Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 099 சான்றாண்மை அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7467
Date:
099 சான்றாண்மை அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


openQuotes.jpgசான்றாண்மையாவது நற்குணங்கள்‌ பலவற்றானும்‌ அமைந்‌தார்‌ இலக்கணம்‌ கூறுதல்‌. பெருமையுள்‌ அடங்காத குணங்கள்‌ பலவற்றையும்‌ உள்ளடக்கிக்‌ கொண்டிருத்தலால்‌ அதன்பின்‌ இது வைக்கப்பட்டுள்ளது. 'சால்தல்' என்பது நிறைதல்‌ என்னும்‌ பொருள்‌ தரும்‌, நற்‌குணங்கள்‌ பலவற்றானும்‌ நிறைதலே சான்றாண்மையாம்‌. இதனைச்‌ 'சால்பு' என்றும்‌ வழங்குவர்‌. சால்பு என்னும்‌ பாரத்தை அன்பு, நாண்‌, ஒப்புரவு, கண்‌ணோட்டம்‌, வாய்மை என்னும்‌ ஐந்தும்‌ தூண்களாய்‌ நின்று தாங்கு கின்றன என்று வள்ளுவர் உருவக வகையால் விளக்குகின்றார்‌. இதனால்‌ இந்த ஐந்தும்‌ சான்றோர்க்கு இன்றியமையாது வேண்டும்‌ பெருங்குணங்கள்‌ என்பது தெரியவரும்‌.
- மு சண்முகம்பிள்ளை

 

சான்றாண்மை என்பது 'சான்று+ஆண்மை' என விரியும், சான்று என்பது நிறைந்து (சாலுதல்-நிறைதல்) எனப்பொருள்படும். இதைப் பல நற்குணங்களாலும் நிறைந்து என விளக்குவர். ஆண்மை என்ற சொல் அக்குணங்களை ஆளும் தன்மையைக் குறிக்கும். பல நல்ல குணங்களாலும்‌ நிறையப்‌ பெற்று அவற்றை ஆளும்‌ தன்மையைக் குறிப்பது சான்றாண்மை‌. நற்குணங்களால் நிரம்பப் பெற்றோர் சான்றோராவர். எவை எவை நல்லவையோ அவற்றையெல்லாம் இவர்கள் தங்கள் கடமையாகக் கொள்வர். மிகவும் உயர்வான இடத்தை அடைந்த இவர்கள் ஒளிறும் வாழ்க்கைநிலையுடையவர்கள். ஊழிக்காலம் போன்ற நிலை வந்தாலும் தங்கள் பண்புநலன்களிலிருந்து விலகமாட்டார்கள். இவர்களது துணையுடன்தான் பூமி தன் பாரத்தைத் தாங்குகிறது. வள்ளுவரின் இலக்கியலான நிறைமாந்தர் இவர்களே. மாந்தர் நல்வழிப்பட்டு மேம்பாடெய்தற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வழிகாட்டும் பெரியோர்களின் சிறப்பு இயல்புகளை ‘சான்றாண்மை' அதிகாரம் கூறுகிறது.

சான்றாண்மை

சான்றாண்மை என்பது பல நற்குணங்களானும் நிறைந்தமைந்து அவற்றை ஆளும் தன்மையைச் சொல்வது. சான்றாண்மையை மேற்கொண்டு ஒழுகுபவர் சான்றோர் எனப்படுவர்.
சான்றோர் என்ற சொல் முன்னர் போர்க்களத்து வீரர்களைக் குறித்த சொல்லாக இருந்தது. மிகச் சிறந்த குணங்களைப் பெற்றிருந்தவன் போர்க்களத்தில் தலைவனாக இருந்தால் அவனைப் பின்பற்றிச் செல்லுகின்ற வீரர்கள் நம்பிக்கையோடு அச்சமில்லாமல் அவனைப் பின்தொடர்வார்கள். அதுபோன்று மன உறுதியும் பெருந்தன்மையும் நற்குணங்களும் உடைய மனிதர்கள், போர் இல்லாத காலத்திலும், உருவானார்கள். அவர்கள் மற்றவர்கள் பின்பற்றத்தக்கவர்களாக விளங்கினர். அத்தகைய சமுதாய மாந்தரை வள்ளுவர் சான்றோர் எனக் குறிக்கிறார்.
குறளில் இச்சான்றோர்கள் பலவிடங்களில் பலபெயர்களில் குறிக்கப்பெறுகின்றனர். முன்பு ஊர்கள் தோறும் அறங்கூர் அவைகள் இருந்தன. அந்த அவையிலிருந்து அறம் உரைத்தவர் அதாவது நீதியரசர்களாகச் செயல்பட்டவர்களும் சான்றோர் என அழைக்கப்பட்டனர் எனத் தெரிகிறது.

சான்றோர்கள் எனப்படுபவர்கள் நினைத்தாலே அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாக்கக் கூடிய அளவுக்கு நிறைந்த பண்பு நலன்கள் கொண்ட பெரியோர்களாவர். அப்படிப்பட்டவர்களைக் காணும்பொழுதெல்லாம் ஒரு ஊக்கம் பிறக்கும். மனதுக்கு ஒரு தெம்பு உண்டாகும்.
சமுதாயத்தில் எல்லோரும் பிறர் திறத்துத் தம் பொறுப்பை யுணர்ந்து வாழ வேண்டியவர்களே. எனினும் சிலர் சிறப்பாகச் சமுதாயப் பொறுப்பை யுணர்வர். அவரே சான்றோர் ஆகிறார். கல்வி, செல்வம், பதவி போன்றவற்றால் ஒருவர் சான்றோர் ஆவதில்லை. பண்பு என்ற நிறைசெல்வமே ஒருவரைச் சான்றோனாக்குகிறது. சான்றாண்மையுடையவர்கள் பெருமையும் நிறைவும் ஒழுங்கும் உடையவர்கள். அவர்களிடம் எல்லாவகை நல்ல குணங்களும் இருக்கும். அவர்கள் அன்புடையவர்களாக இருப்பர். அருளுள்ளம் கொண்டவராயிருப்பர். உண்மையே பேசுவர். தீயன செய்ய நாணுவர், சமுதாய உணர்வு கொண்டிருப்பர். இந்த ஐந்து பண்புகளும் இன்றியமையாதன என்பதாலும், அவை ஒருங்கிணைந்து ஆளப்பட வேண்டியன என்பதாலும் அவற்றைச் சால்பு என்பதைத் தாங்கும் தூண்கள் என்று வள்ளுவரே இவ்வதிகாரத்து ஒரு பாடலில் வரையறுத்துச் சொல்கிறார்.
சான்றோர் பிற உயிர்களுக்கு ஊறு விளைவிக்கமாட்டார்கள்; பிறர் உள்ளம் வருந்தும்படி எதையும் சொல்லமாட்டார்கள். தம் நற்பெயரையும் மதிப்பையும் பொருட்படுத்தாமல் பணிவாக நடந்துகொண்டே பகைமையை ஆயுதம் இழக்கச் செய்வர். தம்மைவிடத் தாழ்ந்தவர் என்று அவர்கள் ஒருவரையும் எண்ணுவதில்லை. அதனால்தான் யாரிடமும்தம் தவறுகளை ஒப்புக்கொண்டு பணிவோடு நடப்பர். அவர்கள் எவரிடமும் தயங்காமல் தம் தோல்வியை ஒப்புக்கொள்வர். அதுவே அவர் சான்றோர் என்பதைக் காட்டும். வன்முறைக்கு வன்முறைதான் தீர்வு என்பதில் சிறிதளவும் நம்பிக்கை இல்லாதவர்கள் ஆதலால் தமக்கு ஒருவன் தீயன செய்தாலும் அவனை வெறுக்காமல், அவனுக்கு இனியன செய்யவே முற்படுவார்கள். தமக்கு உரிய நன்மை தமக்கு உற்ற தீமை என்ற எண்ணங்கள் இல்லாமல் எல்லார்க்கும் நன்மை செய்வார்கள். தீமை செய்பவர்களுக்கும் இனியன செய்வதுவே சான்றாண்மையின் பயன். வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களும் இவர்களைத் தாக்குவதில்லை; சால்பே இவர்களுக்குத் திண்மை தருவதால் வறுமையை இவர்கள் இழிவானதாகக் கருதுவதில்லை. ஊழிக்காலத்து மாறுதல் போன்றவை நேர்ந்தபோதும் இவர்கள் தம் மேன்மை நிலையிலிருந்து தாழ்வதில்லை. இவர்களும் தம் சால்பு பிறழ்ந்து நடப்பார்களானால், இந்த நிலவுலகம் நிலை கலங்கும் என்னுமளவு உறுதியான கலங்காத வாழ்வு இவர்களிடம் காணப்படும்,
சால்பு என்பது இத்தகைய குணங்களின் நிறைவேயாம். 'இவ்வாறு சிறந்த குணப்பெருங் கடல்களைக் குடிமக்களாகக் கொள்வதற்கென்று நாடு தோன்றுகிறது. இவ்வாறு சமுதாயம், அரசியல் என்பவற்றின் பெருமை எல்லாம் இத்தகைய குடிமக்களை விளைவிப்பதே எனக் கொள்ளும் அரசியலமைப்பு வள்ளுவர் கண்ட புதுமை எனலாம். பிறரும் பெருமக்கள் பற்றிக் கனவு கண்டனரேனும் அவர்களைச் சமுதாயத்தில் அரசியலின் பேரொளியாகக் கண்டவர் வள்ளுவரே எனலாம்' என்பார் தெ பொ மீனாட்சிசுந்தரம்.
நெருக்கடி காலத்தில் ஊரும் உலகமும் சான்றோரையே பெரிதும் நம்பும். அவர்கள் உதவியை வேண்டி நிற்கும். சான்றோரால்தான் இந்த உலகம் நிலைபெறுகிறது.

இவ்வதிகாரத்தில் மட்டுமன்றி நூலில் பரவலாகச் சான்றாண்மை காட்சியளிக்கிறது. சான்ற, சான்று, சான்றவர், சான்றோர் போன்ற சொற்களைப் பலவிடங்களிற் காணலாம். சால்பு, சான்றாண்மை எனும் மொழிகளிடத்து வள்ளுவனார் கொண்டுள்ள பெருமதிப்பும் விருப்பும் அவர் அச்சொற்களைப் பல்வேறு அதிகாரங்களில் ஆட்சி செய்வதால் அறியலாம். தன் மகனை ஈன்ற பொழுதைவிடச் 'சான்றோன்' என ஊரார் சொல்ல கூறக் கேட்ட பொழுதுதான், ஒரு தாய் பெருமகிழ்ச்சியடைவாள் என்கிறது புதல்வரைப்பெறுதல் அதிகாரப்பாடல் ஒன்று (69). பயனிலசொல்லாமை அதிகாரத்தில் ஒரிடத்து 'சான்றோர் பயனில சொல்லாமை நன்று' (197) எனச் சொல்லப்பட்டது. குடிகாரனிடஞ் சென்று 'நீ சான்றோரால் வெறுக்கப்பட வேண்டுமானால் குடி!' (922) என்று எனக் கள்ளுண்ணாமைப் பாடல் கூறுகிறது. அதே அதிகாரத்தில் 'எந்த குற்றஞ் செய்தாலும் பொறுக்கின்ற தாய் முன்பு கூடக் குடிகாரன் வெறுக்கப்படுவானெனில், ஒரு சிறு குற்றமும் பொறாத சான்றோர் முன்னே அவன் என்னாவான்?' (923) என்று மற்றொரு குறள் கேட்கிறது. 'சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு' (299) என வாய்மை அதிகாரப் பாடல் கூறுகிறது. 'அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு' (1014) என்று நாணுடைமை அதிகாரம் நற்குணங்களால் நிறைந்தோர்க்கு நாண் உடைமை நல்ல அணிகலனாகும் என்கிறது.

சான்றாண்மையைப் பெருமைப்படுத்திப் பேசிய பிற நூல்களிலிருந்து சில பகுதிகள்: ....தோல்வற்றிச் சாயினுஞ் சான்றாண்மை குன்றாமை.... (திரிகடுகம் 27:2-3) பொருள்: ... (உணவின்மையால்) உடம்பு இளைத்து அழிவதாயிருந்தாலும், சான்றாண்மை குறையாமை... ) என்பது நல்லாதனாரின் வரி. சான்றோ ரினத்திரு (ஆத்திச்சூடி 44 பொருள்: சான்றோர் கூட்டத்திலே எந்நாளும் இரு) என்பது ஔவையின் வாக்கு. பிசிராந்தையார் தான் எப்படிக் கவலையின்றி வாழ்ந்து நரையின்றி, நெடுநாள் இளமையோடு வாழ்கிறேன் என்பதற்குக் கூறும் காரணங்களில் தலைமையாகத் தான் வாழும் ஊரில் நற்குணத்தால், பரிவுடையவர்களாய் மனம்போன போக்கில் வாழாது, கட்டுப்பாடோடு வாழும் சான்றோர் பலர் வாழ்தலே என்றார்: ......ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழு மூரே (புறநானூறு 191 பொருள்: யான் இருக்கின்ற ஊரின்கண் நற்குணங்களால் அமைந்து கல்வியால் நிறைந்து அதற்கேற்பச் சுவை முதலியவற்றிற் செல்லும் அறிவவிந்து மனமொழி மெய்களான் அடங்கிய கோட்பாடுடைய சான்றோர் பலராதலான்). ..சான்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்?... (சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் ஊர்சூழ் வரி பொருள்: இவ்வூரில் பெரியமனிதர்கள் என்று எவரும் உளரா?) என்று வேந்தனிடம் நீதி கேட்கச் சென்ற கண்ணகி ஆற்றாமையால் மதுரை தெருக்களில் உரக்கச் சொல்லிக்கொண்டே சென்றாள்.

சான்றாண்மை அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 981ஆம் குறள் கடமை உணர்ந்து நிறைகுணம் கொண்டவர்க்கு நல்லவாயின எல்லாம் இயல்பான கடமை என்று சொல்லுவர் என்கிறது.
  • 982ஆம் குறள் குணங்களாலாய நலங்களே சான்றோர் சிறப்பாம்; பிற நலங்கள் எந்தச் சிறப்புக்களுள்ளும் அடங்குவன அல்ல என்று சொல்கிறது.
  • 983ஆம் குறள் அன்புடைமை, இழிசெயலுக்கு நாணுதல், பொதுநல ஈடுபாடு, இரக்கம், வாய்மை ஆகிய ஐந்தும் சால்பினைத் தாங்கிநிற்கும் தூண்களாம் என்கிறது.
  • 984ஆம் குறள் உயிர்களைக் கொல்லாமை சிறப்பான நோன்பாம்; பிறருக்குத் தீமை உண்டாகக்கூடியதைச் சொல்லாமை சிறப்பான சால்பு என்கிறது.
  • 985ஆம் குறள் செயல்வீரரின் வலிமை பணிவு உடையவர் ஆதல்; சான்றோர் மாறுபட்டவரையும் மாற்றும் கருவியும் அதுவே எனச் சொல்கிறது.
  • 986ஆம் குறள் சான்றாண்மையை மதிப்பிடும் உரைகல் எதுவென்றால் தோல்வியைத் தமக்குச் சமமல்லாதவரிடமும் ஒப்புக் கொள்வது என்கிறது.
  • 987ஆம் குறள் தமக்குத் தீமை செய்தவர்களுக்கும் இனிமையானவற்றைச் செய்யாவிட்டால் சான்றாண்மைக் குணத்திற்கு என்ன பொருளாம்? என வினவுகிறது.
  • 988ஆம் குறள் சான்றாண்மை என்னும் உறுதி இருக்குமானால் ஒருவர்க்குப் பொருளின்மை இழிவாகாது எனச் சொல்கிறது.
  • 989ஆம் குறள் சான்றாண்மைக்குக் கடல் என்று கூறப்படுபவர்கள் பேரிடர் காலத்தில் உலகம் நிலைமாறினாலும் தாம் நற்குணங்களிலிருந்து பிறழார் என்கிறது.
  • 990ஆவது குறள் சான்றோர்கள் தம் சான்றாண்மைக் குணங்களில் குறைந்தால் பெரிய பூமியும் சுமையைத் தாங்க இயலாது போம் என்கிறது.

 

சான்றாண்மை அதிகாரச் சிறப்பியல்புகள்

பிற நூல்களைக் காட்டிலும் குறளில் சான்றாண்மைக்கு உயர்ந்த இடம் கொடுக்கப் பெற்றிருக்கிறது. இது வள்ளுவரது உள்ளத்தில் சான்றாண்மை பெற்றிருந்த தனி இடத்தை அறிவிக்கிறது. குறளுக்குத் தலையணி போன்ற அதிகாரம் இது என்பர்.

சான்றாண்மை வன்முறைக்கு எதிரானது என்பதை அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்து சால்பு ஊன்றிய தூண் (983) என்னும் குறள் சொல்கிறது. வன்முறைகள் வளரும் சமுதாயத்தில் அச்சமும் பாதுகாப்பின்மையும் பெருகும். வன்முறையை வன்முறையால் தடுக்கலாம் என்பது தவறான கருத்து. அன்புடைமை, தீய செயலுக்கு அஞ்சுதல், எல்லோருக்கும் உதவுதல், இரக்கப்படுதல், உண்மையே பேசுதல் போன்ற சான்றவரது குணங்களே வன்முறைக்கு எதிரான மருந்தாக விளங்கமுடியும் என்பதைச் சொல்வதுபோல் இக்குறள் அமைந்துள்ளது.

பெருமைமிக்க நாட்டின் தலைவராயிருப்பவர்கூட தம் தோல்வியை எளிதில் ஒப்புக் கொள்வதில்லை. தோல்வியைத் தம்மைவிடத் தாழ்ந்தவர்கண்ணும் சான்றோர் ஏற்றுக்கொள்வார் என்கிறது சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல் (986) என்னும் குறள்.

சான்றாண்மையின் பயன் என்னவென்றால் தமக்குத் தீமை செய்தவர்க்கும் இனியன செய்தல் என்கிறது இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு (987) என்ற பாடல். இது அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் குறள்களில் ஒன்று.

உலகமே அழிவுநிலைக்குச் செல்லும் காலத்தில் கூட சான்றோர் தன் குணநலன்களிலிருந்து விலகுவதில்லை என்பதைச் சொல்கிறது ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார் (989) என்னும் குறள். கடல் அளவு நற்குணங்கள் அமைந்த சான்றோர் உறுதியான கொள்கைப் பிடிப்புள்ளவராயிருப்பர் எனக் காட்டப்படுகிறது.

சான்றோர் தம் கொள்கையில் தளர்வுற்றால் இந்தப் பூமி தன்னையே தாங்கும் வலிமையை இழந்துவிடும் என்கிறது சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை (990) என்ற பாடல். சான்றோரும் பூமியும் இணைந்து இப்பெருநிலத்தைத் தாங்குவதால்தான் நிலம் நிலைபெற்றிருக்கிறது என்பது இதன் பொருள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard