Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறளும் வைதீக உபநிடத நூல்களும் டாக்டர் மகாலிங்கம் ஐயப்பன்


Guru

Status: Online
Posts: 7329
Date:
திருக்குறளும் வைதீக உபநிடத நூல்களும் டாக்டர் மகாலிங்கம் ஐயப்பன்
Permalink  
 


திருக்குறளும் வைதீக உபநிடத நூல்களும் டாக்டர் மகாலிங்கம் ஐயப்பன்

“வேத வழக்கொடு இயைந்த பல செய்திகள் திருக்குறளில் உள்ளன. நித்திய நைமித்திக பூசைகள், நான்கு ஆசிரமங்கள், ஐவகைக் கடன்கள், அந்தணர் முதலியோர் ஒழுக்கம், வேதங்கள் முதலியவற்றைப் பற்றிய செய்திகள் பல அதில்இணைக்கப்பட்டு இருக்கின்றன.”- என்று உ.வே.சா.வும், தொடர்ந்து அவரைப் போன்றே வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர், கே.வி. இராமசாமி ஐயங்கார், எசு. கிருஷ்ணசாமி அவர்கள் உள்ளிட்டுப் பலர் எழுதி யிருக்கின்றனர்.

ஆனால் பகுத்தறிவாளர் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் காலனிய ஆதிக்க சிந்தனையில் தோய்ந்த தமிழறிஞர்கள் இருபதாம் நூற்றாண்டு தொடங்கி இதுவரை, பல குறட்பாக்களின் பொருளைத் தங்கள் கொள்கைக்கு ஏற்றாற்போல்திரித்து எழுதித், திருவள்ளுவரையும் தங்களைப் போலவே சமஸ்கிருதமொழியும் வேதங்களும் சாத்திரங்களும் அறியாதவராகவே கருதி அவரையும் ஒரு ‘பகுத்தறிவாளர்’ என்று காட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் உண்மை அதுவல்ல என்பது நடுநிலையோடு திருக்குறளை ஆராய்ந்து பார்ப்போருக்குப் புலப்படும்.

வேதங்களின் பெருமையை திருவள்ளுவர் எந்த அளவுக்கு உணர்ந்திருக்கிறார் என்பது இந்த ஒரு குறளைப் படித்தாலே தெரிந்துவிடும்.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். (28-நீத்தார் பெருமை)

தவவலிமை மிக்கவர்கள் பெருமையை இந்நாட்டிற்கு அவர்கள் வழங்கிய வேதமொழிகள் காட்டுகின்றன என்பது இக்குறளின் பொருள். இக்குறளை தொல்காப்பிய நூற்பாவையொட்டி வள்ளுவர் கூறுகிறார்.

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்
மறைமொழி தானே மந்திரம் என்ப. (தொல்காப்பியம்-செய் 480)

வடமொழி வேதங்கள் முனிவர்களால் இயற்கையிலிருந்து கேட்டு பெற்றவை, இப்பொருளிலேயே ஸ்ருதி என அழைக்கப்படும். வேதங்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் பின்னால் எழுந்த பாணினியின் இலக்கண வரைமுறையினுள் வாராமையால் எழுத்தில் வடிக்க மாட்டாமல், ஆசிரியர் ஓத்து கூற மாணவர்கள் ஓதிக் கொள்வதாலும், எழுதி வைக்கப்படாததாலும் நான்மறைகள் எனப்பட்ட வேதங்கள் , எழுதாக் கற்பு எனும் பெயரில் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுவதைக் காணலாம்.

படிவ வுண்டிப் பார்ப்பன மகனே
எழுதாக் கற்பினின் சொல்லுள்ளும் (குறுந்தொகை 156)என்று குறுந்தொகை கூறுகிறது

அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு” (கடவுள் வாழ்த்து 1)
என்பது முதல் குறள். இது சொல்வது என்ன? எழுத்துகளெல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டிருப்பதுபோல, இந்த உலகம் ஆதிபகவனை முதலாகக் கொண்டிருக்கிறது என்பதுதானே? இதில் உள்ள இரு பகுதிகளையும் நாம் தனித்தனியே கவனிக்க வேண்டியதிருக்கிறது.

ஒன்று, எழுத்துகளெல்லாம் அகரத்தை முதலாக உடையவை. இரண்டு, (அதுபோல) உலகம் ஆதிபகவனை முதலாக உடையது.

முதல் பகுதியைக் கவனிப்போம். ஒரு மண் குடம் எப்படி உருவாகிறது என்றால் அதற்கு குயவன் காரணம் என்போம். குயவனால் மண், குடம் ஆனது என்றால் குயவனைக் கர்த்தா என்போம். ஆனால் இந்த அர்த்தத்தில் எதுவும் இங்கு கூறப்படவில்லை.. அகரத்திற்குப் பிறகு மற்ற எழுத்துகளின் வரிசை தொடர்கிறது. ஒரு ‘கியூ’ வரிசையில் முதலில் நிற்கும் ஆள், ‘கியூ’வில் நிற்கும் பிற மனிதர்களை உண்டாக்குபவரா? அதாவது காரண முதலா? இரண்டும் அல்ல, அவர் வரிசை முதல். அவ்வளவுதான். அதுபோல எழுத்துகள் வரிசையில் அகரம் முதன்மையாக நிற்கிறது. அதாவது வரிசை முதல். அதுபோல உயிர்களின் வரிசையில் ஆதிபகவன் முதலில் நிற்கிறார். அவ்வளவுதான். ஆதி என்றசொல்லும், குணங்களில் முதன்மையானவர் என்பதைத்தான் குறிக்கிறது. ஆதி பகவன் என்று வள்ளுவர் குறிப்பிட்டது உலகத்தைப் படைத்த கடவுளை அல்ல என்றும், “அகரம் எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும்உயிர்களுக்கு முதன்மை” என்றும் தற்கால உரையாசிரியர்கள் எழுதுகிறார்கள்

ஆனால் உண்மை அதுவல்ல. உலகிலுள்ள பெரும்பாலான மொழிகளில் அகரம்தான் முதல் எழுத்து. எழுத்துகள் அகரத்தை முதலாக உடையன என்றால் என்ன? இறைவனிடமிருந்து எல்லா உயிர்களும் தோன்றியது போல, எல்லா எழுத்துகளும் அகரத்திலிருந்து தொடங்குகின்றன. எல்லா எழுத்துகளின் ஓசைக்கும் மூல ஒலி அகரம்தானே? அது தானே முதல் அல்லது ஆதி காரணம். அது மட்டுமல்ல, ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரம் அகரம், உகரம், மகரம் என்று மூன்று எழுத்துகளால் ஆனது. ஓம் என்னும் அந்த ஓம்கார ஓசை கூட ‘அ’ என்னும் முதல் எழுத்தில் அல்லது அகர ஒலியில்தான் தொடங்குகிறது.

இக்குறளில் வேதத்தின் தாக்கத்தைப் பெரிதும் காணலாம். வேதங்களின் ஆறங்கங்களில் ஒன்று தருக்கம். முதற்குறள் தருக்க முறைப்படி முதற்கடவுளது உண்மையை நிறுவுகின்றது.

தருக்கத்தில் ஒருபொருளின் (வஸ்து) பெயர் (உத்தேசம்) கூறிய பின்னரே மேற்கோள், ஏது, மற்றும் எடுத்துக்காட்டு முதலியவற்றல் நிறுவ வேண்டும் என்பது விதி. திருவள்ளுவர் ஆதிபகவன் என்று தாம் சாதிக்கப் போகும் பொருளுக்கு முதலில் பெயர் கூறினார். உலகம் ஆதிபகவனாகிய முதலை யுடைத்து என்று மேற்கோள் கூறினார். அகரமுதல வெழுத்தெல்லாம் என்று ஏது கூறினார். காணப்பட்ட உலகத்தாரால் காணப்படாத கடவுளுக்கு உண்மை கூறும் அனுமானமும் இதனால் உணர்த்தினார்.

ஆதி என்ற தமிழ்ச் சொல்லும் பகவன் என்னும் வடசொல்லும் சேர்ந்த தொகைச் சொல் ஆதிபகவன் என்பது. பகவன் தமிழ்ச் சொல்லாயின் ஆதிப்பகவன் என ஒற்று மிகவேண்டும் ஒற்று மிகாமல் ஆதியாகிய பகவன் என்னும் பொருளைத் தருதலால் இச்சொல் இருபெயரொட்டுப் பண்புத்தொகை யென்றும் இது வடநூன்முடிபு என்றும் பரிமேலழகர் கூறினார்.

பகவன் என்பது ‘பகவான்’ என்னும் வடசொல் என்றும், பகவான் என்பது சிவனுக்குப் பெயர் என்றும், அதர்வசிகோபநிஷத், “யோவை ருத்ர: ஸ பகவான்” என முப்பது முறை கூறுகின்றது. சங்கார காரணனாகிய சிவனே உலகத்துக்கு ஆதி என்பது இதனால் உணர்த்தப்பட்ட பொருளாம்.

“சங்கரோ பகவான் ஆத்யோ ரட்ச ஸகலா: ப்ரஜா:
மஹேசோ பகவான் ஆதி தேவ:” எனச் சரபோபநிடதம் கூறுகின்றது.
அதாவது சங்கரனைத் தவிர ஏனையோருக்கு இறைமைக் குணங்கள் இல்லை. அவனே பகவான். எனவே ‘மகேசனே பகவான், ஆதி தேவன்’ என்பது இதன் பொருள். எனவே ‘ஆதிபகவன்’ என்ற பெயரில் உள்ள ‘ஆதி’ என்பது, இறைமைக் குணங்கள் இலராகிய ஏனைத் தேவர்களை விலக்க வந்த அடை, அதாவது சிவனே முதற்கடவுள் என்றுணர்த்துவது இதன் கருத்தாம்.

சைவசித்தாந்த அறிஞர்கள் ‘ஆதிபகவன்’ எனும் இத்தொடருக்கு ‘ஆதிசத்தியொடு கூடிப் பிரிவின்றி யுள்ளானாகிய சிவன்’ என்று மூன்றாம் வேற்றுமை உடனிகழ்ச்சிப் பொருள் விரித்துப் பொருள்கொள்வர். பதிப்பொருளாகிய ஒருபொருள் சிவமும் சத்தியுமாகத் தாதான்மியத்தால் இருதிறப்பட்டு உலகினை இயக்கி நிற்றல் பற்றி இறைவனை “ஆதிபகவன்” எனும் பெயரால் திருவள்ளுவர் குறித்துள்ளார் எனகொள்ளுதல் பொருந்தும் என்பர். (திருவருட்பயன். 1-2. க. வெள்ளைவாரணர், சமாஜபதிப்பு)


இக்குறளின் கருத்து மாண்டுக்ய உபநிடதத்தில் 9 வது சுலோகத்தில் உள்ளது.

ஜாகரிதஸ்தானோ வைஸ்வாநர அகார ப்ரதமா மாத்ரா அப்தேராதிமத்வாதவா ஆப்னோதி ஹ வை சர்வான் காமானாதிக்ஷ பவதி ய யேவம் வேத || (மாண்டுக்ய உபநிஷத் , 9)

விழிப்பு நிலையில் வைஸ்வாநரனும் ( ஆத்மனும்) அகாரமும் முதன்மைத் தன்மையாலும் வியாபித்தலாலும் சமமாகக் கருதப்படுகிறது. ஆத்மன் ஆதி பிரம்மத்துக்குச் சமமான நிலையை அடைகிறான்.

எழுத்து வரிசையில் முதன்மையானது அகாரம். பரிமாணங்களில் முதன்மையானது விழிப்பு நிலை. அகாரம் மற்ற மெய்யெழுத்துகளில் வியாபித்து உயிர்மெய் எழுத்துகளைத் தருகிறது. ஆத்மா நம் தூலவுடல் மற்றும் சூக்ஷ்மவுடல் முழுதும் வியாபித்து நிற்கிறது. இறுதியில் ஆதி பிரம்மத்துக்குச் சமமாகிறது.

பகவத் கீதையிலும் இதே கருத்து உள்ளது.

அக்ஷராணாம் அகாரோஸ்மி த்வந்தஹ சாமாசிகஸ்ய ச

அகம் ஏவாக்ஷய காலோ ததாயஹம் விஸ்வ முகஹ || (பகவத் கீதை 10:33)

“எழுத்துகளிலே நான் அகாரமாக இருக்கிறேன்” என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்.

பார்ப்பனர் வேதம் ஓதுதலை மறந்தாலும் மீண்டும் ஓதி மனனம் செய்து கொள்ளலாம் ஆனால் அவர்களுக்கு உரிய ஒழுக்கத்தைப் பேணாவிட்டால் குடிபிறப்பினால் அவர்களுக்குக் கிட்டியுள்ள உயரிய நிலை கெட்டுவிடும் எனக் கூறுகிறார் திருவள்ளுவர்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (134 ஒழுக்கமுடைமை )
பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான். என்ற கருத்தை வள்ளுவர் கூறுவதிலிருந்து அவர் பார்ப்பனர்களின் குடிப்பிறப்பின் மீது எத்தகைய மதிப்பு வைத்திருக்கிறார் என்பது புலப்படுகிறது.




__________________


Guru

Status: Online
Posts: 7329
Date:
RE: திருக்குறளும் வைதீக உபநிடத நூல்களும் டாக்டர் மகாலிங்கம் ஐயப்பன்
Permalink  
 


அந்தணர் என்னும் சொல் பார்ப்பனர், துறவியர், இறைவன் என்று பல பொருள்களில் அறிஞர்களால் எடுத்தாளப்பட்டுள்ளது.

ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் ( கலி 69/5)
ஒத்து உடை அந்தணர் உரை-நூல் கிடக்கை ( சிலப்பதிகாரம் 15-70)
ஓத்துஉடை அந்தணர்க்கு (மணிமேகலை 13-25)
ஓத்து இலாப் பார்ப்பான் உரை (இன்னா நாற்பது 21)

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். (30-நீத்தார் பெருமை)

நீத்தார் பெருமை – அதிகாரத்தில் வரும் இக்குறளில், அந்தணர் என்னும் சொல்லைத் துறவி எனும் பொருளில் வள்ளுவர் ஆண்டுள்ளதை அறியாமல், அவர் அந்தணர் குல மரபை ஏற்க வில்லை என தமிழர் மரபை மீறிப் பகுத்தறிவாளர் என்று தம்மைக் கூறிக் கொள்வோர் பொருள் கூறுவர்.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தால் தான் பிறவிக் கடலைக் கடக்க இயலும் என வள்ளுவர் கூறியுள்ளதை - எந்த தமிழ் அறிஞரும் சுட்டுவதே இல்லை; கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ‘அந்தணன்’ எனும் சொல் கடவுளைக் குறிக்கும்,
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,
நாகம் நாணா, மலை வில்லாக,
மூவகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய,
மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான் (பரிபாடல் 5)
இதன் பொருள் :

ஆதி அந்தணன் என்று அறியப்பட்ட பிரம்ம தேவன். செலுத்திய, வேதங்களைக் குதிரைகளாகப் பூட்டிய பூமியாகிய தேரில் சென்று, வாசுகி என்ற நாகத்தை நாணாகவும், மேரு மலையை வில்லாகவும் கொண்டு, திரிபுரங்களை ஒரு தழல் அம்பினால் அழியும்படி யெய்தவனும், தேவர்களுடைய வேள்விப் பாகம் உண்டவனும், பசுமையான கண்களை உடையவனுமாகிய பார்ப்பானாகிய சிவபெருமான், என்பது இதன் பொருள்.
இப்பாடலில் பிரம்மதேவனையும் சிவபெருமானையும் அந்தணன் என்றும் பார்ப்பான் என்றும் கடுவன் இளவெயினார் அறிமுகப்படுத்துகிறார்.

இது போலவே திருவள்ளுவர் தமிழர் மெய்யியல் மரபில் அந்தணர் என்பதை கடவுள் என கடவுள் வாழ்த்து அதிகாரத்திலும், துறவியர் என நீத்தார் பெருமை அதிகாரத்திலும் பயன்படுத்தி உள்ளதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்

திருவள்ளுவர் வேதத்தை அறுதொழிலார் நூல் எனச் சொன்னது போலவே மறை எனவும் பயன் படுத்தியுள்ளார்.

பார்ப்பான் என்னும் பெயர் முன்பு மரியாதைக்கு உரியதொன்றாகவே வழங்கியது. இது இருபிறப்பாளன் என்ற பொருளைத் தருவதாகும். “பார்ப்பு” என்பது பறவையின் குஞ்சுக்குப் பெயர்.
“பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றிளமை” (தொல். பொருள்- மரபியல் சூ559).
பறவைக்குஞ்சுக்கு இரண்டு முறை பிறப்புண்டாகும். தாயின் வயிற்றினின்றும் முட்டையாக வெளிவருவது ஒருபிறப்பு. முட்டையினின்றும் குஞ்சாக வெளிவரல் மற்றொரு பிறப்பு. அந்தணர்களுக்கும் இரண்டு பிறவிகள் உண்டு. ஒன்று அன்னையின் வயிற்றினின்றும் வெளிவரல், மற்றொன்று, உபநயனத்தின் பின் உள்ள வாழ்க்கை. ஆதலின் அவர்களைத் ‘துவிஜர்’ என்று வடமொழியிலும் “இருபிறப்பாளர்” எனத் தமிழிலும் கூறுவர். அதாவது, பறவையின் குஞ்சு போல்பவர் என்ற பொருளில் “பார்ப்பு அன்னவர்” என்பர். ‘பார்ப்பன்னவன்’ என்பதில் உள்ள மெல்லொற்றும் ‘வ’கர உயிர்மெய்யும் கெட்டுப் ‘பார்ப்பனன்’ என நின்றது. மாணிக்கவாசக சுவாமிகள் குருவாக வந்து ஆண்டு கொண்ட சிவபரம்பொருளை, “பார்ப்பானே” என விளிப்பது கவனிக்கத் தக்கது. ( புணர்ச்சிப்பத்து -10 திருவாசகம், சிவக்குடில் விளக்கம்.)

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்” (543)
என்னும் குறளில் அரச னின் செங்கோலின் மாட்சியைக் கூற வந்த திருவள்ளுவர், அந்தணர் ஓதும் வேதத்திற்கும் அறத்திற்கும் மன்னவன் செங்கோலே முன்னோடியாக நின்றது என்றார். அதாவது ஒரு நாட்டின் மன்னன் வேதங்களிலும் தர்ம சாத்திரங்களிலும் கூறபட்ட நெறிகளுக்கிணங்க செங்கோன்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே வள்ளுவர் கூறவந்த கருத்து

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். (கொடுங்கோன்மை, 560)
வேதமோதும் அந்தணரைப் பற்றிய மற்றொரு குறள் இது. நாட்டை ஆளும் அரசன் முறைப்படி ஆட்சி செய்து மக்களைக் காவாவிட்டால், நாட்டில் பசுக்கள் பால், தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர் என்பது இக்குறளின் பொருள்..

காலனி ஆதிக்க சிந்தனையில் தோய்ந்த உரையாசிரியர்களால் பல உரைகள் பிதற்றலாய் எழுதப்பட்டுள்ளன, அதில் அறு தொழிலார் என்பதை ஆறு தொழில் என மட்டுமின்றி நூல் என்பதைக் கொண்டு நெசவு, அறுக்கும் நூல் என்றெல்லாம் வள்ளுவரையும், தமிழர் மெய்யியலையும் பழித்து உரைகள் வந்துள்ளன. அது மட்டுமல்ல, ஈதலும், கொடுப்பதை ஏற்றலும் தொழில்களா ? என்று கேட்டு ஏகடியம் செய்வோரும் உளர். தொழில் என்பது இங்கே செயல் அல்லது ‘கருமம்’ என்ற பொருளில் வந்துள்ளது என்பதை அவர் அறியார்.

ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேள்வி செய்வித்தல், ஈதல், ஏற்றல் என்று ஆறு தொழில்களை உடையவர் அந்தணர் என பல சங்க நூல்கள் தெரிவிக்கின்றன.
நல்ல அரசன் அந்தணர்களின் வேத அற நூல்களை உறுதுணையாய் ஆட்சி செய்ய வேண்டும், அரசன் மோசமான ஆட்சி செய்தால் அந்தணர் வேதம் மறப்பர் என வள்ளுவர் அந்தணர்களையும் வேதங்களையும் போற்றி கூறுகிறார்.

அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த - புறம் 397
ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து - கலி 1
ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்
அறம் புரி அந்தணர்” (– பதிற்றுப்பத்து 24)

கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச் (பதிற்றுப்பத்து பாட்டு - 74

இதற்கு முந்தைய குறளா
முறைகோடிமன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல் (559)

என்னும் பாடலில் முறைதவறி ஆட்சி செய்யும் மன்னவனின் நாட்டில் வானம் பொய்க்கும் என்று கூறிய திருவள்ளுவர் வானம் பொய்த்தால் பசுக்கள் மேய புல் பூமியில் தளிர்க்காது, மழையின்றி பயிர் செய்ய இயலாததால் வைக்கோலும் போதிய அளவு கிடைக்காது. பஞ்சம் தலைவிரித்தாடுவதால் பசுக்களை வளர்ப்போரும் அவற்றுக்கு வேறு தீவனங்களை வாங்கிக் கொடுக்க இயலாதவராக இருப்பர். அதனால் பசுக்கள் கொடுக்கும் பால் அளவில் பெரிதும் குன்றும் . அதனால் நெய்யின் உற்பத்தி குன்றி வேள்விகள் செய்தற்கு நெய் கிடைப்பது அரிதாகிவிடும் . அதனால் அறுதொழில் செய்கின்ற அந்தணர், வேள்விகள் நடவாமையால் வேள்விகளில் ஓதப்படும் வேத மந்திரங்களை ஓதாமையால் மறந்துவிடுவர் என அடுத்த குறளில்

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்
என்று வேள்விக்கும் மழைக்கும் உள்ளதொடர்பினைக் கூறினார்

இந்தத் தொடர்பைத் தொல்காப்பியமும், “அமரர்கண் முடியும் அறுவகையானும்” (தொல். பொருள் , புறத்திணை 79) என்று கூறிற்று. ‘அமரர்கண் முடியும் அறுவகையாவது பிறப்பு வகையானன்றிச் சிறப்பு வகையால் தேவர்கண்ணே வந்து முடிதலுடையவாகிய அறுமுறை வாழ்த்தின் கண்ணும்’ என்றும், அந்த ஆறாவன, ’முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் முடியுடை வேந்தரும் உலகுமாம். இவை தத்தம் சிறப்புவகையான் அமரர்சாதிப் பால என்றல் வேத முடிவு.’ என்று நச்சினார்க்கினியர் (தொல் புறம் 26) எடுத்துரைத்தார். இச்சூத்திரத்திற்கு பலர் பலவாறு கூறினும் நச்சினார்க்கினியர் கூறியதே பண்டை மரபு தழுவியதாம்.

திருவள்ளுவர், வேதவேள்வி செய்யும் அந்தணர்களுக்கு இவ்வளவு ஏற்றம் கொடுத்துப் பேசினாலும் பிறப்பால் மட்டுமே அந்தப் பெருமை ஒருவர்க்கு வந்துவிடாது; என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளார். மனிதர்கள் செய்கின்ற தொழிலால் அல்லது நடத்தையால் தங்களுக்குள் ஏற்றதாழ்வுகளுடன் வேறுபடுகின்றனர் என்பதை வலியுறுத்துகிறார்.

பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” (972)
என்னும் குறளில், திருவள்ளுவர், பெருமையாவது குலத்தினால் அறியப்படாதென்றும் அதற்குக் காரணம் இன்னது என்றும் சுட்டிக் காட்டினார். அந்தணர் ,பார்ப்பார் என்பன காரண இடுகுறிப் பெயர். காரணம் குறிக்கும் பொழுது அப்பெயர் அந்தக் காரணத்தை உடைய எல்லாரையும் குறிக்கும். சுட்டப்பட்ட காரணம் அந்தணரிடம் சிறப்பாக விளங்க வேண்டும் என்பது விதி. பிறப்பு அந்தணர்களிடத்தில் எதிர்பார்க்கப்படும் பண்பு.. இதனைத் திருவள்ளுவர் அளவையியலில் (Logic) கூறப்படும் முக்கூற்று விதியில் (Deductive syllogism) வைத்துக் கூறியுள்ளது அறியத்தக்கது.

இதே கருத்தைத் தான் வருணங்களைப் பற்றிய கீதை சுலோகத்தில் பார்க்கிறோம்.

"சாதுர் வர்ணயம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகச:
தஸ்ய கர்த்தாரம் அபி மாம் வித்தி அகர்த்தாரம் அவ்யயம்" - பகவத் கீதை
இதன் பொருளாகக் கூறப்படுவது யாதெனில், ‘நான்கு வர்ணங்களை உருவாக்கியவன் நானே. மனிதர்களின் குணத்திற்கும் செயலுக்கும் ஏற்றவாறு நான் உருவாக்கினேன். மனிதர்கள் தம்மை செம்மைப்படுத்தி மேன்மை அடைய நாம் அவற்றை படைத்தோம், மனிதர்களின் செயல்கள் மற்றும் குணங்கள் அமைப்பு படி அவர்களுக்கான வருணம் அவர்களுக்கு கிடைக்கிறது அவற்றை நான் படைத்திருப்பினும், நான் அவர்களின் வருணத்திற்குக் கர்த்தா அல்லன், ( அவர்களே தங்கள் செயல்பாட்டினால் அதற்குரிய வருணத்தில் அமைகிறார்கள்) இது நிலையானது என்று உணர்’ என்பதாகும்.
குர் ஆனில் 49 வது அதிகாரம் 13 ஆம் வசனம் கூறுகிறது:
“மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்களில் இறைவனிடத்தில் அதிக கண்ணியம் வாய்ந்தவர்கள் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம்“. (குர்ஆன் 49:13)

மேற்கண்ட குரான் வசனங்த்தில் 'உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம்' என்ர இன அமைப்பைக் குறிப்பிடும் வாசகத்திற்கும், பகவத் கீதைக் குறிப்பிடும் 'நான்கு வருணமாக அமைத்தோம்' என்பதற்கும் பெரிய வேறுபாடு இருப்பது போல் தெரியவில்லை, ஏனெனில் இவை கூறப்பட்ட காலங்களில் இனங்கள் இருந்ததை குரான் சுட்டி இருப்பதும், 'நான்கு வருணங்கள்' இருந்ததை பகவத்கீதை சுட்டுவதாகவும் தான் கொள்ள முடிகிறது.

விவிலியத்தில் பழைய ஏற்பாட்டில் யூத மக்களை பன்னிரண்டு கோத்திரங்களாகப் பிரிவினை செய்தது கூறப்படுகிறது. ஆதியாகமம் 49:28 வசனங்களில் - இவர்கள் எல்லாரும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார். அவர்களுடைய தகப்பன் அவர்களை ஆசீர்வதிக்கையில் அவர்களுக்குச் சொன்னது இதுதான். அவனவனுக்குரிய ஆசீர்வாதம் சொல்லி அவனவனை ஆசீர்வதித்தான் என்று கூறப்பட்டிருக்கிறது..

அதே விவிலியத்தில் புதிய ஏற்பாட்டில் மத்தேயு 10: 5, 6 வசனங்களில், இயேசு கிறிஸ்து தன் பன்னிரண்டு சீடர்களையும் மக்களிடம் சென்று போதனைகள் செய்து அவர்களை இறைவழியில் திருப்பும்படி அனுப்புகையில் அவர்களுக்குக் கட்டளையிட்டுக் கூறுகிறார், “ நீங்கள் புற ஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமல் போன ஆடுகளாகிய இஸ்ரேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்” .

வருண அமைப்பிற்கும், இன அமைப்பிற்கும் பொறுப்பேற்கும் மூன்று மறைநூல்களில் ஒன்று மட்டுமே எப்போதும் தூற்றப்படுகிறது. இனக்குழுக்குள் வருண வேற்றுமை போற்றுகிறது என்றால், உலக அளவில் மனிதருக்குள் இனவேறுபாடுகள் அதைச் செய்கின்றன. இந்தத் தூற்றலை பகுத்தறிவாளர்களும் ஒருபக்கச் சார்பாக செய்துவருவது தான் வேடிக்கை.

தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல், 2-ஆம் சூத்திரத்திற்கு இளம்பூரணர், இத்திருக்குறளை மேற்கோள் காட்டி செய்தவுரை ஆன்றோர் கருத்தை நன்கு புலப்படுத்தும்.

“ஒத்த கிழவனும் கிழத்தியுங் காண்ப” என்பது.
ஒப்பு பத்து வகைப்படும். அவை,
“பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு வகையே (மெய்ப்.25)
என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரத்துள் கூறிய பத்துமாம்.

அவற்றுள் பிறப்பாவது, அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர், குறவர், நுளையர் என்றாற்போல வருங் குலம். குடிமையாவது அக்குலத்தினுள்ளார் எல்லாருஞ் சிறப்பாக ஒவ்வாமையின் அச்சிறப்பாகிய ஒழுக்கம் பற்றிய குடிவரவைக் குடிமை என்றார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான்” (குறள் 972)
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர் அறவோர் அந்தணர் எவ்வுயிரிடத்தும் செந்தண்மை யுடையவர் ஆதலால் அந்தணர் என்போர் அறவோர்.

மற்றொரு முறையிலும் இதனைக் கூறலாம்.
அந்தணர் என்போர் அறவோர் – இது மேற்கோள்
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் – இது ஏது.
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர் அறவோர். – இது முடிவு
இதனால், எவ்வுயிருக்கும் செந்தண்மை பூண்டொழுகும் சிறப்பொழுக்கம் அந்தணர்களுக்குப் பிறப்பால் குடிவரவாக வரும் என்பதும், அச்சிறப்பொழுக்கம் இல்லாதவன், பிறப்பால் அந்தணனாயினும் அந்தணன் எனப்படமாட்டான் என்றும், ஏனைய குலத்தில் பிறந்தாலும் செந்தண்மை பூண்டொழுகும் அறவோர் அந்தணர் எனப்படுவாரென்பதும் வள்ளுவனார் கருத்தென்பது பெறப்படும்.

இவ்வாறு வேதவழிச் செல்வதே தமிழ்வேதமாம் திருக்குறள் எனலாம்.



__________________


Guru

Status: Online
Posts: 7329
Date:
Permalink  
 

 பிறப்பால் மட்டுமே சாதியுயர்வைப் பேசுவாரை வேதமும் இழித்துரைக்கின்றது. ஈண்டு சந்தமறையும் தமிழும் வல்ல பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் கூறுவது கருதத் தக்கது.

“ஸாமவேத வஜ்ரஸூசிகோபநிஷதம் – பிராமணத் தன்மைக்குரியது சீவனன்று, உடம்பன்று, சாதியன்று, கல்வியறிவன்று, கன்மமன்று, தன்மமன்று எனத் திருட்டாந்த வாயிலாக விளக்கிச் சுவானுபவப் பிரம ஞானமுடையவனே பிராமணன் என்றோதி இதுவே, சுருதி, ஸ்ம்ருதி புராண இதிகாசங்களின் கருத்து என்று முடிவுரை மொழிந்துளது. “

“மஹாபாரதத்து வனபர்வத்து 206ஆம் அத்தியாயங்களிற் பகரப்பட்ட தர்மவியாதரென்னும் வேடரும் அந்தப் பாரதத்தில்பல இடத்தும் கூறப்பட்ட விதுரரென்னுஞ் சூத்திரரும் மகாஞானிகளா யிருந்தனர் என்பதை அறியலாம். இத்திறத்தோரும் பலரே.”

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. (குறள் 522)
இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.

பகவத் கீதை 3.13 ல் இதே கருத்து கூறப்பட்டுள்ளது.
யக்ஞசிஷ்டாசின: சந்தோ முச்யந்தே சர்வகில்பிக்ஷை
புஞ்சதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்ம காரணாத் ||
வேள்வி செய்தபிறகு எல்லோருக்கும் கொடுத்து பின் எஞ்சியிருப்பதை உண்கின்ற நல்லவன் பாபத்திலிருந்து விடுபடுகிறான். ஆனால் தங்களுக்காக மட்டும் சமைத்து உண்பவர்கள் பாபத்தை அடைகிறார்கள்.

காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
நாமம் கெடக்கெடும் நோய். (குறள் 560)
காமம் வெறுப்பு, மயக்கம் என்னும் இம்மூன்றன் பெயருங்கூட உள்ளத்திற்குள் இல்லாது போனால், அவற்றால் வரும் துன்பங்களும் இல்லாமல் போகும்.
காமஃ க்ரோதஸ்ததா லோபஸ்தஸ்மாதேதத்த்ரயம் த்யஜேத் | (பகவத் கீதை 16: 21)
காமம், கோபம், ஆசை.இவை மனிதனின் மனதை மாசுபடுத்துவது ஆகும்.ஆகையால் இம்மூன்றும் அறவே நீக்கப்பட வேண்டும்..இம்மூன்று தீமைகளையும் மனதில் இருந்து நீக்கிவிட்டால் அவற்றால் வரும் துன்பத்திலிருந்து விடுபடுவோம்" என இச்சுலோகம் பொருள் தருகிறது.

ஜான் மார்ஷல் என்பவர் சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த வரலாற்று அறிஞரும் தொல்லியல் ஆய்வாளரும் ஆவர். அவர் சிந்துவெளி நாகரிகத்தை ஆய்வு செய்து ‘மொகஞ்ஜோ தாரோ மற்றும் சிந்து நாகரிகம்’ என்ற பெயரில் மூன்று தொகுதிகளாக 1931 ல் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
“The [Harappan] religion is so characteristically Indian as hardly to be distinguished from still living Hinduism.... One thing that stands out both at Mohenjo-daro and Harappa is that the civilization hitherto revealed at these two places is not an incipient civilization, but one already age-old and stereotyped on Indian soil, with many millennia of human endeavour behind it...” John Marshall, Mohenjo-daro and the Indus Civilization (London, 1931, 3 vols.), vol. I, p. vi-viii.
இதன் தமிழாக்கம்:சிந்து வெளி “[ஹரப்பன்] மதம் இப்போதும் இந்தியர்களால் பின்பற்றப் படுகின்ற இந்து மதத்திலிருந்து வேறுபடுவதைப் போலவே இல்லை .... மொஹென்ஜோ-தாரோ மற்றும் ஹரப்பா ஆகிய இரண்டிலும் தனித்து நிற்கும் ஒரு விஷயம் என்னவென்றால், இந்த இரண்டு இடங்களில் இதுவரை வெளிப்படுத்தப்பட்ட நாகரிகம் ஒரு தொடக்க நிலை நாகரிகம் இல்லை, ஆனால் ஏற்கனவே இந்திய மண்ணில் காலம் காலமாய் முதிர்ந்த மற்றும் ஒரே மாதிரியான பண்பாடு பல ஆயிரம் ஆண்டுகளாக வழங்கி வந்ததற்கான மனித முயற்சிகளின் பின்னால் உள்ளன ...என்பதாகத் தெரிகிறது. ” - ஜான் மார்ஷல், மொஹென்தாரோ மற்றும் சிந்து நாகரிகம் (லண்டன், 1931, 3 தொகுதிகள்.), தொகுதி. I, பக்க. vi-viii.

மெய்யியல் மரபை ஆரியர் திராவிடர் என்று இரண்டு இனங்களாகப் பிரித்துப் பரப்பியது கால்டுவெல் போன்ற சில வெளிநாட்டவரின் சுயநலம் படிந்த ஊகங்கள் என்பதைத் தொல்லியல் நிபுணர் ஜான் மார்ஷலின் கூற்று மிகத் தெளிவாய் நிரூபிக்கிறது.

இயல்புடைய மூவர் என்பது மாணவர், அகத்தவத்து முதியோர் மற்றும் துறவிகள் என்பதே வள்ளுவரின் கருத்து என்பது தெளிவாகிறது. ஏனெனில் இல்வாழ்வார் என்போர் பொருள் ஈட்டும் நிலையில் உள்ளோர். மற்ற மூவரும் பொருள் ஈட்டுவதில்லை. எனவே இம்மூன்று வகையினருக்கும் உணவும், உறையுளும், மருந்தும் அளித்துப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு இல்வாழ்வோருக்கு உள்ளது.
மனு நீதி 3:78
யஸ்மாத் த்ரயோ அப்யாஷ்ரமிணோ ஞானேன அன்நேன ச அந்வகம் |
கிரஹஸ்தேன் ஏவ தார்யந்தே தஸ்மாஜ் ஜ்யேஸ்டாஷ்ரமோ க்ரிஹி ||
இல்லறத்தில் நிற்பவன் ஏனைய மூன்று நிலைகளிலும் உள்ளவர்களுக்கு உணவு ஈந்தும், வேதஞானம் பெற உதவி செய்தும் அவர்களை ஓம்புதலால், அவனே நால்வகை ஆசிரமத்தாருள்ளும் தலைமை பெறுகிறான்.” (மனு நீதி 3: 78)
வேதங்களையும், சாத்திரங்களையும் நன்றாக ஓதியுணர்ந்த திருவள்ளுவர் பெருமான் மனு நீதியில் கூறப்பட்டுள்ள இச்சுலோகத்தின் கருத்தை எடுத்தாண்டு இரண்டு குறட்பாக்களைச் செய்திருக்கிறார். இச்சுலோகத்தின் முதற்பகுதியின் கருத்தை அப்படியே மாற்றமில்லாமல்,

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றில் நின்ற துணை (41)
என்று கொடுத்திருப்பதால்,இயல்புடைய மூவர் யார் என்று வள்ளுவர் கருதுவது தெள்ளத் தெளிவாகிறது.

இல்லறத்தார் மட்டுமே பொருள் ஈட்டும் வலிமையுடையவர். மாணவரும், அகத்தவத்தினரும், துறவியரும் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு பிறர் கையை எதிர்பார்த்திருப்பவர். எனவே திருவள்ளுவர் காலச் சமுதாய வாழ்வில் இல்வாழ்வார் தாம் ஈட்டும் பொருளில் ஒரு பகுதியை இம்மூவருக்கும் செலவிட்டு அவர்களுக்குத் துணையாக இருத்தல் அவர்கள் கடமையாகிறது என்று வள்ளுவர் கூறுகிறார்.

மேலும் ஒரு சான்றாக மேற்கூறிய மனு நீதியின் சுலோகத்தின் இறுதிப் பகுதியான “இல்லறத்தில் நிற்பவன் மாணவர், இல்வாழ்வார், அகத்தவத்தினர், துறவிகள் என்னும் நால்வகை நிலையினருள்ளும் தலைமை பெறுகிறான்” என்ற கருத்தைத், திருவள்ளுவர்,
இயல்பினால் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை (47)
என்ற குறளில் வைத்துக் கூறுவதைக் காணலாம். இக்குறளில் ‘முயல்வாருள் எல்லாம் தலை’ என்ற தொடருக்குக் காலிங்கர் மட்டுமே சரியான உரை தந்திருக்கிறார். அவர் சொல்கிறார் : ‘இல்லறத்தான் பிற மூன்று ஒழுக்கத்தினும் முயல்கின்றவரைக் காட்டிலும் தலையாவான் என்றவாறு’ .[ பிற மூன்று ஒழுக்கம் என்பது - கல்விநிலை, அகத்தவ நிலை, தவ நிலை ஆகிய மூன்று நிலைகள் ].

இக்குறளை ‘இல்வாழ்க்கை வாழ்வான் என்பான் இயல்பினால் முயல்வாருள் எல்லாம் தலை’ என்று பிரித்துப் படித்தால், ‘இயல்பினால் முயல்வார்’ என்ற தொடர் வருகிறது. அதற்கு மனு நீதியில் கூறியுள்ள நான்கு ஆசிரமத்தார் என்பதை இயற்கையாக அமைந்த நான்கு வாழ்க்கை நிலைகளில் நின்று அறத்தை நிலைநாட்ட முயல்கின்றவர் என்று பொருள் கொண்டால் மாணவர், இல்வாழ்வார், அகத்தவத்தினர் மற்றும் துறவிகள் என்பது வெள்ளிடை மலை.

அறம், பொருள், இன்பம், வீடு (தர்ம அர்த்த காம மோட்சம் )என்ற நான்கு புருஷார்த்தங்கள் வேத சாத்திரங்களில் வாழ்வியல் உறுதிப்பொருள்களாகக் கூறப்படுகிறது. ஆனால் திருக்குறள் முதல் மூன்று புருஷார்த்தங்களை மட்டுமே பேசுகிறது. தமிழ் மக்கள் கிறித்தவ ஆன்மிக வீடுபேறு குறித்துத் தெரிந்துகொள்ளும் ஆன்மிகப் பண்பாட்டு வலிமையற்றவர்களாக இருந்ததனால், திருவள்ளூவர் வீடுபேறு பற்றி எழுதாமல் விட்டுவிட்டதாக ஜி. யு. போப் கருதினார். ஆனால் பகுத்தறிவு வாதம் பேசும் திராவிட ஆராய்ச்சியாளர்களோ வேத ஆரியர்களின் மறுமையுலகச் சிந்தனையை உலகவாழ்வியல் சிந்தனை கொண்ட திருவள்ளுவரின் திராவிட மனம் மறுதலித்துவிட்டதால் வீடுபேற்றை விட்டுவிட்டார் என்று கூறினார்கள்.

இதற்கு எளிமையான நேரடி விளக்கம் இருக்கிறது பல இந்திய வாழ்வியல் மற்றும் நீதி நூல்களில், எடுத்துக்காட்டாக விளங்கும் சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் போன்றவற்றில் மூன்று விழைவுகளில் அதாவது அறம், பொருள் இன்பம் மூன்றிலும் மட்டும் ஒத்திசைவு இருத்தலை பொருளாதார நிபுணர் இரத்தன் லால் போஸ் சுட்டிக்காட்டுகிறார். முதல் மூன்று புருஷார்த்தங்களும் திரிவர்க்கம் என்று சொல்லப்படுகிறது. மனுதர்ம சாஸ்திரத்தில் இதே திரிவர்க்கப் பார்வை இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் பஞ்சாப் உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதியரசர் ராமா ஜோய்ஸ். “வஜ்ஜாலக்கம் என்ற பிராகிருத மொழியில் எழுதப்பட்ட நீதி நூல் குறள்போல அறம், பொருள், இன்பம் எனும் முப்பால் பற்றிய கவிதைகள் அடங்கிய நூலாகும்” என்று குறிப்பிடுகிறார்.. சமஸ்கிருத மொழியில் மகாகவி பர்த்ருஹரி எழுதிய சுபாஷிதம் என்ற நூலிலும், நீதி சதகம் (அறம்), வைராக்ய சதகம் (பொருள்), சிருங்கார சதகம் (காமம்) என முப்பால் பகுப்புதான் உள்ளது.. திருவள்ளுவருக்கு முன்பே இவ்வாறு முதல் மூன்று புருஷார்த்தங்களை மட்டும் கொண்டு சமஸ்கிருத மொழியில் நீதிநூலகள் எழுதிய முன்னோடிகள் பலர் இருக்க, திருவள்ளுவர் முதல் மூன்று உறுதிப்பொருள்களை மட்டும் எடுத்துக் கொண்டு முப்பால இயற்றியதில் தனித்தன்மை ஏதுமில்லை. மேலும் நான்காவது உறுதிப் பொருளான வீடுபேற்றை அவர் இடையிடையே பல குறட்பாக்களில் மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார் என்பதும் யாவரும் அறிந்ததே.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard