என்றிங்ஙனங் கலியுக தருமத்தை நன்கு விளக்கிக் கூறிப் போந்த தென்றமிழ்க் கவியு நன்று நாண, அருளறி வாதிய உத்தமோத்தம குணங்களும், அத்தகைய ஒழுக்கமாதிய செயல்களும் ஒருங்கு குழுமிக் கரசரணாதி யவயவங்களைப் பொருந்தி ஒருருவெடுத்தாற் போன்றவர், பன்னூலாராய்ச்சி வல்லுநர், "ஆராய்ச்சி"யா மாரமிர்தம் ஓயாது பொழியும் அறிவுமாமேகம், "தேருந் தோறு மினிதாந் தமிழ்" என்ற வண்ணம் பழகுந் தோறும் பத்தியு மறிவும் பரத்தில் ஒத்திடும் பண்பினர்க் கெத்திறத்தானு மினிதாந் தன்மையர், வித்துவ சூளாமணி, சைவ சூளாமணியென் றின்னனவாகப் புனைந்துரைத்து மெய்யறிவாளர் போற்றும் ஸ்ரீலஸ்ரீ.திரு.மா.சாம்பசிவபிள்ளையவர்கள் என்னுஞ் சிவஞானச்செல்வப் பெரியார் "திருநான்மறைவிளக்க வாராய்ச்சி" எனப் பெயரிய ஒப்பின் மாபெருமை வாய்ந்த திப்பிய நூலொன்றியற்றி அச்சிடுவித்து, அதில் ஒரு புத்தகம் வெளிப்பாட்டின் முன்னர் எமக்கீந்து நோக்குமாறு செய்தார்கள். யாமும் நோக்குமாறு நோக்கி அறியுமாறறிந்த வழி, அஃதெமதுயிர் நண்பர் ஸ்ரீமத். பீ.ஏ.காந்திமதிநாத பிள்ளையவர்கள் குமாரர் ஸ்ரீமாந். அட்வக்கேட் சுப்பிரமணிய பிள்ளையவர்கள் பொறித்து வெளிப்படுத்திய "திருநான்மறை விளக்க" த்தை ஆயுமாற்றா லாயந்து மறுக்குமாற்றான் மறுத்த தொரு சைவக்களஞ்சிய நூலாக விருத்தலைக்கண்டு உள்ளத்து வகை வெள்ளத்து மூழ்கினேமாயினும், எமது ஆருயீர் நண்பர் புதல்வர் சைவசாத்திர முதலியவற்றிற்கும் ஆன்றோர் கொள்கைக்கும் முற்றும் மாறாக நவீனக் கொள்கைகளை மேற்கொண்டு ஆதாரம் அணுத்துணையுமின்றிப் புந்தி போனவாறே அந்தில் பொறிந்திருக்கும் விந்தையை ஒருகால் இருகாலன்றி முக்காலு நோக்கி எக்காலும் கழிபெருங் கவலைக் கடலுள் ஒருபாலழுந்தி அவர் அக்கையற வெய்தி மெய்மை யோர்ந்து உய்திறனாகச் சைவசமயாபி விருத்தி தமிழ் சமஸ்கிருத பாஷாபி விருத்தி செம்மையே செய்து இம்மை மறுமை வீடு என்னும் மும்மைப் பயனும் தவநனி துய்க்க வேண்டுமென்னும் வேணவாவே அக்காரணமென்று கடைப்பிடிக்க சமஸ்கிருதம் எமக்குமுரிய சிறந்த பாஷையென்பது முன்னர்த் தெரிக்குதுந் தேர்க.
இனி, "தம்பொரு ளென்பதும் மக்க ளவர் பொருள்- தந்தம் வினையான் வரும்" என்ப; ஆகலின், புதல்வராகிய ஸ்ரீமான். சுப்பிரமணியபிள்ளையவர்கள் செய்யு நல்வினைப் பயன்கள் தந்தையாராகிய ஸ்ரீமத். காந்திமதிநாதபிள்ளையவர்களைச் சென்றடைந்து அவர்கட்கு நன்மை பயக்குமாகலின், அவர் புதல்வர் பழி பாவங்கட்குரிய செயலை யொழித்துப் புகழ் புண்ணியங்கட் கேதுவாகிய சற்கருமங்களைச் செய்து உய்யுமாறு அருள்புரிவான் யாம் எம்மிறையை வேண்டுதல், அவர் சற்கருமபலன், எமது நண்பராகிய அவர் தந்தையார் பாற் சென்று சேர்ந்து அவர்க்கு நன்மை பயக்க வேண்டும் என்னுங் கருத்தால் நட்பின் மிகுதிப்பாடுபற்றிச் செய்யப்பட்டதென மற்றொரு பிரகாரம் காரணங்கோடலும் ஒன்று. என்னை? "நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி - ஒல்லும்வாயூன்று நிலை," "உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே - இடுக்கண் களைவதா நட்பு" என்றா ராகலின்.
இங்ஙனங் கொள்ளவே தந்தை மைந்தர் இருவரதும் நலமே பெரிது கருதிக் கண்ணுதல் பால் விண்ணப்பஞ் செய்தவாறு பெறப்பட்டமை காண்க.
இங்கே இடுக்கண் என்னையெனின், "திருநான்மறைவிளக்க"த்தில் சைவசாத்திரத்திற்குஞ் சான்றோர் கொள்கைக்கும் ஒத்ததாய் ஒரு கொள்கை தானுங் காணப்படாமையானும், அத்துணையேயன்றி அடியார் அருளாற் கூறிய வாக்கியங்களையு மருளாற் றிரித்தலானும், சில வாக்கியங்கட்கு உள்பொருளை விடுத்து இல்பொருளைத் தாமாகவே படைத்திட்டுக் கூறுதலானும், பிறவாற்றானும் அவ் "விளக்கம்" சிவபிரான் றிருவுள்ளத்திற்கு முரண்பட்டதொன்றேயாமாகலின், அதுபற்றி அவரால் நிகழும் துன்பமாம். அது நிகழாதவண்ணம் வேண்டிக்கோடல் அவர் மாட்டுநட்புடைய வெமக்கு மரபரம்; அதுபற்றி "வேண்டுவார் வேண்டுவதே" ஈயும் விமலன் அருளுமென்பது, மைந்தர் தந்தை இருவர்க்கு முள்ள ஒற்றுமை நயம்பற்றி மைந்தர்க்கு வருவது தந்தையார்க்கும் வருவதுபோலக் கூறப்பட்டது. அதுநிற்க.
இனி, "திருநான்மறை விளக்கம்" என்னுஞ் சொற் புணர்ப்பை நுணுகி யுற்று நோக்கி ஆராய்வார்க்கு, "தேவர் குறளுந் திருநான்மறை முடிவும்" என்னும் ஒளவையார் அருளிச்செய்த வெண்பாவுட் போந்த 'திருநான்மறை' என்பது எவ்வாற்றானும் இப்போதுள்ள வடமொழி வேதங்களையே உணர்த்தி நிற்கும் மதுகை மிகுதிப்பாட்டை நன்கிதி னுணர்ந்த "விளக்க" முடையார், அதுதான் தமது கொள்கைக்கு நேரே மாறாயிருத்தலை யுணர்ந்து, அதனைச் சகிக்க லாற்றாவுளத்தராய் அதற்குத் தமிழ் நான்மறை எனப் பொருள் விளக்கக் கருதி, அதன் பின்னர் "விளக்கம்" என்னும் ஒரு சொற் றலைப் பெய்து "திருநான்மறை விளக்கம்" என முகப்பெயரிட்டுக் கொண்டார் என்பத் தெற்றென விளங்கும். அவர் அங்ஙனம் விளக்கினும் அது விளக்கும் விளக்காகாது; என்னை? ஒளவையார் தமது காலத்து வழங்கிய தேவர்குறள் முதலியவற்றோடு வழங்காத நான்மறையைச் சேர்த்து ஒன்றாகவைத்தெண்ணி "எல்லாம் ஒரு வாசகமென்றுணர்" என அருளிச் செய்யாராகலி னென்பது.
இன்னும் வேதம் முன்னர்த் தமிழில் இல்லை என்பதும், 'விளக்க' முடையார் கொள்கையை உடம்பட்டு நால்வர் தமிழ் முனிவர் தமிழ் வேதஞ் செய்தாரெனக் கொள்ளினும் அது முதலூலாகாதென்பதும் முன்னர்க் கூறுதும்.
"தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப் பிழையாயிருத்தல்வேண்டும்" என்று கருதித் தன் மூக்கை அரிந்து கொண்டவன் சீலம் போல, பார்ப்பனரிடஹ்ட்துக் கொண்ட கோபத்தினால் நமது, சமயத்துக்குவரும் ஏதம் நோக்காது வடமொழி வேதாகமங்கள் சிவபிரானால் செய்தருளப்பட்டன வன்றென்று கூறுதல் எவ்வளவோரறியாமை! எந்த மதத்தராயினும் தம்மவர்மீது கொண்ட கோபத்தால் தம்மத நூலைக் கடவுளருளிச் செய்ததன்று, தம்மவர் கட்டின கட்டென்று கூற யாம் இதுகாறுங் கேட்டறிந்திலேம். "விளக்க" முடையாரே அங்ஙனம் கூறக் கேட்டறிந்தேம்; அதுவேயுமன்றிப் பத்திரிகையில் எழுதப் பார்த்தும் அறிந்தேம்!! "கண்டன மின்றியாங் கலியின் வண்ணமே"
இனி ஒளவையார் "திருநான்மறை" எனத் திருவை அடைபுணர்த்தோதியது அறம், பொருள், இன்பம், வீடு என்னும் புருடார்த்த நான்கினையும் அறிவிப்பன அவையெனத் தெரித்தற் கென்றுணர்க. என்னை? திரு என்பது பொருட் செல்வம் அருட்செல்வம் இரண்டையும் உணர்த்தும்; உணர்த்தவே, "ஒருமொழி யொழிதன் னினங்கொளற் குரித்தே" என்ப ஆகலின், இனம்பற்றி அறமும் இன்பமும் கொள்ளப்படும்; படவே, "அறம்பொரு ளின்பம்வீ டடைத னூற் பயனே" என்ற வண்ணம் இந்நான்கையும் அவை உணர்த்துமென்றவாறாயிற்று. இக்கருத்துப் பற்றியன்றே திருமூலநாயனார் திருமந்திரத்துள், "வேதத்தை விட்ட வறமில்லை வேதத்தி - லோதத் தருமற மெல்லா முளதர்க்க - வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற - வேதத்தை யோதியே வீடுபெற்றாரே" என்றருளிச் செய்ததூஉமென்க.
நான் மறை என்பதற்கு "நான்கு கூறுமாய் மறைந்த பொருளுமுடை" யதெனத் தொல்காப்பியவுரையாசிரியர் கூறினார். நான்கு கூறு:- இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்பன, இவை வியாசர் கலந்துகிடந்த வேதங்களைப் பகுத்தகாலத்துப் புனைந்த பெயர்கள், முற்பட்ட காலத்துப் பெயர் தைத்திரியமும் பெளடியமும் தலவகாரமும் சாமமுமாம்.
மறைந்த பொருளாவது;- ஆகமத்துள் வெளிப்படையாகக் கூறிய பதி, பசு, பாச, மென்னு முப்பொருளையும் "தத்துவமசி" என்னுமகா வாக்கியத்துட் புதைத்துக் கூறுதல், அஃதன்றி ஆகமத்துட் பதி சிவபெருமானே யென்று யாண்டுங் கிளந்தெடுத்துக் கூறுதல் போலாது, வேதத்துள் அன்னமய கோசம் பிரமம் என்றும், பின் பிராணமயகோசம் பிரமம் என்றும், பின் மனோமயகோசம் பிர்மம் என்றும், பின் விஞ்ஞான மயகோசம் பிரமம் என்றும், பின் ஆனந்தமயகோசம் பிர்மம் என்றும் பிரமன், விண்டு முதளியோர் பிரமம் என்றும், ஐபெரும்பூத முதலியனவும் பிறவும் பிரம்ம என்றும் முன்னர்க் கூறிப் பின்னர் இது பிரமமன்று இது பிரமமன்று என ஒவ்வொன்றாகப் பூர்வ பக்கத்தை மறுத்துச் சிவமே பிரமம் என நுண்ணிதாய்த் தெரித்தவினால் மறுத்தலலயுடையதெனவும் பொருள்படும் மறையென்னுஞ் சொல். இக்கருத்துப் பற்றியே "அல்லையீ தல்லையீதென மறைகளு மன்மைச் - சொல்லினாற் றுதித்திளைக்குமிச் சுந்தான்" எனவும், "இதுவென லருமையி னெழுதரு மொழிகளும் - அதுவல வெனுமெனி லெவருனை யறிபவர்." எனவும் முறையே பரஞ்சோதி மாமுனிவரும், குமரகுருபர சுவாமிகளும் கூறியருளிய தூ உமென்க.
பண்டை ஆசிரியர்கள் இம்மெய்ம்மை யுணர்ந்து கூறிய மெய்ப்பொருட்டுணிவுதேறும் அறிவின் மதுகையும் தவவாற்றலுமில்லாத அபக்குவ நவீனர் சில்லோர் தத்தமக்கு வேண்டியவாறே நவிந்து பொருந்தாப் பொருள் கொண்டு கடைபோகாதிடர்ப்படுவர். இது நோக்கியன்றே "உரைப்ப்பாருரைப்பவைக் கெல்லாம் யாமென் செய்வோம்" என்று கூறி அவர் நல்வினை யல்லது நோக்கித் தொல்லை நல்லாசிரியர் அவர் பொருட்டிரங்கியதூ உமென்க.
வேதோபநிடதங்களை உற்று நோக்கி உண்மை நடைபிடித்த பெரியார் அன்னவர் கூறும் பொருள் பொருளன்றெனத் தேர்ந்து புறக்கணித்தொதுக்குவரென்பதொருதலை.
இன்னும் வேதம் மறைந்த பொருளை யுடைத்தாயிருப்பினும் ஆகமக் கண்கொண்டு பார்ப்பார்க்கு உண்மைப் பொருள் நன்கு விளங்கும். அதுபோல, அதன் சாரமாகிய வேதாந்த சூத்திரப் பொருளும் மாசற்ற ஞானமுடையார்க்கே விளங்கும். ஏனையோர்க்கு எள்ளத்தனையும் விளங்காது. இக்கருத்துப் பற்றியன்றே. "மாசறு காட்சியர் - பார்த்துணர் பான்மையிற் பலவ கைப்படச் - சூத்திர மானவுஞ் சொற்று வைகினான்" என்றார் காந்தபுராண நூலுடையாரும்.
இங்ஙன மிருத்தலால் மறை என்பதற்கு நச்சினார்க்கினியரும் பரஞ்சோதிமாமுனிவரும் குமரகுருபரசுவாமிகளும் கொண்ட பொருள்களே பொருள்களெனப்பட்டு ஏனையோர் பொருள் பொருளன்றெனப்பட்டவாறு காண்க.
இனி, நான்மறை என்பது வடமொழி வேத்மோ! அன்றோ? என்னும் ஐயப்பாட்டின் கண் வடமொழி நான்மறையன்று; தமிழ்மொழி நான்மறையே என்னும் பூர்வபக்கத்தாரை நியாய வாயிலாக மறுக்கும் சித்தாந்தம் வருமாறு:-
தமிழ்மறை காணப்படாமையானும், முதற்சங்கத் திறுதியிற் கடல்கோட் பட்டதெனின், பண்டை நூலுரைகளுட் கடல்கோட்பட்டன இவையென நன்கறியுமாறு விளங்கக் கூறியிருத்தல்போலத் தமிழ்நான்மறையும் இருந்து கடல் கொள்ளப்பட்டதெனக் கூறப்படாமையானும், சங்கத்தார் ஆய்ந்த நூல்கள் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் நூல்களே யன்றிச் சமய நூலன்றென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்த கருத்தேயா மாகலானும், "உத்தரவேதம்" எனத்திருக்குறட்குப் பெயர் போந்தது வடமொழிப் பூர்வவேதநோக்கியேயாகலானும், வில்லுபுத்தூராழ்வார் "மறைநாலொ டைந்தென்று நிலைநிற்கவே மாபாரதஞ் சொன்னநாள்" எனக்கூறி, வடமொழிப் பாரதத்தை, வடமொழி நான்குவேதத்தோடு சேர்த்து ஐந்தாம் வேதமென நிலைநிற்க வியாசர் கூறினாரென நன்கு விளக்குதலானும், இங்ஙனமே உமாபதிசிவாசாரிய சுவாமிகளும் "இருக்குமுதன் மறைநான்கி னின்றுமுத லாக விதுவுமொரு தமிழ்வேத மைந்தாவ தென்று - கருத்திருத்தி" எனப் பெரிய புராணத்தை இருக்கு முதலிய வடமொழி வேத நான்கனோடு சேர்த்து (தேவார முதலியனவேயன்றி) இதுவும் ஐந்தாவது தமிழ்வேதமெனச் சேக்கிழார்புராணத்துக் கூறியிருத்தலானும், நாமகளும், உக்கிரப்பெருவழுதி முதலிய பற்பல மெய்ப்புலவர்களும் வடமொழி வேதத்தைக் குறித்துப் பல்வாற்றானும் திருவள்ளுவமாலையாகிய சிறப்புப்பாயிரத்துள் விளக்கி அவ்வேத முண்டென நிறீஇப் பேசிப் போந்தமையானும்,
ஆன்மாக்கள் வினைக்கீடாகப் படிமுறையாற் கீழ்க்கீழ்ச் சமயங்களின் நின்று மேன்மேற் சமயங்களில் வந்து, பின்னர்ப் பிரமசரிய முதலிய நான்காச்சிரம தருமங்களை இயற்றிப் பின்னர்க் கலைகளை யறிந்து, பின்னர்ப் புராணங்களைப் படித்துப், பின் வேதங்களை உணர்ந்து, பின் உபநிடதத்தை நன்றாகத் தெளிந்து, பிறவிதோறு மிவ்வாறு மேற்பட்டுவந்தால் இப்பக்குவ முதிர்ச்சியால் சைவக்கூற்றின் முடிபாகிய சித்தாந்த சைவத்தை யடையவர் எனச் சிவஞான சித்தியாருட் சோபான முறை கூறும் வழி அருங்கலை ஆரணம் புராணம் உபநிடத மெல்லாம் அதற்கு இன்றியமையாதனவாகக் கூறப்படுதலால் அவை என்று மிருத்தல் வேண்டு மாகலானும், அதன்கண் தேய விசேடங் கூறுங்காலும் "நான்மறை பயிலா நாட்டில் விரவுத லொழிந்து தோன்றன் மிக்க புண்ணியந்தானாகும்" எனக் கூறலான், அவ்வேதம் என்றும் உள்ளதென்பது நன்று பெறப்படலானும், சிவபாதவிருதயராகிய தந்தையார் வேள்வி நடாத்துதற்குப் பொருள் வேண்டும் என்று கேட்ட போது திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் சிவபிரானிடத்துப் பொற்கிழிபெற்று,
எனத் திருவாய் மலர்ந்தருளிக் கொடுத்தமையானும், தம்மைத் தாமே தேவாரத்துள் பல இடங்களிலும் "முத்தமிழ் வல்லவன்" 'நான்மறை வல்லவன்" என்பன வாதியாகத் தமிழையும் சமஸ்கிருத வேதத்தையும் வேறு பிரித்துச் சிறப்பித்துக் கூறியிருத்தலானும், சுந்தரமூர்த்திநாயனாரும் "நாளு - ஞாலந்தான் பரவப்படுகின்ற நான்மறை யங்கமோதிய நாவன்" எனத் தம்மைத் தாமே சிறப்பித்துப் பாடியதனானும், அதுவேயுமன்றி "அந்தணர் வேள்வியு மருமறைத் துழனியுஞ் - செந் தமிழ்க் கீதமுஞ் சீரினால் வளர்தர" எனவும், "ஆகம சீலர்க் கருணல்கும் பெம்மானே தண்டமிழ் நூற்புல வாணர்க்கோரமமானே" எனவும், சமஸ்கிருத வேதாகமங்களையும் தமிழையும் வேறு பிரித்து விளக்கிக் கூறினமையானும்,
"வேண்டிய கல்வி யாண்டுமுன் றிறவாது" என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்துள் மூன்று என்றது அது என்றும் நீ என்றும் ஆனாய் என்றும் கூறும் மூன்று பதங்களையே யாகலின், அத் "தத்துவமசி" மகாவாக்கியம் வடமொழி வேதத்தின் கண்ண தாகலானும்,
என்றிங்ஙனம் மந்திரத்துள் மாமூலர் கூறியிருளினமையான் அவர் அவற்றைத் தமிழிற் கூறியருள வந்தார் என்பது பெறப்படுதலானும், அவ்வண்ணமே பெரியபுராணம் சான்று பகரலானும்,
"மாமலர்த் தெரியலான் மணிமிடற் றிடைக்கி டந்த - சாமகீத மற்றுமொன்று சாமி நன்கு பாடினான்" எனவும், "மறையார் வேள்வி மந்திரச் செந்தீ" எனவும் "நரம்புறு தெள்வினி நவின்ற நான்மறை - வரம்பெறு நெறியவர்" எனவும், "வல்ல தெனை யென்னமறை வல்லவன்" எனவும், சீவகசிந்தாமணிக்கண்ணும்,
உருத்திரபசுபதிநாயனார் செபித்த உருத்திரமும் வடமொழி வேதத்தின் கண்ணதாகலானும், பரமசிவனே பரம்பொருள் என்பது தேற்ற அரதத்தாசாரியர் கூறிய இருபத்திரண்டேதுக்களுள்ளும் முதற்கண்வைத் தெண்ணப்பட்ட "உயர்காயத்திரிகுரிய பொருளாதலின்" என்னுங் காயத்திரி மந்திரமும் அதன் கண்ணதாகலானும், அவர் செய்த "சதுர் வேத தாற்பரிய சங்கிரகமும்" இப்போதுள்ள அவ்வேதங்களின் தாற்பரியமே யாகலானும், அச் சூத்திரத்திற்குப் பாடியஞ் செய்தாரெல்லாம் தத்தங் கோளை நிறுவ இப்போதுள்ள வேதங்களையும், உபநிடதங்களையும், புராணேதிகாச முதலியவற்றையுமே பிரமாணமாகக் கொண்டமையானும், அப்பதீக்கிதரும் சிவார்க்கமணி தீபிகைக்கு அவற்றையே பிரமாணமாகக் கோடலானும், அவர்க்குப் பிற்காலத் தான்றோரும் அவற்றை உடம்பட்டமையானும்,
சைமினிமுனிவர் தாஞ் சிவதூடண பரிகாரமாக இயற்றிய தோத்திரம் முதன் மூன்று பாதமும் அவர்வாக்காகவும் நான்காம் பாதம் இப்போதுள்ள வேதமாகவும் நிலவி "வேதபாதஸ்தவம்" என்னும் காரணப்பெயர் பெற்றிருத்தலானும்,
நான்மறை:- தொல்காப்பியம், இறையனாராகப்பொருள், திருக்குறள், தேவாரம், சிவஞான போதம் என்பனவே; வடமொழி வேத மன்று; என்று கூறினார் ஒருவர். மற்றொருவர் இக்கொள்கையை உடன்படாமல் தமிழ்வேதம் ஆதியில் வேறிருந்தது; அது கடலாற் கொள்ளப்பட்ட தென்றார். ஆதியில் தமிழ் வேத மிருந்தது மெய்யானால் இருவரும் ஒரு பெயரையே கூறல் வேண்டும். அங்ஙனமில்லாமையால் தத்தமனம் போனவாறு கூறத் தொடங்கினர். முன்னவர் திருக்குறள் திருமுறைகளைத் தமிழ் வேதம் என்றல் சரியே; "மூவா நான்மறை" என்புழி நான்மறை அவற்றைக் குறிக்கும் என்பது பிழை. "மூவாநான்மறை என்னுஞ் சொற்றொடர் ஆராய்ச்சி" என்னு நூலினால் அது நியாய வாயிலாக மறுக்கப்பட்டது. தொல்காப்பியம் இறையனாராகப்பொருள் சிவஞானபோதம் என்பன நான்மறை என்றல் அவர் கற்பனையே! என்னை? அங்ஙனம் தொல்லாரிசியர் கூறாமையானும், முறையே அவை வெவ்வேறு பெயர் பெற்று, பெற்றதற்கேற்ற பொருளை விளக்குதலானுமென்க. இவ்விருவரும் தம்முண் முரணிக் கூறினமையே ஆதியில் தமிழ் நான்மறை இல்லை யென்பதைக் காதலாமலகம்போல விளங்க விளக்குதலானும்.
ஸ்ரீ தயானந்தசரஸ்வதி என்னும் மகாபண்டிதரும் சைவாகம வுணர்ச்சி யின்மையால் சைவத்துக்கு மாறுபட்டுச் சில கூறினும், தமது "சத்தியார்த்தப்பிரகாச"த்தில் "அறிவுக் களஞ்சியமாயும், தர்மஸ்தானமாயும் விளங்கும் நான்கு வேதங்களையும் தேவவாக்கெனக் கொள்ளுகின்றேன்; இவைகள் சம்ஹிதையும் மந்திர பாகமுமேயாகும்; பிழையின்றி அவைகள் தமக்குத் தாமே பிரமாணமாக இருக்கின்றன. எனவே, அவைகளை நிறுவ வேறொருநூல் வேண்டியதின்று; சூரியன் சுயம்பிரகாசத்தால் தன்குணங்களையும் பிரபஞ்சத்திலுள்ள சகல பொருள்களின் குணங்களையும் விளக்குதல் போலவே வேதங்களும், சிட்சை, வியாகரணம், சந்தோவிசிதம், நிருத்தம், சோதிடம், கற்பம் என வேதாங்கங்கள் ஆறு, ஆயுர்வேதம், அர்த்தவேதம், தநுர்வேதம், காந்தருவவேதம் என உபவேதங்கள் நான்கு, சாகைகள் ஆயிரத்து நூற்றிருபத்தேழு. இவைகளெல்லாவற்றையும் துணைப்பிரமாணங்களாகக் கருதுகின்றேன்." எனக் கிளந்தெடுத்துக் கூறலானும்,
நால்வர் தமிழ் முனிவர் தமிழ் நான்மறை செய்தனரல்லர் என்பது பசுமரத் தாணிபோற் பதித்து நாட்டப்பட்டது. பிடுங்கவல்லம் என்பார் இழுத்துப்பிடுங்கிப் பார்க்கட்ட்டும் பார்ப்பேம்.
இங்கே கூறிய வாற்றால் தமிழ்மறை காணப்படாமையால் காட்சி யள்வையாலும், அவிநாபாவமாகிய ஏதுக்காணைமையால் வழியளவையாலும், நூலுரைகளுட் கூறப்படாமையால் உரையளவையாலும் அறியப்படாமையால் ஸ்ரீமாந், சுப்பிரமணிய பிள்ளையவர்கள் அகவெளியிற்றேற்றுவித்த தமிழ் நான்மறை புற வெளித்தாமரையும் புன்முயற் கோடும் ஆமைமயிர்க் கம்பலமும் போல என்றுஞ் சூனியமேயாமென்பது வெளிப்படையாயவாறு காண்க.
இங்ஙன மிருந்தவாற்றான், வடமொழிக்கணும்ள்ள வேதாகமங்களே ஆன்மாக்கள் பொருட்டுச் சிருட்டியாரம்ப காலத்தில் கிவபிரானால் திருவாய்மலர்ந் தருளப்பட்ட முதனூல்களென்பது சித்தித்தவறு காண்க.
இனிப் பிறிதோராற்றா னதன்கட்படு மாராய்ச்சி வருமாறு--- தொல்காப்பியப் பாயிரத்தில், " நான்மறை முற்றிய---அதங்கோட்டாசான்" என்புழி நான்மறை என்றது வடமொழி வேதமோ அன்றே என்னும் ஐயப்பாட்டின்கண், "தமிழ் இயல் நூலாகிய தொல்காப்பியத்தை ஆய்ந்து அது தக்கநூலென்று முடிவு கட்டுதற்கு நான்மறைப் பயிற்சி வேண்டியதாக யூகிக்கப்படுகின்றது. ஆதலால் அந் நான்மறை வடமொழி நூல்களென்று கருதப்படா. தமிழ் நூல்களாமென்பது தெளிவு" என்னும் பூர்வ பக்கத்தார் கொள்கையை நியாயவாயிலாக மறுக்கின்றாம்!
தமிழ் இயனூலாகிய தொல்காப்பியத்துள் வடமொழி நியாயங்களும் அம்மொழி வேத விஷயங்களும் விரவிக் கூறப்படுதலால் அவற்றைக் கற்றார்க்கன்றி மற்றார்க்கும் அத்தகைய நூலை இயற்றலும், அதனைக் கேட்டு இது தக்கதென முடிவு காண்டலும் சாலாவாகலான், அதங்கோட்டாசானும் தொல்காப்பியரும் அவைகளைக் கற்றவர் என்பதை நன்கிதி னுணர்ந்து தற்கு "நான்மறை முற்றிய" என்றும் "ஐந்திர நிறைந்த" என்றும் விசேடித்தார் பனம்பாரனார். அத்துணையேயன்றி வேறன்று.
இக்கருத்தை ஐந்திரநிறைந்த தொல்காப்பியன் என்றமையே தெளிய உணர்த்தும்; என்னை? அவ்வியல்பினர் வடமொழி வழக்கும் அம்மொழி வேத விடயங்களும் அதனுட் கூறா தொழியாராகலான். வடமொழி நியாயங்களும் அதனுட் போந்தமையானன்றோ! இலக்கணக் கொத்தாசிரியரும் வடமொழி நியாயங்கள் "தொல்காப்பியந் திருவள்ளுவர் கோவைரார் - மூன்றிலு முழங்கு மாண்டினு மிலையேல் - வடமொழி வெளி பெற வழங்கும்" என்றார்.
அஃதற்றாயின் "நான்மறை முற்றிய வதங்கோட்டாசான்" என்றதனால் அவர் வியாகரணங் கற்றிலர் என்பதும், "ஐந்திர நிறைந்த தொல்காப்பியன்" என்றதனால் அவர் வேத முணர்ந்திலர் என்பதும் பெறப்படலான், இருவரும் முறையே தொல்காப்பியங் கேட்டலும் அதனை இயற்றலும் சாலாதாலெனின், அற்றன்று; "எழுத்தறியத் தீரு மிழிதகைமை தீர்ந்தான் - மொழித்திறத்தின் முட்டறுப்பானாகும் - மொழித்திறத்தின் - முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து - சுட்டறுத்து வீடு பெறும்" என்ப ஆகலின், முதனூற் பொருளுணர்தற்கு வியாகரணம் கருவி யெனப்படுதலான், 'நான்மறை முற்றிய' எனவே, அவற்றை முற்றக் கற்றற்குக் கருவியாகிய இலக்கணமுங் கற்றவர் என்பதூஉம், 'ஐந்திர நிறைந்த' எனவே, அது நிறையக் கற்றல் முதனூல் நிறையக் கற்றற்கேயாகலான் நான்மறை கற்றவர் என்பதூஉம் போதாலான் சாலாமை யாண்டையதென் றொழிக. அற்றன்று; இலக்கணங் கற்றன் மாத்திரையி னமைந்து முதனூல் கல்லாதாரையுங் காண்கின்ற காட்சிப் பிரமாண முண்மையால் தொல்காப்பியரும் 'ஐந்திர நிறைந்து' அவ்வளவி னமைந்தா ரென்னாமோ வெனின், என்னாம்; என்னை? தொல்காப்பியத்துப் பொருளதிகாரத்துள் வேத விஷயம் மிகவும் விரவிக் கூறப்பட்டுக் கிடத்தலா னென்க.
இனி, அகத்திய முணர்ந்து தமிழில் உலக வழக்குஞ் செய்யுள் வழக்கும் ஆய்ந்ததுபோல, ஐந்திர முணர்ந்தபடியால் சமஸ்கிருதத்தில் உலக மொழியும் வேதமொழியும் ஆய்ந்தமை தானே பெறப்படுதலுங் காண்க. வடமொழியில் செய்யுள் வழக்கு வேதம் என்பது மாபாடியம் வல்லார் வாய்க் கேட்டுணர்க.
இங்கே கூறிய நியாயங்களினால் "அதங்கோட்டாசான் முற்றிய நான்மறை" யும் வடமொழி நான்மறையே என்பது வாயுமுகத் தழியாத வச்சிரமலைபோல நிறுவப்பட்டமை காண்க.
இனி முதனூலாகிய வேதாகமங்கள் சிருட்டியாரம்பகாலத்தில் சிவபிரானால் திருவாய் மலர்ந்தருளப்படாவாயின், அவை முதனூல்க ளெனப்படா! என்னை? "வினையி னீங்கி விளங்கிய வறிவின் - முனைவன் கண்டது முதனூலாகும்" என்பவாகலான். அதுவேயுமன்றிக் கதியடைபவரு மின்றாய்ச் சிவபிரான் செய்த சிருட்டியும் பயப்பாடிலதாய் முடிந்து,
இனி, "முனைவனாற் செய்யப்படுவதோர் நூல் இல்லை யென்பார், அவன் வழித் தோன்றிய நல்லுணர் வுடையார் அவன் பாற் பொருள்கேட்டு முதனூல் செய்தாரெனவும், அம்முனைவன் முன்னர் ஆகமத்துப் பிறந்ததோர் மொழியைப்பற்றி அனைத்துப் பொருளுங்கண்டு பின்னர் அவற்றவற்றுக்கு நூல் செய்தார் அவரெனவும், அவ்வாகமத்தினையே பிற்காலத்தாரும் ஒழுக்கம் வேறுபடுந் தோறும் வேறுபடுத்து வழிநூலுஞ் சார்பு நூலுமெனப் பலவுஞ் செய்தாரெனவுங் கூறுப. அவை எவ்வாற்றானும் முற்ற உணர்ந்தோர் செய்த நூலன்மையின் அவை தேறப்படா. அல்லதூஉம் அவை தமிழ் நூலன்மையின் ஈண்டு ஆராய்ச்சியில வென்பது.
முனைவனால் என்பது முதல் ஆராய்ச்சியிலவென்பது வரை 'வினையினீங்கி' என்னுஞ் சூத்திரவுரையின் ஓர் பகுதி. இதன் முதற்பகுதி கொண்டே "நால்வர் தமிழ்மக்கள் தமிழில் வேதஞ் செய்தற்குமுன் வேதமில்லை" என்று ஸ்ரீமாந். அட்வக்கேட் சுப்பிரமணிய பிள்ளையவர்கள் "திருநான்மறை விளக்கத்" துட் கூற நேர்ந்தது. அக்கூற்றைப் பிற்பாகம் முற்றும் மறுத்தொழித்தமையை உணரவில்லையா! உணர்ந்து வைத்தும் பிறர் இதனை எவ்வாறு காண்பார்கள் என்னுங் கருத்தினாலோ மறுக்கப்பட்ட பூருவபக்கத்தைச் சித்தாந்தமாகக் கொண்டு கூறி "அவ்வளவிலவன் மகிழுக" என்னு நியாய நெறி பற்றி மகிழ்ந்தார். அதுவேயுமன்றிப் "பொய்படு மொன்றோ புனைபுணுங் கையறியாப் - பேதை வினைமேற்கொளின்" என்னும் பொய்யா மொழிக் கெய்து மிலக்கியமாய் அறிஞர் அறிவாம் புனைபூண்டு கொண்டமை உற்றுநோக்கு மொளியுடையார் தெற்றெனவறிவர்.
மேற்கூறிப்போந்த பேராசிரியர் உரையின் ஈற்றில் 'அல்லதூஉம் அவை தமிழ் நூலன்மையின் ஈண்டு ஆராய்ச்சியில்வென்பது' என்று கூறியிருத்தலால் அம்முதனூல் வடமொழியிலுள்ள தென்பதொரு தலையாதலின் தமிழில் முதனூல் செய்யப்பட்ட தென்னும் மதம் நிலையுதலின்றி அழிந்தொழிந்தது. இதனாலே ஆதியிலே முதனூலெனப்படுவனவெல்லாம் முதல்வனால் வடமொழிக்க ணியற்றப்பட்டன என்பதூஉம், "களவியற்" றமிழ்நூல் ஒன்றுமே முதல்வன் இடைக்காலத்தில் அருளிச்செய்த தமிழிலக்கண முதனூல் என்பதூஉம் பெற்றாம். "ஒன்றின முடித்த றன்னின முடித்தல்" என்பதனால் வேதாகமங்கட்கு மிஃதொக்கும்; ஆயினும் பேராசிரியர்தாமே கிளந்து காட்டியதும் விளங்கக் காட்டுது முன்னர்.
இன்னும், "தமிழ் நூலுள்ளும் தமது மதத்திற்கேற்பன முதனூல் உளவென்று இக்காலத்துச் செய்துகாட்டினும் அவை முற்காலத் திலவென்பது முற்கூறிய வகையான் அறியப்படும்" என்ற பேராசிரியர் கூற்றினாலே நூல்செய்யாது கூறிக் காட்டினும் அவை முற்காலத்திலவென்பது தானே போதரும்.
இன்னும், "தாமே தலைவராவாரும், அத்தலைவரை வழிபட்டுத் தலைவராயினாரும் பலராகலின், தாமே தலைவராயினார் நூல் செய்யின் முதனூலாவதெனின், அற்றன்று; தாமே தலைவராயினோர் முற்காலத்துத் தமிழ்நூல் செய்திலர்" என்றதனாலும் வடமொழியிலேயே முதனூல் செய்தனர் என்பது இனிது விளங்கும்.
இன்னும், "தொகுத்தல் விரித்தல்" என்னுஞ் சூத்திரவுரைக்கண் "வேதப் பொருண்மையும் பற்றித் தமிழ்ப்படுக்குங்கால் அவற்றிற்கு மிதுவே இலக்கண மென்றற்கு மொழி பெயர்த்தலையும் இவற்றுக்கட் கூறினாரென்பது." என்றதனானே முதல்வனாற் செய்யப்பட்ட வேதாகமங்கள் வடமொழிக் கண்ணதன்றித் தென்மொழிக் கண்ணதன் றென்பது பசுமரத்தாணிபோற் பதிந்து நாட்டப்பட்டது. ஆகலானும் நால்வர் தமிழ்மக்கள் தமிழில் வேதஞ் செய்தார் என்பதூஉம், அவர்கள் செய்தற்கு முன் வேதம் இல்லையென்பதூஉம் கற்பனைக் கூற்றாயவாறு காண்க.
பொருளெனப் பொதுப்படக் கூறவே, இவற்றின் பகுதியவாகிய முதல் கரு உரியும், காட்சிப்பொருளும், கருத்துப பொருளும், அவற்றின் பகுதியவாகிய இயங்குதிணையும் நிலைத்திணையும், பிறவும் பொருளாம்.
அகத்திணைக்கண் இன்பமும், புறத்திணைக்கண் ஒழிந்த மூன்று பொருளு முணர்த்துப.
[இந்நான்கும் வேதத்துட் கூறப்பட்டன.]
இது வழக்குநூலாதலின், பெரும்பான்மையும் நால்வகை வருணத்தார்க்கு முரிய இல்லறம் உணர்த்திப் பின் துறவறம் சிறுபான்மை கூறுப, அப்பொருள்கள் இவ்வதிலாரத்துட் காண்க.
பிரிதனிமித்தங் கூறவே, இன்பநிலை கூறி, "காமஞ்சான்ற" என்னுங் கற்பியற் சூத்திரத்தால் துறவறங் கூறினார், வெட்சி முதலாகவாகை யீறாக அறனும் பொருளும் பயக்கும் அரசியல் கூறி, அவற்றது நிலையின்மை காஞ்சியுட் கூறவே, அறனும் பொருளும் அவற்றது நிலையின்மையுங் கூறினார். "அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்" என்னுஞ் சூத்திரத்தான் இல்லறமுந் துறவறமுங் கூறினார், இந்நிலையாமையானும் இவற்றானும் வீட்டிற்குக் காரணங் கூறினார்.
இங்ஙனம் கூறிய நூலுரையாசிரியர்கள் கருத்தை நோக்காத "திருநான்மறைவிளக்க" முடையார்" நூலே கரக முக்கோன் மமையே" என்னும் இச்சூத்திரத்துட் போந்த நூல் என்னும் பதத்திற்கு ஏடு என்று தம்மனம் போனவாறு பொருந்தாப் பொருள் கொண்டார். அதனை விள்க்குதும்:-
நான்கு வருணத்தில்லறத்தார்க்கும் இவை இவை உரியனவென் றுணர்த்தப் போந்த ஆசிரியர், முதற்கண்வைத் தெண்ணப்படும் அந்தணர்க்குரியன இவை யென்று மேலைச் சூத்திரத்தாற் கூறினார். நூல் என்பது "பூணூல்" என முன்பின் முரணாமற் பொருள் கொண்டார் அவ்வாசிரியர். அதற்கு அதுவே பொருளாமாறு ஏனை மூன்று வருணத்தார்க்கும் உரியன இவையென்று கூறிய பிற்சூத்திரங்களாலும் இனிது விளங்கும்.
'விளக்க' முடையார்க்குச் சில அந்தணர்மீது தோன்றிய சீற்றம் அவர் வருக்கமெல்லாந் தாவினமையின், அதுபற்றி எமதிறைவன் நமர்க்கு முரித்தெனத்தந்த வடமொழியினும், அம்மொழி வேதாகமங்களினுந் தாவி அவற்றை வெறுக்கசெய் கொண்ட தமிழிலுள்ள தேவார முதலிய சீரிய தெய்வ நூல்களையும் திரிக்கவும் அவற்றிற்குத்திரிவுப்பொருள் கொள்ளவுஞ் செய்துவிட்டது! அதுமட்டோ! அவர் தம்மால் தமிழில் வேதாகமங்களைச் சிருட்டிக்கவுஞ் செய்துவிட்டது! அது மட்டோ! அவற்றைத் திதிக்க மதுகையிலராகவுஞ் செய்து விட்டது! அதுமட்டோ! சங்காரத்துட் படுத்தியும்விட்டது. நன்கு விளக்குதற் பொருட்டுச் சங்காரம் வெளிப்படையாகவும் கூறப்பட்டது.
என்ற வண்ணம் அந்தணர்மீது கோபம் உண்டானால் நமர்க்கு முரித்தாய வடமொழியிலும் வடமொழி வேதாகமங்களிலும் வெறுப்படைதல் நீதியா? வேதத்தைச் சுரத்தோடோதுதன் மாத்திரைக்கே நமக்கதிகாரமின்று. அதனால் நமக்குக் குறைவியாது மின்று. அதனைப் பார்க்கவும் பொருளைக் கேட்கவும் அதனை உணரவும் அதிகாரமுண்டு. முதன் மூன்று வருணத்துட் பட்டாரும் ஒழுக்கந் தவறின் அவரும் வேதம் ஓதன் முதலியன செய்தற்கு அதிகாரிகளல்லர். அது "மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான் - பிறப்பொழுக்கங் குன்றக்கெடும்" என்றதனானு நன்கறியலாம். அதுபோல வேளாளருள்ளும் ஒழுக்க மில்லாதார் ஒத்தை நோக்கவும், பொருளைக் கேட்கவும், அதனை யுணரவும் அதிகாரிகளல்லர் என்றால் அதனால் நமக்கு ஒத்துரித்தன் றென்பது கருத்தன்று.
முதல் வருணத்துப் பிறந்தாரும் உபவீதந் தரித்தபின்னரன்றி வேதமோதுதற் கதிகாரிகளல்லர் என் விதிக்கப்பட்டிருத்தல்போல, ஆகம மோதுதற்கண்ணும் சிவதீக்கையின்றி அவர்க்கு மதிலாரமின்று என்ற விதியினால் அவர்க்குக் குறை நேராததுபோலச் சுரத்தோ டோதுதற்கு மாத்திரம் வேளாளர்க் கதிகார மின்றென்பதனால் குறைநேராது. வருணத்திற்கும், ஆச்சிரமத்திற்கும், ஒழுக்கத்திற்கும் தக்கவாறு சிவபெருமானால் வேதாகமங்களுள் விதிக்கப்பட்டனவும் விலக்கப்பட்டனவும் எவ்வாற்றானும் எவ்வருணத்தார்க்குங் குறைவாகாது; என்னை? இறைவன் ஆன்மாக்களுடைய கன்மத்திற்கும் பரிபாகத்திற்கும் ஏற்பக்கொண்ட திருவுளப் பாங்கவையாகலான்.
இனி, சிவதருமோத்தாத்திலே "சிவஞானதானவிய" லிலே,
"பருவ முற்றிய பாவக மோர்ந்துபின்
உருகியோதுக வோதகு முண்மையை
மருவி வாய்வரு பாடையின் வல்லவர்க்
கரிய வாரியத் தானு மறைகவே"
எனக் கூறப்படுதலால் ஆரியமும் நமக்குரித் தென்பது கண்டு கொள்க. இன்னும், இலிங்காபட்டிய முதலிய வடநூல்கள் இயற்றினோர் சூத்திரரும், அகத்திய முதலிய தமிழ் நூல்கள் இயற்றினோர் அந்தணருமம்; ஆகலானும் இருதிறத்தார்க்கு மிருபாடையு முரித்தாயவாறு கண்டு கொள்க.
தற்காலத்து, இந்தியாவிலும் இலங்கையிலும் இங்கிலீஷ் படித்திருப்பவர்கள் அப்பாடைக்கு உரிமையில்லாதவர்கள் என்று யார்தாங் கூறுவர்? இவ்விரு தேயங்களினும் வந்து தமிழ்கற்று விற்பன்னரான் போப்பு, பேஷ்வல் முதலான் பாதிரிமார்களைத் தமிழிற்கு உரிமையில்லாதவர் என் யாவர்தாஞ்சொல்லுவர்!
தமிழிற் கெல்லை அது வழக்கமில் காலத்து மறுபடுதல், "நெடியோன் குன்றமுந் தொடியோள் பெளவமும்-தமிழ் வரம்படுத்த தண்பனனாடு" என்னுஞ் சிலப்பதிகார வேனிற் காதிச் செய்யுளுரையானும் பெறுதும்; அங்ங்அன்மே தமிழ்ப் பாடை கற்று அதன் வழக்கறியாரையும் தமிழ்க் குரியரல்லர் என்றும், சமஸ்கிருதங் கற்று அதன் வழக்கறியாரை அதற்குரியரல்லர் என்றும், அவற்றைக் கற்பாரை அவற்றிற்குரிய ரென்றும் கூறுதல் மரபேயாமென்க.
தமிழ்ச்சொற் பொருள் கோடற்குக் கருவி இவை! வடசொற் பொருள் கோடற்குக் கருவி இவை! யென அவ்வப் பாடைவல்ல ஆசிரியர் மாட்டு வழிபடுமுறையின் வைத்து வழி பட்டுக் கற்றாயினும் கேட்டாயினும் அறியாதார்கூறும் அவலப் பொருள், அங்ங்அனங் கற்றுங் கேட்டும் வல்ல அறிஞர் அவைக் களத் தேறாதென்ப தொருதலையாகத் தேறுக.
"சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
கானக நாடன் சுனை"
இப்புலனெறிவழக்குட் போந்த பதங்கட்கு அவை நின்ற நெறியே நெறியாகப் பொருள் கொண்டால் அப் பொருள் பொருத்தமுறு பொருளாகுமா? இலக்கண நூலை முறைபிறழாது நல்லாசிரியர் மாட்டுக் கற்றுவல்லார் அங்ங்அனம் பொருள் கொள்வாரா? கொள்ளார்! இலக்கண மறியாதார் பொருள்கோண்முறை யறியா ராகலான், அவன் பொருந்தாப் பொருள் கொள்வர்: அது இலக்கணப்புலவர் முன் நிலையுதலின்றிக் கெட்டொழியு மென்னுங் கருத்துப்பற்றியே "எழுத்தறியார் கல்விப் பெருக்க மனைத்தும்- எழுத்தறிவார்க் காணினிலையாம்" என்றார் அறிவானார்ற பெரியாரும்.
இங்ஙனம் வருவனவற்றிற்குப் பொருத்தப் பொருள் கோடற்கன்றே "ஏற்ற பொருளுக் கிசையு மொழிகளை - மாற்றியோரடியுள் வழங்கன் மொழிமாற்றே" எனவும், " அகன்று பொருள் கிடப்பினு மணுடிய நிலையினு - மியன்றுபொருண் முடியத் தந்தன ருணர்த்தன் - மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின்" என்வும் இலக்கணச் சூத்திரங்க லெழுந்தனவென்க.
மற்றென்று :- அண்னை, தமுதி, அவாய்நிலை முதலியன பற்றியே ஒரு நூற்குப் பொருள் கோடல் வேண்டும். அங்ங்அன்ங் லொள்ளாக்கால் முன்னொடு பின் மலைவாய்ப் பயப்பாடின்றி அழிந்தொழிதலோடமையாது அக்கொள்லார்க்குப் பெரும் பேதையார் என்னும் பெயருஞ் சூட்டி யொழியு மென்க.
"நூலே கரக முக்கோன் மணையே
ஆயுங் காலை யந்தணர்க் குரிய"
என்புழி, நூல் என்னும் பதத்திற்கு "ஏடு" எனப் பொருள் கொண்டது அண்மை பற்றியா? தகுதிபற்றியா? அவாய்நிலைபற்றியா? அதிகாரம்பற்றியா? சூத்திரம்பற்றியா? யாதுமின்று, இவ்வாறு பொருள் கோண்முறை யறியாது ஏடு என்று பொருள் கொண்டது,
என்னும் வெண்பாவிற் கிலக்கியமாக்கிவிட்டது. அது கிடக்க,
இனி, "அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்" என்புழி அறுவகைப்பட்ட என்பதனைப் பக்கம் என்பதனோடு அன்னு வயித்துப் பொருள் கொள்ளாவிடின் நூலாசிரியர் கோத்து வைத்த பொருட்கோவை குலைந்து மலைந்து உலைந்து பொருள் பயலாது வறிதாம். அதுபற்றியே அங்ஙனம் அன்னுவயித்துப் பொருள் கொண்டார் பேராசிரியர்; அது 'பக்கம்' என்பதற்கு உரைத்துப் போகும் உரைப் போக்கினாலும் இனிது விளங்கும். அஃதுணரு மறிவாற்ற லின்றி 'அறுவகைப்பட்ட' என்பதனைப் பார்ப்பனர் என்பதனோடு அன்னுவயித்து அறுவகைச் சைவர் எனப் பொருள் கொண்டார் "விளக்க" முடையார். அறுவகைச்சைவர் யாண்டு கூறப்பட்டனரோ அறிகிலம்! சைவ சாத்திரங்களெல்லாம் எழுவகைச்சைவர் என்றே கூறும். இங்ஙனம் வாயில் வந்தன வந்தனகூற யாண்டுக்கற்றனரோ? அங்ஙனம் பொருள் கொண்டார் 'ஐவகை மரபி னரசர் பக்கமும்" என்புழி 'ஐவகை' என்பதனை அரசரோடு அன்னுவயித்து ஐவகைச் சைவர் எனல் வேண்டும். அதுமட்டோ "இரு மூன்று வகையி னேனோர் பக்கமும்" என்புழியும் 'இருமூன்று' என்பதனை ஏனோரோடு அன்னுவயித்து அவரையும் அறுவகைச் சைவர் எனல் வேண்டும். வேண்டவே, ஆதிக்கண் அறுவகைச் சைவர் என அவர் கொண்ட எண்ணுமுறை பிறழ்ந்து பதினெழுவகைச் சைவர் என்னு மெண்ணுமுறை தோன்றும்; தோன்றவே, சைவரெனப்படுவார் யாவரையு மொன்றாக வைத்துச் பதினெழுவகைப் பார்ப்பனர் என ஒத்துட் சூத்திரஞ் செய்யாது வேறு வேறு தொகையாகவைத்து அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கம், ஐவகைமாபி ரைசர் பக்கம், இருமூன்றுமரபி னே னோர் பக்கம் எனத் தொல்காப்பியர் சூத்திரஞ் செய்தமை பிழையெனப்படும், அதுமட்டோ! பார்ப்பனர் அரசர் ஏனோர் என்பனவற்றிற்குச் சைவர் எனப் பொருள் கோடற்கு நூற்பிரமாணம் வேண்டும், அதுமட்டோ! பக்கங்கள் எல்லாம் நின்று வற்றும், அதுமட்டோ! "மறுவில் செய்தி" என்பது முதலாகப் பின்னர்க் சூறப்பட்டவற்றேடு சைவர் என்னும் பொருள் சம்பந்த மின்மையால் வாகைத் திணைக்கிலக்கண மாகாது, ஆகலான், "விளக்க" மடையார் தாங்கொண்ட பொருட் கேற்பச் சூத்திரம் பிறிதொன்று செய்து கொண்டு அப்பொருள் சூறல் வேண்டும், இச்சூத்திரம் அவர் சூறும் பொருட்குச் சிறிதும் இடங்கொடாதென்றுணர்க.
இனி, "நால்வர்க் கொளிநெறி காட்டினை" என்னுந் திருஞான் சம்பந்தமூர்த்தி நாயனார் திருவாய்மலர்ந்தருளிய திருவெழுகூற்றிருக்கைத் துணுக்கை நால்வர் தமிழ்மக்கள் தமிழில் வேதஞ்செய்தார் என்பதற்கு ஆதாரம் என்றார்.
அத்துணுக்கையில் "நால்வர் தமிழ்மக்கள் தமிழில்வேதஞ் செய்தார்" என்ற பதங்கள் காணப்படவில்லை என்பது யாவரும் எக்காலமும் பார்த்தறியலாம்.
சனகராதி முனிவர் நால்வரும் முன்னர் ஆலின்கீழ் ஒரு முறை வேதப்பொருளைக் கேட்டுப் பின்னர் ஒருமுறை ஆகமப் பொருளைக் கேட்டார்கள். அது,
"மற்றது போழ்து தன்னின் மறைப்பொருள்
வடத்தின் பாங்கர்ப்
பெற்றிடு சனக னாதி முனிவரர்
பின்னும் பன்னாள்
அற்றமி றவஞ்செய் தெந்தை யருளினாற்
கயிலை நண்ணி"
"இருட்பெருங் கடலுள் யாமத் தெறிமருத்
திடைப்பட் டாங்குப்
பொருட்பெருங் கடலாம் வேதம் புடைதொறு
மலைப்ப விந்நாள்
அருட்பெருங் கடலே யெய்த்தே மமைந்தில
துணர்வு யாங்கள்'
மருட்பெருங் கடலி னீங்கும் வண்ணமொன்
றருடி யென்றார்."
"நவையறு தவங்க ளாற்றி நல்லருள்,
படைத்த நல்லோர்
இவர்புகன் றிடலுமன்பர்க் கெளிவருங்
கருணை வள்ளல்
அவர்முகந் தெரிந்து நுங்க ளறிவமைந்
தடங்கு மாறு
தவலருஞ் சிறப்பி னன்னூல் சாற்றுது
மிருத்தி ரென்றான்."
"நந்துமுற் கடையைப் போற்ற ஞானனா
யசனா மண்ணல்
முந்துறை சனக னாதி முனிவார்
தொழுது கேட்ப
அந்தமி லாக மத்தி னரும்பத
மூன்றுங் கூறப்
புந்திய தொடுங்கு ஞான போதகம்
போதி யென்றார்."
என்னுங் கந்தபுராணச் செய்யுட்களால் நன்கறியலாம். சைவசமய குரவர் நால்வரும் தேவார திருவாசகங்களுள் சனகராதிமுனிவரர் நால்வரும் ஒருமுறை ஆலின்கீழ் வேதப் பொருள் தெஷிணாமூர்த்திபாற் கேட்டதனையும் மற்றொரு முறை ஆகமப் பொருள் கேட்டதனையும் செய்யுளியைபுக்குத் தக்கவாறு திருவரு ளுணர்த்திய வண்ணம் அவைத்துப் பாடி யருளினர். இவ்வுண்மை உணராதார் ஆலின்கீழ்ச் சனகராதியர் கேட்டது வேதப் பொருள் மாத்திரமே யென்று கொண்டு தேவார திருவாசகங்கட்கு உண்மைப்பொருள் காணமாட்டாது மலைவர்.
திருவெழுகூற்றிருக்கையுட் கூறியது ஆகமப் பொருள் கேட்டதனையேயாம். "அந்தமி லாகமத்தி னரும்பத மூன்றுங் கூறப்--புந்திய தொடுங்கு ஞான போதகம் போதி யென்றார்" என்றதனாலும் அது நன்குவிளங்கும். இவ்வுண்மை உணரமாட்டாது "நால்வர்க் கொளிநெறி காட்டினை" என்னும் அத்துணுக்கை, நால்வர் தமிழ்மக்கள் தமிழில் வேதஞ் செய்தார் என்பதற்கு ஆதாரம் என்றும்,"இருட்பெருங் கடலுள்" என்னுங் கந்தபுராணச் செய்யுட்கு வேதம் என்னும் பொதுப் பொருளே கொள்ள வேண்டும் என்றும் கூறினமையால்,
"பாடமே யோதிப் பயன்றெரித றேற்றாத
மூடர் முனிதக்க சொல்லுங்கால்---கேடருஞ்சீர்ச்
சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே மற்றவரை
ஈன்றாட் சிறப்பப் பரிந்து"
என்னு நாலகிக் கிலக்கரயினமை பற்றியாம் பரிவுறுகின்றாம். ஞானம் பொற்றுத் தமிழ்வேதஞ் செய்தார் என்றன் முதலியன எட்டுணையும் பொருந்தாமை மேலுரைத்தாம். கடைப்பிடிக்க.
நால்வர்க்கு ஒள்நெறி காட்டினை' என்றதனானே "இறைவன் முனிவர்க்குத் தத்துவங்களைக் கூறி உரையிறந்தபொருளை உணர்த்துங் காலத்து மோன முத்திரை யத்தனாய்த் தானாயேயிருந்து காட்ட ஊமைத் தசும்புள் நீர் நிறைந்தாற்போல ஆனந்த மயமான ஒள் அம்முனிவராகிய மாணாக்கர்க்கு நிJறைதலின், அதற்குரிய மோனமுத்திரை கூறி" யதாயிற்று. இக்கருத்துப்பற்றியே "தன்னையுன்னி யென்னை யாக்கியபோழ்தேயானவ னாயினேன்" என்றார் பிறரும். இன்னும் இதனை,
மடங்களினொப்பு நோக்கியும், தமிழ்வேத ஒப்பு நோக்கியும் இவர் சிறப்புந் தோன்ற வேறு பிரித்துக் கிளந்து கூறினாம்.
கந்தபுராணத்தும் திருமுறையிலும் சனகராதி நால்வரைப் பற்றிப் பேசியிருத்தலே யன்றி நால்வர் தமிழ்மக்களைப் பற்றிப் பேசப்படவில்லை. அவர்கள் "விளக்க" முடையாரால் சிருட்டிக்கப்பட்டு எவர்க்கும் எக்காலத்தும் தோன்றாத அற்புதமுடையர் போலும், அதனாற்றான் நூல்கள் அவரைப்பற்றி யாதும் பேசாதொழிந்தன. "விளக்க" முடையார் இவரைச் சிருட்டித்தமையால் பிரமா நாணமும் மகிழ்ச்சியும் கவலையும் ஒருங்கடைவர்; என்னை? தஞ்சிருட்டி கட்புலப்படுதலானும் இவர் சிருட்டி கட்புலப்படாமையானும், தமக்கு அதிக வேலையின்மையானும், இவர் சிருட்டிவிசேட நோக்கிச் சிவபெருமான் சிருட்டித்தொழின் முழுதும் இவர்க்கே கொடுத்துவிடுவாரோ என்னும் ஐயப்பாட்டினாலுமென்க. அது நிற்க.
பிறிதொன்று:- "எல்லாவற்றுள்ளுஞ் சிறந்த உஅ சைவ நூல்களையும் தென்றமிழ் நாட்டு மகேந்திரமலையில் சிவபெருமான் அருளியதாகத் தெரிதலானும்" என்றார்.
இங்ஙன மிருத்தலால் திருவாசகத்தும் திருவிளைப்பாவகத்தும் கூறப்பட்ட மகேந்திரம் மேலே சுட்டிய மகேந்திர மன்று; "திருநான்மறைவிளக்க வாராய்ச்சி" நூலாசிரியப் பெரியார் அதனகத்துக் கூறியவண்ணம் திருக்கைலாசமலையேயென்று பலப்பல எதுக்களால் நன்கு விளங்குகின்றது. அவற்றைக் கூறுதும்; கடைப்பிடிக்க.
"உருகிய வெள்ளி போல வுயர்முழை தோறும் வீழும் அருவிநீர் புனிதன் வேணி யமருமா நதியிற் றோன்ற உருகிய பனிவான் குன்றி லொண்பனிக் கடவுள் வந்து மருவிய தென்னத் தோன்றும் வருண * மால் வரையின் றென்பால்"
* - பனிக்கடவுள் வந்து மருவிய தென்னத் தோன்றும் வருணம் - வெண்மை, வெண்மையையுடைய மால்வரை - கைலாசமலை.
"விசயன் பூண்ட பெருந்தவத்தி னிலைசிலர்க்குப் பேசலாமோ" எனக் கூறப்படுதலான், அருச்சுனன் பாசுபதாஸ்த்திரத்தின் பொருட்டுத் தவஞ்செய்த தானம் கைலைத் தென்றிசைச் சாரலென்பது பெறப்பட்டது.
எனக் கூறப்படலானும், சிவபிரான் வேட்டுவக்கோலங் கொண்டு வேட்டுவக்கணஞ் சூழ வேத ஞாளிகள் புடைபோத உமையாகிய வேடிச்சிக்கு முன்னும் பன்றிப் பின்னுஞ் சென்று விசயனுடன் பொருத இடம் கைலைச் சாரல் என்பது பெறப்பட்டது.
இப் பெறப்பட்ட பொருள்களையே திருமாளிகைத் தேவர் "உறவாகிய யோகமும்" என்னுந் திருவிசைப்பாத்திருப்பதிகத்தின் மத்தியின் "சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்" என்னும் வனப்பமைய,
என்று திருவாசகத்துள் அருளிச் செய்தார். ஆண்டவன் திருக்கைலையினின்று ஆசாரியமூர்த்தமா யெழுந்தருளி வந்தமையை அடிக்கடி அடிகள் கூறுதலைத் திருவாசக்த்துட் பரக்கக்காணலாம். ஈண்டுஞ்சோதி யென்ற அடைதானே மகேந்திரம் கைலை என்பதை நன்கு விளங்குகிற்று.
இங்ஙனமே ஓரோரிடத்துப் பொதுவாகக் கூறிப் போந்தவற்றை அடைமுதலியவற்றாற் சிறப்பாக உணர்த்திப் போதல் ஆசிரியர்வழக்காறாதலை நல்லாசிரியரிடத்துப் பயின்ற இலக்கிய விலக்கணப்பயிற்சியுடையார் நன்கறிவர்.
கைலைக்கு நொடித்தான்மலை என்னும் ஒருபெயர் காரணத்தா லெய்தியது போல,
என்றற் றொடக்கத்தனவாக வெண்ணிகந்த பெருமை இலக்கியங்களுட்கூறப்படலால், அப்பெருமை காரணமாக மகேந்திரமெனவும் ஒரு பெயர் பண்பாகு பெயராய்ப் போந்தவாறுகண்டுகொள்க. மகா - பெருமை, மிகுதி முதலியவற்றை விளக்கும் உபசர்க்கம். இந்திரம் - மேன்மை.
இன்னும் அடிகள்,
"வேடுரு வாகி மகேந்தி ரத்து மிகுகுறை வானவர் வந்து தன்னைத் தேட விருந்த சிவபெருமான் சிந்தனை செய்தடி யோங்க ளுய்ய ஆட லமர்ந்த பரிமா வேறி யையன் பெருந்துறை யாதி யந்நாள் ஏடர்களை யெங்கு மாண்டு கொண்ட வியல்பறி வாரெம் பிரானா வாரே"
என்னுந் திருவாசகத்தானும் மகேந்திரம் கைலை யென்பதை நன்கு விளக்கியவாறு காண்க. என்னை? தேவர் குறைநேரின் கைலைக்கு வந்து சிவபிரானைத் தரிசித்துத் தங்குறை கிளந்து அநுக்கிரகம் பெறுதல் இயல்பு. அருச்சுனன் பொருட்டு வேடுருக்கொண்டு கையிலையிலிருந்த ஞான்று 'மிகுகுறை வானவர்' வந்து, காளகண்டம் மான்மழுச் சதுர் புயங்களோடு சீகண்ட சரீரியாய் என்றும்போல இறைவரிருக்கக் காணாமையின் எம்பெருமான் எங்கே போயினரோவென் றெண்ணித் தேடும்படி யிருந்தமையால் என்க. அக்கைலாசபதியே தமக்காகப் பாண்டியனுக்குப் பரிமாக் கொணர்ந்தவரென்பார் தேடவிருந்த சிவபெருமான், ஐயன், பெருந்துறை ஆகி அடியேங்களுய்யச் சிந்தனை செய்து அந்நாள் ஆடலமர்ந்த பரிமா ஏறி ஏடர்களை எங்கும் ஆண்டு கொண்ட என்றார். ஏடர் - அன்பர். தம்மோடு அரிமர்த்தனபாண்டியன், வந்தியாகிய பிட்டுவாணிச்சி என்னும் இருவரையுஞ் சேர்த்து ஏடர்களை யெனப் பன்மையாற் கூறினாரென் றுணர்க.
என்பதன் பொருளுணர்த்து முகத்தானும் மகேந்திரங் கைலையெனத் தேற்றல் வேண்டுமென்பீராயிற் றேற்றுதும்:-
ஒரு காலத்துத் தேவர்கள் சிவபிரானை நோக்கித் தொழுது துதிக்க, அதற்கு மகிழ்ந்து அவர் பிரசன்னமாக, அவர்கள் அன்போ டவ்வாண்டவனைப் பூசனைபுரிதல் வேண்டுமென்ன, பெருமான் சூரியமண்டலத்தூடு விளங்கும் நான்முகத்தோடு தோன்ற, அத்தேவர் விதிப்படி பூசைபுரிந்தனர். அது செய்யத் திருவுள மகிழ்ந்து தேவர்கட்கு ஆகமம் இருபத்தெட்டையும் கொடுத்து மறைந்தனர். கொடுத்த வாகமம் பலநெடுங் காலங்கழிய இறந்துபோதலும் உமாதேவியார் அவற்றை மீளவுந் தோற்றுவிக்கவேண்டுமென்று இறைவற்கு விண்ணப்பஞ் செய்ய அவர் தோற்றுவித்தார். அது-
என்ப வாகலின், மாமலை யெனப்பட்டது. உலகிலுள்ள மலைகளெலாவற்றுள்ளும் பெரியமலை என்றபடி. மாமலை மகேந்திரம் என்பது இருபெயரொட்டுப்பண்புத்தொகை. "மாமலையின் றென்பால்" என்புழியும், மாமலை கைலாசமெனப்பட்டது காண்க.
இன்னும், கீர்த்தித்திருவகவலின் "தில்லை மூதூ ராடிய திருவடி" என்று ஆரம்பித்து, அடுத்ததல மகேந்திரமாகக் கூறினர். முடிக்கும் பொழுதும் அம்முறையே "பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன்" எனவும், "ஒலிதரு கயிலை யுயர்கிழ வோனே" எனவும் கூறித் தில்லைக்கும் புலியூர்க்கும் மகேந்திரத்திற்கும் கைலைக்கும் சம்பந்தந் தெரித்து இரண்டும் ஒன்றென விளங்கவைத்த வாறுங் கண்டுகொள்க.
இன்னும் இவ்வகவலுள் "மந்திர மாமலை மகேந்திர வெற்பன்" எனவும் போற்றித்திருவகவலுள்" மந்திர மாமலை மேயாய் போற்றி" எனவுங் கூறி மகேந்திரங் கைலாசமென விளக்கினார். என்னை?
மந்திரம் - கோயில், கைலாசமலையில் நவரத்தினகசிதமான செம்பொற்றிருக் கோயி லொன்று தேவரு மருளுமாறு பேரழ கோடுள்ளது. அக்கோயில் பொருந்திய கைலாசம் என்பது பொருளாகலான் என்க, அதனை,
மந்திரம் செம்பொற்றிருக்கோயில், இனி மந்திரமெனப் பொருள் கொண்டால் அது ஆகுபெயராய்ச் சாமானியசுருதி பிரபல சுருதிகளை யுணர்த்து மெனக்கொண்டு அச்சுருதிகளை வெளிப்படுத்துதற்கு முக்கிய ஸ்தானமாகிய கைலை என்றலுமாம்.
இனி, சிவபெருமான் சதாசிவதத்துவ புவனத்திருந்து சத்தி சதாசிவன் முதலாயினார்க்குச் சொல்லியருளிய ஆகமங்களைத் திருநந்திதேவர் சனகராதி முனிவர் பொருட்டு மகேந்திரமாகிய கையிலையில் வெளிப்படுத்தினார் என்றலுமொன்று, அது,
"சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம் உவமா மகேச ருருத்திர தேவர் தவமால் பிரமீசர் தம்மிற்றாம் பெற்ற நவவா கமமெங்க ணந்திபெற் றானே"
என்னுந் திருமந்திரத்தானு முணர்க.
அஃதொக்குமன்னாயினும்,
"கேவேட ராகிக் கெளிறது படுத்து மாவேட் டாகிய வாகமம் வாங்கியும் மற்றவை தம்மை மகேந்திரத் திருந்து உற்றவைம் முகங்க ளாற்பணித் தருளியும்"
கேடவேடர் ஆகி - வலைவாணராகி, - மா வேட்டு ஆகிய - மகா லக்குமியெனக் கூறி வேதம் போற்றும் உமையாகிய இறைவியைத் தாம் மணத்தல் நிகழும்படி; கெளிறு அது படுத்து - அறவேற்றை வலையகப்படுத்து, - ஆகமம் வாங்கியும் - அது சிரத்திடத்துக் கொண்டிருந்த ஆகமங்களைத் தாம் எடுத்தும், - மற்று அவை தம்மை - அவ்வாகமங்களை, மகேந்திரத்து இருந்து - கைலாசமலையில் எழுந்தருளி யிருந்து, - உற்ற ஐமுகங்களால் பணித்தருளியும் - அவ்வாகமங்கள் முன்னரே இருந்து வெளிப்பட்ட ஐந்து திருமுகங்களாலும் இறைவிக்கு உபதேசித்தருளியும் என்க.
கெளிறது என்பதில் அது பகுதிப்பொருளது. படுத்தல் வலையகத் தகப்படச்செய்தல். மா- மகாலக்குமியாகிய உமை, வேட்டல் வேட்டு என முதனிலையாய் நின்றது. ஆகிய என்பது செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். வாங்குதல் - எடுத்தல், உம்மை எண்ணும்மை. இனி "மிக்கோரிகழ் பற்றொன்றினு முண்மை - கற்றார்தொழு மருணாசலம்" என்புழிப்போல எதிர்மறை யும்மை என்றலுமாம்; வாங்காமலும் பணித்து வாங்கியும் பணித் தென்க. மற்று அசை, தமமும் அசை உற்ற ஐம்முகம் ஆகமங்கள் பொருந்தித் தோன்றுதற்கிடமாகிய ஐந்து முகம். பணித்தருளல் ஒருசொல்லிவிழுக்காடு; உபதேசித்தல் என்றபடி, இனம் பற்றிச்சுறவேறு கெளி றெனப்பட்டது; "இமைய வில்வாங்கிய வீசன்" என்புழி மேரு இனம்பற்றி இமயம் எனப்பட்டாற் போல.
இனி, (ஆகிய - தமதாஞ்ஞையால்) உண்டாக்கிய, - கெளிறது - திருநந்தி தேவராகிய கெளிற்றை, - படுத்து - வலையகப்படுத்தி, - ஆகமம் வாங்கியும் - (அதன் சிரத் துற்ற) ஆகமங்களை எடுத்துக்கொண்ட சிவபிரானும், - மா வெட்டு - மகா லக்குமியாகிய உமையை மணந்து, என்றலுமாம். இப்பொருட்கு வாங்கி பெயர். "தோற்றிய திதியே யொடுங்கி" என் புழி ஒடுங்கி போல, உம்மை உயர்வு சிறப்பு.
எவ்வெம் முகத்தில் எவ்வெவ்வாகமங்கள் தோன்றினவோ அவ்வம் முகத்தால் அத்தோற்ற முறைப்படி அவ்வவ்வாகமங்களை உபதேசித்தார் என்பது விளக்கிய உற்றவைம் முகங்களாற் பணித்தருளியும் என்றார்.
ஆலவாயடிகள் இறைவியை நோக்கி வலைஞர் மகளாகப் போந்திரு; நாம் வந்து வதுவை அயர்ந்து வருகுதுமெனப் பண்டு வழங்கிய திருவாக் கொருவாதவண்ணம் ஓர் வலைஞராய் வலைச்சேரி வந்தாராக, அவர்வடிவழகு கண்ட சேர்ப்பன் "நம்பிநீ யாரை யென்ன" அதற்கவர் "தனிவலையுழவனல்ல ** மைந்தன் யானென்ன"
"தொண்டுறை மனத்துக் கானற் றுறைமக னஃதே லிந்தத்
தண்டுறை யிடத்தோர் வன்மீன் றழலெனக் கரந்து சீற்றங்
கொண்டுறை கின்ற தைய குறித்தது பிடித்தி யேலென்
வண்டமர் கோதை மாதை மணஞ்செய்து தருவ லென்றான்"
ஆகலான், அதற்கியையக் கேவேடராடி மாவேட்டு ஆகிய கெளிறது படுத்து என்றருளிற் றடிகள், செய்யுளாதலின் முறை பிறழ்த்திக் கூறிற்று,
சுறவிடத்து வாங்கிய ஆகமங்களை உத்தரகோசமங்கையில் உபதேசித்தார் என்னும் புராணவசனாஹ்தோடு கைலையில் உபதேசித்தார் என்றால் மறுதலைப்படுகின்றதீ யெனின், அற்றன்று; என்னை? உத்தரகோசமங்கையில் ஒரு முகத்தோடிருந்து உபதேசித்த வாகமங்களையே ஐம்முகத்தோடிருந்து தோற்ற முறைப்படி உபதேசித்தருளால் வேண்டுமென்றம்மை இரப்ப இறைவன் அங்ஙனஞ் செய்தான் என்பது,
"வெள்ளி மால்வரைக் கைலையில் வீற்றிருந் தருளித்
துள்ளு வார்புனல் வேணியா ரருள்செயத் தொழுது
தெள்ளு வாய்மையி னாகமத் திறனெலாந் தெரிய
உள்ள வாறுகேட் டருளினா ளுலகையாளுடையாள்"
என்னும் பெரியபுராணத்தால் நன்கு விளங்கக் கிடத்தாலானென்க,
இன்னும் சிவபெருமான் வேதாகமங்களைப் பக்குவராகிய சனகராதிமுனிவர்க்கும் பிறர்க்கும் வேண்டிய வேண்டிய போதெல்லாம் உபதேசித்தற்கு முக்கியஸ்தானமாகக் கொண்டு விரும்பி எழுந்தருளியிருக்கும் திவ்விய ஸ்தலம் திருக்கைலாச மலையேயாமென்பது,
"இமையகிரி வடகுணபர லிமையவர்க டொழுதேத்த
உமையுடனே பசுபதிதா னுறைவனொரு கிரிமிசையில்
தமையுணர்ந்த தபோதனருந் தங்குவரச் சயிலத்தில்
கமையுடியா ரதன்பெயரைக் கைலையெனக் கழறுவரே"
"ஆகமங்க ளனைத்தினையு மருமறைக ளொருநான்கும்
மோகமற முனிவர்க்கு மொழிந்தருள வொழிந்தனவும்
மாகருமோ மாலயனு மலர்தூவித் தலைவணங்க
ஏகனிறையதன்மிசையு மிருக்கவிரும் பினனினிதே,"
என்னுஞ் சிவதருமோத்தாத் திருவிருத்தங்களானு மறிக,
பசுபதி யுறைவ னென்னாது உமையிடனே பசுபதிதானுறைவன் எனவும், மாகரும் மாலயனும் மலர்தூவி வணங்க இருப்பன் எனவும் உடன் புணர்த்திக் கூறினமையின் உமை, மாகர், மால், அயன் முதலாயினார்க்கும் ஒவ்வோர் காரணம்பற்றி வேதாகமங்களை ஒவ்வோர் காலத்து ஆண்டே உபதேசிபார் என்பது செவ்விதிற் றெரிந்து கொள்க,
இங்கே எடுத்துக் காட்டிய அதிப்பிரபலப்பிரணங்களாலே, மகேந்திரங் கைலாசமலைதான் என்பது நிறுவப் பட்டது; படவே, ம-m-m-ஸ்ரீ, சுப்பிரமணியபிள்ளையவர்கள் தமிழ்நாட்டுட்பட்ட மகேந்திரமலையில் சிவபிரான் ஆகமங்களைத் தமிழிற் கூறியருளினார் என்னுங் கற்பனை கழிக்கரைப் புலம்பலும், கானகத்துப்புலம்பலு மாயவாறு கண்டுகொள்க.
இவ்வாறு அரசன் முறையின் வைத்து இறைஅவன் முறை உணர்த்திய சித்தாந்த சாத்திரத்தைச் சிறிதுமோராது, சைவ சமயிகளாகிய நாமெல்லாம், இறைஅன் நம் பொருட்டிரங்கித் தந்த வேதாகமங்களை விடுத்தொழித்து வெறுங்கையோடு வீதியினின்று தவிக்குமாறு செய்யக் கருதி, வேதங்கள் ஆரியர் கட்டின கட்டு என்றும், சைவர்கட்கு அவை பிரமாண நூல்களன்றென்றும், சிவபெருமான் தமிழில் வேதஞ் செய்தருளினார் என்றும் உலகந் தோன்றிய நாண்முதல் இதுகாறும் ஒருவருஞ் சொல்லாத நவீனக் கற்பனையாகிய ஒஆரடிநிலை பாரித்தார் "திருநான்மறைவிளக்க" முடையார்.
ஆகலான் மெய்ம்மைச் சைவசமயிகளே! இப்போதுள்ள வடமொழி வேதாகமங்களே இறைவன் சிருட்டியாரம்பகாலத்தில் நம்பொருட்டு அருளிச்செய்த முதனூல்களென்றும், "விளக்கமுடையார் கூறியபடி தமிழில் முதனூல் இறைவன் செய்திலன் என்றும், அதனால் கடல்கொண்டு போயதென்றது அவரது கட்டுவார்த்தை என்றும், நன்றாகத் தேறி அவரை வேதாகம விரோதியெனக்கொண்டு புறப்புறத்தினும் புறப்புறச் சமயத்தவராக வெண்ணி, அவர் சொற் கேட்பின் ஆன்மலாபமிழந்து நரகத் தெய்துதல் ஒருதலையெனத் துணிந்து, அவர் சொற் கேணாது வேதாகம வழி யொழுகி விமல னருள் பெறு நிலைமையை விடாதுபற்றிச் செவ்வனே உய்தி பெறுவீராக.
எமதன்பர் குமாரர் ஸ்ரீமத். சுப்பிரமணியபிள்ளையவர்களும் இவ்வுண்மையை ஒர்ந்து "கொடிறும் பேதையுங் கொண்டது விடாது" என்னுந் திருவாசகக் கூற்றிற்குச் சரியான விலக்கியமாகாது, உண்மை கண்டுழியும் அவ்வனவிலமையாது வெற்றுரை பேசித் தமதறியாமையை மேலும் மேலும் வெளிப்படுத்தும் பிறர் போலாது அமைந்து நன்மை பெறுவாராக.
இனி, சுந்தரமூர்த்திநாயனார் கைலைக் கெழுந்தருளிய போது வழியிடைத் தாமருளிச்செய்த "தானெனை முன் படைத்தான்" என்பதை முதலாகவுடைய நொடித்தான்மலைத் திருப்பதிகத்தை, அஞ்சைக்களத்தப்பர் சந்நிதி வரயிலாக உஅலகிற் கறிவுறுத்துமாறு ஆழிநீரரசனாகிய வருணனிடம் கொடுத்தார் என்பது,
"ஊழிதொறூழி முற்று முயர்பொன் னொடித்தான் மலையைச்
சூழிசை யிகரும் பின்சுவை நாவல வூரன் சொன்ன
ஏழிசை யின்றமி ழாலிசைந் தேத்திய பத்தினையும்
ஆழி கடலரை யாவஞ் சையப் பர்க்கறி விப்பதே"
என்னும் அப்பதிகத் திறுதித் தேவாரமாகிய அவர் திருவாக்கானும்,
"வாழி மாதவ ராலால சுந்தரர்
வழியிடை யருள்செய்த
ஏழி சைத்திருப் பதிகவிவ் வுலகினி
லேற்றிட வெறிமுந்நீர்
ஆழி வேந்தனாம் வருணனுக் களித்திட
வருணனு மருள்சூடி
ஊழி யிற்றனி யொருவர்தந் திருவஞ்சைக்
களத்தினுய்த் துணர்வித்தான்"
என்னும் பன்னிரண்டாந் திருமுறைத் திருவிருத்தமாகிய சேக்கிழார் நாயனார் திருவாக்கானும் பெறுதும்.
சேரமான் பெருமாணாயனார் வழியிடை அருளிச்செய்த திருக்கைலாசஞானவுலாவை அன்று மனத்திற் கொண்டு திருப்பிடவூரில் வெளிப்படக் கூறியருளி உலகத்தில் நிலைபெறச் செய்தார் என்பது,
"சேரர் காவலர் விண்ணப்பஞ் செய்தவத்
திருவுலாப் புறமன்று
சாரல் வெள்ளியங் கயிலையிற் கோட்டமா
சாத்தனார் தரித்திந்தப்
பாரில் வேதியர் திருப்பிட வூர்தனில்
வெளிப்படப் ப்0அகர்ந்தெங்கும்
நார வேலைசூ ழுலகினில் விளங்கிட
நாட்டினர் நலத்தாலே"
என்னும் பெரியபுராணத் திருவிருத்தமாகிய சேக்கிழார் நாயனார் திருவாக்காற் பெறுதும்.
வழியிடை யருளிச்செய்த இவ்வொரு பதிகமும். இவ்வோருலாவும் புவியிடைப்போந்து பயன்படவேண்டி இங்ங்அனம் இவர் வாயிலாக அஞ்சைக்களத்தும் பிடவூரகத்தும் அறிவுறுத்துவித்தருளிய பொருங்கருணையாளனாகிய இறைவன் "ஆரணமாகமங்கள" இல்லையேற் "கதிப்பவரில்லையாகும்" ஆகலான், தமிழிலிருந்த வேதாகமங்களைக் கடல்கொண்டு பொந்த ஞான்று தொட்டின்றுகாறும் வெளிப்படுத்திப் பயன்படச் செய்து உயிர்களைப் புரந்து கதிப்பாற் படுத்தாது வாளாவிருத்தல் அவன் கருணைக் கிழுக்காம்பிறவெனின், அற்றன்று; என்னை? தமிழில் அவை செய்யப்பட்டிருந்து, கடல்கோட்படினன்றோ! அம்முதல்வன் அங்ங்அனஞ் செய்வன். அந்நிகழ்ச்சிகள் யாவும் எக்காலத்தும் இன்மையான் அது செய்திலன் என்க, அதற்கொரு சான்று சோமுகன் கவர்ந்து சென்று கடலிடை மறைந்த வேதத்தை விண்டுவைக்கொண்டு விமலன் வெளிப்படுத்துவித்த சரிதமும் அன்னபிறவு மாம்; ஆகலான் இழுக்கு யாண்டையதென்றொழிக.
இன்னும் கடல்கோட்பட்ட விடத்துள்ள தமிழ் ஆகமமுறையாகிய தானி தான்றன்றானத்தொடு அதன் கட்பட்ட தெனினும் தமிழ் நாட்டில் மற்றைய இடங்களிலிருந்த தமிழ் ஆகம முறைகள் எங்கே போயினவோ? தமிழ் நாட்டுச் சிவஸ்தல முதலியவற்றில் சிவபிரான் முதலிய கடவுளர்க்கு அவையின்றிச் "சிறப்பொடு பூசனை" சென்றதெங்ஙனம்? வடநாட்டுத் தலங்களிலுள்ள சிவாலாய முதலியவற்றில் "சிறப்பொடுபூசனை" யின்றோ? என்னை? அங்குள்ளார் தமிழாகம முணரமாட்டா ராகலான், நித்தியமேனு நடைபெறாதவாலயங்கள் இருந்தும் பயனின்றாகலின், அங்குள்ள ஆலயங்கட்காக வடமொழி ஆகமமும் உண்டாக்கினார் என்பராயின், குறை யென்னை? தமிழ் வேதாகமம் கடல் கோட்பட்டால் கடல் கோட்படாத சமஸ்டிருதாகம வேதங்களைக்கொண்டு தமிழ் நாட்டிற் சிவாலயங்களில் நித்திய நைமித்திகங்கள் நடப்பிக்கலாமே. அவற்றைத் தள்ளிவிட்டு "அரசனை நம்பிப் புருஷனை யிழந்தவள்" சீலமாக இல்லாத தமிழ் வேதாகமங்களை நம்பி, இருக்கிற சமஸ்கிருத வேதாகமங்களைவிட்டுச் சந்தியில் நின்று நாம் தவிக்கவேண்டிய தெற்றிற்கென்று திருவாளர் சுப்பிரமணிய பிள்ளையவர்கள் சற்றே தயைகூர்ந்து சிந்த்திது உண்மையில் தமது மனத்தை நிலையுற வூன்றி நன்மை கடைப்பிடித்துச் செம்மையாக வாழ்க சிவா.
இனி, "பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்பும்-சிறப்பர்" எனத் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரத்துள் ஓதியருளுதலினால், வேள்விக்கட் பசுவேட்டலை விதித்தவேதம் கொலையைக் கூறலால் நன்மை பயவாது போலுமென மலையற்க; என்னை? கொலை;களவு, காமம், பொய், என்னுஞ் சொற்கேட்டுத் கொலை தீதென்பதூஉம், கனவென்னுஞ் சொற் கேட்டுக் களவு தீதென்பதூஉம், பொய் யென்னுஞ் சொற் கேட்டுப் பொய் தீதென்பதூஉ மன்று; மற்றவை நல்லவாமாறு முண்டு; என்னை? ஒருவன் ஒருகுடும்பத்துப் பத்துமக்களிடத்துக் கொண்ட கோபத்தால் அவர்கள் துயிலும்போது அவர்களை இடைதெரிந்து கொல்லக்கருதி ஆயுதபாணியாகச் சேறலை ஓராற்றானறிந்த மற்றை அருளுடையா னொருவன், பத்து மக்களையும் இவன் கோறல் புரியாமை அவரைக் காப்பேனெனக் கண்ணி அவனைத் தனது சூழ்ச்சியாற் கொண்றிட்டான், அதனால் அவர்களும் சாக்காடு நீங்கினார்கள், அவன் அக்கொலையினான் அவர்களை உய்யக் கொண்டமையான் நல்லுழிச் செல்லு மென்பது, மற்று மிதுபோல்வன கொலையாகா நன்மை பயக்கு மென்பது.
இனி, களவு நன்றாமாறு:- "ஒரு மெண்டாட்டி தமரொடு கலாய்த்து நஞ்சுண்டு சாவல் என்னுமுள்ளத்தளாய் நஞ்சுகூட்டிவைத்து, விலக்குவா ரில்லாதபோழ்து உண்பலென்று நிண்ற விடத்து, அருளுடையா ளொருத்தி அதனைக் கண்டு இவனிதனை யுண்டு சாவாமற் கொண்டுபோ யுகுப்ப லென்று அவளைக் காணாமே கொண்டுபோ யுகுத்திட்டான். அவளும் சனநீக்கத்துக் கண் நஞ்சுண்டு சாவான் சென்று அது காணாளாய்ச் சாக்காடு நீங்கினாள்; அவ்வரு ளுடையான் அக்களவினான் அவனை உய்யக் கொண்டமையான் நல்லுழித் செல்லுமென்பது, மற்று மிதுபோல்வன களவாகா நன்மை பயக்குமென்பது."
இனி, நாமம் நன்றாமாறு :- "சுவர்க்கத்தின்கட் சென்று போகந்துய்ப்ப லென்றும், உத்தாகுருவின்கட் சென்று போகந் துய்ப்ப லென்றும், நன் ஞானங் கற்று வீடுபெறுவலென்றும், தெய்வத்தை வழிபடுவ லென்றும் எழுந்த காமங் கண்டாயன்றே! மேன்மக்களானும் புகழ்ப்பட்டு மறுமைக்கு முறுதி பயக்கு மாதலின், இக்காமம் பெரிது முறுதியுடைத்தென்பது."
இனி, பொய் நன்றாமாறு :- ஊரிடையிட்டுச் சென்று தன்மருமமுற்றி மீள்வா னோர்மகனைச் சில்லோர் வழியிடையிட்டுக் கொலைபுரிந்து அவன் கைப்பொருளைப்பற்ற நின்றவிடத்து, அதனை ஆங்கறிந்து போதரு நன்மகனாவானோர் பதிகன், அம்மீள்வான்றனக்கு அதனைத் தெரிப்ப, அவன் ஆண்டோர் குடிசையில் வசிபானோர் கருணையாளனுழை இது சமயம் என்னைக் காவாய் என்று சாண்புக, அவனும் உளமுருகி அது செய்வல் அஞ்சற்கவென் றமைத்த காத்தினனாய் மறைத்துவைத் தாங்கே விளிப்போந்து நின்றானிடை அவ்வாறலைப்பான் போந்து நின்ற மறமாக்கள் புக்குத் தாழ்த்த தலையும் தண்ணிய மொழியு முடையராய்த் தன்கைப் பொருளுடையா னொருவ னெம்மினமகன் பொருள் காரணமாகத் தனிவாலஞ்சி ஈண்டுழிதந்தானென அறிந்து அவனைக் காத்துக் கொடுபோதரப் பலர்குழீஇவந்தனம்; அருளுடைப் பொரும! அத்தகையானை நீர் கண்டீர்கொல்லோவென ஐயமவனுறாது கையுமனத்தராய் வினவ, அத்தகையா னொருவன் இச்சதுக்கத்துநின்று நாற்றிசையு நோக்கி உழிதந்து நின்றான்.முன்னர் அதுகண்டுவைத்துக்குடிசையுட் போந்து பின்வந்து நோக்கினேற்கு முன்போற் காணப்பட்டிலன் என்றான். அவரும் அது கேட்டு மெய்யெனக் கொண்டு தம்முழிப் போந்தார். அதனான் அவனை யுய்யக் கொண்டமையின் அது நன்மைபயந்த தென்பது, மற்று மிது போல்வன பொய்யாகா நன்மைபயக்கு மென்பது. இக்கருத்துக் கண்ணியன்றே,
"பொய்மையும் வாய்மை யிடத்த புரை தீர்ந்த
நன்மை பயக்கு மெனின்"
என்றார் வள்ளுவ தேவரும்.
அஃதங்ஙனமாகுக; பாசமய கோளரியாகிய பிள்ளையார், பாண்டியன் சபையிற் சமணரோ டொட்டிச் சமயவாதஞ் செய்து வென்றகாலத்துக் குலச்சிறைநாயனார் சமணரைக் கழுவேற்றியது தீமைபயக்கு மன்றோவெனின், அறியாது கூறினாய்; மற்றென்னைகொல் நன்மை பயக்கு மாறெனின் நன்றே கூறுதும்:-
பதினாறாயிரவரைக் கொல்ல முயன்ற எண்ணாயிரவரை அரசன் கோறல் புண்ணிய மாகலானும், ஒட்டியவாறே அவரைக் கழுவேற்றினமை அவர் செய்த சிவதூடணத்தின் பொருட்டு நரகவேதனை அளப்பிலகாலம் அநுபவியாது ஒருசிறுபோழ்துள் நீங்கினமையானும், பினும் பின்னும் பிறரும் இவ்வாறு செய்து நரகத் துன்பமும் பிறவித்துன்ப்fஅமும் எய்தா துய்தற்குக் காரணமாகலானும் அது பெருங்கருணையின் பாலதாய்ப் பெரிது நன்மை பயந்தவாற்றிக. இத்துணைச் சுருக்கமாக அத்துனைப் பொருநன்மை பயக்கு மாற்றைச் சைவசாத்திர முறைகொண்டன்றிப் பிறிதொன்றினான் எக்காலத்து மொவருமறிய வல்லு நராகார்.
இம்மையிலே பாவஞ்செய்தோர் அரசனாலே தண்டிக்கப் பட்டால் மறுமையிலே அவர்க்கு நரகவேதனை யின்று; அரசன் அறிந்து தண்டிக்கப்படாத பாவங்கட்குத்தான் மறுமையில் யமதண்டமுண்டு. ஆகலான், அரசன் தண்ட மெல்லாம் மறக்கருணையாய்ப் பெருநன்மை பயப்பனவரம், சமணரைக்கழு வேற்றினமையும் அத்தகைய மறக்கருணையே யாமென்பது. அதனை,-
"அரசனுஞ் செய்வ தீச னருள்வழி யரும்பா வங்கள்
தரையுளோர் செய்யிற் றீய தண்டலின வைத்துத் தண்டத்
துரைசெய்து தீர்ப்பன் பின்பு சொல்வழி நடப்பர் தூயோர்
இனி, பிறவுயிரை அது நின்ற வுடம்பி னின்று நீக்குமாறு போலத் தமதுடலினின்று தம்மைத் தாம் நீக்குதலும் பாவமென்றும், அங்ஙனஞ் செய்வோர் சக்கரவாளகிரிக்குப் புறத்திலுள்ள இருட்பூமியிலே கிடந்து எண்ணில்லாத காலம் வருந்துவார்கள் என்றும் ஆகமத்துள் கூறிய விதி ததீசிமுனிவர் முதலாயினார் மாட்டுச் செல்லாமை,
"என்று மாதவ னியம்ப வும்பர்கோன் ஒன்றும் வானவர் தம்மொ டொல்லெனச் சென்று மாயையின் செயலை நோன்பினால் வென்ற மாதவ னிருக்கை மேவினான்."
அஃதொக்குமன்னாயினும், வேள்விக்கட் படுத்த பசுவைப் பின்னர் எழுப்பிவிடுதல் நியதமின்மை விருத்திரன் யாகபசுவாக வந்த காலத்து இந்திரன் படுத்து யாகஞ் செய்து பின்னெழுப்பாமையின்வைத் துணரப்படுமாலோவெனின், அற்றன்று;
ஈங்கிவைபோல வேள்விக் கொலையும் தீங்குபயவாது நன்மை பயக்குமென்க. நன்மை பயக்குமா றென்னையெனின், நன்றே கூறுதும்:- வேள்வியிற் கொலையுண்ணும் உயிர் மேலுலகத்துச் சென்று இன்பந் துய்க்கும் ஆகலானும், ஈண்டும் கொன்றுவபை எடுத்த பின்னர் எழுப்பப்படுமென்பது "புன்மைபோ லெழுப்பு மாறு சுருதி சொற்ற வாறுபோல்" என்னுங் கந்தபுராணத் திருவிருத்தத்தாற் பெறப்படலானும், யாகாதி பதி சிவனே யாதலால் அவர்க் கவிக்கு நேர்ந்த வபைக்குரிய வுயிரிந்த அபுத்திபூர்வ சிவபுண்ணியத்தால் மறுமைக்கண் புத்தி பூருவ சிவபுண்ணியஞ் செய்து சிவஞான முற்று அத்துவித முத்தியெய்து மாகலானும், இக்கொலை சீரிய நன்மை பயக்குமென்பது. வேதத்துட் கூறப்படும் சோமபான முதலியனவு மதுவே.
இனி இக்காலத்து மீண்டு யாகபசுவை எழுப்புஞ் சத்தியில்லாதார் யாகபசுவைக் கொன்று யாகஞ் செய்யலாகாதென்பது, அப்பதீக்ஷிதர் தமது காலத்து யாகமொன்றியற்றி ஈற்றின் யாகபசுவை யெழுப்ப அது எழவில்லை. அவ்வமையத்துத் தீஷிதசுவாமிகள் வேதத்தை நோக்கிச் சுருதியே உன்னை நம்பி இப்பசுவைப்படுத்தேன். இது எழாதாயின் எனதுயிரைப் படுப்பல் இது நிச்சயம்; என்சொல்லுதியென்று கூறும் உறுதி மொழியை வேதபுருடன் கேட்டு வெளிப்பட்டு நிவாய்மைப் பத்தியின் பொருட்டு இப்பசு எழுந்துவிடும். இனி இக்கொடுங்கலியில் பசுப்படுத்து யாகஞ் செய்யாதொழிக. படுப்பின் எழாது என்று சொல்லி மறைந்தனன் என்னுஞ் சரிதத்தின் வைத்துணர்க.
உகங்கள் தோறும் விதிகள் சில மாறுபடு மாற்றை, "அந்த யுகந் தோறுமடி தீண்டியருச் சிக்கைதகு-மிந்தக் கலியுகத்தே யாது" என்பதனா லறிக.
யாகத்தில் கொலை புரிந்த யாகபசுவை எழுப்பவல்லுநர் "யாகஞ் செய்யா தொழியின் செறபுடையந்தணரெனப்பட மாட்டார்; கில்வாழந்தணர் படுத்த பசுவை எழுப்பவல்லராதலின் வேள்வியாற்றித் தமக்கும் யாகபசுவிற்கும் பிறர்க்கும் நன்மை பயக்குநெறி வழுவா தொழுகிச் சிறப்படைந்தார் என்பார் "பசு வேட்டெரியோம்புஞ் சிறப்பர்" என்றருளிச் செய்தார் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்.
அந்தணர் வேதமோதாமை வேள்வி செய்யாமை முதலியன பெருங் குற்றமென்பார், புராணத்துட் கலியுககருமங் கூறும் வழி,
"அந்தணர் வேத மோதா ரருஞ்சிவ
பூசை செய்யார்
செந்தழல் வேள்வி யாற்றார் செயத்தகு
நியமஞ் செய்யார்
மந்திர நவிற்றா ரன்பு வளரருண்
மனத்து வையார்
வெந்தொழில் வினைமேற் கொள்வார் விரதநோன்
பினைவி டுப்பார்"
என்றிங்ஙனம் கூறினார் ஆசிரியர் பிறரும்.
இதனாலே அந்தணர்க்கு வேதவேள்வி முதலியன இன்றியமையாத சற்கருமங்கள் என்பது நன்கு விளங்கும், தில்லை வாழந்தணர் அவற்றை உயிரினுமோம்பிச் சிறந்தார் என்பது அவற்றைக் கண்கூடாகக் கண்ட முத்தமிழ் விரகர் தமது தேவாரத்துள் "பறப்பைப் படுத்தெங்கும் பசுவேடெரியோம்புஞ் சிறப்பர்" என்று சிறப்பித்ததனால் செவ்வனே தெரிகின்றது. இது அநுவாதம்.
இருந்தவாற்றால் வேள்வியிற் கொலை அவ்வுயிர்க்கு நன்மை பயத்தலால் கொலை யன்றென்பதூஉம், வேதம் ஏனையிடத்துச் செய்யும் கொலையை விலக்கும் என்பதூஉம் அதற்கு மாராகக் கொலை முதலியன செய்வோர் செயலை வேதத்திலேற்றிக் குறைகூறல் அறிவின்மை என்பதூஉம் அறிந்துகொள்க.
புறத்துச் செய்யப்படும் வேள்விக்குப் பசு - ஆட்டுக்கிடாய். ஏனைய வெளிப்படை. இப்புறத்து வேள்வி அகத்து வேள்விக்குக் காரணம். இக்காரணமின்றி அக்காரியம் சித்தியாது. ஆகலான் அது செய்தற்குரியார் தப்பாமற் செய்தல் வேண்டும்.
அகவேள்வி செய்யும் ஆற்றுலுடையார் யோகியும் ஞானியும், அவரும் உலகர் பொருட்டுப் புறவேள்வி செய்யினுஞ் செய்வர். "உறங்கினோன்கை வெறும்பாக்கென" அவரறியாது அஃதவரை விட்டு நழுவினும் நழுவும். எங்ஙனமாயினு மவர்க்கது குற்றமன்று. எமக்கு யோக ஞானம் வந்துவிட்டதென முனைப்புக்கொண்டு தாமே விடுவாராயின் குற்றமாம்.
ஒருசாரார் யாகத்துக் கொலை கூறப்படுதலால் சீவகருணையற்ற செயலைக்கூறும் நூல் கடவுள் சொன்னதன் றென்பார் பிறரெனக்கருதிக் குறிப்புப் பொருள் ஒன்றே கொள்வர். அது கூடாதென்பது மேலே விளக்கினாம்; கடைப்பிடிக்க.
கந்தபுராணத்திலே வள்ளியம்மை திருமணப்படலத்திலே,
"அன்னதொரு காலை யறுமா முகக்கடவுள் முன்னொருசார் வந்து முதுகளிற்றின் கோடொற்றப் பின்னொருசார் வந்து பிடியின் மருப்பூன்ற இந்நடுவே நின்றா னெறுழ்வயிரத் தூணேபோல்"
என்னும் இப்பாட்டில் 'கலித்துறை' என்பது "பாவகையைக் குறிப்பதாகக் கொள்ளின், அப்பாவ்கையினால் நால்வர் செய்த நான்மறைகள் அமைந்திருத்தல் கூடுமென்று கருதுதற்கு இடமுண்டு" என்றார் "விளக்க" முடையார்.
கொள்ளின் என்றாரே அங்ஙனம் கொண்டவர் யார்? கொள்ளச் சொன்னவர் யார்? என்னை? நல்லாசிரியரிடத்துக் கற்றறி மாண்புலவர் "ஏற்புழிக்கோடல்" என்னும் உத்தியை மேற்கொண்டு இடமறிந்து பொருள்கொள்வரன்றி அஃதொழிந்து பொருள் கொள்ளாராகலான்.
மாண்புலவர் கொள்ளார் எனவே, அங்ஙனங் கொள்பவர் "விளக்க" முடையார்தாமே யென்பது பெறப்பட்டது. அவர் கொள்கைபற்றி நமக்காவதியாதுமின்று; என்னை? அவர் தாம் வேதாகம வழக்கோடும் ஆன்றோர் வழக்கோடும் முற்றும் மாறு பட்டோராகலான்.
அங்ஙனம் கொள்ளினும் கலித்துறாஇயது பயந்த நல்லான் என நேரே முடிதலை அறியு மிலக்கண மறியாது நல்லாரல்லாத நால்வரைத் தாம் வலிந்துகொணர்ந்து அவர்கள் பயந்த கலித்துறையென முடிவு காண்டல் விந்தையினும் விந்தையே, முடிப்பினும் முடியாதென்பது நன்னூல் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்த நல்லோர் அறிவர், இவர் அறிந்தென்? அறியா தொழிந்தென்?
மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் அச்சிட்ட தோல்காப்பிய உரையுள் "கல்வித்துறை பயந்த" என்ற பாடங்காணப்படுகின்றது. அதனைமேற்கொண்டு "ஆராய்ச்சி" ஆசிரியர் அதற்கு வேதம் என்று பொருள் கண்டார், அதுவேசரி.
கலித்துறை என்பதில் கலி-ஒலி, துறை-நூல், எனவே ஒலித்தலையுடைய நூல் என்றபடி, ஒலி உதாத்த அநுதாத்த சுவரிதம், என்றதனால் வேதம் என்பது பெறப்பட்டவாறு காண்க.
கல்வித்துறை என்பதில் கல்வி-அறிவு, துறை-நூல், எனவே, பதி பசு பாசங்களை அறிதற்குக் கருவியாகிய நூல் என்க-எனவே, வேதம் என்றபடி; என்னை? வேதம் என்னும் பதத்திற்கும் பொருள் அதுவே யாகலான்.
இங்ஙனம் இடத்திற்கேற்ற உண்மைப் பொருள் நன்மை பயந்திருப்ப, அது காணமாட்டாது தம்மனம் போனவாறே திரிபு பொருள்கொண்ட இவர் தாம் பயனிழந்து பிறரையும் இழபித்தலால் வரும்பயன் தென்றிசைக் கோன்றன்னகத்ததேயன்றிப் பிறிதுயாதுமின்றே! "தூங்கானை மாடச்சுடர்க் கொழுந்தே"!! இவர்க்கு நல்லறிவுச் சுடர்கொளுத்தி உய்விக்குமாறு இங்கும் வேண்டுகின்றேன்.
மூவகை மக்களுள் முதற்கண்வைத்தெண்ணப்படும் சாமுசித்தராவார்:- கழிந்த பிறப்புக்களில் சரியை கிரியை முதலிய சாதனங்கள் நன்கனம் முற்றுப்பெற்று, இப்பிறப்பில் பிரபஞ்சத்தை நோக்காது வீடுகாதலித்து அன்புமாத்திரையானே முதல்வனை வழிபடுவோர். அவர்க்கு நூல் கருவியாகச் செய்யப்படும் மழிபாடுகளெல்லாம் முன்னரே முற்றுப் பெற்றபடியால் இப்போது நூல் வேண்டாம். முதல்வன்றானே பரகதியிற் சேர்ப்பன். கண்ணப்பர் முதலாயினார் சாமுசித்தர்.
இறுதிக்கண்வைத் தெண்ணப்படும் பிராகிருதராவார்:- காணப்படும் பிரபஞ்சமே யன்றி வேறுபொருளுண்டெனலறியாது அப்பிரபஞ்சவின்பத்தில் அழுந்தி நிற்கும்பேதையர். அவர் நூலறிவைக் கொடுப்பினுங் கொள்ளமாட்டார்; ஆகலான் அவர்க்கும் நூல் வேண்டாம்.
இடைக்கண்வைத் தெண்ணப்படும் வைகைகராவார்:-நித்தியாநித்தியவஸ்துவிவேகம் பிறத்தலால், அநித்தியப்பொருளாகிய பிரபஞ்சத்தைவிடுத்து நித்தியப் பொருளாகிய சிவத்தைத் தேடும் சற்கருமர், அவர், நூல், வழிகாட்ட அதன் வழிநடந்து சிவத்தைப் பெற முயல்வோராகலின், அவர்க்கு அத்தகைய நூல் வேண்டும். அருணந்திசிவாசாரியர் முதலியோர் வைநைகர்.
இங்ஙனம் சிவஞானசித்தியுட் கூறப்படுதலால் மாந்தர்க்குத் தீமைகுறித்த நூல்கள் எழுந்தோறும், பட்டுவர்க்கு நன்மை குறித்த எதிர்நூலும் அவ்வப்போழ்தெழுதல் போறமாதல் தெற்றெனவுணர்க.
எவராயினும் வேதாகம மார்க்கத்தை மறுத்துத் தமது கொள்கையை நிறுத்த வந்தால் அவரவலக் கொள்கையை மறுத்து வேதாகம செறியை நிறுத்த வல்லவர் அது செய்யாராயின், பெருங் குற்றம் என்பது,
"நிறுத்திடவ லானமல னூனெறியை யென்றும்
மறுத்திடவ லானவல மார்க்கமய லுற்றே
நிறுத்திலன் மறுத்தில னெனிற்கரிச னேசம்
அறுத்தவனை மாகைகரி சல்லவற மாமே."
என்னுஞ் சிவதருமோத்தரச் செய்யுளா னறிக.
"நிகர றுநற் சிவதரும சிவஞானத்தை
நிறுத்துடுலோ னிலுமுயர்ந்தோ னிலத்தி னில்லை
பகர்பரம சிவயோகி யவனே யாகும்
பரிவினிறுத் திடுமாற்றல் படைத்து முய்தி
அகலுமய லானிறுத்தா தொழிந்தோன் யோகி
யாயினுமீ சுரப்பிரிய னல்ல னன்னான்
புகருறுதீ நரகினிடை வீழ்ந்து புன்கண்
பொருந்திடுவ னெனமறைகள் புகலு மன்றே."
என்னும் அபியுக்தராகிய ஆன்றோர் செய்யுளும் ஈண்டே சிந்திக்கற்பாலது.
சிவதருமம்:-"மறைக ணிந்தனை சைவ நிந்தனை பொறாமனமும்" என்று திருநந்திதேவர் வேண்டியவண்ணம் வேதாகம தூடணங்கேட்டுச்சகியாது தூடணஞ் செய்தோரைக் கண்டித்தல், ஞானதானம், திருக்கோயில் கட்டுதல், புதுக்கல் என்றற்றொடக்கத்தன.
சிவஞானம்-சிவாகமம், அதனை நிறுத்தல்:-இருதிறப்படும், ஒன்று அதிற் கூறப்படும் பதிபசுபாசம் என்னும் முப்பொருளையுந் தாபித்தல். மற்றொன்று அவற்றை நிறுத்துதற்கு அவற்றைத் தெரிக்கு நூலில்வழி அது செய்யவியலாதாகலான், அவ்வாகமத்தைப் பல்லாற்றானும் பாதுகாத்தல். சிவஞானம் சிவாகம மென்பது:- "உயர்ஞான மிரண்டா மாறா மலமகலவகலாத மன்னு போதத்-திருவருளொன் றொன்றதனைத்தெளிய வோதுஞ் சிவாகமமென் றுலகறியச் செப்பு நூலே" என்னுஞ் சிவப்பிரகாசத் திருவிருத்தத்தானறிக.
அவ்விளக்கத்தை ஒருகூறு இருஉறு முக்கூறு நாற்கூறு படுத்திவிடல் ஆசிரியர் தமக்கு இலகு. அங்ஙனமாகவும் விளக்கத்தை எடுத்துப் பார்ப்போர் புரட்டிப்பார்த்தெறிதற்கு மிக இலகுவினு மிலகுவாக அறுபத்தொரு கூறு செய்து, செய்தவற்றை நூன் முகப்பிற் றுலங்கவைத்திருத்தல் நூலினுள் மிக விரித்திருக்கும் விஷயங்களை முன்னரே இலகுவாகத் தெரிக்கும் பாயிரம் வைத்திருத்தலைப் போன்றிருக்கும் அழகு பாராட்டற் பாலது.
"விளக்க" முடையார் எந்தெந்த நூலிலிருந்து தமது கொள்கைக்குப் பிரமாணங் காட்டினாரோ! அந்தந்தப் பிரமாணம் அவர் கொள்கையைச்சாதிக்கு மாற்றலின்றித் தமது கொள்கையைச்சாதிக்கும் ஆற்றன் மிகுதிப்பாட்டை "ஆராய்ச்சி" நூலாசிரியர், அழகுபெற விளக்கிக் காட்டிய புத்தி நுட்பம் புலவர் போற்றற் பாலது.
உலகம் - உயர்ந்தோர். என்னை? "உலகமென்ப துயர்ந்தோர் மாட்டே" என்ப; ஆகலான். ஈண்டுக் கருத்தாவாகு பெயராய் அவர் ஒழுகலாற்றை உணர்த்தி நின்றது.
"அறிதொழிலோர்" என்னும் பாடத்திற்கு முன்னதிகாரம் பின்னதி காரங்கட்கும் முற்செய்யுள் பிற் செய்யுள்கட்கும் முரணாமல் பொருள் கூறற்கு ஒரு முகனாய்வந்து திருக்குறள் செய்தருளிப் பின்மறைந்து நான்முகனாய் பிரமா மீட்டு ஐமுகனாய் வரினு முடியாது.
ஆகலாற் கழகத்தார் சைவசமயநூல்களை மனம் போனவாறு திருத்தி நூல்வரம் பழித்து அதன் சொருபத்தைக் கெடுத்து மெய்ப் பொருள் தோன்றாதவாறு செய்து சைவர்கட்கு ஏதஞ் செய்யாமல், பழையவித்துவான்கள் எல்லாவாற்றாலும் பொருத்தமுறு பொருளுடைய பாடத்தை அறிந்து கரலிகித வழூஉக் களைந்து நூல்களை அச்சிட்டது போல, அச்சிடல் வேண்டும் என்பதைச் சம்பந்த நேர்ந்தவழித் தெரித்தாம். அதனால் எமது கடப்பாட்டை யாம் குறிக்கொண்டு செய்தே மாயினேம்; எமக்கொரு குறையு மின்று. அவர் அதுசெய்யாராயின் குற்றத்துட்பட்டுத் துன்பமுறுவர். அது நிற்க.
மற்றுத் திருக்குறள் அதிகாரங்கள் தனித்தனி படிக்கப்படும் போது அதுஅது சிறந்ததாகத் தோன்றுமாறுபோல, ஆராய்ச்சி எதிர்நூலின்கணுள்ள அறுபத்தொரு பகுதிகளும் தனித்தனி படிக்கும்போது அதுஅது சிறந்ததாகத் தோன்றும் மாட்சி அத்தியற்புதமாயிருக்கின்றது.
ஆயினும் ஐபத்தொன்பதாம் பகுதியில் "மறை, நான்மறை, அந்தணர், பார்ப்பார் என்னுஞ் சொற்களின் வழக்கைப் பின்னுமோர் முறையிற் சிறப்புவகையாய் ஆராய்ந்து சித்தாந்தஞ்செய்வாம்" என்று கூறப்பட்டிருத்தலைக் கண்டு அதன்கண் வேணவாக்கொண்டு அதனை நாமுஞ் சிறப்புவகையா னோக்க வேண்டுமென்று கருதி அவ்வாறே நோக்கினோம். அவ்வழிச், "சிறப்புவாகியாய் ஆராய்ந்து" என்பது மிக்கபிழையெனச் சித்தாந்தஞ் செய்தேம். என்னை? அவை சிறப்பினும் அதிசிறப்பாய் ஆராய்ந்திருத்தலா னென்க.
ஆதலால் அப்பகுதியைப் பன்முறை பார்வையிட்டு உன்னரு மகிழ்சிமீக் கூர்ந்து ஆசிரியரது "நுண்மாணுழை புல" நோக்கி எண்மாண்ட விறும்பூ தெய்தினேம்.
இந்தப் பகுதியை எம்மைப் போலவே யாவரும் பன்முறை பார்த்து உண்மை யோர்ந்து ஆசிரியர் வன்மை தேர்ந்து, "யான்பெற்ற வின்பம் பெறுகவிவ் வையகம்" என்று திருமூல நாயனார் திருவாய் மலர்ந்தருளியதுபோல யாம் பெற்ற வின்பம் பெறுமாறு விரும்புகின்றேம்.
முக்கியமாகிய அறுபத்தொரு பகுதிகளும் நியாய வாயிலாக மறுக்கப்படவே, அமுக்கியமென்று ஒதுக்கிவிடப்பட்டனவும் மறுக்கப்பட்டமை தானே போதரு மென்றுணர்க.
இனி இத்தகைய பெருமை வாய்ந்த பன்னூற்களஞ்சியமாகிய "திருநான்மறை விளக்கவாராய்ச்சி" என்னு மிவ் "வெதிநூலை" வெளிப்படுத்தினவர் இயற்றிய ஆசிரியரவர்களோ! அச்சிடுவித்து முடித்த S.I.Ry ஜனரல் டிராபிக் மானேஜர் ஆபீசு ஹெட் கிளர்க்கு ஸ்ரீமாந். A.குழந்தைவேலுப் பிள்ளையவர்களோ! என்னும் ஐயப்பாட்டின்கண் எமது அபிப்பிராயம் இஃதெனத் தெரிக்கின்றாம்.
ஆசிரியரவர்கள், சிவபெரு மானால் "நீரோ பெரிய சிறுத்தொண்ட" ரெனத் திருவாய்மலர்ந்தருளப் பெற்ற சிறுத்தொண்ட நாயனாரைப் போல யாவர்க்குந் தம்மைச் சிறியராகக் காட்டி ஒழுகும் ஒழுகலாறுடையராயினும், ஆக்கையானும், ஆயுளானும், அறிவானும், அனேகநூ லாராய்ச்சியானும், அனேக "எதிர்நூல்கள்" ஆக்கலானும், இன்னோரன்னபிறவற்றானும் பெரியராய்க் கோலூன்று பருவக் கோலத்த ராயினமையின், தாமியற்றிய நூலை அச்சிடுவித்தற் பொருட்டு அச்சியந்திரசாலைக்குப் போக்கு வரவு செய்யத் தமக்கியலாத நிலைமையை யுற்றுநோக்கித், தமக்கதிப்பிரிய நண்பராகிய ஸ்ரீமாந். A.குழந்தைவேலுப்பிள்ளையவர்களிடம் அவ்வேலையை ஒப்பித்துவிட்டார்கள்.
அப்பிள்ளையவர்களும் சிவபத்தி, சிவனடியார்பத்தி, சிவாலயவழிபாடு, விபூதி உருத்திராக்க விசுவாசம், அறிஞர்மாட்டன்பு, பொதுநலப்பிரியம், உற்றவிடத்துதவல் முதலிய நலப்பாட்டிற் சிறாந்த்வர்களாகலான், இது தமக்கு வாய்ப்புடைத் தாயதோர் சிவபுண்ணிய கைங்கரியமெனக் கருதி அதற்குடன்பட்டுத் தமது இல்லத்து வேலைகளையும் பராமுகப்படுத்தி ஒன்பது திங்கள் ஓயாது யந்திரசாலைக்குப் போதல், வருதல் புறூப் (proof) பார்த்தல் முதலிய பல வேலைகளையுஞ் செய்து அச்சிடுவித்துப் பூர்த்தி பண்ணினார்கள்.
நிகழ்ந்தவண்ணம் இவ்வண்ண தொழிந்தால் ஆசிரியவர்கள் அச்சிட்டு வெளிப்படுத்த லின்று. ஆசிரியரவர்கள் நூல் செய்யாவிடின் இவர்கள் அச்சிட்டு வெளிப்படுத்துதலுமின்றாகலான்.
சுப்பிரமணியக்கடவுள் சூரபன்மனோடு செய்த யுத்தத்திலே அவனது படையை வீட்டச் செலுத்திய பாணவேகத்தையும், வாயுதேவன் செலுத்திய தேர்வேகத்தியையும் தேவர்கள் பார்த்து அக்கடவுள் சரவேகமோ! வாயுவின்கைவேகமோ! மிக்கதென்று சொல்லமுடியாமல் நின்றாற் போலவும்.
சுப்பிரமணியக்கடவுள் மருங்கு நின்ற தேவர் முதலாயினோர் அவர் கரவேகத்தையும், வாயுதேவன் தூண்டும் தேர்வேகத்தையும், மனோவேகத்தினும் விரைவாக வத்தேரைத் தூண்டும் அவன் கரவேகத்தையும் நோக்கி இன்னதினும் இன்னது மிக்க வேகத்ததென அறியமாட்டாதவர்களாய் அவற்றை ஒருங்கே புகழ்ந்தாற் போல.
கலிவலிமிக்க விக்காலத்திலே இவர்களைப்போல மற்றெவர்களும் சைவசமயாபிமானத்தாலும், சிவபத்தியாலும், நிலையிற் பிரியாமையாலும், உண்மை நிலைமையாலும் மேம்பட்டு இன்னோரன்ன பயன்படு நன்முயற்சிகளைச் செய்யமாட்டார்க ளென்று இருவரையும் ஒருங்கே புகழ்கின்றாம்.
இத்தகைய சிவபுண்ணிய கைங்கரியத்தின் மேம்பட்ட உத்தம புருஷர்கள் இருவரும் "இருதலைப்புள்ளி னோருயிர் போல" அரோக திடகாத்திரர்களாய்ப் பூரணாயுளுடன் எக்குறையுமின்றி இன்பப் பெருவாழ் வெய்தி இன்னு மின்னும் நன்னர் "எதிர்நூல்" பல ஒருவரியற்றிடவும், ஒருவர் அவற்றை அச்சுவாகனமேற்றவும், அதனால் யாவரும் ஆன்மலாபமடையும் பெருங் கருணை பாலிக்குமாறு அகண்டாகார நித்தவியாபக சச்சிதானந்தப் பிழம்பாகிய சிவ சங்கர நாமத் தனிமுதல் வன்றிருவடிக்கமல மெமதொரு முடிக்கமலமாகக் கொண்டு முப்போதும் முக்கரணங்களானும் மூவித வழிபாடுஞ் செய்கின்றாம்.
அக்ஷய வருஷம் இங்ஙனம், ஆவணி மீ உஎஉ சுவாமிநாத பண்டிதர்.
நூல் ஆக்கியோன் குறிப்பு:- மேலே அச்சிடப்பட்டிருக்கின்ற அபிப்பிராயங்கள் எமக்குக் கிடைத்த காலக்கிரமத்தானே வைக்கப்பட்டு அச்சிடப்பட்டன.
எமது வேண்டுகோட்கிணங்கி அவரவர்கட்குரிய அரிய பெரிய இன்றியமையா வேலைகளுடன் சைவவுலகு உண்மையைக் கைக்கொள்ளு நிமித்தம் அபிப்பிராயம் எழுதி உபகரித்த வித்துவப் பெரியார்கட்குத் திரிகரணசுத்தியோடு வந்தனஞ் சமர்ப்பிக்கின்றோம்.
விசேடக்குறிப்பு:- மேற்காட்டிய பெருமக்கள் அபிப்பிராயங்களில் புழுத்த நாயினுங்கடையனாகிய அடியேனைப் பலவாறு பெருமைப்படுத்தி யெழுதியிருக்கின்றார்கள். அது வேண்டாவெனப் பன்முறைப் பிரார்த்தித்துக் கேட்டுகொள்ளவும் அவர்கள் உடன்படாததானால், அவர்கள் ஆணையை மறுக்க அஞ்சி அவர்கள் எழுதியவாறே அச்சிடப்பட்டன. பெரியோர்கள் பொறுத்தருளுவாராக.