை உணராமை வாடிய
  வள்ளி முதல் அரிந்து அற்று - குறள் 131:4
 அகர முதல எழுத்து எல்லாம் ஆதி
  பகவன் முதற்றே உலகு - குறள் 1:1
 மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
  வளி முதலா எண்ணிய மூன்று - குறள் 95:1


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard