Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 098 பெருமை அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7467
Date:
098 பெருமை அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


openQuotes.jpgபெருமையாவது மானம்‌ உடையார்க்கு வரும்‌ மேன்மையாம்‌. இங்கே மேன்மையுற்றாராகிய பெரியாரின்‌ குணம்‌ செயல்கள்பற்றி விவரிக்கப்பட்டுள்ளன. பொதுவாக மேன்‌ மக்களின்‌ இயல்பு இவ்‌வதிகாரத்துள்‌ பேசப்படுகிறது என்னலாம்‌.
- மு சண்முகம்பிள்ளை

 

ஒருவர் தாம் வாழ்கின்ற காலத்துப் புகழுடனும் செல்வம் செல்வாக்குடனும் திகழ்வதை ஒளி என்னும் சொல்லால் இவ்வதிகாரப் பாடல் ஒன்றில் குறிக்கிறார் வள்ளுவர். இந்தஒளி மிக்குத் தோன்றுதலுடைமையைக் குறிப்பது. அதுவே பெருமை எனப்படுவது. ஊக்க மிகுதியுடைய ஒளியுள்ள வாழ்க்கையை நடத்திச் செயற்கரிய செயல்களைச் செய்பவராயும் தருக்கில்லாதவராயும் பிறர்க்குண்டான குறைவுகளைக் கூறாதிருப்பவராயும் விளங்குபவர் பெருமையுடையவராவர். பெருமையை மதிப்பீடு செய்வது இவ்வதிகாரத்தின் பொருணோக்காம்.

பெருமை

'ஏதோ வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்' என ஊக்கமிழந்து வாழ்வது மாந்தர்க்குப் பெருமை சேர்க்காது. செயற்கரிய செய்து காட்டி புகழுடன் வாழ்தலே பெருமைக்குரிய வாழ்வாகும்; அறிவு, ஆற்றல், ஒழுக்கங்களால் ஒருவர் அடையக்கூடிய உயர்வு அது. பெரியர்செய்வன செய்தலும் சிறியர்செய்வன செய்யாமையும் பெருமை தரும். பெருமை பற்றிய கொள்கையோடு வாழ்பவர்கள் பெரியாராவர். பெருமையுடையவர் தருக்கின்மை, பிறர்‌ குற்றம்கூறாமை ஆகிய நற்குணங்களும்‌ கொண்டவராயிருப்பர். ஒருவர் எய்தும் பெருமைக்கு வள்ளுவர், ஊழ் முதலானவற்றைக் காரணமாகக் கொள்ளவில்லை. அவரவர் பெருமைக்கு அவரவர்களும் அவரவர்கள் செய்கை வேறுபாடுகளுமே காரணம் என்கிறார் அவர். இவ்வதிகாரத்துப் பாடல்கள் மட்டுமல்லாமல் குறளுள் பலவிடத்து உலகவர்களில் பெருமையுடையவர்கள் பற்றிச் சொல்லப்பட்டுள்ளன.

பெருமை என்பது ஓர் பண்பு. அது அறிவால் உய்த்துணரப் பெறுவது. 'குன்றினது உயர்ச்சியை அந்த குன்று அறியமாட்டாது' என்பது போலப் பிறர் மதிக்கவும், தானறியாதும் இருப்பதே பெருமை. பெருமைக்கு எதிர்ச்சொல்‌ சிறுமை. பொன், மணியின் மதிப்புப் போலப் பெருமை சிறுமைகள் பிறரால் மதிக்கப்படுவனவே யன்றித் தாம் கருதுவனவல்ல. ஒருவரது பெருமையாவது மற்றவர்களால் தகுதி நலங்கருதிப் மதிக்கப்படுவது. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் (நீத்தார் பெருமை 26 பொருள்: செய்வதற்கு அரிய செயல்களைச் செய்பவர்கள் பெரியவர்கள்; அரிய செயல்களைச் செய்ய இயலாதோர் சிறியர்) என்ற குறள் செயற்கரிய செய்து பெருமை அடைபவரைச் சொல்கிறது.
பெருமையும் சிறுமையும்‌ ஒருவருடைய பிறப்பினால் அறியப்படாது அவரவருடைய செய்தொழில்களின்‌ ஏற்றத்‌ தாழ்வுகளால்‌ மதிப்பிடப்படும் என்கிறது இவ்வதிகாரத்துப் புகழ்பெற்ற பாடல் ஒன்று. பெருமை யுடையாரைக்‌ கூறுமுகத்தால்‌ அவர்க்கு மாறான செயலுடைய சிறியாரையும்‌ சுட்டிக்கூறி, இப்பெரியாரின்‌ மேன்மை புலப்‌படுத்தப்பட்டது‌. சிறியார் சிறியர்‌, மேலல்லார், சீரல்லவர் போன்ற சொற்களால்‌ குறிக்கப்பெறுகின்றனர்.

ஒருபாடலில் பெருமையைக் குறிக்க ஒளி என்ற சொல் ஆளப்பட்டது. அப்பாடல் ஒருவனுக்கு ஏற்படும் ஊக்க மிகுதி பற்றியது. பெருமையுடையவர் பிறரால் செய்தற்கரிய செயல்களையும் நெறி முறைப்படி செய்து முடிப்பர். பிறப்பால் மட்டுமே யார்க்கும் பெருமை கிடைப்பதில்லை; செய்யும் தொழிற்கேற்ப பெருமையிலும் உயர்வும் தாழ்வுமுண்டு; உயரிய செயல்கள் ஆற்றுவோர் உயர்ந்தவர்களாக ஆகின்றனர். எனவே கீழ் நிலையில் உள்ள ஒருவரும் பெருமைக்குரியவனாக ஆகிறார். ஆனால் பெருமைக்குரிய குணங்களைப் பெறாதவன் உயர்வான பதவிகள் அல்லது மேலான செல்வநிலையில் இருந்து அவற்றைக் கொண்டே தன்னை உயர்வுடையவனாகக் காட்டிக் கொண்டாலும் அவன் மேலானவனல்லன். பெரியவர்கள் பணிவுடன் பழகுவார்கள்; தருக்கின்றி இருப்பர்; சிறியவர்கள் பெருமையில்லாதபோதும் தம்மைத் தாமே புகழ்ந்து மகிழ்ச்சி கொள்வர்; செருக்குடன் உலவுவர். பெருமைக்குரியவர்கள் பிறர் உற்ற அவமானச் செய்திகளை நீக்கிக் கூறுவர். சிறுமையானது பிறரது குற்றங்களையே சொல்லிக்கொண்டிருக்கும். பெரியாரைப் பின்பற்றிக்கொள்வோம் என்ற உணர்வு சிறியோர்க்குத் தோன்றுவதே இல்லை. பெருமைக்குணம் இல்லாத சிறியார்க்குச் சிறப்பு செய்யப்பட்டால் தாறுமாறாகச் செயல்படுவர். அவரவர் எய்தும் பெருமைக்கு அவரவர்கள் செய்கையே காரணம்; கற்புடைய மகளிர்போல, ஒரு ஆடவனும் மனக்கட்டுப்பாடுடன் புறம்போகவில்லையானால் பெருமை பெறுவான். இவை பெருமைப் பாடல் தொகுதி தரும் செய்திகள்.

பெருமை அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 971ஆம் குறள் ஒருவர்க்கு மதிப்பாவது அவருடைய ஊக்கம் மிகுதியே; அதனை நீங்கி வாழ்தல் என்பது குறைபாடாகும் என்கிறது.
  • 972ஆம் குறள் எல்லா உயிர்களுக்கும் பிறப்பால் வேறுபாடில்லை; செய்யும் தொழிலின் வேற்றுமையால் சிறப்பு ஒன்றாக இருக்காது என்று சொல்கிறது.
  • 973ஆம் குறள் மேலிருந்தும் மேன்மையில்லாதார் மேலானவராகார்; கீழ்நிலையில் இருந்தும் கீழ்மை யில்லாதார் கீழ்மக்களாகார் என்கிறது.
  • 974ஆம் குறள் ஒரு நிலையில் மனத்தை வைத்துக் கொள்ளும் மாதர்போல, பெருமையும் ஒருவன் தன்னைத்தானே உறுதியில் வழுவாமற் காத்து நடந்தால் உண்டாகும் என்கிறது.
  • 975ஆம் குறள் பெருமை பெற்றவர் அரிய செயல்களை முறையாகச் செய்து முடிக்கும் திறன் கொண்டவராவர் எனச் சொல்கிறது.
  • 976ஆம் குறள் பெரியவர்களைப் போற்றிக் கொள்வோம் என்னும் கருத்து சிறுமைக்குணம் கொண்டோர் அறிவிற் தோன்றுவதில்லை என்கிறது.
  • 977ஆம் குறள் சிறப்புக்கள் சிறியாரிடத்துப் படுமாயின் அது நெறிகடந்த செயல்களை உடைத்தாம் எனச் சொல்கிறது.
  • 978ஆம் குறள் பெருமையுடையவர் எக்காலத்தும் பணிவுடையவர்களாய் இருப்பர்; சிறியோர்கள் தம்மைத்தாமே வியந்து பாராட்டிக் கொள்வர் எனச் சொல்கிறது.
  • 979ஆம் குறள் செருக்கில்லாமல் இருத்தல் பெருமை, சிறுமைக் குணம் என்பது தருக்கி உலாவருதல் என்கிறது.
  • 980ஆவது குறள் பெருமையுடையவர் பிறரது மானக் கேட்டை மறைப்பர்; சிறுமையுடையவர் பிறர் குற்றங்களை மட்டும் கூறிவிடுவர் என்கிறது.

 

பெருமை அதிகாரச் சிறப்பியல்புகள்

பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான் (972) என்பது அறிஞர்களால் மிகவும் போற்றப்பட்ட குறட்பாவாம். அக்குறள் இவ்வதிகார்த்திலேதான் உள்ளது. ஓரறிவு உயிர்முதல் ஆறறிவு படைத்த மனிதன் ஈறாக உள்ள எல்லா உயிர்களுக்கும் பிறப்பினால் வேற்றுமை இல்லை. ஆனால் அந்தந்த உயிர்கள் செய்யும் தொழிலால், செயல்களால் உண்டாகும் வேற்றுமையால் உயர்வு தாழ்வுகள் உண்டாகின்றன என்பது இதன் கருத்து.
இதை மேலும் தெளிவு படுத்தும் வகையில் மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர் (973) என அடுத்த குறள் வருகிறது. மேன்மைக்குரிய குணங்களைப் பெறாதவன் உயர்வான பதவிகள் அல்லது பெருகிய செல்வநிலையில் இருந்து அவற்றைக் கொண்டே தன்னை மேலானவனாகக் காட்டிக் கொண்டாலும் அவன் மேலானவனல்லன். மாறாக கீழ்நிலையில் உள்ள ஒருவர் கீழ்மைக் குணங்கள் இல்லாமல் இருந்தால், அவர் கீழானவராக மாட்டார் என்பது இதன் பொருள்.

பாலியல் ஒழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டும்தான் என்பது வள்ளுவருக்கு ஒவ்வாத கருத்து. ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டுஒழுகின் உண்டு (974) என்ற பாடல் தன்னை மணந்து கொண்டவளுக்கு உண்மையாக இருந்தால் ஆடவரும் பெருமை பெறுவர் என்கிறது.

பெருமை என்றால் செருக்குடன் தலைநிமிர்ந்து நடப்பது என்ற புரிவை மாற்றும் வகையில் பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து (978) என்ற குறள் அமைகிறது.

தன்னைப் பற்றி மிக உயர்வாகவும் பெருமிதமாகவும் நினைத்துக் கொள்வது பெருமைக்குரியதாகாது என்பதை 'பெருமை பெருமிதமின்மை' என்ற குறளில் வள்ளுவர் தெளிவாகக் கூறுகிறார். பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல் (979) என்பது அப்பாடல்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard