Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள்‌ அமைப்பு


Guru

Status: Offline
Posts: 7387
Date:
திருக்குறள்‌ அமைப்பு
Permalink  
 


திருக்குறள்‌ அமைப்பு

திருக்குறளிலே ஆயிரத்து முந்நூற்றுமுப்பது குறட்பாக்கள்‌ இருக்கின்றன. ஒவ்வொரு பாட்டும்‌ இரண்டு இரண்டு அடிகளைக்‌ கொண்டது. பாடல்களில்‌ ஒருவகைப்‌ பாடலுக்கு வெண்பா என்று பெயர்‌. இரண்டு அடிகள்‌ கொண்ட வெண்பாவுக்குக்‌ குறள்‌ வெண்பா என்று பெயர்‌ வந்தது. இதன்‌ சிறப்பைக்‌ குறிக்கத்‌ திரு என்ற அடைமொழி சேர்ந்தது; திருக்குறள்‌ ஆயிற்று.

இதில்‌ உள்ள அதிகாரங்கள்‌ நூற்று முப்பத்து மூன்று. ஓவ்வொரு அதிகாரத்திற்கும்‌ பத்துப்‌ பத்து வெண்பாக்கள்‌. ஓவ்வொரு அதிகாரத்திற்கும்‌, கடவுள்‌ வாழ்த்து, வான்‌ சிறப்பு, நீத்தார்‌ பெருமை, அறன்‌ வலியுறுத்தல்‌ என்பன போன்ற தலைப்புப்‌ பெயர்‌ உண்டு.

இந்த அதிகார அமைப்பும்‌, ஓவ்வொரு அதிகாரத்திற்கும்‌ பத்துப்‌ பத்துப்‌ பாடல்கள்‌ என்ற வரையறுப்பும்‌ திருவள்ளுவரா லேயே அமைக்கப்பட்டதா என்பதில்‌ ஐயம்‌ உண்டு. திருவள்ளுவர்‌ மொத்தமாகத்தான்‌ பாடல்களைப்‌ பாடியிருக்கவேண்டும்‌; உரையாசிரியர்கள்‌ தான்‌ அதிகாரம்‌ வகுத்திருக்க வேண்டும்‌; என்று எண்ணுகின்றனர்‌ சில அராய்ச்சியாளர்கள்‌. இதற்கு நாலடியாரை உதாரணம்‌ காட்டுவர்‌; பழமொழி நானூறு என்னும்‌ நூலையும்‌ உதாரணம்‌ காட்டுவர்‌.

நாலடி நானூறு என்ற பெயரில்‌ நாலடியார்‌ பாடல்கள்‌ மொத்தமாகத்தான்‌ இருந்தன. அதற்கு உரை வகுத்த பதுமனார்‌ என்னும்‌ புலவரே நாற்பது அதிகாரங்களாகப்‌ பிரித்தார்‌. அதிகாரத்திற்குப்‌ பத்துப்‌ பாடல்கள்‌ வீதம்‌ பிரித்தமைத்தார்‌. பழமொழியும்‌ அதிகாரப்‌ பிரிவின்றி நானூறு பாடல்களும்‌ மொத்தமாகத்தான்‌ இருந்தன. பிற்காலத்தினரே அதற்கும்‌ அதிகாரம்‌ வகுத்தனர்‌. இது போலத்தான்‌ திருக்குறளும்‌ பிற்‌காலத்தாரால்‌ அதிகாரம்‌ அதிகாரமாகப்‌ பிரிக்கப்பட்டி ருக்க வேண்டும்‌ என்பர்‌. இது ஆராய்ச்சிக்கு உரியது.

திருக்குறளுக்கு முப்பால்‌ என்பது ஒரு பெயர்‌. அறத்துப்‌ பால்‌, பொருட்பால்‌, காமத்துப்பால்‌ என்பன அம்‌ முப்பகுதி. இவ்வாறு மூன்று பகுதியாகத்‌ திருவள்ளுவரே இயற்றியிருக்க வேண்டும்‌. ஓவ்வொரு பகுதியிலும்‌ அதிகாரங்கள்‌ வகுத்தது மட்டும்‌ பிற்காலத்தினரால்‌ இருக்கலாம்‌ என்போரும்‌ உண்டு.

திருவள்ளுவர்‌ மூன்று பகுதியாகப்‌ பிரித்துத்தான்‌ கூறியிருப்பார்‌ என்பதிலே ஐயம்‌ இல்லை. திருக்குறள்‌ முப்பால்‌ என்ற பெயருடன்‌ நீண்ட காலமாக வழங்கி வருகின்றது. பதினெண்‌ கீழ்க்‌ கணக்கு நூல்களிலே முப்பால்‌ என்ற பெயராலேயே திருக்குறள்‌ சுட்டப்படுகின்றது. ஆதலால்‌ முப்பாலாகப்‌ பிரித்துக்‌ கூறியவர்‌ திருவள்ளுவரே என்பதை மறுக்கமுடியாது.

திருக்குறளில்‌ உள்ள முதல்‌ மூன்று அதிகாரங்களும்‌ திருவள்ளுவரால்‌ கூறப்பட்டிருக்க முடியாது. அலைகள்‌ பிற்காலத்துச்‌ சேர்க்கையாக இருக்கலாம்‌ என்போரும்‌ உண்டு. முதல்‌ மூன்று அதிகாரங்கள்‌, கடவுள்‌ வாழ்த்து, வான்‌ சிறப்பு, நீத்தார்‌ பெருமை என்பவை. “கடவுளைப்‌ பற்றி நூலின்‌ உள்ளே பல விடங்களில்‌ கூறப்படுகின்றது. வான்‌ சிறப்பு நாட்டைப்‌ பற்றிச்‌ சொல்லுமிடத்தில்‌ காணப்படுகின்றது; நீத்தார்‌ பெருமை துறவறத்தைப்‌ பற்றிக்‌ கூறும்‌ குறள்களில்‌ காணப்படுகின்றது. ஆகையால்‌ இவைகளுக்குத்‌ தனியதிகாரங்கள்‌ வகுத்திருக்க மாட்டார்‌ வள்ளுவர்‌” என்பதே இவர்கள்‌ காட்டும்‌ காரணம்‌.

இவைகளெல்லாம்‌ அராய்ச்சிக்குரியனவே யன்றி உண்மை யென்று ஓப்புக்கொள்ளுவதற்கு இல்லை. “ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறள்‌” என்று திருவள்ளுவ மாலையில்‌ காணப்‌ படுகின்றது. அதிகார முறைகளும்‌ அதில்‌ காணப்படுகின்றன. ஆதலால்‌, அதிகாரப்‌ பிரிவு வள்ளுவர்‌ பிரித்தது அன்று என்று அவ்வளவு எளிதில்‌ தள்ளிவிட முடியாது. ஓவ்வொரு பாலிலும்‌ இயல்கள்‌ வகுக்கப்பட்டிருக்கின்றன. இவைகள்‌ உரையாசிரியர்களால்‌ வகுக்கப்பட்டி ருக்கலாம்‌. இந்த அளவுக்குத்‌ தான்‌ நாம்‌ ஒப்புக்கொள்ள முடியும்‌.

முதற்பால்‌ முப்பத்தெட்டு அதிகாரங்களைக்‌ கொண்டது. முதல்‌ நான்கு அதிகாரங்கள்‌ பாயிரம்‌ அகும்‌. அதன்‌ பின்‌ இருபது அதிகாரங்கள்‌ இல்லறத்தைப்‌ பற்றிக்‌ கூறுகின்றன. பதின்மூன்று அதிகாரங்கள்‌ துறவறத்தைப்‌ பற்றிக்‌ கூறுகின்றன. ஒரு அதிகாரம்‌ ஊழ்வினையின்‌ வலிமையைப்‌ பற்றி உரைக்கின்றது.

முதல்‌ நான்கு அதிகாரங்களும்‌ பொதுவானவை. எல்லோர்க்கும்‌ பொதுவான செய்திகளைப்‌ பற்றிக்‌ கூறுவன. அதலால்‌ அவற்றைப்‌ பாயிரம்‌ என்றனர்‌.

இல்லறத்தைப்‌ பற்றிக்‌ கூறும்‌ இருபது அதிகாரங்களிலும்‌ குடும்ப வாழ்வைப்‌ பற்றிக்‌ கூறப்படுகின்றது. இல்லறத்திலே இருப்பவர்கள்‌ அன்றாடம்‌ செய்ய வேண்டிய கடமைகள்‌ எடுத்துரைக்கப்படுகின்றன.

இல்லறம்‌ நடத்துவோர்‌ செய்ய வேண்டியவை, இவை யிவையென்று வள்ளுவர்‌ கூறுவனவற்றை எல்லோரும்‌ பின்‌ பற்றி விட முடியாது; இன்றுள்ள சமுதாய அமைப்பு இதற்கு இடந்தராது; எல்லார்க்கும்‌ வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாச்‌ செல்வமும்‌ இருந்தால்‌ தான்‌ வள்ளுவர்‌ காட்டும்‌ வழியிலே நடக்க முடியும்‌. அவர்‌ கூறும்‌ இல்லற தர்மங்களை அப்படியே பின்பற்ற முடியும்‌. வள்ளுவர்‌ காலத்திலே வாழ்ந்த தமிழ்மக்கள்‌ அனைவரும்கூட அவர்‌ காட்டிய இல்லற நெறியை அப்படியே பின்பற்றி நடந்திருக்க முடியாது.

ஆனால்‌, இல்லறத்திலே இருப்பவர்கள்‌ மகிழ்ச்சிகரமான இன்ப வாழ்க்கை நடத்த வேண்டும்‌; பிறருக்கு உதவியுள்ளவர்‌ களாக வாழ வேண்டும்‌; ஒவ்வொரு குடும்பத்திலும்‌ ஒற்றுமை நிலவ வேண்டும்‌; மக்கள்‌ நல்லொழுக்கம்‌ உள்ளவர்களாக நடக்க வேண்டும்‌; என்பவை வள்ளுவர்‌ சொல்லும்‌ பொதுவான கருத்து. இக்கருத்தை எவரும்‌ மறுக்க முடியாது. சிறந்த வாழ்விலே வாழ வேண்டும்‌ என்று ஒவ்வொருவரையும்‌ எண்ணச்‌ செய்வதும்‌, இதற்கு ஊக்க மூட்டுவதும்‌ வள்ளுவர்‌ கூறும்‌ இல்லற தர்மங்‌களாகும்‌...

துறவறத்தைப்‌ பற்றிய அதிகாரங்கள்‌ துறவிகளுக்கு அறிவுறுத்துகின்றன. துறவிகள்‌ எவ்வாறு வாழ வேண்டும்‌? இவர்கள்‌ கடமைகள்‌ யாவை? உண்மைத்‌ துறவிகள்‌ யார்‌? போலித்‌ துறவிகள்‌ யார்‌? இவ்வுண்மைகளை அவ்வதியகாரங்‌களிலே காணலாம்‌. திருவள்ளுவர்‌ துறவிகளுக்கு உரைத்‌திருக்கும்‌ உபதேசங்களிலே பல, பொது ஜன ஊழியர்களுக்கும்‌ பொருந்தும்‌.

இரண்டாவதான பொருட்பாலில்‌ எழுபது அதிகாரங்கள்‌ இருக்கின்றன. இந்தப்‌ பொருட்பாலை அரசியல்‌, அங்கவியல்‌, ஒழிபியல்‌ என்று மூன்றாகப்‌ பிரித்திருக்கின்றனர்‌.

இவற்றுள்‌ அரசியல்‌ இருபத்தைந்து அதிகாரங்களைக்‌ கொண்டது; அளுவோர்க்கு அமைந்திருக்க வேண்டிய பண்புகளைப்‌ பற்றி அறிவிப்பது; அளுவோர்க்குக்‌ கூறியிருக்கும்‌ அறங்கள்‌ பொது மக்களுக்குக்கும்‌ பொருந்துவனவே. 

அங்கவியல்‌ முப்பத்திரண்டு அதிகாரங்களைக்‌ கொண்டது. இவ்வியலில்‌ அளுவோர்க்குத்‌ துணைவர்கள்‌ யாவர்‌? அவர்‌களுடைய தகுதிகள்‌ எப்படியிருக்க வேண்டும்‌? என்பவைகளைப்‌ பற்றிக்‌ கூறுகின்றது. அளுவோர்‌ மிகவும்‌ நல்லவர்களாயிருக்கலாம்‌. சிறந்த அறிவும்‌ திறமையும்‌ உள்ளவர்களாயிருக்கலாம்‌;: ஆயினும்‌ அவர்களுக்குத்‌ துணையாக இருப்பவர்களைப்‌ பொறுத்துத்தான்‌ ஆட்சியிலே வெற்றி தோல்விகள்‌ உண்டு; இந்த உண்மையை எடுத்துக்‌ காட்டுகின்றன இவ்வியலின்‌ அதிகாரங்கள்‌. இவ்‌ வதிகாரங்களில்‌ கூறப்படும்‌ அறங்களும்‌ பொதுமக்கள்‌ பின்பற்ற வேண்டியவைகளே.

ஒழிபியல்‌ பதிமூன்று அதிகாரங்களைக்‌ கொண்டது. அரசியலிலும்‌ அங்க வியலிலும்‌ சொல்லாமல்‌ விட்டுப்‌ போனவைகளைப்‌ பற்றி விளம்புவது ஒழிபியல்‌. இவ்வியலில்‌ கூறப்படும்‌ அறங்களும்‌ ஆளுவோர்க்கும்‌, பொது மக்களுக்கும்‌ பொருந்துவனவாகும்‌.

பொருட்பாலிலே, மூன்று இயல்களாக வகுக்கப்பட்ட எழுபது அதிகாரங்களிலும்‌ சிறந்த அரசியல்‌ கருத்துக்களைக்‌ காணலாம்‌; முற்போக்கான எண்ணங்களைக்‌ காணலாம்‌; அவைகளை வள்ளுவர்‌ எவ்வளவு நயமாகக்‌ கூறுகிறார்‌ என்பதை இவ்வதிகாரங்களை ஆழ்ந்து படிப்போர்‌ அறியலாம்‌. வள்ளுவர்‌ வாழ்ந்த காலத்திலே அவர்‌ ஒரு முற்போக்கான அரசியல்‌ அறிஞர்‌, சிறந்த சமுதாயச்‌ சீர்திருத்தக்காரர்‌; என்பதை இப்‌பொருட்பாலின்‌ வழியாக அறிந்து கொள்ள முடியும்‌.

மூன்றாவதான காமத்துப்பால்‌ இருபத்தைந்து அதிகாரங்‌களை கொண்டது. இதிலே களவியல்‌, கற்பியல்‌ என்று இரண்டு பிரிவுகள்‌. களவியலிலே ஏழு அதிகாரங்கள்‌; அவைகள்‌ பண்டைக்‌ காலக்‌ காதல்‌ மணத்தைப்‌ பற்றிக்‌ கூறுகின்றன. காதலன்‌, காதலிக்கிடையிலே உள்ள அன்பின்‌ சிறப்பை இக்‌ களவியலிலே காணலாம்‌. களவியலிலே காணப்படும்‌ காதல்‌ மணமுறை இக்காலத்தில்‌ வழக்கில்‌ இல்லை. ஆயினும்‌ இம்முறையின்‌ சாரத்தை அடிப்படையாகக்‌ கொண்ட காதல்‌ மணங்கள்‌ இன்றும்‌ நடைபெறுகின்றன. காதல்‌ கொண்ட ஒரு ஆணும்‌, ஒரு பெண்ணும்‌ மணந்து வாழ்வதே களவு. இதைப்‌ பற்றி உரைப்பதே களவியல்‌.

கற்பியல்‌ பதினெட்டு அதிகாரங்களைக்‌ கொண்டது. ஒரு ஆணும்‌ பெண்ணும்‌ வெளிப்படையாக இல்லறம்‌ நடத்துவதே கற்பாகும்‌. களவில்லாமல்‌ கற்பு நிகழ்வதில்லை. மணமக்கள்‌ ஒருவரை ஒருவர்‌ காதலித்த பிறகு தான்‌ மணம்‌ புரிந்து கொள்ளுவார்கள்‌. இதுவே பண்டைத்‌ தமிழர்‌ கொள்கை. இன்று இது வழக்கத்தில்‌ இல்லை. இவ்வழக்கம்‌ ஒழிந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள்‌ ஆகிவிட்டன. இல்லறத்தில்‌ வாழும்‌ கணவன்‌ மனைவிகளின்‌ சிறப்பை விளக்குவதே இந்தப்‌ பதினெட்டு அதிகாரங்களும்‌. 

காமத்துப்பால்‌ காதலர்களின்‌ அன்பையும்‌ அவர்கள்‌ மனப்பான்மையையும்‌ எடுத்துக்‌ காட்டுவது. பழந்‌ தமிழர்க்ள்‌ இல்வாழ்க்கையை எவ்வளவு இன்பமாக நடத்தி வந்தனர்‌ என்பதைக்‌ காண இக்‌ காமத்துப்‌ பால்‌ உதவி செய்கின்றது. இது சிறந்த இலக்கியச்‌ சுவையுடன்‌ விளங்குகின்றது. படித்துச்‌ சுவைப்‌பதற்குரிய பல பாடல்கள்‌ இப்பாலில்‌ அமைந்து கிடக்கின்றன.

இக்காமத்துப்‌ பால்‌ இக்காலத்திற்கு வேண்டாதது என்று விளம்புவோர்‌ உண்டு. இது விவாதத்திற்கு உரிய கருத்து. பழந்தமிழர்களின்‌ தனிப்பட்ட குடும்ப வாழ்வின்‌ சிறப்பை அறிவதற்கு இக்காமத்துப்பால்‌ ஒரு அளவு கோல்‌. அறிஞர்கள்‌ எவரும்‌ இவ்வுண்மையை ஒப்புக்‌ கொள்ளுவார்கள்‌. காமத்துப்‌ லைப்‌ பற்றிய இவ்வுண்மையை இந்நூலின்‌ இறுதியிலே காணலாம்‌.

ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்கள்‌. நூற்றுமுப்பத்து மூன்று அதிகாரங்கள்‌. அதிகாரம்‌ ஒன்றுக்குப்‌ பத்துப்‌ பாடல்கள்‌. அறத்துப்பால்‌, பொருட்பால்‌, காமத்துப்பால்‌ என மூன்று பிரிவுகள்‌. அறத்துப்பாலில்‌ முப்பத்தெட்டு அதிகாரங்கள்‌; பொருட்பாலில்‌ எழுபது அதிகாரங்கள்‌. காமத்துப்பாலில்‌ இருபத்து ஐந்து அதிகாரங்கள்‌. இவையே திருக்குறள்‌ அமைப்பு.

அறத்துப்‌ பாலில்‌ பாயிரம்‌, இல்லறவியல்‌, துறவியல்‌, ஊழ்‌ இயல்‌ என்ற பிரிவுகள்‌. பொருட்பாலில்‌ அரசியல்‌, அங்கவியல்‌ ஒழிபியல்‌ என்ற பிரிவுகள்‌; காமத்துப்பாலில்‌ களவியல்‌. கற்பியல்‌ என்ற பிரிவுகள்‌; காணப்படுகின்றன. காமத்துப்‌ பாலை இன்பத்துப்பால்‌ என்றும்‌ உரைப்பர்‌.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard