Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாகதம் சங்கதம்,


Guru

Status: Offline
Posts: 7474
Date:
பாகதம் சங்கதம்,
Permalink  
 


பிராகிருதம் பாகதம் என்று தமிழில் சுருக்கப் படுகிறது. சமிஸ்கிருதம் எனும் மொழியை வடமொழி என்றே தமிழ்ப் புலவர் பயின்று வருகின்றனர். ஆனால், அதை சங்கதம் என திருஞான சம்பந்தர் பயில்கிறார் என்கிறார் நண்பர் இராம.கி. சான்றான பாடல் இதோ:
ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமா
பாகதத்தொடு இரைத்து உரைத்த சனங்கள் வெட்குறு பக்கமா
மா கத கரி போல் திரிந்து புரிந்து நின்று உணும் மாசு சேர்
ஆகதர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே
இதற்கு உரை சொல்வோர், ஆகமங்கள், வேத மந்திரங்கள் அமைந்த சங்கதம், அத்தோடு இணைந்து பயிலப்படும் பாகதம் எனும் மொழிகளை இரைந்து உரைக்கும் சனங்கள் வெட்கப்படும் படி, அவர்கள் அருகில் பெரிய, கரிய யானைபோல், திரிந்து, புரிந்து நின்று உண்ணும், மாசு சேர் ஆகதர்க்கு நான் எளியேன் அல்லன். பகைவன். எனக்குத்துணை ஆலவாய் அண்ணல் என்பது.
இங்கு இரண்டு கூட்டங்களைப் பேசுகிறார். ஒன்று சங்கதம், பாகதம் பேசும் மக்கள். மற்றவர் யானை போல் திரியும் மாசுடை கூட்டம். முதலில் பேசப்படும் கூட்டத்தை வைதீக பிராமணர்கள் என்று புரிந்து கொள்கின்றனர். மற்றவரை சமணர்கள் என்கின்றனர்.
இராம கி
கண்ணன், நான் எழுதியதைத் தவறாய்ப் புரிந்துகொள்ள வேண்டாம். நான் சொன்னதில் சமயம் பேசுபொருள் அல்ல.
நின்றசீர் நெடுமாறனின் அழைப்பேற்று மதுரைவரும் சம்பந்தர், அரண்மனைக்குச் செல்கிறார். அரசன் அவரை இருக்கச் செய்து, "ஊர் யாது?" எனக் கேட்கிறான். ”சீர்காழி” என்கிறார் சம்பந்தர். சமணர் சம்பந்தரைச் சூழ்ந்து அப்போதே வாதுக்கு அழைக்கிறார். சம்பந்தரின் இளமையையும் சமணர்கூட்ட எண்ணிக்கையையும் கண்ட அரசி ”சம்பந்தருக்கு என்னாகுமோ?” என அஞ்சுகிறார். பாண்டியனிடம், "முதலில் உங்கள் வெப்புநோயை இவர் நீக்கட்டும். பின் சமணரோடு வாதாடலாம்" என்கிறார். மன்னன் சமணரை நோக்கி, "வேறு என்ன வாது வேண்டும்? நீவிரும் சிவனடியாரான இவரும் என் வெப்புநோய் தீர்த்து, அதன் மூலம் உம் சமய உண்மை நிறுவுக" என்கிறான்.
சம்பந்தர் அரசியை நோக்கி, "என்னைச் சிறுவனென எண்ணிக் கலங்காதீர். ஆலவாய் அரன் துணை நிற்பான்” என்று பாடிய திரு ஆலவாய்ப் பதிகத்தின் (மூன்றாம் திருமுறை 39 ஆம் பதிகம்) 2 ஆம் பாடலில் தான் சங்கதம், பாகதம் ஆகிய சொற்கள் வரும்.
உயர்நிலைச் சமணக் குருமாரின் இயல் மொழி பாகதம். நின்றசீர் நெடுமாறன் காலத்தில் தமிழ் ஆட்சி மொழி என்றாலும், அரசவையில் சங்கதப் புழக்கம் இருந்துள்ளது. (நெடுமாறன் மகன் கோச்சடையனின் வேள்விக்குடி, சீவர மங்கலம் செப்பேடுகளில் முதலில் சங்கத மெய்கீர்த்தியும், பின் தமிழில் ஆன செப்பேட்டின் உள்ளீடும் வந்துள்ளன. எனவே அவன் தந்தை காலத்திலும் சங்கதம் விழையும் ஓர வஞ்சம் பாண்டியன் அவையில் இருந்திருக்கும்.) பொதுவாய்க் கடுங்கோன் காலத்தில் இருந்து, சங்கதத்தில் பீற்றிக் கொள்வது அற்றை அரசர்க்கும், அவர் அதிகாரிகளுக்கும் இயற்கை. அத்தகைய அரசரிடமும், அதிகாரிகளிடமும், “தாம் படித்தவர்” என்று நிறுவுவார் போல் சங்கதத்தையும் பாகதத்தையும் கலந்து அடித்துப் பேசுவது சமணருக்கும் வழக்கம் போலும். (இன்றும் நம்மில் பலர் அரசு அதிகாரிகள் முன் ”தாம் படித்தவர்” என்று நிறுவும்படித் தமிழ் ஆங்கிலம் கலந்தடிப்போம்.)
இப்படிக் கலந்தடிப்போரைக் கேலி செய்வது சங்கதம் முற்றும் தெரிந்தவர்க்கு இயற்கை. சம்பந்தர் அந்த உத்தியைக் கையாளுகிறார். (It is psychological attack.)
கோயிலில் அன்றி ஓர் அரண்மனையில் நின்று ஒரு தனியாளை (இங்கு மங்கையர்க்கரசியார்) முன்னிறுத்திச் சம்பந்தர் பாடிய ஒரே பதிகம் இது. வழக்கம் போல் சம்ணரைக் கேலிசெய்வது இங்கும் நடக்கிறது. எப்பொழுதும் உள்ள கையில் சோறு வாங்கி நின்றவண்ணம் உண்ணும் பழக்கம். குளியாமை, அழுக்கு குண்டுமை என்று சகலக் கேலியும் நடக்கும். கூடவே சங்கதம், பாகதம் கலந்தடிக்கும் சமணரின் பேச்சுநடை கேலி செய்யப்படுகிறது. அது தான் புதியது,
பல பதிப்புகளில் இப்பாட்டை #3212 ஆம் பாட்டு என்பார். வெவ்வேறு பதிப்புகளில் எண் மாறுவதைப் பார்த்துள்ளேன். பாடல் கீழே.
ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமா
பாகதத்தொடு இரைத்து உரைத்த சனங்கள் வெட்குறு பக்கமா
மா கத கரி போல் திரிந்து புரிந்து நின்று உணும் மாசு சேர்
ஆகதர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே
”திரு ஆலவாய் அரன் என்னோடு நிற்பதால்,
ஆகமத்தோடு மந்திரங்கள் நிறைந்த சங்கதத்திற்குப் பங்கமாய் அதைப் பாகதத்தோடு கலந்து உரைத்த,
மக்கள் வெட்குறும் படி யானைபோல் திரிந்து செயற்பட்டு உண்ணுகிற,
அழுக்குமேனியை உடைய,
ஆருகதருக்கு நான் எளியேன் அல்லேன்”
என்பது பாட்டின் பொருள்.
சங்கத மொழியையோ, பாகத மொழியையோ யாருங் குறைகூறவில்லை. கலந்தடிப்பது பட்டுமே இங்கு கேலி செய்யப்படுகிறது. அவ்வளவு தான். சமணருக்கும் மந்திரம், ஆகமம் உண்டு.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard