Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை


Guru

Status: Offline
Posts: 7387
Date:
ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை
Permalink  
 


ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 1

முகப்பு

ஆரிய படையெடுப்பு என்ற கோட்பாட்டை, கிழக்கிந்திய நிறுவனத்தில் வேலை செய்த மாக்ஸ் முல்லர் முதலில் எடுத்துரைத்தார். அதன் பின்னர் பல மேலை நாட்டு அறிஞர்கள், பல்வேறு மொழியியலாளர்கள் மற்றும் இந்தியவியலாளர்கள் ஆகியோர், ஒரு பொய்யை திரும்ப திரும்பக்கூறினால் அதை மக்கள் நம்பிவிடுவார்கள் என்பதற்கிணங்க, பல நூறு வருடங்களாக இந்த கோட்பாட்டை கட்டுக்கதையாகப் தொடர்ந்து பரப்பிவருகின்றார்கள். இதை உண்மையென்று நம்பிய பல இந்திய அரசியல்வாதிகளும் பத்திரிகையாளர்களும், இந்திய நாட்டில் மக்களிடையே ஆரிய திராவிட பிரிவினைக்கருத்தை தூவி, மக்களிடையே தவறான கருத்துக்களை வளர்த்து வருகின்றனர். இந்த பிரிவினைக்கருத்தை முறியடிக்கும் நோக்கத்துடன், கேள்வி பதிலாக இந்தக்கட்டுரை வரையப்பட்டுள்ளது.

ஆரிய படையெடுப்பு கோட்பாடு (AIT) என்றால் என்ன?

இந்தக் கோட்பாட்டின்படி, கிமு 1500 ம் ஆண்டளவில் வட இந்தியாவானது, ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவின் எல்லைப் பகுதியில் நாடோடிகளாகத் திரிந்து கொண்டிருந்த வெளிர் தோலுடைய ‘ஆரியர்கள்’ என்ற இனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. இந்த படையெடுப்பானது, ஏற்கனவே வட இந்தியாவில் வாழ்ந்து வந்த மேம்பட்ட நாகரிகத்தை அழித்து, அவர்கள் மீது ஆரியர்களின் கலாச்சாரம் மற்றும் மொழியை திணித்தது. அத்துடன் ஹைபர் கணவாயூடாக இந்தியாவிற்குள் வந்தார்களென்றும், சிந்து சமவெளியில் வாழ்ந்த திராவிட மக்களை தென்னிந்தியாவிற்கு இடம் பெயர வைத்தார்களென்றும் இந்தக் கட்டுக்கதை சொல்லப்பட்டது.

ஆரிய படையெடுப்பு என்ற கோட்பாட்டின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு கட்டமைக்கப்பட்டுள்ளது : “ஆரியர்” என்பது ஒரு இனக்குழு, அவர்களின் படையெடுப்பு, அவர்கள் நாடோடிகள், வெளிர் தோல் உடையவர்கள், அவர்களுடைய வசிப்பிடம் இந்தியாவுக்கு வெளியே இருந்தது, அவர்களின் படையெடுப்பு கிட்டத்தட்ட கிமு 1500 இல் நிகழ்ந்தது, ரதங்கள் மற்றும் குதிரைகளுடன் வந்து, அவர்கள் சிந்து நதி பள்ளத்தாக்கை மூழ்கடித்து கைப்பற்றி சிந்து சமவெளியில் வாழ்ந்து வந்த மக்களின் மேம்பட்ட நாகரீகத்தை அழித்தார்கள். ஆரிய படையெடுப்பு என்ற கோட்பாட்டின் வாதத்தை முன்வைப்போர் கற்பனையின் அடிப்படையிலான, நற்சிந்தனை கொண்டவர்களால் ஏற்றுக்கொள்ள இயலாத முடிவுகளுக்கு ஆதரவாக பின்வரும் வாதங்களை முன்வைக்கின்றனர் :-

  • படையெடுப்பு: வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள பலவிதமான போர்கள் மற்றும் மோதல்கள், மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பாவில் தோண்டப்பட்ட இடங்களில் கண்டறியப்பற்ற எலும்புக்கூடுகள்
  • நாடோடி, வெளிர் நிறமுள்ள மக்கள்: இது வேத துதிகளின் தவறான விளக்கம் மற்றும் முற்றிலும் அனுமானத்தின் அடிப்படையிலானது.
  • சிந்து நாகரிகத்தின் ஆரியர் அல்லாத/திராவிட இயல்பு: ஹரப்பன் தளங்களின் ஆரம்பகால அகழ்வாராய்ச்சியின் போது குதிரை இல்லாதது, சிவபெருமானின் சின்னம் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் அதனால் சிவனை வழிபடுபவர்களாக கருதுவது போன்றவை.
  • படையெடுப்பு நடந்த வருஷம்- கிமு 1500 : இது ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்த காலத்தைப் பற்றிய தன்னிச்சையான ஊகத்தின் அடிப்படையிலான மதிப்பீடு ஆகும்.
  • ஜெர்மன் அறிஞர் மாக்ஸ்-முல்லர், ஆரியர்களின் பூர்வீகம் காஸ்பியன் கடலுக்கு அருகில் எங்கோ இருப்பதாக நினைத்தார். ஆரியர்களின் ஒரு குழு அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்ந்தது என்றும், மேலும் இரண்டு குழுக்கள் பேர்சியாவிற்கும் இந்தியாவிற்கும் வந்ததாகவும் கூறினார். இந்தியாவிற்கு குடிபெயர்ந்த ஆரியர்கள் “இந்தோ-ஆரியர்கள்” என்று அழைக்கப்பட்டார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், கி.மு. 1,500 இல், காஸ்பியன் கடலுக்கு அருகில் இருந்து வந்த ஆரியர்கள் தென்னிந்தியாவிற்கு திராவிடர்களை விரட்டியடித்து, இந்தியாவை ஆக்கிரமித்தார்கள் என்று ஆரிய படையெடுப்பு கோட்பாடு கூறுகிறது. இந்த ஆரியர்கள் சமஸ்கிருத மொழியின் தாய் என்று கருதப்படும் புரோட்டோ இந்தோ ஐரோப்பிய (P.I.E) என்ற மொழியைப் பேசுவதாகக் கருதப்பட்டது. பின்னர் அவர்கள் P.I.E இலிருந்து சமஸ்கிருத மொழியை உருவாக்கி வேத சாஸ்திரங்களை இயற்றினார்கள். எவ்வாறாயினும், ஆரிய படையெடுப்பு என்ற கோட்பாடு ஆனது இந்தியாவின் ஒற்றுமை உணர்வைக் குலைக்க வேண்டும், இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப வழி வகுக்க வேண்டும் என்ற கெட்ட நோக்கங்களைக் கொண்டு பரப்பப்பட்ட பொய்ச்செய்தியாகும்.

ஆரிய படையெடுப்பு கோட்பாட்டை பரப்பியவர் யார்?

ஜெர்மனியைச் சேர்ந்த புகழ்பெற்ற இந்தியவியலாளரான மாக்ஸ் முல்லர், 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஆரிய இனக் கோட்பாட்டை பிரபலப்படுத்தியவர் ஆவார். அவர் 1840 களில் கிழக்கிந்திய நிறுவனத்தில் பணிபுரிந்தார். 1847 இல், அவர் வேதங்களின் மொழிபெயர்ப்புகளை இந்துக்கள் நம்பிக்கை இழக்கும் வகையில் இழிவான முறையில் எழுதினார். அவரது தனிப்பட்ட கடிதங்கள் இந்த உண்மையை வெளிப்படுத்துகின்றன. அவர் தனது மனைவி, தாய் மற்றும் பிறருக்கு எழுதிய கடிதங்கள், இந்துக்களின் மதம் அழிந்துபோக வேண்டும் என்பதற்காக கிறிஸ்தவத்தை இந்தியாவிற்குள் கொண்டு வர வேண்டும் என்று அவர் தீர்மானமாக இருந்தார் என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது.

ஆரியப் படையெடுப்பு கோட்பாட்டை தொடக்கிவைத்த மாக்ஸ் முல்லர் தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு கூறுகிறார் :- “ ஆப்பிரிக்கா முழுவதையும் கிறிஸ்தவமயமாக்க 200 ஆண்டுகள் மட்டுமே ஆனது, ஆனால் 400 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவை கிறிஸ்தவமயமாக்க நம்மால் முடியவில்லை. சமஸ்கிருதம்தான் இந்தியாவைச் கிறிஸ்தவமயமாக்க விடாமல் செய்கிறது என்பதை நான் உணர்ந்து கொண்டேன். இந்தியாவின் ஆன்மா சமஸ்கிருதத்தில் இருப்பதால் அதை உடைக்க நான் சமஸ்கிருதம் கற்க முடிவு செய்துள்ளேன்” .

மாக்ஸ் முல்லர் தனது மற்றுமொரு கடிதம் ஒன்றில், “இந்திய சமய குருமாருடைய புராதன வழிபாட்டு முறைகளை அகற்றி, எளிய கிறிஸ்தவ போதனையின் நுழைவுக்கான வழியைத் திறந்துவிடக்கூடிய ஒரு வேலையில் நான் பங்குகொள்ளத் தகுதியுள்ளவனா என்பதையும் பார்க்கவுள்ளேன். இந்தியாவில் எது வேரூன்றுகிறதோ அது விரைவில் முழு ஆசியாவிலும் பரவிவிடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று கூறியுள்ளார்.

பின்னாளில், சமஸ்கிருத சாஸ்திரங்களில் எங்கும் ஆர்யா என்ற சொல் ஒரு இன மக்களைக் குறிக்கவில்லை என்ற கருத்து வலுப்பெற்று, சமஸ்கிருத அறிஞராக மாக்ஸ் முல்லரின் நற்பெயருக்குச் சேதம் ஏற்பட்டு, அவரது சகாக்கள் அவர்மீது சவால் விடப்பட்டனர். அப்போது, மாக்ஸ் முல்லர் சமஸ்கிருத சாஸ்திரங்களில் எங்கும் ஆர்யா என்ற சொல் ஒரு இன மக்களைக் குறிக்கவில்லை, ஆரியம் என்பது மொழிவழிக் குடும்பத்தை மட்டுமே குறிக்கும் என்றும் ஒரு இனத்திற்குப் பொருந்தாது என்றும் மறுத்து உச்சரித்தார். ஆனால் அவருடைய நற்பெயருக்கு ஏற்கனவே களங்கம் ஏற்பட்டுவிட்டது.

ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு அரசியல் மற்றும் தேசியவாதக் குழுக்கள் வெள்ளையர்கள் ஆரிய இனமென்ற மேலாதிக்கத்தைப் பிரச்சாரம் செய்வதற்காக இந்த இனவாத நிகழ்வைப் பயன்படுத்திக் கொண்டன. மாக்ஸ் முல்லர் தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தின்படி, இந்துக்கள் நம்பிக்கை இழக்கும் வகையில் வேதங்களை மொழிபெயர்ப்பதில் அவர் குறிப்பாக பணியாற்றியவர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த திட்டமிட்ட பிரசாரத்தின் தொடர்ச்சியாக, இந்தியாவின் ஆளும் சுப்ரீம் கவுன்சிலின் உறுப்பினரான லார்ட் மெக்காலே, பிரிட்டிஷ் கல்வி முறையைப் பின்பற்றி இந்தியாவில் ஒரு கல்வி முறையை அமைப்பதன் மூலம் பிற்கால தலைமுறையினர் தங்கள் வேதங்கள் சார்ந்த கல்வி முறைகளிகளுடைய வேர்களிலிருந்து வெற்றிகரமாக துண்டிக்கப்படுவதற்கு வித்திட்டார்.

இப்படி ஒரு கட்டுக்கதையை உருவாக்கியதன் நோக்கம் என்ன?

பெரும்பாலான ஐரோப்பிய மொழிகளில் சில ஒற்றுமைகள் இருந்தன. சமஸ்கிருதம் கற்கும் வரை ஐரோப்பியர்களுக்கு எப்படி இந்த ஒற்றுமைகள் வந்தன என்று தெரியவில்லை. சமஸ்கிருத மொழியைப் படித்த பின்புதான், அவர்கள் தங்கள் மொழி சமஸ்கிருதத்துடன் தொடர்புடையது என்பதை உணர்ந்து கொண்டனர். அத்துடன் சமஸ்கிருதத்தை அனைத்து ஐரோப்பிய மொழிகளுக்கும் மூத்த சகோதரியாக உள்ளதை உணர்ந்து கொண்டனர். இத்தகைய சொற்களஞ்சியம் மற்றும் இலக்கணத்துடன் நன்கு வளர்ந்த மொழி இந்தியாவில் தோன்றியிருக்கலாம் என்ற உண்மையை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே, அவர்கள் சமஸ்கிருதத்திற்கு முன்னோடியாக புரோட்டோ-இந்தோ-ஐரோப்பிய என்ற ஒரு மொழியிருப்பதாகவும், இந்த மொழியை ஆரிய இனம் பேசுவதாகவும் ஒரு கருதுகோளை உருவாக்கி, இந்த மொழியானது ஐரோப்பாவில் தோன்றி பின்னர் ஆரிய படையெடுப்பு கோட்பாட்டுடன் இந்தியாவிற்கு பரவியதாக ஒரு செய்தியைப் பரப்பினார்கள்.

மேலும், பிரித்து ஆளும் கொள்கையுடன் இந்தியாவை ஆள நினைத்தவர்கள், இந்திய மக்களைப் பிரித்து பிரிவினையை உருவாக்க ஆரிய-திராவிடக் கட்டுக்கதையை உருவாக்கினார்கள். ஆரியர்கள், திராவிடர்களை தென்னிந்தியாவிற்கு விரட்டிய பின், ரிக் வேதம் மற்றும் பிற வேத சாஸ்திரங்களை இயற்றுவதற்காக வடமேற்கு இந்தியாவின் ஆறுகள் மற்றும் காடுகளுக்கு இடையே அமைதியான கிராமப்புற வாழ்க்கைக்கு குடியேறினார்கள் என்பதாக இந்த கட்டுக்கதை சொல்லப்ப்பட்டது.

வேத சாஸ்திரங்களின்படி ஆரியர் யார்?

வேத சாஸ்திரங்களின்படி “ஆர்யா” என்ற சொல் வேதங்கள் மற்றும் வேத சாஸ்திரங்களின் மரபுகளை தவறாமல் பின்பற்றும் மக்களைக் குறிக்கின்றது. ஆரியர்களின் நாகரிகத்தின் முற்போக்கான வளர்ச்சிதான் வேதகால வாழ்க்கை முறையாகும். அந்தஸ்து மற்றும் சமூக ஒழுங்குமுறைகளின் அடிப்படையில் மனிதகுலத்தின் கடமைகள் நாகரிக மனிதர்களால் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதற்காக நிறுவப்பட்டது. பாரம்பரியமாக இந்தக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் ஆரியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். மேலும், வேத சாஸ்திரங்களின் வழியை பின்பற்றி யாகங்கள்,ஹோமங்கள் வளர்ப்பது , வேதங்களைப் படிப்பது மற்றும் நல்ல நடத்தைகளைப் பயிற்சி செய்வது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனர். எனவே, ஆரியர்கள் என்றால் வேதநாகரீகத்தை பின்பற்றுபவர்களும், வேத சடங்குகளின்படி ஒழுங்குபடுத்தப்பட்ட பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பவர்களும் ஆவார்கள்.

புகைப்பட ஆதாரம்- Templepurohit.com

ஸ்ரீமத் பாகவத காண்டம் 6 அத்தியாயம் 16 ஸ்லோகம் 43 பின்வருமாறு கூறுகிறது: இறைவனின் மேற்பார்வையின் கீழ் தங்கள் தொழில் கடமைகளைப் பின்பற்றுபவர்கள், அனைத்து உயிரினங்களையும் சமமாக நடத்துபவர்கள், உயர்வு மற்றும் தாழ்வு என்ற பேதமை பாராமல் வாழ்பவர்கள் ஆரியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். வேத சாஸ்திரங்களின் மரபுகளின்படி தங்கள் வாழ்க்கையின் உயரிய இலட்சியங்களையும் பிறவிப்பயனையும் அடைவதற்காக, அத்தகைய ஆரியர்கள் இறைவனை வணங்குகிறார்கள்.

“ஆர்யா” என்று நாம் கூறும்போது, ​​அது ஒரு இனக்குழு மக்களைக் குறிக்கவில்லை. வால்மீகி ராமாயணத்தில், ராமர் பின்வரும் வார்த்தைகளில் ஒரு ஆரியராக விவரிக்கப்படுகிறார்: ஆரியர் – அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புவபர். அத்துடன் அனைவருக்கும் பிரியமானவர். இத்தகைய மரபுகளைப் பின்பற்றாதவர்கள் வேத சாஸ்திரங்களில் “அனார்யா” அல்லது “அனிந்திரன்” என்ற எதிர்ச் சொற்களால் விவரிக்கப்பட்டுள்ளனர். இது “சூரா” மற்றும் “அசுர” என்று அழைப்பதைப் போன்றது.

ஆரியனுக்கு எதிர்ச்சொல் – அனார்யன்

ஆரியனுக்கு எதிர்ச்சொல் அனார்யன் ஆகும். பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறியது போல் அனாரியன்கள் பின்வரும் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். பகவத் கீதை அத்தியாயம் 7 ஸ்லோகம் 15 ல் சொல்லியதுபோல், மிகவும் அறிவு குறைந்தவர்களாகவும் , மனித குலத்தில் மிகத் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களும் , மாயையால் ஞானம் இழந்தவர்களும் , அசுரர்களின் நாஸ்திக குணத்திலுள்ளவர்களும் பகவான் கிருஷ்ணரிடம் சரணடைவதில்லை.

பொருளாதார முன்னேற்றமென்ற போர்வையில் நவீன நாகரீகம், மிகப்பெரிய சாலைகள், வீடுகள், ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மகத்தான ஏற்பாடுகளை செய்கிறது. இதையே நாகரிகத்தின் முன்னேற்றம் என்று மனிதர்கள் கருதுகிறார்கள். ஆனால், அவர்களுடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப, எந்த நேரத்திலும் அவர்களுடைய ஆத்மா இந்த உலகை விட்டு நீங்கி, இந்த மகத்தான வீடுகள், அரண்மனைகள், சாலைகள் மற்றும் வாகனங்களுடன் எந்த தொடர்பும் இல்லாத சரீரங்களை பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கக்கூடும் என்பது அவர்களுக்குத் தெரியாது.

எனவே, அர்ஜுனன் தனது உறவினர்களுடனான சொந்த பந்தங்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தபோது, ​​கிருஷ்ணர் உடனடியாக அவரைத் கண்டித்து பகவத் கீதை அத்தியாயம் 2 ஸ்லோகம் 2 ல் பின்வருமாறு தெரிவித்தார்.

“அர்ஜுனா, உன்னிடம் இதுபோன்ற களங்கங்கள் மற்றும் இவ்வுள்ளச் சோர்வு இந்நெருக்கடியில் எங்கிருந்து வந்தன? அறிவில் முன்னேறாத ஆரியர் அல்லாத அனார்யர்களுக்கே இந்த உடல் சார்ந்த வாழ்க்கைக் கருத்துகள் பொருந்தும். இவை மேலுலகங்களுக்குக் கொண்டு செல்வதில்லை, ஆனால் அவமானத்தையே கொடுக்கின்றன.”

பரம புருஷ பகவானின் முன்னிலையில், அர்ஜுனன் தன் உறவினர்களுக்காக புலம்புவது நிச்சயமாக பொருத்தமற்றது. எனவே கிருஷ்ணர் “எங்கிருந்து” என்ற வார்த்தையால் தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். ஆரியர்கள் எனப்படும் நாகரீக வர்க்கத்தைச் சேர்ந்த ஷத்திரியர் ஒருவரிடமிருந்து இதுபோன்ற உணர்வுகளை பகவான் கிருஷ்ணர் எதிர்பார்க்கவே இல்லை. ஆரியர் என்ற சொல், வாழ்க்கையின் தத்துவத்தை அறிந்தவர்களுக்கும் ஆன்மீக அனுஸ்டானம் மற்றும் ஆன்மீக முன்னேற்றத்தின் அடிப்படையிலான வாழ்க்கை முறையைக் கைக்கொண்டவர்களுக்குமே பொருத்தமானது ஆகும்.

லௌகீக வாழ்க்கையில் இந்திரியப் பிரீதியே முக்கியம் என்ற கருத்தாக்கத்தால் வழிநடத்தப்படுபவர்கள், வாழ்க்கையின் முக்கிய நோக்கம் பகவான் கிருஷ்ணரை உணர்ந்து கொள்வது என்பது தெரியாமல் இருக்கிறார்கள். மேலும், அவர்கள் லௌகீக வாழ்க்கையின் வெளிப்புற அம்சங்களால் கவரப்படுகிறார்கள், எனவே அவர்களுக்கு முக்தி என்றால் என்னவென்று தெரியாது. இந்த லௌகீக பந்தத்திலிருந்து விடுபடும் அறிவு இல்லாதவர்கள் ஆரியரல்லாதவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். எனவே, புனரபி ஜனனம் புனரபி மரணம் என்று சங்கராச்சாரியர் கூறியபடி அவர்கள் இந்த சம்சார பந்தத்தில் சிக்கித் தவிக்கிறார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 2

வேத சாஸ்திரங்கள் மற்றும் அவர்களின் நம்பிக்கையின்படி திராவிடர் யார்?

சில சமயங்களில், இந்தியாவில் ஆரியத்திற்கு எதிரான சொல் திராவிடம் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. உண்மையில், திராவிடம் என்பது தென்னிந்திய தேசத்தையும், அங்கு வாழும் மக்களைப் பற்றியும் குறிப்பிடுகிறது. அவர்கள் புவியியல் ரீதியாக விந்திய மலைகளின் தெற்கில் வாழ்கிறார்கள். மூன்று பக்கமும் திரவத்தால் (கடல்) சூழ்ந்த இடமாகையால் திராவிடம் என்ற பெயர் உருவானது. விந்திய மலைக்கு தெற்கெ உள்ள நிலப்பகுதி பஞ்ச திராவிடம் என்று அழைக்கப்படுகிறது. அவையாவன : – கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு(கேரளாவும் சேர்த்து) , குஜாராத், மஹாராஷ்டிரம் ஆகும். இந்த மாநிலங்களில் உள்ள பல கோடி மக்கள் ஆரிய நாகரீகத்தை பின்பற்றுவதை நாம் காண்கிறோம். மேலும் இங்குள்ள தெய்வங்களை தரிசனம் செய்ய புகழ்பெற்ற கோவில்களில் எப்போதும் பெரிய வரிசையில் மக்கள் கூட்டம் அலை மோதுவதை காண்கின்றோம்.

புகைப்பட ஆதாரம் – mapsofindia.com

ஸ்ரீமத் பாகவதம் காண்டம் 11 அத்தியாயம் 5 ஸ்லோகம் 38-40 ஆனது திராவிட தேசத்தைப் பற்றியும் பக்தி இயக்கத்தைப் முன்னெடுக்க அங்கு பிறக்கப் போகும் பக்தர்களைப் பற்றியும் முன் கூட்டியே தெரிவிக்கிறது. சுகதேவ கோஸ்வாமி பரீக்சித் மகாராஜாவிடம் பேசும் போது பின்வருமாறு கூறினார் : “ என் அன்பான அரசரே, சத்ய யுகம் மற்றும் பிற யுகங்களில் வசிப்பவர்கள் இந்த கலி யுகத்தில் பிறக்க ஆவலுடன் விரும்புகிறார்கள், ஏனெனில் இந்த யுகத்தில் பரம பகவான் நாராயணரின் பக்தர்கள் பலர் இருப்பார்கள். இந்த பக்தர்கள் பல்வேறு இடங்களில் தோன்றினாலும் குறிப்பாக திராவிட தேசத்தில் (தென்னிந்தியாவில்) அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள். ஓ மானிடருள் முதன்மையானவரே, இந்த பக்தர்கள், கலி யுகத்தில் தாம்ரபரணி (தமிழ்நாட்டின் தாமிரபரணி நதி), கிருதமாலா (தமிழ்நாட்டின் வைகை நதி), பயஸ்வினி (சந்திரகிரி நதி), மிகவும் பக்தியுள்ள காவேரி மற்றும் பிரதிசி மகாநதி போன்ற திராவிட தேசத்தின் புனித நதிகளின் நீரைப் பருகுபவர்களாக இருப்பார்கள். அனைவரும் பரம புருஷரான வாசுதேவரின் முற்றிலும் தூய உள்ளமுள்ள பக்தர்களாக இருப்பார்கள்.”

இதேபோல், திராவிட தேசத்தில் உள்ள மக்கள், வேத சாஸ்திரங்களில் குறிப்பிடும் பல்வேறு தர்மங்களைப் பின்பற்றுவதற்கான சான்றுகள் ஏராளமாக உள்ளன. எனவே, ஒருவர் திராவிட தேசத்தில் வாழ்ந்தாலும், அதே சமயம் ஆரிய நாகரிகக் கொள்கையான சனாதன தர்மத்தைப் பின்பற்றுவதால், அவர் ஆரிய திராவிடராகவோஅல்லது திராவிட ஆரியராகவோ இருக்க முடியும். ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம் திராவிட தேசத்தில் வாழ்ந்த அகஸ்திய முனிவர் ஆவார். ஸ்ரீமத் பாகவதம் காண்டம் 8 அத்தியாயம் 4 ஸ்லோகம் 8-12, அகஸ்திய முனிவர் சபித்ததால் இந்திரத்யும்னா என்ற அரசன் தனது அடுத்த ஜென்மத்தில் யானையாக பிறந்த நிகழ்வுகளை விவரிக்கிறது.

வேத சாஸ்திரங்களின்படி ஆரிய நாகரீகம் என்றால் என்ன?

கங்கை, சரஸ்வதி, யமுனை மற்றும் பிற புனித நதிகளின் கரையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சிந்து சமவெளி நாகரிகம் என்று அழைக்கப்படும் இந்தியாவின் பண்டைய நாகரிகம் செழித்து வளர்ந்தது. வேதங்களின் பல ஸ்தோத்திரங்களில் சரஸ்வதி நதி போற்றப்படுகிறது. சரஸ்வதி ஞானத்தின் தெய்வம் மற்றும் வேதங்களின் மாதா என்றும் கூறப்படுகிறது.

ஆரிய நாகரீகம் என்பது மிகவும் வளர்ச்சியடைந்த நாகரீகம் ஆகும். அங்குள்ள மக்கள் ஆன்மீக அறிவில் முன்னேறி, திரேதா, துவாபர மற்றும் கலியுகங்களின் வரை லட்சக்கணக்கான ஆண்டுகளாக வர்ணாஸ்ரம தர்மத்தின் அடிப்படையில் ஒரு விதிவிலக்கான மற்றும் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் மரபுகளைப் பின்பற்றுகிறார்கள்.

சத்ய யுகத்தின் தொடக்கத்தில், இந்திய சமுதாயக் கட்டமைப்பில் ஹம்சா என்ற ஒரே ஒரு வர்ணம் (சமூக பிரிவு) இருந்தது. பின்னர், திரேதா யுகத்தின் தொடக்கத்தில் வர்ணாஸ்ரம தர்மம் உருவாக்கப்பட்டது. வர்ணமும் (சமூக பிரிவு) ஆஸ்ரமமும்(ஆன்மீக பிரிவு) வேத நாகரீகத்தின் சமூக மற்றும் ஆன்மீக பிரிவுகளும் முழு சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்டன. மூன்றுவித இயற்கை குணங்களுக்கும் அவற்றின் செயல்களுக்கும் ஏற்ப, மனித சமூகத்தின் நால்வகைப் பிரிவுகள் பகவான் கிருஷ்ணரால் ஏற்படுத்தப்பட்டன. வர்ணம் மற்றும் ஆஸ்ரமம் என்ற பிரிவுகள் ஒவ்வொருவருக்கும் கடமைகளை முறையாக நிறைவேற்றுவதற்கும் அமைதியான வாழ்வை உறுதி செய்வதற்குமாக உருவாக்கப்பட்டன. ஆனால், முக்கியமாக, அனைவரும் எல்லாவற்றிலும் வியாபித்திருக்கும் பரமபுருஷ பகவான் ஆகிய ஸ்ரீ கிருஷ்ணரை வணங்குவதற்கு வழிநடத்தப்படுகிறார்கள்.

பிரம்மதேவர் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியபோது, ​​அவர் முனிவர்களையும் பிரஜாபதிகளையும் உருவாக்கி, ஸ்ரீ கிருஷ்ணரிடம் கேட்ட வேத ஞானத்தை அவர்களுக்கு வழங்கினார். முனிவர்கள் பின்னர் வேதங்களை விரிவுபடுத்தி, அரசர்கள்,மந்திரிகள் மற்றும் பொது மக்கள் பின்பற்றுவதற்காக தர்ம சாஸ்திரங்கள் மற்றும் நீதி சாஸ்திரங்கள் உட்பட பல ஸ்மிருதி சாஸ்திரங்களை தொகுத்தனர்.

ஒவ்வொரு நாகரீகமான மனித சமுதாயத்திலும், ஆரம்பத்திலிருந்தே பின்பற்றப்படும் சில சாஸ்திர விதிகள் மற்றும் விதிமுறைகள் உள்ளன. குறிப்பாக ஆரியர்கள், வேத நாகரிகத்தை ஏற்றுக்கொண்டவர்கள் மற்றும் மிகவும் மேம்பட்ட நாகரிக மக்கள் என்று அறியப்பட்டவர்கள். வேத சாஸ்திரங்களைப் பின்பற்றாதவர்கள் அசுர குணம் கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

வேத ஆரியர்களின் வாழ்வில் குதிரை முக்கிய பங்கு வகிக்கிறது. வேத ஆரியர்களின் வாழ்வில், பசு மற்ற எல்லா விலங்குகளையும் விட மதிக்கப்படுவதுடன், சிறப்பு வழிபாட்டுடன் வணங்கப்படுகிறது. வேத நாகரிகத்தில், பெண்கள் ஆண்களுக்கு தர்மத்தை கடைப்பிடிப்பதில் ஒத்துழைப்பு கொடுத்து, இதன் மூலம் இருவரும் தங்களை பக்திப் பாதையில் முன்னேறுவதற்கு வழி வகை செய்கிறது.

இது சம்பந்தமாக பல தொல்பொருள் ஆய்வுகள் நடத்தப்பட்டன. மேலும், சமீபத்திய ஆராய்ச்சியாளர்கள் மொஹஞ்சதாரோ, ஹரப்பா மற்றும் பிற இடங்களின் அகழ்வாராய்ச்சியின் அடிப்படையில் ஆரிய நாகரிகத்தின் ஆழமான பாராட்டை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த ஆய்வுகள் தொடர்பாக அறிஞர்கள் கூறிய சில கருத்துக்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

  • மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பாவில் உள்ள நாகரீகம் ஏற்கனவே பழமையானது,மற்றும் இந்திய மண்ணில் செழித்து வளர்ந்துள்ளது. அதன் பின்னால் பல ஆயிரம் ஆண்டுகால மனித முயற்சிகள் உள்ளன. எனவே, சமூகத்தின் நாகரீக செயல்முறைகள் ஆரம்பிக்கப்பட்டு, மற்றும் வளர்ந்த மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாக இந்தியா அங்கீகரிக்கப்பட வேண்டும்.
  • தொலைந்த நகரங்களை வெளிக்கொணர்ந்தது, சிந்துவின் அகழ்வாராய்ச்சியின் ஒரு அற்புதமான தொல்லியல் கண்டுபிடிப்பு. அவர்கள் நகர திட்டமிடலில் ஒரு அசாதாரண துல்லியம் மற்றும் கண்கவர் வீட்டு வசதிகளை வெளிப்படுத்தினர். கிரேட் பாத் மற்றும் லோதலில் உள்ள நீர்த்தேக்கம் போன்ற அற்புதமான கட்டமைப்புகளுக்கு, கணிதம், குறிப்பாக வடிவவியலில் மேம்பட்ட அறிவு தேவைப்பட்டிருக்கும்.
  • மொஹெஞ்சதாரோ மற்றும் ஹரப்பா ஆகியவை ஒரு கட்டடத் திட்டத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட நேர்கோட்டு கட்டிடங்களுடன் சிறப்பான அமைப்பைக் கொண்டுள்ளன. பெரும்பாலானவை சுடப்பட்ட மற்றும் செங்கற்களால் கட்டப்பட்டன. போதுமான சுகாதாரம், குளியலறைகள், கிணறுகள் மற்றும் பிற வசதிகளுடன் கூடிய செங்கற்களால் ஆன திடமான, வசதியான வீடுகளைக் கொண்ட மக்கள் அடர்த்தியான நகரங்களில் வசித்து வந்தனர்.
  • மிகவும் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், ஓரே தன்மையுள்ள கலாச்சாரம் பெரிய அளவில் பரவியது மட்டுமில்லாமல் , கலை, கைபிரதிகள், தொழில்நுட்பம் மற்றும் எடைகள் மற்றும் அளவுகள் கூட ஒரே மாதிரியாக இருந்தன. சிந்து நகரங்கள் அரசியல் மற்றும் பொருளாதார மையங்களைக் கொண்டிருந்தன.
  • படிப்படியாக, சிந்து நாகரிகத்தின் பெரிய நகரங்களில், சிக்கலான கலாச்சார வடிவங்களின் வளர்ச்சிக்கான அடித்தளம் அமைக்கப்படுவதைக் காணலாம். இந்தியாவில் நாகரீகம் வளர்ச்சியடைய வெளியிலிருந்து ஒரு கலாச்சார பரவல் ஒரு முன்நிபந்தனை அல்ல என்பதை மெர்கரின் மிக சமீபத்திய கண்டுபிடிப்புகள் ஆழமாக வெளிப்படுத்தின. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தது சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியாவின் சொந்த பூர்வீக கடந்த காலத்தின் ஒரு பகுதியாகும்.
  • ரிக்வேத காலத்தில் இந்தோ-ஆரியர்கள் பயன்படுத்திய உலோகங்கள் தங்கம் மற்றும் செம்பு அல்லது வெண்கலம். ஆனால் சிறிது காலத்தின் பின்பு, யஜுர்வேதம் மற்றும் அதர்வவேத காலத்தில், இந்த உலோகங்களுடன் வெள்ளி மற்றும் இரும்பு போன்ற உலோகங்களும் வழக்கத்திற்கு வந்துள்ளன. சிந்து மக்கள் மத்தியில் தங்கத்தை விட வெள்ளி அதிகம் வழக்கத்தில் இருந்துள்ளது. மேலும் பாத்திரங்கள் சில நேரங்களில் கற்காலத்தின் நினைவுச்சின்னமாக, கற்களால் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் செம்பு மற்றும் வெண்கலம் கூட பாவனையில் இருந்துள்ளன.
  • வேதகால ஆரியர்கள் தாக்குதல் ஆயுதங்களுக்கு வில் , அம்பு, ஈட்டி, வாள்,கோடாரி, தற்காப்பு கவசத்திற்கு தலைக்கவசம் மற்றும் உலோகத்திலான மார்புக்கவசம் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர். அவர்களிடம் கதாயுதம், சூலாயுதம் முதலான ஆயுதங்களும் உள்ளன. சில சமயங்களில் கல்லாலும், சில சமயங்களில் உலோகத்தாலும் ஆன ஆயுதங்கள் அவர்களிடம் இருக்கும்.
  • அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த முத்திரைகளில் உள்ள படங்கள், அமர்ந்திருக்கும் யோகி மற்றும் சிவ வழிபாட்டில் பயன்படுத்தப்படும் சாதனங்களைப் போன்ற பொருட்களைக் காட்டுகின்றன. சில கட்டிடங்கள் யாகங்கள் செய்வதற்கான குண்டங்கள் மற்றும் வேத பலிபீடங்கள் போன்றவை.
புகைப்பட ஆதாரம் – lokvani.com,harappa.com

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு இடங்களின் காலகட்டம் 2500 கி.மு முதல் 7000 கி.மு வரை இருக்கும் என மதிப்பிடுகின்றனர். இது முதிர்ந்த நாகரிகத்தின் ஆரம்ப நகரங்களை உள்ளடக்கியது. ஆரிய நாகரிகத்தின் மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் வேதத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறைகளைப் பின்பற்றினார்கள். இறைவனை வழிபடுதல், பல்வேறு சடங்குகளில் ஈடுபடுதல், தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுதல், குடும்பத்தைக் கவனித்து தர்மத்தின் வழியில் வாழ்க்கையை நடத்துவது போன்றவை அவர்களின் வாழ்க்கை முறையில் அடங்கும்.

மகா பாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்களில் இந்தச் செயல்கள் அனைத்தையும் நாம் காணலாம். நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், ஆரியர் என்று முத்திரை குத்திக்கொண்டு ஒருவரும் ஆரியர் ஆகிவிட முடியாது. ஆனால், ஆரிய நாகரீகத்தின் உண்மையான விதி முறைகளைப் பின்பற்றுபவரே ஆரியராக கொள்ளப்படுவார். ஆன்மிக அறிவைப் பற்றிய ஆழ்ந்த இருளில் ஒருவர் இருந்து கொண்டு, அதே சமயம் தன்னை ஆரியர் என்று பெருமையாகக் கூறுவது, ஆரியர் அல்லாத அனார்யருடைய நிலையையே குறிக்கும். எனவே, மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள மக்களை சில மொழியியலாளர்கள் கூறுவது போல் ஆரியர்கள் என்று ஏற்கவோ அல்லது அழைக்கவோ முடியாது. ஏனென்றால் அவர்கள் வாழ்க்கை முறையில் வேத சாஸ்திரங்களைப் பின்பற்றவில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 3

ஆரிய நாகரீகத்தின் தத்துவங்கள் என்ன?

பல்வேறு வேத சாஸ்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ள சனாதன தர்மத்தின் அடிப்படையில் ஆரிய நாகரீகம் நிறுவப்பட்டுள்ளது. வேத சாஸ்திரங்களில் நான்கு வேதங்கள் (ரிக், யஜுர், சாம, அதர்வண), வேதாந்த சூத்திரம், நூற்றியெட்டு உபநிஷதங்கள், பதினெண் புராணங்கள், இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்றவை அடங்கும். இவற்றில் பகவத் கீதை முதன்மையான உபநிஷதமாகவும் ஸ்ரீமத் பாகவதம் புராணங்களில் முதன்மையானதாகவும் விளங்குகின்றன.

புகைப்பட ஆதாரம் : The Bhaktivedanta Book Trust

இதைவிட, பல லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக நேரம், இடம் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு, மனு மற்றும் பல்வேறு ரிஷி,முனிவர்களால் தொகுக்கப்பட்ட பலவகையான தர்ம சாஸ்திரங்கள் உள்ளன. அனைத்து வேத சாஸ்திரங்களுக்கும் சாராம்சமாக விளங்குவது ஸ்ரீமத் பாகவத புராணம் ஆகும். அதனால், ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து இந்தக் கட்டுரையில் பல மேற்கோள்கள் காண்பிக்கப்பட்டுள்ளன.

வேத சாஸ்திரங்களிலுள்ள தத்துவங்களின் சாராம்சம் என்னவென்றால், ஆத்மா மற்றும் சரீரம் பற்றிய உண்மையை எடுத்தியம்பி, பகவான் கிருஷ்ணரிடம் பிரேம பக்தியை அடையும் இலக்கை நோக்கி மக்களை வழிநடத்துவதாகும். ஆனால், மக்கள் வெவ்வேறு இயல்புகளையும் பண்புகளையும் பெற்றிருப்பதால், வேத சாஸ்திரங்களில் கர்ம யோகம், ஞான யோகம் மற்றும் பக்தி யோகம் போன்ற பல்வேறு வழிபாட்டு செயல்முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. இதைவிட சைவம், வைஷ்ணவம், சாக்தம், சௌரம், கணபத்யாம் மற்றும் கௌமாரம் ஆகிய ஆறு வழிபாட்டு முறைகளும் உள்ளன. இந்தப் பல்வேறு வழிபாட்டு முறைகளின் நோக்கமெல்லாம் மக்களைப் படிப்படியாக, நைமித்திக தர்மங்களிலிருந்து ஆத்மாவின் நித்ய தர்மமான கிருஷ்ண பக்தியை நோக்கி வழிப்படுத்துவதாகும். இதையே பகவான் கிருஷ்ணர் பகவத் கீதை அத்தியாயம் 18 ஸ்லோகம் 66 ல் “எல்லாவிதமான தர்மங்களையும் துறந்து என்னிடம் மட்டுமே சரணடைவாயாக” என்று கூறுகின்றார்.

இது சம்பந்தமாக, ஸ்ரீல மாதவாசார்யா இந்த பூலோகத்தில் எப்படி மனிதர்கள் வாழ வேண்டும் என்பது பற்றி பிரம்ம வைவர்த்த புராணத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார். இந்த மனித உடலில் நாம் இருக்கும் வரை, உடலுக்குள் இருக்கும் ஆத்மாவைப் புரிந்துகொள்வதே நமது கடமை. உடலானது ஆத்மா போன்று நிரந்தரமானது அல்ல. நாம் உடலிலிருந்து வேறுபட்டவர்கள். குழந்தைப் பருவத்திலிருந்து இளமைப் பருவத்திற்கும், சிறுவயதில் இருந்து முதுமைக்கும், பின்னர் வெளிப்படையான அழிவுக்கும் உடல் மாறுவதைப் பற்றி ஒருவர் அதிகம் கவலைப்படக் கூடாது. மாறாக, உடலுக்குள் இருக்கும் ஆத்மாவைப் பற்றியும், லௌகீக வாழ்க்கைக் சிக்கலில் இருந்து ஆத்மாவை எவ்வாறு விடுவிப்பது என்பதை ஒருவர் மிகவும் தீவிரமாகக் சிந்திக்க வேண்டும். உடலுக்குள் இருக்கும் உயிர் ஒரு போதும் அழிவதில்லை. அவர் ஒரு ஆத்மா (அஹம் பிரம்மாஸ்மி) மற்றும் ஆத்மா நிலையானது என்றும் உடலின் மாற்றங்களால் பாதிக்கப்படாது என்பதையும் ஒருவர் அறிந்து கொள்ள வேண்டும்.

பிராமண கலாச்சாரத்தின் அடிப்படைக் கொள்கை, ஹோமம், யாகம் போன்ற சடங்குகளின் உருவமான விஷ்ணு அல்லது கிருஷ்ணரை பூஜித்து திருப்திப்படுத்துவதாகும். விஷ்ணு பகவான் அனைத்து வேதச்சடங்குகளையும் அர்ப்பணமாக, “பூர்ணாகுதி” மூலமாகப் பெற்றுக் கொண்டு, மக்களுக்கு அருள் பாலிக்கின்றார். மேலும், அவர் அனைத்து தேவர்கள், பெரிய மஹான்கள் மற்றும் கடவுள் பக்தர்கள் ஆகியோரின் சரணாகதியும் ஆவார். எனவே, ஆரிய வழி முறையில் வர்ணாஸ்ரம-தர்மம் உள்ளது. இதன் மூலம் ஒவ்வொருவரும் சமுதாயத்தின் வர்ண (பிராமண, ஷத்திரிய, வைசிய மற்றும் சூத்ர) மற்றும் ஆஸ்ரம (பிரம்மச்சார்யம், கிரஹஸ்தா, வானபிரஸ்தம் மற்றும் சந்நியாசம்) பிரிவில் அவரவர் நிலைக்கு ஏற்ப கல்வி கற்று பக்திப் பாதையில் முன்னேற வேண்டும்.

விஸ்வரூப வடிவான விஷ்ணுபகவானுடைய வாயிலிருந்து பிராமணர்களும், கைகளில் இருந்து க்ஷத்திரியர்களும், தொடையிலிருந்து வைசியர்களும், கால்களிலிருந்து சூத்ரர்களும் பிறக்கிறார்கள். பிராமணர்களுக்கு பின்வரும் குணங்கள் உள்ளன: அமைதி, சுயக்கட்டுப்பாடு, சிக்கனம், தூய்மை, சகிப்புத்தன்மை, நேர்மை, அறிவு, ஞானம் மற்றும் ஆன்மீக வழிபாடு. க்ஷத்ரியர்களின் பணியின் பண்புகள் வீரம், வல்லமை, உறுதிப்பாடு, சமயோசிதம், போரில் துணிவு, பெருந்தன்மை, தலைமைத்துவம் ஆகியவையாகும். வைசியர்களுக்கான வேலையின் குணங்கள் விவசாயம், பசுக்களைப் பாதுகாத்தல், வியாபாரம் ஆகியவை. மேலும் சூத்ரர்களுக்கு உழைப்பும் மற்றவர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பும் உள்ளது.

ஸ்ரீமத் பாகவதம் 2 வது காண்டம் 4 வது அத்தியாயம் 18 வது ஸ்லோகம், சனாதன தர்மத்தை விட்டு வெளியேறி உலகின் பல்வேறு பகுதிகளில் குடியேறிய பல இனங்களைப் பற்றிக்கூறுகிறது. இது கிராதா (பீகார்), ஹூனா (கிழக்கு ஜெர்மனி மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகள்), ஆந்திரா, புலிந்தா (கிரேக்கர்கள்), புல்காசா, ஆபீரா (அரேபிய கடலின் மறுபக்கம்), சும்பா, யவன (துருக்கி), காசா (மங்கோலியன் மற்றும் சீனம்) போன்ற இனங்களைக் குறிப்பிடுகிறது. இதிலிருந்து, மனித நாகரிகம் முதலில் இந்தியாவில் உருவாகி பின்னர் உலகின் பிற பகுதிகளுக்கு நகர்ந்தது என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். எனவே,லட்சக் கணக்கான ஆண்டுகளாக நடந்த மக்களின் இடம் பெயர்வுகளை விவரிக்க, இந்தியாவிலிருந்து வெளியே சென்றவர்கள் என்ற கோட்பாடு (OIT) தான், ஆரிய படையெடுப்பு கோட்பாட்டை (AIT) என்பதை விட மிகவும் பொருத்தமாக உள்ளது.

பிரம்மா உலகை உருவாக்கிய போது அதை ஆண்டவர் யார்?

பிரபஞ்சம் உருவானபோது, ​​பூமியை மனு ஆட்சி செய்தார். பிறகு அவருடைய மகன் பிரியவர்தர் இந்த உலகை ஆட்சி செய்தார். மஹாராஜா பிரியவர்தர் ​​தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார். ஸ்ரீமத் பாகவதம் காண்டம் 5 அத்தியாயம் 1 ஸ்லோகம் 31 இன் படி, பிரியவர்தர் தனது தேரை சூரியனுக்குப் பின்னால் ஓட்டியபோது, ​​அவரது தேர்ச்சக்கரங்களின் விளிம்புகள் பெரிய அடையாளங்களை உருவாக்கியது. அது பின்னர் ஏழு பெருங்கடல்களாக மாறி, பூ மண்டலம் எனப்படும் கிரக அமைப்பை ஏழு தீவுகளாகப் பிரித்தது. உலகம் முழுவதும் ஏழு தீவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆரிய அரசர்களால் ஆளப்பட்டதைக் காணலாம்.

மேலும், ஸ்ரீமத் பாகவதம் காண்டம் 4 அத்தியாயம் 21 ஸ்லோகம் 12 கூறுவதன்படி, மஹாராஜா பிருது ஒரு நிகரற்ற மன்னராக இருந்தார். மேலும் பூமியின் மேற்பரப்பில் உள்ள ஏழு தீவுகளையும் (சப்த த்வீபங்கள்) ஆளும் அரச அதிகாரத்தை கொண்டிருந்தார். அகில உலக கிருஷ்ண பக்தி மன்ற ஸ்தாபக ஆசார்யர் ஸ்ரீல பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்கள் இந்த ஸ்லோகத்திற்கு எழுதிய விரிவுரையில், சப்த-த்வீபங்கள் என்பது பூமியின் மேற்பரப்பில் உள்ள ஏழு பெரிய தீவுகள் அல்லது கண்டங்களைக் குறிக்கிறது என்று குறிப்பிடுகிறார். அவையாவன :- (1) ஆசியா, (2) ஐரோப்பா, (3) ஆப்பிரிக்கா, (4) வட அமெரிக்கா, (5) தென் அமெரிக்கா, (6) ஆஸ்திரேலியா மற்றும் (7) ஓசியானியா. நவீன யுகத்தில், மக்கள் வேத காலத்தில் அல்லது வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் அமெரிக்கா மற்றும் உலகின் பல பகுதிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற எண்ணத்தில் உள்ளனர். ஆனால் அது ஒரு உண்மை அல்ல. அந்தப் பகுதிகளை ஆரியச்சக்கரவர்த்திகள் புராண காலங்களில் ஆண்டு வந்துள்ளனர்.

பிருது மஹாராஜா, வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்று அழைக்கப்படுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகை ஆண்டார். மேலும் அந்த நாட்களில் உலகின் பல்வேறு பகுதிகள் அறியப்பட்டவை மட்டுமல்ல, அவை மஹாராஜா பிருது என்ற ஒரு மன்னரால் ஆளப்பட்டன என்பதும் இங்கே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து பிருது மஹாராஜா ஆட்சி புரிந்து வந்தார். ஏனெனில் அவர் கங்கை மற்றும் யமுனை நதிகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. பிரம்மவர்த்தா என்று அழைக்கப்படும் இந்த நிலப்பகுதி, பஞ்சாப் மற்றும் வட இந்தியாவின் பகுதிகளாக நவீன யுகத்தில் அறியப்பட்ட பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்திய அரசர்கள் ஒரு காலத்தில் உலகம் முழுவதையும் ஆண்டனர் என்பதும் அவர்களின் கலாச்சாரம் வேதங்களைப் பின் பற்றியது என்பதும் தெளிவாகிறது.

மேற்கூறியவற்றிலிருந்து, வேதகால ஆரிய நாகரிகம் முதன்முதலில் இந்தியாவில் உருவாக்கப்பட்டு, வரலாற்றுக்கு முந்தைய காலங்களில், உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். மாக்ஸ் முல்லர் மற்றும் பல்வேறு இந்தியவியலாளர்களால் பரப்பப்பட்ட கட்டுக்கதையை தோற்கடிப்பதற்கு , இந்தியாவுக்கு வெளியே மக்கள் சென்றார்கள் என்ற கோட்பாடு (OIT) தான் சரியான பதில் என்றும் ஆரிய படையெடுப்பு கோட்பாடு (AIT) அல்ல என்ற முடிவுக்கு நாம் வரலாம். வெளியில் இருந்து இந்தியாவிற்கு ஆரியர் வருவது என்பது ஐரோப்பியர்களால் இந்தியாவைப் பிரித்து ஆள்வதற்காகப் பரப்பப்பட்ட தவறான கருத்துரையாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

 

ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 4

ஆரிய படையெடுப்பு கோட்பாட்டில் உள்ள முக்கிய குறைபாடுகள் என்ன?

தத்துவம், கணிதம், தர்க்கம், வானியல், மருத்துவம் மற்றும் பிற விஞ்ஞானங்களுக்கு வேத உலகின் பங்களிப்புகள், மனிதகுலத்தின் பொதுவான பாரம்பரியத்தை நிலைநிறுத்துவதற்கான அடித்தளங்களில் ஒன்றை வழங்கியது மட்டமன்றி, வேத உலகின் பங்களிப்புகள் நன்கு அங்கீகரிக்கப்பட்டும் உள்ளன. ஆனால், வேதங்கள் கிமு 1500 க்குப் பிறகு இயற்றப்பட்டது எனக் கொள்ளப் பட்டால், ஆரிய நாகரீகம் இந்த குறுகிய காலத்துக்குள் வளர்ந்ததாகக் கொள்ள முடியாது. ஆரிய படையெடுப்பு கோட்பாட்டின் ஒரு பெரிய குறைபாடு என்னவென்றால், ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியே இருந்து வந்திருந்தால், கிமு 1500 ஆண்டளவில் எழுதப்பட்டதாக சொல்லப்படும் வேத சாஸ்திரங்கள் இந்தியாவிற்கு வெளியே எந்தப் பகுதியையும் புனித ஸ்தலமாகக் குறிப்பிட்டு சொல்லவில்லை என்பதற்கான விளக்கம் ஏதும் இல்லை. மேலும், ரிக் வேதத்தில் உள்ள வானியல் குறிப்புகள் கிமு 3000 மற்றும் அதற்கு முந்தைய நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றன. இது கிமு 3000 க்கு முன்னமே வேத ஸ்லோகங்கள் நடப்பில் இருந்ததைக் குறிக்கிறது.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன், வடக்கிலும் தெற்கிலும் உள்ள மக்கள் கலாச்சார ரீதியாக ஒருவருக்கொருவர் விரோதமாக இருந்ததில்லை. இரு பிராந்தியங்களுக்கிடையில் இடைவிடாத தொடர்புகள் மற்றும் கலாச்சார பரிமாற்றம் இருந்து வந்துள்ளது. ஆரிய மொழி என்று அழைக்கப்படும் சமஸ்கிருத மொழி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முழு சமூகத்தின் மக்களிடையே தகவல்தொடர்புக்கான வழிமுறையாகப் பயன்படுத்தப்பட்ட மொழியாகும். சங்கராச்சாரியார், மாதவாச்சாரியார், ராமானுஜாச்சாரியார், விஷ்ணுஸ்வாமி மற்றும் நிம்பர்காசாரியார் ஆகிய ஐந்து பெரிய பக்தி பரம்பரைகளின் ஆசார்யர்கள் தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்கள். அவர்கள் வட இந்தியாவிலும் ஆசார்யகளாக மதிக்கப்படுகிறார்கள்.மேலும், எல்லா மக்களின் நலனுக்காக சமஸ்கிருதத்தில் வேத சாஸ்திரங்களுக்கு விளக்கவுரைகளை எழுதியுள்ளனர். இதைவிட , பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே, சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்து, வங்காளத்திலிருந்து கன்யாகுமாரிக்கும் பின்பு மஹாராஷ்டிரம் மற்றும் விருந்தாவனத்திற்கு பாதயாத்திரையாக சென்று கலியுகத்தின் யுகதர்மமான ஹரி நாம சங்கீர்த்தனத்தை இந்தியா முழுவதும் பரப்பினார். இதன் மூலம் இந்தியா முழுவதும் சனாதன தர்மம் வடக்கு தெற்கு என்ற பிராந்திய வேறுபாடின்றி பரவியிருந்ததை நாம் காணலாம்.

புகைப்பட ஆதாரம் : The Bhaktivedanta Book Trust

ஹரப்பாவில் வசித்தவர்களின் மதச் சடங்குகள் வேத ஆரியர்களின் மதச் சடங்குகளைப் போலவே இருந்தன என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. அவர்களின் மத உருவங்கள், தெய்வங்கள் மற்றும் பலிபீடங்கள் ஆரிய நம்பிக்கையைப் போலவே இருந்தன. இது,இப்பகுதியில் வேத நாகரிகம் செழித்து வளர்ந்ததையே காண்பிக்கிறது.

ரிக்வேதத்தில் சொல்லப்பட்டுள்ள பல்வேறு போர்கள், மோதல்கள் மற்றும் படையெடுப்புகள் என்பன, வெள்ளை நிற ஆரியர்களுக்கும் இருள் நிறமுள்ள பழங்குடியினருக்கும் இடையேயான படையெடுப்பு மற்றும் போர்களின் ஆதாரமாக அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகின்றன. ரிக்வேதத்தில் கூறப்படும் மோதல்கள் மற்றும் போர்கள் என்று அழைக்கப்படுபவை உயர்ந்த கிரகங்களில் உள்ள தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையிலான போர் என்றும், இந்தப்பிராந்தியத்தில் அவ்வப்போது ஆட்சி செய்த பல்வேறு மன்னர்களுக்கு இடையிலான போர் என்றும் வகைப்படுத்தலாம். எனவே, வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள போர்கள் ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையே நடந்த போர்கள் அல்ல.

ஆரியர்கள் குதிரையில் சவாரி செய்தார்கள், போக்குவரத்திற்கு தேர்களைப் பயன்படுத்தினார்கள், மேலும் ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோவின் ஆரம்ப இடங்களில் குதிரையின் அடையாளங்கள் எதுவும் காணப்படாததால், சிந்து சமவெளியில் வசிப்பவர்கள் ஆரியர்களாக இருக்க முடியாது என்றும் வாதிடப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அகழ்வாராய்ச்சியின் போது, ​​பல தளங்களின் அகழ்வாராய்ச்சி முழுமையடையவில்லை. சிறிது காலத்தின் முன்பாக , சிந்து பள்ளத்தாக்கு மற்றும் வறண்ட சரஸ்வதி நதியை ஒட்டிய பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பல இடங்களில் வளர்ப்பு குதிரைகளின் எலும்புகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. இது சிந்து பள்ளத்தாக்கில் வசிப்பவர்கள, ஆரியரல்லாதவர்கள் என்ற வாதத்தை தோற்கடிப்பதுடன், வேத கலாச்சாரத்தை சிந்து சமவெளி நாகரிகத்துடன் அடையாளப்படுத்துகிறது.

மேலும், 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டெல்லிக்கு அருகிலுள்ள சனௌலியில் ஏறக்குறைய 4,000 ஆண்டுகள் பழமையான செப்புத் தேர் கண்டுபிடிக்கப்பட்டமையானது ஏற்கனவே அந்த ரதங்கள் இந்தியாவின் நாகரிகத்தில் பயன்பாட்டில் இருந்தன என்பதைக் குறிக்கின்றது. இந்த தேர் பற்றிய கண்டுபிடிப்பு, 5500 ஆண்டுகள் பழமையான குதிரை எலும்புகள், 4500 ஆண்டுகள் பழமையான இரதங்கள் பற்றிய மத்திய இந்திய பாறைக் கலையில் உள்ள பல்வேறு கண்டுபிடிப்புகள், 1500 கி.மு காலத்தில் ஆரிய படையெடுப்பு என்று அழைக்கப்படுவதற்கு முன்பே இந்தியாவில் ரதங்களும் குதிரைகளும் பயன்படுத்தப்பட்டன என்பதைக் குறிக்கிறது.

கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் மதங்களின் புனித நூல்கள் இந்தியாவிற்கு வெளியே உள்ள இடங்களை புனித ஸ்தலங்கள் என்று அழைக்கின்றன. ஏனெனில், இந்த மதங்கள் இந்தியாவுக்கு வெளியே இருந்து வந்துள்ளன. ஆரிய இந்துக்கள் வெளியிலிருந்து வந்த மனிதர்களாக இருந்திருந்தால், இந்தியாவிற்கு வெளியே உள்ள இடங்களை அவர்களின் புனித இடங்கள் என்று ஏன் பெயரிடுவதில்லை என்ற கேள்வி எழுகிறது. வேத சாஸ்திரங்கள், இந்திய தீபகற்பம் முழுவதையும் கடந்து செல்லும் இந்தியாவின் எண்ணற்ற ஆறுகள், உயிர் கொடுக்கும் நீர்நிலைகள், மற்றும் இயற்கை வளங்களின் களஞ்சியங்களான மலைகளை ஏன் புகழ்ந்து பாட வேண்டும். அதற்கு மேலே சென்று, நதிகளுக்கு பெண் தெய்வங்கள் மற்றும் கடவுள்களின் அந்தஸ்தை கூட வழங்கியுள்ளன. ஆரியர்கள் வெளிநாட்டினராக இருந்திருந்தால், அவர்களின் பூர்வீக நிலத்தை ‘புனித பூமி’ என்று கருதாமல், ஏன் இந்தியாவை ‘புனித பூமி’ என்று கருத வேண்டும்?

மேலும், வேத சாஸ்திரங்கள் சரஸ்வதி நதி இருப்பதையும், இமயமலையில் இருந்து வருகின்ற நதிகளின் கரையோர நாகரிகம் பற்றி பேசுகின்றன. இந்த சரஸ்வதி நதி 10,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாகவும், பின்னர் சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு வறண்டதாகவும் நவீன ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்கிறார்கள். ஆரியப் படையெடுப்பை நிராகரிக்க சரஸ்வதி நதி இருந்தது என்ற ஆதாரம் ஒன்றே போதுமானது. சமஸ்கிருதம் ஏற்கனவே 10,000 முதல் 4,500 ஆண்டுகளுக்கு மத்தியில் வழக்கில் இருந்தபோது, 3500 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஆரியர்களின் படையெடுப்பு சமஸ்கிருதத்தை இந்தியாவிற்குள் கொண்டு வந்ததாகக் கூறப்படுவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத வாதம் ஆகும்.

சனாதன தர்மத்தின் ஏழு புனித நகரங்களில் (சப்த புரி) தெற்கில் காஞ்சிபுரம், மேற்கில் துவாரகா, வடக்கில் அயோத்தியா, மதுரா, ஹரித்வார், காசி மற்றும் மத்திய இந்தியாவில் உஜ்ஜயினி ஆகியவை அடங்கும். பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், ஆந்திராவில் ஸ்ரீசைலம், மகாராஷ்டிராவில் நாசிக், ஔரங்கபாத் மற்றும் பூனா , ஜார்கண்டில் வைத்திய நாத், குஜராத்தில் சோம்நாத் மற்றும் நாகேஸ்வர்,மத்ய பிரதேசத்தில் உஜ்ஜயின் மற்றும் காண்ட்வா, உத்தரகாண்டில் கேதார்நாத் மற்றும் உத்தரபிரதேசத்தில் காசி ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் இந்தியத் துணைக்கண்டத்தில் மட்டுமே அமைந்துள்ளன. சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஆரிய நாகரீகம், இந்தியாவின் அனைத்துப் புவியியல் பகுதிகளையும் உள்ளடக்கியது. அத்துடன் சனாதன தர்மம் இந்தியாவிற்கு வெளியே எந்தப் பகுதியையும் புனித ஸ்தலங்களாகக் கருதவில்லை.

பண்டைய காலங்களில் கூட பௌதாயனர் மற்றும் ஆபஸ்தம்பர் போன்ற சிறந்த தர்மசூத்ர ஆசிரியர்கள் சிலர் தெற்கிலிருந்து வந்தவர்கள். புகழ்பெற்ற வேத ரிஷியான அகஸ்தியர், தென்னிந்தியாவிற்கு வேத சாஸ்திரங்களையும் தமிழ் மொழியையும் அறிமுகப்படுத்தியவர் என்று பரவலாகப் போற்றப்படுகிறார்.

மேலும், சிந்து சமவெளியின் பூர்வீக மக்களை கூட்டமாக இடம் பெயர வைப்பதற்கு முன்பு தென்னிந்தியா மக்கள் வசிக்காத பகுதியாக இருந்ததா ? இல்லை என்றால், தென்னிந்தியாவின் பூர்வீக குடிகள் யார் ? , புதியவர்களை எந்த விரோதமும் சண்டையும் இல்லாமல் ஏற்றுக்கொண்டவர்களா? இவற்றுக்கெல்லாம், என்ன பதில்? ஆரிய படையெடுப்பு கோட்பாட்டில் இவற்றுக்கெல்லாம் பதில் இல்லை.

சனாதன தர்மத்தின் ஏழு புனித நதிகள் இந்தியாவின் பவித்ர பூமி முழுவதையும் உள்ளடக்கியது. சிந்து மற்றும் சரஸ்வதி (இப்போது அழிந்துவிட்டது) இமயமலையில் இருந்து தோன்றி மேற்கு மற்றும் தெற்கு நோக்கி மேற்கு கடலுக்குள் செல்கின்றன. கங்கை மற்றும் யமுனை இமயமலையில் தொடங்கி கிழக்கு நோக்கி வடகிழக்கு கடலுக்குள் செல்கிறது. நர்மதை மத்திய இந்தியாவில் தொடங்குகிறது, மற்றும் கோதாவரி மேற்கு இந்தியாவில் தொடங்குகிறது. அதே சமயம் காவேரி தென்னிந்தியா வழியாக வளைந்து சென்று தெற்கு கடலுக்குள் செல்கிறது.

துவாபர யுகத்தில், கிருஷ்ணர் துவாரகா நகரத்தில் இருந்து ஆட்சி செய்து கொண்டிருந்தார். கிருஷ்ணர் இவ்வுலகை விட்டு வெளியேறி கோலோக பிருந்தாவனம் சென்ற பின்பு இந்த நகரம் நீரில் மூழ்கியது. நீருக்கடியில் உள்ள இந்த நகரம் இப்போது கண்டுபிடிக்கப்பட்டதுடன், துவாரகா மற்றும் அத்துடன் தொடர்புடைய மகா பாரத காவியத்தின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துகிறது. இந் நகரம் கிமு 3000 க்கு முந்தையது. ஆகவே, ஆரிய படையெடுப்பு நடைபெற்றதாகக் கூறப்படும் கிமு 1500 க்கு முன்பாகவே இந்த நகரம் இருந்துள்ளதை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஆரியர் இந்தியாவின் மீது படையெடுத்து இந்தியாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்தனர் என்பது வெறும் கட்டுக்கதை என்பதை மேற்கூறிய ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவைக் கைப்பற்றி மக்களைப் பிளவுபடுத்துவதற்காக ஜெர்மானிய அறிஞர் மாக்ஸ் முல்லர் மற்றும் பிறரால் உருவாக்கப்பட்ட பொய்ப் பிரச்சாரமே இந்த ஆரியப் படையெடுப்பு கோட்பாடு. முடிவில், ஆரியப் படையெடுப்பு கோட்பாடானது, அறிவார்ந்த நேர்மையின்மை, உண்மைகளை வேண்டுமென்றே பொய்யாக்குதல் மற்றும் பிரித்தாளும் தந்திரங்களால் இந்திய மக்களைக் கைப்பற்றும் நோக்கத்துடன் புனையப்பட்டதாகும்.

இந்திய வேத நாகரிகத்திற்கான காலவரையறை என்ன?

ஸ்ரீமத் பாகவத காண்டம் 3 அத்தியாயம் 11 ன் படி, பிரம்மாவின் ஒரு நாள் கல்பம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு கல்பத்தில் ஆயிரம் சதுர் யுகங்களும், ஒரு சதுர் யுகத்தில் சத்ய, துவாபர, திரேதா மற்றும் கலி ஆகிய நான்கு யுகங்களும் அடங்கி உள்ளன. மனித வருஷங்களின் அடிப்படையில், கீழே காட்டப்பட்டுள்ளபடி ஒவ்வொரு யுகமும் பல ஆயிரம் வருஷங்கள் நீடிக்கும். இந்த கல்பம் ஸ்வேத வராஹ கல்பம் என்றும், மனுவின் காலம் வைவஸ்வதம் என்றும் அழைக்கப்படுகிறது. பிரம்மாவின் ஒரு நாளில் பதினான்கு மனுக்கள் உள்ளனர். இப்போதுள்ள பூலோகத்தை ஆளும் மனு ஏழாவது மனுவாகும்.

ஒரு சதுர் யுகத்தில் நான்கு யுகங்கள் உள்ளன. அவையாவன , கலியுகம் – 432,000 வருஷம் , துவாபர யுகம் – 864,000 வருஷம், திரேதா யுகம் – 1,296,000 வருஷம் மற்றும் சத்திய யுகம் – 1,728,000 வருஷம் – மொத்தம் 4,320,000 வருஷங்கள். பிரம்மாவின் ஒரு நாளில் 1000 சதுர் யுகங்கள் உள்ளன. இந்த ஆயிரம் சதுர் யுகங்களில் மொத்தமாக 4,320,000,000 வருஷங்கள் இருக்கின்றன. பிறகு பிரம்மாவின் இரவுக்கு இதேயளவு நேரம் உள்ளது. பிரம்மா தனது வருஷக்கணக்கில் 100 வருஷங்கள் வாழ்கிறார், அதாவது மொத்தம் 311 லட்சம் கோடி (டிரில்லியன்) மனித வருஷங்கள். தற்போது பிரம்ம தேவர் 50 ஆண்டுகளை கடந்து 51 வது ஆண்டை தொடங்கி ஐம்பத்தியொராவது ஆண்டின் முதல் நாளைக் கடந்து கொண்டு இருக்கின்றார்.

ஸ்ரீமத் பாகவதத்தின்படி, நமது பிரபஞ்சம் தற்போது 155.5 லட்சம் கோடி (டிரில்லியன்) ஆண்டுகள் பழமையானது. யுக சுழற்சி காலங்களில் ஏற்படும் பல்வேறு அழிவுகளால் உலகங்கள் அழிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் உருவாக்கப்படுகின்றன. மிக சமீபத்திய அழிவுக்குப் பிறகு, நமது பூமியானது வைவஸ்வத மனுவின் தற்போதைய (மனுவின் மொத்தக் காலமாகிய 71 சதுர் யுகங்களில் 28 சதுர் யுகங்கள் கழிந்து விட்டன) காலகட்டத்தில் சுமார் 1205 லட்சம் (120.5 மில்லியன்) ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் உருவாக்கப்பட்டது. எனவே, மனித நாகரிகங்கள் இந்த பூமியில் குறைந்தது 1205 லட்சம் (120.5 மில்லியன்) ஆண்டுகளாக உள்ளன. அத்துடன், 1205 லட்சம் (120.5 மில்லியன்) ஆண்டுகளுக்கு முன்பு இருந்து சமஸ்கிருதம் வழக்கில் இருந்து வருகிறது. ஏனெனில், வேத நூல்கள் சமஸ்கிருத மொழியில் சொல்லப்பட்டுள்ளன. எனவே, இந்த வேத ஆதாரங்களின் அடிப்படையில், 3500 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டவர்களால் சமஸ்கிருதம் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது என்ற ஆரியப் படையெடுப்பின் வாதத்தை எளிதில் தோற்கடிக்க முடியும்.

வேத அறிவானது வாய்மொழியாக சிஷ்ய பரம்பரை மூலமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 5100 ஆண்டுகளுக்கு முன்பு, கலியுகத்தின் தொடக்கத்தில் வியாச தேவரால் ஓலைச்சுவடிகளில் வேத சாஸ்திரங்கள் எழுதப்பட்டன. சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு “இந்தோ-ஆரியர்கள்” வருகைக்குப் பிறகுதான் இந்தியாவில் சமஸ்கிருத மொழி உருவாக்கப்பட்டு வேதங்கள் இயற்றப்பட்டன என்று ஆரியப் படையெடுப்பு கோட்பாடு கூறுகிறது. இந்த காலவரையானது எந்த ஆதாரமும் இல்லாது மொழியியலாளர்களின் ஒரு யூகத்தினால் அனுமானிக்கப் பட்டதாகும். ஆனால், வேதங்களும் புராணங்களும் வியாச தேவரால் சமஸ்கிருதத்தில் எப்போது தொகுக்கப்பட்டன என்று ஸ்ரீமத் பாகவதம் விளக்கமாக கூறுகிறது. எனவே, 5100 ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து வேதங்களும் மக்கள் எளிதில் மனப்பாடம் செய்வதற்காக எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டன. இந்த காலகட்டமானது ஆரிய படையெடுப்பு கோட்பாட்டிற்கு 1500 ஆண்டுகளுக்கு முந்தையது ஆகும். இந்த காலகட்ட வித்தியாசமானது இந்தியாவையும், ஏராளமான வேத சாஸ்திரங்களையும் இழிவுபடுத்துவதற்காக ஐரோப்பியர்களால் பரப்பப்பட்ட ஒரு கட்டுக்கதைதான் ஆரியப் படையெடுப்பு என்று தெளிவு படுத்துகிறது.

தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில், ஐஹோல் என்ற பண்டைய நகரம் உள்ளது, அங்கு கி.பி 634 ஆம் ஆண்டிலிருந்து இரண்டாம் புலிகேசினின் கல்வெட்டு உள்ளது. இந்தக் கல்வெட்டில் மகாபாரதப் போருக்குப் பிறகு எத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டன என்பதைக் குறிப்பிடும் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டிலிருந்து, மகாபாரதம் 5100 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும், மஹாபாரத காலத்தை கி.மு. 3102 என்றும் கணிக்க முடிகிறது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard