Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவரும் தெய்வங்களும் - பேராசிரியர்.ஐயப்பன், நெல்லை


Guru

Status: Offline
Posts: 7329
Date:
திருவள்ளுவரும் தெய்வங்களும் - பேராசிரியர்.ஐயப்பன், நெல்லை
Permalink  
 


திருவள்ளுவரும் தெய்வங்களும் - பேராசிரியர்.ஐயப்பன், நெல்லை

தெய்வ நம்பிக்கை என்பது நம் சங்க காலப் பாடல்களிலேயே நன்றாகத் தென்படுகிறது. நமது பழைய இலக்கியங்களில் தெய்வத்தை மறுத்துப் பேசும் நாத்திகக் கருத்துக்கு இடமில்லை. தமிழ் மொழியின் மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் எந்தெந்த நிலப்பரப்புக்கு எந்தெந்த தெய்வம் என்று வகைப்படுத்தியுள்ளது.

திருமால், முருகன், இந்திரன், வருணன் ஆகிய தெய்வங்களுக்கான நிலப்பகுதியைத் தனித்தனியே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என வகுத்துப் பழந்தமிழர்கள் வழிபாடு நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பதைத் தொல்காப்பியத்தின் மூலம் அறிகிறோம்..
அகநானூற்றில் “முக்கட் செல்வன் நகர்வலம் செயற்கே” (அகம் 18) என்றும், புறநானூற்றில்
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணிமிடற் றொருவன் போல
மன்னுக பெரும நீயே” (புறநானூறு 91)

என்று ஔவையார் அதியமானைப் பாடியிருத்தலையும் அறியலாம்.
குறுந்தொகையின் கடவுள் வாழ்த்தில், பாரதம் பாடிய பெருந்தேவனார் முருகனைப் போற்றிப் புகழ்கிறார்.

குன்றி யேய்க்கும் உடுக்கைக் குன்றின்
நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்
சேவலங் கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே’
என்ற பாடலில் முருகக் கடவுளின் கொடி, ஆயுதம் முதலிய அனைத்தும்
சொல்லப்படுகின்றன.

சங்க இலக்கியத் தொகுப்புகளில் ஒன்றான பத்துப்பாட்டில் உள்ள நக்கீரர் எழுதிய `திருமுருகாற்றுப் படை’யும் முருகப் பெருமான் புகழ்பேசும் இலக்கியமே. இன்னும் சங்க இலக்கியத்தில் தென்படும் பக்திக் கூறுகள் பலவாகும்.
`கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்’ (2) என்ற குறள் மூலம்

கல்வி கற்றலின் பயனே கடவுளைத் தொழுவதுதான் என்பது திருவள்ளுவரின் வலிமையான கருத்து என்பது புலப்படுகிறது.. நாத்திகம் பேசுவதை வள்ளுவம் ஒப்புக்கொள்ளவில்லை.
இக்குறளில் வாலறிவன் என்ற சொல் வால்+ அறிவன் என்னும் இரண்டு சொற்களின் கூட்டாக உருவானது. வால் என்பதற்குச் சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி, இளமை, பெருமை, தூய்மை, வெண்மை, நன்மை, மிகுதி, விலங்குகளின் வால் எனப் பலப் பொருள்களைத் தருகின்றது. வாலறிவன் என்பதற்குப் ‘பெருமை மிக்க அறிஞன்’ அல்லது ‘முற்றறிவாளன்’ எனப் பொருள் கொள்ளலாம்.
யாப்பருங்கல விருத்தியுரையில்
‘உலகுடன் விளக்கும் ஒளிகிளர் அவிர்மதி
மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழற் பொற்புடை ஆசனம்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்

என்ற பாடலில் தூயதான அறிவன் என்ற பொருளில், ‘வாலறிவன்’ என்ற சொல்லுக்கு இணையான ‘திருந்தொளி அறிவன்’ என்னும் சொற்றொடர் வருகிறது
ரிக் வேதத்திலுள்ள ஐத்ரேய உபநிடதத்தில் “பிரக்ஞானம் பிரம்மா” என்னும் மகாவாக்கியம் உள்ளது. பிரக்ஞானம் என்றால் பேரறிவு ( Super consciousness, Omniscience)என்று பொருள் .இறைவன் பேரறிவாளன் அதாவது ‘வாலறிவன்’எனப் பொருள் கொள்ளலாம். திருவள்ளுவரும் இதையே கூறுகிறார்.
அகரமுதல எழுத்தெல்லாம்; ஆதி
பகவன் முதற்றே உலகு (1)

என்பது முதல் குறள். இது சொல்வது என்ன? எழுத்துகளெல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டிருப்பதுபோல, இந்த உலகம் ஆதிபகவனை முதலாகக் கொண்டிருக்கிறது என்பதுதானே? இதில் உள்ள இரு பகுதிகளையும் நாம் தனித்தனியே கவனிக்க வேண்டியதிருக்கிறது.
ஒன்று, எழுத்துகளெல்லாம் அகரத்தை முதலாக உடையவை. இரண்டு, (அதுபோல) உலகம் ஆதிபகவனை முதலாக உடையது.
முதல் பகுதியைக் கவனிப்போம். ஒரு மண் குடம் எப்படி உருவாகிறது என்றால் அதற்கு குயவன் காரணம் என்போம். குயவனால் மண், குடம் ஆனது என்றால் குயவனைக் கர்த்தா என்போம். ஆனால் இந்த அர்த்தத்தில் எதுவும் இங்கு கூறப்படவில்லை.. அகரத்திற்குப் பிறகு மற்ற எழுத்துகளின் வரிசை தொடர்கிறது. ஒரு ‘கியூ’ வரிசையில் முதலில் நிற்கும் ஆள், ‘கியூ’வில் நிற்கும் பிற மனிதர்களை உண்டாக்குபவரா? அதாவது காரண முதலா? இரண்டும் அல்ல, அவர் வரிசை முதல். அவ்வளவுதான். அதுபோல எழுத்துகள் வரிசையில் அகரம் முதன்மையாக நிற்கிறது. அதாவது வரிசை முதல். அதுபோல உயிர்களின் வரிசையில் ஆதிபகவன் முதலில் நிற்கிறார். அவ்வளவுதான். ஆதி என்றசொல்லும், குணங்களில் முதன்மையானவர் என்பதைத்தான் குறிக்கிறது. ஆதி பகவன் என்று வள்ளுவர் குறிப்பிட்டது உலகத்தைப் படைத்த கடவுளை அல்ல என்றும், “அகரம் எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும்உயிர்களுக்கு முதன்மை” என்றும் தற்கால உரையாசிரியர்கள் எழுதுகிறார்கள். கலைஞர் கருணாநிதி கூட அப்படித்தான் உரை எழுதியிருக்கிறார். இவர்கள் ஆதிபகவன் யார், கடவுளா அல்லது முதல் மனிதனா என்று விளக்க முற்படவில்லை.
ஆனால் உண்மை அதுவல்ல. உலகிலுள்ள பெரும்பாலான மொழிகளில் அகரம்தான் முதல் எழுத்து. எழுத்துகள் அகரத்தை முதலாக உடையன என்றால் என்ன? இறைவனிடமிருந்து எல்லா உயிர்களும் தோன்றியது போல, எல்லா எழுத்துகளும் அகரத்திலிருந்து தொடங்குகின்றன. எல்லா எழுத்துகளின் ஓசைக்கும் மூல ஒலி அகரம்தானே? அது தானே முதல் அல்லது ஆதி காரணம். அது மட்டுமல்ல, ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரம் அகரம், உகரம், மகரம் என்று மூன்று எழுத்துகளால் ஆனது. ஓம் என்னும் அந்த ஓம்கார ஓசை கூட ‘அ’ என்னும் முதல் எழுத்தில் அல்லது அகர ஒலியில்தான் தொடங்குகிறது.
இரண்டாவது, பகவன் என்ற சொல்லைப் பார்ப்போம். இது பகவான் என்ற சமஸ்கிருதச் சொல் அடிப்படையில் வந்தது அல்ல. தமிழில் முற்றும் துறந்த முனிவர்களைப் பகவன் என்று கூறினார்கள்.
கலித்தொகையில் ஒரு செவிலித்தாய் காதலனுடன் போய் விட்ட, தன் மகளைத் தேடிவருகிறாள். அவளுக்கு முக்கோல் பகவர்கள் (அதாவது திரிதண்டம் ஏந்திய துறவிகள்) ஆறுதல் சொல்கிறார்கள். இங்கு முக்கோல் பகவன் என்ற சொல்லுக்கு கடவுள், பகவான் என்று பொருளல்ல. முனிவன் என்பதுதான் பொருள். அதே பொருளில் – அதாவது முற்றும் துறந்த முனிவன் என்ற பொருளில்தான் பகவன் என்ற சொல்லை இங்கும் திருவள்ளுவர் பயன்படுத்துகிறார். ஆனால் இந்த பகவன் ஆதி பகவன். நீண்ட காலத்துக்கு முன்னாலிருந் தவர், ஒருவேளை அருகதேவராக இருக்கலாம். அதனால் ஆதி பகவன் என்பது சமண சமயத் தலைவரான மகாவீரரையே குறிக்கும் என்பது திருவள்ளுவரைச் சமணச் சார்புடையவர் என்று கூறும் தமிழறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி போன்றோரின் துணிபு.
ஆனால், பகவன் என்ற இச்சொல் பக+அன் என்று பிரிவு படும். ‘பக’ என்னும் சொல் திருக்குறளில் மேலும் இரண்டு பாக்களில் அமைந்துள்ளது.புறங்கூறாமை அதிகாரத்தில் "பகச்சொல்லி கேளிர் பிரிப்பர்" என்ற சொற்றொடர் 187 வது குறளிலும், உட்பகை என்னும் அதிகாரத்தில் "எட்பகவு அன்ன சிறுமைத்தே" என்ற சொற்றொடர் 889 வது குறளிலும் அமைந்துள்ளது."பக" என்ற சொல் " பிரித்தல்" என்ற பொருளிலும் "பகவு"என்ற சொல் "பிளவு "என்ற பொருளிலும் அமைந்துள்ளன. இதன் அடிப்படையில் பகவன் என்றால் பிரித்தலை செய்தவன். பிளத்தலை செய்தவன் என்ற பொருள் அமையும். எதிலிருந்து எதைப் பிரித்தான்?என்ற வினாவை எழுப்பினால் , ஒன்றாக இருந்த வாயுக்குமிழை பிளந்து சிதறடித்தவன் அல்லது சூரியனிலிருந்து பூமியைப் பிரித்தலை செய்தவன்.என்ற விடை கிடைக்கும். இவ்வாறாக ஆதிபகவன் என்ற சொல்லுக்கு சூரியனிலிருந்து ஒரு பகுதியை பிரியுமாறும் பிளக்குமாறும் செய்து இந்த உலகம் தோன்றுவதற்கு மூல காரணமானவன் என்று விளக்கம் அமையும்.
வள்ளுவர் இவ்வுலகை தோற்றுவித்தவன் என்று தோற்றுவாய் கூறி அதனால் அவன் உலகின் முதல்வன் என்று முடித்துள்ளார்."பகவு" என்ற சொல்லுக்கு தமிழ் அகராதியில் "வெடிப்பு " என்ற பொருளும் உள்ளது. இதன் அடிப்படையில் பெரிய வெடிப்பினைச் செய்தவன் என்ற பொருளும் அமையும். ஒருகாலத்தில் வாயுக்களின் கூட்டமாக இருந்த பிரபஞ்சம் வாயுக்கள் இறுகி ஒரு குமிழாகி , அதில் பெருவெடிப்பு ஏற்பட்டு வெடித்து கணக்கற்ற கோள்களாகவும் நட்சத்திரங்களாகவும் சிதறின என்று பௌதீகவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். இதைப் ‘பெருவெடிப்புக் கொள்கை’ (Big Bang theory) என்பர். இதைச் செய்தவனைத் தான் ஆதி பகவன் என்கிறார் வள்ளுவர். இவ்வாறாக உலகத் தோற்றத்திற்கான அறிவியல் உண்மையினை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் உணர்ந்திருக்கிறார் என்பது வியப்பை அளிக்கிறது.
காலிங்கர் கூறுகிறார்: மூலகாரணமாகிய இறைவன் கண்ணே நுண்பூதங்களும், மற்று அவற்றின்வழி விரிந்த வான், வளி, தீ, நீர், நிலம் என்கிற ஐம்பெரும் பூதங்களும் , அவற்றின்வழி விரிந்த, நடப்பன நிற்பனவாகிய இருவகைப் பல்லுயிர்களும், மற்றும் இவ்வுயிர்கள் வாழ்கின்ற உலகங்களனைத்தும் என்றவாறு. இதுவே சான்றோர் ஒப்புக்கொண்ட முடிவு.
கடவுள் வாழ்த்து அதிகாரத்தில், பத்தில் ஐந்து குறட்பாக்கள் கடவுள் மறுப்பாளர்களைப் பற்றிப் பேசுகிறது என்றால் நம்ப முடிகிறதா? கடவுள் வாழ்த்தில் 5 குறள்கள், “தொழாஅர்”, “சேர்ந்தார்க் கல்லால்” “வணங்காத் தலை”, “அடி சேராதார்” என்று கடவுளின் காலடிகளைத் தொழாதவர்களை எச்சரிக்கும் விதமாக எதிர்மறையாக அமைக்கப்பட்டுள்ளன. பரம்பொருளின் காலடிகளைத் தொழ வேண்டும் என்பதை நேரிடையாக செய்தியைச் சொல்லாமல், எதிர்மறையாக, “தொழா விட்டால் என்ன நடக்கும்” என்று சொல்லும்போதே, நாத்திகர்கள் திருவள்ளுவர் காலத்திலும் வாழ்ந்தார்கள் என்று நிரூபணமாகிறது.
வணங்கும் தெய்வங்கள் எத்தனை என்பதன் அடிப்படையில் சமயங்களை வகைப்படுத்தலாம். ஒரு கடவுட் கொள்கைச் சமயங்கள் (monotheism) ஒரே ஒரு கடவுளை மட்டுமே ஏற்றுக்கொள்கின்றன. யூத மதமும், இஸ்லாமும் அப்படிப்பட்டன. பல கடவுட் கொள்கைச் சமயங்கள் (polytheism) பல தெய்வங்களை ஏற்றுக்கொள்கின்றன. பண்டைக் காலத்தில் பாரசீகம், ரோமாபுரி, கிரேக்கம், பாபிலோனியா, எகிப்து போன்ற பல நாடுகளில் இத்தகைய சமயங்கள் இருந்தன. அவற்றைப் பொதுவாகப் ‘பேகன்’ மதம் (Pagan religion) என்றார்கள். சீனாவில் வழங்கிவந்த தாவோயிசமும் ( Taoism) , ஜப்பானில் வழங்கிவந்த ஷின்டோ ( Shinto) என்னும் மதமும் இந்த வகையைச் சார்ந்ததே. இவை இரண்டையும் தவிர ஹெனோதெயிசம் (henotheism) என ஒரு வகை இருக்கிறது. இவ்வகையில் வரும் சமயங்கள் ஒரே ஒரு உயர் தெய்வத்தை ஏற்றுக்கொள்கின்றன. (பல கடவுள்களை நம்பினாலும் பரம்பொருளாக ஒருவரையே வணங்கும் கோட்பாடு) அதேநேரத்தில் மற்ற தெய்வங்களை மறுப்பதில்லை. இந்து சமயம், கத்தோலிக்க கிறித்தவ சமயம் போன்றவை இந்த வகையைச் சார்ந்ததே.
தற்காலத்தில் இறைவன், தெய்வம், கடவுள் என்ற மூன்று சொற்களும் ஏறத்தாழ ஒரே பொருளில் கையாளப்படுகின்றன. கடவுள் என்னும் சொல்லைக் கட+உள் என்று பிரித்து நமக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று நமக்கு உள்ளும் நம்மைக் கடந்தும் (அப்பாலும்) இருக்கிறது என்று இச்சொல்லுக்குப் பொருள் கூறுவர். கடவுதல் (இயக்குதல், செலுத்துதல்) என்ற சொல் அடியாகப் பிறந்தது இச் சொல் என்ற கருத்தும் உண்டு. உயிர்களுக்கெல்லாம் அப்பால் நின்று ஒரு சக்தி அவற்றைக் கடவுகின்றது என்ற கருத்து இதில் இருக்கிறது.
கடவுள், இறைவன், தெய்வம் என்னும் மூன்று சொற்களும் திருக்குறள் எழுதப்பட்ட காலத்திலேயே உண்டு. `கடவுள்` என்ற சொல் பதினெண்கீழ் கணக்கு நூலான திருக்குறளுக்கு முற்பட்ட பாட்டுத் தொகை நூல்களில் ஒன்றான புறநானூற்றிலேயே உண்டு.
“கல்லே பரவின் அல்லது,
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே” - (புறநானூறு 335)
மாங்குடி கிழார் பாடிய இப்பாடல் மலை நாட்டுத் தலைவன் ஒருவனது சிறப்பைக் கூறுகின்றது. தொழுவதற்குரிய தலைவனின் நடு கல்லைத் தவிர, நெல்லும் பூவும் சொரிந்து வழிபடத்தக்க சிறந்த கடவுளும் உண்டோ? என்று அவன் பெருமையை உயர்த்திக் கூறுகிறாரேயன்றி நாத்திகவாதம் புரியும் சிலர் இப்பாடலுக்கு உரையெழுதியது போலக் ‘கடவுள் இல்லை’ என்னும் கொள்கையைப் புலவர் கூறவில்லை
திருவள்ளுவர் ‘கடவுள்’ என்ற சொல்லை திருக்குறளில் எங்கும் பயன்படுத்தவில்லை.
திருக்குறளை ஆராய்ந்து பார்க்கும்போது, திருவள்ளுவர் கடவுள் என்ற சொல்லைத் திட்டமிட்டே கையாளவில்லை என்று அறிய முடிகின்றது. ஏன் திருவள்ளுவர் திருக்குறளில் கடவுள் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை என்றால் அக்காலத்தில் அச்சொல் அக்காலத்தில் ஒரு குழப்பமான சொல்லாக இருந்ததுதான் காரணம்.
பண்டைக் காலத்தில் முற்றும் துறந்த முனிவரைக் கடவுள் என்று கூறுவதுண்டு. சூளாமணியில் ஒரு பாடல்:
முனிவருள் பெரியவன் முகத்து நோக்கி, ஒன்று
இனிதுளது உணர்த்துவது அடிகள் என்றலும்
பனிமலர்த் தாமரை பழன நாடனைக்
கனியமற் றின்னணம் கடவுள் கூறினான் (சூளாமணி, இரதநூபுரச் சருக்கம், 78)

இப்பாடலில் பயாபதி என்னும் அரசன் முனிவர் ஒருவரை வணங்கி, தனக்கு அறநெறி வழங்கவேண்டும் என வேண்டிக் கொள்ள, அந்தக் கடவுள் அதாவது முனிவர் அவனுக்கு உபதேசம் செய்தார் என்று கூறப்படுகிறது.
சீவக சிந்தாமணி என்னும் காப்பியத்திலும் முனிவர்கள் கடவுள் என்று கூறப்படுகின்றனர்.
காசறு துறவின் மிக்கக் கடவுளர் சிந்தை போல
மாசறு விசும்பின் வெய்யோன் வடதிசை யயண முன்னி

என்னும் குணமாலையார் இலம்பகச் செய்யுளில், வானத்திலே விளங்கும் சூரியன் தென்திசையிலிருந்து வடதிசை சென்றதைக் கூறுகிற இடத்தில், கடவுளர் அதாவது முனிவர்கள் மனம் போலத் தூய்மையான வானம் என்று கூறப்படுகிறது.
சீவக சிந்தாமணி முத்தியிலம்பகம், மணியரும்பதம் செய்யுளிலும் துறவு பூண்ட முனிவர் கடவுள் என்று கூறப்படுகிறார்.
சுறவுக்கொடிக் கடவுளொடு காலற் றொலைத்தோய், எம்
பிறவியறு கென்று பிறசிந்தை இலராகி
நறவுமலர் வேய்ந்து நறுஞ்சாந்து நிலமெழுகித்
துறவுநெறிக் கடவுளடி தூபமொடு தொழுதார்”

சீவக மன்னன் துறவு பூண்டு ஞானம் பெற்று வீடுபேறு அடையும் நிலையில் இருந்தபோது, விஞ்சையர் வந்து அவனைத் தொழுது வணங்கியதை இப்பாடல் கூறுகிறது. இங்கு துறவியான சீவகன் கடவுள் எனக் கூறப்பட்டது காண்க.
கடவுள் நண்ணிய பாலோர் போல
ஒரீஇ ஒழுகும் என்னைக்கு
பரியலென் மன்யான் பண்டொரு காலே.” (குறுந்தொகை 203)

தோழிக்குத் தலைமகள் சொல்லியதாக அமைந்த இக்குறுந்தொகைப் பாட்டில் துறவியாகிய முனிவர் கடவுள் என்று கூறப்படுவது காண்க.
மதுரைக் காஞ்சியில்,
தென்னவற் பெயரிய துன்னருந் துப்பில்
தொன்முது கடவுள் பின்னர் மேய
வரைத்தாழ் அருவிப் பொருப்பில் பொருத (மதுரைக் காஞ்சி 40)

என்னும் அடிகளில் வரும் கடவுள் என்னும் சொல்லுக்கு முனிவனாகிய அகத்தியன் என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறியிருக்கிறார். இவ்வாறு பொருள் கூறியதோடு அமையாமல்

நன்றும் தடைஇய மென்றோளாய் கேட்டீவா யாயின்
உடனுறை வாழ்க்கைக் குதவி யுறையுங்
கடவுளர் கட்டங்கி னேன்”

என்ற கலித்தொகை, மருதக்கலி 28 வது பாடலடிகளுக்கு எழுதிய உரையில் “பெரிதும் பெருத்த மெல்லிய தோளினை யுடையாய்! யான் கூறு கின்றதனைக் கேட்பாயின் கேள்; யாம் இருவரும் போய் துறவகத்திருக்கும் வாழ்க்கைக்கு உதவியாயிருக்கும் கடவுளரைக் கண்டு அவரிடத்தே தங்கினேன் என்றான்; இருடிகளையும் கடவுள் என்று கூறியவாற்றானும் காண்க” என்று விளக்கம் கூறியிருக்கிறார் நச்சினார்க்கினியர். இதனால், அக்காலத்தில் துறவிகளும், முனிவர்களும் கடவுள் என்னும் பெயர் பெற்றிருந்தனர் என்பது விளங்குகிறது.

கடவுள் என்னும் பெயரைப் பயன்படுத்தினால், தாம் சுட்டுவது, அரசனையா, நடுகல் வீரனையா, கடவுளர்களையா, தெய்வங்களையா, துறவிகளையா என்னும் குழப்பம் ஏற்படலாம் என்று வள்ளுவர் கருதியிருக்கலாம். இதுதான் திருவள்ளுவர் கடவுள் என்னும் சொல்லைத் தவிர்த்ததின் காரணம் என்பது சான்றோர் கருத்து.

திருக்குறளின் முதல் அதிகாரமாகிய கடவுள் வாழ்த்து என்பதன் தலைப்பே பொருத்தமானதல்ல. அது திருவள்ளுவர் வைத்த தலைப்பும் அல்ல. பரிமேலழகர் வைப்புமுறையில் வந்தது. திருக்குறள் எழுதப்பட்டு பல நூறு ஆண்டுகள் கழிந்தபின்னர் வைத்த தலைப்பு மேலும் கடவுள் வாழ்த்து அதிகாரத்திலுள்ள பத்துப் பாடல்களையும் நன்கு கவனித்துப் பாருங்கள் – எந்தப் பாடலாவது, கடவுளை வாழ்த்துவதாகவோ வணங்குவதகவோ அமைந் துள்ளதா? என்றால் இல்லை. எல்லாப் பாக்களுமே இறைவனின் உயர்ந்த தன்மைகளைக் குறிப்பிடுவனவாகத்தான் அமைந்துள்ளன.



-- Edited by admin on Thursday 5th of May 2022 03:41:28 AM

__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: திருவள்ளுவரும் தெய்வங்களும் - பேராசிரியர்.ஐயப்பன், நெல்லை
Permalink  
 


வள்ளுவர் குறிப்பிடும் `இறைவன்` என்ற சொல்லினைப் பார்ப்போம். இறைவன்` என்ற சொல் `இறை ` என்ற வேர்ச்சொல்லினை அடிப்படையாகக் கொண்டது. மக்களை ‘வரி’ கேட்டு இறுக்குவதால் அல்லது ஒடுக்குவதால் இறை. இறை என்றால் வரி இறை விதிப்பவன் இறைவன். எனவே தொடக்ககாலத்தில் இறைவன் என்பது அரசனையே அல்லது தலைவனையே குறிக்கும். குறள் 1157 இல் இறை இறவா நின்ற வளை` என்ற தொடரில் வரும் இறை என்ற சொல் தலைவியின் கை மணிக்கட்டையும் ; அதே போன்று குறள் 5 இல் `இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்` என்ற தொடரில் வரும் இறைவன் என்பது எல்லாம் வல்ல கடவுளையும் , குறள் 10 இல் இறைவன் அடிசேரா தார் என்ற தொடரில் வரும் இறைவன் என்பதும் அதே பரம்பொருளையும், குறள் 547 இல் இறைகாக்கும் வையகம் என்ற தொடரில் வரும் இறை, அரசனையும் ; குறள் 388 இல் மக்கட்கு இறையென்று வைக்கப் படும் என்ற தொடரில் வரும் இறை என்பது கடவுள் நிலைக்கு அரசனைப் புகழ்வதையும்; குறள் 541 இல் ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து என்ற தொடரில் வரும் இறை என்பது தலைமைப் பண்பையும் குறிக்கின்றன.
வள்ளுவர் கடவுளை எட்டுக் குணங்கள் உடையவராகக் காண்கிறார்.

`கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.’ (9)

எட்டுக் குணங்கள் உடையவன் எனக் கடவுளைப் பற்றிச் சொல்லும் இந்தப் பாடல் திருக்குறளில் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஒன்பதாம் குறளாக உள்ளது. பேராசிரியர் மோகனராசு, இதற்கு முந்தைய எட்டுக் குறள்களிலும் வள்ளுவர் சொல்லும் குணங்களே கடவுளின் எண்குணங்கள் என்று கூறுகிறார் (திருவள்ளுவர் கண்ட கடவுளரும் தெய்வங்களும் என்னும் அவர் எழுதிய நூலில், பக்கம் 25). ஆதி பகவனாயிருத்தல், வாலறிவனாயிருத்தல், மலர்மிசை ஏகியவனாய் இருத்தல், வேண்டுதல் வேண்டாமை இலாதவனாய் இருத்தல், இருள்சேர் இருவினை சேராதவனாய் இருத்தல், பொறிவாயில் ஐந்தவித்தவனாயிருத்தல், தனக்குவமை இல்லாதவனாய் இருத்தல், அறவாழி அந்தணனாய் இருத்தல் என்பதாக அந்த எட்டுக் குணங்கள் வகைப்படுத்தப் படுகின்றன என்று விளக்குகிறார். இந்தக் கூற்றை ஆராய்ந்து நோக்கினால் வள்ளுவர் கூறியதற்கும் இவர் கூறுவதற்கும் பொருத்தமில்லாமல் படுகிறது. ஏனெனில் ஆதி பகவனாயிருத்தலும், வாலறிவனாயிருத்தலும், மலர்மிசை ஏகுதலும் குணங்கள் என்று கருத முடியாது. மேலும் திருவள்ளுவர் இக்குறளை ஒன்பதாவது குறளாக வைத்தார் எனக் கருத முடியவில்லை. ஏனெனில் பரிமேலழகர் வைப்பு முறையில்தான் இக்குறள் ஒன்பதாம் குறளாக வருகிறது. மணக்குடவர் இதைப் 10 வது குறளாகவும், பரிதியார் 8 வது குறளாகவும், காலிங்கர் 5 வது குறளாகவும் வைத்திருக்கின்றனர்.

சைவ சித்தாந்தத்தில் சிவபெருமானுக்கு எட்டு குணங்கள் கூறப்பட்டுள்ளன. திருமூலரும்
கொடையுடையான் குணம் எண்குணமாகும்
சடையுடையான் சிந்தை சார்ந்து நின்றானே” (திருமந்திரம் 444) என்று பாடுகிறார்.

அப்படியென்றால் இங்கே வள்ளுவரால் கூறப்படும் எண்குணத்தான் சிவபெருமானே என்பதில் ஐயமில்லை.. ஆனால் திருவள்ளுவர் எந்த சமயத்தையும் சார்ந்து எந்தக் குறளையும் எழுதவில்லை என்று சாதிப்பவர்கள், இதை ஒத்துக் கொள்வதில்லை.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் (6) என்னும் குறளை ஆராய்ந்து பாருங்கள்.
சிவபெருமானின் தவத்தை கலைக்கத் தேவர்களால் அனுப்பப்பட்ட மன்மதன் என்றழைக்கப்படும் காமதேவன், நிட்டையில் இருக்கும் சிவபெருமானை நோக்கிக் காமக்கணை தொடுத்தான். பொறிகளை அவித்து நிட்டையிலே இருந்த சிவபெருமான் அக்கணையால் சலனமடையாது, சினமுற்றுத் தன் நெற்றிக் கண்ணால் காமதேவனை எரித்துச் சாம்பலாக்கி விட்டார். அச்சாம்பலை எடுத்துத் தன் மேனியெங்கும் பூசிக் கொண்டார். பின்னர் காமனின் மனைவி இரதியின் வேண்டுதலுக்கு இரங்கி மன்மதனுக்கு தூல உடம்பைத் தவிர்த்து சூட்சும உடலை மட்டும் அளித்தார் என்கிறது புராணக்கதை.
ஐம்புலன்களை அவித்து மன்மதனைச் சிவன் எரித்த கதை இன்றும் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் ஆண்டுதோறும் காமன் பண்டிகை எனக் கொண்டாடப்படுகிறது. சங்ககாலத்தில் காமன் பண்டிகை 'உள்ளிவிழா' என்றும் ‘வில்லவன் விழவு’ என்றும் வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது.
அகநானூற்றில் (368), “கொங்கர் மணி அரையாத்து மறுகின் ஆடும் உள்ளி விழவு” என்றுகாமன் பண்டிகை குறிப்பிடப்படுகிறது. இப்பண்டிகையின்போது, உறையூரிலும் திருவரங்கத்திலும் ஆற்றின் இடையே இருந்த மணல் திட்டுகளில் ஆடவரும் பெண்டிரும் தத்தமக்கு விருப்பமான இணைகளுடன் சேர்ந்துகொண்டு கூடிக் களிப்பது சங்க இலக்கியத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. தற்காலத்தில் கொண்டாடப்படும் “காதலர் தினம்’ (Valentine’s Day) போன்ற பண்டிகை அது.
இறையனார் களவியல் நூற்பா 16-17 க்கான நக்கீரனார் உரையில் ‘கருவூர் உள்ளிவிழாவே’ என்ற குறிப்பு காணப்படுகிறது.
இளவேனில் காலத்தில் எடுக்கப்படும் காமன் விழாவைப் பற்றிய குறிப்புகள் பல கலித்தொகைப் பாடல்களில் காணப்படுகின்றன. கலித்தொகையில் பாலைக்கலி 35 வது பாடலில் ”மல்கிய துருத்தியுள் மகிழ் துணைப் புணர்ந்து... விளையாடும் வில்லவன் விழவு” என்று குறிப்பிடப்படுகின்றது.
சிவபெருமான் காமன் கணைக்கு இரையாகாமல் தன் புலன்களைக் காத்துக் கொண்டதைத்தான் திருவள்ளுவர் ‘பொறிவாயில் ஐந்தவித்தான்’ என்று எழுதுகிறார்.
கடவுள் என்னும்போது உருவம், நாமம் எல்லாவற்றையுங் கடந்தவன்; அவன் பிறப்பு இறப்பு இல்லாதவன் என்றே புரிந்து கொள்கிறோம். இப்படிப்பட்ட இறைவனுக்கு பொறிகள் அல்லது புலன்கள் உண்டா? அவனுக்குப் பொறி புலன்கள் இருக்க முடியாது. பொறிபுலனேயில்லாத ஒன்றைப் புலனை அவித்தவன் என்று சொல்ல இயலாது. ஐந்தவித்தான் என்பது இறைவனுக்குப் பெருமை சேர்க்கும் சொல் அல்ல; அது எந்தவகையிலும் அவனுக்குப் பொருந்தாது. எனவே ஐந்தவித்தான் என்ற சொல் இறைவனைச் சுட்டுவது அல்ல என்று சிலர் கூறுவர்.
ஐம்புலன்களையும் அவித்தவன் தான் பூரணன் ஆகமுடியும் என்பது சான்றோரின் வெளிப்படையான கருத்து. விவிலியத்தில் புதிய ஏற்பாடு, மத்தேயு 5:48 ல் “ பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதா பூரணராக இருப்பதைப் போல நீங்களும் பூரணமாக இருக்க வேண்டும் “ என்று இயேசு பெருமான் கூறுகிறார்.. இங்கே பூரணம் என்று அவர் குறிப்பிடுவது ‘ஐந்தவித்தல்’.
சான்றுகளின் அடிப்படையில் தான் 'சைவாகமங்களில் சுட்டியபடி' என்று ‘எண்குணத்தான் தாளை வணங்காத் தலை’ என்று சொற்றொடரில் ‘எண்குணத்தான்’ என்பது இறைவனைக் குறிக்கும் எனப் பரிமேலழகரும் இத்தொடருக்கு உரையெழுதுகிறார். அப்படியென்றால் ‘பொறிவாயில் ஐந்தவித்தான்’ என்ற தொடரில் வரும் ஐந்தவித்தானும் இறைவன்தானே?
ஆனால் இறைவனுக்குப் பொறிகளும், புலன்களும் உள்ளனவா என்னும் கேள்வி எழுகிறது. மேலும் கடவுள் என்னும் சொல்லையே தவிர்த்த திருவள்ளுவர் முதல் அதிகாரத்திலேயே சைவ சமயக் கடவுளான சிவபெருமானைக் குறிப்பிடுவாரா என்ற கேள்வியும் வருகிறது.
இதற்குப் பதில் வேதங்களில் உள்ளது, பரம்பொருள் என்னும் பிரம்மம் மனிதர்களின் அறிவிற்கு இரண்டு விதமாகப் புலனாகிறது. 1) ஸ்வரூப லக்ஷணம் ) தடஸ்த லக்ஷணம். நாம ரூபமின்றி எவ்வித குணங்களும் இன்றி அங்கிங்கு எனாதபடி எங்கும் வியாபித்திருக்கும் பரம்பொருள் நிர்குணப் பிரம்மம் எனப்படுகிறது. அதைத்தான் அருவமான பரம்பொருல் என்கிறோம். இந்த நிர்குண பிரம்மத்தை மனிதனின் சாதாரண அறிவு கொண்டு உணர முடியாது. தியானத்தில் இருக்கும் ஜீவன்முக்தர்களால் சமாதி நிலையில் மட்டுமே உணர முடியும். இதுவே பரம்பொருளின் ஸ்வரூப லக்ஷணம். திருவாசகத்தில் மாணிக்கவாசகர்
ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டாமோ”

எனப் பாடியிருப்பது அந்த நிர்க்குணனான இறைவனைக் குறித்தே..அந்த பரம்பொருளுக்கு பெயர், வடிவம், பொறிகள், புலன்கள் எதுவும் கிடையாது.
மேலும் அதே பரம்பொருள் மாயையால் பல்வேறு சக்திகளைப் பரிபாலிக்கும் ஏராளமான தெய்வங்களாக நாம ரூபத்தோடு உபாதி வசப்பட்டு அடியார்களின் மனதுக்குக் காட்சியளிக்கின்ற.து. இந்த தெய்வங்கள் சகுணப் பிரம்மங்கள் எனப்படும். ஆக ஒரே பரபிரம்மமே நிர்குண பிரம்மமாகவும் சகுண பிரம்மமாகவும் விளங்குகிறது. சகுண பிரம்மங்கள் பரம்பொருளின் தடஸ்த லக்ஷணம் ஆகும். சகல உறுப்புகளும் உடைய மனிதர்களுக்குரிய தோற்றத்தைக் கொடுத்தே இந்து சமயத்தில் சகுண பிரம்மங்கள் கற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. சிவன், திருமால், பிரம்மா, முருகன், கணபதி, பராசக்தி, மகாலஷ்மி, சரஸ்வதி முதலிய எல்லா கடவுளரும் சகுண பிரம்மங்களே.
‘ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லான்’ என்று பாடிய அதே மாணிக்கவாசகர்தான் ‘ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க’ என்று பாடுகிறார். இதன் பொருள், “ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க.’ என்பதாகும்.
சகுணப்பிரம்மங்கள் எல்லாம் தெய்வீகத் தூண்டுதலால் (divine inspiration) ரிஷிகளின் கற்பனையில் உதித்தவை. அவர்கள் எழுதி வைத்த ஆகமங்களின்படி கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப் படுகின்றன. எந்த தெய்வத்தை வழிபட்டாலும் அந்த வழிபாடுகள் எல்லாம் பரப்பிரம்மத்தையே அடையும் என்று பகவத் கீதை 9: 23 வது சுலோகம் சொல்கிறது..
பரம்பொருள் ஒன்றுதான், அதுஇரண்டற்ற நிலையில் இருக்கிறது என்று அத்வைதக் கோட்பாட்டை உலகுக்கு எடுத்துச் சொன்ன ஆதிசங்கரரே எல்லா சகுண தெய்வங்களின் மீதும் தோத்திரப் பாடல்களைப் பாடியிருக்கிறார். ஏனென்றால் வீடுபேறு அடைவதற்குப் பக்தி மார்க்கம் அவ்வளவு முக்கியமானது.
கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே.' (புறத். 27)
என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தில் கடவுள் வாழ்த்தியல் முறை ஓரளவு விளக்கப்படுகின்றது. இவற்றுள் கந்தழி என்னும் யாதொரு பற்றுக்கோடுமற்று அனைத்துக்கும் அப்பாலாய் உள்ள ஆண்டவனை வழிபடும் சிறப்புடன், கண்ணில் தோற்றும் சூரியனையும், சந்திரனையும் வழிபட்டார்கள் எனப் பொருள்பட நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார். எனவே, கடவுள் நெறி அப்பாலுக்கப்பாலாய பெயர் உருவம் ஒன்றுமற்ற நிர்க்குணனாகிய இறைவனைப் பற்றியது என்றும், அதே வேளையில் உலகுக்கு ஒளியும், மழையும், பிற தேவைகளையும் அளிக்கும் கதிரவனையும் திங்களையும் தமிழர்கள் போற்றினார்கள் என்றும் கொள்ள வேண்டியுள்ளது. சிலப்பதிகாரத்தில் முதலில் வாழ்த்தாக ஞாயிறு, திங்கள், மழை இவற்றைப் போற்றுவதும் இந்த அடிப்படையிலேதான்.
சாத்திரங்களை நன்கு கற்றுணர்ந்த திருவள்ளுவர் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ‘ஆதிபகவன்’, ‘வாலறிவன்’, ‘வேண்டுதல் வேண்டாமை இலான்’, ‘தனக்குவமை இல்லாதான்’, இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்” என்று ஐந்து குறட்பாக்களில் குணங்கள் அற்ற நிர்க்குணப் பிரம்மத்தையும் ‘மலர்மிசை ஏகினான்’, ‘பொறிவாயில் ஐந்தவித்தான்’, ‘அறவாழி அந்தணன்’, ‘எண்குணத்தான்’ ‘இறைவன் அடி’ என்று ஐந்து குறட்பாக்களில் குணங்களோடு கூடிய சகுணப் பிரம்மத்தையும் குறிப்பிடுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேதங்களில் பயிற்சி தேவை.

பல பாடல்களில் ‘தாமரைக் கண்ணான்’ என்று திருமாலையும், ‘ ‘செய்யவள்’ என்று மகாலக்ஷ்மியையும், ‘தவ்வை’ என்று மூதேவியையும், ‘கூற்றம்; என்று யமதர்மனையும், தேவர் கோமான் இந்திரனையும், இப்படி பல சகுண பிரம்மங்களை ஆங்காங்கே எடுத்துக்காட்டுக்காகப் புகுத்திய திருவள்ளுவர், ‘பொறிவாயில் ஐந்தவித்தான்’, “எண்குணத்தான்’ என்று மற்றோர் சகுணபிரம்மமாகிய சிவபெருமானைக் கடவுள்வாழ்த்து அதிகாரத்தில் புகுத்தியிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
தெய்வம் என்ற சொல் முழுமுதற் கடவுளைக் குறிக்கவும், தேவர்களைக் குறிக்கவும் வரும். இந்த இரண்டு வகையிலும் திருவள்ளுவர் இச்சொல்லை வழங்குகிறார். தேவன் அல்லது தேவ என்ற சொல்தான் தெய்வம் என்ற வடிவத்தில் தமிழில் வழங்கி வருகிறது. தெய்வங்கள் அல்லது தேவர்கள் என்ற சொல்லுக்குப் பூமியை விட உயர்ந்த உலகம் ஒன்றில் வாழ்கின்றவர்கள், மனிதர்களை விட உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் என்பது பொருள்.
திருவள்ளுவருக்கு முன்பே சங்க காலத்தில் வானவர் வாழும் தேவருகலகம் என ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கை தமிழ் நாட்டில் இருந்திருக்கிறது. புறநானூற்றுப் பாடல்களில் இதற்கான சான்றுகள் உள்ளன.

மாசு இல் மகளிர் மன்றல் நன்றும்,
உயர் நிலை உலகத்து, நுகர்ப; அதனால்
வம்ப வேந்தன் தானை
இம்பர் நின்றும் காண்டிரோ, வரவே (புறநானூறு 287)

இப்பாடலில் தேவருலகை உயர்நிலை உலகம் என்று குறிப்பிடுகிறார் நீண்மொழி சாத்தந்தையார்.

புலவர் பாடும் புகழுடையோர், விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி
எய்துப என்பதம் (புறநானூறு 27)
சிறந்த குடியில் பிறந்து அரசர்களாக இருக்கும் பலருள்ளும் புலவரால் பாடப்படும் புகழுக்கு உரியவர்கள் சிலரே. அவ்வாறு புகழ் பெற்றவர்கள் ஓட்டுநர் இன்றித் தானே இயங்கும் வானவூர்தியில் (drone) ஏறி விண்ணுலகம் செல்வார்கள் என்று உறையூர் முதுகண்ணன் சாத்தனார் இப்பாடலில் கூறுகிறார்.
எல்லா சமயங்களிலும் இந்த நம்பிக்கை வேரூன்றியிருக்கிறது. விவிலியத்தில் ஆதியாகமம், முதல் அதிகாரம், முதல் வசனம்: “ஆதியில் தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்” என்பதாகும். இதன் பொருள் ஆதியில் கடவுள் தேவர்கள் வாழ்கின்ற சுவர்க்கத்தையும் , மனிதர்கள் வாழ்கின்ற பூமியையும் படைத்தார் என்பதாகும். ஆகாசத்தையும் பூமியையும் படைத்தார் என்பதல்ல. ஆங்கில விவிலியத்திலும் “ In the beginning God created heaven and earth” என்றுதான் மொழிபெயர்த்திருக்கிறார்கள்,



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

தெய்வம் என்னும் சொல்லைப் பார்ப்போம். திருவள்ளுவர் தெய்வம் என்ற சொல்லைப் பின்வரும் ஆறு குறள்களில் பயன்படுத்துகிறார்.
1) “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.” (குறள்: 50)
உலகத்திலே வாழும் முறைப்படி இல்லறத்தில் வாழ்பவன் வானுலகத்திலுள்ள தேவர்களில் ஒருவராக எண்ணப்படுவான் என்பது இக்குறட்கருத்து.
இல்வாழ்க்கையில் தூய்மையாக வாழ்பவன் மக்களுட் சிறந்தவனாக இருப்பதனாலும் இம்மையில் செய்த நல்வினைப் பயனை மறுமையில் தேவனாகித் தேவருலகத்தில் நுகர்வான் என்னும் நம்பிக்கையாலும் ‘வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என்றார் வள்ளுவர் . தெய்வம் என்பது வகுப்பொருமை என்று தேவநேயப் பாவாணர் உரை எழுதினார்.
ரிக்வேதத்தில் 33 தெய்வங்களை, அதாவது 11 உருத்திரர்கள், 12 ஆதித்தியர்கள், 8 வசுக்கள், 2 அஸ்வினி தேவர்களைப் போற்றி பாடல்கள் உள்ளன. இவர்களே 33 தேவர்கள் ஆவர்.
இந்த 33 தேவர்களும் உலக வாழ்க்கையில் மனிதர்களின் வழிபாட்டுத் தேவைகளுக்கேற்ப அவரவர் மனப்பாங்குக்கு ஏற்றவாறு பலகோடி தெய்வங்களாக மாறி உதவி செய்வதால் 33 கோடி தேவர்கள் என்று புராணங்களில் உத்தேசமாகக் குறிப்பிட்டனர்.
பரம்பொருளுக்குக் கீழ்ப்பட்ட நிலையில் இருக்கும் இப்படிப்பட்ட பல தெய்வங்கள் உண்டு என்பது எல்லா சமயங்களிலும் கூறப்படுகிறது.

கிறித்தவர்களின் மறைநூலான விவிலியத்தில் 1 கொரிந்தியர் 8: 5_6 வசனங்களில்
“ வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம்” என்று கூறப்பட்டிருக்கிறது.

இஸ்லாத்திலும் அல்லாவின் ஏவலர்களாக ‘ஜின்கள்’எனப்படும் தேவர்கள் இருப்பதாக அவர்களுடைய மறைநூல் குர்ஆன் கூறுகிறது. இறைத்தூதர் நபிகள் நாயகம் காலத்தில் மக்கள் ஜின்களைத் தெய்வங்களாக வழிபட்டுக் கொண்டிருந்தனர் என்று குர் ஆன் 34: 41 ம் வசனம்“எங்கள் இறைவனே, நீ மிக பரிசுத்தமானவன். நீதான் எங்கள் பாதுகாவலன். மாறாக அவர்கள் ஜின்களை வணங்கி கொண்டிருந்தனர்” என்று கூறுகிறது.வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் தேவர்கள் வதிகின்ற சுவர்க்க உலகில் சென்று வாழ்வான் என்பது பல சமயங்களிலும் காணப்படும் கருத்து.

தேவருலத்திற்கும் மேலதாய் ஒரு உயர்ந்த உலகம் இருப்பதாகக்கூட வள்ளுவர் நம்பினார் அதனாலன்றோ, வீடுபேற்றைப் பற்றிப், பேசும்போது வானவர் வாழும் சுவர்க்கத்தைவிட உயர்ந்த உலகம் ஒன்று இருப்பதாக

யானென தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் (346) என்று கூறுகிறார்.

ஆதலால் தேவருலகம் என ஒன்று உண்டு என்பதிலும் உயர்ந்த மனிதர்கள் பூவுலக வாழ்வை முடித்தபின் விண்ணுலகில் வாழும் தேவர்களோடு கூடி வாழ்வார்கள் என்பதிலும் திருவள்ளுவர் நம்பிக்கை வைத்திருந்தார் என்பது தெரியவருகிறது.
2) தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். -619:

தெய்வம் என்ற சொல் இக்குறளில் ‘பால்வரை தெய்வ’த்தைக் குறிப்பிடுகிறது. ஊழால் கருதிய பயன் ஆகாவிட்டாலும், முயற்சி உடல் வருந்திய வருத்தத்தின் கூலியை நிச்சயமாகத் தரும் என்பது இப்படலின் பொருள்.
“கடவுளே என்று கூவி அழைப்பதால் கூட நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்” என்று கலைஞர் கருணாநிதி உரை எழுதியிருக்கிறார்.
கலைஞர் உரையில் தெய்வம் என்ற சொல்லுக்கு கடவுள் என்ற பொருள் கொண்டிருந்தாலும் விளக்கம் தவறாக இருப்பதால் அதை இங்கே ஆராயத் தேவையில்லை. ஏனைய உரையாசிரியர்கள் தெய்வம் என்ற சொல்லுக்கு ஊழ் அதாவது விதி என்று பொருளைக் கூறியுள்ளனர். காரணம், தெய்வம் என்ற சொல்லுக்கு வழக்கம் போல கடவுள் என்ற பொருளைக் கொண்டால் 'கடவுளால் ஆகாத காரியமானாலும்' என்ற பொருத்தமில்லாத பொருள் தோன்றிவிடும். தெய்வத்தால் முடியாததை மனிதன் செய்ய முயலலாம்' என்றும் 'மனித முயற்சியை இறைப்பொருளின் எல்லைக்கு ஏற்றிச் செல்கிறார் வள்ளுவர்' என்று நாத்திகச் சிந்தனையில் தோய்ந்த உரையாசிரியர்கள் சிலர் இக்குறளுக்கு விளக்கம் கூறியுள்ளனர். அவையும் ஏற்கத்தக்கனவாக இல்லை.
தெய்வத்தால் ஆகாது என்று ஒன்றும் இல்லை. தெய்வத்தால் மட்டுமே எல்லாம் ஆகும். ஆனால் மனிதரால் விளக்கமுடியாத காரணங்களால் சிலர் சிறிய முயற்சியால் பெரும் பயன் அடைகின்றனர். எந்த அளவுக்கு முயல்கிறார்களோ அதற்கு மேலாக இயல்பு அளவுக்கு மிகுந்து அவர்களுக்குப் பயன் கிடைக்கிறது. இதை நாம் தெய்வத்தால் ஆகியது, கடவுளின் அருளால் உண்டானது அல்லது ஆகூழால் தோன்றியது என்கிறோம். இந்நிலையில், தெய்வத்தின் துணை இல்லையானால் நமக்கு ஒன்றுமே கிடைக்காதா என ஆள்வினையுடையோர் எண்ணத் தொடங்குவர். அவர்களுக்கு வள்ளுவர் தரும் அறிவுரைதான் : 'தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி செய்த அளவு வரவேண்டிய உரிமைப் பயன் கிடைத்தே தீரும்' என்பது.
3) “குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.” – (குறள்: 1023)
என் குடியை மேன்மை அடையச் செய்வேன் என்று செயல்களைச் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை வரிந்து கட்டிக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.
இங்கு “தெய்வம் என்பது பால்வரை தெய்வம் என்ற கருத்தில் வந்ததே. முன் நடப்பார் செயல் நியதிமேல் ஏற்றப்பட்டது” என்பது பரிமேலழகர் உரை. ஊழுக்குத் தொல்காப்பியர் கொடுத்த பெயர்களில் தெய்வம் என்பதும் ஒன்று. தொல்காப்பியர் கூறிய 'பால்வரை தெய்வம்' என்பது ஊழ். சமயத்தின் வழிப்பட்டவர்கள் ஊழின் இடத்தில் அவரவர் இஷ்ட தெய்வங்களை வைத்து வழிபட்டார்கள். நடக்கின்ற எல்லாவற்றுக்கும் தெய்வமே காரணம் என்று கருதத் தலைப்பட்டார்கள்.
தெய்வத்திற்கு நம்மைப் போல் உடலும் உறுப்புகளும் உண்டா? மனிதர்களைப் போல் தெய்வம் வேட்டி போன்ற ஆடைகளை உடுத்துமா ? கூப்பிட்ட குரலுக்கு வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு ஓடிவருமா? என்ற கேள்விகளுக்கு பதில்: திருவள்ளுவர் இங்கே தெய்வம் எனக் குறிப்பிடுவது ஒருமனிதன் வழிபடுகின்ற அவனுடைய இஷ்டதெய்வமான சகுணப் பிரம்மம் என்றே கொள்ளவேண்டும். மார்க்கண்டேயன் வரலாற்றில் அவன் உயிரைப் பறிப்பதற்காக யமன் பாசக்கயிற்றை வீசவும், மார்க்கண்டேயன் தான் வழிபட்டுக் கொண்டிருந்த சிவலிங்கத்தைக் கட்டிப் பிடிக்க, சிவபெருமான் அங்கே தோன்றி அவனைக் காப்பாற்றியதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
“வழிபடு தெய்வம் நிற்புறம் காப்ப” (தொல். பொருளதிகாரம் 442)
நீ வழிபடுகின்ற தெய்வம் உன்னையும் உன் குடும்பத்தையும், சுற்றத்தையும் பாதுகாக்கும்! என்று தொல்காப்பிய சூத்திரம் கூறுகிறது.
விவிலியமும் இதையே கூறுகிறது. அப்போஸ்தலர் 16:31 ம் வசனம், “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசியுங்கள், அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” எனக் கூறுகிறது.
இக்கருத்தைத்தான் திருள்ளுவர் “தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறும்” என்று கூறுகிறார்.

4) “ஐயப் படாஅ(து), அகத்த(து) உணர்வானைத்,
தெய்வத்தோ(டு) ஒப்பக் கொளல்” (குறள்: 702)
இதன் பொருள்: “பிறர் மனத்தில் உள்ளதை சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத்தோடு ஒப்பாகக் கொள்ள வேண்டும்”.
இக்குறளில் வரும் தெய்வம் என்ற சொல்லைக் கடவுள் என்று எடுத்துக் கொள்ள முடியாது. இங்கும் தெய்வம் என்ற சொல் வானுறையும் தேவர்களைக் குறித்துத்தான் வந்தது. ஏனெனில் வள்ளுவரே கடவுளைத் ‘தனக்குவமை இல்லாதான்’ என்று கூறியிருக்கிறார். பிறர் மனத்தைப் படிக்கும் மனிதனை ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இறைவனோடு எவ்வாறு ஒப்பிடமுடியும்?
இவ்வாறு வரும் இடங்களில் எல்லாம் தெய்வம் என்பது தொகுதி ஒருமை என்றே கொள்ளவேண்டும்.
5) “தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” (குறள்: 43)
இதன் பொருள்: நம் முன்னோர், வழிபடுதெய்வம், விருந்தினர், உறவினர், தன் குடும்பம் என்று சொல்லப்படும்; அவ் வைந்திடத்தும் செய்யவேண்டிய அறவினைகளைப் பேணிச் செய்தல் இல்லறத்தானுக்குத் தலையாய கடமைகளாம்
முற்காலத் தமிழகமாகிய குமரிநாடு பல்வேறு கடல்கோள்களால் மூழ்கிப் போனமையால் அப்பகுதியில் குடியிருந்த கோடிக்கணக்கான மக்கள் மாண்டனர், அது இருந்த தென்திசை கூற்றுவன் திசையாகவும் இறந்தோரின் இருப்பிடமாகவும் கொள்ளப்பட்டது. தென்புலத்தார்க்குச் செய்யும் அறவினையாவது, அவர் ஆன்மா ஆறுதலும் மகிழ்வும் அடைதற்பொருட்டு, அவர் இறந்த நாளில் தெய்வத்திற்குப் படைப்பது போல் அடையாள முறையில் சில உணவுகளை அவர்க்கும் படைத்து, அவர் பெயரால் துறவியர்க்கும், இரப்போர்க்கும் சிறந்த உணவும் புத்தாடையும் உதவுதல் . அது நீர்க்கடன் எனப்பட்டது.
தெய்வம் என்றது அவரவர் உளநிலைக் கேற்றவாறு குலதெய்வம் போன்ற சிறுதெய்வமும், இஷ்ட தெய்வமாகிய பெருந்தெய்வமும், பரம்பொருளாகிய சர்வேசுவரனும் ஆவர். மூவகைத் தெய்வங்களின். கோயிற்கும் அடியார்க்கும் செய்யும் தானங்களும் தெய்வ வழிபாட்டின் பாற்படும்.
6) தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. (குறள் : 55)
இந்தக் குறளிற்கான விளக்கத்தினைப் பலரும் “வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்ற மனைவி பெய் என்றால் மழை பெய்யும்!” என்ற பொருள் படவே கூறிவருகின்றார்கள். இப்படி அவர்கள் உரை எழுதியதால் வள்ளுவர் பெண்ணடிமைத்தனத்தை இக்குறளில் வலியுறுத்துகிறார் என்று ‘பகுத்தறிவாளர்’ என்று தங்களை அழைத்துக் கொள்பவர் பலரும் திருவள்ளுவருக்கு எதிராகக் குரல் எழுப்பியது உண்டு.
இங்கு ‘’பெய் எனப் பெய்யும்’’ என்பதனைத் தேவைப்படும்போது பெய்யும் மழை என்றே கொள்ள வேண்டும். மழை பொதுவாக நன்மை தருவது என்றாலும், பொருத்தமற்ற நேரங்களில் பெய்யும் மழையால் பயிர்களுக்குச் சேதமும் உழவர்களுக்கு நட்டமும் ஏற்படலாம். எனவேதான் பொருத்தமான நேரத்தில் பெய்யும் மழை முதன்மை பெறுகின்றது. இன்னும் விளக்கமாகச் சொன்னால், உழவர் மழை பெய்ய வேண்டும் என நினைக்கும்போது மழை பெய்தால், அதுவே சிறப்பானது, அத்தகைய மழையினையே வள்ளுவர் குறிப்பிடுகின்றார். நல்ல மனைவியைத் திருவள்ளுவர், வேண்டும் காலத்தே பெய்யும் மழைக்கு ஒப்பிடுகிறார் என்பதே தெளிவு.
திருக்குறள் இடம்பெறும் பதினெண் கீழ் கணக்கு நூல்கள் எனும் அதே தொகுதியினுள் இடம்பெறும் இன்னொரு நூலான நல்லாதனார் எழுதிய திரிகடுகம் நூலிலும் ‘’பெய் எனப் பெய்யும் மழை’’ என்ற தொடர் உள்ளது. (இவ்விரு நூல்களுமே காலத்தால் ஏறக்குறைய சமமானவை).
‘’கொண்டான் குறிப்பு அறிவாள் பெண்டாட்டி; கொண்டன
செய் வகை செய்வான் தவசி; கொடிது ஒரீஇ
நல்லவை செய்வான் அரசன்; இவர் மூவர்
பெய் எனப் பெய்யும் மழை’’ – திரிகடுகம் (96) – நல்லாதனார்
இப்பாடலில் தன் அன்பால், அறிவால் இல்லத்தை ஆளும் மனைவி, தன் நெறிக்கு உண்டான நோன்புகளை, முறைப்படி செய்து முடிக்கும் துறவி, மக்களுக்கு வரும் கொடுமைகளை நீக்கி நல்லது செய்யும் அரசன் ஆகிய மூவரும் எந்தவித பயனும் கருதாமல் தேவைப்படும் போது பெய்யும் மழைக்குச் சமனானவர்கள் என்ற பொருளே கிடைக்கிறது. எனவே, இதே விளக்கத்தினையே நாம் குறளில் இடம்பெறும் பெய் எனப் பெய்யும் மழைக்கும் கொடுக்கலாம்.
‘தெய்வம் தொழாஅள்’ என்ற தொடர் இந்து சமயக் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டது. தெய்வ வழிபாடு அல்லது தொழுகை அல்லது வேள்வியைக் கணவனோ அல்லது மனைவியோ தனியாகச் செய்வதில்லை, இருவரும் சேர்ந்தே செய்வர். அதுதான் முறைமை. மனைவியானவள் தெய்வத்தைத் தான் மட்டும் தனியாகத் தொழமாட்டாள். ஆனால் தன் கணவனை அவள் காலையில் எழுந்தவுடன் தொழும் வழக்கத்தைக் கொண்டிருப்பாள். ஒரு நல்ல மனைவியின் இலக்கணத்தைச் சொல்ல வந்த திருவள்ளுவர் இத்தொடரில் அதைத்தான் ‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்’ என்று விளம்பினார். மனைவிமார்களை தெய்வம் தொழாத நாத்திகர்கள் என்றோ கணவன்மார்கள் மனைவிகளுக்குத் தெய்வத்தைவிட உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் என்றோ கூறவில்லை..
இவ்வாறு ஆறு குறட்பாக்களில் தெய்வம் என்ற சொல் பயின்று வருகிறது.
வள்ளுவர் எந்த ஒரு கடவுளையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்பது பகுத்தறிவாளர் என்று தங்களைக் கூறிகொள்ளும் தமிழ் படித்தவர்களின் வாதம். பழைய உரைகளைக் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் படித்திருந்தால் யானையைத் தடவிப் பார்த்த பிறவிக் குருடர் போல இந்த முடிவுக்கு வந்திருக்க மாட்டார்கள். திருவள்ளுவர் பல இந்து சமயத் தெய்வங்களை வெளிப்படையாகவே தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்தில் அவர் கூறியுள்ள இலக்கணங்கள் இந்து சமயம் கூறும் பரம்பொருளுக்கே முழுமையாகப் பொருந்துகின்றன. வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான், இறைவன் என்றெல்லாம் வள்ளுவர் கூறுவன இந்து மதம் காட்டும் தெய்வம் மட்டும் அல்லவே எனக் கூறுபவரும் உள்ளனர். ஆனால் அப்படி மறுக்கும் நாத்திகரோ பிற சமயத்தவரோ எண்ணிப் பார்க்க முடியாத ஒரு தேவதையைப் பற்றி மிக வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார் திருவள்ளுவர். அது பாற்கடலைக் கடைந்த பொழுது முதலில் தோன்றிய ஜ்யேஷ்டா தேவி என்னும் மூதேவி. குறள் 617 – இல் ‘மாமுகடி’ என்று மூதேவியின் பெயர் வருகிறது. மாமுகடி என்று மூதேவியைத் தான் அவர் சொல்கிறார் என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம், அதே குறளில், ஸ்ரீ தேவியான மகாலஷ்மியையும் குறிப்பிடுகிறார்.
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்.. (குறள் 617)

இதன் பொருள் – ஒருவன் சோம்பலில் மூதேவி வாழ்கிறாள். சோம்பல் இல்லாதவன் முயற்சியில் திருமகள் வாழ்கிறாள். என்பதாகும். மூதேவியும், ஸ்ரீ தேவியும் இந்து சமயத் தெய்வங்கள். இந்தக் குறள் அவர்களைப் பற்றித்தான் சொல்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
குறள் 610 –ல் திருவள்ளுவர் மற்றொரு இந்து தெய்வத்தைப் பற்றி எழுதியுள்ளார். அது குறளனாய் வந்து மூவுலகையும் ஈரடியால் அளந்த திரிவிக்ரமன் என்னும் வாமனன்.
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு. (610)

இங்கே அடியளந்தான் என்பது ‘மூன்று உலகையும் அளந்த இறைவன்’ என்று பரிமேலழகர் கூறுகிறார். தாயதெல்லாம் என்று வருவதால், முன்னே அடியளந்தான் என்றது, திருமாலின் வாமன அவதாரத்தைக் குறிக்கிறது.
வாமனனைப் போல மற்றுமொரு இந்து சமயத் தெய்வத்தைப் பற்றி வள்ளுவர் மறைமுகமாகக் கூறுகிறார். குறள் 773 – இல் இராமயணக் கதாநாயகனான இராமனைப் பற்றிய செய்திதான் அது.
“பேராண்மை என்ப, தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.” (773)

பகைவனிடம் கருணை காட்டாது போரிடுவதே ஆண்மை என்றும், போர்க்களத்தில் பகைவன் தாழ்வுற்ற பொழுது அருள் செய்வதே மேன்மை என்றும் கூறுவர் என்பது இதன் பொருள்..
இங்கு ‘என்ப’ என்றது வழக்கில் உள்ள ஒரு கருத்து என்றாகிறது. இங்கு சொல்லப்படும் பேராண்மையும், ஊராண்மையும் ஒருங்கே அமைந்த ஒரே ஆண்மகன் இராமன். இந்தக் குறளுக்கு உரை எழுதுகையில், “இலங்கையர் வேந்தன், போரிடைத் தன் தானை முழுதும்படத் தமியனாய் அகப்பட்டானது நிலைமை நோக்கி அயோத்தி இறை மேற்செல்லாது ‘ இன்று போய் நாளை நின் தானையோடு வா’ என விட்டதைப் போல்வது” என்று பரிமேலழகர் வெளிப்படையாகவே இராமாயண நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டிக் கூறுகிறார். இராமனது இந்தச் செயல் அன்றும் பேராண்மையாகப் பேசப்பட்டிருத்தலாலேயே, ‘பேராண்மை என்ப’ என்று இராமனைக் கருத்தில் கொண்டு வள்ளுவர் கூறியிருக்க வேண்டும் என்பது சான்றோர் கருத்து. வள்ளுவர் வால்மீகி இராமாயணம் படித்திருக்கமாட்டாரா என்ன? பகுத்தறிவாளர்கள்’ என்று தங்களைக் கூறிக் கொள்பவர்கள் கூட ஏற்றுக் கொண்டாக வேண்டிய பொருள் இது
வேதங்களையும், இதிகாசங்களையும், புராணங்களையும் கற்றுணர்ந்த வள்ளுவர் எந்த சமயத்தையும் தம் நூலில் உயர்த்திப் பிடிக்கவில்லையென்றாலும், தம் காலத்தில் பெரிய மதமாக விளங்கிய இந்து சமயத்தின் தெய்வங்கள், புராணக்கதைகள் பற்றிய குறிப்புகளை ஆங்காங்கே பல பாக்களில் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ தெளித்து வைத்திருக்கிறார் என்பது திருக்குறளை நடுநிலையோடு ஆழமாக ஊன்றிப் படிப்பவர்க்கு மட்டும் புலப்படும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

திருவள்ளுவரும் தெய்வங்களும் - பேராசிரியர்.ஐயப்பன், நெல்லை

 
திருவள்ளுவரும் தெய்வங்களும் - பேராசிரியர் ஐயப்பன், நெல்லை திருக்குறள், சைவ சித்தாந்தம், விவிலியம் மற்றும் தமிழ் ஆய்வில் ஈடு இணையற்றவர், அவர் சமீபத்தில் ஆற்றிய உரை. பேராசிரியர் மகாலிங்கம்.  ஐயப்பன் எழுதிய "திருக்குறள் பூக்கள் நூல் வள்ளுவம் மற்றும் மெய்யியல் ஆராய்ச்சியாளர் பெரிதாகப் போற்றியது, அந்த நூலைப் பற்றி தினமணி அறிமுகம்
images%20(32).jpg%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard