தென்னிந்தியக் கல்வெட்டுகள் (South Indian Inscription) என்கிற 27 தொகுதிகளை மிகக் கவனமாக தொகுத்தளித்த புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் கூல்ட்ச் (Hultzsch) என்பவர், முதலாம் கயவாகு மன்னனும், சேர மன்னன் செங்குட்டுவனும் ஒரே காலத்தவர் என்கிற கருத்தை ஏற்கத் தயங்கினார் எனவும், சேரன் செங்குட்டுவன் காலத்தில் வாழ்ந்த ஈழ மன்னன் கயவாகு மகாவம்சத்தில் கூறப்படும் முதலாம் கயவாகு தான் என்று முதன்முதலில் கருதப்பட்டபோது கூல்ட்ச் இக்கருத்தை ஏற்றுக் கொள்ள வில்லை. “வேறு பல காரணங்களும் காட்டப்பட்டு, ஈழ நாட்டு வரலாற்றின் கால வரையறை மேலும் நன்கு ஆராயப்பட்டால் அன்றி இக்கருத்தை ஏற்க முடியாது” என அவர் கூறியுள்ளார்(1).
செங்குட்டுவனும் கயவாகுவும் ஒரே காலத்தவர் என்கிற சிலப்பதிகாரத்தின் கூற்றை ஏற்பதா அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட குறிப்புகளின் அடிப்படையாலும், கற்பனை அடிப்படையாலும் எழுதப்பட்ட நூல் என்கிற காரணத்தால் இதன் கூற்றை நம்பத்தகாததென்று புறக்கணிப்பதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது என்கிறார் நீலகண்ட சாத்திரி அவர்கள். பின் இறுதியாக வேறு புறக்கணிக்க முடியாத பல முக்கியக் காரணங்கள் கிடைத்துள்ளன எனக் கூறும் அவர்,சங்க இலக்கியத் தொகுப்புரைகளும், கிறித்துவ சகாப்தத்தின் முதல் நூற்றாண்டுகளைச் சேர்ந்த பெரிப்ளசு, தாலமியின் நிலநூல் போன்ற கிரேக்க நூல்களில், காணப்படும் தென்னிந்தியாவைப் பற்றிய குறிப்புகளும், தென்னிந்தியாவின் பல பாகங்களிலும் காணக் கிடைக்கும் உரோமபுரி நாணயங்களும் ஒத்த செய்திகளையே தருகின்றன. இதனைப் பாரபட்சமின்றி நோக்கும் ஆராய்ச்சியாளர் எவரையும் தமிழ் இலக்கியத் தொகுப்புகளும், கிரேக்க நூல்களும், உரோமபுரி நாணயங்களும் ஒரே காலத்தவை என்ற முடிவிற்கே அழைத்துச் செல்லும் என்று முடிக்கிறார் சாத்திரி அவர்கள்-(2).
மகாவம்சம் கூறுவதையும் சிலப்பதிகாரம் கூறுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது எனக்கூறிய கூல்ட்ச் அவர்களின் கருத்தை ஏற்றுக்கொண்ட சாத்திரிகள், வேறு பல காரணங்கள் இருப்பதால் அதனை ஏற்றுக் கொள்ளாலாம் என்கிற முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது. பெரிப்ளஸ், தாலமி ஆகிய கிரேக்க ஆசிரியர்கள் கி.பி முதல் நூற்றாண்டைச் சார்ந்தவர்கள், தென்னிந்தியாவில் கிடைக்கும் உரோம நாணயங்கள் கி.பி முதல் நூற்றாண்டைச் சார்ந்தவை. சங்க இலக்கியத் தொகுப்புகளும் கி.பி முதல் நூற்றாண்டு முதல் தொடங்குகிறது. எனவே, சிலப்பதிகாரம் கூறுவதையும், மகாவம்சம் கூறுவதையும் ஏற்றுக் கொள்ளாலாம் என்பதே சாத்திரி அவர்களின் கருத்தாக இருந்துள்ளது.
தமிழரசுகள் மேற்குலகோடு கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே வணிகம் புரிந்து வருகின்றன. தமிழர்களும், அரேபியர்களும் பருவக்காற்றை முன்பே அறிந்து பயன்படுத்தி வந்தனர். உரோம் பேரரசு உருவாகிய பின், பருவக் காற்றை உரோமர்கள் அறிந்தபின் இந்த வணிகம் பலமடங்கு அதிகமாகியது. உரோமப் பேரரசின் நாணயங்கள் அதனால் அதிகமாகக் கிடைக்கின்றன. ஆனால் உரோம் அரசு “குடியரசு” ஆக இருந்த பொழுது அச்சடித்த நாணயங்களும், கிரேக்க நாணயங்களும், பிற உலக இந்திய நாணயங்களும் கி.மு.3ஆம் நூற்றாண்டு முதல் கி.மு.1 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் இன்றும் நிறையக் கிடைக்கின்றன. சுகாஃப், கென்னடி, வின்சென்ட் சுமித் ஆகிய வெளிநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் தமிழகம் கி.மு.6 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே உலக நாடுகளோடு வணிகம் புரிந்து வந்தது எனவும், கி.மு.6 ஆம் நூற்றாண்டிலிருந்து இவ்வணிகம் இடைவிடாது தொடர்ந்து நடந்து வந்துள்ளது எனவும் கூறுகின்றனர். இதனைச் சாத்திரி அவர்களும் ஏற்றுக்கொள்கிறார்-(3).
இன்று முனைவர் திரு.கா.இராசன் போன்றவர்களின் ஆய்வுகள் கி.மு.3ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர்கள் தொழில்நுட்பத்திலும், பொருளாதாரத்திலும், வணிகத்திலும் வளர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர் என்பதை உறுதிப் படுத்துகின்றன. கொற்கை, அழகன்குளம், முசிறி, கொடுமணல் போன்ற பல நகரங்கள் கி.மு.4 ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே உலக நாடுகளோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்தன என்பதும் அகழாய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது-(4). ஆகவே கி.பி. முதல் நூற்றாண்டுக்குப் பின் தான் மேற்குலகோடு வணிகத் தொடர்பு இருந்தது. கி.பி. முதல் நூற்றாண்டு உரோம நாணயங்கள் தான் தமிழகத்தில் கிடைக்கின்றன. சங்க இலக்கியத் தொகுப்புகள் கி.பி. முதல் நூற்றாண்டு முதல் தான் தொடங்குகிறது. எனவே, சிலப்பதிகாரம், மகாவம்சம் போன்ற நூல்களில் இருந்து பெறப்படும் கருத்துகள் ஏற்றுக்கொள்ளக் கூடியவை என்பது இன்று பொருந்தாது.
சங்க இலக்கியத்தில் மாமூலனார் கூறும் நந்தர்கள், மௌரியர்கள் குறித்த நிகழ்வுகள் அசோகருக்கு முந்தியவை எனவும் அவை நம்பத் தகுந்தவை எனவும் சாத்திரி அவர்கள் தெரிவிக்கிறார்-(5). இவைபோக அசோகரின் கல்வெட்டுகள், காரவேலனின் கல்வெட்டுகள், மெகத்தனிசு, சாணக்கியர் ஆகியவர்களின் நூல்குறிப்புகள் முதலியன மூவேந்தர் அரசுகளும், சங்க இலக்கியங்களும் கி.மு.3 ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இருந்து வருகின்றன என்பதை உறுதி செய்கின்றன. சங்க இலக்கியக் கணிப்புப்படி சங்ககால வேந்தர்களின்காலம் கி.மு.350-50 வரையான 300 ஆண்டுகள் ஆகும். அதன்பின் சங்கம் மறுவிய காலம் 300 ஆண்டுகள் (கி.மு.50-கி.பி.250). அதன் பின்னர் வருகிற களப்பிரர்கள் காலம் 300 ஆண்டுகள் (கி.பி. 250-550) ஆகும். ஆகவே, கி.பி 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலங்கை மன்னன் முதலாம் கயவாகு, சேரன் செங்குட்டுவனின் சம காலத்தவனாக இருக்க முடியாது.
மேலும்,
1) மௌரியப் பேரரசு காலத்திலேயே, ஏன் அதற்கும் சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழரசுகள் பெரும் கடற்படைகளைப் பராமரித்து வந்தன என்கிறார் புகழ் பெற்ற இந்திய வரலாற்று அறிஞர் வின்சென்ட் சுமித் அவர்கள்-(6).
2) கலிங்க மன்னன் காரவேலனின் கல்வெட்டு, கலிங்கத்தின் தென்கிழக்கே அமைந்துள்ள கலிங்கத்தின் இரண்டாவது பெரிய துறைமுக நகரான “பித்துண்டா” நகர் தமிழரசுகளின் ஐக்கிய கூட்டணியின் கீழ் கி.மு.2 ஆம் நூற்றாண்டுக்கு, முன்பிருந்தே இருந்து வந்துள்ளது என்கிறது-(7).
3) கி.மு. 4ஆம், 3ஆம் நூற்றாண்டுக்குரிய மாமூலனார் அவர்கள், தக்காணப் பகுதி என்கிற மொழிபெயர்தேயம் மூவேந்தர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தான் இருந்து வந்தது என்று கூறியுள்ளார்-(8).
4) சங்க இலக்கியத்தில் உள்ள நந்தர்கள், மௌரியர்கள், பாடலிபுத்திரம் குறித்த பாடல்களும், பிற சங்க இலக்கியக் குறிப்புகளும், தொல்லியல், நாணயவியல், மொழியியல், கல்வெட்டியல், பிற வெளிநாட்டுத் தரவுகள் முதலியனவும் தமிழரசுகள் கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இருந்து வருகின்றன என்பதையும் அவை கி.மு.மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே உலகளாவிய அளவில் வணிகம் செய்து வருகின்றன என்பதையும் உறுதிப் படுத்துகின்றன.
ஆகவே மேற்கண்ட நான்கு தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, தமிழர்கள் உலக நாடுகளோடு கொண்டிருந்த வணிகமும், மூவேந்தர் ஆட்சியும் கி.மு. 5ஆம் நூற்றாண்டு முதல் இருந்து வருகின்றன எனலாம். சாத்திரி அவர்கள் அதே நூலில் “சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகள் எந்த அளவுக்கு வரலாற்று அடிப்படையானவை என்றும், கதையைச் சுவைபட சொல்லுவதற்காக எவ்வளவு கற்பனை கலக்கப்பட்டது என்றும் சொல்லுவதற்கில்லை” என்பதையும் தெரிவித்துள்ளார்(9).
ஆகவே, சிலப்பதிகாரப் பதிகம் கூறும் கயவாகு குறித்தக் கூற்றை நாம் ஏற்க முடியாது. சேரன் செங்குட்டுவன் வாழ்ந்த காலத்திற்கு (கி.மு.3 ஆம் நூற்றாண்டு) நான்கு நூற்றாண்டுகள் கழித்து சிலப்பதிகாரம் எழுதப்பட்டுள்ளது. இடைச்செருகல்கள் பல, அதில் சேர்க்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. எனவே, கயவாகு பற்றிய தகவல்கள் இடைச்செருகல் களாகத்தான் இருக்க வேண்டும். சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலத்திலிருந்த இலங்கை மன்னனை காப்பியத்திற்குள் வேண்டுமென்றே கொண்டு வந்திருக்க வேண்டும். எனவே சிலப்பதிகாரக் காப்பியத்தில் உள்ள கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றைக் கணிக்க முடியாது. பண்டைய சங்க இலக்கியங்களோடு ஒத்துப் போகும் நிகழ்வுகளை மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ள முடியும். ஆகவே, மகாவம்சம் குறிப்பிடும் கயவாகுவின் காலமும் சரி, அந்தக் கயவாகு சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்காக நடத்திய விழாவில் கலந்து கொண்டான் என்கிற செய்தியும் சரி, இரண்டுமே அடிப்படை வரலாற்றுச் சான்றுகள் அற்றவை. அவை வரலாற்றுக்கு பொருந்தாதவை.
ஆகவே, அவைகளைக் கொண்டு தமிழக வரலாற்றின் காலங்களைக் கணிப்பது என்பது சரியானதாகவோ, முறையானதாகவோ இருக்காது. மாமூலனார் பாடல்களையும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள மகதத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுக்கான குறிப்புகளையும், அதன்பின் தமிழகத்தின்மேல் மேற்கொள்ளப்பட்ட மௌரியப் படையெடுப்பையும், அசோகன் கல்வெட்டையும் கணக்கில்கொண்டு, நமது தமிழக வரலாற்றுக்கான காலத்தை உறுதிப்படுத்துவது என்பது உலக வரலாற்றுக் காலத்தோடு இணைக்கப்பட்ட சான்றுகளோடு கூடிய, வரலாற்றுக்காலமாக ஆகும்.
சேரன் செங்குட்டுவனின் காலம்:
அ) சம்பை கல்வெட்டு:
“இன்றும் பரணன் பாடினன் மற்கொல் மற்றுநீ முரண்மிகு கோவலூர் நூறி”(10)
என அதியமான் திருக்கோவிலூர்ப் போரில் மலையமான் காரியை வென்ற போது, பரணர் அவனைப் பாடியுள்ளதாக ஔவையார் குறிப்பிடுகிறார். ஆகவே, பரணர் அதியமான் காலத்தவர் ஆகிறார். அதியமானின் சம்பைக் கல்வெட்டு, அவன் மலையமான் காரியை வென்றபோது வெட்டப்பட்டது. அதன் காலம் நடன காசிநாதன் அவர்களின் கருத்துப்படி கி.மு. 270-230 ஆகும்-(11). ஆதலால் அதியமான், அவனைப்பாடிய பரணர் ஆகியவர்களின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு ஆகிறது. பரணர் சேரன் செங்குட்டுவனை, 5ஆம் பதிற்றுப்பத்திலும், புறம்-212, 369; அகம்-376 ஆகிய மூன்று பாடல்களிலும் பாடியுள்ளார். ஆகவே, சேரன் செங்குட்டுவன், அதியமான், பரணர் ஆகியோர் சம காலத்தவர் ஆகின்றனர். சம்பை கல்வெட்டுப்படி, அதியமான் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதால் அவனது சம காலத்தவர்களான சேரன் செங்குட்டுவனும், பரணரும் கி.மு. 3ஆம் நூற்றாண்டு ஆகின்றனர்.
ஆ) அசோகன் கல்வெட்டும் சம்பை கல்வெட்டும்:
சம்பைக் கல்வெட்டும், அசோகர் கல்வெட்டும் ஒரே வகையான எழுத்து வகையை சேர்ந்தது ஆகும். சம்பைக் கல்வெட்டில் உள்ள “சthiதியபுதோ” என்கிற சொல்லும் அசோகர் கல்வெட்டில் உள்ள “சதியபுதோ” என்கிற சொல்லும் ஒரே மாதிரி எழுதப்பட்டுள்ளது. இரண்டும் அதியமான்களை அவர்களது பரம்பரையைத் தான் குறிப்பிடுகிறது. ஆகவே, இரண்டும் ஒரே காலத்தைச் சேர்ந்தவை ஆகும். அசோகர் கல்வெட்டின் காலம் கி.மு.256 ஆகும். அதியமானின் சம்பைக் கல்வெட்டின் காலம் தொல்லியல் அறிஞர் நடன காசிநாதன் அவர்களின் கருத்துப்படி கி.மு. 270-230 ஆகும். அதாவது அசோகன் கல்வெட்டுக்குச் சில வருடங்கள் முன்பின் என்பதே அதன் கருத்தாகும்(12). நாம் அதனை கி.மு. 3ஆம் நூற்றாண்டு எனலாம். ஆகவே சம்பைக் கல்வெட்டை வெட்டிய அதியமானும், அதியமானைப்பாடிய பரணரும், பரணர் பாடிய சேரன் செங்குட்டுவனும் அசோகன் கல்வெட்டு, சம்பை கல்வெட்டு ஆகியவற்றின் காலமான கி.மு. 3ஆம் நூற்றாண்டு என ஆகின்றனர்.
இ) இலக்கியக்கணிப்புப்படி:
மாமூலனார் அவர்கள் மகத நாட்டு நந்தர்கள், மௌரியர்கள் காலத்திற்குரியவர். அவரது பாடல்கள் மகத அரசில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை வெளிப்படுத்துகின்றன. மகத அரசில் நந்தர்கள் ஆட்சி முடிந்து மௌரியர்கள் ஆட்சி தொடங்குவதும், மௌரியர்களின் தக்காணப் படையேடுப்பும் மாமூலனார் பாடல்களில் சொல்லப்பட்டுள்ளன-(13). அக்காலம் கி.மு. 4ஆம் 3ஆம் நூற்றாண்டு ஆகும். மாமூலனார் பாடிய முதல் கரிகாலனையும், எவ்வி-1 என்பவனையும், கழார்த்தலைவன் மத்தி என்பவனையும், பாணன் என்பவனையும் பரணரும் பாடியுள்ளார். ஆனால் மாமூலனார் பாடிய முதல் கரிகாலனுக்கு முந்தைய உதியஞ்சேரலாதனை, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பரணர் பாடவில்லை. நந்தர்கள், மௌரியர்கள் குறித்தும் மௌரியர்களின் படையெடுப்பு குறித்தும் பரணர் பாடவில்லை.
ஆனால் அவர்களுக்குப் பிந்தைய மாமூலனாரால் பாடப்பட முடியாத சேரன் செங்குட்டுவன், நம்பி நெடுஞ்செழியன், பசும்பூன்பாண்டியன், உறையூர் தித்தன் வெளியன் போன்ற பலரை அவர் பாடியுள்ளார். இவர்கள் அனைவரும் மாமூலனாருக்குப் பின் வந்தவர்கள். ஆகவே, மாமூலனாரை விடப் பரணர் இளையவர் ஆகிறார். அதாவது, மாமூலனார் முதியவராக இருந்தபொழுது பரணர் இளையவராக இருந்துள்ளார். எனவே, மாமூலனார் கி.மு. 4ஆம் 3ஆம் நூற்றாண்டு எனில், பரணர் கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு உரியவர் ஆகிறார். ஆதலால் பரணரால் பாடப்பட்ட சேரன் செங்குட்டுவனும் கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு உரியவன் ஆகிறான்.
ஈ) பதிற்றுப்பத்துப்படி:
பதிற்றுப் பத்து, பத்து சேர வேந்தர்களின் வரலாற்றைத் தொகுத்துத் தருகிறது. அதன் முதல் வேந்தன் உதியஞ்சேரலாதன் ஆவான். ஆனால் இவன் குறித்துப் பாடிய பதிற்றுப்பத்துப் பாடல்கள் கிடைக்கவில்லை. அவனுக்குப் பின் இரண்டாவது பத்தில் வருபவன் உதியனின் மகன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். மூன்றாவது பத்தில் வருபவன் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனின் தம்பி பல்யானைச் செல்குழுகுட்டுவன். நான்காவது பத்தில் வருபவன் வேந்தன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மூத்த மகன் களங்காய்கண்ணி நார்முடிச் சேரல் ஆவான். ஐந்தாவது பத்தில் வருபவன்தான் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகனும், நார்முடிச் சேரலின் தம்பியுமான சேரன் செங்குட்டுவன் ஆவான். பதிற்றுப்பத்தின் முதலிரண்டு சேர வேந்தர்களான உதியஞ்சேரலாதனையும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனையும் மாமூலனார் பாடியுள்ளார். அவர், முன்பு நாம் கூறியவாறு கி.மு. 4ஆம் 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் ஆவார். ஆதலால் அவரால் பாடப்பட்ட, உதியஞ்சேரலாதனும், அவனது மகன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் கி.மு.4 ஆம் 3ஆம் நூற்றாண்டு ஆகின்றனர். மாமூலனார் சேரன் செங்குட்டுவனைப் பாடவில்லை. அவன் வேந்தன் ஆவதற்கு முன்பே அவர் இறந்து விட்டார். ஆகவே, உதியஞ்சேரலாதனும், அவனது மகன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் கி.மு. 4ஆம் 3ஆம் நூற்றாண்டு என்பதால் உதியஞ்சேரலாதனின் பேரனும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகனும் ஆன சேரன் செங்குட்டுவன், கி.மு. 3ஆம் நூற்றாண்டு ஆகிறான்.
உ) புகளூர் கல்வெட்டு:
சேரன் செங்குட்டுவனின் தமையனான களங்காய்கண்ணி நார்முடிச் சேரல் ஏழிற்குன்ற நன்னன் ஒருவனோடு போர் புரிந்து அவனைத் தோற்கடித்ததை 4ஆம் பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது. பொறையர்குலச் சேர அரசனான பாலைபாடிய பெருங்கடுங்கோ ஏழிற்குன்ற நன்னன் ஒருவனை நற்றிணை 391இல் பாடியுள்ளான். களங்காய்கண்ணி நார்முடிச்சேரலுக்கு முன் இருந்த நன்னனைத்தான் இந்தப் பெருங்கடுங்கோ பாடியிருக்கவேண்டும்(14). பாலைபாடிய பெருங்கடுங்கோவும், களங்காய்கண்ணி நார்முடிச் சேரலும் சேர மன்னர்கள் என்பதால், சேரனோடு பகை கொண்ட நன்னன் ஒருவன் மீது அதே காலத்திய சேர அரசன் ஒருவன் பாடியிருக்க முடியாது. மேலும் நார்முடிச் சேரலுக்குப் பின் வந்த நன்னன்கள் யாரும் சேர அரசன் பாடும் அளவு புகழ்பெற்றவர்களாக இருக்கவில்லை. ஆதலால் பாலைபாடிய பெருங்கடுங்கோ, நார்முடிச் சேரலுக்கு முன்பு இருந்த நன்னனைத்தான் பாடியிருக்க வேண்டும். ஆகவே பாலைபாடிய பெருங் கடுங்கோ பாடிய நன்னன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் காலத்தில் சேரர்களின் படைத்தலைவனாக இருந்த நன்னன்-1 என்பவனே ஆவான்.
ஆகவே இமயவரம்பன் காலத்தில் இருந்த நன்னனைப்பாடிய பொறையர் குலச்சேரனான பாலைபாடிய பெருங்கடுங்கோவின் காலம் என்பது இமயவரம்பனின் காலமான கி.மு. 4ஆம் 3ஆம் நூற்றாண்டு ஆகும். பாலைபாடிய பெருங்கடுங்கோ ஏழிற்குன்ற நன்னனை ‘நன்னன் நன்னாட்டு ஏழிற்குன்றம்’ என நற்றினை 391இல் பாடியுள்ளார். மாமூலனாரும் இந்த நன்னனை ‘நன்னன் நன்னாட்டு ஏழிற்குன்றம்’ எனத் தனது அகம் 349ஆம் பாடலில் பாடியுள்ளார். ஆக இருவரும் நன்னன் ஒருவனை ஒரேமாதிரி நல்நாட்டு ஏழிற் குன்றத்துக்குரியவன் எனப் பாடியுள்ளதால் இருவரும் ஒருவனையே பாடியுள்ளனர் என முடிவு செய்யலாம். ஆகவே பாலைபாடிய பெருங்கடுங்கோவின் காலமான கி.மு. 4ஆம், 3ஆம் நூற்றாண்டு என்பதுதான் மாமூலனாரின் காலமும் ஆகும்.
புகளூர் கல்வெட்டு(PUGALUR) இளங்கடுங்கோ என்பவனால், அவனது தந்தை பெருங்கடுங்கோ என்பவன் கருவூர் பொறயர் குல அரசனாக இருந்த போது வெட்டப்பட்டதாகும். அதில் இந்தப் பெருங்கடுங்கோவின் தந்தையாக கோ ஆதன் சேரல் இரும்பொறை என்பவன் குறிப்பிடப் பட்டுள்ளான். ஆக மூன்று பொறையர் குல சேரர்களின் பெயர் புகளூர் கல்வெட்டில் இடம் பெறுகிறது. முன்னாள் அகழாய்வு இயக்குனர் நடன காசிநாதன் அவர்கள் புகளூர் கல்வெட்டின் காலம், பட்டிப்பொருளு கல்வெட்டுக்கு(BHATTIPORULU INSCRIPTION) முந்தைய காலம் எனவும், பட்டிப்பொருளு கல்வெட்டின் காலம் கி.மு. 290-270 எனவும் கூறுகிறார்(15). ஆகவே நாம் பட்டிப்பொருளு கல்வெட்டின் காலத்தை அதன் கீழ் எல்லைக் காலமான கி.மு. 270 வாக்கில் எனக்கொண்டு, புகளூர் கல்வெட்டின் காலத்தை அதற்கு முந்தைய கி.மு. 4ஆம், 3ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம். ஆகவே புகளூர் கல்வெட்டில் இடம்பெற்றுள்ள பெருங்கடுங்கோவின் காலம் கி.மு. 4ஆம், 3ஆம் நூற்றாண்டு எனலாம். இதற்கு முன்பே பாலைபாடிய பெருங் கடுங்கோவின் காலம் என்பது மாமூலனார், இமயவரம்பன் ஆகியவர்களின் காலமான கி.மு. 4ஆம் 3ஆம் நூற்றாண்டுதான் என நாம் கண்டறிந்துள்ளோம். ஆகவே சங்க இலக்கியக் கணிப்புப் படியான பாலைபாடிய பெருங் கடுங்கோவின் காலமும், புகளூர் கல்வெட்டில் இடம்பெற்றுள்ள பெருங்கடுங்கோவின் காலமும் பொருந்திப் போகிறது எனலாம்.
புறம்-11 இல், பாலை பாடிய பெருங்கடுங்கோ பொறையர் குல சேர அரசன் என்பது சொல்லப்பட்டுள்ளது. புகளூர் கல்வெட்டுப் பெருங் கடுங்கோவும் பொறையர்குலச் சேரஅரசனே ஆவான். இருவரும் பெருங்கடுங்கோ என்கிற பெயரை பெற்றவர்களாக உள்ளனர். பெருங்கடுங்கோ என்கிற இயற்பெயரைப்பெற்ற பொறையர்குலச் சேர அரசர்கள் இவனைத்தவிர வேறுயாரும் இல்லை. மேலும், முக்கியமாக நமது கணிப்புப் படி, இருவரும் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். ஆகவே புறம்-11இல் இடம் பெற்ற பாலைபாடிய பெருங்கடுங்கோவும், புகளூர் கல்வெட்டில் இடம்பெற்ற பெருங்கடுங்கோவும் ஒருவரே ஆவர். முன்பு கூறியபடி, பாலைபாடிய பெருங்கடுங்கோவும், மாமூலனாரும் ஒரே காலம் என்பதால் இருவரும் புகளூர் கல்வெட்டுக் காலத்தைச் சேர்ந்தவர்கள் ஆகின்றனர். ஆதலால் இருவரும் புகளூர் கல்வெட்டுக் காலப்படி, கி.மு. 4ஆம் 3ஆம் நூற்றாண்டு ஆகின்றனர். ஆகவே மாமூலனாருக்கு இளையவரான பரணரின் காலமும் பரணரால் பாடப்பட்ட சேரன் செங்குட்டுவனின் காலமும் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என ஆகிறது.
ஊ) தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள்:
சங்ககாலத் தலைவடிவப் பெருவழுதி நாணயங்களும் கிடைத்துள்ளன. கிரேக்கத்தொடர்பின் அடிப்படையில் அவற்றின் காலத்தை கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலம் என்கிறார் தினமலர் ஆசிரியரும், நாணயவியல் ஆய்வாளருமான இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்-(16). கி.மு. 4ஆம் 3ஆம் நூற்றாண்டு காலத்துப் பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதிக்குப் பின் பெருவழுதி என்கிற பெயர்கொண்ட பாண்டிய வேந்தர்கள் உக்கிரப் பெருவழுதியும், அதன்பின் வந்த வெள்ளியம் பலத்துஞ்சிய பெருவழுதியுமே ஆவர். இடையில் யாரும் பெருவழுதி என்கிற பெயர் கொண்டவர்கள் இல்லையாதலால் இந்தத் தலைவடிவ நாணயங்கள் இவர்களால் தான் வெளியிடப்பட்டவைகளாகும். ஆகவே நாணயவியல் ஆய்வாளரான இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கருத்துப் படி அவர்களின் காலம் கிமு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியாகும்.
ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் இறந்த போது, அவனது மனைவி தேவி பெருங்கோப்பெண்டு உடன்கட்டை ஏறி தீப்பாய்ந்து இறந்த போனார். மதுரைப் பேராலவாயர் என்கிற சங்ககாலப் புலவர் அதை நேரடியாகப் பார்த்துப் பாடியபாடல்தான் புறம் 247ஆம் பாடலாகும். அதே மதுரைப் பேராலவாயர் பாண்டிய வேந்தன் வெற்றிவேற்செழியனை அகம் 296ஆம் பாடலில் பாடியுள்ளார். அதன் மூலம் ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியனும், வெற்றிவேற் செழியனும் சம காலத்தவர் ஆகின்றனர். இந்த ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் பொதியல் திதியன் என்கிற குறுநில மன்னனை அகம் 25இல் பாடியுள்ளான். இந்தப் பொதியல் திதியனைப் பரணர் அகம் 322இல் பாடியுள்ளார். ஆகவே பூதப் பாண்டியனும், வெற்றிவேற் செழியனும், பரணரும் சமகாலத்தவர் ஆகின்றனர். பரணர், சேரன் செங்குட்டுவன் காலத்தவர் என்பதால் வெற்றிவேற் செழியன் சேரன் செங்குட்டுவனின் சமகாலத்தவன் ஆகிறான்.
சங்க கால இலக்கியத்தரவுகளின்படி, வெற்றிவேற் செழியனுக்குப் பின் பசும்பொன்பாண்டியன், அறிவுடை நம்பி, பழையன் மாறன், தலையாலங்கானத்துச் செறுவென்ற நெடுஞ்செழியன், இளவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் ஆகியவர்கள் பாண்டிய வேந்தர்களாக இருந்துள்ளனர். அதற்குப்பின்னர் தான் பெருவழுதி எனப்பெயர்கொண்ட உக்கிரப் பெருவழுதியும், அதன்பின் வெள்ளியம்பலத்துஞ்சிய பெருவழுதியும் பாண்டிய வேந்தர்களாக ஆகின்றனர். அதாவது பாண்டியன் உக்கிரப் பெருவழுதிக்குமுன் ஆறாவது தலைமுறையைச் சேர்ந்தவன் தான் சேரன் செங்குட்டுவனின் சமகாலத்தவனான வெற்றிவேற் செழியன் ஆவான். ஆறு தலைமுறை எனில் உக்கிரப் பெருவழுதிக்கு கிட்டத்தட்ட 120 ஆண்டுகள் முந்தையவன் தான் வெற்றிவேற் செழியன் ஆவான். உக்கிரப் பெருவழுதியின் காலம் நாணயவியல் ஆய்வாளரான இரா. கிருஷ்ண மூர்த்தி அவர்களின் கருத்துப்படி கிமு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி என்பதால், சேரன் செங்குட்டுவனின் சம காலத்தவனான வெற்றிவேற் செழியனின் காலம் அதற்குக் கிட்டத்தட்ட 120 ஆண்டுகள் முந்தையதாகும். அதாவது கி.மு 3ஆம் நூற்றாண்டு ஆகும். ஆக இதன்படியும் சேரன் செங்குட்டுவனின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
பார்வை:
1, 2.நீலகண்ட சாத்திரி, சோழர்கள், தமிழில் கே.வி. இராமன், புத்தகம்-1, நவம்பர்-2009, பக்: 4, 69.
3. “ “ பக்: 28, 38.
4.தொல்லியல் நோக்கில் சங்ககாலம் முனைவர் கா.இராசன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2010. பக்: 79-130.
5.நீலகண்ட சாத்திரி, சோழர்கள், தமிழில் கே.வி. இராமன், புத்தகம்-1, நவம்பர்-2009, பக்: 27, 28.
6. வின்சென்ட் ஆர்தர் சுமித்(Vincent.A.Smith), ‘அசோகர்-இந்தியாவின் பௌத்தப் பேரரசர்’ (Ashoka – The Budhist Emperor of India), தமிழில் சிவ. முருகேசன், சந்தியா பதிப்பகம், 2009.பக்: 79.
7.www.jatland.com/home/Hathigumpha- inscription &சதானந்த அகர்வால் அவர்கள் சமற்கிருதத்தில் எழுதிய “சிரிகாரவேலா” என்கிற நூலிலிருந்து இணையதளம் வழியாக இப்பகுதி எடுக்கப்பட்டுள்ளது.&en.m.wikipedia.org/wiki/kalinga_india , Hathigumpha inscription of kharavela of kalinga
8.மாமூலனார் அகநானூற்றூப்பாடல் எண்: 31.
9. நீலகண்ட சாத்திரி, சோழர்கள், தமிழில் கே.வி. இராமன், புத்தகம்-1, நவம்பர்-2009, பக்: 78.
10.அதியமானைப் பாடிய பரணர் குறித்து ஔவையார் பாடிய புறநானூற்றுப்பாடல்: 99.
11, 12.TAMILS HERITAGE - NATANA KASINATHAN, APRIL-2006, PAGE: 25-30.
13.மாமூலனார் பாடல்கள், அகம்: 251, 265, 281.
14.ஔவை துறைசாமி பிள்ளை, தமிழக வரிசை-4, சேரமன்னர் வரலாறு, பக்: 233, 234. 7
15.TAMILS HERITAGE - NATANA KASINATHAN, APRIL-2006, PAGE: 25-30.
16.இரா. கிருஷ்ணமூர்த்தி, பாண்டியர் தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள், மூன்றாம் பதிப்பு-2013, பக்: 91.