Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 04 அறன் வலியுறுத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்:


Guru

Status: Offline
Posts: 7474
Date:
04 அறன் வலியுறுத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்:
Permalink  
 


அறத்துப்பாலுக்குத் தோற்றுவாயாக அறனை வலியுறுத்தியவர் ஏனைப் பாலையும் தனிச் சிறப்போடு விதந்து கூறுபவராயின் பொருள் செயல்வகை, இன்பநலன் என்று தனித்தனியே செயப்படு பொருளைப் பாயிரத்தில் சொல்லுதல் வேண்டும். அங்ஙனம் அன்றி, அறன் வலியுறுத்தல் ஒன்றே உணர்த்தலின், இவர் நுதலிப் புகுந்தது அறம் ஒன்றுமே என்பதும், ஏனைய இரண்டும் இதனுள் அடங்கியனவே என்பதும் அதனாலேயே அறத்தின் பகுதியாகவே ஏனைய இரு பாலையும் ஓதினார் என்பதும் நுனித்து அறியத் தக்கன.
- ச தண்டபாணி தேசிகர்

 

குறளின் திரள் பொருளே அறன்வலியுறுத்தல்தான். அறன் வலியுறுத்தலாவது அறன் வலிமையுடைத்து என்பதனை அறிவுறுத்தலும், அறநெறியே மாந்தரின் நல்வாழ்வுக்கு உகந்தது என வற்புறுத்திக் கூறுவதுமாம். இவ்வதிகாரம் அறத்தின் விழுப்பம் கூறி அதன் இயல்பு வரையறுத்து அறச்செயல் எது என்பதைச் சொல்லி அதனால் பெறப்படும் பேறுகளை விளக்குகிறது. அறவோர்க்கே அறம் சிறப்பானாலும் எல்லோர் வாழ்விலும் அது அடிப்படை ஆதல் வேண்டும் என்பது உணர்த்தப்படுகிறது.

அறன் வலியுறுத்தல்

திருக்குறள் பனுவலுக்குத் திறவுகோலாக அமைவது அறன் வலியுறுத்தல் அதிகாரம்.
குறள்நூல் தொடக்கம் முதல் முடிவு வரை அறத்தையே உணர்த்துவது. தனிஅறம் பேசியதாலும், பொருள் செய்தலில் மேற்கொள்ள வேண்டிய பொருள் வாழ்க்கை அறங்கள் கூறியதாலும், களவும் கற்புமாகிய காமஇன்ப வாழ்க்கையும் அறத்தொடு அமையவேண்டும் என்று அறிவுறுத்துவதாலும், பொருளும் இன்பமும் அறமாகவே அடங்கவேண்டும் என்று குறள் வலியுறுத்துவது தெளிவு. புறநானூறு பொருளும் காமமும் அறத்தின் வழிகளில் செல்லும் என்று முன்னர் சொன்னது: சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்து வழிப்படூஉந் தோற்றம் போல (புறநானூறு.37 பொருள்: மேன்மையுடைய முறைமையினால் பொருளும் காமமும் அறத்தின் பின்னே தோன்றும் காடசியைப் போல.) அறன் வலியுறுத்தல் என்பது அறத்தை வலியுறுத்திக் கூறுதலும் அதாவது அறத்தைப் பின்பற்றவேண்டிய இன்றியமையாமையைக் குறிப்பிட்டு நிற்றலும், அறத்தை மக்கள் கடைப்பிடிக்கவேண்டும் எனச் சொல்வதும் ஆகும். அறன் வலியுறுத்தல் அதிகாரம், அறத்தின் பொது இலக்கணம் கூறி, ஏனைய பொருளும் இன்பமும் அறவழி வருவனவாகவே இருக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

'அறம்' என்பது நற்செயல் என்பதைச் சுட்டும் கலைச்சொல். அறம் என்பதை அறு+அம் என்று விரிப்பர். அறு என்பது அறுத்துச் செல் என்ற பொருள் தரும். அறுத்துக் கொள்ளப் பயன்படுவது அறம் என்பர். சிக்கல் நிறைந்தது வாழ்க்கை. அவரவர் தன் வழியிலுள்ள சிக்கல் அறுத்து நிறைவான வாழ்வு அமைக்கத் துணை செய்வது அறம். மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே-முழுநிறைவடிவமே-அறம் என்று கூறுவர். இச்சொல் காலப்போக்கில் பல்வேறு பொருள்களை உணர்த்தும் பொருள் செறிவு வாய்ந்த சொல்லாகச் சிறப்புற்று விரிவடைந்தது. அறம் என்ற சொல் நன்மை, ஈகை, நீதி முதலிய பொருள்களில் வழங்கலாயிற்று. நல்வாழ்வுக்குப் பயன்படுகின்ற அத்துணைப் பொருள்களையும் தன்னுள் தழுவி நிற்பது அறம். பொதுவாக நல்லொழுக்கமும் நற்செய்கைகளும் அறம் என்று அறியப்படும்.

ஒழுக்கச் செயலுக்கு அடிப்படையாக இருப்பது எண்ணமாகும். எண்ணம் தூய்மையாக இருந்தால்தான் சொல்லும் செயலும் தூய்மையாக அமைய முடியும். எனவே எண்ணம் தூய்மையாக இருக்கவேண்டுமானால், மனம் மாசு இல்லாததாக இருக்க வேண்டும் என்கிறது இவ்வதிகாரத்துப் பாடல் ஒன்று. மனம் மாசற்றுத் தூய்மையாக இருக்கும் நிலையே அறம் எனப்படும். இவ்வாறு அறத்திற்குப் பொது இலக்கணம் கூறியபின் மனம் சார்ந்த அறத்தின் பண்புகளாகக் கடிந்தொழுக வேண்டியவற்றில் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் ஆகிய நான்கும் குறிப்பாகச் சொல்லப்படுகின்றன.

அறத்திற்கு வரையறை செய்து (குறள் 34,35) அறத்தின் சிறப்பு கூறி (குறள் 31,32) எப்பொழுது அறம் செய்வது, ஏன் அறம் செய்யவேண்டும் (குறள் 33,36,38, 39) எனக் கூறி, செய்ய்யத்தக்கன பழியில்லா அறம்(குறள் 40) என்று அதிகாரம் முடிவடைகிறது. இடையில், உலகியல் காட்சி ஒன்றைக் காண்பித்து அறக்கருத்து தவறாகப்புரிந்து கொள்ளப்படக்கூடாது (37) என்பதும் தெளிவாக்கப்படுகிறது.

அறன் வலியுறுத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்:

 

  • 31 ஆம்குறள் அறவாழ்வு மேற்கொண்டோர் சிறப்பையும் செல்வத்தையும் பெறுவர் என்கிறது.
  • 32 ஆம்குறள் அறம் செய்வதை எப்பொழுதும் மறத்தலாகாது என்று சொல்வது.
  • 33 ஆம்குறள் இயன்ற வழிவகையில் எல்லாம், இடைவிடாது, அறத்தைச் செய்யத்தகும் இடமெல்லாம் செய்க எனத் தூண்டுவது.
  • 34 ஆம்குறள் உள்ளத்தைத் தூய்மையாக வைத்திருந்து, ஆர்ப்பாட்டம் இன்றி, அறம் செய்க என்று கூறுவது.
  • 35 ஆம்குறள் பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் இவை நான்கையும் ஒழித்து நடப்பதே அறம் என்று கூறுவது.
  • 36 ஆம்குறள் அன்றைக்குப் பார்த்துக்கொள்ளலாம் எனத் தள்ளிப்போடாது அறம் செய்க; அது கடைசிக் காலத்தில் அழியாத துணையாய் இருக்கும் என்று அறிவுறுத்துவது.
  • 37 ஆம்குறள் அறக்கருத்து பிழைபடவேண்டாம் எனத் தெளிவுறுத்துவது.
  • 38 ஆம்குறள் இடையீடு இல்லாமல் அறம் செய்தால் இன்னல்-இடைவெளி இல்லாது வாழ்வு அமையும்; வாழ்நாள் முழுதும் அறம் செய்க என அறிவுறுத்துகிறது.
  • 39 ஆம்குறள் நல்லொழுக்கத்தாலும் நற்செயல்களாலும் கிடைப்பது மட்டுமே இன்பம்; மற்றவை வேறானவை, புகழும் தரா என்று முடிவாகக் கூறுவது.
  • 40 ஆம்குறள் கருத்துடன் செய்யவேண்டியது அறமே; ஆராய்ந்து விலக்க வேண்டியது பழியே என்று அறிவுறுத்துவது.

 

 

 

அறன் வலியுறுத்தல் அதிகாரச் சிறப்பு

குறளில் உள்ள எல்லா அதிகாரங்களும் அறங்கூறுவனவே. இவ்வதிகாரங்களுக்கெல்லாம் அறன் வலியுறுத்தல் முன்னுரை ஆகும். அறத்தொடு ஈட்டும் பொருளையும் நுகரும் இன்பத்தையுமே இது விளக்குவதால், குறளுக்குச் செயப்படுபொருளாக அமைவது அறமே. அறத்தின் வலிமையை வலியுறுத்தவே குறள் யாக்கப்பட்டது. அறவாழ்வு பற்றிச் சொல்வது குறள். 'செயற்பால தோரும் அறனே' 'அறத்தான் வருவதே இன்பம்' என்று அறன் வலியுறுத்தல் கூறும்.

அறன் வலியுறுத்தல் குறளின் பாயிர அதிகாரங்களாகக் கருதப்படும் நான்கு அதிகாரங்களில் ஒன்றாக உள்ளது (மற்றவை கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை ஆகியன). சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு என்று அறவழி தேடிய பொருள் இயல்பை எடுத்துக்காட்டியதாலும், புற இன்பங்களும் அக இன்பங்களும் அறத்தொடுபட்டு ஆவதே என்று கூறுவதாலும், பொருளும் இன்பமும் அறமாகவே அடங்கும் முறைமை அறன் வலியுறுத்தல் ஆனது.

இவ்வதிகாரத்தின் மூலம் வள்ளுவரின் அறம் பற்றிய மனஓட்டங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவருக்கு அறமே எல்லாம். மாந்தர் அறத்தை மறவாமல் செய்யவேண்டும் என்பது அவர் விருப்பம். எவ்வெவ்வழிகளெல்லாம் அறம் செய்யமுடியுமோ அவ்வவ்வழிகளில் அறம் செய்யவேண்டும்; ஒருநாள் கூட வீணாக்காமல் அறம் செய்ய வேண்டும்; பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்றிராமல் அறம் செய்யவேண்டும். உள்ளம் தூய்மையாக இருந்தால் அதுவே எல்லா அறமுமாம் என்ற எளிய அறநெறி ஒன்றும் சொல்கிறார். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் என்ற நான்கு அறமற்ற எண்ணங்களும் பேச்சும் அறத்திற்கு எதிரானவை என்கிறார். அறவழி நின்றால் இயற்கையின் துணை கிடைக்கும் என்று அவர் நம்புகிறார் என்பதும் தெரிகிறது. அறத்திற்கு எதிர்ச்சொல்லாக 'பழி'யை ஆள்கிறார். பழி ஏற்படாவண்ணம் ஆராய்ந்து காத்துக்கொள்ளவேண்டும் என்று எச்சரிக்கவும் செய்கிறார். அறச்செயல்களால் வருவது மட்டுமே உண்மையான இன்பம் என்கிறார்.

அறவாழ்க்கையின் பயனை எடுத்துரைப்பதில் குறள் தனித்துவம் வாய்ந்தது. 'பொருள் தேடப் போனால் அறத்தைக் கைவிட வேண்டி வரும்' என்று பேராசை கொண்ட செல்வர்கள் ஒருபுறமும், சமயம் சார்ந்த அறநூல்கள் 'இப்பிறவியில் துன்பப்பட்டால், பிறவிக் கடலைக் கடக்கலாம்' என்று மறுபுறமும் குழப்ப, இவ்வதிகாரம் 'சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறம்; என்றும் 'அறத்தான் வருவதே இன்பம்' என்றும் அறம் செய்வதால் கிடைக்கப்பெறும் பயன்களை தெளிவாகக் கூறுகிறது.

மனத்துக்கண் மாசிலன் ஆதல்... என்ற அறத்துக்கான அரிய வரையறை கண்ட குறள் 34 இவ்வதிகாரத்திலேதான் உள்ளது.

புறத்தோற்றத்தைக் கண்டு அறத்தின் பயனை அளந்தறியாதே என்று வாழ்க்கை வேறுபாடுகள் உலகியலாலும் செல்வ வேறுபாட்டாலும் தோன்றுவதே தவிர, அறத்தின்பாற் பட்டதன்று என்ற தெளிவையும் தரும் அறத்தாறு இதுவென வேண்டா என்ற குறளும் (37 இந்த அதிகாரத்தில் அமைந்ததே.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard