14. சமஸ்க்ருதத்தால் வளம் பெற்றது தமிழ் பெரும்பாலான தமிழ் மக்கள் கிராமப்புறத்திலேதான் வாழ்கிறார்கள். அவர்களிடத்தில் ஓர் அன்பும் பண்பும் நிறைந்து இருப்பதைக் காணலாம். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று குரல் கொடுத்த பெருமை அவர்களின் பண்பின் பிரதிபலிப்பாகும். ஒரு சிறந்த தமிழ்மகன் எவ்வாறு இருப்பான் என்பதற்கு எடுத்துக் காட்டாக, நம்பி (நெடுஞ்செழியன்) என்பவனை முன்னிறுத்தி, விளக்கி இருக்கிறார் சங்க கால புலவர் “பேரெயில் முறுவனார்” என்பவர். சிறந்த தமிழ் மகன், பண பலமும் அதிகார பலமும் ஒருவனிடத்தில் இருக்கின்றதே என்பதற்காக அவன் அடியை வருட மாட்டான். அதே சமயம் ஒருவன் ஏழை எளியவன், வலியற்றவன் என்பதால் அவனை துச்சமாக நடத்தவும் மாட்டான் என்று, வலியரென வழி மொழியலன் மெலியரென மீக்கூறலன்... மயக்குடை மொழி விடுத்தனன் குழப்பம் நிறைந்த சொற்களைக் கூறமாட்டான் எனப் பாடியிருக்கிறார். தமிழகமெங்கும் ஊர்கள்தோறும் கோயில்கள் நிறைந்து விளங்குவதால், அங்கு மிகச் சிறந்த தமிழ்ப் பாடல்களும் எழிலான ஆடல்களும், நல்லோர்களின் உரைகளும் நிறைந்து விளங்கியதாலேயே தமிழ் மக்களின் சீரிய பண்பிற்கு அவையும் காரணம் ஆகும். பக்தியின் பால்பட்டு பண்பை வளர்த்த தமிழ் மக்கள் விருப்பு வெறுப்பு அற்ற சமநிலைக் கோட்பாடுகளைப் பின்பற்றியதால் சீரிய பண்பாட்டுடையோராகத் திகழ்ந்தனர். அவர்களுடைய பண்பாட்டை முழுமையாக அறிந்து கொள்ள மிகவும் தொன்மையான சங்கப் பாடல்களே சான்றுகள் ஆகும். அவற்றில் புறநானூறு என்னும் தொகை நூலில் முதற் பாட்டிலேயே “முரஞ்சியூர் முடிநாகராயர்” என்ற புலவர், சேரமானைப் பாடிய பாடலில் நான்கு வடநூல் மரபைக் குறிக்கிறார். எடுத்தவுடன் அரசன் என்பவன் எவ்வாறு உருவகிக்கப்படுகிறான் என்பதை, ஐம்பெரும் பூதங்களின் உருவே அவனது உருவாகும் என, தனது தர்ம சாஸ்த்திரத்தில் மனு கூறி இருப்பதையே குறிக்கிறார். இரண்டாவதாக மஹாபாரதப் போரில் குதிரைமீதுவந்த பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் துரியோதனாதியர் நூற்றுவரோடு போரிட்டு அவர்களைக் களத்திலேயே வென்று வீழ்த்தினர் என்று கூறுகிறார். மூன்றாவதாக நான்கு வேதங்கள் போதிக்கும் நெறியை “நால் வேத நெறி” என்று கூறுகிறார். நான்காவதாக இமயம்முதல் பொதிகைவரை இப்பரந்த நாட்டில் அந்தணர்கள் வேள்வி வேட்பதையும் அவ்வேள்வித் தீயின் அருகில் நீண்ட கண்களை உடைய கலைமான்கள் பயமின்றி படுத்து உறங்குவதையும் குறிக்கிறார். இப்பாடலில் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்பவனை மஹாபாரதத்தில் இரு படைகளுக்கும் பெருஞ்சோறு அளித்தவன் என்று பாடியிருக்கிறார். அதனால் சங்க காலத்தின் தொடக்கத்திலேயே வட மொழி கருத்துக்கள் தமிழ் உடன் இணைந்து பிரித்தறிய முடியாத அளவுக்கு இடம் பெற்றுள்ளது என்பதை சான்றுகள் கூறுகின்றன. வரலாற்றுத் தொடக்க காலத்திலிருந்தே சமஸ்க்ருதம் தமிழ் மொழியோடு இரண்டற கலந்து வளர்ந்து வந்துள்ளதைக் காண்கிறோம்.
தமிழ் மொழியின் செம்மையை வகுத்து, இலக்கியங்களை இயற்ற உதவும் இலக்கணத்தில் தொன்மையானது தொல்காப்பியம். அதை இயற்றியவர் “தொல்காப்பியனார்” ஆகும். அவர் செய்யுள் அமைப்பிற்கும் பேச்சு மொழியாகிய வழக்கு மொழிக்கும் இலக்கணம் வகுத்துள்ளார். அந்நூலில் நான்கு வகையான சொற்களை தமிழ் நூல்களில் பயன்படுத்தலாம் என்று குறித்துள்ளார். இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நான்கு வகைச் சொற்களையும் பயன்படுத்தலாம் என்று குறித்துள்ளார். இயற்சொல் என்பது தமிழ் மண்ணில் இயல்பாகத் தோன்றி பல காலமாக வளர்ந்த மொழியாகும். திரிசொல் என்பது தமிழ்ச் சொல்லே சிதைந்து வழக்கில் வரும் சொல்லாகும். “செய்கிறான்” என்ற இயற்சொல்லை “செய்யரான்” என்றும், “பாடுகிறான்” என்பதை “பாடறான்” என்றும் குறிப்பது திரி சொல்லாகும். ராஜ ராஜ சோழன் தஞ்சையில் எடுத்த கோயிலை “எடுப்பித்தேன்” என்பதை “நாம் எடுப்பிச்ச திருக்கோயில்” என்கிறான். இது திரி சொல் ஆகும். மூன்றாவது, தமிழ் நாட்டின் எல்லையிலே ஆந்திரம், கர்நாடகம், கேரளம் முதலிய பிற மொழி எல்லைகள் கலக்கும் இடங்களில், அம்மொழி தாக்கத்தால் மாறி வரும் சொற்களை திசைச் சொல் என்பர். இதைத்தவிர சமஸ்க்ருத சொல்லும் ப்ராக்ருத சொல்லும் வட சொல் என்று அழைக்கப்பட்டன. அதனால் தமிழ் எழுதுவோர் இந்நான்கு சொற்களையும் பயன்படுத்தி எழுதலாம் என்று தொல்காப்பியர் குறித்துள்ளார். மற்றொரு சூத்திரத்தில் வட சொற்களை பயன்படுத்துமிடத்து அச்சொல்லில் உள்ள வர்க்க ஒலிகளை முதல் எழுத்தாக்கிப் பயன் படுத்தலாம். “ராஜன்” என்ற சொல்லில் “ஜா” என்ற ஒலி “சா” என்னும் மூன்றாவது வர்க்க எழுத்தாகும். அதை “ராசன்” என்று பயன்படுத்திக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார். “ஜோதி” என்ற சொல்லை “சோதி” என்று பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் தொல்காப்பியரின் நெறிப்படி வட சொல்லைப் பயன்படுத்தி தமிழில் எழுதலாம் என அறிகிறோம். அதனால் தமிழ் மக்கள் வட சொல்லைப் பயன்படுத்தலாம் என்பதுதான் தொல்காப்பியரின் கொள்கை. வட சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்று தொல்காப்பியர் எங்கும் சொல்லவில்லை. இதை ஆயிரக்கணக்கான சொற்களின் தமிழ் வடிவத்திலிருந்து காட்ட முடியும்.
மொத்தம் சங்க இலக்கியத்தில் உள்ள நூல்களை எட்டுத் தொகை, பத்துப் பாட்டு என்று வகைப்படுத்திக் கூறுவர். எட்டுத் தொகையில் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, பதிற்றுப் பத்து, ஐங்குறுநூறு, கலித்தொகை, பரி பாடல் என்ற எட்டு நூல்களும் “தொகை நூல்கள்” என்று கூறப்படும். அதாவது பல்வேறு தனித்தனியான பாடல்களை ஒன்றாகத் தொகுத்து ஒரு நூலாக, ஒரு கருத்தின் கீழ் தொகுத்து வைப்பது தொகை நூல் எனப்படும். இதை சமஸ்க்ருதத்தில் “சம்ஹிதை” என்று கூறுவார்கள். பத்து பாட்டு என்பது தனித்தனியாக நெடும் பாட்டுக்களாக பாடப் பட்டவை. தொகை நூலிலே சில யார் தொகுத்தார்கள் என்றும் தொகுப்பித்தார்கள் என்றும் நமக்குப் பெயர்கள் கிடைத்துள்ளன. சில தொகைகளுக்குத் தொகுப்பித்தவர் யார், தொகுத்தவர் யார் என்ற பெயர் கிடைக்கவில்லை. பரிபாடல் என்ற தொகுப்பில் முப்பது பாடல்கள் தொகுக்கப்பட்டு உள்ளன. இவை முதலில் எழுபது பாடல்கள் கொண்டிருந்தன என்றும், அவற்றில் இதுவரையிலும் நாற்பது நூல்கள் கிடைக்கவில்லை என்றும் அறிகிறோம். இவை முப்பதும், மூன்று பகுதிகளாகக் காணப்படுகின்றன. இவை திருமால், முருகன், வைகை ஆற்றில் நீர் விளையாட்டு என்று மூன்று பகுதிகளாக உள்ளன. இவை அனைத்தும், இசைப் பாடல்களாக உள்ளன. இவற்றை பாட்டாகப் பாடியவர் யார் என்றும், இவற்றிற்கு இசை வகுத்துவர் யார் என்றும் அடிக்குறிப்பில் இருந்து அறிகிறோம். இவற்றில் இசை வகுத்தவர் அனைவரும் அந்தணர் ஆவர். இந்த பத்துப் பாட்டு, எட்டுத் தொகை ஆகிய தொகை நூல்களில் மொத்தமாக நமக்கு 2400 பாடல்கள் கிடைத்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றிற்கு, பாடியவர் யார் என்ற குறிப்பு அடிக்குறிப்பில் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பாடியவர்கள் மொத்தமாக ஐநூற்று இருபதுக்கும் மேற்பட்ட புலவர்களின் பெயர்கள் கிடைத்துள்ளன. இவற்றை ஆய்ந்து பார்க்கும்போது மேலும் பல பாடல்கள் தொகுப்புகளில் இருந்தன என்றும் அவை இப்போது இல்லை என்றும் அறிகிறோம். அவை பாடிய ஆசான்களின் பெயர்கள் நமக்குக் கிடைக்கவில்லை. சில புலவர்கள் பல பாடல்களைப் பாடியுள்ளனர். மற்றவர்கள் ஒன்று, இரண்டு அல்லது மூன்று அல்லது பத்து இருபது என்ற எண்ணிக்கையில் பாடியிருப்பதையும் சிலர் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியிருப்பதையும் காண்கிறோம்.
இவற்றில் இரண்டாயிரத்து நானூறு பாடல்களில் ஆயிரத்து ஐநூற்று முப்பதொன்பது பாடல்கள், சமஸ்க்ருத மொழியில் அடிப்படை அறிவுள்ளோர் என அறிகிறோம். இவர்களிலும் பெரும்பாலானவர்கள் பிராமண சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்று தெரிய வருகிறது. பல சமஸ்க்ருத கோத்ர பெயர்களை உடையோர்கள் இச்சங்க தமிழ் பாடல்களைப் பாடியுள்ளனர். அவர்கள் அந்தணர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்பதே ஐயமற்ற வெளிப்படை. கௌதமன், கௌசிகன், காஸ்யபன், கார்க்கி, சாண்டில்யன், பிரம்மச்சாரி, பிரம்மதத்தன், ஆத்ரேயன் போன்ற பல கோத்திரப் பெயர்களை உடையவர்கள் இப்பாடல்களைப் பாடினர். மேலும் சிலர் வட மொழிப் பெயர்களைக் கொண்டவர்கள் என்பதிலும் ஐயமில்லை. சில பெயர்கள் மிகவும் தமிழ் மக்களிடயே அதிக அளவு சிறப்புடையதாக இடம் பெற்றுள்ளதைக் காண்கின்றோம். இருபத்தைந்து பெயருக்கு மேலாக கண்ணன் என்ற பெயர் கொண்டுள்ளனர். கண்ணன் என்பது கிருஷ்ணன் என்ற வட சொல்லின் தமிழ் ஆக்கம் ஆகும். அதேபோல தேவன், நாகன், பதுமன், பூதன், கீரன், குமரன், சாஸ்தன், என்ற பெயர்களை பலரும் சூடிக் கொண்டிருப்பதையும் காண்கிறோம்.
சங்கப் புலவர் வரிசையில் புலவர்களில் கீழ் கண்ட பெயர்கள் பல புலவர் பூண்டுள்ள எண்ணிக்கை கீழ் வருமாறு:
அவை அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்போது, இரண்டாயிரத்து நானூறு பாடல்களில் அறுபத்து நாலு சதவிகிதம் (அதாவது பாதிக்கும் மேற்பட்ட பாடல்கள்) வட மொழிப் புலவர்களால் பாடப்பட்டது. இதனால் தமிழ் மொழிக்கு சமஸ்க்ருதம் பெரும் உறுதுணையாகவும் தமிழை வளர்த்ததில் பெரும் பங்கு கொண்டதாகவும் விளங்கி இருக்கிறதே தவிர தமிழுக்கு இம்மியளவும் எதிராக அதைக் குறைக்கும் வகையில் இருந்தது என்றும் சொல்ல எவ்விதச் சான்றும் இல்லை. சமஸ்க்ருதத்தால் தமிழ் மேலும் வளம் பெற்றது என்பதுதான் சான்றுகள் கூறும் முடிவாகும். தேவுடனே கூடிய சொல் செழும்தமிழோர் தெரிந்துரைத்த பாவுடனே கூடிய என் பருப்பொருளும் விழுப்பொருளும் ஆம்